புதன், மே 11

பறக்கும் படைக்கு றெக்கையில்லை - ஆதவன் தீட்சண்யா

திங்கட்கிழமை (9.5.16) புதுச்சேரி சென்றிருந்தேன். காலை எட்டுமணிவாக்கில் திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூரில் சாலையோரம் நின்றிருந்த தேர்தல் பறக்கும்படை ஊழியர்கள் எங்களது வாகனத்தை நிறுத்தினர். தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் ஓரிருவரையும், தமிழ்நாட்டவர் அல்லாத ராணுவஆட்கள் சிலரையும் கொண்டது அப்படை. ஆயுதம் தாங்கிய ஒரு ராணுவன் டாஷ்போர்டு, பை, டிக்கி ஆகிய மூன்று இடங்களையும் சோதித்தார். அதை ஒருவர் காணொளியாக பதிவு செய்துகொண்டார். சோதனையின்போது இன்னொரு ராணுவன் தனது இயந்திரத் துப்பாக்கியை கிட்டத்தட்ட தயார் நிலையில் வைத்திருந்ததைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. அவ்வளவுதான் சோதனை, அனுப்பிவிட்டார்கள். அடுத்து திண்டிவனத்திற்கு முன்பாக இன்னொரு பறக்கும்படைக் குழு நிறுத்தியது. மேற்சொன்ன மூன்று இடங்களில் மட்டும் அதேரீதியில் சோதித்தப் பிறகு அனுப்பிவிட்டார்கள். மூன்றாவது சோதனை புதுச்சேரியின் நுழைவாயிலில். எங்களது வண்டிக்குப் பின்னே வந்த மினிலாரி ஒன்றும் நிறுத்தப்பட்டது. உள்ளே என்ன இருக்கிறது என்று அதன் ஓட்டுநரிடம் பறக்கும்படை காவலர் ஒருவர் கேட்டார். ஆஸ்பத்திரிக்கு பிரட் எடுத்துனு போறன் சார் என்றார் ஓட்டுநர். சரிசரி அதுல ஒன்னு குடுத்துட்டுப் போய்க்கினே இரு என்கிறார் காவலர். வழியில் இப்படி கேட்பார்கள் என்று எதிர்பார்த்தோ என்னவோ அந்த ஓட்டுநர் தன் இருக்கைக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தவற்றிலிருந்து ஒரு பிரட்டை எடுத்து நீட்டிவிட்டு எங்களுக்கும் முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார்.

அன்று மாலை திரும்பிவரும் போதும் இதேபோல நான்கு இடங்களில் நிறுத்தப்பட்டோம். நான்கில் மூன்று காலையில் நிறுத்தப்பட்ட அதே இடங்கள். வாகனத்திற்குள் சோதிக்கப்பட்ட இடங்களிலும் மாற்றமில்லை, அனுப்பிவிட்டார்கள்.    

ஒரு வாகனத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் பணத்தை மறைத்துவைத்து கடத்துவார்கள் என்று இந்தப் பறக்கும் படைக்கு யார்தான் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? எந்த இடத்தில் சோதனை நடக்கிறது என்று தோது பார்க்காமலா பணம் அல்லது பொருளைக் கடத்துவார்கள்? ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகும் பிரட்டில் ஒன்றை வாங்கிக்கொண்டு மினிலாரியை அனுப்பிவைக்கும் இவர்கள், ஒருவர் பணமூட்டையை ஏற்றிக்கொண்டு வருவாரேயானால்  நேர்மையாக மடக்கிப் பிடித்துவிடுவார்களா? 

பணம் அல்லது பொருட்கள் மூலமாக நடக்கும் ஓட்டுவியாபாரத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்கிற வெகுமக்கள் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவே, பெரும் பொருட்செலவிலும் ஆள்விரயத்திலும் இத்தகைய ஜோடனையான சோதனைகள் நடத்தப்படுகின்றனவோ என்கிற ஐயமே மிஞ்சுகிறது. 


1 கருத்து:

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...