வாஞ்சிநாதனின் கடிதம் படித்து - மெய்யாலுமே- கிழிக்கப்படுகிறது... ஆதவன் தீட்சண்யா

மருத்துவர் நா.ஜெயராமன் எழுதி விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள "ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும் - என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரை


காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடி சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டைக்கூட தொடுவதற்கும் முன்பே இந்த நாட்டை  மறுகாலனியாதிக்கச் சக்திகளுக்கு அடிமையாக்கும் அவலம் தொடங்கிவிட்டது. இத்தகைய அரசியல் தற்கொலைக்கு இந்த நாட்டை இவ்வளவு வேகமாக நெட்டித்தள்ளியவர்கள் யார் என்பதற்கு நுண்ணாய்வு எதுவும் தேவையில்லை. ஏனென்றால் இந்த நாட்டின் கொள்கை முடிவெடுக்கும் அதிகார மையங்களில் வெகுகாலமாக வீற்றிருப்பவர்கள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதிக் குழாமினர்தான் என்பது ஊரறிந்த ரகசியம்தான் என்பதால் அவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள். சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் தன்னல நோக்கிலான அவர்களது அணுகுமுறையானது, உலகின் மிகத்தொன்மையான நாகரீகத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவை தலைமையேற்று நடத்துவதற்கான அருகதை சிறிதுமற்றவர்களாக அவர்களை ஆக்கியுள்ளது. ஆனாலும் அவர்கள் இந்த எளிய உண்மையை கபடமாக மறைத்துக்கொண்டு, நாட்டை வழிநடத்தும் தகுதி தமக்கே இருப்பதாக கூறிவந்திருக்கின்றனர். இட்டுக்கட்டிய சான்றுகளைக் கொண்டு இப்பரந்த நாட்டிற்கு உரிமை கோரும் தந்திரத்தை ‘அதீத தேசபக்தி’ என்கிற நாடகத்தின் வழியே நிலைநிறுத்தப் பார்க்கின்றனர்.  அவர்களுக்கு தேசம் என்பது சொந்த சாதி மட்டுமே. ஆகவே தேச நலன் என்பதும் சொந்த நலன் மட்டுமே. இந்த சொந்த நலனுக்கு குந்தகம் நேரும் போது அதை தேசத்திற்கே ஆபத்து என்பதாக எப்படி கட்டமைப்பார்கள் என்பதற்கு தென்காசி வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷை சுட்டுக்கொன்றதே வெளிப்படையான உதாரணம். 

இந்த நாட்டின் இயற்கைவளங்களும் உழைப்புச்சக்தியும் காலனியவாதிகளால் கொள்ளையடிக்கப்படுவது பற்றியோ அதற்காக கடும் ஒடுக்குமுறைக்கு மக்கள் ஆளாவது பற்றியோ வாஞ்சிநாதனுக்கு எவ்வித புகாருமில்லை. இவ்வளவு காலமும் தாங்கள் செய்துவந்த சுரண்டலுக்கு இன்னொருவர் போட்டியா என்கிற கோபம்கூட வரவில்லை. ஆங்கிலேய ஆட்சியின் மீதான அவரது ஒம்பாமைக்கு காரணம், தனது சாதி கடைபிடித்துவரும் ஆசாரங்களுக்கு பங்கம் நேரும் வண்ணம் அது செல்கிறது என்பது மட்டும்தான். பார்ப்பனர்களின் ஆசாரமானது, சமூகத்தின் பிற பகுதியினரை எல்லாவகையிலும் தமக்கு சமமற்றவர்கள், தீட்டுக்குரியவர்கள் என்று ஒதுக்கிவைத்து ஒதுங்கி வாழ்வதிலிருந்தே தொடங்குகிறது. அவ்வாறு ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் தமது எல்லையை அறிந்துகொண்டு அதற்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருந்துவிடுவதுதான் இங்கு சமூக ஒழுங்கு, தர்மம் என பலகாலமாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஒழுங்கைக் காப்பது என்பதன் மெய்யான பொருள், பார்ப்பனர்கள் தமது உயர்சாதி அந்தஸ்தை, அதற்குரிய சிறப்புரிமைகளை, சலுகைகளை, அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்வது என்பதேயாகும். இந்த ஒழுங்கிற்கு பங்கம் நேர்ந்துவிட்டதாக ஆத்திரமுற்றுதான் தென்காசி வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலக்டர் ஆஷை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சாகடித்துக் கொண்டார். ஆனால் அவரது கொலைச்செயல் திட்டமிட்டே சுதந்திரத்திற்கான வீரச்செயலாகவும் தியாகமாகவும் முன்னிறுத்தப்படுகிறது. 

சுதந்திரப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்து போற்றத்தக்க பங்களிப்பைச் செய்த பகத்சிங்கும் அவரது தோழர்களும் பயங்கரவாதிகள் என்று இன்றளவும் சிறுமைப்படுத்தப்படும் இந்த நாட்டில் அப்பட்டமான சாதிவெறியால் தூண்டப்பட்ட வாஞ்சிநாதன் வீரனாகவும் தியாகியாகவும் போற்றப்படுவது தற்செயலானதல்ல. அதுவும் தனது செயலுக்கான காரணத்தை வாஞ்சிநாதனே கைப்பட எழுதி வைத்துவிட்டு செத்துப் போயிருக்கையில், அந்த முதன்மைச் சான்றாதாரத்தைக் கொண்டு அவர் மீதான மதிப்பீட்டை வைக்காமல் அவர் கொண்டாடப்படுவது வரலாற்று மோசடியல்லவா? பைத்தியம் கிழிச்சது கோவணத்துக்கு ஆச்சு என்பது போல இந்த  சாதிப்பைத்தியத்தின் செயலை சுதந்திரப்போராட்டத்தின் பகுதியாக இணைத்துக் காட்ட வேண்டிய தேவை என்ன வந்தது? வீரவாஞ்சி என்று திரும்பத்திரும்ப கட்டமைக்கப்படும் பிம்பத்தின் உண்மைத்தன்மை என்ன? அவர் சொந்த நலனையும் தேசநலனையும் எவ்வாறு பிரித்தறியா வண்ணம் குழப்பியிடிக்கிறார்? சுதந்திரப் போராட்டத்தில் அவரது மெய்யான பங்கு என்ன? என இயல்பாக எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியாகவே தோழர். ஜெயராமன் இந்நூலை எழுதியுள்ளார். வரலாற்றைப் பயில்கையில் தனக்கெழும் கேள்விகளை பின்தொடர்ந்து செல்லும் தோழர்.ஜெயராமன், ஒரு கட்டத்தில் தான் கண்டடையும் பதில்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அவரது முதல்நூலான காந்தியின் தீண்டாமையும் இத்தகையதுதான். எனவே, தொழில் (ஆமாம், தொழில்தான்) மற்றும் கல்விப்புலத் தேவையிலிருந்து ஆய்வாளராக அவதரித்து அருள்பாலிப்பவர்கள், தோழர். ஜெயராமனை போட்டியாளராகவோ தங்களது ராஜ்ஜியத்திற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டவராகவோ கருதி பதற்றம் கொள்ளத் தேவையில்லை. அவர் முன்வைக்கும் கருத்துகளை பரிசீலிப்பது மட்டுமே போதுமானது. 

ஆஷ் கொலை வழக்கு குறித்து ஏற்கனவே வெளிவந்துள்ள புத்தகங்கள், கட்டுரைகள், காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றை மிக விரிவாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ள ஆசிரியர் அவற்றில் தெளிவுற வேண்டிய விசயங்கள் குறித்து அவற்றோடு தொடர்புடைய ஆய்வாளர்களைச் சந்தித்து உரையாடி விளக்கம் பெற்றிருக்கிறார். வாஞ்சிநாதனின் தொடர்பெல்லைக்குள் இருந்த ஆளுமைகள்,  அவர்களது அரசியல் நிலைப்பாடுகள், அன்றைய அரசியல் சூழல், காலனியாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றையும் தொகுத்தெடுத்துக் கொண்டு அவர் வாஞ்சிநாதனின் கடிதத்தை  விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.

தான் செத்துப்போன பிறகு பாராட்டப்பட வேண்டுமென்றோ நினைவுகூரப்பட வேண்டுமென்றோ எதிர்பார்த்து எழுதப்பட்டதல்ல வாஞ்சிநாதனின் கடிதம். தன்னொத்த சாதியவாதிகளைத் தூண்டிவிடுவதற்கு வாஞ்சிநாதன் விடுத்த அறைகூவலாகவும் ஆஷ் போன்ற அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவுமே அக்கடிதத்தை கருத வேண்டியுள்ளது. அக்கடிதத்தின் ஒவ்வொரு சொல்லையும் சொற்களுக்கிடையேயான இடைவெளியையும் அன்றைய காலத்தில் அவற்றுக்கிருந்த மெய்யான பொருளையும் விளக்கிச் செல்லும் ஆசிரியர், வாஞ்சிநாதன் ஆஷைக் கொன்றது அரசியல் காரணங்களுக்காக அல்ல என்றும் சொந்தப்பகையின் - அதாவது சாதிவெறியினாலேயே கொன்றார் என்றும்  நிறுவுகிறார்.  விதிவிலக்காக சில வெள்ளையதிகாரிகளும் மத போதகர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் பால் காட்டுகிற கரிசனத்தை காணப்பொறுக்காத ஆத்திரம் கொப்பளிக்க எழுதப்பட்ட அக்கடிதத்தை திரித்து அதற்கு தேசபக்த முலாம் பூசப்படும் மோசடியை இந்நூல் தன்போக்கில் அம்பலப்படுத்துகிறது. சுதந்திரப் போராட்டத்திற்கு சுண்டுவிரலைக்கூட அசைத்திராத கூட்டம் இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆரிய சனாதனத்தை மீண்டும் கொண்டுவரப் போவதாக கொக்கரித்து வரும் இந்நாளில், வாஞ்சிநாதன் போற்றும் ஆரியர்கள் யார், அவர்கள் கைக்கொண்டிருந்த தர்மம் எத்தகையது, அழியாத சனாதனம் என்பதன் மனிதாயமற்றத்தன்மை, வேதப்பண்பாட்டின் கீழ்மைகள் ஆகியவற்றை மிக விரிவாக விளக்கும் இந்நூல் அரசியல் முக்கியத்துவமுடையதாகிறது.

சாதிய ஒடுக்குமுறையில் காலனியாட்சியாளர்கள் செய்த குறுக்கீடுகளைப் பேசும்போது அவர்கள் மீது சாய்மானம் கொண்ட மதிப்பீடுகள் முன்வைக்கப்படுவதை இந்நூலின் சிற்சில இடங்களில் காணமுடிகிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் சில அதிகாரிகள் மேற்கொண்ட நல்லெண்ண நடவடிக்கைகளால், ஒரு ஆட்சி என்ற வகையில் காலனியம் நடத்திய சுரண்டலையோ ஒடுக்குமுறைகளையோ வரலாற்றின் கண்டனத்திலிருந்து தப்புவித்துவிட முடியாது என்பதையும் கூறி அக்குறையை இந்நூல் தானே நேர்செய்து கொள்கிறது.

வாழ்த்துகளுடன்
ஆதவன் தீட்சண்யா
24.08. 2016 ஒசூர்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக