திங்கள், ஜனவரி 22

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்


ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புதிய ராம் மந்திர் விரிவாக்கத்திற்காக ஆகஸ்ட் 2020 இல் இடிக்கப்பட்டது. படம்: The Wire

இராமன் அயோத்தியில் பிறந்ததாக சொல்லகிறார்கள். அயோத்தியில் அவர் விளையாடினார், இளைஞராக இருந்தபோது சுற்றித் திரிந்தார், இங்கிருந்து தான் வனவாசம் சென்றார், பிறகு திரும்ப வந்து நாட்டை ஆண்டார்... அவரின் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நினைவுபடுத்தும் வகையில் அயோத்தியில் பல கோயில்கள் உள்ளன. அவர் விளையாடிய இடத்தில் குலேலா மந்திர். அவர் படித்த இடத்தில் வசிட்ட மந்திர். அவர் ஆட்சி புரிந்ததாக சொல்லப்படும் இடத்திலும் ஒரு கோயில் உள்ளது. அவர் உணவு உட்கொண்ட இடம் சீதையின் சமையலறை என்று அழைக்கப்படுகிறது. பரதன் தங்கிய இடத்தில் ஒரு கோயில். அனுமனுக்கு கோயில்... சுமித்திரைக்கு, தசரதனுக்கு... இப்படி 400, 500 ஆண்டுகால கோயில்கள் நகரெங்கும். இந்த கோயில்கள் அனைத்தும் முஸ்லிம்களால், முகலாயர்களால் இந்துஸ்தானம் ஆளப்பட்டக் காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டவை.

என்ன விநோதம் இது? முஸ்லிம்கள் எப்படி கோயில்களை கட்ட அனுமதித்தனர்? அவர்கள் கோயில்களை அழித்ததாக அல்லவா சொல்கிறார்கள்! அவர்களின் கண்களுக்கு முன் இத்தனை கோயில்கள் கட்டப்பட்ட போது அவர்கள் சும்மா இருந்தார்களா? ஏதும் செய்யவில்லையா? என்னமாதிரியான ஆட்சியாளர்கள் அவர்கள் - கோயில்கள் கட்ட இடம் கொடுத்துக்கொண்டே இருந்தார்களே... அது பொய்யான செய்தியாகதான் இருக்கவேண்டும். குலேலா மந்திர் முஸ்லிம் மன்னன் கொடுத்த இடத்தில் உள்ளது என்பது பொய்யாகத்தான் இருக்கவேண்டும்.  திகம்பர அக்காடாவில் உள்ள ஏடுகள் அவர்கள் 500 பீகா அளவிலான நிலத்தை வழங்கினார்கள் என்று குறிப்பிடுகின்றன. அதுவும் பொய்யோ என்னவோ? நிம்ரோ அக்காடா உள்ள இடம் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நவாப் சிராஜ் உத் தவுலாவால் வழங்கப்பட்டது என்ற செய்தி எப்படி உண்மையாக இருக்கமுடியும்? பாபர், அவர் கட்டியதாக சொல்லப்படும் மசூதி - இவை மட்டுமே உண்மை.

அப்படி என்றால் இராமாயணம் பாடிய துளசிதாசரும் உண்மையைச் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது. பாபர், கோயிலை இடித்து மசூதி கட்டிய ஆண்டு 1528 தான் என்பார்கள். அந்த ஆண்டு துளசி உயிருடன் இருந்தார். அவர் பிறந்தது 1511இல். இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் அதைப் பற்றி குறிப்பிட்டிருப்பார் தானே?. பாபர் இராமன் பிறந்த இடத்தை அழித்ததாக சொல்லப்படும் காலக்கட்டத்தில்தான், "நான் யாசித்து உண்ணுகிறேன், மசூதியில் படுத்து உறங்குகிறேன்" என்று துளசி பாடினார். இதற்குப் பிறகே இராமசரித்திரமனஸ் காவியத்தை எழுதினார். இராமருக்கான கோயில் இடிக்கப்பட்டு, அதன் சிதிலங்களின் மீது மசூதி எழுப்பப்பட்ட நிகழ்வு அவருக்கு ஏன் வருத்தம் அளிக்கவில்லை? அவர் இது குறித்து எங்காவது எழுதியிருக்க வேண்டுமே? ஏன் செய்யவில்லை?

அயோத்தியில் உண்மை, பொய் ஆகிய சொற்களுக்கும் பொருள் இல்லாமல் போய்விட்டது.

5 தலைமுறைகளாக முஸ்லிம்கள் இங்கு பூந்தோட்டங்களை வளர்த்துள்ளனர். இந்தப் பூக்கள் கோயில்களில் - கடவுளருக்காக, இராமனுக்காக... யாருக்குத் தெரியும், எப்போதிலிருந்து என்று! ஆனால் காலங்காலமாக முஸ்லிம்கள் சன்னியாசிகளுக்கு, அடியார்களுக்கு, இராமனின் பக்தர்களுக்கு செருப்புகளைத் தைத்துக் கொடுத்துள்ளனர்.

சுந்தர பவனம் கோயிலை 40 ஆண்டுகளாக முஸ்லிம்கள்தான் பராமரித்து வந்தனர். 1949ஆம் ஆண்டு முன்னு மியான் இந்தப் பொறுப்பை ஏற்றார். டிசம்பர் 23, 1992 வரையில் தனது கடமையை நிறைவேற்றினார். கோயிலுக்குப் போதுமான பக்தர்கள் வராத சமயங்களில், வழிபாட்டு பாடல்கள் பாடப்பட்ட போது அங்குள்ள தாளவாத்தியங்களை இசைக்கத் தயங்காத அவர், அயோத்தியில் எது பொய், எது உண்மை என்பது குறித்து யோசித்திருப்பாரோ?

அயோத்தியில் அகர்வால் சமுதாயத்தினர் கோயில் கட்ட முற்பட்ட போது அவர்கள் கொணர்ந்த செங்கற்கள் ஒவ்வொன்றிலும் 786 எண் பொறிக்கப்பட்டிருந்தது. அவற்றை வழங்கியவர் ராஜா ஹூசைன் அலி கான். இந்த உண்மையை என்னவென்று சொல்வது? அகர்வால் மக்களுக்கு என்ன பித்து பிடித்திருந்ததா? அல்லது ஹூசைன் அலி கான்தான் சித்தம் தப்பியிருந்தாரா? ஒரு கோயில் கட்ட அவர் ஏன் செங்கற்களை இலவசமாக வழங்கினார்?

வழிபாட்டில் இணைந்த கரங்களை இந்து, முஸ்லிம் என்று பிரிக்க இயலாது, அவர்கள் அனைவருமே கடவுளை வழிபட வந்தவர்கள். 786 என்ற அந்த எண் இந்தக் கோயிலை அனைவருக்குமானதாக ஆக்கியது.

டிசம்பர் 6, 1992 மட்டும்தான் உண்மையா?

டிசம்பர் 6, 1992க்குப் பிறகு அயோத்தியின்  கோயில்கள் அனைத்தும் அரசின் கட்டுபாட்டுக்குள் வந்தன. அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. கோயில்களில் தீபாராதனை செய்ய இயலாமல் போனது. மக்கள் கோயில்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டனர். 

பாபர் மசூதியின் மீது ஏறி இராமனை தமது கைப்பிடிக்குள் கொண்டுவர விரும்பியவர்களின் ஆணவத்தைப் பார்த்து மூடிய கதவுகளுக்கு பின்னால் இருந்த கடவுளர்கள் அவர்களைச் சபித்தார்களா?

அயோத்தியின் பழைய கோயில்களில் இரத்தவாடை அடிக்கிறதோ? இராமனின் பெயரில், பாரதத்தின் பெயரில் சிந்தப்பட்ட இரத்த வாடை அடிக்கிறதோ?

ஒரு நகரம் ஒரு பிரச்சனையாக உருமாற்றப்பட்ட கதைதான் அயோத்தி,

ஒரு நாகரிகத்தின் மரணம் பற்றிய கதைதான் அயோத்தி.இந்தி மொழியாக்கம் - நிவேதிதா மேனன்.
ஆங்கிலம் வழித் தமிழில் - வ. கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...