மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான
தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்திய தொழில்நுட்பக்கழகம் (IIT), இந்திய அறிவியல்
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) போன்றவற்றில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு
(IIT-JEE) ஒன்று நடத்தப்படுகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வின் முதல்நிலையில்
(Main) தேறுவதே NIT போன்றவற்றில் சேர்வதற்கு போதுமானது. IIT, IISER போன்றவற்றில் சேரவேண்டுமானால்
இரண்டாம் கட்டத் தேர்விலும் (Advanced) தேர்ச்சிபெற்றாக வேண்டும்.
நாட்டில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளிலேயே
மிகக் கடினமானது என்று சொல்லப்படும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது எல்லோராலும்
முடியாது என்றும் அதற்கு அபாரமான மூளையும்
திறமையும் தகுதியும் தேவை என்றும் இவையெல்லாம் ‘கருவிலே திருவுடைய சில குறிப்பிட்ட
சாதியினருக்கு மட்டுமே உரியவை என்றும் ஒரு மாயை பரவியுள்ளது. இந்த மாயையினால்தான் பார்ப்பன
விந்தணு (ஐஐடி) என்னும் சரக்கிற்கு சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. செயற்கை
கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியர், கூடுதல் விலை கொடுத்தும்
காத்திருந்தும் ஐஐடியில் படிக்கும் பார்ப்பனப்பையன்களின் விந்தணுவை வாங்குவதில் ஆர்வம்
காட்டுகிறார்கள். இதற்காக செலவழிக்கும் தொகை ஒரு மூலதனமாக கருதப்படுகிறது.
ஏதோவொரு வகையில் பார்ப்பன விந்தணு மூலம்
பிறப்பவர்களால் மட்டுமே ஆகக்கடினமான இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற முடியும் என்பதற்கு
எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. சாதிய மேலாதிக்க உணர்வினால் கட்டமைக்கப்பட்டு சாதியடிமைத்தனத்தின்
கீழ்ப்படிதலால் வலுப்பெற்று வந்துள்ள இம்மாயையின் மீது நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தகுந்த
இரண்டு தாக்குதல்களை இங்கு கவனப்படுத்த வேண்டியுள்ளது.
இவ்வாண்டின் ஐஐடி முதல்நிலை நுழைவுத்தேர்வில்
அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றவர் கல்பிட் வீர்வல் என்பவர். அவர் பெற்ற
360க்கு 360 மதிப்பெண்கள் என்பது இந்த நுழைவுத்தேர்வு வரலாற்றில் ஓர் உச்சபட்ச சாதனை.
இவர் பிறப்பால் தலித் என்கிற செய்தி வெளியானதும், ஒரு திறமைசாலியை இப்படி சாதியடையாளத்தால்
சுட்டவேண்டுமா என்று சிலர் பசப்பலாக கேட்டனர். கடந்த ஆண்டு ஒன்றிய பணியாளர் தேர்வு
வாரியம் (UPSC) நடத்திய இந்திய ஆட்சிப்பணிகளுக்கான தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப்
பெற்ற டினா டாபி ஒரு தலித் என்கிற செய்தி வெளியான போதும் இதேபோன்று கேட்கப்பட்டது.
கல்பிட் வீர்வல், டினா டாபி போன்றோரது சமூகப்பின்புலம் வெளித்தெரிந்தால், இதுபோன்ற
தேர்வுகளில் பார்ப்பனர்களைத்தவிர வேறு யாராலும் தேர்ச்சி பெறவோ சாதனை நிகழ்த்தவோ முடியாது
என்று நிலவும் மாயை தகர்ந்துபோகும் என்கிற அச்சத்திலிருந்தே இப்படியாக கேட்கப்படுகிறது.
கல்பிட் வீர்வல் முதல்நிலை நுழைவுத்தேர்வில்
அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றபோது அவரை சாதிரீதியாக அடையாளப்படுத்தக்கூடாது
என்றவர்கள், அவர் இரண்டாம் நிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் 109வது இடத்தையும் எஸ்.சி.பட்டியலில்
முதல் இடத்தையும் பெற்றபோது, ஒரு தலித்தால் அந்தளவிற்கு தான் வரமுடியும் என்றும் அவர்
தனக்குரிய இடத்திற்கு திரும்பிவிட்டார் என்றும் சாதியைச் சுட்டி இளக்காரம் பேசினர்.
இரண்டாம் நிலைத்தேர்வில் அவர் பின்தங்கிப் போனது குறித்த கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த
மெரீட்டாண்டிகள் இப்போது எல்லைதாண்டி வந்திறங்கிய செய்தியொன்றினால் நிம்மதியிழந்து
அரற்றும் நிலைக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஜாக் ஃபிரேஷர் (Jack Fraser) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மூன்றாமாண்டு
மாணவன். வினாவிடை அரங்கமான quora.com இணையத்தில்
பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களில் ஆர்வமுடன் பங்கெடுப்பவன். கடந்த சில வாரங்களுக்கு
முன்பு ஒருநாள் தற்செயலாக யாரோ ஒருவர் ‘ஃபிரேஷரால் IIT -JEE கேள்வித்தாளுக்கு பதிலளிக்க முடியுமா’ என்று சவாலாக
கேட்டிருக்கிறார். பிரச்னையின் தீவிரம் புரியாமலே, இவரும் அதனாலென்ன எழுதுகிறேன் என்று
ஒத்துக்கொண்ட அந்த சமயத்தில் இதுதான் இந்தியாவின் மிக உயரிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்
சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்குரிய மிகக்கடினமான வினாத்தாள் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
வினாத்தாளை எடுத்து நிர்ணயிக்கப்பட்டதில் மூன்றிலொரு பங்கு நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும்
சரியான விடையை எழுதி முடித்திருக்கிறார். எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டபோது,
‘இது வெறுமனே 17 வயதிற்குட்பட்ட உயர்நிலைப்பள்ளி
மாணவர்களுக்குரிய மட்டத்தில் உள்ள கேள்வித்தாள் தான். அப்ஜெக்டிவ் டைப் என்பதால் எனக்கு
மிக எளிதாகவே இருந்தது. அதனால் கொடுக்கப்பட்ட நேரத்தில் மூன்றிலொரு பங்கு நேரத்தில்
முடித்துவிட்டேன்’ என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
பொறுக்குமா நமது மெரீட்டாண்டிகளுக்கு?
எங்களைத் தவிர எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று இவ்வளவுகாலமும் நாங்கள்
பம்மாத்து செய்துகொண்டிருக்கிற ஒரு கேள்வித்தாளை நீ எப்படியடா இப்படி இழிவுபடுத்தலாம்
என்று பொங்கிவிட்டார்கள். ஃபிரேஷர், அவரது தாயார், அவரது குடும்ப உறுப்பினர்கள் என்று
அனைவரது முகநூல், டிவிட்டர் பக்கங்களுக்குப் போய் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் வசவுகளை
அள்ளிக் கொட்டத் தொடங்கி விட்டார்கள். நீ எங்கே இருக்கிறாய் என்று எங்களுக்கு தெரியும்,
தலையை எடுத்துவிடுவோம் என்று மிரட்டுமளவுக்குப் போனவர்கள் பிரேஷரின் தாயாருக்கு ஆணுறுப்பு
படங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
நீட் தேர்வை எழுதுமளவுக்கு உங்களது பாடத்திட்டத்தையும்
தேர்வுமுறையையும் மேம்படுத்துங்கள் என்று தமிழக மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுகிற அம்பிகள், தங்களது போங்காட்டம் அம்பலப்படும் போது ஆபாசத்தால்
எதிர்கொள்கிறார்கள். எட்டாம் வகுப்பிலிருந்து டீச்சிங் கோச்சிங் என்று உருப்போட்டு
மார்க் எடுப்பதையே மெரீட் என்றும் அதுவே ஐஐடி போன்றவற்றில் நுழைவதற்கான ஆகப்பெரும்
தகுதியென்றும் பீற்றிக் கொண்டிருந்ததை ஃபிரேஷர் அம்பலப்படுத்திவிட்டான் என்கிற ஆத்திரத்திற்கு
தேஷபக்தி முகமூடி அணிந்து இந்திய கேள்வித்தாளை
எப்படி அவமதிக்கலாம் என்று குதிக்கிறார்கள். கற்றறிந்த சமூகம் இந்த தேஷ்பக்தாக்களின்
அருவருப்பான நடத்தை கண்டு முகம் சுளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக