செவ்வாய், ஏப்ரல் 6

ரத்து அதிகாரமும் வெத்து அதிகாரமும் - ஆதவன் தீட்சண்யா


 
மூகவாழ்வின் எந்தவொரு நாளை எடுத்துக்கொண்டாலும் அந்தநாள் அண்ணல் அம்பேத்கருடன் தொடர்புடையதாக இருக்கிறது. அந்தளவுக்கு அவர் ஒவ்வொரு நாளின் மீதும் தன் முத்திரையைப் பதித்தவாறே செயலூக்கத்துடன் கடந்திருக்கிறார். அவரது அன்றாடப் பணிகளும் தொலைநோக்குப் பார்வையும் ஒன்றுக்கொன்று முரணாது இசைந்திருந்தன. 

பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்கிற இயற்கை நீதி மநுநீதியால் சீர்குலைக்கப்பட்ட நிலையில் அதை நேர்செய்திட சமூக நீதி என்கிற கருத்தாக்கத்தை வளர்த்தெடுப்பதிலும் பரவலாக்குவதிலும் அவர் ஆற்றிய பங்கு இப்போது அடிக்கடி பேசப்படுவதாயுள்ளது. சமூகநீதியின் முதிர்ந்தநிலையில் அது அனைவரும் சமம் என்கிற ஆதிநிலைக்கு- இயற்கைநீதியின் தற்கால நிலைமைக்கு- சமூகத்தை இட்டுச்செல்லும் என்று கருதினார். 

மனிதர்களுக்குள் சமத்துவம் என்கிற நிலை உருவாவதற்கும் நிலைப்பதற்கும் அவர் சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் உள்ளிழையும் நிபந்தனைகளாக்கினார். இம்மூன்றில் எதுவொன்றும் தனித்தியங்க முடியாமல் இருப்பதனை தனக்கிருந்த உலகளாவிய கண்ணோட்டம் மற்றும் இந்திய நிலைமைகள் பற்றிய குறிப்பான ஆய்வறிவின் வெளிச்சத்தில் தர்க்கப்பூர்வமாக அவரால் விளக்கமுடிந்தது. அதனாலேயே அவரது காலத்தில் மேலெழுந்து வந்திருந்த இயக்கங்கள் பலவும் அரசியல் சுதந்திரம் என்பதோடு மட்டுமே தம்மைச் சுருக்கிக்கொண்ட நிலையில் அதில் மனநிறைவடையாத அம்பேத்கர் சமூக, பொருளாதாரச் சுதந்திரங்கள் நோக்கி தமது விருப்பார்வத்தையும் செயல்பாட்டையும் விரித்துச் சென்றார். இந்த கருத்தாக்கத்தை மக்களிடம் சேர்க்கவே அவர் மூக்நாயக், பகிஷ்கரித் பாரத், சமதா, ஜனதா, பிரபுத்த பாரத் ஆகிய பத்திரிகைகளையும், பகஷ்கரித் ஹிதகரினி சபா, சுதந்திர தொழிலாளர் கட்சி, அகில இந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளையும் நடத்திப் பார்த்துள்ளார். தன் அந்திமத்தில் அவர் பவுத்தம் தழுவியதும் கூட இதனோடு இணைந்த நடவடிக்கையே. 

1914 மற்றும் 1916 ஆம் ஆண்டுகளில் நியூயார்க் வந்திருந்த லாலா லஜபதிராய் அவ்வேளையில் அங்கே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த அம்பேத்கரை, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்வதற்கு பெரிதும் பிரயத்தனப்பட்டார். ஆனால் சமூக, பொருளாதார அடிமைத்தனங்களை அப்படியே பேணிக்கொண்டு அரசியல் விடுதலையை மட்டும் குறுக்கிக் கோரும் அபத்தத்திற்கு தன்னால் துணைபோக முடியாது என்று நேருக்குநேர் மறுத்ததிலிருந்து அம்பேத்கரது நிலைப்பாட்டையும் அதில் அவருக்கிருந்த உறுதியையும் உணரமுடியும்.   

அரசியல், சமூக, பொருளாதாரச் சுதந்திரங்களை அடைவதற்கான வழிகளில் அவரது தெரிவாக நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் இருந்தது என்பதற்கான விளக்கம், ஜனநாயகம் என்பதற்கான அவரது விளக்கத்தில் பொதிந்துள்ளது. ஜனநாயகம் என்பதை வெறும் தேர்தலாக குறுக்கிப் புரிந்துகொள்வதற்கு மாறாக அம்பேத்கர் அதை மனித உறவுகளின் அடிப்படை – இணைந்துவாழும் ஒரு பாணி என விளக்கினார். ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரே குறிக்கோளுடன் இருப்பதில்லை என்று விளக்கும் அவர் “மக்களுக்கு நல்வாழ்வு கிட்டச்செய்வதே” தன் காலத்தில் ஜனநாயகத்தின் குறிக்கோளாக இருக்கிறது என்றார். ரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வருவதே ஜனநாயகம் என்கிற அவர் தான் விரும்பும் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரு வழியாகக் கண்டார். ஆனால் அதை மட்டுமே இறுதிவழியாக அவர் முன்வைத்தார் என்று சொல்லமுடியாது. “தார்மீக ஆதாரங்கள் தீர்ந்துவிட்டால் நாங்கள் மற்ற முறைமைகளைக் கையாளுவோம்” என்றும் “மக்களின் சுதந்திரம் அதை அடைய கையாளப்படும் முறைகளின் புனிதத்தைவிட மிக உயர்ந்தது” என்றும் கூறியதை மனங்கொள்ள வேண்டும். ( தொகுதி 36, பக்:325)  

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மிக அடிப்படையானது வாக்குரிமை. அதை கல்வி மற்றும் சொத்துரிமையுடன் இணைத்தபோது இந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் கல்வியும் சொத்துமில்லாமல் இருப்பதற்கு இங்குள்ள சாதியமே காரணம் என்று குற்றம்சாட்டிய அம்பேத்கர் அதற்கு தீர்வாக வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை எனக் கோரினார். பெண்களும் மற்றவர்களும் வாக்குரிமை பெறுவதற்கு அவரது இந்தக் கோரிக்கையே பின்னாளில் வழியமைத்தது. வாக்காளருக்கான தகுதியை நிர்ணயிப்பதில் உள்ள பாரபட்சத்தை எதிர்த்த அவர் அடுத்துவந்த நாட்களில் வேட்பாளருக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்கும் முயற்சிக்கும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து அதில் வெற்றியும் பெற்றார். தரப்படுத்துதல் தகுதிப்படுத்துதல் என்பவை அனைவருக்குமான வாய்ப்புகளை பறிக்கும் செயலே என்பதை நிறுவிக்காட்டிய அவர் அறிவாளிகளின் திறமையான ஆட்சியை விடவும், அறம் சார்ந்த நல்லாட்சி அவசியம் என்றார். அதே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் போட்டியிட விரும்புகிறவர்களை அம்மன்றங்களில் செயலூக்கத்துடன் பங்கேற்பவர்களாக பயிற்றுவிக்கும் அரசியல் பள்ளியொன்றை- இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தொடங்கி நடத்திப் பார்த்திருக்கிறார். (அந்தப் பள்ளி தொடர்ந்திருந்தால் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படுவதற்கும் வாக்குப்பதிவிற்கும் இடைப்பட்ட 14 நாட்களில் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் அனைவரையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் சந்திக்கமுடிகிற வேட்பாளர்கள் அடுத்து ஐந்தாண்டுகளில் ஒருமுறைகூட எட்டிப் பார்க்காமல் மீண்டும் வாக்கு கேட்டு வரும் நிலை உருவாகியிருக்காது. மக்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்கிற பொறுப்பு கூடியிருக்கும். தனிநபர் துதிகளில் காலத்தை வீணடிக்காமல் அவையின் நேரம் பயனுள்ள விவாதங்களுக்குப் பயன்பட்டிருக்கும். காசு வாங்கிக்கொண்டு அவையில் கேள்விகேட்கும் உறுப்பினர்களாக இழிந்திருக்க மாட்டார்கள்) 

பட்டியல் சாதியினருக்கான தனித்தொகுதிகளை ஆளுங்கட்சிகளும் ஆதிக்கச்சாதியினரும் தமது அடியாட்களைக் கொண்டு கைப்பற்றிவிடும் மோசடி நடக்கிறது என்கிற அவரது குற்றச்சாட்டு யூகத்திலிருந்தோ உள்ளுணர்விலிருந்தோ எழுந்ததல்ல. அவரிடம் வலுவான தரவுகள் இருந்தன என்பதை 1951 அக்டோபர் 28 அன்று லூதியானாவில் ஆற்றிய உரையிலிருந்து நம்மால் உணரமுடியும். ஆனால் அந்த மோசடியைத் தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. இன்றளவுக்கும் தனித்தொகுதிகளின் நிலை இதுவே. அங்கே போட்டியிடுகிறவர்கள் அம்பேத்கரின் போராட்டத்தால் கிடைத்த வாய்ப்பாக கருதாமல் தனது கட்சித்தலைமையின் கருணையினால் கிடைத்த யாசகமாகப் பார்க்கின்றனர். அவர்கள் பட்டியலினத்தாரின் நலன்களைக் காப்பதற்கு பதிலாக பிற சாதியினரின் தயவையும் நல்லெண்ணத்தையும் எதிர்நோக்கியே தமது செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்கின்றனர். 

நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர் என்ற முறையில் 1951 ஆம் ஆண்டு இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை அம்பேத்கர் முன்மொழிந்தபோது அச்சட்டமே ஒரு இலட்சிய நாடாளுமன்றத்தை அமைத்துக் கொடுத்துவிடும் என்று அவர் நம்பியிருக்கவில்லை. அறமார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்காத பட்சத்தில் அங்கு அரசியல் சாசனமோ சட்டங்களோ மட்டுமே எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்கிற எச்சரிக்கையை அவர் தந்தபடியே தான் இருந்தார். அவர் முன்மொழிந்து நிறைவேற்றிக் கொடுத்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 1952ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்கள் அவரையே தோற்கடித்தனர். சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களுக்கு இணையான விழுமியங்களுடன் சமூகம் தன்னை கட்டமைத்துக் கொள்ளவில்லை. அதன் முகத்தில் அதிநவீன அலங்காரமும் தலைக்குள் பழமையேறிய மூளையும்  இருப்பதை அம்பேத்கரின் தோல்வியிலிருந்து மட்டுமல்ல சமகாலப் போக்குகளிலிருந்தும் அறிய முடியும். 

கருத்தார்ந்த நிலையில் போதிய பலனை வழங்கவில்லை என்றாலும், அம்பேத்கரின் பேருழைப்பால் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்கும் எண்ணிக்கைப் பிரதிநிதித்துவமாவது கிடைத்திருக்கிறது. ஆனால் சமூகத்தின் பல அடுக்கினருக்கு அந்த எண்ணிக்கைப் பிரதிநிதித்துவமும் கிடைக்காத அவலம் நீடிக்கிறது. 

கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்த 2019 ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் ஆண்கள் 717,100,970, பெண்கள் 662,903,415 பேர். ஆனால் அப்போது நாடாளுமன்றத்திற்கு தேர்வான பெண்கள் 78 பேர் மட்டுமே. அதாவது மொத்த உறுப்பினர்களில் 14.39%பேர். (இவர்களில் கணிசமானோர் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துகிற பா.ஜ.க.வினர்). 2016 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் வெறும் 9% மட்டுமே. இதில் எஸ்.சி, எஸ்.டி பெண்களின் பிரதிநிதித்துவம் என்ன கதி என்பதை தனியே சொல்லவேண்டியதில்லை. பொதுவெளியில் சுகாதாரத்துடன் கூடிய கழிப்பிடம் இல்லையென்பது உட்பட பெண்கள் பொதுவாழ்வுக்கு வருவதில் உள்ள தடைகளை நாம் எப்போதாவது பரிசீலித்திருக்கிறோமா? தடைகளை மீறி அரசியல் பணியாற்ற வருகிற பெண்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு எந்தளவிற்கு உள்ளது?. இவ்வளவு குறைவான பெண் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள அவை பாலினம் சார்ந்த பிரச்னைகளில் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ளும்? அது எப்படி பாலின சமத்துவத்திற்கான நியாயத்தைப் பேசுவதற்கான தார்மீக பலத்தைப் பெறும்? 

பெண்களைப் போலவே மதச்சிறுபான்மையினரும் மக்கள்தொகையில் அவர்களது விகிதாச்சாரத்திற்கேற்ற பிரதிநிதித்துவத்தை பெறாதவர்களாக உள்ளனர். உதாரணத்திற்கு மக்கள்தொகையில் 14.22% முஸ்லிம்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்களின் அளவு 3.5% மட்டுமே. இன்னும் மொழிச்சிறுபான்மையர், பாலினச் சிறுபான்மையரின் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்செல்லாம் இங்கு தொடங்கப்படவேயில்லை. சிறுபானமையினர் தாங்கள் பெரும்பான்மையினரால் ஒடுக்கப்படுவோம், புறக்கணிக்கப்படுவோம் என்கிற அச்சமின்றி வாழ்வதை உறுதிசெய்வது ஜனநாயகத்தின் உள்ளுறையாக இருக்கவேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தியதை இங்கு யாருக்கு நினைவூட்டுவது? 

2009 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 58% பேர் கோடீஸ்வரர்களாக இருந்த நிலையில் நடப்பு அவையின் 82% பேர் கோடீஸ்வரர்களாக தேர்வுபெற்றுள்ளனர். இதேநிலை நாட்டின் பல்வேறு  சட்டமன்றங்களிலும் பரவிவருகிறது. மக்கள் தொண்டாற்றுவோர் அந்த நன்மதிப்பினூடே சட்டமியற்றும் அதிகாரமையங்களுக்குத் தேர்வாகும் நிலைமைக்கு மாறாக பணபலம் கொண்டோர் அதிகார மையங்களைக் கைப்பற்றும் நிலை அஞ்சத்தக்க வேகத்தில் உருவாகிவருகிறது. எனில் இந்த அவை யாருடைய நலன் சார்ந்து செயல்படும், இவர்கள் தமது வர்க்கநலனைக் காப்பாற்றிக் கொள்ளும் அகநிலைப் பதைப்பிலிருந்து எடுக்கும் முடிவுகள் எந்தளவிற்கு நடுநிலையோடிருக்கும், இந்த அவைக்கும் சாமானிய மக்களுக்கும் இடையே என்ன உறவு நிலவமுடியும் என்றெல்லாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. 

இந்தியாவில் ஜனநாயகத்திற்கான வாய்ப்புவளங்கள் என்கிற தலைப்பிலான உரைக்குறிப்பில், பொதுவாழ்வை மேற்கொள்ள பாலினமோ, சாதியோ, மதமோ பொருளாதார நிலையோ ஒரு தடையாகிவிடக்கூடாது என்று அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. கட்சிகள் தலித்துகளை பொதுத்தொகுதிகளில் நிற்கவைப்பதே அரிதானதாக இருப்பதால் அவர்கள் அங்கு வெற்றி பெறுவது அதனிலும் அதிசயமாகவே உள்ளது. வலுவான சாதிய, குடும்பப் பின்புலமில்லாத ஒரு பெண் ஆணை எதிர்த்து போட்டியிடுவதும் வெற்றி பெறுவதும் கூட இதேரீதியானதுதான். ஆணாதிக்க, சாதிய, பொருளாதார, மதப்பெரும்பான்மைச் சிந்தனைகளால் பிளவுண்டிருக்கும் இச்சமூகத்தில் இவையே வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும் காரணிகளாகவும் உள்ளன. இந்தக் காரணிகளைத் தரவுகளாகக் கொண்டே கட்சிகளும் கட்சிகளுக்காக தேர்தல் பணியைத் திட்டமிடும் வல்லுனர் அமைப்புகளும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதுடன் வாக்காளர்களையும் அணுகும் காலகட்டமிது.   

நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சமகால சிக்கல்களுக்கான தீர்வுகளையும் முன்மொழிவோர், மக்கள் நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுகிறவர்கள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளையும் நோக்கங்களையும் அடைவதற்காக போராடுகிறவர்கள், நேர்மையாளர்கள்- ஆகியோரிலிருந்து கொள்கை சார்ந்து தமக்கான பிரதிநிதிகளை தேர்வுசெய்யும் சுதந்திரமான நிலையில் இன்று வாக்காளர்கள் விட்டுவைக்கப்படவில்லை. திட்டமிட்ட, திரிக்கப்பட்ட பிரச்சாரங்களின் வழியே குறிப்பிட்ட கட்சி/  கூட்டணி அல்லது தலைவருக்கு ஆதரவான அல்லது எதிரான அலை வீசுவதான தோற்றத்தை செயற்கையாக உருவாக்கி மக்களின் உளவியலை முற்றுகையிட்டு அவர்களின் வாக்குகளை திருப்பிவிட முடியும் என்கிற அஞ்சத்தக்க நிலை உருவாகிவருகிறது. 

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பா,ஜ.க வெறுமனே 1.54% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. அது போட்டியிட்டிருந்த தொகுதிகளில் ஒன்றைத்தவிர மற்றெல்லாவற்றிலும் வைப்புத்தொகையைக்கூட திரும்பப்பெற முடியாத அளவுக்கு மோசமாக தோல்வியுற்றிருந்தது. ஆனால் அந்தக் கட்சி அடுத்துவந்தத் தேர்தலில் அங்கு கால்நூற்றாண்டு காலமாக இடைவிடாது ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி அதிகாரத்திற்கு வருகிறது. பலவந்தமாகவும் மோசடியாகவும் பெறப்பட்ட இந்த முடிவுக்குப் பின்னால் எத்தகைய ஜனநாயகத்திற்குப் புறம்பான சதிவேலைகள் நடந்தன என்பதை ஒரு திகில் கதையைப் போல விவரிக்கிறது “ இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி என்கிற நூல். இந்த அணுகுமுறைகளின் வழியாகத்தான் ஏற்கனெவே மோடி, டிரம்ப் போன்றவர்கள் தம்மை ஊதி பெரிதாக்கிக் காட்டி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தில் நேரடியாக அதிகாரத்திற்கு வரமுடியாத பா.ஜக, மக்கள் விரோதச் செயல்களால் முற்றிலுமாக தனிமைப்பட்டுள்ள, ஆட்சியில் நீடிப்பதற்கான அரசியல் நியாயங்கள் அனைத்தையும் இழந்திருக்கின்ற, தான் காலால் இடும் பணியை தலையால் சுமந்து செய்துமுடிக்கிற அதிமுகவை இத்தகைய தகிடுதத்தங்கள் மூலமாக ஆட்சியில் நீடிக்கச் செய்வதற்கு முயற்சித்துவருகிறது. 

“ஜனநாயகம் என்பது ஒரு சுதந்திரமான அரசாங்கம் என்று சொல்லப்படுகிறது. சுதந்திரமான அரசாங்கம் என்றால், சமூக வாழ்க்கையின் பரந்த அம்சங்களில் சட்டத்தின் குறுக்கீடின்றி மக்கள் செயல்படுவதைக் குறிக்கிறது” என்பார் அம்பேத்கர். அப்படி சுதந்திரமான ஓர் அரசாங்கத்தை தேர்வுசெய்யுமளவுக்கு விழிப்படைந்தவர்களாக குடிமக்கள் உருவாகும்போது அம்பேத்கர் விரும்பியபடி ஜனநாயகம் என்பது அவர்கள் கையில் ஒரு ரத்து அதிகாரமாகவும் இருக்கும்.

நன்றி: செம்மலர், ஏப்ரல் 2021

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பீமா நதிக்கரையில் முடியும் கவிதை - ஆதவன் தீட்சண்யா

இந்த நதி 1 எப்போதுமே இப்படி அமைதியாகத்தான் ஓடிக்கொண்டிருந்ததென நினைக்காதீர்கள் ஆற்றோட்டத்தின் இசைமைக்குப் பொருந்தாமல் குதிரையின் க...