சனி, மார்ச் 3

சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம் - ஆதவன் தீட்சண்யா


தமுஎகச புதுவை மாநாட்டு கருத்தரங்கிற்கான விவாதக்குறிப்பு

ஒரேயொரு சாதி என்று எப்போதும் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. சாதியென்றால் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும். அப்போதுதான் கீழ்ச்சாதி, மேல்சாதி என படிநிலைப்படுத்த முடியும். சாதியம் கிடைமட்டத்தில் ஆனதல்ல. அது, செங்குத்து வரிசையிலானது. 

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் சாதிகளின் எண்ணிக்கை நிலவரம்
பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) - 143,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) - 41,
சீர்மரபினர்(டி.என்.சி) - 68,
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் - 7
பட்டியல் சாதியினர் (எஸ்.சி) - 76,
பட்டியல் பழங்குடியினர் ( எஸ்.டி) - 36

இந்த 371 சாதிகள் மட்டுமல்லாது முன்னேறிய சாதிகள் என்கிற வகைமைக்குள் அடங்கினவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் சற்றேறக்குறைய 400 சாதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பலபத்து உட்சாதிகளாகவும் பிளவுண்டிருக்கின்றன. இவற்றில் எந்தவொரு சாதியும் இன்னொரு சாதியை தனக்கு சமமாக ஏற்பதில்லை. இந்தப் போக்கு உட்சாதிகளுக்கு இடையிலும் வலுவாக இயங்குகிறது.  பட்டியல் சாதியினரும், பட்டியல் பழங்குடியினரும் சாதிய கட்டமைப்புக்குள் ஒருபோதும் இல்லாதவர்கள் என்ற போதிலும் தொடர்ந்து சாதியச்சமூகத்திற்குள் இருந்துவருவதால் அவர்களும் தம்மை சாதியாகவே குறுக்கிக்கொண்டுவிட்டனர்.

சாதியமானது, இங்கு மனிதர்களையும் அவர்களது வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் பொதுச்சொத்துகளையும் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் சகலவிதமான உரிமைகளையும் கடமைகளையும் பாரபட்சமாக  பிரித்துள்ளது. அன்றாட வாழ்வில் மனிதசுபாவத்துடன் ஒருவர் மேற்கொள்ளும்  அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிப்பதாகவும் கட்டுப்படுத்திச் செலுத்துவதாகவும் சாதியமே இருக்கிறது.

சாதி என்பது இன்னதுதானென்று திட்டவட்டமாக ஒரு பருப்பொருளைக் காட்டுவதுபோல காட்ட முடியாது. அது தனிமனித அளவில் ஓர் உணர்வுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிக்குழுவின் அங்கத்தினர் என்ற முறையில் சாதியானது ஓர் உணர்வு என்பதற்கும் அப்பால் போய் ஒவ்வொரு தனிமனிதருக்குமான கடமைகளையும் உரிமைகளையும் திட்டவட்டமான பாரபட்சத்துடன்  வரையறுக்கிறது.   இந்த பாரபட்சம்தான் இங்கு ஒருவர் எந்த வர்க்கத்தில் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. வர்க்கம் உள்ளிட்டவை மாறும் தன்மை கொண்ட அடையாளங்கள். மாறும் அடையாளங்களில் ஒருவரது நிலை எத்தகையதாக மாறினாலும் அவரது சமூக அந்தஸ்து மாறா அடையாளமான சாதியை வைத்தே  வழங்கப்படும். சாதியம் வகுத்தளித்த வர்க்கத்திலிருந்து ஒருவர் உயர்வதோ தாழ்வதோ அவரது சமூக அந்தஸ்தை பெரிதும் பாதிப்பதில்லை. அதாவது அவரது சாதி என்கிற கூட்டு அடையாளத்திற்குள்ள அந்தஸ்தையே அவர் தனிநபராக பகிர்ந்துகொள்ள வேண்டியவராகிறார். பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவிடுகிற அடிநிலைச்சாதி தனிநபர்கள் மீது தீண்டாமையின் கடுமைதான் குறைகிறதேயன்றி அவரது சாதிக்குரிய சமூக அந்தஸ்து என்னவோ அதுவே அவருக்கு வழங்கப்படுவதை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஒவ்வொரு சாதியினரும் தாங்கள் தனித்தவமானவர்கள் புதினதமானவர்கள் என்று நிறுவுவதற்காக தங்களது சாதியின் தோற்றம் பற்றிய அனேக புனைவுகளை இட்டுக்கட்டியுள்ளனர்.  இதன் மறுதலையாக இப்புனைவுகள் பிறசாதியினர் பற்றிய இழிவான பார்வையைக் கொண்டிருக்கின்றன. பிறசாதியின் ரத்தம் தன் சாதிக்குள் கலந்து தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு சாதியுமே முனைப்புடன் இருக்கிறது. இதற்காக வகுக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுத்திட்டங்களை வாழ்நெறியாக வரித்துக்கொண்டு வாழும் அடிப்படை அலகாக இங்கு குடும்பம் என்கிற அமைப்பு இருக்கிறது. ஒரே சாதியைச் சார்ந்த ரத்த உறவுகளின் தொகுப்பாக குடும்பம் உள்ளது. இந்த குடும்பங்களின் தொகுப்பாக சாதி உள்ளது. 

தன் சாதிக்குள் பிறசாதி ரத்தம் கலப்பதை - அங்கித்தினர்களின் வாழ்க்கைத் துணையாக பிற சாதியினர் வருவதை தடுப்பதில் குடும்பமே முதன்மையான பாத்திரத்தை வகிக்கிறது.  இதன்பொருட்டு ஒவ்வொரு சாதியும் வகுத்துள்ள கட்டுப்பாடுகள் பலவும் பெண்களை ஒடுக்கும் தன்மையுடையவை. ஒடுக்குமுறை என்பதை வன்முறையாக மட்டும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. உள்ளங்கையில் வைத்து அல்லது கண்ணின் கருமணி போல காக்கும் அன்பு பாசம் ஆகியவற்றாலான வளர்ப்பினூடாகவும் ஒடுக்குமுறை நிகழ்கிறது. கிழித்தக் கோட்டை தாண்டாத பிள்ளையாக வளர்ப்பதென்பது, சாதிக்கோட்டினை தாண்டாமல் சொந்த சாதிக்குள்ளேயே வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க பயிற்றுவிப்பது என்பதுதான். சாதி என்பது ஒருவர் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது செய்துகொள்ளக்கூடாது என்பதற்கான எல்லை என்று இதனாலேயே கூறப்படுகிறது. சாதியற்ற சமூகத்தை விரும்புகிற எவரொருவரும் இந்த எல்லையை உடைத்தாக வேண்டியுள்ளது.

அகில இந்திய அளவில் 5சதவீத திருமணங்கள் மட்டுமே சொந்த சாதிக்கு வெளியே நடக்கின்றன. சாதிகளுக்கிடையில் மணக்கலப்பு நடக்கும் மாநிலங்களில் தமிழகம் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆணோ பெண்ணோ யாரேனுமொருவர் தலித்தாக இருந்து மணக்கலப்பு நடப்பது இங்கு அரிதினும் அரிதானது. அப்படியே நடந்தாலும் அந்த திருமணங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன. அதன்பொருட்டு தலித்துகள் கூட்டாக தண்டிக்கப்படுகின்றனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்படுகின்றன.  

சராசரியாக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்கொடுமையை சாதியத்தின் பேரால் தலித்துகள் மீது நடத்தும் இந்தியர்களிலிருந்து தமிழர்கள் எவ்வகையிலும் வேறுபட்டவர்களல்லர். தமிழகம், புதுவை மட்டுமல்ல, புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும்கூட தமிழர்கள் சாதியத்தை வலுவாக கைக்கொண்டுள்ளனர். எனவே சாதியற்ற தமிழர் என்ற முழக்கத்தை எவ்வாறு மெய்ப்படுத்துவது என்று இம்மாநாடு விவாதிக்க வேண்டியுள்ளது.

சங்ககாலத்திலோ அல்லது சமீபகாலம் வரையிலோ தமிழர்களிடையே சாதியில்லை என்று நிறுவுவதன் மூலம் சமகாலத்தில் சாதியத்தை ஒழித்துவிட முடியுமா?

தொழில் அடிப்படையில் சாதி உருவானது என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. எனில் தொழில்மயமாக்கல் முழுவீச்சில் நடக்கும் போது சாதியம் ஒழிந்துவிடும் என்று கூறுவது முரணில்லையா?

நிலப்பிரபுத்துவம் ஒழியும் போது சாதியம் ஒழிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப்பட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து பல நூற்றாண்டைக் கடந்த இந்தியர்கள் / தமிழர்களிடையே சாதியம் இன்றும் நிலவுவது ஏன்?

சாதியம் தன்னை தக்கவைத்துக்கொள்வதற்காக அகமணமுறையை கைக்கொண்டுள்ளது. அகமணமுறை அந்தந்த சாதிக்குரியவர்களை மறுவுற்பத்தி செய்து கொடுக்கிறது. எனில், தமிழர்களை சாதியற்றவர்களாக ஆக்குவதற்குரிய அடிப்படை வேலையாக அகமணமுறையை ஒழித்துக்கட்டுவதற்கு நம்மிடம் உள்ள வேலைத்திட்டம் என்ன?

சாதியம் சூழ இருக்கும் தமிழர்களை மட்டும் தனியாக துண்டித்து எடுத்து சாதியற்றவர்களாக்குவதற்குரிய சாத்தியங்கள் என்னென்ன?

சாதியத்தின் உச்சியில் பார்ப்பனர்களை இருத்தி அவர்களைப் பேணுவற்காக சமூகத்தின் உழைப்பு ஆற்றல் வளங்கள் அனைத்தையும் திருப்பிவிடுவதுதான் பார்ப்பனீயம். இந்த நோக்கத்திற்காக தனிமனித வாழ்வையும் சமூகத்தையும் சமூகம் உருவாக்கிக்கொண்டுள்ள அரசு உள்ளிட்ட நிறுவனங்களையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டத்தொகுப்புதான் மநுஸ்மிருதி. மநுஸ்மிருதியின் அடிப்படையில் சமூகத்தை கட்டுப்படுத்தும் போக்கிற்கு எதிராக உருவான சமூகநீதிக்கான போராட்டம் ஒருகட்டத்தில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இந்தப் போராட்டம் பார்ப்பனரல்லாதாரின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசாங்கங்கள் உருவாவதற்கும் இட்டுச்சென்றது. ஆயினும் சமூக அமைப்பு முழுவதிலும், தனிமனித அளவிலும் புரையோடிய பார்ப்பனீயச் செல்வாக்கு அப்படியே நீடித்தது. பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தாத, அவர்களது வாழ்முறையே மேலானது என்கிற, அவர்களைப் போல வாழ முயற்சிக்கிற பண்பாட்டு அடிமைத்தனத்தைப் பரப்பும் முயற்சி தடையின்றி நடந்தது. இந்த பண்பாட்டு அடிமைத்தனத்தின்  மீதுதான் பார்ப்பனீயம் இந்துத்துவம் என்னும்   புதிய பெயரில் கட்டமைக்கப்படுகிறது.

பரந்த இந்த நாடு வெவ்வேறு பண்பாட்டு தனித்துவங்களைக் கொண்ட சமூகங்களைக் கொண்டது என்கிற பன்முகத்தன்மையை ஏற்கமறுக்கும் இந்துத்துவம் ஒற்றைத்துவத்தை முன்வைக்கிறது. அந்த ஒற்றைத்துவம் பார்ப்பனீய கண்ணோட்டத்திலானது. அது பார்ப்பனர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மநுஸ்மிருதிக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதாக இருக்கிறது. அதனாலேயே இந்துத்துவம் அரசியல் சட்டம் முன்வைக்கும் 1=1 என்கிற சமத்துவத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சமஸ்கிருத திணிப்பு, மாட்டுக்கறிக்குத் தடை, வேதவழிப்பட்ட சடங்குகளையும் யாகங்களையும் மீண்டும் நிகழ்த்துவது, பார்ப்பனர்களின் உணவை, வழிபாட்டுமுறையை, தெய்வத்தை, கலையை இந்திய அடையாளமாக முன்னிறுத்துவது, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வக்குடிகளென வரலாற்றைத் திரிப்பது, பாடப்புத்தகங்களை தமது நோக்கங்களுக்கேற்ப எழுதுவது, இந்துவல்லாத பிற மதத்தவரை அன்னியராகச் சித்தரிப்பது, பெண்களை ஆணுக்கு அடங்கியவர்களாக காட்டுவது, சாதியம், அகமண முறை தேவை என நியாயப்படுத்துவது என இந்துத்துவம் பார்ப்பனீயத்தை முன்னிறுத்துகிறது. பார்ப்பனீய மதிப்பீடுகளை ஏற்க மறுப்பவர்கள் மீது சட்டப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமற்ற முறையிலும் தாக்குதல் தொடுக்க இந்துத்துவம் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி களமிறக்கியுள்ளது. சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாக வெளித்தோற்றத்தைக் காட்டிக்கொண்டு தனது பயங்கரவாதச் செயல்களை அது நடத்திவருகிறது.

வரும் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஒருவேளை பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டாலும் கூட இப்போதுவரை காவி பயங்கரவாதிகளாகிய இந்துத்வாவினர் சமூகத்தில் பரப்பியுள்ள நச்சை செயலிழக்கச் செய்ய நீண்டகாலம் பிடிக்கும். அந்தளவுக்கு வெகுமக்களின் யோசிப்புமுறையிலும் செயல்பாட்டிலும் குறுக்கிட்டு வருகிறார்கள். குடிமக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக தலையிடுவதாகவும் அவர்களது செயல்பாடுகளை கண்காணிப்பதாகவும் அரசை மாற்றுவதில் காவிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்று நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தங்களுக்கு கட்டுப்பட்டதாக இருந்து நாட்டை நிர்வகிப்பதாக அல்லாமல் தங்களை ஒடுக்குவதாக அரசு இருக்கிறது என்பதை மக்கள் பீதியுடன் உணரும் காலமாக இது இருக்கிறது. குடிமக்களின் உயிர்வாழும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் அரசின் கருணையின்பாற்பட்டது என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், ஊடகங்கள், வங்கிகள் என்று அனைத்து நிறுவனங்களையும் அதனதன் சுயேச்சைத்தன்மையை இழக்கச்செய்து ஆளுங்கட்சி தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளது.

அரசின் அன்றாட தாக்குதலிலிருந்து காப்பாற்றிக்கொள்வது பற்றி மக்களின் கவனம் முழுவதையும் திசைதிருப்பியுள்ள காவிகள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு திருப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களது அமைப்புகளை நடத்துவதற்கு தேவையான நிதியாதாரத்தையும் ஊடகபலத்தையும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்றுவருகிற காவிகள் அதற்கு பிரதியுபகாரமாக இதைச் செய்கிறார்கள் என்று இதை குறுக்கிவிடக்கூடாது. கார்ப்பரேட்டுகளும் காவிகளும் இனம் பிரித்துக் காட்டமுடியாதவாறு ஊடிக்கலந்திருக்கிறார்கள்.

சாதியடுக்கின் உச்சத்திலுள்ள பார்ப்பனர் உள்ளிட்ட சிறுபிரிவினர் தான் இங்கு பெரும் நிலவுடைமையாளர்களாக இருக்கின்றனர். அவர்களிலிருந்து ஒரு பகுதியினர்தான் நவீன முதலாளிகளாகவும் உருவெடுத்தனர். அரசு இயந்திரத்தில் கொள்கை முடிவெடுப்பவர்களாகவும் அவர்களே இருந்தனர், இருக்கின்றனர். இந்த பெருநிலப்பரப்பை சந்தையாக மாற்றி சுரண்டுவதற்கு அவர்களுக்கு ஒருகாலத்தில் மதச்சார்பற்ற இந்தியாவும் ஜனநாயகத்தோற்றம் கொண்ட அரசும் தேவைப்பட்டது. இந்த நாட்டின் இயற்கை வளங்களையும் உழைப்புச்சக்தியையும் பொதுச்சொத்துக்களையும் கொள்ளையடிப்பதற்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டுவிடாதவாறு பிளவுபடுத்துவதற்கும் மீறி போராடினால் ஒடுக்கவும் ஒரு பிரிவினைவாத சர்வாதிகார அரசு அவர்களுக்கு இப்போதைய தேவையாய் இருக்கிறது.

இந்த நிலையில் காவியற்ற தமிழகம் என்கிற முழக்கத்தின் நடைமுறைச் சாத்தியங்களை ஒருபடித்தான செய்முறை குறிப்பு போல என்னால் வழங்கிவிட முடியவில்லை. ஆனால் அந்தந்த வட்டாரம் சார்ந்து காவிகள் நடத்திவரும் அமைப்புகள், அந்த அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், அவை மக்களிடையே பரப்பிவரும் நச்சுக்கருத்துகள்,  கார்ப்பரேட் செயல்பாடுகள் பற்றியும் அதற்கெதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் இயக்கங்கள் பற்றியும் ஒரு விவாதத்தை தீவிரமாக நடத்திட இந்த முழக்கம் உதவும் என்று நம்புகிறேன்.

மாநாடு சிறக்க வாழ்த்துகள்.

தோழமையுடன்
- ஆதவன் தீட்சண்யா
25.02.2018




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...