வெள்ளி, செப்டம்பர் 2

சூடு சுரணையுள்ளவர்களின் துணிவான கவனத்திற்கு… ஆதவன் தீட்சண்யா


“பேசத்தொடங்கும்போது அணைந்துபோகும் பீடி நெருப்புப்போல தூக்கமற்ற இரவுகளில், வார்த்தைகளின் பின்னால் புதைந்துகிடக்கும் வலி அணைந்து போவதில்லை. பரிதாபத்தையோ மகிழ்ச்சியையும் துக்கத்தையும்  பகிர்ந்து கொள்வதையோ கண்டுகொள்ளாமல் சிறை இருட்டாக, அன்புக்கு இடமின்றி இருக்கிறது…”

-வரவர ராவ் எழுதிய இவ்வரிகளில் கசியும் துயரத்தில் கரைந்தபடி எண்ணற்ற அப்பாவிகள் இந்த நாட்டின் 1400 சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்கள் இழைத்த குற்றம், அவரே அடுத்தவரியில் கேட்பதுபோல “சிறைக்கு வெளியிலும்தான் தனக்கு அறிவையும் ஞானத்தையும் தரக்கூடிய மனிதர்களுக்கு இந்தச் சமூக அமைப்பு என்னத்தைக் கொடுத்துவிடுகிறது?” என்கிற கேள்வியை எழுப்பியதுதான்.

தனது கருத்துக்காகவோ அதன் பேரிலான செயல்பாட்டுக்காகவோ ஒருவர் கைதுசெய்யப்படுவது உலகெங்கும் இருந்துவரும் ஒடுக்குமுறைதான். இந்தியாவிற்கும் இது புதிதல்ல.  நாட்டையே திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கிய காலனியாட்சி, சிறைச்சாலை என்கிற அதிகாரப்பூர்வமான சித்திரவதைக்கூடங்களை நாடெங்கும் நிறுவியது. விடுதலைக்காகப் போராடியவர்களை அரசியல் எதிரிகளாக கருதி அவர்களை சிக்கவைப்பதற்கென்றே காலனியாட்சி சதிவழக்குகளைப் புனைந்தது,

நாட்டின் விடுதலைக்குப் பிறகு மூடப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சித்திரவதைக்கூடங்கள் முன்னிலும் அதிகப்படியாக இந்திய ஆட்சியாளர்களுக்கு தேவைப்பட்டன என்கிற உண்மை, நாம் அடைந்த விடுதலை முழுமையானதல்ல என்கிற மற்றொரு உண்மையை உணர்த்தியது. அரசியல் விடுதலையுடன் திருப்தியடைந்தவர்கள் கழன்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள, சமூக விடுதலையும் பொருளாதார விடுதலையும் ஊடிழைந்த விடுதலையை வாழ்விலக்காய் நம்பியவர்களோ எதிர் முகாமாகி தமது போராட்டத்தைத் தொடர்கிறார்கள். இவர்களை ஒடுக்க காலனியாட்சியின் ஆள்தூக்கிச் சட்டங்களும் அந்தகாரச் சிறைகளும் ஆட்சியாளர்களுக்குத் தேவையாயிருக்கின்றன. ஆனாலும் ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் தொடரும் போராட்டங்களின் அழுத்தத்தால் “சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்” நோக்கி இந்த நாடு எடுத்துவைத்த ஓவ்வோரடியையும் ஆழ்ந்த வெறுப்புடன் பின்னிழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்த எதிர்மறைச் சக்திகள் “இந்துத்துவா” என்கிற கருத்தாக்கத்தின் கீழ் திரண்டனர். சமூகத்தை மேல் கீழாக, தீட்டு புனிதமாக கட்டமைத்து அதன் உச்சியில் பார்ப்பனர்களை இருத்தி அவர்களுக்குக் கீழே பன்மப்படிநிலைப் பாகுபாட்டுடன் மற்றவர்கள் ஒடுங்கியும் ஒடுக்கியும் வர்ணாஸ்ரம விதிகளுக்குத் திரும்பி வாழ்வதே சிறந்தது என்கிற பார்ப்பனீயமே இந்துத்துவா என்னும் திரைக்குள் ஒளிந்திருக்கிறது.        

வெகுமக்களின் மிகவும் பின்தங்கிய பிற்போக்குக் கருத்துநிலையுடன் தம்மைப் பொருத்திகொள்வதன் மூலம் சமூகத்தில் பலம் பெறுவதுதான் பார்ப்பனீயச் சக்திகளின் திட்டம். பாலினச்சமத்துவம், சமூகநீதி, பொருளாதார நீதி, மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் எதிர்நிலையாக இயங்குவதன் மூலமே இந்து மதத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்கிற அவர்களது பிரச்சாரம் நுட்பமானது. இதனால், பார்ப்பனீய அமைப்புகளில் இல்லாதவர்கள்கூட காஷ்மீர், பாப்ரி மஸ்ஜித், பொதுச்சிவில் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், பசுவதைத் தடுப்பு என அந்த அமைப்புகள் எழுப்பும் பிரச்னைகளை தமது சொந்தப்பிரச்னைகளாக கருதுவதும் அப்பிரச்னைகளுக்கு அந்த அமைப்புகள் சொல்லும் தீர்வையே சரியென ஏற்பதுமாக நிலைமை மோசமடைந்துள்ளது. இவ்வாறாக, சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் பார்ப்பனீயவாதிகளின் ஆளுகைப்பிடியில் சிக்குவதற்கு முன்பாகவே நாட்டின் நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகங்கள், குடிமைச்சமூகம் ஆகியவற்றின் ஒருபகுதி அவர்களது கருத்துப்பிடிக்குள் சிக்கிக்கொண்டன.

இயல்பான சமூகவாழ்வை மேற்கொள்ளவியலாமல் இஸ்லாமியர்களை தேசத்தின் எதிரிகளாக கட்டமைக்கும் வெறுப்புப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அசீமானந்தா, பிரக்யா போன்ற பார்ப்பனீயர்கள் நாடெங்கும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு இஸ்லாமியர்களின் மீது பழி சுமத்தினர். படைப்பிரிவினர் பதக்கங்களுக்காகவும் விருதுகளுக்காகவும்  போலி மோதல்களை நடத்தி எண்ணற்ற இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் என புனையப்பட்டு நாடெங்கும் இஸ்லாமிய இளைஞர்கள் வாழ்வின் பெரும்பகுதியைச் சிறைக்கம்பிகளுக்குப் பின்னே கழிக்கும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதேநிலைதான் தலித்துகளுக்கும். இடையறா சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்த அவர்களது போராட்டத்தை ஒழுங்கீனமாகவும், கீழ்ப்படியாமையாகவும், “தாயாப்புள்ளையா” “ஒன்னும்மண்ணுமா” பழகும் சமூகத்தில் பிரிவினையை உருவாக்கும் சீர்குலைவாகவும், இந்துமத வெளியேற்றம் என்னும் சாதியெதிர்ப்பு நடவடிக்கையை அன்னிய தொண்டு நிறுவனங்களின் பணத்தூண்டுதலால் நடக்கும் சதியெனவும் பார்ப்பனீயர்கள் உருவாக்கிய தவறான கண்ணோட்டம்தான், சட்டத்தின் பாதுகாப்பைக் கோரி காவல்துறையையும் நீதித்துறையையும் நாடிவரும் தலித்துகளுக்கு அது மறுக்கப்படுவதுடன் அவர்கள் பொய்வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படவும் காரணமாயுள்ளது. 

இயற்கைவளங்களையும் கனிமவளங்களையும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கத் தோதாக காடுகளின் மலைகளின் பிள்ளைகளாம் பழங்குடியினரை அங்கிருந்தெல்லாம் துரத்தியடிக்கும் கொடுஞ்செயலுக்கு எதிராக போராடுகிறவர்கள் “மாவோயிஸ்டுகள்/ நக்ஸலைட்டுகள்” என நரவேட்டையாடப்படுகின்றனர் (மாவோயிஸ்டுகள்/ நக்ஸலைட்டுகள் என்றால் விசாரணைகூட இல்லாமல் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற வாதத்தை மறுப்பதேகூட தேசவிரோதம் என்றாகிவிட்டது.) பழங்குடியினருக்கு தமது பூர்விக நிலத்தின் மீதுள்ள உரிமையை பிரகடனம் செய்யும் அரசியல் சாசனத்தின் வரிகளை கல்வெட்டாக செதுக்கி காடுமலைகளில் நாட்டிடும் “பதால்காடி” இயக்கம்கூட பயங்கரவாதச் செயலாக சித்தரிக்கப்பட்டு அதில் ஈடுபட்ட பத்தாயிரம் பேர் ஒரே வழக்கில் தேசவிரோதிகளாக்கப்பட்டனர்.    

பாரதிய ஜனதா மூலம் பார்ப்பரேட்டியர்கள் (பார்ப்பனீயர் + கார்ப்பரேட்டுகள்) ஒன்றிய ஆட்சியை கைப்பற்றுவதற்கும் முன்பாகவே நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களும் தலித்துகளும் பழங்குடியினரும் தான் என்றால் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு பின்போ நிலைமை படுபயங்கரமாகிவிட்டது.

மக்கள்தொகையில் பெரும்பகுதியினரான பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் பார்ப்பனீயத்தால் இழிவுகளுக்கு ஆளானவர்களே என்றாலும் அவர்களில் பலரும் ஆண்ட பரம்பரை உயர்சாதி போன்ற கற்பிதப் பெருமிதங்களில் மூழ்கி தன்னிலை மறந்தவர்களாயுள்ளனர். எஞ்சிய மக்கள்தொகையில் 20% தலித்துகள், 14% முஸ்லிம்கள், 8% பழங்குடியினர், 3% கிருஸ்தவர்கள். சற்றொப்ப மக்கள்தொகையில் சரிபாதியான இவர்கள் அடிப்படையில் இந்துமதத்தின் ஆதார நோக்கங்களுக்குள் அடங்காதவர்கள். அவமதிப்பு, சுரண்டல், பாரபட்சம், வன்கொடுமைக்கு எதிராக போராடியே தீரவேண்டிய நிலையிலுள்ள இந்த மக்கள்தொகுதியைத்தான் பார்ப்பரேட்டிய அரசு உண்மையான அச்சுறுத்தலாக கருதி வெறுக்கிறது. எனவே, இவர்களுக்காகப் போராடுவதுடன் பார்ப்பரேட்டியத்தை கடுமையாக விமர்சிப்பவர்களுமாகிய அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சீய இயக்கத்தவர்களும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் இந்த அரசுக்கு வேண்டாதவர்களாகிப் போனார்கள். பழங்குடியினரை, தலித்துகளை, மதச்சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி ஒடுக்கவோ உட்செரிக்கவோ தடையாகவுள்ள இந்த “அர்பன் நக்ஸல்களை” அவர்களது செயற்களங்களிலிருந்து அப்புறப்படுத்த உருவான சதித்திட்டமே பீமாகோரேகான் வழக்கு.

மராட்டியத்தை ஆண்ட பேஷ்வாக்கள் என்னும் சித்பவன பார்ப்பனர்களால் தீட்டு மனப்பான்மையுடன் படைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மஹர்கள், பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்து 1818 ஜனவரி முதல்நாள் பீமா நதிக்கரையில் நடந்த போரில் பேஷ்வாக்களை வெற்றிகொண்டனர். தலித்துகள் பேஷ்வாக்களை வெற்றிகொண்டதன் நினைவாக ஆண்டுதோறும் ஜனவரி 1 அன்று பெருந்திரளான மக்கள் பீமாநதிக்கரையில் கூடுவது வழக்கம். அண்ணல் அம்பேத்கரும் அங்கு சென்றுவந்த பின்பு அந்த நிகழ்வு முக்கியத்துவமுடையதாகிவிட்டது.

இந்த வெற்றியின் இருநூறாவது ஆண்டுவிழா 2018 ஜனவரி 1. அதற்கு முந்தைய தினம் 260க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூடி எல்கர் பரிஷத் (“உரக்கப்பேசுவோம்” மாநாடு) என்ற நிகழ்வை சனிவார்வாடாவில் நடத்தின. அந்நிகழ்வில் பங்கெடுத்துவிட்டு பீமாகோரேகானில் 200ஆவது ஆண்டு விழாவில் பங்கெடுக்க வந்த/ திரும்பிய மக்கள் மீதும் மாநிலம் முழுவதும் தலித்துகள் மீதும் ஜனவரி 1,2 தேதிகளில் சித்பவன பார்ப்பனர்களின் அமைப்பினரும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பினரும் கொடுந்தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலுக்கு காரணமான இருவரில் ஒருவரை கைதுசெய்து உடனடியாய் விடுவித்த போலிசார், எல்கர் பரிஷத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் ஆத்திரமூட்டலால் தான் வன்முறை வெடித்தது என்கிற வினோதக் குற்றச்சாட்டினை எழுப்பினர்.

இதன் தொடர்ச்சியில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ரோனா வில்சனின் மடிக்கணினி, செல்போன், பென்டிரைவ் ஆகியவை 2018 ஏப்ரல் 16ஆம் தேதி போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பின் அமைதி காத்த போலிசார் திடுமென 2018 ஜூன் 6ஆம் தேதி ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், ஸோமா சென், சுதிர் தாவ்லே, மகேஷ் ராட் ஆகியோரை கைது செய்ததுடன் இவர்களடங்கிய ‘அர்பன் நக்ஸல்’களின் குழுவொன்று, “ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போன்று பிரதமர் மோடியைக் கொல்வதற்கு சதிதிட்டம் தீட்டியதாக” குற்றம்சாட்டினர். இதற்கு ஆதாரமாக அந்த மடிக்கணினியில் இருந்த மின்னஞ்சல்கள் காட்டப்பட்டன. இதனைடுத்து 2018 ஆகஸ்ட் 28 அன்று அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், வரவரராவ், வெர்னோன் கன்சல்வெஸ் ஆகியோரும் 2020 ஏப்ரல் 14 அன்று ஆனந்த் டெல்டும்ப்டே, கவுதம் நவ்லேகா, 2020 ஜூலை 28 அன்று ஹானிபாபு,  2020 செப்டம்பர் 10 சாகர் கோர்கே, ரமேஷ் கைய்ச்சர், மறுநாள் ஜோதி ஜக்தப் (இம்மூவரும் கபீர் கலாமஞ்ச் குழுவினர்), 2020 அக் 8 அன்று ஸ்டேன் சாமி என அடுத்தடுத்து 16 பேர் உபா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.   

மகாராஷ்ட்ரத்தில் உருவான பாஜக அல்லாத ஆட்சி இவ்வழக்கினை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியானதும், தனது கருத்தியல் எதிரிகள் மீண்டும் களத்திற்கு திரும்புவதைத் தடுக்கும் பதைப்பில் ஒன்றிய பார்ப்பரேட்டிய ஆட்சியாளர்கள், இவ்வழக்கினை தமது ஏவலமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.எ.) பொறுப்பில் எடுத்துக்கொண்டார்கள்.

இதனிடையே, வில்சனுடைய மடிக்கணினியின் வன்பொருளை ஆய்வு செய்த ஆர்சனல் கன்சல்டிங் என்ற அமெரிக்க டிஜிடல் தடவியல் பரிசோதனையகம், வில்சனுக்கே தெரியாமல் அவருடைய மடிக்கணினியில் தீங்கிழைக்கும் மென்பொருள் ஒன்றின் மூலம் 2016 ஜூன் 16 அன்று ஊடுருவிய யாரோ ஒரு மர்ம நபர் 22 மாதங்களாக அதனுள்ளிருந்து அவரை கண்காணித்ததுடன் 13 கடிதக்கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாகவும் அறிவித்தது.

இவர்களை கைதுசெய்வதற்குத் தேவையான சான்றுகள் அனைத்தும் உட்புகுத்தப்பட்டதற்கு அடுத்தநாள் அதிகாலையில் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது தற்செயல்தானா என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, எந்த மின்னஞ்சல்களைக் காட்டி இந்த 16 பேரும் கைதுசெய்யப்பட்டார்களோ அந்த மின்னஞ்சல்கள் அனைத்துமே திட்டமிட்ட சதியின் மூலம் மடிக்கணினியில் உட்செலுத்தப்பட்டவை என்று அறிவியல்பூர்வமாக நிறுவிய பிறகும் இவர்களை விடுவிக்கவோ குறைந்தபட்சம் பிணையில் விடவோ ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் தயாரில்லை. முதல்கைது தொடங்கி நான்காண்டுகள் முடிந்தபின்னும் விசாரணையின்றி சிறையிலிருக்கும் இவர்களை சிறைக்குள் மனிதத்தன்மையற்ற வகையில் நடத்துவதைக்கூட நிறுத்திக் கொள்ளவில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடுதான் ஸ்டேன் சாமியின் மரணம். சிறைக்குள் கைவிலங்குடன் அடைத்துவைப்பது, வெறும் தரையில் படுக்கவைப்பது, கோவிட் காலத்தில் உரிய முகக்கவசம் மறுத்தது, தொற்றுக்கு ஆளானபோதும் சிகிச்சையும் சத்தான ஆகாரமும் மறுத்தது, தண்ணீர்குடிக்க உறிஞ்சுக்குழாய் மறுத்தது என அவர்களுக்கு தொடர்ந்த சித்ரவதைகளில் இருந்து சாவுதான் அவரை மீட்டது. உண்மையில் அது என்.ஐ.ஏ.வும் நீதித்துறையும் கூட்டாக நிகழ்த்திய படுகொலை. இதோ இப்போது மகாராஷ்ட்ராவில் பாஜக கூட்டணியாட்சி மறுபடியும் உருவாகியுள்ள பின்னணியில் இந்தக் கைதிகளுக்கு கொசுவலைகூட மறுக்கப்பட்டுள்ளது. சிறைவிதிகள் அனுமதித்தாலும் அவர்கள் தமது குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

தமது  செயற்பாடுகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த 16 ஆளுமைகளை பி.கே.16 குற்றவாளிகள் என்று சிறைப்படுத்தி, சாதாரணமாக சிறைக்கைதிகளுக்கு கிடைக்கக்கூடிய எளிய விசயங்களைக்கூட மறுப்பதன் மூலம் ‘இவர்களுக்கே இந்த கதியென்றால்  நீங்களெல்லாம் எம்மாத்திரம்?’ என்று பார்ப்பரேட்டிய அரசு ஒவ்வொருவரையும் மிரட்டிப் பார்க்கிறது. போர்க்குணம் மழுங்கி சுயதணிக்கை செய்துகொண்டு சுயநலத்திற்குள் ஒடுங்கிச் சாகுமாறு அது நம் வாழ்வினை உயிர்ப்பற்றதாக மாற்றப்பார்க்கிறது. 

காலனியாட்சிக்கால சிறைக்குள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தம்மை அரசியல் கைதிகள் என்று தனித்தழைக்கக் கோரி போராடினார்கள். ஒட்டுமொத்த கைதிகளுக்குமான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்த அதேவேளையில் அரசியல் கைதிகள் பிறவகை கைதிகளிலிருந்து வேறுபட்டவர்கள் என்றும்  அவர்களுக்கென்று சில உரிமைகள் உண்டென்றும் போராடி குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டிருந்தனர். ஆனால் இன்றைய அரசியல் கைதிகள்,  துன்புறுத்தலை ரசிக்கும் குரூர மனப்பான்மை கொண்ட பார்ப்பரேட்டிய ஆட்சியாளர்களால் கடும் அவமதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். அரூபமான தமது சிந்தனைகளுக்காகவும் விருப்பங்களுக்காகவும் திட்டவட்டமான உடல் எதிர்கொண்டாக வேண்டிய வாதைகளைத் தாளமுடியாதவர்களாகியுள்ளனர். ஆய்வாளர் ஒருவர் கூறியதுபோல அவர்களது சொந்த உடலையே அவர்களது விருப்பங்களுக்கு எதிரானதாக ஆட்சியாளர்கள் திருப்பிவிட்டுள்ளனர்  

அமைதியாக இருப்பவர்களை பதற்றத்திற்குள்ளாக்கி அவர்களை தெருவுக்கு இழுப்பது, தெருவுக்கு வந்தால் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோதப் பட்டாளத்தை ஏவி கொடுந்தாக்குதல் நடத்துவது, பிறகு அந்த வன்முறைக்கு காரணமானவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கிட பொய்ச்சான்றுகளை ஜோடிப்பது/ அழிப்பது, குற்றமற்றவர்கள் என்று தெரிந்தே என்.ஐ.எ. மூலம் உபா சட்டத்தை ஏவி ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்து சித்திரவதை செய்வது என தனது கருத்தியல் எதிரிகளை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரு வழிமுறையை பீமாகோரேகான் வழக்கின் மூலம் பார்ப்பரேட்டியம் உருவாக்கியுள்ளது எனலாம். குடியுரிமை திருத்தச் சட்டம், கல்வி வளாகச் சுதந்திரத்தில் தலையீடு, பொதுமுடக்கக்காலச் சீர்கேடுகள், விவசாயச் சட்டங்கள், கருத்துரிமைப் பறிப்பு, ஊடகச்சுதந்திரம் பறிப்பு, காஷ்மீர் சிதறடிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடிய அனைவரையுமே பார்ப்பரேட்டிய அரசு இந்த வழிமுறையில் தான் கையாண்டு வருகிறது.

பெண்கள், தலித்துகள், மதச்சிறுபான்மையினர், மதச்சார்பற்றவர்கள், கம்யூனிஸ்ட்கள், நாத்திகர்கள் மீதான வெறுப்பில் நொதித்த எதிர்மறைச் சக்திகளாகிய பார்ப்பரேட்டியர்கள் அரசதிகாரத்தை அபகரித்துள்ள இந்தக்காலம் காலனியாட்சிக்காலத்தை விடவும் கொடியதாகிவிட்டது. பார்ப்பரேட்டியர்களது ஆட்சியானது, “சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்” கோரும் குரல்களை வரலாற்று வன்மத்துடன் ஒடுக்குகின்றது. நீதி கேட்டு வந்தவர்கள்  நீதிமன்றத்தின் மூலமே சிறையிலடைக்கப்படும் அவலம். சிகிச்சையளித்ததற்காக மருத்துவர்களும், உண்மைச்செய்தியை வெளியிட்டமைக்காக ஊடகவியலாளர்களும், அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளைக் கோருகிற குடிமக்களும் இருக்கவேண்டிய இடம் சிறைதான் என்றால் 75 ஆண்டுகளுக்கு முன்பு நாம் ஈட்டிய அரசியல் சுதந்திரத்தையும் சுதந்திரப்போராட்டத்தில் ஒருபோதும் பங்கெடுத்தேயிராத பார்ப்பரேட்டியர்களிடம் பறிகொடுத்துவிட்டிருக்கிறோம் என்றே பொருள். அல்லது, நம் முன்னோர்கள் கோரிய முச்சுதந்திரங்களுக்காகவுமான போராட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும் என்கிற பொருளாகவுமிருக்கலாம்.

சுதந்திரதின வைரவிழாவை முன்னிட்டு, கட்டுரையில் பயன்படுத்தக்கூடாத சொற்களின் அகராதியை அரசு ஒருவேளை வெளியிட்டுவிடுமோ என்கிற பதைபதைப்புடன் இக்கட்டுரையை எழுதி முடிக்கும் தருவாயில் சட்டீஸ்கர்கரிலிருந்து ஒரு நற்செய்தி: அங்கு, உபா சட்டத்தின்கீழ் ஐந்தாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 121 பழங்குடியினர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால் யாதொரு குற்றமும் இழைக்காமல் ஐந்தாண்டுகள் சிறைக்குள் அடைபட்டிருப்பது யாருக்கேனும் நற்செய்தியாக இருக்கமுடியுமா?  

சிறைவாழ்க்கை எப்படி இருக்கும் என்று அனுபவித்து தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள்  திகார், எரவாடா, ஹிண்டல்கா சிறைகளுக்கு “சிறைச்சாலை சுற்றுலா” செல்லலாம். அதற்கான கட்டணத்தை செலுத்துகிறவர்களுக்கு கைதியின் எண்ணுடன் கூடிய உடை தரப்படும். அவர்கள் கைதிகள் சமைப்பதை உண்டு கைதிகள் செய்யும் வேலைகளைச் செய்து கைதிகளுடனேயே ஓர் இரவு தங்கி தரையில் படுத்துறங்கியும் வரலாமாம். கொஞ்சம் சூடு் சுரணையுமுள்ள யாரும் இந்த அனுபவத்தைப் பெறுவதற்காக அவசரப்பட்டு பணத்தை வீணடிக்கவேண்டியதில்லை. ஓட்டைக்காசு கூட செலவுவைக்காமல், ஒருநாளல்ல - ஆண்டுக்கணக்கில் அந்த அனுபவத்தைத் தருவதற்கு பார்ப்பரேட்டிய அரசு தயாராயுள்ளது. ஏற்பதற்கு இசைவு தேவையில்லை. ஆனால் மறுப்பதென்றாலோ, சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடுவது முன்னிபந்தனையாகிறது.


நன்றி: நீலம், 2022 ஆகஸ்ட் இதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...