நரகல் நாறுதேன்னா நக்கிப் பார்த்துட்டுச் சொல் என்கிறார்கள் - ஆதவன் தீட்சண்யா

ரங்கநாயகம்மா என்பவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை என்கிற நூலை எழுதியிருப்பதாக நண்பர் வெய்யில் சொல்லும் வரை, ரங்கநாயகம்மா என்பவரை நான் அறிந்திருக்கவில்லை. அவரை அறிந்து கொண்டேயாகவேண்டும் என்கிற தனித்தத் தேவை ஏதும் நமக்கில்லை. எவ்வாய் எப்பொருள் செப்பினும் அவ்வாயின் சாதியைக் காண்பதும் அறிவு என்பதால் இணையத்தில் தேடி அவரைப் பற்றி படித்துக்கொண்டிருந்த வேளையில்தான் ‘ரஜினி நடித்தப் படத்தில் வேலை செய்ததாலேயே ரஜினியை அம்பேத்கருக்கு அடுத்தத் தலைவராக ஏற்றிருப்பவர் என வசுமித்ர007 புலனாய்வில் கண்டறியப்பட்ட அதியன் ஆதிரை’ மூலம் புத்தகம் வந்து சேர்ந்தது. ( புத்தகத்தை டெலிவரி செய்த கூரியர் தொழிலாளிக்கு யார் தலைவர் என்கிற ரகசியமும் விரைவில் அம்பலமாகக்கூடும்) 

புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த போதே அது குறித்த பதிவொன்றை எனது வலைத் தளத்தில் எழுதியிருந்தேன். ‘நாம எது சொன்னாலும் கேட்டுக்கணும், எதை எழுதினாலும் படிக்கணும்கிறது தானே ஊர்வழக்கம், அதற்கு மாறாக இவனென்ன கருத்து சொல்லக் கிளம்பியிருக்கிறான்’ என்று மொழிபெயர்ப்பாளர் தரப்பு கடுப்பாகிவிட்டது போல. முழுதாகப் படிக்காமல் இப்படி எழுதுவது சரியா நெறியா என்றெல்லாம் ஆவேசப்படுகிறார்கள். நாலாம் பக்கத்தில் இருக்கிற தவறைச் சுட்டிக்காட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களையும் படித்துத் தானாக வேண்டும் என்று நிபந்தனை போடும் அவர்கள், அதற்கு உட்படாமல் அபிப்பிராயம் சொல்லுகிற உனக்கு ஒரு நூலை எப்படி படிக்கவேண்டும் என்பதே தெரியவில்லை என்று தீர்ப்பு சொல்கிறார்கள். ஆதவனுக்கு எழுதவே தெரியாது என்றொரு தீர்ப்பு போன வாரம் வெளியானது, இந்த வாரம் படிக்கவே தெரியலே என்று. வாராவாரம் வசைபட வாழ்கிறேன். 

விமர்சனம் என்றால் அது அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டும், ஆனால் அது ஆதவனுக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று அறிவிக்கும் கொற்றவை, அதற்கான வரலாற்றுக் காரணத்தை கண்டறிகிறார். ‘...அம்பேத்கர் உங்களுக்கு அப்படி வழிகாட்ட முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. ஏனென்றால், எதையும் ஒழுங்காகப் படிக்காமல், அவசரகதியில் முன்முடிவுக்கு வந்து கண்மூடித்தனமாக நிராகரிக்கும் போக்கை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் மார்க்சியம் குறித்து எதையும் படிக்காமலேயே அதுபற்றிய முடிவுக்கு வந்தார். அதேபோல் நீங்களும் புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் பதிவு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் அவரிடமிருந்து அதை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளீர்கள் போலும்!’. 

புரிகிறதா, ஆதவன் இப்படி அரைகுறையாக இருப்பதற்கு காரணம், அம்பேத்கர் என்கிற அரைகுறையைப் பின்தொடர்வதுதான். அதாவது ‘உங்களுக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் அறிவு வராது’ என்பதுதான் கொற்றவை சொல்லவரும் விசயம். கொற்றவையைப் போல நிறையறிவோடு இருப்பதற்கு குறைந்தபட்சம் அவரது சாதியில் பிறந்திருப்பது கட்டாயம் போல. ஒரு பறப்பயலா பிறந்துட்டு என்று சொல்லத் துடிக்கும் ஆத்திரத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ‘தலித்தாய் பிறந்ததாலேயே’, ‘பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே’  என்று திரும்பத்திரும்ப விளித்து கொற்றவை கூறும் அறிவுரைகளெல்லாம் அவரது சாதிய உளவியலையே காட்டித் தருகிறது. வன்கொடுமையின் வரம்புக்குள் வந்துவிடாமல் கவனமாக திட்டுவதற்கான நுட்பம் அவருக்கு வாய்த்திருக்கிறது. சரி, ஒரு வாதத்திற்காக கேட்கிறேன், எதை வைத்து என்னை  "தலித்தாய் பிறந்ததாலேயே" என்று கூறுகிறார்? அம்பேத்கரை பின் தொடர்கிற இவன் வேறு யாராகவும் இருந்துவிட முடியாது என்கிற பொதுப்புத்தியிலிருந்துதானே?
 
ரங்கநாயகம்மா என்பதற்கு பதிலாக ரங்கநாயகியம்மா என்று இருக்கும் தட்டச்சுப் பிழையையெல்லாம் ஏதோ தத்துவார்த்தப்பிழை போல காட்டி தாங்கள் எழுதியதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திட்டமிட்டே அம்பேத்கரைத் திருத்தி பிழைபட தாங்கள் எழுதியிருப்பவற்றை அறிவுநாணயம் என்று கொண்டாடிக் கொள்கிறார்கள். எனது எதிர்வினைக்காக காத்திருப்பதாக அறிவித்திருக்கும் அவர்கள் பின்வரும் எனது இரண்டு கேள்விகளுக்காவது பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.

The Essential Writings of B.R. Ambedkar - p 400
1  ‘...தீண்டப்படாதவர்கள் தங்கள் சாதியை தாழ்வாகக் கருதவில்லை, பிராமணர்களை எட்டி உதைத்தார்கள் என்று எவரோ எழுத, உடனே அம்பேத்கர் புளகாங்கிதமடைந்து அந்தத் தகவலை பெரும் உவகையுடன் விவரித்தார்...’ என்கிறார் ரங்கநாயகம்மா ( பக்கம் 93). 

இப்படியொரு குறிப்பை அபே துபேயின் நூலில் காணலாம். 1906 ஆம் ஆண்டு வெளியான தஞ்சாவூர் கெஜட்டியரில் பக்கம் 80ல் அதன் ஆசிரியரான  ஹெமிங்ஸ்வே ‘தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பறையர் பள்ளர் சக்கிலியர் தங்களுக்குத் தீமை விளையும் என்று நம்புவதால் தங்களது குடியிருப்புகளுக்குள் பிராமணர் நுழைவதை அனுமதிப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறார். மைசூர் மாநிலத்தின் ஹஸன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோலியரிடையே இதேபோன்ற வழக்கம் இருந்ததாக காப்டன் ஜே.எஸ்.எஃப்.மெக்கன்ஸியும் ( Indian Antiquary 1873) பதிவு செய்திருக்கிறார். (பார்க்க: தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும், தி.பெ.கமலநாதன், பக்கம்: 29,  எழுத்து வெளியீடு மற்றும் வலேரியன் ரோட்ரிக்ஸ் எழுதிய The Essential Writings of B.R. Ambedkar - p 400)

இப்படி தனக்கு முந்தைய மற்றும் தன் காலத்தில் பொருட்படுத்தத்தக்கதாய் இருந்த ஆவணங்களை ஆதாரமாக கொண்டுதான் அம்பேத்கர் எழுதியிருக்கிறார். ஆனால் ரங்கநாயகம்மாவோ யாரோ எவரோ ஒரு அனாமதேயம் எழுதியதை அம்பேத்கர் எடுத்தாண்டு புளகிப்பதாக குற்றம்சாட்டுகிறார். இந்தத் திரிப்புவேலைச் செய்தாவது அம்பேத்கரை இழித்துக் கூறி உதாசீனப்படுத்துவதன் பின்னே உள்ள உளவியல் என்ன?

2. // முதலாளிகள் புத்திக்கூர்மை உடையவர்கள் அதனால்தான் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், தொழிலாளர்களுக்கு அந்தளவுக்கு புத்திக்கூர்மை இருந்தால் இந்நேரம் அவர்களும் அந்நிலைக்கு உயர்ந்திருப்பார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன? // என்கிறார் கொற்றவை.


உண்மையில் இந்தக் கருத்து 1921 ஜூன் 8 ஆம் நாளிட்ட நவஜீவன் இதழில் காந்தியால் சொல்லப்பட்டது. காந்தியின் இக்கூற்றை மறுக்கும் அம்பேத்கர் ‘சொத்துடைமை வர்க்கத்தை காந்திஜி பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு எதிரான இயக்கத்தைக்கூட எதிர்க்கிறார். பொருளாதார சமத்துவக் கோட்பாட்டில் அவருக்கு நம்பிக்கை இல்லை’  என்று சாடுகிறார். (ஆதாரம்: மு.வீரபாண்டியன் எழுதி என்.சி.பி.எச். வெளியிட்டுள்ள ‘அண்ணல் அம்பேத்கரின் கலை இலக்கியப் பார்வை’ என்கிற நூலின் 21, 22 ஆம் பக்கங்கள்)

உண்மை இவ்வாறிருக்க, முதலாளிகள் தொழிலாளிகள் குறித்து காந்தி கூறியதை அம்பேத்கர் கூறியதாக எழுதிப் போகும் கொற்றவை, ‘நீங்களும் ஒரு மார்க்சிய கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள்! அப்படியென்றால் நீங்கள் இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா? உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா?’ என்றெல்லாம் தனது அடுத்தடுத்தக் கேள்விகளை என்னை நோக்கி அடுக்கிக் கொண்டே போகிறார். 

காந்தி எழுதியதை அம்பேத்கர் எழுதியதாக பொய் சொல்லி வசை பாடும் இந்த உத்தி கொற்றவையின் கட்டுரையிலும் அவர் மொழிபெயர்த்துள்ள நூலிலும் எவ்விதமாக எங்கெங்கு கையாளப்பட்டுள்ளது என்று துப்பறிந்து கொண்டிருப்பது நமது வேலையல்ல. ஆயினும் குறைந்தபட்சம் இந்த ஒரு ஆதாரத்தையாவது அவர் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எதுவொன்றையும் ஆழ்ந்துப் படித்து அறிவுநாணயத்தால் விகசிக்கும் அவர் இதற்கான ஆதாரங்களை கொடுக்காமலா போவார்? காத்திருக்கிறோம். 

நன்றி: ஆதாரங்களைத் தேடித்தந்த தோழர்கள் திருவாசகம், ஈஸ்வரன் ஆகியோருக்கு. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக