திங்கள், மார்ச் 14

ஆடைக்கட்டுப்பாட்டாளர் வருகிறார் - ஆதவன் தீட்சண்யா

போனி டெய்லும் பொடக்கழுத்தும் 

பெண்ணின் தோற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமாகத்தான் ஒரு சமூகத்தின் ஒழுக்கத்தைக் காக்கமுடியும் என்கிற கற்பிதத்தைப் பரப்பும்  பழமைவாதிகள் உலகெங்கும் நகைக்கத் தக்க கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். துப்பட்டா போடுங்க தோழி என்பது மாதிரியான அட்வைஸ் கோஷ்டிகள் ஜப்பானிலும் இருக்கிறார்கள்.  அங்கு இப்போது வந்துள்ள  குதர்க்கமான ஒரு தடையறிவிப்பு: குதிரைவால் சடை ( போனி டெய்ல்) போடுவதால் வெளித்தெரியும் மாணவிகளின் புறங்கழுத்துப் பகுதி மாணவர்களின் கவனத்தைச் சிதறடித்து பாலிச்சையைத் தூண்டி விடுகிறதாம். இதனால் மாணவிகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைத் தடுக்கும்பொருட்டு, மாணவிகள் இனி குதிரைவால் சடையுடன் கல்வி வளாகத்திற்கு வரக்கூடாது என அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. பெண்களை எப்படி பார்க்கவேண்டும் என்று ஆண்களைப் பயிற்றுவிக்கிற ஏற்பாடு அங்கும் இல்லை போல. 

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாமை 11.03.2022 அன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் துவக்கிவைத்து உரையாற்றியிருக்கிறார். அவர் தனது பேச்சில் “…நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உடை அணியக்கூடாது. உடையில் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டும். நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று செய்வதற்கு சுதந்திரம் இருக்கிறது என்பதுபோல், மற்றவர்களுக்கும் அதே சுதந்திரம் உள்ளது என்பதை உணரவேண்டும்… நன்றாக படிக்க வேண்டும், சாதனை செய்வேன், மேலும் வளர்ச்சி அடைவேன் என்பதுதான் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை…” என்றெல்லாம் அறிவுரையை வாரி இறைத்துள்ளார். 

ஹிஜாப் தடைக்கு எதிராக வலுவடைந்த கருத்துகளால் எரிச்சலுற்று அதற்கு மறைமுகமாக பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு  பேசக் கிளம்பி மனதிற்குள்ளிருக்கும் மநுவியாதி இப்படி வெளியே தெரிந்துவிட்டதா? எந்நிலையிலும் யாதொரு விசயத்திலும் மனிதர்களுக்குள் சமத்துவத்தை ஏற்காத மநுஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவக் கருத்தியலின் அடிமையாய் இவ்வளவு காலமும் இருந்து அதற்கு வெகுமானமாக ஆளுநர் பதவியைப் பெற்றுள்ள தமிழிசை இவ்வாறு பேசாமல் போனால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும்.  பெண் கல்விக்காகவும் பொதுவாழ்வில் பெண்கள் பங்கெடுப்பதற்காகவும், பாலினச் சமத்துவத்திற்காகவும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களது தொடர் போராட்டங்களின் பலனை அனுபவித்துக் கொண்டே அதற்கு நேரெதிர் கருத்தியலைத் தாங்குகிறார் தமிழிசை.   

மேலோட்டமாகப் பார்த்தால் பெண்களின் நலன்களைக் குறித்த அக்கறையில் இருந்து சொல்லப்பட்டதாக தோன்றும் தமிழிசையின் இக்கருத்துகளில் அப்பட்டமான பிற்போக்குவாதமே பொதிந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கி தீர்ப்பெழுதும் கபடம். பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள், சீண்டல்கள் எல்லாவற்றுக்கும் அவர்களையே பொறுப்பாக்குவதுமாகும். பெண்களின் உடைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்கிற இந்த வாதம், பெண்களிடம் அத்துமீறி நடக்கும் ஆண்களை அவர்களது குற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. அதற்கும் மேலோடிச் சென்று அழகு, அருவறுப்பு, அழகு, கண்ணியம், ஆபாசம் போன்ற அருவமானவற்றுக்குள் இங்குள்ள மத, சாதியக் கண்ணோட்டதை ஏற்றி அதன்படி பெண்ணுக்குள்ள இடத்தை மறுவுறுதி செய்வதற்கும் முனைகிறது. 

நாகரீக உடைகள் பற்றி பெண்கள் கவனமாய் இருக்கவேண்டும் என்று ஒவ்வாமையை வெளிப்படுத்தும் தமிழிசை, அவர் பெரிதும் உயர்த்திப் பிடிக்கும் இந்துப் பண்பாடு, பெண்களுக்கு எவ்வகையான ஆடையை கண்ணியமெனக் கருதி வழங்கிவந்திருக்கிறது என்கிற வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போமா? 

வாழ்வின் எல்லா நிலைகளிலும் தலையிட்ட வர்ண ஆதிக்கம்  ஆடை விசயத்திலும் குரூரமான பாகுபாட்டை நிலைநாட்டியது. சூத்திர மற்றும் அவர்ண ஆண்கள் முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக்கூடாது, தோளிலே துண்டு போட்டுக்கொள்ளக்கூடாது, தலைப்பாகை அணியக் கூடாது, புத்தாடை அணியாமல் பிணத்தின் மீது போர்த்திய கந்தைகளையே உடுத்தவேண்டும், பஞ்சக்கச்சத்தை தார்ப்பாய்ச்சி கட்டக் கூடாது என்பதாக  நீள்கிறது  இக்கட்டுப்பாடுகள். செருப்பணியக்கூடாது என்கிற தடையை, ஒருவேளை கழற்றியடித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தினால் விதித்திருக்கலாம். ஆனால் ஆடை விசயத்தில் எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள்? ஆண்களையே இந்தப்பாடு படுத்திய வர்ண விதிகள், வர்ணம் சாதிகளாய் சிதைந்த காலத்திலும் பெண்களை என்ன பாடு பாடுத்தியிருக்கும் என்பதை “தோள்சீலைப் போராட்டம்” நமக்கு உணர்த்துகிறது. 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆதிக்கச்சாதியினராகிய நம்பூதிரிகளும் நாயர்களும் சாதியடுக்கில் தமக்குக் கீழிருந்த சாதிகளின் பெண்கள் இடுப்புக்கு மேல் உடுத்த தடைவிதித்திருந்தனர். இந்நிலையில் கிருத்தவத்திற்கு மதம் மாறிய நாடார் பெண்கள், தங்களுக்கும் நம்பூதி நாயர், வெள்ளாளப் பெண்களைப் போல மேலாடை (தமிழிசையின் பார்வையில் இது நாகரீக உடை) உடுத்தும் உரிமையைக் கோரியுள்ளனர். இதன் தொடர்ச்சியில் கிருத்துவராக மதம் மாறிய நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று அங்கு கர்னல் மன்றோ 1812ஆம் ஆண்டு ஓர் உத்தரவை பிறப்பித்திருக்கிறார். ஆனால் இந்த உத்தரவை ஏற்க மறுத்து ஆதிக்கச்சாதியின் ஆண்களும் பெண்களும் நடத்திய கடும் தாக்குதல்களாலும் அவமதிப்புகளாலும் கொந்தளிப்புக்குள்ளான அடிநிலைச் சாதிப் பெண்கள் 1822ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டம் 1859 ஜூலை 26ஆம் நாள் தன் இலக்கை எட்டியது. இந்தப் போராட்ட வரலாற்றைத்தான் தமிழிசை தாங்கிப்பிடிக்கும் ஒன்றிய அரசு பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டிருக்கிறது. 

மாராப்பு இல்லாமல் தம்மைப் பார்க்கும் ஆதிக்கச்சாதியினரின் வக்கிரத்தை அடிநிலைச் சாதிப்பெண்கள் 19ஆம் நூற்றாண்டிலேயே அடித்துநொறுக்கிநவீன ஆடைஅணியத் தொடங்கிவிட்டனர். ஆனால் ஆதிக்கச்சாதிகளில் ஒன்றான நாயர் சாதியின் பெண்கள் கோவிற்சடங்குகளில் மேலாடை இன்றி பங்கேற்கும் அவலம் 20ஆம் நூற்றாண்டின் நடுக்காலம் வரை தொடர்ந்தது. நாயர் பெண்கள், கேரளத்தின் திருச்சூர் அருகேயுள்ள வேலூர் மணிமலர்க்காவு தேவி கோவிலின் திருவிழாவில் விளக்கும் மலர்களும் தாங்கியதாலம்ஏந்திவந்து புரோகிதர்களாகிய நம்பூதிரிகள் முன்பு சடங்குகள் செய்து முடித்துத் திரும்பும்வரை மேலாடை அணியக்கூடாது.

நாயர் பெண்கள் மீதான இந்த 'அனாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மேலாடை அணிவதற்கான உரிமையை அவர்களுக்கு பெற்றுத்தந்தவர்கள் நாயரல்லாத-அடிநிலைச்சாதிப் பெண்களே. ஒடுக்கப்பட்ட ஈழவச்சாதியில் பிறந்தவரும் கம்யூனிஸ்டுமான வேலத்து லெஷ்மிக்குட்டி, வெள்ளரோட்டில்  மீனாட்சி (இவரும் பின்னாளில் கம்யூனிஸ்டானார்), போன்றோரின் முன்னெடுப்பில் 1956ஆம் ஆண்டு நாயரல்லாத  பெண்கள் 23 பேர், தெய்வநிந்தனையாவது வெங்காயமாவது என்று ரவிக்கையணிந்து தாலம் ஏந்தி அதுவரை தாங்கள் அனுமதிக்கப்படாத அந்தக் கோவிலுக்குள் நுழைந்தனர்நூற்றாண்டுகளாக தொடர்ந்த அந்த அனாச்சாரம்  ஒழித்துக்கட்டப்பட்டதை  “வேலூர் மாறு மறைக்கல் சமரம்என வரலாறு நினைவில் வைத்திருப்பதை தமிழிசை அறிவாரா? தோள்சீலைப் போராட்டத்தின் இருநூறாவது ஆண்டில், மீண்டும் உடைக்கட்டுப்பாடு பற்றி பேசுவது வரலாற்றுக்கு இழைக்கும் அவமானம்.
 

அரை நிர்வாணமாகவே இருக்கும் அவலத்தை முறியடித்து இந்தியப் பெண்கள் தங்களது உடலமைப்புக்கும் ரசனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற உடைகளை அணிவதற்கான இந்த நெடியப் போராட்டத்திற்கு உறுதுணையாய் இருந்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனால் தமிழிசையால் உயர்த்திப் பிடிக்கப்படும் இந்துத்துவவாதிகளின் ஒரு பெயரும் அதிலில்லை. 

‘எனது உடை எனது உரிமை’ என்கிற முழக்கத்தைக் கேட்கமாட்டேன் என தமிழிசை தனது செவிகளையும் மனதையும் அடைத்துவைத்திருக்கலாம். ஆனால் அவரேகூட இந்த முழக்கம் அடைந்துவரும் வெற்றிக்கு ஒரு சாட்சியம் தான்.     

நன்றி: தீக்கதிர் நாளிதழ், 14.03.2022


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக