வாசுகி பாஸ்கரின் "மற்றமையை உற்றமையாக்கிட" நூலுக்கு எனது முன்னுரை
முகநூல்
பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை. அவற்றை படித்தாலும்
பாதகமில்லை, அந்தளவுக்கு தொந்தரவற்றவை. ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச்
செய்பவை. குறிப்பிட்ட பிரச்னையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற
கேள்வியை எழுப்பி தொல்லை படுத்தக்கூடியவை. இப்படியும் கூட ஒரு விசயத்தை பார்க்க ஏலுமோ
என வியப்பைத் தருவதாகவோ இப்படி பார்ப்பதற்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற தற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள்
நம்மை வாதிக்கச் செய்பவை. அவரது எழுத்துகளை இவ்வாறாக நான் கவனித்துவரும் இவ்வேளையில்
தான் அவருடைய இந்த கட்டுரைத்தொகுப்புக்கு முன்னுரை எழுத நேர்ந்திருக்கிறது.
சமூகம்
பல்வேறு கருத்தியல் குழுக்களாக பிரிந்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நமது மனவியல்புக்கேற்ப
இவற்றில் ஏதோவொரு குழுவுக்குள் நம்மைப் பொருத்திக்கொள்கிறோம். (இந்த மனவியல்பை கட்டமைப்பதும்
இத்தகைய குழுக்கள்தான்.) திட்டவட்டமான விலகல் எல்லையுடன் இருக்கின்ற இந்தக் குழுக்களை
அவ்வவ்வாறே பேணி பேதமாக வளர்த்தெடுக்காமல், இளக்கி ஒன்றையொன்று தொட்டு ஊடறுத்துச் செல்லக்கூடியவையாக
மாற்றுவது அவசியமாகிறது. மனிதச் சமுதாயம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் எல்லாமே கூடிவாழும்
சுபாவத்தினாலேதான் சாத்தியமாயிற்று. இதற்கு, மற்றமை மீது கரிசனமோ கருணையோ காட்டத்தேவையில்லை,
அதனதன் இருப்பை இயல்பாக ஏற்பதே போதுமானது. ஆனால் இத்தகையதோர் இணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு
இங்கு சாதியம் பெருந்தடையாய் இருப்பதை உணர்ந்தவராயிருக்கிறார் வாசுகி பாஸ்கர்.
மனிதர்களை
முதலில் உயர்வு தாழ்வாக பிரித்த சாதியானது, அந்தப் பிரிவினையை நிரந்தரப்படுத்த நிலம்
நீர் காற்று நெருப்பு, ஆகாயம் என அனைத்தையும் பாரபட்சமாக பிரித்துப் போட்டிருக்கிறது. இந்தப் பிரிவினையைக் காப்பாற்றும் கவசமாக தீட்டு
புனிதம் என்கிற கற்பிதம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. தலித்துகள் தீட்டானவர்கள்,
ஆகவே தலித்துகளின் நிலமும் தீட்டுடையதாகி மதிப்பற்றதாகிறது. அங்குள்ள தண்ணீர் குடிக்கத்தகாதது.
அது நிலத்தடி நீர் மட்டுமல்ல, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வந்தாலும்
தீட்டுதான். அங்குள்ள கோயிலும் தெய்வமும் வணங்கத்தகாதவை. அங்கிருந்து தங்கள் பகுதிக்கு
ஒயர் வருவதாக இருந்தால் கேபிள் டிவி இணைப்பே வேண்டாம் என்பவர்களும் இங்கிருக்கிறார்கள்
என்று மறைந்த திருப்பூர் தோழர் நீலவேந்தன் ஒருமுறை சொன்னது இவ்விடத்தில் நினைவுக்கு
வருகிறது. ஊருக்கும் சேரிக்கும் இயற்கையாகவோ செயற்கையாக உத்தபுரம் 12 அடி உயரச் சுவர்
போலவோ ஓர் இடைவெளி நிலவுவது இந்திய துணைக்கண்டத்தில் எழுதப்படாத ஒரு விதி. கடல்கடந்து
புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கும் மேல்குச்சு கீழ்க்குச்சு என்கிற பாகுபாட்டை வசிப்பிடத்தில்
கடைபிடித்ததை நவீன், கே.பாலமுருகன் போன்ற மலேசியத்தோழர்களும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வசிப்பிடத்திலும்கூட மேல் லயம், பணிய லயம் என்கிற
பாகுபாடு நிலவியதை தோழர்.ந.இரவீந்திரன் உறுதிசெய்கிறார். தலித் நிலம் குறித்த இவ்வளவு
அசூயை தனிமனிதர்களிடத்தில் மட்டுமல்ல, அரசிடமும் இருக்கிறது. அதனாலேயே அது தன் நடவடிக்கைகளை
ஊரோடு முடித்துக்கொள்கிறது. (ஆனால் தலித்துகளுக்குரிய 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை
அபகரித்து வைத்திருப்பதற்கு இந்தத் தீட்டு ஒருபோதும் தடையாக இருந்திருக்கவில்லை).
நிலத்தையும்
நீரையும் போலவே காற்றையும்கூட மாசுபடுத்தும் மூலகமாக தலித்துகள் இருப்பதாக சாதியர்கள்
நம்புகின்றனர். அதனாலேயே சாதியற்றவர்களான தலித்துகளின்
குடியிருப்பிலிருந்து வீசும் காற்று, தங்களது குடியிருப்புகள் மீது பட்டால் தீட்டு
என்று கருதி அதற்கு தோதான திசைகளில் சேரியும் ஊரும் இருக்கும்படியாக இன்றைக்கும் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
ஊர், சேரி ஆகியவற்றின் அமைவிடம் சார்ந்த இந்தப் பாகுபாடு சுடுகாடு / இடுகாடு, அவற்றுக்கான
பாதை என்பவற்றிலும் நீடிக்கிறது. தீட்டுக்குரிய சாதியினரின் பிணத்தை எரிக்கும் போது பரவும் புகை காற்றை மாசுபடுத்தி மற்றவர் மீது படிந்து
தீட்டாக்கிவிடும் என்பதால் அவர்களின் பிணங்களை புதைக்கவேண்டும் என்கிற நியதி உருவானதாம்.
இதற்கு எதிர்மறையான காரணங்களுக்காக- அதாவது எரிக்கும் போது பரவும் புகையினால் தீட்டில்லை
எனக் கருதப்படும்- சில சாதியினரின் புனிதப்பிணங்கள் எரிக்கப்படுகின்றன. உண்மையில் இதன்
வரலாறு வேறு. ஓரிடத்தில் நிலைபெற்று வாழ்ந்துவந்தச் சமூகத்தவர் தங்களில் இறப்பவர்களை
தமது வாழ்விடத்திற்கு அருகிலேயே புதைத்துவைத்துக் கொண்டார்கள். ஈமக்குழிகள், தாழிகள்,
பிரமீடுகள் போன்றவை இதற்குரிய சான்றுகள். ஆனால்
நாடோடிகளாக தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருந்த சமூகத்தவர், தங்களுக்குள் இறந்துபோகிறவர்களை
செல்லுமிடத்திற்கெல்லாம் தூக்கித் திரிய முடியாதென்பதால் ஆங்காங்கே எரிக்கும் வழக்கத்தைக்
கைக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
மனிதகுலத்தின்
ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்பு,
குண்டம் ஹோமம் வேள்வி யாகம் ஜோதி என்பவற்றின்
மூலம் ஒரு சாதியின் கையில் இருக்கும் போது மட்டுமே புனிதம் என்றாக்கப்பட்டுள்ளது. இப்படி
பஞ்சபூதங்கள், ஐந்தெய்வங்கள் என்றெல்லாம் பசப்புவதற்கும், அவற்றை கொண்டாடுவதற்கும்
தூற்றுவதற்கும் சாதியை ஓர் அளவுகோலாக வைத்திருப்பதற்கும் இடையேயுள்ள முரணை வாசுகி பாஸ்கரின்
கட்டுரைகள் பேசுகின்றன. ஒருகாலத்தில் ஊரின் வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட தலித்துகளின்
வாழ்விடம் காலப்போக்கிலான வளர்ச்சியில் ஊரின் மையப்பகுதியாகவோ அல்லது பிறரும் புழங்கவேண்டிய
இடமாகவோ மாறிவிடுவதுமுண்டு. இப்படி விதிவிலக்காக அமைந்துவிடுகிற இடங்களை ஒதுக்கிவைக்கும்
நுண்வழிகளை சாதியம் கண்டுபிடித்துக் கொள்ளும் என்பதை அவர் உணர்த்துகிறார்.
சாதியம்
என்கிற குப்பையின் கிடங்கான இந்து மதத்திலிருந்து வீசும் முடைநாற்றத்தை அதன் தனித்தன்மையான
மணம் குணம் காரம் என்று விதந்துரைக்கும் யோகிகள், குருக்கள் இன்னும் பற்பல ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீக்களின்
மோசடியை சொந்த அனுபவத்திலிருந்து வெளிப்படையாக அம்பலப்படுத்துகிறார். ஆன்மீகம், குருநிலை,
பின்பற்றுகிறவர்களின் உளவியல், வசீகரிப்பதற்கென கைக்கொள்ளப்படும் செயற்கையான மொழி மற்றும்
பாவனை, ஊடகத்துருத்தியால் உப்பவைத்து காட்டப்படும் அவர்களது பிரபல்யம் ஆகியவற்றின்
மீது அவர் எழுப்பும் பல கடுமையான கேள்விகள் உண்மையில் நமக்கானவை. மனிதகுலம் பகுத்தறிவின்
துணைகொண்டு ஒழித்துவரும் மூடநம்பிக்கைகளை அதே பகுத்தறிவின் வழி உருவான நவீன தொழில்நுட்பங்களைக்
கொண்டு மறுவுற்பத்தி செய்கிற இந்த ஹைடெக் பேர்வழிகளின் போலித்தன்மையை அருகிருந்து பார்த்த
அவரது அனுபவம் நமக்கெல்லாம் பாடம்தான். அன்றாட வாழ்க்கை ஏற்படுத்தும் கடும் நெருக்கடிகளுக்கும்
சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக அமைப்புரீதியாகத் திரண்டு போராடவேண்டிய மக்களை
மழுங்கடிப்பதற்கும் விதியே என சகித்துக்கொள்ளப் பழக்குவதற்கும் இந்த மடங்கள் ஆற்றும்
திருப்பணி கடவுளுக்கானதல்ல, கார்ப்பரேட்டுகளுக்கானது. ஆன்மீகப் பேரொளியில் ஐக்கியமாகி அருளுரைகளில் திளைத்திருக்கக்
கிடைத்த வாய்ப்பை வலியத் துறந்திருக்கும் வாசுகி பாஸ்கரின் கட்டுரைகளில் நாத்திகம்
இழைந்திருப்பதற்கான காரணம் இவ்வாறானதாக இருக்கிறது.
ஒடுக்கப்பட்டவரின்
பார்வைக்கு ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களும் அவற்றுக்கு ஆளாகிற தம்மொத்த மக்கள்
திரளும் சட்டென பிடிபடுகின்றன. மாறியபாலினத்தவர் மீது வாசுகி பாஸ்கரின் கவனம் இவ்விதமாகத்தான்
குவிகிறது. மாறியபாலினத்தவர் கடந்த பத்திருபதாண்டுகளில் களத்திலும் கருத்தியல் தளத்திலும்
நடத்திய இடையறாதப் போராட்டடத்தின் பலனாக அவர்கள் குறித்த பொதுப்புத்தியில் வரவேற்கத்தக்க
ஓர் உடைவு சிறிதளவேனும் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் பாலினம் என்று தம்மை சுட்டுபவர்களிடம்,
அப்படியானால் முதல் பாலினம் எது/ யார் என்று முன்பு லிவிங்ஸ்மைல் வித்யா எழுப்பிய கேள்வியானது
அதிகாரம் மற்றும் தரப்படுத்தும் அரசியலை நிலைகுலையச் செய்தது. இந்தப் போராட்டம், குடும்பங்களிலும்
பொதுவெளியிலும் அவர்களுக்கு ஓர் ஏற்பை உருவாக்குவதிலும் சற்றே வெற்றி கண்டுள்ளது. இந்த ஏற்பின் காரணமாக, முன்பு
சாதிமதம் கடந்து ஒரு கூட்டுணர்வால் தம்மை இணைத்துக்கொண்ட மாறிய பாலினத்தவர்கள் இன்று
சாதிய மத பிடிமானங்களை மற்றவர்களைப் போலவே பேணத் தலைப்பட்டுள்ளனர். முன்பேகூட இந்த
பிடிமானங்கள் இருந்தன என்றாலும் இன்று தீவிரமடைகின்றன. இத்தகைய பலவீனங்களுக்கு எதிரான
போராட்டம் சமவுரிமைக்கான போராட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதியே என்பது வாசுகி பாஸ்கரின்
கட்டுரையை வாசிக்கும் தருணத்தில் உறைக்கிறது.
என்னதான் சாதியம் தனது பன்முனைக் கோடாரியால் சமூகத்தை
வெட்டி கூறுபோட்டுக் கொண்டேயிருந்தாலும் அதை மீறி கூடிவாழ்வதற்கும் சகமனிதர்களின் பிரச்னைகளை
புரிந்துகொள்ளவும் அவர்தம் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுக்கவும் பகிர்ந்துகொள்ளவுமான மனித
விழைவு எப்போதும் உயிர்ப்போடு இருப்பதை கண்டறிகிறது வாசுகி பாஸ்கரின் அகக்கண். அதனாலேயே,
இயற்கை அனர்த்தங்களுக்கும் அரசின் வன்போக்குகளுக்கும் ஆளாகிற மனிதர்கள் தங்களுக்குள்
ஓர் ஒத்திசைவை உருவாக்கிக்கொண்டு சூழலை எதிர்கொண்டு கடக்கிறார்கள். இம்மாதிரியான தருணங்களில்
வாழ்வின் வெவ்வேறு மட்டங்களில் உள்ளவர்கள் தத்தமக்குள் உறைநிலையில் இருக்கிற மனிதாயத்தை
உயிர்ப்பித்து தன்னலமற்று வெளிப்படுவதை அவரால் காணமுடிகிறது. தமக்குள் இருக்கும் பேதங்களை
புறஅழுத்தம் காரணமாக மறந்து ஒன்றுபடும் இந்த தற்காலிக உணர்வை ஒரு நிரந்தரவுணர்வாக,
இயல்புணர்வாக மாற்றுவதற்கு நாம் திறந்தமனதோடு நமக்குள்ளும் வெளியிலும் நடத்திடவேண்டிய
தொடர் உரையாடலில் தவிர்க்கமுடியாத ஒரு கண்ணியாக வாசுகி பாஸ்கர் இத்தொகுப்பின் மூலம்
சேர்கிறார்.
தோழமையுடன்,
ஆதவன்
தீட்சண்யா
கொல்லப்பட்டு
ஓராண்டாகியும் நீதி கிட்டாதலையும் அரியலூர் நந்தினியின் முதலாவது நினைவுநாள்
29.12.2017
ஒசூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக