முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவி - கார்ப்பரேட் பயங்கரவாதத்தின் கீழ் கலை இலக்கியம் கருத்துரிமை

காவி - கார்ப்பரேட் பயங்கரவாதத்தின் கீழ்
கலை இலக்கியம் கருத்துரிமை

தேசிய முகாம் - பங்கேற்பிற்கான அழைப்பு - 12018 ஜனவரி 29, பெங்களூரு டவுன் ஹால். பிற்பகல் 2மணிக்குதான் நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது. ஆனால் அதற்கும் முன்பாகவே மக்கள் அரங்கை நிரப்பியிருந்தார்கள். உரிய நேரத்திற்கு வந்தவர்கள் இருக்கைகளின்றி நடைபாதையிலும் ஓரங்களிலும் நெருக்கியடித்து நிற்கத் தொடங்கினார்கள். தளும்பும் உணர்வுகளால் திரண்டிருந்த அவர்களுக்கு இந்த அசௌகரியங்கள் ஒரு பொருட்டல்ல. கவுரி லங்கேஷ் என்கிற கருத்துரிமைப்போராளி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு வருகிற அவரது இந்த முதலாவது பிறந்த நாள் நிகழ்வில் பங்கெடுத்து ‘நானே கவுரி, நாம் ஒவ்வொருவரும் கவுரிஎன்கிற முழக்கத்தில் தம் குரலையும் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக அவர்கள் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்.

டீஸ்டா செடால்வட், ஹெச்.எஸ்.துரைசாமி, கவுரியின் தத்துவார்த்தக் குழந்தைகள் என்று செல்லமாக விளிக்கப்படுகிற ஜிக்னேஷ் மேவானி, கன்னய்யா குமார், ஷீலா ரசீத், உமர் காலித், பிரகாஷ் ராஜ், மருத்துவர் வாசு என்பதான உரையாளர்களின் கலவை இந்திய அரசியல்களத்தின் புதிய நிறக்கோலம் ஒன்றின் முன்மாதிரி போலிருந்தது. அவர்களின் ஒவ்வொரு சொல்லும் நமக்கு பதற்றத்தோடு உணர்த்தியது ஒரே விசயத்தைத்தான்- நாம் முன்னெப்போதுமில்லாத ஓர் அசாதாரணமான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

உண்மைதான், முன்னெப்போதுமில்லாத ஓர் அசாதாரணமான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம் என்று அவர்களைப் போலவே நாட்டின் வெகுமக்களும் கருதுகிறார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று தன்போக்கில் சுதந்திரமாக அவர்களால் நாட்களை கடத்த முடியவில்லை. இயல்பானதொரு வாழ்வுக்காக அவர்கள் தேர்ந்துகொண்ட ஒவ்வோர் அம்சமும் திடீர்திடீரென அமலுக்கு வரும் புதிய சட்டங்களால் குற்றத்தன்மை பொருந்தியதாக மாற்றப்பட்டு வருகிறது. உடுத்துவது, உண்பது, உறங்குவது, தொழில் செய்வது, பொருளீட்டுவது, செலவழிப்பது, சேமிப்பது என்று ஒவ்வொன்றிலும் தலையிட்டுவரும் அரசானது எந்த நேரத்தில் என்னவிதமான குற்றச்சாட்டை சுமத்துமோ என்கிற பதற்றம் பீடிக்காத ஒருவரையும் இங்கு காண்பதரிது. குடிமக்களாகிய தங்களை கொடிய குற்றவாளிகளைப்போல கண்காணிக்கவும் தண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அவர்களது நிம்மதியைக் குலைத்துள்ளது. மக்களுக்காக அரசு என்பதற்கு பதிலாக அரசுக்காக மக்கள் என்று உருவாகியுள்ள இந்த வன்னிலைக்குள் எப்படி பொருந்துவது அல்லது கடப்பது என்கிற யோசனை முதன்மையாகி அவர்களது வேறுவகையான சிந்தனைகளை முடக்கிப் போட்டுள்ளது. தனிமனித வாழ்வு ஆளுங்கட்சியின் தலையீட்டுக்களமாகவும், அரசு அதன் செயற்பொறியாகவும் மாற்றப்பட்டு வருகிறது. அன்னியப் படையால் முற்றுகையிடப்பட்டாற் போன்ற மனநிலையை சொந்த அரசாங்கமே உருவாக்கி நம்மை திணறடிக்கச்செய்வது நியாயமா என்கிற குடிமக்களின் பொருமலை ஒரு கூட்டுக்குரலாக திரட்டுவது இப்போது பேரவசியமாகியுள்ளது.

நமக்காக ஆளும் பொறுப்பை நம்மிடமிருந்து பெற்றுக்கொண்டவர்களால் அவ்வதிகாரம் நமக்கெதிராக பிரயோகிக்கப்படுகிறது. ஜனநாயக வழிப்பட்ட வாழ்முறைக்கு மனிதகுலத்தை உந்திச் செலுத்துவதற்கென நாம் வரலாற்றுப்போக்கில் உருவாக்கிக்கொண்ட சமூக நிறுவனங்களின் மாண்புகளை அவர்கள் சிறுமைப்படுத்தி வருகிறார்கள். நம்பிக்கை என்னும் பொய்யாயுதம் கொண்டு உண்மைகளை தோற்கடிக்கிறார்கள். பன்முகப் பண்பாட்டு விழுமியங்களையும் தனித்துவங்களையும் ஒற்றைத்துவப்படுத்தும் கெடுவழியாக அவர்கள் கைக்கொண்டுள்ள மதத்துவம் சகமனிதர்களை பகைமுகாம்களாக எதிர்நிறுத்துகிறது. இணங்கி வாழும் சாத்தியங்கள் எதுவொன்றையும் மிச்சம் வைக்காமல் அழித்தொழிக்கும் அவர்களது வன்மம் மிருகங்களிடமும்கூட காணவியலாதது. இதுகுறித்த விமர்சனங்களை முன்வைத்ததற்காக அவர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, கவுரி லங்கேஷ் போன்ற கருத்தியல் செயற்பாட்டாளர்களை மட்டுமல்ல, அக்லக் போன்ற சாமானியர்களின் உயிரையும் அன்றாடம் காவு வாங்கிவருகிறார்கள். மக்களின் உயிர் வாழும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் அரசின் அதாவது ஆளுங்கட்சியின் கருணையின்பாற்பட்டது என்கிற இப்போதைய நிலைமையை அதன் முழுப்பொருளில் சமூகம் உணர வேண்டிய தருணமிது. அதை உணர்த்தும் பொறுப்பு தனிப்பட்ட எவரது தோள்மீதும் சுமத்தப்படவில்லை. அதனாலேயே தங்களுக்கு எந்த பொறுப்புமில்லை என்று தட்டிக்கழிக்க எவருக்கும் உரிமையில்லை.

சமூக அசைவியக்கத்தை ஊன்றிப் பயில்கிற, அதை தமது சொந்த வழியிலும் மொழியிலும் சமரசமின்றி வெளிப்படுத்துகிற கலைஇலக்கியவாதிகளும் கருத்துரிமைப் போராளிகளும் இப்போது கடுமையான உளவியல் முற்றுகைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமது சொந்தக்கண்களால் உலகைக் காணமுடியாதபடி அவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். எந்த வம்புதும்பிலும் சிக்கிக்கொள்ளாமல், எஞ்சிய காலத்தை எப்படியாவது ஓட்டிவிட்டுப் போனால் போதுமானது என்கிற தன்னிரக்கத்தினாலும் பிழைப்பாசையினாலும் அவர்கள் தம்மைத்தாமே முடக்கிக் கொள்கிற அல்லது சுயதணிக்கை செய்துகொள்கிற நிலைக்குச் சென்றுவிட வேண்டும் என ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது கப்சிப் தர்பாரில் மூச்சுவிடும் சத்தம்கூட கொல்லப்படுமளவுக்கான  குற்றம்தான். ஆனால் மூச்சு விடாவிட்டால் அவர்களால் கொல்லப்படுவதற்கு முன்னமே பிணங்களாகிவிடுவோமல்லவா? நாம் எப்படி சாகப்போகிறோம் என்பதும்கூட நமது வாழ்வுரிமைகளில் தலையாயதுதான்.

கருத்துகள் உள்வாங்கப்படுவதும் வெளிப்படுவதும் சுவாசம் போல இயல்பானதாக சுதந்திரமானதாக உயிர்த்திருப்பதன் ஆதாரமாக இருக்கவேண்டும் என்று நம்புகிறவர்கள் தம்மை ஒரு சக்தியாய் திரட்டிக்கொள்ள வேண்டிய காலமிது. மார்ச் இறுதியில் நடத்த உத்தேசித்துள்ள தேசிய முகாம் அதன் பொருட்டானதே. இடமும் தேதியும் இறுதிப்படுத்தப்பட்டதும் அறிவிக்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் forum.fef2018@gmail.com என்கிற மின்னஞ்சலில் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

சூழலை விளங்கிக்கொள்ளவும், விவாதங்களை செறிவுடன் நடத்தவும் தோதாக பின்வரும் பட்டியலில் சிலவற்றையேனும் படித்துவிட்டு வருவது நலம் பயக்கும்.

1.      The Origins of Totalitarianism - Hannah Arendt
2.       Fascists - Michael Mann
3.      A History of Fascism, 1914–1945. - Stanley G. Payne
4.      Fascism – M.N. Roy
5.      Manifesto of the Fascist Intellectuals - Giovanni Gentile
6.      Manifesto of the Anti-Fascist Intellectuals - Benedetto Croce
7.      Fascism in India : Debating RSS - BJP Politics – Dr. Ram Puniyani  
8.      Buffalo Nationalism: A Critique of  Spiritual Fascism - Kancha Ilaiah

குறிப்பு: முகாமின் செலவுகளை ஈடுகட்ட எவரிடமும் நன்கொடையோ நிதியுதவியோ பெறப்படவில்லை. பங்கேற்பாளர்களே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற ஏற்பாட்டுக்குழுவின் முடிவை ஏற்பீர்களென நம்புகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மே 6 நீட் தேர்வை நிறுத்து - ஆதவன் தீட்சண்யா

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளாவின் எர்ணாகுளம், ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் உதய்பூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருப்பதாக ஏப்ரல் 18ஆம் தேதி  சிபிஎஸ்இ அறிவித்தது. நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டிருந்த விவரக்குறிப்பின் அத்தியாயம் 2 விதி 4(சி)ல் குறிப்பிடப்பட்டிருந்த வழிமுறைகளுக்கு புறம்பாக தொலைதூர தேர்வு மையங்களை ஒதுக்கியதானது, மாணவர்களை அலைக்கழிப்பதாகவும் மனநிலையை சிதைப்பதாகவும் அவர்களது நிதிச்சுமையை கூட்டுவதாகவும் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வுமையம் ஒதுக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் பொதுநல வழக்கொன்றை தொடுத்திருந்தார்.    
இவ்வழக்கை கடந்த 27.04.18 அன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்களை ஒதுக்கவேண்டும் என்ற தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது, சம்பந்தப்பட்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கடும் அலைச்சல் மற்றும் செலவினத்திலிருந்து தப்பிக்கவைத்து ந…

பீமா கோரேகான் - வரலாறும் நடப்பும் - ஆதவன் தீட்சண்யா

சத்ரபதி சிவாஜியும் அவரது வழிவந்த போன்ஸ்லே மன்னர்களும் தமது மராட்டிய அரசின் தலைமை அமைச்சர்களாக (பேஷ்வாக்களாக) முதலில் தேஷாஷ்ட பார்ப்பனர்களையும், பிறகு சித்பவன பார்ப்பனர்களையும் பணியமர்த்தினர். நாளடைவில் இந்த பேஷ்வாக்கள், போன்ஸ்லேக்களை பெயரளவில் ஒப்புக்கு மன்னர்களாக வைத்துக்கொண்டு ஆட்சியதிகாரத்தை தம் பொறுப்பில் முழுமையாக எடுத்துக்கொண்டனர். முதலாம் பாஜிராவ் என்கிற சித்பவன பார்ப்பனர்பேஷ்வாவாக இருந்த காலத்தில் புனே நகரத்தில் ‘ஷனிவார்வாடா’ என்கிற அரண்மனையைக் கட்டி அங்கிருந்து (சனிக்கிழமை அடிக்கல் நாட்டி மற்றொரு சனிக்கிழமையன்று திறக்கப்பட்டது) ஆட்சி நடத்தினார். இவர் கொங்கன் பகுதியில் ஜோதிடம், புரோகிதம் ஆகியவற்றை பரம்பரைத் தொழிலாக செய்துவந்த தமது சாதியினர் ஆயிரக்கணக்கானவர்களை சனிவார்வாடாவிற்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவரும் இவருக்கு அடுத்து வந்தவர்களும் நிர்வாகம், நீதி, சட்ட அமலாக்கம், ராணுவம் போன்றவற்றின் தலைமைப்பொறுப்புகள் அனைத்தையும் இந்த பேஷ்வாக்கள் தமது சித்பவனப் பார்ப்பனச் சாதியினரைக் கொண்டே நிரப்பினர். (இந்த சித்பவனப் பார்ப்பனச் சாதியிலிருந்து பின்னாளில் வந்த சாவர்க்கர், ஹெட்கேவார…

அம்பேத்கரின் வெளிச்சத்துக்கு வராத பணிகள் - ஆதவன் தீட்சண்யா

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு அம்பேத்கரின், அம்பேத்கரியத்தின் பங்களிப்பு என்ன?
சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்கு தரும் முதற்பெரும் செய்தியாக இருக்கிறது. தனித்த திறமைகளையும் கல்வியறிவையும் சுயநலத்திற்காக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடவும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்காக சிந்திக்கவும் அர்ப்பணிப்பது என்பது இதேயளவுக்கு போற்றத்தக்க மற்றுமொரு செய்தி.
கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், தத்துவவாதியாகவும், வரலாற்றாளராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், தொழிலாளர்- பாசனம்- மின்சாரத்துறை அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் அவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் நேரடியாகத் தொடர்புடையவை. வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை அவர் எழுப்பிய கோரிக்கையே. நிர்வாகத்துறையை ஜனநாயகப்படுத்த அவர் பட்டியல் சாதியினருக்கு கோரிய பிரதிநிதித்துவம் தான் அரசியல் சாசனத்தின் மூலம…