வியாழன், ஜூன் 8

சோஷலிச எழுத்தின் அடிப்படைகள் - தோழர் விஜய் பிரசாத்



சோஷலிச எழுத்து என்பது எழுதுபவரின் மேதமை பற்றியதல்ல; அது அவர்கள் சமூகத்தோடு நடத்தும் உரையாடல் பற்றியது. இடதுசாரி எழுத்துகள் பெரும்பாலும் யாராலும் எளிதில் நுழைய இயலாத குழூஉக்குறிகள் கொண்ட, யாரும் நேரம் செலவழிக்கத் தயாராக இல்லாத, மார்க்சிய மொழியில் இருப்பவை என்றோ, அல்லது மிகு எளிமைப் படுத்தப்பட்ட பிரச்சாரம் என்றோ, கேலிச்சித்திரமாக ஆக்கப்படுகின்றன. 
எனினும், ஒருவரது அரசியல், அவர் புரியாதபடி எழுதுவதை, வறட்டுத்தனமாக எழுதுவதை, அல்லது சாதாரணமாக ஒரு மோசமான எழுத்தாளராக இருப்பதை, ஒருபோதும் தடுக்க முடியாது. ஆனால், இடதுசாரிகளின் வரலாறு, தம்மிடம் சொல்வதற்கு முக்கியமான செய்தி உள்ளது என்பதற்காக பேனாவைக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தச் செய்தி பரந்த முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கும் படைப்பாளிகள் நிரம்பியதாக இருந்து வந்துள்ளது.
மேலும், ஒரு சோஷலிசப் படைப்பாளியின் குறிக்கோள்கள், அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கான வழிமுறைகள் எந்த விதங்களில் ஒரு முதலாளித்துவ அல்லது அரசியல்சாராத படைப்பாளியின் குறிக்கோள்கள், வழிமுறைகளிலிருந்து மாறுபடுகின்றன என்பது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டதில்லை. அவற்றை அறிவதற்காகவே ‘ஜாகோபின்’ இதழுக்காக மார்க் நோவாக் ‘லெஃப்ட்வேர்ட் புக்ஸின்’ தலைமை ஆசிரியர் விஜய் பிரசாத் அவர்களிடம் சோஷலிச அரசியலில் எழுத்தின் பங்கு பற்றி உரையாடியிருக்கிறார்.
மார்க் நோவாக் எடுத்த நேர்காணல்  தமிழில் – ச.சுப்பாராவ்
மா. நோ. – சோஷலிசக் கவிதையியல் என்று இப்போதைக்குப் பெயரிட்டுள்ள ஒரு புதிய புத்தகம் எழுதும் பணியில் நான் ஈடுபட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். புதுடில்லியில் ‘மே டே புக்ஸ்டோரில்’ நீங்கள் சமீபத்தில் நடத்திய பயிற்சிப் பட்டறை பற்றி, முதலாளித்துவ எழுத்து, சோஷலிச எழுத்து ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள் பற்றிய உங்கள் விவாதங்கள் பற்றி நான் கேள்விப்பட்டேன். அது பற்றி நான் இன்னும் சற்று விரிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும். உங்களைப் பொறுத்தவரை, முதலாளித்துவ எழுத்துக்கும், சோஷலிச எழுத்துக்கும் உள்ள மையமான வேறுபாடுகள் எவையெவை?
லெஃப்ட்வேர்ட்- இல் என்னோடு பணிபுரியும் எனது சகா – சுதன்வா தேஷ்பாண்டே – புனைவல்லாத எழுத்து பற்றி நான் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தலாம் என்று ஆலோசனை கூறினார். நான் இப்படியொரு பட்டறை நடத்தியது அதுவே முதல் முறை. அதை எவ்விதமாக கட்டமைப்பது என்று உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. சொல்ல வேண்டிய செய்தியின் வெவ்வேறு பகுதிகளை எப்படி ஒன்றுகோர்த்து முழுமையாகத் தருவது, ஒரு கோட்டுச் சித்திர அறிமுகத்தின் (outline) முக்கியத்துவம், கையால் எழுதுவது என்ற மிக முக்கியமான விதி. மோசமான எழுத்து என்பதாக ஒன்றுமில்லை, முழுமையடையாத சிந்தனை என்பதுதான் பிரச்னை என்பது போன்ற சில பொதுவான பொருட்கள் இருந்தன. ஆனால், பொதுவாக இது போன்ற பட்டறைகளில் கிடைக்கும் விஷயங்களுக்கு சற்று கூடுதலாக, இதில் அரசியல், எழுத்து என்பதைப் பற்றிய விவாதம் இருந்ததாக நான் கருதுகிறேன்.
அண்டோனியோ கிராம்சி தனது சிறைக்குறிப்புகளில் கூறிய விரித்துரைத்தல் பற்றிய கருத்து முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். முதலாளித்துவ சமூகத்தில் மக்கள் குடும்பம், கல்வி, ஊடகம், பணிபுரியும் இடம் என பல்வேறு இடங்களிலிருந்து கருத்துகளை உள்வாங்குகிறார்கள். இந்தக் கருத்துகளின் மொத்தத் திரட்டை கிராம்சி “பொது அறிவு” (common sense) என்கிறார். இந்தப் பொது அறிவு இந்த உலகின் இருப்பை, அது எப்படித் தோற்றமளிக்கிறது என்பதை பெரிய அளவிற்கு விளக்கிவிடுவதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இந்த உலகில் முழுமையாகப் புரிந்துகொள்ள மிகவும் கடினமான சில அடிப்படையான விஷயங்கள் உள்ளன. புரிந்து கொள்ள முடியாத முரண்பாடுகள் உள்ளன.
ஒரு முரண்பட்ட உணர்வு நிலையின் மூலமாகத்தான் மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்கிறார்கள் என்று கிராம்சி சொல்கிறார். கம்யூனிஸ்ட் அல்லது சோஷலிஸ்ட் இந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்று, அவர்களோடு உரையாடி, அவர்களது அந்தப் பொது அறிவைக் கூர்ந்து கவனிப்பதாக அவர் சொல்கிறார். பின்னர் அந்த கம்யூனிஸ்ட் ஊழியர் அல்லது படைப்பாளி அவர்களது பொதுஅறிவை மிக விரிவாக ஆராய்ந்து, இந்த முரண்பட்ட பொதுஅறிவை நீக்கி, அதை “அறிவு பூர்வமானதாக” (good sense) அல்லது தத்துவமாக விரித்துரைக்கிறார். நல்ல சோஷலிசப் புனைவல்லாத எழுத்து தான் ஒரு படைப்பாளியின் மேதைமையிலிருந்து, அவரது உள்ளுணர்ச்சியிலிருந்து உருவானதாகக் காட்டிக்கொள்ளாது. ஆனால் அது நம்மைச் சுற்றியுள்ள பொது அறிவை உள்வாங்கியதால், அதை அறிவு பூர்வமான தத்துவமாக விரிவாக்குவதால் வந்ததாக உள்ளது.
இதை வேறு தளத்திலிருந்தும் சொல்லலாம். சோஷலிச எழுத்து என்பது ஜனநாயகம் குறித்தது;, வாசகர்களை நாம் உற்பத்தி செய்பவற்றை வாங்கும் நுகர்வோராகப் பார்க்காமல். நமது செயல்முறையின் ஓர் அங்கமாகப் பார்ப்பதைக் குறித்தது. சோசலிச எழுத்து ஓர் உரையாடலாக இருக்க வேண்டும்.
என்றாலும், ஒரு முதலாளித்துவ சமூகத்தில், வாழ்க்கை நடத்த, ஓர் எழுத்தாளர் தான் எழுதியதை விற்க வேண்டியதாக உள்ளது. ஆனால் நமது படைப்புகள் இந்த உலகத்தோடு நாம் நடத்திய ஊடாடல்களிலிருந்து உருவானவை. இது போன்ற ஊடாடல்கள் இன்னும் அதிகமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படுபவை. உண்மையில், உயிரோட்டமான சோஷலிச அரசியல் நடக்கும் இடத்தில், நமது ஊடாடல்கள் செயல்பாடுகளை, நடைமுறைகளை நோக்கியே செல்ல வேண்டும். அதனால்தான் கிராம்சி மார்க்சியத்தை செயல்பாட்டுத் தத்துவம் என்றார். (சிறையின் தணிக்கை அதிகாரிகளைக் குழப்புவதற்காகவும், தான் நினைத்ததைச் சரியாகச் சொல்வதற்காகவும் கிராம்சி philosophy of praxis என்ற சொல்லைக் கையாண்டார்).
இங்கே நான் ஒன்றைத் தெளிவாகக் கூறவிரும்புகிறேன். சோஷலிச எழுத்து என்பது ஒரு கட்சியின் செயல்பாடுகளுக்கான வெறும் பிரச்சாரமல்ல. அப்படியொரு கேலிச் சித்திரம் இருக்கிறது.
கலை தான்மட்டுமே உலகத்தை மாற்றிவிட முடியாது. அது ஒரு புரிதலை, உள்ளொளியைத் தரலாம் – ஆனால் அது உலகின் அதிகார உறவுகளை மாற்றிவிடாது. அதற்கு ஓர் அமைப்பின் சக்தியும், போராட்டமும் அவசியம்.
அதே சமயத்தில், ஒரு முன்தீர்மானிக்கப்பட்ட முடிவு என்பதில்லாமல், கலை என்பது முரண்பட்ட உள்ளுணர்வோடு உறவாட சுதந்திரம் பெற்றதாக இருக்கவேண்டும். விரிவுபடுத்திச் சொல்லும் செயல்முறையை ஓர் அரசியல் நிலைப்பாடு வழிநடத்துகிறது என்றால், நாம் மக்களிடையே நமது ஆய்வைத் துவங்குவதற்கு முன்பே நமது பிரச்னைகளுக்கான விடைகளைத் தெரிந்து கொண்டதாக ஆகிவிடும். சமூக உறவுகளை நன்கு புரிந்து கொள்ள, முரண்பட்ட உள்ளுணர்வோடு – மக்களோடும், நமது தோழர்களோடும் – எந்த அளவிற்கு நெருங்க முடியுமோ அந்த அளவிற்கு நெருங்கவும், நமது காலத்தை நன்கு புரிந்துகொள்ளவும் சுதந்திரம் இருக்க வேண்டும்.
இந்த உரையாடலில் கிராம்சி பற்றி நீங்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் தொழிலாளர் எழுத்தாளர் பள்ளியில் நாங்கள் கிராம்சியின் கருத்தான ‘உயிரோட்டமான அறிவுஜீவி’ அல்லது அவர் கூறும் ‘ஒவ்வொரு மனிதனும் ஓர் அறிவுஜீவியே’ என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறோம். ‘மக்களிடமிருந்து’ எழுத்தாளர்கள் எவ்வாறு நேரடியாகத் தோன்ற முடியும் என்பதற்கு சோஷலிச எழுத்தை ஒரு சட்டகமாகக் கொள்ள முடியுமா? மக்களுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது (அல்லது அறவே நீக்குவது) சோஷலிச எழுத்தின் லட்சியங்களில் ஒன்றாக இருக்க வேண்டுமா?
மார்க், நீங்கள் அருமையான ஒரு விஷயத்தைச் சொன்னீர்கள். நிச்சயமாக, அறிவுஜீவிகளுக்கும், மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது சோஷலிச இயக்கத்தின் – கிராம்சியும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் – குறிக்கோள்களில் ஒன்று என்பது நிச்சயம். உங்கள் தொழிலாளர் எழுத்தாளர் பள்ளியில் இதைத்தான் நான் பார்த்தேன். ஆனால் இதை நான் பல ஆண்டுகளாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கட்சிப் பள்ளிகளில் பார்த்து வருகிறேன்.
எனினும், ஓர் எளிமையான மலிவுத்தன்மை பற்றி எச்சரிக்க விரும்புகிறேன். ஒரு தனிநபரின் பார்வையிலிருந்து இதை நீங்கள் பார்த்தால், உழைக்கும் வர்க்கத்திலிருந்து மக்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதையும், பிறகு உழைக்கும் வர்க்கத்தில் தமது பிணைப்பு அத்தனை உயிரோட்டமாக இல்லாததாக உணர்வதையும் நாம் பார்க்கலாம். மூலதனம், அரசு ஆகியவற்றின் நிறுவனங்கள் தனது பல்வேறு வழிமுறைகளின் மூலம் அந்தப் பிணைப்புகளை உடைத்துவிடுகின்றன. ஒருவரது புதிய வர்க்க அந்தஸ்து பெரும்பாலும் புதிய வர்க்க குணங்களை உருவாக்குகிறது.
கிராம்சி தனது படைப்புகளில் இரண்டுவிதமான அறிவுஜீவிகளைப் பற்றி எழுதினார். முதலாவது மதகுருக்கள், பேராசிரியா்கள் போன்ற பாரம்பரிய அறிவுஜீவிகள். இவர்களது தனிப்பட்ட பணியின் தரம் எப்படி இருந்தாலும், இவர்களின் சமூக அந்தஸ்து இவர்களை அறிவுஜீவிகளாக அடையாளம் காட்டிவிடுகிறது. மற்றது, தொழிற்சாலைகளின் பொறியாளர்கள், கிராமப்புறத்தில் உள்ள அறிவார்ந்த விவசாயிகள் போன்ற உயிரோட்டமான அறிவுஜீவிகள். அவர்கள் தமது சொந்த வர்க்கச் செயல்பாடுகளின் மூலமாக காரியங்கள் நடக்கவும், அவற்றை மேம்படுத்தவும் வேண்டிய தகவல்களைத் தந்து உதவுபவர்களாக, ஆலோசனை தருபவர்களாக உயர்பவர்கள். இந்த இரண்டுவிதமான அறிவுஜீவிகளும் உள்ளார்ந்த வகையில் முற்றிலும் பழம்பாணியிலானவர்களாகவோ அல்லது புரட்சிகரமானவர்களாகவோ இருப்பதில்லை.
கிராம்சி ‘புதிய அறிவுஜீவிகள்’ பற்றியும் எழுதியிருக்கிறார். அவரது படைப்புகளில் அதிகம் கவனிக்கப்படாத விஷயம் இது. இந்த அறிவுஜீவிகள் – இவர்களில் கல்லூரிப் பேராசிரியரும் உண்டு; பாரம்பரிய விவசாயியும் உண்டு – யதார்த்தத்தில் உள்ள சமூக அமைப்பிற்கு எதிரானவர்கள். அவர்கள் வெகுஜனப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள். தம் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த உதவும் வெகுமக்கள் அரசியல் கட்சியோடு இணைந்தவர்கள். இந்தப் புதிய அறிவுஜீவிகள் அமைப்பாளர்களாக, தொடர்ந்து மக்களை தூண்டிக் கொண்டிருப்பவராக, ஆக்கபூர்வ செயல்பாட்டாளராக, நடைமுறை வாழ்வில் தீவிரமாகப் பணியாற்றுபவர்கள் என்கிறார் கிராம்சி. தொடர்ந்து மக்களைத் தூண்டிக் கொண்டிருப்பவர் என்ற எனக்கு குறிப்பாக இந்தக் கருத்து குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒருவேளை இதுதான் சோஷலிச எழுத்தின் அடிநாதமோ?
உங்கள் மே டே புக்ஸ்டோர் பட்டறையில் நீங்கள் ‘வெடிக்கத் தூண்டிவிடும் வாக்கியங்கள்’ என்பவற்றின் முக்கியத்துவம் பற்றிக் கூறியதைப் பற்றி நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். சோஷலிச எழுத்து, முதலாளித்துவ எழுத்து என்பவற்றின் பின்னணியில் அதைப் பற்றி சற்று விளக்கம் தர முடியுமா?
மார்க்ஸ் மூலதனத்தின் முதல் பாகத்தை முடித்த போது. ஏங்கெல்ஸ் கவலை கொண்டார். இந்தப் புத்தகத்தைப் புரிந்து கொள்ள அதிகமான படிப்பறிவு தேவையோ? புத்தகத்தைப் படித்து முடித்ததும், மார்க்ஸிற்கு எழுதிய கடிதத்தில். ‘ இவ்வகையான சிந்தனைக்கு மக்கள் என்ன, பெரும் அறிஞர்களுமே கூட பழக்கப்படவில்லை‘ என்று குறிப்பிட்டார். ‘கூடிய மட்டிலும் புத்தகத்தை எளிமைப்படுத்துமாறு‘ மார்க்ஸை அவர் வேண்டினார். மார்க்ஸ் அதுபற்றிக் கவலைப்படவில்லை. அவர் முதலாளித்துவ அமைப்பின் உயிர்நாடியைக் கண்டுபிடித்துவிட்டார். அதை முடிந்த அளவிற்குத் தெளிவாக எழுதிவிட்டார். பிற்காலத்தில், ஏங்கெல்ஸ் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இவ்வாறே குறைகூறினார். மொழிபெயர்ப்பாளர்கள் மார்க்ஸ் மிகத் தெளிவான, தனித்துவமான எழுத்துப்பாணியைக் கொண்டவர் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை என்றார்.
ஏங்கெல்ஸ் கூறியது மிகவும் சுவாரஸ்யமானதாக எனக்குப் படுகிறது. மக்கள் ‘இதுமாதிரியான சிந்தனைப் போக்கிற்குப் பழகாததால்’, அதாவது இயங்கியல் முறைக்குப் பழகாததால், மார்க்ஸின் எழுத்துகள் கடினமானவையாகத் தோன்றுவதாக அவர் வாதிட்டார். மொழி மட்டும் சிரமமாக இருந்தது என்றில்லை. சிந்தனை வடிவமே, சிந்திக்கும் விதமே கடுமையாக இருந்தது. பல ஆண்டுகளாகத் தொடரும் கலைச்சொற்கள், தெளிவு பற்றி வாதங்கள் இந்த அம்சத்தை கவனிக்கவில்லை.
பொதுப்புத்தியை அடியொட்டி நீங்கள் எழுதினீர்கள் என்றால், நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்வது எளிது. தொலைக்காட்சி, பள்ளிகளின் பாடநூல்கள், இணையம் என்று ஒவ்வொரு கலாச்சார நிறுவனமும் இதற்கு சாட்சி. ஆனால், பொதுப் புத்தியை நீங்கள் சந்தேகித்தீர்களானால், பொதுவான சிந்தனையோட்டத்திற்கு மாறுபட்ட இடங்களிலிருந்து நீங்கள் சில விஷயங்களைக் கூறுவீர்களானால், உங்களுக்குப் பிரச்னைதான். நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்வது கடினம். கூடியவரை மிகத் தெளிவாக, ஆணித்தரமாக எழுத நீங்கள் மிகவும் பயிற்சி பெறவேண்டும்.
நான் கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக பத்திரிகையாளனாக இருக்கிறேன். அதே காலத்தில் நான் முனைவர் பட்டம் பெற்று, கல்விப்புலத்தில் வேலை பார்த்தும் வருகிறேன். எழுத்தில் பல்வேறு வகையான வடிவங்கள் இருப்பது வெளிப்படை. ஒவ்வொரு வகைக்கும் தனியான கலாச்சார அடையாளங்கள் உண்டு. தனியான வாசகர் வட்டம் உண்டு. மூலதனம் போல் மிகச் சிக்கலான வடிவிலான சோஷலிச எழுத்தும் உண்டு. தகவல் தரவும் , எழுச்சியை ஏற்படுத்தவும் வெளியிடப்படும் துண்டுப் பிரசுரங்கள், கோஷங்கள் போன்ற உணர்வுபூர்வமான சோஷலிசப் படைப்புகளும் உண்டு. இதில் இதுதான் முக்கியமானது; இது முக்கியமில்லாதது என்று சொல்ல முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு பங்கு இருக்கிறது.
தத்துவார்த்த ரீதியான பிரதியையும், துண்டுப்பிரசுரத்தையும் இணைக்கக் கூடியதான எழுத்து வகையில்தான் எனக்கு ஆர்வமாக இருக்கிறது.
என்னை ஈர்க்கும் தத்துவங்களிலிருந்து நான் உள்ளொளி பெற விரும்புகிறேன். அதே சமயம். அரசியல் கோஷங்களில் உள்ள உணர்வுகளிலிருந்தும் நான் உள்ளொளி பெற விரும்புகிறேன். பிறகு இரண்டையும் இணைத்து நான் கதை சொல்ல விரும்புகிறேன். அது விளக்கம் தருவதாகவும், உத்வேகம் தருவதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆனால் அந்த கோஷங்களை நான் எங்கிருந்து பெறுவது? அந்த இடத்தில்தான் ‘வெடிக்கத் தூண்டிவிடும் வாக்கியங்கள்’ வருகின்றன. உங்கள் பிரதியின் ஆரம்பத்திலேயே உங்களது வாதத்தின் சாரத்தைச் சொல்லக் கூடிய ஒரு வாக்கியம் வந்துவிடவேண்டும். உங்கள் வாதங்களின் அத்தனை அம்சங்களையும் சொல்லவேண்டும் என்பதில்லை. அதன் மையக் கருத்தைச் சொன்னால் போதும்.
‘சோல்ஸ் ஆஃப் பிளாக் ஃபோக்’ (கருப்பின மக்களின் ஆத்மாக்கள்) என்ற தனது புத்தகத்தில் டபிள்யூ.ஈ.பி. டூ ப்வா, (W.E.B. Du Bois) “ஒரு பிரச்னையாக இருப்பது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?” என்றார். அதுதான் அந்த முழுப் புத்தகத்தின் சாரம். அடிமை முறையின் மூலம் அமெரிக்காவின் ஆப்பிரிக்க வம்சாவளியினர் மிகக் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டார்கள். அதுதான் டூப்வாவின் மையக் கருத்து.
நான் இதை வேறு ஒரு இடத்திலிருந்து புரிந்து கொண்டேன். எனது இரண்டாவது புத்தகமான ‘கர்மா ஆஃப் பிரௌன் ஃபோக்’ (Karma of Brown Folk – ‘பழுப்பினத்தவரின் கடமை’) என்ற நூலில், நான் அமெரிக்காவின் இனங்களில், ஏன் சில குறிப்பிட்ட இனங்கள் வெற்றியின் அடையாளமாகவும், சில குறிப்பிட்ட இனங்கள் தோல்வியின் அடையாளமாகவும் இருக்கின்றன என்பது பற்றிய ஒரு வாதத்தை முன்வைத்தேன். இந்த இனங்களின் அதிகாரப் படிநிலை வெள்ளை ஆதிக்கத்தை உச்சியில் வைக்கவும், நான் ஒன்றும் இனவெறி பிடித்ததவனல்ல என்று கூறிக் கொள்ளவும் உதவுகிறது.
ஆசிய அமெரிக்கர்கள், குறிப்பாக தெற்காசியர்கள் 1965க்குப் பிறகு, உயர்ந்த படிப்புகளோடு அமெரிக்காவிற்குள் நுழைந்தார்கள். அவர்களது வெற்றிக்கதை குடியேற்றச் சட்டங்களால் எழுதப்பட்டது. எனவே, அவர்களது ‘மேதைமை’ இயற்கைத் தேர்வாக இல்லாமல் அரசுத் தேர்வாக இருந்தது. அதுவும்போக, வெற்றிக்கதையாக தெற்காசியர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டார்கள். டூப்வாவின் வெடிக்கத் தூண்டும் வார்த்தைகளை மனதில் கொண்டு நான் ‘ஒரு தீர்வாக இருப்பது பற்றி எப்படி உணர்கிறீர்கள்? ‘ என்று கேட்டேன். அக்கேள்விதான் புத்தகத்தின் அடித்தளமாக அமைந்தது.
‘தி டார்க்கர் நேஷன்ஸ்’ (The Darker Nations) என்பது எனது மற்றொரு புத்தகம். அது மூன்றாம் உலகத் திட்டங்கள், முன்னாள் காலனிய நாடுகளின் அரசியல் இயக்கங்கள் பற்றியது. ‘மூன்றாம் உலகம்’ என்ற சொல்லாடலே அரசின் தோல்வி, ஊழல், வன்முறை ஆகியவற்றோடு இணைந்ததாக ஓர் இழிவான பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மாதிரியான எண்ணம் நான் புத்தகம் எழுதிய 1980களில், மூன்றாம் உலகம் என்ற கருத்தாக்கம் சொல்லப்பட்ட காலத்தில் இருந்த எண்ணப்போக்கு. 1920களிலிருந்து 1980கள் வரை, இச்சொல்லாடல் உலக நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கான ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்வதற்கான மாபெரும் போராட்டத்தைக் குறிப்பதாக இருந்தது. எனவே, அந்த நூலின் வெடிக்கத் தூண்டும் வாக்கியம் – உண்மையில் அதன் முதல் வாக்கியம் – ‘மூன்றாம் உலகம் என்பது ஓர் இடமல்ல, அது ஒரு செயல் திட்டம்‘ என்பதாக இருந்தது.
வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த இழிவுகள் – துன்பத்திற்கும், நம்பிக்கையின்மைக்குமான இடங்களாக மாற்றப்பட்டுவிட்ட உலகம் பற்றியது – அரசியல் போராட்டங்களால் ஏற்பட்டவையல்ல என்பதைக் காட்டியது.
இறுதியாக, எனது மிகச் சமீபத்திய புத்தகம், – ‘தி டெத் ஆஃப் தி நேஷன் அண்ட் தி பியூச்சர் ஆஃப் தி அராப் ரெவல்யூஷன்’ (The Death of the Nation and the Future of the Arab Revolution) – மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் மேற்கின் தலையீட்டைப் பற்றியும், சவுதி அரேபியா போன்ற மேலை நாடுகளின் கூட்டாளிகளைத் தூக்கி நிறுத்தவும் அவற்றின் எதிரிகளான மதச்சார்பற்ற தேசியத்தையும், (மூன்றாம் உலக செயல்திட்டம்) கம்யூனிசத்தையும் அது தாக்குவது பற்றியும் பேசுகிறது.
1991 முதல் ஈராக் மேல் மேற்கும் அதன் கூட்டாளிகளும் ஏவும் பெரும் வன்முறை அரசுகளை அழித்து, அரபு தேசியத்தை கடுமையாக பாதித்துள்ளது. ஈராக், லிபியா, சிரியா, யேமன் என்று வரிசையாக பல நாடுகள் சீரழிந்துள்ளன. இந்தப் புத்தகத்தில் உள்ள வெடிக்கத் தூண்டும் வாக்கியம் “ஒரு தேசத்தை நிர்மாணிக்க நூறு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அதை ஒரு மதியத்திற்குள் அழித்துவிடலாம்.” ஏராளமான ராணுவரீதியான வன்முறையையும், பல்லாண்டுக் கணக்கில் சேகரிக்கப்பட்ட சமூகச் செல்வம் மொத்தமாக அழிக்கப்பட்டதையும் இந்த வாக்கியம் சுட்டிக் காட்ட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
இந்த வெடிக்கத் தூண்டும் வாக்கியம் முதலாளித்துவ எழுத்திலிருந்து ஓர் அரசியல் சார்பற்ற சொல்லை எடுத்து அதை அரசியல் படுத்துவதால், மிக அற்புதமாக இருக்கிறது. சோஷலிச எழுத்தின் ஒரு பகுதி புதிய சொல்லாடல்களை ‘வெடிக்கத் தூண்டும் வாக்கியம்’ போன்றவற்றை உருவாக்குவதோ என்று என்னை யோசிக்க வைக்கிறது. ஒருவேளை ‘ உரிச்சொற்கள் குறித்த பிரச்னை‘ (‘The Problem with Adjectives’) என்று நீங்கள் சொன்ன விஷயத்தோடு இதைப் பொருத்திப் பார்க்கலாமா?
மார்க், எழுதக் கற்றுத் தருபவர்களுக்கு உரிச்சொற்கள் என்றாலே ஆகாது என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஓரளவுக்கு நியாயமாகவே, அவை கனமானவை; கதை சொல்லும் வேகத்தைக் குறைப்பவை என்பார்கள்.
ஆனால் நான் இங்கு உரிச்சொற்களை வைத்து வேறொரு விஷயத்தைச் சொல்கிறேன். தமது பொருளை இழந்து விட்ட வார்த்தைகளின் மீது நான் ஆர்வம் காட்டுகிறேன். பட்டறையில் அர்த்தமிழந்து விட்ட வார்த்தைகளின் பட்டியலைச் சொல்லுமாறு கலந்துகொண்டோரைக் கேட்டேன். ‘நிலையான’, ‘வளர்ச்சி’ போன்ற பல அதிகார வர்க்கத்தின் சொற்களைச் சொன்னார்கள். சில உரிச்சொற்கள் (நிலையான). சில பெயர்சொற்கள் (வளர்ச்சி) .இந்தச்சொற்கள் – இன்று எடுக்கப்படும் ‘சிக்கன நடவடிக்கை’என்ற சூழலில் – உண்மையான ஆய்விற்காகவும், எதிர்காலத்திற்கான வழியை உருவாக்குவதற்காகவும் காத்திருக்கின்றன.
‘கல்விப்புலம் சார்ந்த வாக்கியங்கள்’, ‘பின்காலனிய வாக்கியங்கள்’ போன்றவற்றை உருவாக்குவதற்கான வாக்கிய உருவாக்கிகள் இணையத்தில் உள்ளன. இவை மிக வேடிக்கையானவை. இதே போல் ‘என்ஜிஓ வாக்கியங்கள்’, ‘ஐ.நா. அறிக்கை வாக்கியங்கள்’ ஆகியவற்றைக் கூட உருவாக்கலாம். இத்தகைய பிரதிகள் தமது உள்ளடக்கத்தால் என்றில்லாமல், எழுதப்பட்ட விதத்தால் சலிப்பூட்டுவதாக இருக்கின்றன. வாசகர் இவற்றிலிருந்து எதையும் தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்று தடுக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதாகவே இவற்றின் நடை இருக்கும். இவை போன்ற அறிக்கைகளை வெளியிடுவதால் மட்டுமே அவர்கள் ஓரளவிற்கு ஒரு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகக் காண்பித்துக் கொள்கிறார்கள் என்று நாம் கொள்ளலாம். ஆனால், இது போன்ற எழுத்துகளின் விளைவு என்னவென்றால், மக்கள் வாசிப்பு என்றாலே ஓடிவிடுகிறார்கள். எனவே, இம்மாதிரியான எழுத்து ஜனநாயக விரோதமானது.
எழுத்து சுருக்கமானதாகவும், பளீரென்றும் இருக்கவேண்டும். இப்போது எழுத்து என்பது எழுதுவதற்காகவே என்றொரு புதிய அழகியல் அம்சம் இருக்கிறது. அவ்வாறு இருக்கக் கூடாது. வி.எஸ் நைபால் – அவரது அரசியலை விட்டுவிடுங்கள் – பெரிய எழுத்தாளர் என்று சொல்லும் நண்பர்கள் பலர் எனக்குண்டு. இது போன்ற மனப்பான்மையில் எனக்கு ஆர்வமில்லை.
எழுத்து என்பது தொடர்புகொள்வதற்கான ஒரு வடிவம். எழுத்தின் நோக்கம் ஒருவரை தொடர்பு கொண்டு, ஒரு விஷயத்தைச் சொல்வது. அதில் நீங்கள் சொல்வது பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் நான் வறட்டு வாதம் புரிய விரும்பவில்லை. நிச்சயமாக, நான் ஒத்துப் போக முடியாத மனிதர்களையும் படித்துப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். தம் மனதில் இருப்பதை வெளிப்படுத்தும் அவர்களது திறமையை வைத்து அவர்களை என்னால் மதிப்பிடமுடியும். இது தெளிவல்ல. துல்லியம். எழுத்து துல்லியமானதா? எழுத்து ஏன் துல்லியமானதாக இருக்கவேண்டும்? ஏனெனில் அது வாசகனிடம் எதையாவது தூண்டவேண்டும். படைப்பாளி உயிரற்ற தேய்வழக்கு வார்த்தைகளை குண்டுமாரியாகப் பொழிவதைப் பார்த்து, வாசகன் தெறித்து ஓடுவதாக இருக்கக்கூடாது. வாசகர் மனதில் எதையாவது தூண்டுவதில் படைப்பாளிகள் விசேஷ கவனம் செலுத்தவேண்டும். வளர்ச்சி-மேம்பாடு குறித்த பிரதிகள் கூட வாசகர்களின் மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும். அவர்களது மனதை சாமர்த்தியமாகக் கையாளுவதாக இல்லாமல், அவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதாக இருக்கவேண்டும்.
இதற்கு, விஷயங்களின் அடியாழத்திற்குச் செல்லவேண்டியதாக இருக்கும். புகையில்லா சிமினி, தண்ணீர் தேவைப்படாத கழிவறை போன்ற விஷயங்கள் குறித்த பல கையேடுகளை நான் படித்திருக்கிறேன். இவையெல்லாம் மிக மனப்பூர்வமாக எழுதப்பட்டவையாக இருக்கும். இவையெல்லாம் நுரையீரல் கோளாறுகளால் மரணமடையும் பெண்கள், வயிற்றுப்போக்கால் மரணமடையும் சேரிவாசிகள் போன்றோருக்கு வரப்பிரசாதமாக உள்ளவை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டு எழுதப்பட்டவையாக இருக்கும்.
இந்த கெஞ்சுதலின் சுமையால், இந்தக் கையேடுகள் இந்த சாதனங்கள் எல்லாம் இருக்கின்றன என்றால். அவை ஏன் உலகம் முழுவதும் உள்ள வீடுகளில் இல்லை? என்ற அடிப்படைக் கேள்வியைக் கேட்காது. நுரையீரல் கோளாறுகளால் பெண்கள் அதிக எண்ணிக்கையில் மரணமடையும் நேபாளத்தில் ஏன் இவை இல்லை? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்தான் அந்த கையேடுகளுக்கு உயிரூட்டக் கூடியவை. ஏனெனில், இந்தக் கருத்துகள், எத்தனை அர்த்தம் பொதிந்தவையாக இருப்பினும். அவற்றிற்கு அதிகாரத்தின் ஆதரவு இல்லை. இவை அதிகார ஆதரவற்ற கண்டுபிடிப்புகள். இவை அதிகாரமற்ற ஏழைகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை. வளர்ச்சி- மேம்பாட்டு உலகத்தில், நல்லது செய்வோரின் பிரதிகள் மிகவும் சலிப்பூட்டுபவைகளாக இருக்கின்றன. காரணம் அவர்கள் உலகின் அடிப்படையான யதார்த்தத்தை மறுப்பதற்காக, உயிரற்ற வார்த்தைகளின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.
எழுத்து முறை பற்றிய எனது முக்கியமான கருத்து இதுதான். ஆக, உரிச்சொற்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல. நெறிமுறைகளை நசுக்கும் உயிரற்ற மொழிநடை மீதான தாக்குதல்தான்.
சோஷலிச எழுத்து பற்றி நாம் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதே போல சோஷலிச வாசிப்பு என்று இருக்கிறதா? இல்லை, ஒருவேளை, சோஷலிச பதிப்பாக்கம் என்றொரு துறை கூட?
சோஷலிச வாசிப்புப் பரப்பு பற்றி உண்மையாகவே எனக்குத் தெரியாது. ஆனால் நான் சோஷலிச பதிப்பாக்கம் பற்றி நிறையவே யோசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக நான் லெஃப்ட்வேர்ட் புக்ஸின் தலைமை எடிட்டராகப் பணிபுரிந்து வருகிறேன். இது 1999லிருந்து டெல்லியில் இயங்கி வருவதாகும்.
இது உருவாகுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று சோவியத் புத்தக வெளியீடுகள் மறைந்ததாகும். நாங்கள் மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம், பீஜிங்கின் ஃபாரின் லாங்குவேஜ் பிரஸ் ஆகியவற்றைத்தான் நம்பி இருந்தோம். முன்னது, சோவியத் யூனியன் சிதறுண்டதைத் தொடர்ந்து மூடப்பட்டது. பின்னது, இந்தியாவிற்குத் தேவைப்படும் புத்தக வகைகளை வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டது.
பழைய முன்னேற்றப் பதிப்பக நூல்களில், எனக்கு மிக உற்சாகமூட்டக் கூடிய வகையில் ஒரு குறிப்பு இருக்கும். வாசகருக்கு வேண்டுகோள் என்ற அந்தக் குறிப்பில், அந்தப் புத்தகம் பற்றி, அதன் மொழிபெயர்ப்பு, வடிவமைப்பு பற்றி வாசகருக்கு ஏதாவது கருத்து உள்ளதா என்று கேட்டிருப்பார்கள். உங்கள் கருத்துகளை எழுதச் சொல்லி அவர்களது புகழ்பெற்ற ஜுபோவ்ஸ்கி சாலை முகவரியைத் (Zubovsky Boulevard) தந்திருப்பார்கள். இந்த சாலையில்தான் பத்திரிகைச் சங்கம், அயலுறவுத் துறை அமைச்சகம் போன்ற முக்கியமான அலுவலகங்கள் இருந்தன. இது வாசகர்களுக்கான ஓர் அழைப்பு. இந்த அழைப்பிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம் ஒரு வாசகர் சமூகத்தை அமைக்க விரும்புவதாக நான் புரிந்துகொண்டேன். அது வாசகனை அலட்சியமாகக் கருதவில்லை. புத்தகங்களை ஒரு நுகர்பொருளாக வாங்கும் சந்தை உருவாக்கிய சமூகமாக அவர்களைக் கருதாது, ஓர் உயிரோட்டமான வாசகப் பரப்பை எதிர்நோக்கியது.
லெஃப்ட்வேர்ட்டில் நாங்கள் அந்த மாதிரியான ஒரு சோஷலிஸ்ட் பதிப்பகமாக இருக்க விரும்புகிறோம். சமூகத்தைக் கட்டி, சமூகம் சொல்வதைக் கவனித்து, உலகை மாற்றுவதற்காக நாமனைவரும் இணைந்து போராடும் இந்தப் போராட்டத்திற்குத் துணைபுரியும் என்று நமது சமூகம் கருதும் புத்தகங்களை வெளியிட்டு, நாங்கள் அந்த சமூகத்திற்கு செவிசாய்க்கிறோம்.
உதாரணமாக, நாங்கள் புரட்சிகரக் கோட்பாடுகள், கம்யூனிசம் ஆகியவற்றின் வரலாறுகளை வெளியிடுகிறோம். இது ஓர் அரசியல் முடிவு. பூர்ஷ்வா வரலாற்றியலாளர்கள் தம் வரலாற்று நூல்களிலிருந்து கம்யூனிஸ்டுகளையும், புரட்சியாளர்களையும் விலக்கி வைக்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவது, இது பொய்யானது. ஏனெனில், இது கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை மறுக்கிறது. எங்களது பாரம்பரியத்தை அழிக்கப் பார்க்கிறது. இரண்டாவதாக, கடந்தகாலங்களில், போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடந்தன என்ற கருத்தை முன்வைப்பதன் மூலம், போராட்டத்திற்குத் தயார்ப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றது. நாங்கள் கம்யூனிஸ்ட் ஹிஸ்டரீஸ் (முதல் பாகம் வந்துவிட்டது) என்ற தொடர் பிரசுரம், என்சைக்ளோபீடியா ஆஃப் இந்தியன் கம்யூனிசம் என்ற திட்டம் போன்றவற்றின் மூலம் தொடர்ச்சியாக கம்யூனிஸப் போராட்டங்களின் வரலாறுகளை வெளியிடுவதன் மூலம், கம்யூனிஸம் மறைக்கப்படுவதை எதிர்த்துப் போராடுகிறோம்.
மூன்றாவதாக, இந்திய மற்றும் உலக அரசியலில் ( கம்யூனிசத்) தலையீடுகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறோம். இவை வாசகர் ஒரே நாளில் படித்து விடக்கூடிய வகையிலான சிறுபுத்தகங்கள். நான்காவதாக, ஆண்டுதோறும் சில கனமான புத்தகங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம். இந்தப் புத்தகங்கள் வாசகர்கள் சற்று நிதானமாக, படித்து, வாசகர் வட்டம் அமைத்து, வாசித்து, நண்பர்களோடு விவாதிக்கத் தகுந்தவையாக இருக்கும். எங்கள் வாசகர்கள் புத்தகங்களையொட்டி வாசகர் வட்டங்கள் அமைக்க விரும்புபவர்கள். அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளைத் தர நாங்கள் விரும்புகிறோம்.
இறுதியாக ஒரு கேள்வி. இந்தவாரம் நான், ஜார்ஜ் ஆர்வெலின் “நான் ஏன் எழுதுகிறேன்?” என்பது குறித்துப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன். எழுதுவதற்கான உந்துதலை ஆர்வெல் வெறும் தன்முனைப்பு, அழகியல் உற்சாகம், வரலாற்றுத் தூண்டுதல், அரசியல் காரணம் என்று நான்காகப் பிரிக்கிறார்.
இவை எனக்குப் பிடித்திருந்தாலும், அருந்ததி ராய் சொல்லும் வகைப்பாடுகளும் எனக்குப் பிடித்திருக்கின்றன. சமீபத்தில் அது கேபிடலிசம் எ கோஸ்ட் ஸ்டோரி என்று மறுவெளியீடாக வந்தது. அவர் கைப்பற்றுதல் இயக்கம் (occupy movement) ஒரு “புதிய கற்பனையை அறிமுகம்செய்தது”, “சாம்ராஜ்ஜியத்தின் இதயத்தில் ஒரு புதிய அரசியல் மொழியை அறிமுகம் செய்தது”, “எல்லோரையும் இயந்திரமனிதர்களாக மாற்ற முயன்று கொண்டிருக்கும் அமைப்பில் கனவு காண்பதற்கான உரிமையை மறு அறிமுகம் செய்தது” என்று மூன்று முக்கிய விஷயங்களைச் சொல்கிறார். ஆர்வெல், ராய் சொல்வது போல சோஷலிச எழுத்துக்கு நீங்கள் இது போன்ற வகைப்பாடுகளைச் சொல்ல முடியுமா?
நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் நீங்கள் குறிப்பிடும் ஆர்வெல் கட்டுரையைப் படித்ததில்லை. ஆனால், அருந்ததி ராயின் உரையைப் படித்திருக்கிறேன். அவரது மற்ற கட்டுரைகளைப் போலவே, இதுவும் மிக சக்திமிக்கது.
சோஷலிச எழுத்துகளுக்கு மிக முக்கியமான, மிகக் கடுமையான சவால் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மனிதர்கள் நிகழ்காலத்திடம் சரணடைந்து விட்டார்களானால், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை மிக மெல்லியதாகிவிடும் என்று எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஒரே ஒரு நிகழ்காலம் மட்டுமே இருக்கிறது. அந்த நிகழ்காலம் முடிவற்று நீண்டுகொண்டே இருக்கிறது. நாம் நாளை என்று சொல்லும் போது, நாம் கால அளவில் நாளை என்பதைத்தான் குறிக்கிறோமே தவிர, காலகட்டங்களைக் குறிப்பதில்லை. நாளை இன்று போலவேதான் இருக்கும். முடிவற்ற நிகழ்காலம் பற்றிய உணர்வுதான் நம்மை தினந்தோறும் வரவேற்கிறது. மாற்றம் ஒருபோதும் வரப்போவதில்லை.
இந்த உணர்வு – இந்த வெறுமை உணர்வு – தான் சமூகக் கற்பனைக்கு பெரும் ஆபத்தாக இருக்கிறது. இந்த விரக்தியைத் தகர்த்து, அருந்ததிராய் சொல்லக்கூடிய அந்த “புதிய கற்பனையை” – மாறுபட்ட உணர்வுகளும், மாறுபட்ட முன்னுரிமைகளும் கொண்ட மாறுபட்ட ஓர் உலகைக் குறித்த கற்பனையைக் காண, சோஷலிச எழுத்து உதவும் என்று நான் நினைக்கிறேன்.
இந்த வகையான எழுத்தை உருவாக்குவது எளிதல்ல. குறிப்பாக நம் காலத்தில் எளிதல்ல. நம்மைச் சுற்றிலும் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அவை அனைத்திற்கும் அடியில் ஒரு பெரும் துயரார்ந்த உணர்வு இருக்கிறது.
1966ல் சே குவேரா. ‘இப்போது உலைக்களன்களின் காலம், ஒளியை மட்டுமே தான் காணவேண்டும்’ என்று ஜோஸ் மார்ட்டி கூறியதை மேற்கோள் காட்டினார். அது அழகான, கவித்துவமான வரி. ஆனால் அதன் பொருள் என்ன? செயல்படுவதற்கான காலம் என்பதை அது உணர்த்துகிறதா? இல்லை, செயல்பாட்டின் உஷ்ணம் என்பது வேறு, தெளிவின் வெளிச்சம் என்பது வேறு என்று சொல்கிறதா? நமது இந்த செயல்பாட்டிற்கான வேளையில், மிக புத்திசாலித்தனமான சிந்தனைகள் மட்டுமே பரப்பப்பட வேண்டும் என்கிறதா? கடைசியாகச் சொன்னதைத்தான் அவர் சொல்ல நினைத்தார் என்று நான் கருதுகிறேன்.
நமது காலத்தில், இயக்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் 2016 செப்டம்பர் 2ம் தேதி பத்து கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தென்னாப்பிரிக்காவிலிருந்து சிலி வரை கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து பல லட்சம் மாணவர்கள் போராடினார்கள். ஒரு சோஷலிஸ்ட் எழுதியாக வேண்டிய போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டங்கள் ஏன் எளிதாக ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிவிட முடியாது என்பதற்குக் காரணங்களும் இருக்கின்றன. அதிகாரத்தின் இந்த கொடிய கரங்களைத்தான் ஒரு சோஷலிஸ்ட் அடையாளம் காட்டவேண்டும். மேலும், போலீஸ், போர்கள். போராட்டங்களை ஒடுக்கும் அடக்குமுறைகள் ஆகியன பற்றியும் ஒரு சோஷலிஸ்ட் எழுதவேண்டும்.
ஆனால், இவை அனைத்தையும் விட முக்கியமானது, ஒரு சோஷலிஸ்ட் வெறும் துன்பத்தையோ அல்லது கோபத்தையோ மட்டும் எழுதிவிட்டு நின்றுவிடக்கூடாது. ஏனெனில், துன்பமும், துயரமும், எதிர்காலத்திற்கான சாத்தியத்தைப் பற்றித் தெளிவு பெற உதவாது.
நிகழ்காலத்திற்கான காலம் முடிந்துவிட்டது; எதிர்காலத்திற்கான காலம் கனிந்துவிட்டது என்று நான் சொல்லி வருகிறேன். ஒரு முக்கியமான திருப்புமுனையை நாம் அடையப்போகிறோம் என்று இதற்குப் பொருளல்ல. ஆனால், இந்த உலகத்தை நிர்வகிக்கக் கூடியவர்களால் நமது பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை என்பதுதான், அதாவது நிகழ்காலத்திடம் நமக்கான தீர்வுகள் இல்லை என்பதே, இதன் பொருள். நாம் எதிர்காலத்திலிருந்து, நமது தேவைகள், ஆடம்பரங்களை, நமது பற்றாக்குறைகள, நமது உபரிகளை வேறுவிதமாக வரிசைப்படுத்துவதன் மூலமாக, நாம் நமது தீர்வுகளைத் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.
நமக்கு கோபாவேசமான, விரக்தியான படைப்புகள் வேண்டாம். மாறாக, தவிர்க்கவியலாத் தன்மையை, நமது இந்த நிகழ்காலம் அசமத்துவம், பருவநிலை பேரழிவுகள், போர்கள் போன்ற பல பிரச்னைகளைத் தீர்க்க முடியாதது என்பதை உணர்த்துகிற, நமக்கு ஒரு மாற்று தேவை என்பதை மட்டுமல்லாது, நமது போராட்டத்தில் அந்த மாற்று நமது கைகளிலேயே உள்ளது என்பதை உணர்த்துகிற, படைப்புகள் தேவை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எதிர்காலம் நமது போராட்டங்களில்தான் இருக்கிறது. நமது எழுத்துகள் அந்த உணர்வைக் கவ்விப் பிடிக்கவேண்டும்.

நன்றி: http://puthagampesuthu.com/2017/06/08/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...