வியாழன், நவம்பர் 16

கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல் - ஆதவன் தீட்சண்யா

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த 
"கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்" - 
தேசிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட நோக்கவுரை 

மாணவர் அமைப்புகள், சமூக நீதி இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என்று  தமிழகத்தின் பன்முனைகளிலிருந்தும் வெளிப்பட்ட எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு மத்திய அரசால் பலவந்தமாக அமல்படுத்தப்பட்டுவிட்டது. தமிழக மக்களின் இந்த கோபாவேசத்தை பலமாகக் கொண்டு மத்திய அரசின்  எதேச்சதிகாரத்தை எதிர்த்து போர்க்கோலம் பூண்டிருக்க வேண்டிய மாநில அரசோ, ‘நீட்டை எதிர்க்கிறோம், சட்டவரைவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருக்கிறதுஎன்று சொல்லிக்கொண்டிருப்பதிலேயே காலம் கடத்திவிட்டது. முறையீட்டு மன்றங்கள் அனைத்தின் கதவுகளையும் பலம் கொண்ட மட்டும் தட்டிப் பார்த்து சோர்ந்த அனிதா,  இறுதியில்  தனது உயிரையும் கொடுத்து விடுத்த எச்சரிக்கை இங்கு உரிய கவனம் பெற்றிருக்கிறதா என்கிற பரிசீலனை அவசியமாகிறது. அவரது மரணம் மூட்டிய கனலில் பொசுங்கியிருக்க வேண்டிய நீட் தேர்வு நடைமுறை உண்மையாகிவிட்டது. அனிதாவின் மரணத்துக்கான நியாயம், நீட்டை ஒழித்துக் கட்டுவதுதான் என்று மாநிலம் முழுவதும் பரவிய மாணவர் போராட்டங்களை கடும் தாக்குதலை ஏவி அடக்கி முடித்ததன் மூலம் மாநில அரசு, மத்திய அரசின் காலாட்படையாக மாறியது.

மத்திய மாநில ஆளுங்கட்சிகளைத் தவிர்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டாகவும் சுயேச்சையாகவும் தொடங்கிய கண்டன இயக்கங்கள் நீட்டிற்கு முடிவு காண்பதற்காக அல்லாமல் சாராம்சத்தில் வெறும் சம்பிரதாய எதிர்ப்பாக, தமிழக மக்களின் ஆவேசத்தை வடியவைக்கும் தணிப்பு நடவடிக்கையாக குறுகியடங்கிப் போனதை காண்கிறோம். அரசியல் கட்சிகள் களத்திலிருந்து வெளியேறிய நிலையில் தாங்கள் தனித்து விடப்பட்டதை உணர்ந்த மாணவர்கள் வேறுவழியின்றி பின்வாங்கும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். மறுபடியும் அவர்கள் களத்திற்கு வந்துவிடாத படியான அச்சத்தை உருவாக்கும் பொருட்டு போராட்டத்தில் முன்னணி வகித்த பல மாணவர்கள் மனிதத்தன்மையற்ற வகையில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டனர். 

நீட்டின் பெயரால் இப்போதைக்கு எந்தவொரு நிகழ்வையும் - எதிர்த்து மட்டுமல்ல ஆதரித்தும்கூட- நடத்திக்கொள்ள மண்டபங்கள், பொது அரங்கங்கள் தரப்படக்கூடாது என்கிற கெடுபிடி தலைநகரில் நிலவுகிறது. நீட்டிற்கு எதிரான குரலை ஜனநாயகத்திற்குப் புறம்பான இத்தகைய வழிகளில் அடைத்து வலிந்து நிறுவிய அமைதியைப் பேணுகின்றன மத்திய மாநில அரசுகள். நீட் குறித்து வெளிப்படையாக விவாதிக்கும் பொதுவெளி மறுக்கப்பட்டுவரும் நிலையில் "கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்" என்கிற தலைப்பிலான இவ்வரங்கம் நீட் பற்றியே முதன்மையாக கவனம் குவித்து  விவாதிப்பது அவசியமாகிறது.

இன்னும் ஒருசில வாரங்களில் 2018ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியாகவிருக்கிறது. கடந்த ஆண்டைப்போலவே அதுவும் நீட் அடிப்படையில்தான் இருக்கப்போகிறது என்பதே இப்போதைய  நிலை. நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவினை குடியரசுத்தலைவரின் பார்வைக்கே கொண்டு செல்லாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. மாநில அரசோ அதுபற்றி கேள்வி எழுப்பும் அரசியல் விருப்புறுதியற்றதாகவும் தனது செயலற்றத்தன்மையை நியாயப்படுத்துவதாகவும் இருக்கிறது. பிரச்னையின் அவசரத்தன்மையை கருத்தில் கொண்டு நீட் தேர்வு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கின் மீது இறுதித்தீர்ப்பு எதையும் இப்போதைக்கு வழங்குவதற்கான நிலையில் உச்சநீதிமன்றம் இருப்பதாகவும் தெரியவில்லை. நவம்பர் இறுதி வாரத்தில் (21 முதல்?) நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதையும், நீட் அறிவிப்பு வெளியாவதற்கான காலக்கெடு நெருங்கி வருவதையும் கருத்தில் கொண்டு, நீட் ஒழிப்பை முதன்மை நிகழ்ச்சி நிரலாக முன்னெடுத்துச் செல்லத்தக்க ஓர் இயக்கத்தை கட்டியயெழுப்பும் சாத்தியங்கள் பற்றி இந்த கருத்தரங்கம் விவாதிப்பது அவசியமாகிறது.  

நாட்டின் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் மத்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் 15% இடங்களை நிரப்புவதற்கான ஒரு தகுதி நுழைவுத் தேர்வாக நீட் அறிமுகம் செய்யப்பட்ட போதிருந்தே கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது. அது தேவையற்ற ஒன்று என்கிற விமர்சனமும் தொடர்கிறது. நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் அமலில் உள்ள நிலையில் அவற்றில் ஒன்றாக உள்ள சிபிஎஸ்இ வாரியத்திடம் நீட் தேர்வை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது முறைகேட்டிற்கும் பாரபட்சத்திற்கும் வழிவகுக்கும் என்கிற குற்றச்சாட்டு மெய்யென நிரூபிக்கப் பட்டுள்ளது. (அந்த வாரியம் அன்னிய நிறுவனம் ஒன்றிடம் தேர்வை நடத்திக் கொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்ததும் இதே வேலைக்ககாக அந்த நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் அமர்த்திக் கொண்ட மற்றொரு நிறுவனம் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.)

அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளின் செயல் எல்லை மிக குறுகியது. தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட நகரங்களில் குறிப்பிட்ட சமூக அடுக்கினருக்கு மட்டுமே கல்வி அளிக்கும் பொறுப்பை அவை நிறைவேற்றிவருகின்றன. நகர்ப்புறம் சார்ந்த, பொருளாதார வலுவுள்ள, சாதியடுக்கில் மேலிருக்கிற சமூக அடுக்கினரால் மட்டுமே அணுகமுடிகிற இந்த சிபிஎஸ்இ பள்ளிகள் இயல்பாகவே, கல்விபெறும் உரிமையை தாமதமாகப் பெற்ற பட்டியல் சாதியினரையும் பழங்குடிகளையும் பிற்படுத்தப் பட்டோரையும் கிராமப்புறத்தவரையும் பொருளாதார வலுவற்றவர்களையும் விலக்கி வைக்கும் தன்மையுடையவை. இவற்றின் பாடத்திட்டமானது, நடப்பிலிருக்கும் பாடத்திட்டங்களுக்குள் ஒன்றே தவிர அவற்றில் அதுவே சிறந்தது என்பதற்கான சான்றேதும் இல்லை.  இப்படி நாட்டின் பெரும்பகுதி மாணவர்களை விலக்கி வைத்துவிட்டு சிபிஎஸ்இ- பாடத்திட்டத்தில் படிக்கிறவர்களாலும்கூட, தனியான பயிற்சி வகுப்புகள் இல்லாமல் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை. பெருநகரங்களில் இயங்கிவரும் இப்படியான பயிற்சி நிலையங்கள் இன்றைக்கு மிகப்பெரும் தொழிலாக வளர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இயங்கும் பயிற்சி நிலையங்களில் மட்டும் ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 1,20,000 ரூபாய் கட்டணம் செலுத்தி 6 லட்சம் மாணவர்கள் பயின்றுவருகின்றனர். மத்திய கல்வி நிறுவனங்களின் பெரும்பான்மை இடங்களை இப்படியான சில நிறுவனங்களில் பயில்வோரே கைப்பற்றிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. 100 பில்லியன் ரூபாய் அளவுக்கு வருடாந்திர பணப்புழக்கம் உள்ள -லாபம் கொழிக்கிற- இந்த பயிற்சித்தொழிலில் முதலீடு செய்யுமாறு முதலாளிகள் அமைப்பான அசோசெம் விடுத்த சுற்றறிக்கையை இங்கு கவனப்படுத்த வேண்டியுள்ளது. பெரும் மூலதனத்துடன் இந்தப் பயிற்சி நிலையங்கள் நடத்தப்படுவதற்கும் நீட் கட்டாயம் என்றாக்கப்பட்டதற்கும் உள்ள தொடர்புகள் வெளிப்படையானவை. மத்திய கல்வி நிலையங்களில் இடம் பிடிக்க நடந்த சூதாட்டத்தை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தியுள்ளது மத்திய அரசு. 

மக்கள் தமக்கென தத்தமது மாநில அரசின் மூலம் உருவாக்கி வளப்படுத்தி வந்திருக்கிற மருத்துவக்கல்லூரிகளை நீதிமன்றத்தின் துணையோடு ஆக்கிரமித்திருக்கிறது மத்திய அரசு. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாற்றங்களை மேற்கொள்ளும் போது மத்திய மாநில அரசுகளுக்கிடையில் பேணப்பட வேண்டிய இசைவிணக்கம் ஒழித்துக்கட்டப்பட்டு மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கு தலைதூக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு தழுவிய அளவிலும் நீட் தேர்வானது மாநில உரிமைகளுக்கும் மாணவர் நலன்களுக்கும் சமூகநீதிக்கும் எதிராக இருக்கிறது என்பதற்கு கடந்தாண்டு மாணவர் சேர்க்கையே போதுமான சான்றாக இருக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வை எழுதியேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானதாகும். சமமற்ற ஆடுகளம் என்று தெரிந்தே போட்டியை நடத்தியதானது யார் வெற்றிபெற வேண்டும் என்கிற முன்தீர்மானத்தின் படியான முடிவை நோக்கி ஆட்டத்தை செலுத்திய சதியன்றி வேறில்லை.

நீட் தேர்வுக்குரிய சிபிஎஸ்இ பாடநூல்களை ஆங்கிலம்  மற்றும் இந்தி ஆகிய இரண்டேயிரண்டு மொழிகளில் மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலம், இந்தி, வங்காளி, தமிழ், தெலுங்கு, மராத்தி, அஸ்ஸாமி, குஜராத்தி, ஒரியா, கன்னடம் ஆகிய பத்துமொழிகளில் கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் பயனேதும் விளையவில்லை. இந்த கேள்வித்தாள்களும்கூட ஒருபடித்தானதாக - மாநில மொழிகளுக்கு மாற்றப்பட்ட படியாக- அல்லாமல் பாரபட்சங்களோடும் கடினத்தன்மையோடும் இருந்தன.

மேல்நிலை வகுப்புக்கான தேர்வுக்கு மட்டுமல்லாது, நீட் தேர்வுக்கும் சேர்த்து படிக்க வேண்டியிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாடச்சுமையும் மன அழுத்தமும் கவலைதரக்கூடியதாக இருக்கிறது. தொடர்பற்ற பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நீட்டில் தேர்வு பெற முடியாது என்கிற தாழ்வுணர்ச்சியாலும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மருத்துவம் படிக்க முடியாது என்கிற விரக்தியாலும் மாணவர்களிடையே ஆளுமைச்சிதைவு ஏற்படுகிறது. ஆந்திரா- தெலுங்கானாவில் இயங்கும் நீட் பயிற்சிமையங்களில் பயிலும் மாணவர்களில் 50 பேர் 60 நாட்களில் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக வந்துள்ள செய்தி நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. கோட்டா நகரத்தின் பயிற்சி நிலையங்களில் அவ்வப்போது நடந்துவந்த இத்தகைய தற்கொலைகள் நாடு முழுவதும் பரவுவதற்கு நீட் காரணமாகியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றுக்கு தேவையான மருத்துவர்களை உருவாக்கித் தருவதற்கென தமிழகத்தில் இதுகாறும் இயங்கிவந்த  மருத்துவக்கல்வியில் பெரும் விலகலை நீட் ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்புகளுக்கான இடங்களில் கிடைத்துவந்த ஒதுக்கீடு மறுக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பு மருத்துவர்களாவதற்கான வாய்ப்பு குறுக்கப்பட்டுள்ளது. நேரடி மருத்துவச்சேவையில் எவ்வித அனுபவமுமின்றி ஏட்டுக்கல்வி வழியாகவே முதுநிலை/ சிறப்பு மருத்துவர்களாகி தத்தமது மாநிலங்களுக்கு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுவிடுவதற்கு நீட் வழிவகுக்கிறது.  இதன் மூலம், தமிழகத்தில் மக்கள் நலன் பேணுவதில் மதிப்பார்ந்த பங்கினை வகித்து வந்துள்ள பொது சுகாதாரத்துறை முற்றிலும் அழியக்கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் முதன்முதலாக கல்கத்தா மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட போது, இஸ்லாமியர்களும் பார்சிகளுமே படிக்க முன்வந்தனர். பிறரது உடலைத் தொடுவது தீட்டு என்கிற சாதிய மனத்தடை காரணமாக பார்ப்பனர்கள் மருத்துவம் படிக்க முன்வரவில்லை. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாகியுள்ளது. உடல் நலன் பாதுகாப்பும் சிகிச்சையும் பெருந்தொழிலாக வளரத் தொடங்கியதுமே இது பார்ப்பனர்களின் தனித்த முற்றுரிமைக்குட்பட்டது போலாகிவிட்டது. பட்டியலினத்தவரையும் பிற்படுத்தப்பட்டோரையும் அவரவரது சாதிப்பட்டியலுக்குள் அடைத்துவிட்டு பொதுப்போட்டிக்குரிய 50 சதவீத இடங்களில் பெரும்பகுதியை பார்ப்பனர்களுக்கு ஒதுக்கித்தருகிற / ஒதுக்கிக்கொள்கிற போக்கு அதிகரித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளும் நீட் தேர்வும் இதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றன. 

ஆக, நீட் என்பது மருத்துவம் படிக்க விரும்புகிற மூவாயிரத்து சொச்சம் பேருடைய பிரச்னையல்ல. பெற்றோர்களைப் பொறுத்தவரை, நீட் இல்லாவிட்டால் மார்க் எடுப்பதற்கும், நீட் இருந்தால் பயிற்சி வகுப்பில் சேர்ந்து அதையும் சேர்த்துப் படிப்பதற்கும் தமது குழந்தைகளை தயார்படுத்துவதில்  முனைப்பாக உள்ளனர். இதற்கு தோதாக தமிழகத்தில் பரவியுள்ள தனியார் பள்ளிக்கூடங்கள் நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி மாணவர்களை வதைத்து வருகின்றன. +2 மதிப்பெண் அடிப்படையில் அதிக மருத்துவ இடங்களை கைப்பற்றி வந்த தனியார் பள்ளிகள், இப்போது நீட் மூலமாகவும் அதே  பங்கினை பெறப்போவதாக கூறிக்கொண்டு வார ஓய்வுநாள் அரசு விடுமுறைகள் என்று ஒரு நாளும் ஓய்வுஒழிச்சலின்றி நாளொன்றுக்கு 18மணி நேரம் படித்து£லும் தீராது என்கிற நெருக்கடியை மாணவர்களுக்கு உருவாகி வருகின்றன. நீட்டுக்கு எதிராக ஆவேசத்தோடு தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த வேளையில் இந்தத் தனியார் பள்ளிகள் இவ்வாறாக குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருந்தன. கட்டண நிர்ணயம், சமச்சீர் கல்வி போன்ற விசயங்களில் நேரடி நடவடிக்கைகளுக்கு சென்ற தனியார் பள்ளி நிர்வாகங்கள், நீட் விசயத்தில் முணுமுணுக்கவும் இல்லை. எல்லா மாற்றங்களையும் தமது வணிக நோக்கிற்கு திருப்புவதில் கைதேர்ந்த அப்பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறுவது, நீட் தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகளை நடத்துவது என்கிற உத்திகளை கையாள்கின்றன.

இயற்கை நீதிக்கும் சமூக நீதிக்கும் பொது சுகாதாரத்திற்கும் எதிரான இந்த நீட் மாநில உரிமைகளுக்கும் தனித்துவத்திற்கும் எதிரானது. எனவே அது ரத்து செய்யப்பட வேண்டும், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களது விகிதாச்சாரத்திற்கு ஏற்ற இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். உயர்கல்வியில் அன்னிய பல்கலைக்கழகங்களின் நுழைவை தடுக்க வேண்டும் என்பவற்றை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் இயக்கம் ஒன்றின் தேவை இப்போது அதிகரித்துள்ளது.

National Testing Agency என்கிற தன்னாட்சியுள்ள அமைப்பினை   உருவாக்குவதற்கான ஒப்புதலை சிலதினங்களுக்கு முன் மத்திய அமைச்சரவை  வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிவரும்  NEET UG, JEE, UGC NET, CTET, JNV  உள்ளிட்ட தேர்வுகளை  இந்த அமைப்பிடம் கொடுப்பதன் மூலம், நாட்டின் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. நுழைவுத்தேர்வின் வழியாகத்தான் இனி எந்தவொரு பட்டப்படிப்புக்கும் செல்லமுடியும் என்கிற நிலையை நோக்கி நாட்டின் கல்விமுறை தள்ளப்பட்டு வருகிறது. கலை இலக்கியம், விளையாட்டு, வாசிப்பு, பயணம், சுற்றுச்சூழல் பேணுதல் என பன்முக ஆற்றலுடனும் படைப்பூக்கத்துடனும் தம்மை வெளிப்படுத்தி சமூகமயமாகும் ஒரு நிகழ்வுப்போக்கின் ஊடாக பள்ளிக்கல்வியை நிறைவுசெய்ய வேண்டிய மாணவர்களுக்கு, நுழைவுத்தேர்வுக்கு தயாராவதே இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது.  இவ்வாறான தலைமுறை நம் காலத்தில் உருவாவதை தடுக்க நாம் செய்ய வேண்டிய பணிகளை இந்த கருத்தரங்கம் விவாதிக்க வேண்டுமென்று வேண்டி நிறைவு செய்கிறேன்.

12.11.2017, சென்னை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...