செவ்வாய், ஜூலை 5

தனித்துவம் நமது உரிமை; பன்மைத்துவம் நமது வலிமை - ஆதவன் தீட்சண்யா

இலச்சினை வடிவமைப்பு: சந்தோஷ் நாராயணன்
ழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியப் படிப்பாளிகள், கலை இரசிகர்கள், திறனாய்வாளர்கள், வரலாற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், கருத்துரிமை போற்றுவோர் என இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து செயலாற்றும் அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். கலை இலக்கிய உருவாக்கம், படிப்பு, ரசிப்பு ஆகியவை தனிநபர் செயல்பாடு. சுதந்திரமான இச்செயல்பாட்டிற்கு ஓர் அமைப்பு தேவைப்படுவதில்லை என மேலுக்குத் தெரிந்தாலும், அப்படி சுதந்திரமாக செயல்படுவதற்கு உகந்த சூழமைவினை உருவாக்கவும் அதனைப் பாதுகாக்கவும் ஓர் அமைப்பு தேவையாயிருக்கிறது என  உணர்ந்த பெருந்தகைகளால் 1975ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். 

மூன்றாண்டுகளுக்கொரு முறை உறுப்பினர்கள் அனைவரும் பங்கெடுக்கும் கிளை மாநாடு, கிளைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் மாவட்ட மாநாடு, மாவட்டங்களிலிருந்து  தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் மாநில மாநாடு, மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலக்குழு, மாநிலக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலச்செயற்குழு என எல்லா நிலைகளிலும் ஜனநாயகம் பேணுகிற தமுஎகச, தனது பணிகளைத் திட்டமிடுவதிலும் செயலாற்றுவதிலும் இதே வழிமுறையைத் தான் பின்பற்றுகிறது. 

தமுஎகச என்கிற அமைப்பின் தேவை அது உருவாக்கப்பட்ட அவசரநிலை காலத்தை விடவும் “அறிவிக்கப்படாத அவசரநிலை” நடப்பிலிருக்கும் தற்காலத்தில் கூடுதலாக உணரப்படும் நிலையில் அதன் 15ஆவது மாநில மாநாடு “தனித்துவம் நமது உரிமை; பன்மைத்துவம் நமது வலிமை” என்ற முழக்கத்துடன் நடைபெறவுள்ளது.   

இந்தியப் பெருநிலப்பரப்பில் வாழும் 130 கோடிக்கும் மேலான மக்களாகிய நாம் இயற்கை நேர்வு மற்றும் வாழ்முறைகளால் பல்வேறு மொழிவழி இனங்களாக வாழ்ந்துவருகிறோம். பிறப்பு முதல் இறப்பு வரையிலும் (சில விடயங்களில் இறப்புக்குப் பின்னும்கூட) தனிமனிதர்களின் வாழ்வை நெறிப்படுத்தி நடத்துகின்ற இவ்வாழ்முறைகளின் தொகுப்புதான் பண்பாடு எனப்படுகிறது.

பண்பாடு நாடு முழுதும் ஒருபடித்தானதாக இல்லை. ஒவ்வொரு இனமும் தனக்கான தனித்த உணவு, உடை, இருப்பிட அமைவு, வாழ்க்கைவட்டச் சடங்குகள், தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், கலை இலக்கியம், கல்வி ஆகிய பண்பாட்டுக்கூறுகளை வரலாற்று ரீதியாக பெற்றுள்ளன. சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவை பண்பாட்டை இடைவெட்டிச் சென்றபோதும் அவற்றுக்கப்பாலும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்ள பொதுவான பண்பாட்டம்சங்கள் இருக்கவே செய்கின்றன. இதேரீதியில் ஒவ்வொரு இனமும் தனக்குள்ள தனித்துவமான பண்பாட்டை பேணிக்கொண்டே இதர இனங்களுடன் தமக்குள்ள பொதுமைப்பண்புகளைக் கண்டடைந்து அவற்றுடன் ஒப்புரவாக வாழ்ந்துவருகின்றன.   

ஓர் இனத்தின் வேறுபட்ட பண்பாட்டை அதன் தனித்துவமாக கருதி சமமாக ஏற்றுக் கொள்வதற்கு மாறாக அதனை இதர பண்பாடுகளுக்கு எதிரானதாகவோ கீழானதாகவோ உயர்வானதாகவோ சித்தரிக்க ஒன்றிய அரசும் அதனை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் முயற்சித்து வருகின்றன. இதன் மேலதிக தீவிரத்தில், தேசிய இனங்கள் என்பதையே மறுத்து இந்திய இனம் என்கிற செயற்கையான அடையாளத்தைச் சுமத்தி அந்த இந்திய இனத்தின் பண்பாடானது ஆரியப்பண்பாடே என்று நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

ஆரியர்கள் இந்தியாவின் தொல்குடிகள், அவர்களது சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய், ஆரியர்களது வேதங்களின் வழி வாழ்வதிலிருந்து உருவாவதே இந்தியப் பண்பாடு. சிந்து சமவெளி நாகரீகம் என்பது சிந்து சரஸ்வதி நாகரீகமே…” என்று கடந்த தொண்ணூறாண்டுகளுக்கும் மேலாக தான் பரப்பிவந்த பொய்யை இப்போது தனது ஏவலாளியான பாஜகவின் ஒன்றிய/ மாநில அரசுகள் மூலம் உண்மையெனத் திரிக்கப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்தியப் பெருநிலப்பரப்பிற்குள் வாழும் எம்மதத்தவரும் இந்துக்களே என்று கூறி பிற வழிபாட்டு நம்பிக்கைகளை மறுப்பதும், ஆரியர்களின் வழிவந்தவர்களாக தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் பார்ப்பனர்களின் பழக்கவழக்கங்களே உயர்வானவை என்று அவற்றை பின்பற்றும்படியான நெருக்கடிக்குள் பார்ப்பனரல்லாதாரை தள்ளுவதும், தேசிய இனங்களின் மொழிகளை பின்னுக்குத்தள்ளி சமஸ்கிருதத்தையும் இந்தியையும் மட்டுமே முன்னிலைப்படுத்துவதும், தொழிலையும் வணிகத்தையும் அரசு நடத்துவது வர்ணதர்மத்திற்கு விரோதமானது என்று அவற்றை தனியாரிடம் ஒப்படைப்பதும், அனைவரும் சமம் என்ற கருத்தாக்கத்தை மறுப்பதுமாக பாஜக வழியே ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்துமே இந்த நாட்டின் பன்மைத்துவப் பண்பாட்டை ஒழித்துக்கட்டும் வன்முறையே ஆகும்.      

பண்பாட்டின் ஓரம்சமான கல்வியை அந்தந்த மாநிலத்தின் சுயதேர்வாக இருக்கவொட்டாமல் மத்தியப்படுத்துவதும், அலுவல் நடவடிக்கைகளை இந்தியில் மட்டுமே மேற்கொள்வதும், இந்தி பேசாத மாநிலங்களுடனும் இந்தியிலேயே கடிதப்போக்குவரத்து நடத்துவதும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த மறுப்பதும், அரசு அலுவலகங்களை இந்துப் பெரும்பான்மைவாதக் களமாக்குவதும், அரசுத்திட்டங்களுக்கு சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டுவதும், அகழாய்வுகள் மூலம் துலங்கிவரும் தமிழினத்தின் தொன்மையை இருட்டடிப்பு செய்வதும், கலை இலக்கியம் வரலாறு தொடர்பான அரசு நிறுவனங்களை வலதுசாரி கருத்தியல் செல்வாக்கு பெறும்விதமாக முடக்கிப் போடுவதுமாக ஆர்.எஸ்.எஸ். தனது பன்மைத்துவ அழிப்பு- ஒற்றைமயமாக்கத்தை பாஜக மூலம் செயல்படுத்தி வருகிறது.      

இஸ்லாமிய மன்னர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கும் முன்பாகவே கடல்சார் வணிகம் வழியே இஸ்லாம் இந்தியாவிற்கு ஒரு மதமாக அறிமுகமாகி நிலைத்தும் நின்றுவிட்டது. பிற்பாடு எண்ணூறு ஆண்டுகள் இஸ்லாத்தைத் தழுவியவர்கள் அரசாண்ட போதும் அவர்கள் இங்கே மதமாற்றத்தில் நாட்டம் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ள மசூதிகள் அனைத்தும் முஸ்லிம் மன்னர்களால் ஆக்ரமிக்கப்பட்ட இந்துக் கோவில்களின் மீதே கட்டப்பட்டிருப்பதாக ஆதாரமற்ற பொய்களை “நம்பிக்கை” என்கிற பெயரால் பரப்பி ஒவ்வொரு மசூதியாக கைப்பற்றும் கபடத்தை சங் கும்பல் கைக்கொண்டுள்ளது. முஸ்லிம் மன்னர்கள் உருவாக்கிய நகரங்கள் மற்றும் நிறுவனங்களின் உருதுப்பெயர்களை மாற்றி வேத, புராணப் பெயர்களைச் சூட்டுவது, இஸ்லாமியரின் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது, அவர்களது தொழிலையும் வணிகத்தையும் தடுப்பது, வீடுகளையும் சொத்துகளையும் அழிப்பது அல்லது கைப்பற்றுவது, இஸ்லாமியரின் உணவு உடைப் பழக்கத்தை சர்ச்சைக்குள்ளாக்குவது என்று மற்றமை மீதான வெறுப்பினை சங் கும்பல் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஏறத்தாழ இதேநிலைதான் கிறிஸ்தவச் சமூகத்திற்கும்.

எட்டாண்டுகால ஆட்சியிலேயே இவ்வளவு அழித்தொழிப்புகளும் அடையாளத் திரிப்புகளும் செய்கிற ஆர்.எஸ்.எஸ், எண்ணூறாண்டுகாலம் அரசாண்ட இஸ்லாமிய மன்னர்களும், முன்னூறாண்டு காலம் அரசாண்ட பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களும் வாள்முனையில் இந்த நாட்டை தமது மதங்களின் நாடாக மாற்றும் வாய்ப்பிருந்தும் அந்த அழிவுப்பாதையை மேற்கொள்ளவில்லை என்கிற உண்மையை பார்க்க மறுக்கிறது. 

இந்து மேலாதிக்கத்தை சிறுபான்மைச் சமூகத்தவர் மீதும், பார்ப்பன மேலாதிக்கத்தை பார்ப்பனரல்லாதார் மீதும், ஆரிய மேலாதிக்கத்தை திராவிடர் மீதும், ஆணாதிக்கத்தை பெண்கள் மீதும், கார்ப்பரேட் சுரண்டலை உழைப்பாளி மக்கள் மீதும் திணித்து அவற்றை ஏற்கும்படியான உளவியல் முற்றுகையை ஆள்தூக்கிச் சட்டங்கள், கும்பல் வன்முறை மூலமாக ஏவிவருகிறது சங் கும்பல். 

தத்தமது கருத்தியலை சுதந்திரமாக வெளிப்படுத்தி வாழ்வதற்கான மனிதவிழைவுடன் இழைந்தியங்கும் தமுஎகச அதனாலேயே சங் கும்பலின் ஒற்றைமயமாக்கத்தை நிராகரிக்கிறது. வரலாற்றினூடே செழித்து நிற்கும் தமிழர் பண்பாட்டுத் தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்வது, இவ்விசயத்தில் ஒருமைப்பாடு கொண்டுள்ள யாவருடனும் தோழமை பேணுவது, நமது பாரம்பரியத்திலுள்ள பிற்போக்குத்தனங்களை நிராகரிப்பது ஆகிய கருத்துகளை கலை இலக்கிய வடிவங்களில் பரப்புவதற்கான சாத்தியங்களை மார்த்தாண்டம் மாநாடு  கண்டடையும். கருவிலே திருவுடையோரால் மட்டுமே கலை இலக்கியவாதியாக முடியும் என்கிற கற்பிதத்தை மறுதலிக்கும் தமுஎகச, ஒவ்வொருவருக்குள்ளும் கலை இலக்கிய ஆக்கச்சக்தி உயிர்ப்புடன் இருப்பதாக நம்புகிறது. அவர்களை அணிதிரட்ட “வீடுதோறும் உறுப்பினர்; வீதிதோறும் கிளை” என்கிற அணுகுமுறையை மார்த்தாண்டம் மாநாடு வகுத்தளிக்கட்டும்.

நன்றி: செம்மலர், ஜூலை 2022 இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாசறை என்பது காரணப்பெயர் - ஆதவன் தீட்சண்யா

வெளிவரவிருக்கும் தோழர் பாசறை செல்வராஜ் அவர்களின்  சுடர்ப்பயணம் நூலுக்கு எழுதிய அணிந்துரை தலித் இலக்கியத்தில் தன்வரலாற்றுக்கென ஓர் இடமுண்...