வெள்ளி, மே 6

புதிய வரைபடம் - ஆதவன் தீட்சண்யா



நிபந்தனையற்று வெம்மையீந்தும் சூரியன்

149600000 கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கிறது

அந்த நிலாவும்

அப்படியொன்றும் கிட்டத்தில் இல்லாதபோதும்

தூரம் சலியாது சுடர்கிறது ஒளியை

ஊசிபுகா இடத்திற்கும்

உருவிலியாய் வந்தடையும் காற்று

உயிரேற்றி இயக்குகிறது நம்முடலை

அருகருகே தோளுரசி வாழ்ந்திடும் மனிதர்களே

நாம் நமக்குள் எதை கொடுத்துக்கொண்டோம்?


ஒரே அளவினதான கர்ப்பப்பையிலிருந்து

வெறுங்கையுடன் நாம் வந்து விழும் இப்பூமி

நமக்குள் சமதையாய் பங்கிடப்படாததாயுள்ளது

பூமி போதாதென

வேற்று கிரகங்களையும் ஆக்கிரமிப்பவர்களால்   

நிற்க இடமற்று

நிழலையும் அகதியாக்க நேர்ந்தவர்கள்   

மீண்டும் குகைக்கா திரும்பமுடியும்?

இடம்பெயர்வதே வாழ்வென்றானவர்கள்    

இடமே பெயர்ந்து

தம்மிடம் வருமென்று இனியுமா காத்திருப்பார்கள்?

 

மயானமும் மறுக்கப்பட்டவர்கள்

நாய்நரிகள் தின்ன நடுத்தெருவில் வீசப்படும் முன்

வழிந்தோடும் தமது ரத்தம்தொட்டு

பூமியின் புதிய வரைபடத்தினைத் தயாரிக்கிறார்கள்

புல்டோசர்களை நசுக்கியெழும் அந்த புதிய பூமி

யாவருக்கும்

வாழ்விடமாய் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும்.


நன்றி: தீக்கதிர் நாளிதழ், 06.05.2022

PC: "This Is Where I Live" international homeless artists show

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...