புதன், மே 4

இந்துத்துவத்திற்கு எதிரான போரில் கட்சியே முன்னணிப்படை - ஆதவன் தீட்சண்யா


மாணவப்பருவந்தொட்டே மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்திருந்தாலும் இந்த நாற்பதாண்டு கால கட்சி வாழ்க்கையில் கட்சியின் மாநாடொன்றில் பிரதிநிதியாக பங்கேற்றது கண்ணூரில் 2022 ஏப்ரல் 6-10 வரை நடைபெற்ற 23ஆவது அகில இந்திய மாநாட்டில்தான். திருவனந்தபுரம் (1989), சென்னை (1992), கோவை (2008) அகில இந்திய மாநாடுகளின் நிறைவுநாள் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் ஒசூரிலிருந்து தோழர்களுடன் வந்து பங்கெடுத்துப் போயிருந்தாலும் ஒரு பிரதிநிதியாக பங்கெடுத்தது உத்வேகமூட்டும் அனுபவமே.

ஏப்ரல் ஆறாம் நாள் அதிகாலை 5 மணிக்கு கண்ணூர் ரயில்நிலையத்தில்  இறங்கிய எங்களை வாழ்த்தி முழக்கமிட்டு வரவேற்றது தொடங்கி மாநாட்டிற்கு மறுநாள் எங்களை ரயிலேற்றி அனுப்பிவைக்கும் வரை அக்கறையும் தோழமையும் உதவும் மனப்பாங்கும் கடமையுணர்வும் நிறைந்த கேரள செந்தொண்டர்களால் சூழப்பட்டிருந்தோம். செந்தொண்டர்கள் மட்டுமல்ல, மாநாட்டரங்கினைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கில் எந்நேரமும் திரண்டிருந்த பொதுமக்களும் தோழர்களும் கூட பிரதிநிதிகளை அவ்வளவு மரியாதையாக நடத்தினார்கள். கட்டுக்கடங்காத அந்தக்கூட்டம் “டெலிகேட்” என்கிற ஒற்றைச்சொல்லுக்கு மதிப்பளித்து அப்படியே இருவாகாய் பிளந்து கட்டுப்பாட்டுடன் வழிவிட்டு “லால் சலாம், ரெட் சல்யூட்” முழக்கத்துடன் அனுப்பி வைக்கும் பாங்கினை அவ்விடத்தைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் உணர்ந்தோம். தங்களது பணியைச் செய்வதற்காக பிரதிநிதிகளை எவ்வித இடையூறுமின்றி அனுப்பிவைத்தாக வேண்டும் என்கிற புரிதலுடன் அவர்கள் தந்த அந்த மரியாதை சற்றே கூச்சத்தை உண்டுபண்ணியது.  

வரவேற்பு, தங்குமிடம், உணவு, போக்குவரத்து, மருத்துவம், பாதுகாப்பு என ஒவ்வொன்றிலும் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் பிசகின்றி நடக்கும்படியான, நுட்பமான முன்தயாரிப்பு. மாநாட்டு அரங்கம் முழுவதும் பெண் தொண்டர்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. இவர்களில் அநேகரும் பள்ளிப்பருவத்தினர். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள பிரதிநிதிகளை தோழமை கனிந்த முகத்துடன் உபசரித்ததிலும், மாநாட்டு தலைமைக்குழு விவாதத்திற்கென அவ்வப்போது தரும் அறிக்கைகள், தீர்மானங்கள், திருத்தங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் கொண்டு சேர்த்த வேகத்தினாலும் பிரதிநிதிகளின் அன்பிற்குரியவர்களாகிப் போனார்கள். மாணவப்பருவத்திலேயே மிகப்பெரும் அரசியல்பணிகளில் ஈடுபடத் தயாராகிவிட்ட அந்த இளம்தோழர்களுடன் தான் பிரதிநிதிகள் அதிகப்படியாக புகைப்படம் எடுத்துக் கொன்டார்கள்.

***

கடந்த மாநாட்டிற்குப் பிறகான கட்சியின நிலைப்பாடுகளையும் செயல்பாடுகளையும் பரிசீலிக்கவும் அடுத்த மாநாடுவரைக்குமான உடனடி மற்றும் தொலைநோக்கு இலக்கினை நிர்ணயிக்கவும் நாடு முழுவதுமுள்ள 985757 உறுப்பினர்களின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 729 பிரதிநிதிகளும் 78 பார்வையாளர்களும் கூடிய மாநாடு இது. இந்த ஐந்துநாட்களும் எங்களின் பெரும்பகுதியான நேரமும் கவனமும் 2022 ஜனவரியில் கட்சியின் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின் வரைவறிக்கை, 2022 மார்ச்சில் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் அமைப்பறிக்கை ஆகியவற்றின் மீதான விவாதத்திற்குத்தான் ஒதுக்கப்பட்டிருந்தது.

மார்க்சீய லெனினிய அடிப்படையில் வெகுமக்களுடன் வலுவான பிணைப்பினைக் கொண்ட ஒரு புரட்சிகரகட்சியாக  வலுப்படுத்திக் கொள்வது, இளைஞர்களையும் பெண்களையும் கட்சிக்குள் திரட்ட தனிக்கவனம் கொள்வது, சாதி மற்றும் பாலினம் சார்ந்த பாகுபாடுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்களை  கட்டாயம் நடத்துவது - இப்போராட்டங்களை பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுடன் இணைப்பது, அன்னிய வர்க்கக் கருத்துக்களுக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை உறுதியுடன் மேற்கொள்வது, கல்கத்தா சிறப்பு மாநாட்டின் வழிகாட்டுதல்படி கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவது, இடது மற்றும் ஜனநாயகச் சக்திகளை அணிதிரட்டுவது, இந்துத்வாவை முறியடிப்பது - என நாட்டின் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் கட்சியின் செயல்பாட்டையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதற்கான கள அனுபவங்களையும் கருத்தியல் தெளிவினையும் கொண்டதாக இருந்தது இவ்விவாதம்.

கட்சி உறுப்பினர்களின் வர்க்க மற்றும் சமூகப்பின்புலச் சேர்மானம் கட்சியின் எல்லா மட்டங்களிலும் உள்ள  தலைமைக்குழுக்களில் பிரதிபலிக்க வேண்டும் என்று கல்கத்தா சிறப்புமாநாட்டின் வழிகாட்டுதலை கடந்த மாநாட்டில் செயல்படுத்த முடியவில்லை என்று சுயவிமர்சனமாக ஒப்புக்கொண்டுள்ள இந்த மாநாட்டின் அமைப்பறிக்கை இந்த விடுபடலை நேர்செய்யும் வழிகாட்டுதலை முன்வைத்துள்ளது. கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளிகள், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானவர்களாக இருக்கும் நிலையில் இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் தலைமைப்பொறுப்புகளில் இவர்களின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்கிற முன்மொழிவினை மாநாடு ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய மத்திய குழுவுக்கும் அரசியல் தலைமைக்குழுவுக்குமான முன்மொழிவில் இந்த வழிகாட்டுதல் உள்ளுறையாக இருப்பதைக் காணமுடியும். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக்கொண்டே வந்த பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அந்தவரிசையில் தோழர் ராமச்சந்திர டோம் பெயரை அறிவித்துவிட்டு “மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஒரு தலித் அரசியல் தலைமைக்குழுவில் இடம்பெறுவது இதுவே முதல்முறை...” என்கிற தனிக்குறிப்பைச் சொன்னதற்கான பின்புலம் இதுதான். இந்தப் பின்புலத்தை அறியாமலும் கட்சியின் ஆவணங்களையும் முடிவுகளையும் உள்வாங்காமலும் வெளியே குதிக்கிற தூயவர்க்கவாதிகளும் வறட்டிழுப்பர்களும் பொதுச்செயலாளரை “கரெக்ட் செய்து லைனுக்கு இழுத்துவந்து நிறுத்த” மல்லுக்கட்டினார்கள் என்பது நகைப்புக்குரிய தனிக்கதை.

1964ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து முன்னெப்போதும் எதிர்கொள்ளாத பல கடும் சவால்களை கட்சி இப்போது  எதிர்கொள்கிறது. கட்சியின் வலுவான தளங்களாகவும் ஆட்சிப்பொறுப்பிலும் இருந்தவற்றில் மேற்குவங்கத்தையும் திரிபுராவையும் இக்காலத்தில் இழந்து கேரளத்தை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்துவந்த உறுப்பினர் எண்ணிக்கையானது கடந்த மாநாட்டிற்குப் பிறகு தீரமிக்கப் போராட்டங்கள் பலமுனைகளில் நடந்திருந்தபோதும் உறுப்பினர் எண்ணிக்கையில் 3.86 சதவீதம் தற்போது குறைந்திருக்கிறது. அமைப்பு ரீதியான இந்த பலவீனங்களை செயல்பாடுகளின் வழியே களைவதற்கு இம்மாநாடு வழிகாட்டியுள்ளது.

வரலாற்றின் கொடுங்கோலாட்சிகள் அனைத்தும் கையாண்டதை விடவும் கொடிய  ஒடுக்குமுறைகளை இந்திய மக்கள் மீது ஏவி, இந்திய குடியரசை ஓர் இந்துத்துவ நாடாக சீரழித்திட பாஜக-ஆர்எஸ்எஸ் மேற்கொண்டிருக்கும் இழிமுயற்சிகளை முறியடிக்க கட்சி தன்னாலான அனைத்துவழிகளிலும் போராடும் என்கிற உறுதியை மாநாடு வெளிப்படுத்தியுள்ளது.

 ***  

மாநாடு முடிந்து மறுநாள்- 11.04.2022. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாக வரலாற்றிற்கு என்றென்றும் அனலேற்றும் கய்யூர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திட கய்யூர் சென்றோம். கண்ணூரிலிருந்து காசர்கோடு செல்லும் அவ்வழி நெடுகிலும் தென்படும் எந்தவொரு ஊரும் செங்கொடியால் அலங்கரிக்கப்பட்டு மாநாட்டுச்செய்தி அவ்வூர் மக்களுக்கும் அவ்வழியே கடப்பவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு ஊரின் அலங்காரம் போல் மறுஊரில் இல்லை. அந்தளவுக்கு கலையம்சத்திலும் அரசியல் வெளிப்பாட்டிலும் ஒன்றையொன்று மிஞ்சும் விதமான அலங்காரம். ஒருமுகப்படுத்துவது அல்லது மையப்படுத்தவது என்றில்லாமல் உள்ளூர் தோழர்கள் தமது கட்சியின் மாநாட்டுச் செய்தியை எப்படியெல்லாம் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமென்று கற்பனை செய்திருந்தார்களோ அப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களது படைப்பூக்கம் கட்டுத்தளையின்ற சுதந்திரமாக வெளிப்பட்டதன் காரணமான அந்த நெடுஞ்சாலையின் இருமருங்கும் நீண்டதோர் ஓவியத்திரைச்சீலை போல, சிற்பக்கூடம் போல காட்சியளித்தது.  மாநிலத்தில் உள்ள 36649 கட்சிக்கிளைகளும் இத்தகைய பணிகளை மேற்கொண்டிருப்பதை பயணத்தினூடாக அறிந்துகொள்ள முடிந்தது. கட்சிக்கிளையின் ஒவ்வொரு உறுப்பினரும் தன் பகுதியிலுள்ள 10வீடுகளின் நலன்களில் கவனம் செலுத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள கேரளத்தில், அகில இந்திய மாநாடானது மக்களின் திருவிழாவாக மாறிவிட்டிருந்தது.

திரும்பும் வழியில் கட்சியின் கண்ணூர் மாவட்டக்குழு அலுவலகத்திற்குச் சென்றோம். தென்னை, மா, பலா மரங்கள் அடர்ந்த ஒரு வளாகத்திற்குள் இருந்த அந்த அலுவலகத்தின் முகப்பினை கண்ணூர் மாவட்டத் தியாகிகளின் பெயர்களைத் தாங்கிய பலகைகள் அலங்கரிக்கின்றன. ஆண்டுவாரியாக தொகுக்கப்பட்டு வரும் அப்பட்டியலில் இதுவரைக்குள்ளாகவே இருநூறுக்கும் மேற்பட்ட தியாகிகள் இடம்பெறுமளவுக்கு அங்கு  களப்போராட்டங்கள் நடந்துவருகின்றன.

 ***

கேரளச் சமூகத்தைப் பீடித்திருந்த பிற்போக்கு நிலைகளிலிருந்து மக்களை விடுவிக்கப் போராடிய ஆளுமைகளையும் அமைப்புகளையும் போராட்டங்களையும் மரபுகளையும் தனது முன்னோடியாக கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கு ஏற்று தனதாக்கிக் கொண்டிருப்பதைத் தான் வரலாற்றுக் கண்காட்சியும் விளம்பரப்பதாகைகளும் நமக்குத் தெரிவிக்கின்றன. அதனால்தான் நாராயணகுருவும் அய்யங்காளியும் மாப்ளா முஸ்லிம்களின் தலைவர்களும் தோள்சீலைப் போராட்டத்தின் தலைவிகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கிறார்கள். கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன கேரளத்தின் நாட்டார் தெய்வங்களின் சிற்பங்களில் ஒன்றைக்காட்டி “யார் பசியோடு இருந்தாலும் வேட்டையாடி பசியைப் போக்கும் அரும்பணியைச் செய்துவந்த இவரை நாம் ஏன் சாமி என்று அந்தப்பக்கம் தள்ளிவிட வேண்டும்? நிச்சயமாக இவர் அந்தக் காலத்தின் கம்யூனிஸ்ட், நம்மவர் தானே” என்று உள்ளூர் தோழர் ஒருவர் சொன்ன விளக்கம் பல புதிய கேள்விகளையும் பழங்கேள்விகள் பலவற்றுக்கான பதிலாகவும் இருந்தது. “இந்தச் சமூகம் எங்களுடையது, இதை நாங்கள் விரும்பும் வண்ணம் மாற்றியமைக்க உரிமையுள்ளவர்கள்” என்று உரிமை கோருகிற எந்தவொரு கேரளீயரும் கம்யூனிஸ்டாக இருக்கிறார் அல்லது கம்யூனிஸ்ட் கேரளீயராகவும் இருக்கிறார்; இது கம்யூனிஸ்ட்கள் சர்வதேசவாதிகள் என்பதற்கு எவ்வகையிலும் முரணானதில்லை என்பதும் மாநாட்டிற்குப் போய்வந்ததில் நான் பெற்றுக்கொண்ட முக்கியச்செய்திகளில் ஒன்று.      

நன்றி: செம்மலர், மே 2022

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...