மணல்வீடு இலக்கிய வட்டம் 24.04.2014 அன்று சேலத்தில் நடத்திய விமர்சன அரங்கில் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை
1970 ஆம் வருடத்திய இலங்கை நாடாளுமன்ற
பொதுத்தேர்தலில் தமிழரசு மற்றும் தமிழ்க் காங்கிரஸ்
கட்சிகள் படுதோல்வியடைந்தன.
உயர் கல்வியில் பின்தங்கிய பிரதேசத்தவருக்கு
போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதன் பெயரால் இலங்கை அரசு ‘தரப்படுத்துதல்’ திட்டத்தை
கொண்டுவந்தது. இலங்கை ஆட்சியாளர்களின் நோக்கம் எதுவாக இருப்பினும், சமூக நீதியை நோக்கி
எடுத்து வைக்கப்பட்ட ஒரு முதலடி இது. அதேவேளையில் வரலாற்றுரீதியாக, குறிப்பாக பிரிட்டிஷார்
காலத்திலிருந்தே பிற சாதியினரை ஒடுக்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூடுதல் பிரதிநிதித்துவம்
பெற்று வந்திருக்கிற யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடியினரது ஏகபோகத்தை பாதிப்பதாகவும்
அமைந்தது. அவர்கள் தமக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பை ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான பாதிப்பதாக
முன்னிறுத்தினர். பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு பிறபகுதி மாணவர்களை விட தாங்கள் கூடுதல்
கட் ஆப் மதிப்பெண் பெற வேண்டிய நிலையை உருவாக்கியுள்ள தரப்படுத்துதலை எதிர்த்த மாணவர்
போராட்டம் அங்கு தீவிரமடைந்தது. இது, இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்தியாவில் உயர் சாதியினர்
இன்றளவும் நடத்திவரும் போராட்டத்தோடு பெரிதும் ஒத்துப்போகும் தன்மைகொண்டது.
1976 மே 15ம் தேதி தமிழர் ஐக்கிய முன்னணியின்
மாநாடு வட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூளை என்று முன்பு வர்ணிக்கப்பட்டவரும்
1960களின் பிற்பகுதியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தை தொடங்கி
நடத்தியவருமான வி.நவரத்தினம் என்பவரால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்கிற
கருத்தாக்கம் உள்வாங்கப் பட்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தமிழர் ஐக்கிய முன்னணியின்
சார்பில் 1974 செப்டம்பர் 1ம் நாள் காமன்வெல்த் பாராளுமன்றவாதிகளுக்கு அனுப்பப்பட்ட
மனுவிலேயே இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான தொடக்கநிலைக் கூறுகளை காண முடிந்தது.
ஆட்சிமொழியாக சிங்களத்தை மட்டுமே ஆக்கியது,
நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணக்கையை குறைத்தது, தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில்
சிங்களவர்களை குடியமர்த்தியது, உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்துவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள்-
ஒன்பது பேரின் உயிரிழப்புகள், அவ்வப்போது நடத்தப்பட்டு வந்த இனக்கலவரங்கள் என இலங்கை
ஆட்சியாளர்களிடையே சிங்கள பேரினவாதம் திரண்டுவந்தது. அது ஓர் இனம் என்ற வகையில் தமிழர்களுக்குரிய
பல்வேறு ஜனநாயக உரிமைகளையும் பண்பாட்டு தனித்துவத்தையும் ஏற்க மறுத்தது. இந்த நிலைமைகளும்,
தரப்படுத்துதலுக்கு எதிரான வெள்ளாள மேட்டுக்குடியின் கொந்தளிப்பான குமைச்சலும்
1977 ஆம் வருடத்திய பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அமோக வெற்றியைத்
தந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரிகளின் வளர்ச்சியை
மட்டுப்படுத்தும் கிடக்கையும் இதிலடங்கும். இவ்வெற்றியானது தனிஈழத்திற்கான வட்டுக்கோட்டைத்
தீர்மானத்திற்கு கிடைத்த ஒப்புதலாக முன்னிறுத்தப்பட்டது. தமிழர்கள் நாட்டைத் துண்டாடப்
பார்க்கிறார்கள் என்று ஏற்கனவே சிங்களவர்களிடம் முளைவிட்டிருந்த பிரச்சாரம் ஒரு வெறியாக
கிளப்பிடப்பட்டது. அவர்களது வெறிக்கு எளிய இலக்காக முதலில் சிக்கியவர்கள் மலையகத்தவர்களான
இந்திய வம்சாவளித் தமிழர்கள்.
யாழ்ப்பாணத்தவர்கள் கேட்கும் தனி ஈழம்
இந்த இந்திய வம்சாவளித் தமிழர்களையும் உள்ளடக்கியதில்லை. ஆனாலும் சிங்களவர்கள் மலையகத்
தமிழர்கள் மீது கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். தமிழீழத்திற்கான ஆயுதம்
தாங்கிய குழுக்களுக்கும் ராணுவத்துக்கும்/ சிங்களவர்களுக்கும் இடையே எங்கு கலவரம் மூண்டாலும்
அதற்கான தண்டனையை இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கு சிங்களவர்கள் வழங்கினர். அவர்களது
வன்முறைக்கு காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் துணை நின்றது. பிறந்த வளர்ந்து பாடுபட்டு
உருவாக்கிய மலையகத்திலிருந்து வேறெங்காவது தப்பியோடினால் தான் குறைந்தபட்சம் உயிரையாவது
தற்காத்துக்கொள்ள முடியும் என்கிற உளவியல் முற்றுகைக்கு இந்த மலையகத் தமிழர்கள் ஆட்பட்டனர்.
எனவே அவர்களில் சிலர் மலையகத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இடம்பெயரத் தொடங்குகிறார்கள்.
ஆதிரை நாவல் மிகச் சரியாக இந்த இடத்தில் தொடங்குகிறது. ஆனால் அது தனி ஈழக் கோரிக்கை
உருவான இந்த வரலாற்றுப் பின்புலத்திற்குள் நுழையாமல் ( நுழைய வேண்டிய தேவையை இந்த நாவலின்
அமைப்பு கோரவுமில்லை) அதற்கான ஆயுதப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்கள், அவை நடந்த விதம்,
போரினூடாக மக்களது பாடுகள், ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை அரசால்
அறிவிக்கப்பட்ட பிறகு மக்களினதும் போராளிகளினதும் நிலை என்பது வரையாக நீண்டு முடிகிறது.
‘ஒண்டரை லட்சம் சனங்களையும் நாற்பதாயிதரம்
பொடியன்களையும்’ கொன்று தனிஈழத்திற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை இலங்கை அரசாங்கம்
முடிவுக்கு கொண்டு வந்தது. வெறும் எண்களாக சுருக்கிச் சொல்லப்படும் இந்த மக்களை எவ்விதமான
துன்பதுயரங்களுக்கு ஆட்படுத்தி இலங்கை அரசாங்கம் கொன்றொழித்தது என்பதை கொல்லப்பட்டவர்களின்
சார்பான நிலையிலிருந்து சொல்கிறது ஆதிரை. ஒதியமலையில் ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களில்
ஒருவரான நடராசனின் பிணத்தை பார்ப்பதிலிருந்து லெட்சுமணனை தடுத்துவிட முதலில் நினைக்கிற
அத்தார் பிறகு வெறியும் வன்மமும் மேவ ‘அவன்
பார்க்க வேணும். இந்தக் கோலத்தை அவன் காண வேணும். தமிழன் எண்ட பெயரைத் துரத்தி வருகிற
அழிவையும் பேயாட்டதையும் அவன் அறிய வேணும்...’ என்று பார்க்கவிடுகிறான். இந்த நாவலின்
முதன்மை நோக்கமும் கூட அதுதான். நடராசனின் பிணத்தை பார்க்கச் செய்வதனால் லெட்சுமணனிடம்
எதிர்பார்க்கப்படும் மனமாற்றத்தை தனது வாசகர்களிடமும் எதிர்பார்க்கிறது நாவல். அதற்காகவே
அது ஒவ்வொரு தனிச்சாவுகளையும் கூட்டுக்கொலைகளையும் கொப்பளிக்கும் ரத்தத்தின் சூட்டோடும்
தெறித்த சதைத்துண்டத்தின் பிசுபிசுப்போடும் நமக்கு காட்டத் துடிக்கிறது.
தனி ஈழக் கோரிக்கை, அதற்கான ஆயுதம் தாங்கியப்
போராட்டம், போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்கள், குழுக்களுக்கிடையே பகை,
குழுக்களுக்குள்ளேயே நிலவிய கருத்து மாறுபாடுகள், விசுவாசிகள், துரோகிகள், பிற போராளிக்குழுக்கள்
பலவற்றையும் அழித்து விடுதலைப்புலிகள் ஏகத்துவம் பெறுதல், புலிகளின் குணநலன்கள், ஆயுதபலம்,
சாகசங்கள், தியாகங்கள், புலிகள் நடத்திய தனி அரசாங்கத்தின் கீழ் மக்களது அன்றாட வாழ்க்கை,
பேச்சுவார்த்தைகள், சமாதான உடன்படிக்கைகள், உடன்படிக்கை என்று சொல்லிக்கொண்டே நடந்த
மோதல்களும் மீறல்களும், இந்தப் போராட்டத்தையும் போராளிக்குழுக்களையும் குறித்து சமூகத்தின்
வெவ்வேறு நிலைகளில் இருந்த வெகுமக்களின் கருத்து ஆகியவற்றை வகைமாதிரியான கதாபாத்திரங்கள்
மற்றும் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளின் வழியே நாவல் முன்வைக்கிறது.
தன் இருப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும்
சாதியம், பின்தங்கியப் பகுதியான வன்னிக்கு இடம் பெயர்ந்த நிலையைக்கூட குறைந்த கட் அப்
மதிப்பெண்ணில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முனையும்
யாழ்ப்பாண வெள்ளாளத்துவ மனம், இயக்கத்தில்
சேர்ந்துவிடும் முன்பாக அல்லது இயக்கத்தவரால் பிடித்துச் செல்லப்படுவதற்கு முன்பாக
மொத்தச் சொத்தையும் அழித்தாவது தன் பிள்ளைகளை
வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வைக்கும் மேட்டுக்குடியினரின் தந்திரம், கட்டாய
ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவிப்பதற்காக செய்விக்கப்படும் இளம் வயது திருமணங்கள், பொய்க்
கல்யாணம் செய்வித்து காட்டப்படும் போலி ஜோடிகள், பொய்க்கல்யாணம்தான் என்றாலும் அவனோடு
படுத்திருக்க மாட்டாளா என்று பெண்ணை சந்தேகிக்கும் ஆண்வீட்டார், முஸ்லிம்களுடன் ஏற்பட்ட
திருகல் நிலை- கட்டாய வெளியேற்றம், மலையகத் தமிழர்கள் குறித்த கீழான பார்வை - இப்படியாக போர்ச்சூழலிலும் வெளிப்படும் மனித இழிவுகளை கவனத்தோடு
பதிவு செய்கிறது ஆதிரை. அதேவேளையில் இவ்வளவு ஏறுமாறுகளுக்கும் இடையில் சனங்கள் ஒன்றையொன்று
அனுசரித்து உயிர்வாழப் பதைக்கும் மனோநிலை வெளிப்படும் தருணங்களையும் கவனப்படுத்துகிறது. தாக்குதலில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட அவகாசம்
அற்றவர்களாக ஓடிய அவர்கள் ஒருகட்டத்தில் காயமடைந்தவர்களையும்கூட அப்படியே விட்டுவிட்டு
ஓடும் அவலநிலைக்கு ஆளாவது குறித்த உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பிணங்களைத் கைவிடத் தொடங்கியவர்கள்
கடைசியில் மனிதர்களையும் கைவிட்டு அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடு
என்கிற நிலைக்கு ஆளான போதும் தாங்கள் வளர்த்த ஆடுமாடுகள், கோழிகள், மரம் செடிகொடிகள்,
குலதெய்வம் என்று எதுவொன்றைப் பற்றிய கவலையையும் அக்கறையையும் அவர்கள் வெளிப்படுத்திக்
கொண்டேயிருக்கிறார்கள். 2009 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்கையில் நெடுஞ்சாலையின் மருங்குகளில் ஆயிரக்கணக்கான மாடுகள்
அநாதையாய் திரிந்ததைக் கண்ட போது எனக்கேற்பட்ட துக்கம் சொல்லி மாளாதது. இடம் பெயர்ந்து
ஓடும் பதைப்பிலும் பெண்ணொருத்தி ‘விதியிருந்தால் மறுபடியும் சந்திப்போம்’ என்று தான்
ஆசையாய் வளர்த்த மாடுகளை அவிழ்த்து காட்டுக்குள் ஓட்டிவிடும் துயரத்தை என்னவென்ற சொல்வது?
தனக்கொரு குழந்தையில்லையே என்று காலம் முழுவதும் தீராக்கவலையில் உருகிக்கிடந்த சந்திரா,
போரினால் குழந்தைகளுக்கு நேரும் இன்னல்களையும் உளவியல் சிதைவுகளையும் காணப் பொறுக்காமல்
‘என்ர வயித்தில் உயிரொண்டும் சனிக்காதிருந்ததுக்கு
நன்றியப்பா..’ என்று சொல்லும் நிலையைத்தான் போர் உருவாக்கியதா என்கிற கேள்வியையும்
நாவல் எழுப்பிப் போகிறது.
கைக்கு சிக்கிய தமிழ் இளைஞர்களை பிடித்துவந்து
சித்ரவதை செய்கிற ராணுவத்தினர் கடைசியில் புலிச்சீருடையை அணிவித்து சுட்டுக்கொல்வது
( வீரப்பனைப் பிடிப்பதாக காட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இப்படி பழங்குடி இளைஞர்களை
தேவாரம் சுட்டுகொன்றதை சோளகர் தொட்டியில் காணலாம்), இசை நிலா ஒளிநிலா என்று பெயர் வைத்திருப்பதைக்கூட
உன்னிப்பாக கவனித்து ஒரு ராணுவத்தான் கேள்வியெழுப்பும் போது பெயரை மாற்றி விடுகிறோம்
என்று பதைப்போடு தாய் சொல்வது, வீட்டில் தனக்கு வைத்த பெயரே தூயவன் தான், ஆனால் ஆமிக்காரன்
நம்பமறுக்கிறான் என்று ஒருவன் பகடியாக சொல்வது, யாருடைய காயத்திலிருந்தோ பெயர்ந்து
விழுந்திருந்த ரத்தம் தோய்ந்த பஞ்சை எடுத்து வெடியோசை கேட்காமலிருக்க குழந்தையின் காதில்
அடைப்பது என்று சிறுசிறு காட்சிகள் வழியே நிலைமையின் தீவிரத்தை நம்மால் உணரமுடிகிறது.
நடராசனின் பிணத்தை மூன்றாம் மனிதனாக
ஓடிப்போய் பார்க்கிறவன், இந்திய அமைதிப் படையினரால் (?) கொல்லப்பட்ட சிங்கமலையின் பிணத்தை
அவரது மகனென்ற முறையில் பார்க்கிறவன், தாய்தகப்பன் போல காத்துவளர்த்த சந்திரா-அத்தார்
தம்பதியரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிப் போய் இயக்கத்தில் சேர்ந்துவிட்டவன், இறுதியில்
ராணுவத்திடம் பிடிபட்டு விசாரணைக்கூடத்தில் சித்ரவதைக்கு ஆட்பட்ட போதும் தனக்கொன்றும் தெரியாது என்று சாதிக்கிறவன் என வெவ்வேறு
நிலைகளில் காட்டப்படும் லெட்சுமணன்- குறிப்பிட்ட காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் உளவியலில்
ஏற்பட்டு வந்த மாற்றங்களின் குறியீடாக தெரிகிறான். அதாவது ஆயுதம் தாங்கிய இரு தரப்பாருக்கு
இடையிலானதாக போரில் பாவம் இந்த ஆள் மாட்டிக்கொண்டாரே என்று விலகியிருந்து பரிதாபப்படுவது,
போரினால் தானே பாதிக்கப்படும் பொழுது ஆவேசம் கொள்வது, பரிதாபம் அல்லது கோபத்தை விடவும்
நேரடியாக தானே களமிறங்குவது, அதற்கான விளைவைச் சந்திப்பது என்கிற நிலைகளை அங்கு தமிழ்ச்சமூகம்
எட்டியதன் குறியீடு. ( ‘தோட்டக்காட்டானுக்கு முல்லைத்தீவில் என்ன வேலை?’ என்கிற கேள்விக்கும்,
போரின் முடிவில் ராணுவத்திடம் பிடிபட்டவர்களில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்களும்
இடம் பெற்றது எங்ஙனம் என்பதற்கும் இவனது குடும்பத்தின் வழியாக விடை கிடைக்கிறது.)
அமைதிப்படை என்கிற பெயரில் இந்திய ராணுவம்
நிகழ்த்திய அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் யாவும் நம்மை அவமானத்தில்
ஆழ்த்துகின்றன. கன்டோன்மெண்ட் என்கிற பெயரிலான ராணுவ முகாமிடங்களில் ஒவ்வொரு ஆயிரம்
பேருக்கும் 10 முதல் 15 பாலியல் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக நியமித்து வல்லுறவு கொள்வதை
வழக்கமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தின் எச்சில்பால் குடித்து வளர்ந்த இந்திய
ராணுவம் இத்தகைய மனிதப்பண்பற்ற செயல்களை பிதுரார்ஜிதமாக பெற்றிருக்கிறது. நானும் இந்தியன்
தான் என்று கதறுகிற எத்தனையோ சிங்கமலைகளை அது கொன்றிருக்கிறது. ‘பெத்தத் தாயைக் கெடுக்கச்
சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்... இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி
தீர்ப்பாளடா’ என்று சபித்தவாறே இடதுமார்பில் கத்தியை பாய்த்துக் கொண்டு செத்துப்போன
எத்தனையோ தாய்மார்களின் பிணங்களை பதக்கங்களாக குத்திக் கொண்டிருக்கிற பலர் அதில் இருக்கிறார்கள்.
ஆயுதக்குழுக்களை தனிமைப்படுத்துவதற்காக
வெகுமக்கள் மீது ராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட கண்காணிப்புகளும் சித்ரவதைகளும்
மனிதகுலம் இதுவரை காணாத கொடூரங்களின் பூமியாக தமிழர் நிலத்தை மாற்றிவிட்டது. போரின்
முடிவில் பிடிபட்ட போராளிகளை இலங்கை அரசும் ராணுவமும் நடத்திய விதம் சர்வதேச கண்டனங்களைப்
பெறுமளவுக்கு கீழ்த்தரமானவை, மனிதவிரோதமானவை. போருக்குப் பிந்தைய புனர்வாழ்வில் பங்கெடுப்பதாக
சொல்லிக் கொண்டு வந்துள்ள தன்னார்வ அமைப்புகள், தனவந்தர்கள், கனவான்கள் ஆகியோரது செயல்பாடுகள்
மேனாமினுக்கித்தனமானவை என்பதையும் யாருக்காக போராடினார்களோ அவர்கள் முன்னாள் போராளிகளை
நடத்தும் விதம் குறித்த விமர்சனங்கள் நாவலுக்குள் பொருந்தி நிற்கும் வண்ணம் முன்வைக்கப்படுகிறது.
முன்னாள் போராளி என்பதாலேயே வெள்ளையனை காவலாளி
வேலையில் வைத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணத்தவர் மறுத்துவிடுவதும், கடைசியில் அவன் புதைக்கப்பட்ட
மிதிவெடிகளை தோண்டியெடுத்து செயலிழக்கச் செய்யும் வேலையில் ஒரு என்.ஜி.ஓவிடம் சேர்வதும், முன்னாள் போராளிகளின் கைவிடப்பட்ட நிலையைக் காட்டுவதற்கு
போதுமானதாயிருக்கிறது.
தான் பிறந்த சிற்றூரைத் தவிர வேறு திசைகளை
அறியாத மக்களின் வாழ்வையும் சாவையும் எங்கோ இருக்கிற அமெரிக்காவும் பிரிட்டனும் சீனாவும்
இந்தியாவும் தீர்மானிக்கும் படியாய் விட்டுவிட்டு
இயக்கத்தலைமை முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டது. கடைசி நேரத்தில்
கட்டாய ஆள் சேர்ப்பு, குழந்தைகளைக் கூட பிடித்துப் போய் ஆயுதம் தரிக்க வைத்தது, ராணுவத்திடம்
பிடிபடும் தருவாயில்கூட வெகுமக்களை விடுவிக்காமல் ஆயுதமுனையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது
ஆகியவற்றின் மூலம் இவ்வளவு கூடிய உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும் இயக்கமும்கூட
காரணமாக இருந்துவிட்டது என்று இதற்கு முன்பாக சிலர் முன்வைத்த விமர்சனங்களை இந்த நாவலும்
வழிமொழிகிறது. ‘காய்ந்த கட்டாந்தரைக்கு தண்ணீர் பாய்ச்சியது’ போலாகிவிட்டதோ என்கிற
கேள்வியை எழுப்பிக் கொண்டே, இத்தனைக்குப் பிறகும் இயக்கத்தை ஆதரிப்பதற்குரிய நியாயங்கள்
தனக்கிருப்பதாக நாவலுக்குள்ளிருந்து சயந்தன் வாதிடுகிறார். இயக்கத்தின் பிழைகளை போராளிகளின்
தியாகங்களையும் வெகுமக்களின் துயரங்களையும் காட்டி நேர்செய்வதற்கான முயற்சியோ என்று
எண்ணும் வகையிலும் சில வாதங்களை இந்நாவல் முன்வைக்கிறது. நாவலில் ஓரிடத்தில் வருவது
போல வரலாறென்பது யார் சொல்கிறாரோ அவரது நோக்கங்களையும் உலகக் கண்ணோட்டத்தையும் சார்ந்ததுதானே.
வரலாற மட்டுமல்ல எதுவொன்றும் அவரவர் மனச்சாய்வுகளக்கு இயைந்தே எழுதவும் வாசிக்கவும்
படுகிறது.
***
ஓரிடத்திலும் நிலைகொண்டு தலைசாய்க்கவொட்டாமல்
துரத்தும் சாவுக்கு அஞ்சி ஓடிச் சலித்த மக்கள் இயலாமையின் முற்றிய கட்டத்தில் செத்தொழிந்தால்கூட
பரவாயில்லை என்கிற மனநிலையை எய்திய போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
உயிரோடிக்கிறோம் என்பதைத் தவிர வாழ்வதற்கு வேறு ஆதாரங்களே இன்றி கைவிடப்பட்ட அம்மக்கள்
சோதிமலர் சொல்வது போல ‘எங்கட வாழ்க்கையை நாங்கள்தான் உருவாக்க வேணும்’ என்று நிற்கிறார்கள்.
வளர்பிறையின் ஜொலிக்கும் நட்சத்திரத்தின் குறியீடாக ஆதிரை என்று பெயர் சூட்டப்பட்டாலும்
அந்தப் பாத்திரம் திடுமென வந்து தலைப்பாக மாறிவிட்டதேயொழிய அதற்குரிய ஆளுமையோடு வளராமல்
முடிந்துவிட்டது. அல்லது தலைப்பிடப்படுமளவுக்கு ஆதிரை பற்றி எழுதப்படவில்லை. ஒருவேளை
நாவலில் இடம் பெற்றுள்ள எல்லா பெண்களின் கூட்டுப்பெயராக அது உருவகித்துக் கொள்ளப்பட
வேண்டுமாயிருப்பின் அதற்குரிய அழுத்தத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
***
ஈழத்திற்குள்ளேயே இவ்வளவு காலமும் இருந்து
எல்லாவிதத் துயரங்களையும் தாங்கிக் கழித்த மக்களுக்கு இந்த நாவலை வாசிப்பதற்கான மனநிலை
வாய்க்குமா? தாங்கள் கடந்துவந்த துயரங்களை மீண்டும் நினைவூட்டுதானது தங்கள் மீது அவை
மறுபடியும் நிகழ்த்தப்படுவதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் கருதக்கூடும். ஆனால் புலம்
பெயர்ந்து போய் போரின் கொடுமையிலிருந்து ஓரளவேனும் தப்பித்துவிட்டவர்கள், ‘வேறு கண்ணீர்
தேடும்’ ஊடகக்காரர்கள், போரின் துயரங்களை கச்சாப்பொருளாகக் கொண்டு கதை எழுதக் கிளம்பியவர்கள்
அல்லது கருத்தரங்குகளில் கொட்டி முழக்கி கண்ணீரையும் கைத்தட்டலையும் பெறக்கூடியவர்கள்,
தெருச்சண்டையில் பங்கெடுத்த அனுபவம் கூட இல்லாவிடினும் தேசிய விடுதலைப் போரை நடத்தப்போவதாக
சவடாலடிக்கிற தமிழகத்தவர்கள் போன்றோருக்கு இந்த நாவல் மிகுந்த உவப்பைத் தரலாம். ஒருவேளை இவர்களை கருத்தில் கொண்டே இந்த நாவல் விரித்து
விரித்து இவ்வளவு பெரிதாக எழுதப்பட்டிருக்கிறதா?
திகுதிகுவெனக் கொதிக்கும் வெக்கையொடு
சொல்வதற்குண்டான இக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்தி அலுப்பூட்டக்கூடியவையாக சயந்தனின்
வர்ணனைகளும் விவரிப்புகளும் உள்ளன. கதையின் மையப்பொருளுக்கு தேவைப்படுகின்ற விவரங்களுக்குப்
பதிலாக தேவையற்ற விவரங்கள் பத்திபத்தியாக தகவல் குவிப்பாக நிரம்பிக் கிடக்கின்றன. படிக்காமலே
புரட்டி கடந்துவிடலாமா என்றும்கூட சில இடங்களில் தோன்றியது. துயரம் மிகுந்த காட்சிகளை
சுரீரென விரித்துச் செல்ல ‘கிராமத்தை இழுத்து கடலின் அடியில் அமிழ்த்தியதைப் போல’,
‘றப்பர் போல நிலம் அதிர்ந்து தணிந்தது’, ‘காலொடிந்த இரவு..’ என்றெல்லாம் எழுதமுடிந்த
சயந்தன், ஒடுங்கும் சுபாவமுள்ள, பெண் சகவாசத்தை அறிந்தேயிராதவனாக காட்டும் லெட்சுமணன்
‘காமத்தின் உச்சத்தை தொட்டதைப் போல’ என்று கூறுவதாக எழுதுகிறார். இப்படியான பொருத்தமற்ற
பல ஒப்பீடுகள் நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கின்றன. ஊளைச்சதையை கழித்து உடம்பைக்
கண்டுபிடிப்பது போன்று தான் இந்த தடித்தப் புத்தகத்திலிருந்து உள்ளிழைந்து நிற்கும்
கதையை நாம் வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை இந்த பாதிப்பு, நாவலென்றால்
தடிமனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ‘தமிழினி மேனியாவால்’ ஏற்பட்டிருக்குமாயின் அதிலிருந்து
சயந்தன் விடுபட வேண்டுமென்பது எனது விருப்பம்.
ஆறாவடுவை எழுதிய சயந்தனுக்கு அது சாத்தியம்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக