வெள்ளி, மே 13

கையில காசு வாயில தோசை - ஆதவன் தீட்சண்யா

ப்புஸ்தானின் ஒருமாநிலம் துட்டுஸ்தான். துட்டுஸ்தானின் தலைநகரம் காசுக்கோட்டை. காசுக்கோட்டையில் இருக்கிறது சட்டமன்றம். சட்டமன்றத்துக்கு இன்னும் ஆயுசு ஒருமாதம். ஒருமாதத்துக்குள் அங்கு நடந்தாகணும் நேர்தல். நேர்தல் என்றால் நேர்தலல்ல. திருடுவதற்கும் தில்லுமுல்லு செய்வதற்கும் என்றே ஐந்தாண்டுகளுக்கு நேர்ந்துவிடுவது. நேர்தலை நடத்தப் போவது நேர்தல் ஆணையம்.  (நேர்தல் ஆணையத்தை நடத்துவது யார் என்று கேட்க நினைக்கும் இடக்குவாயர்களே, அதற்காகத்தான் நேர்தலே நடக்கிறது என்பதை அறியாத மூடர்களா நீங்கள்? காரை நாம வச்சிருக்கோம், காரை வச்சிருந்த நடிகைய இப்ப யார் வச்சிருக்காங்க என்று கேட்கிற செந்தில் கவுண்டமணி வகையறாவில் எப்போது சேர்ந்தீர்கள்?)

துட்டுஸ்தானத்தில் 432 தொகுதிகள். 432 தொகுதிகளிலும் நேர்தலை நடத்தி முடிக்க ஆகிற செலவு 864 கோடி நல்லப்பணம் + 864ஆயிரம் கோடி கள்ளப்பணம். கள்ளப்பணமென்ன கள்ளப்பணம், அது கரைபுரைண்டோடும் வெள்ளப்பணம். அந்த வெள்ளப்பணம் ஆளுங்கட்சியிடம் இருக்கிறது, ஆண்ட கட்சியிடமும் இருக்கிறது. இருக்கப்பட்ட இந்தக் கட்சிகள் இனி இந்தப் பணத்தைக்கொண்டு எப்படி வாக்குகளைப் பெறப்போகிறார்கள் என்பதுதான் மிச்சக்கதையே.

***
நேரம்- அதிகாலை 3 முதல் 5மணி வரை. இது திருடக் கிளம்பும் நேரமாச்சே என்று குதர்க்கம் பேசுகிறவர்கள் ஒதுங்கி நின்று கதையைச் சொல்ல வழிவிடுங்கள். உழைத்து வாழ்வதில் நம்பிக்கையுள்ள சிறுவர்களும் இளைஞர்களும் பால் பாக்கெட் போடவும் நியூஸ் பேப்பர் வீசவும் கிளம்பும் நேரமும் இதுதான். எப்போதும் கண்ணைத் திறந்துகொண்டே தூங்கும் நேர்தல் கமிஷன் இழுத்துப் போர்த்தித் தூங்கும் இந்த அதிகாலையைத்தான் ஓட்டு சேகரிக்கப் பொருத்தமான நேரமென ‘நாலும் அறிந்தவர்களான’ கட்சித்தலைவர்கள் கணித்திருந்தார்கள்.

உறையிலிட்ட பணத்தை வீடுகளுக்குள்  வீசிவிட்டு வந்துவிடும் பழைய ஃபார்முலா சிக்கலானதையடுத்துதான் பால்காரர்களைப் போலவும் பேப்பர் போடுகிறவர்களைப் போலவும் மாறுவேடத்தில் செல்லும் உத்தியை தலைவர்கள் கண்டுபிடித்திருந்தனர். பாலைச் சுண்டக்காய்ச்சினால் அது இரண்டு கிராம் தங்கமாகத் திரண்டு வரும், செய்தித்தாளை கருக்கினால் அது 500 ரூபாய் தாளாக மிஞ்சிவிடும். இதுவொன்றும் மாந்திரீகமோ மாயஜாலமோ கிடையாது. நவீன தொழில்நுட்பம்.  நடக்கவிருப்பது ஊராளுமன்றமா பாராளுமன்றமா என்பதைப் பொறுத்து தங்கத்தின் எடையும் தொகையின் அளவும் தானாகவே மாறிக்கொள்ளும் ரீதியில் தகவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய நுட்பம்தான் மீண்டும் வெற்றிக்கனியை பறித்துக் கொடுக்கப்போகிறது என்ற இறுமாப்புடன் இருக்கிறது ஆளும்கட்சி. நாங்களும் சளைத்தவர்களல்ல என்று இதேபோன்று பல்வேறு கட்சிகளும் வாக்காளர்களை அணுகும் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்திருந்தன. இந்த நுட்பங்களறியாது வெறுமனே கட்சியை மட்டும் நடத்திக் கொண்டிருக்கிற  இ.வா.தலைவர்கள் தாங்களும் தோற்று கட்சியையும் கரைப்பவர்களாயிருக்கின்றனர்.

டெஸ்பாட்ச், டெலிவரி, இன்புட், பொரிகடலை போன்ற பெயர்களால் அறியப்படும் இந்த பணப்பட்டுவாடாவிற்கு என பணிக்கப்பட்ட தொண்டர்களும் நிர்வாகிகளும் நகரத்தின் தெருக்களுக்குள் நுழைந்தார்கள். ஆறுமாதங்களுக்கும் முன்பாகவே தயாரிக்கப்பட்டிருந்த பட்டியலின்படி எந்தெந்த வீட்டுக்கு எத்தனை பால் பாக்கெட், நியூஸ் பேப்பர் எத்தனைச் சுருணை என்கிற விவரம் அவர்களது கைவசமிருந்தது. எனவே சுளுவில் வேலை முடிந்துவிடும் என்று அவர்கள் நினைத்திருந்ததுதான் பிழையாகிப்போனது.

காட்சி மாறுகிறது. குடியிருப்புப் பகுதிகள்.

‘‘வாக்களிப்பு குறித்த விசயங்களுக்கு எமது பேரவையை அணுகவும். மீறி, பால் பாக்கெட்டையோ  நியூஸ்பேப்பர் சுருணைகளையோ வீட்டுக்குள் வீசி நச்சரிப்போர் மீது நேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும்’’ என்று எல்லாவீடுகளின் கதவுகளிலும் பளீரென ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ‘‘நன்கொடைகளுக்கு சங்கத்தை அணுகவும்’’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி வைத்துக்கொண்டு டபாய்த்துவிடுகிற எத்தனையோ கடைக்காரர்களை வழிக்கு கொண்டுவருவதில் அனுபவம் பெற்றிருந்த தொண்டர்கள் அந்த அதிகாலையிலேயே சூடாகித்தான் போனார்கள். ஆனால் நேர்தல் நேரமாகையால்  பம்மிக்கொள்ள வேண்டியதாயிற்று. போன வேலை தடைபட்டுப் போன ஆதங்கத்தில் ‘கடுப்பேத்தறாங்க யுவர் ஆனர்...’ என்று தலைவர்களிடம் புகாரிடுவதற்காக ஸ்டிக்கர் ஒன்றை கிழித்தெடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

காட்சி மாறுகிறது.
நேரம் - அதே அதிகாலை வேளை 3 - 5 மணிவரை.

கட்சித்தலைவர்களின் வீடுகளுக்குள் சன்னல் வழியாக துண்டறிக்கைகள் வீசப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட வீடுள்ள தலைவர்களாயிருப்பின் எந்த வீட்டில் இருக்கிறார் என துப்பறிந்து அந்த வீட்டுக்குள் கச்சிதமாக வீசப்பட்டன. எப்படியும் நாட்டுக்கு உழைத்தே தீர்வது என்று கண்விழித்த தலைவர்கள் ‘எங்களுக்கே பேப்பர் போட ஆரம்பிச்சுட்டாங்களா?’ என்ற எகத்தாளத்தோடு அந்த துண்டறிக்கைகளை எடுத்துப் பார்க்கிறார்கள். பழக்கதோஷத்தில் தங்களைப் போலவே அதில் இனாம்/ இலவசமாக எதையாச்சும் ஒட்டவைத்துப் போட்டிருக்கிறார்களா என்று திருப்பித்திருப்பி பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் அந்த துண்டறிக்கையை படிக்கத் தொடங்குகிறார்கள்.

துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப் பேரவை  ( பதிவு எண்- 189/2011 )

கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கம். சொத்துள்ளவர்களும் கல்வி பெற்றவர்களுமே வாக்களிக்க முடியும் என்றிருந்தது ஒரு காலம். வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அண்ணலொருவர் கோரியதாலேயே எங்களுக்கெல்லாம் வாக்காளர் என்ற தகுதி கிட்டியது.  எங்களை குடிமக்கள் என்று நாங்களே உணர்ந்திருந்த அந்தக்காலத்தில் போராடிப்பெற்ற ஒரு உரிமை என்ற பெருமிதத்தோடு வாக்களித்துக் கொண்டிருந்தோம். ஆனால் வேட்பாளர்களாகிய நீங்கள் அப்போதும் எமக்கு விசுவாசமாய் இருந்திருக்கவில்லை. வேட்புமனு இறுதி செய்யப்பட்டதற்கும் வாக்குப்பதிவுக்கும் இடைப்பட்ட பதினான்கே நாட்களில் எங்களைப்பார்க்க பலதடவைகள் வந்துபோகும் நீங்கள் தேர்தலுக்குப் பிறகு வென்றவராயினும் தோற்றவராயினும் தொகுதி பக்கமே வருவதை தவிர்த்தீர்கள். அதுகுறித்த எங்களது கோபத்தை தணிக்க அடுத்தத் நேர்தலின்போது  சின்னச்சின்ன கையூட்டுகளை கொடுக்கத் தொடங்கினீர்கள். சேவையைச் சொல்லி எங்களது வாக்குகளைப் பெற முடியாதென்கிற நிலைமைக்கு நீங்களே உங்களைத் தாழ்த்திக் கொண்ட அந்தநாட்களை இப்போது திரும்பிப் பார்ப்பதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் வேட்பாளர் வாக்காளர் என்ற நிலைமை மாறிவிட்டது. இப்போது வாக்கு என்பது ஒரு சரக்கு- பண்டம்.

ஒரு சரக்கின் விலையை அதன் உரிமையாளரே தீர்மானிக்கிறார் என்ற அடிப்படையான வியாபார விதியைக்கூட மதிக்காத ஆணவம் உங்களிடம் தொடக்கத்திலிருந்தே இருப்பதை நாங்கள் இப்போதாவது சொல்லத்தான் வேண்டும். சின்டிகேட் அமைத்துக்கொண்டு எங்களது வாக்குகளுக்கு நீங்களாகவே தன்னிச்சையாக ஒரு விலையை  தீர்மானித்துக் கொள்கிற அடாவடித்தனத்தால் எமக்கு இதுவரை பல்லாயிரம் கோடியளவுக்கு இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். பதவியைப் பயன்படுத்தி சின்னச்சின்ன ஊழல்களைச் செய்துவந்த நீங்கள் ஊழல் செய்வதற்காகவே பதவிக்கு வரத்தொடங்கிய பிறகு உங்களது வருமானம் பன்மடங்கு (குறைந்தபட்சம் 780 மடங்கு) பெருகிப்போயிருந்தது. முழுநேர அரசியல்பணியில் இருக்கும் நீங்கள் இவ்வளவு வருமானம் தரும் சொத்துகளை எப்படி சம்பாதித்தீர்கள் என்று கேள்வி எழுப்புவதோ உங்களது அரசியல் பணி என்பதே சொத்து சேர்ப்பதுதான் என்று குற்றம் சாட்டுவதோ எங்களது நோக்கமல்ல. ஆனால் எங்களது வாக்குகளை ஆதாரமாக வைத்து பெருக்கிக்கொண்டிருக்கிற வருமானத்திற்கேற்ற விகிதாச்சாரத்தில் எங்களுக்கான விலையை நிர்ணயிக்காமல் அநீதி இழைத்தீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். நிர்ணயித்திருக்கும் இந்த ரேட் உங்களுக்கு கட்டுபடியானதா என்று ஒப்புக்குகூட ஒரு வார்த்தை எங்களிடம் கேட்க வேண்டுமென்று ஏன் உங்களில் ஒருவருக்கும் தோன்றவில்லை? ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பிலோ, குடியரசுத்தலைவர் அல்லது மேல்சபை நேர்தலிலோ வாக்களிப்பதற்கு இவ்வளவு கொடுத்தால்தான் ஆச்சு என்று பேரம் பேசி கல்லா கட்டுகிற நீங்கள் அதே நியாயத்தையும் உரிமையையும் எங்களுக்கு ஏன் வழங்க மறுக்கிறீர்கள்?

விட்டுத்தள்ளுங்கள், தின்ன சோத்துக்கு ஊறுகாய் தேடி என்ன ஆகப்போகிறது? ஆனால் இனி நடக்கிற வியாபாரம், வியாபாரத்திற்குரிய எல்லாவிதிகளோடும் ஒழுங்கோடும் தர்மத்தோடும் நடந்தால் மட்டுமே எங்களது சரக்குகளை நீங்கள் வாங்கமுடியும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். இனி துட்டுஸ்தானத்தில் நடக்கவிருக்கும் எல்லாத் நேர்தல்களிலும் எமக்கான ரேட்டை நாங்களேதான் தீர்மானிப்போம் என்ற சுயமரியாதைப் பிரகடனத்தை இதன் மூலம் அறிவிக்கிறோம். இதன் பொருட்டு துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப் பேரவை என்கிற எங்கள் அமைப்பின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக படிவம் எண்-18ல் கையொப்பமிடாத எந்தவொரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ எங்களிடம் வாக்கு கோர அங்கீகாரமில்லை.

1. (அ) கட்சிகள்/ வேட்பாளர்கள் நேர்தலுக்கென செலவழிக்கவிருக்கும் உத்தேசத் தொகையை வா.வ.பேரவையிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். எம்மிடமே நேரடியாக வாக்குகளை கொள்முதல் செய்வதால் பிரச்சாரம் விளம்பரம் போன்றவற்றுக்காக செலவழிக்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே அந்தத் தலைப்புகளின் கீழ் ஒதுக்கியத் தொகை முழுவதையும்  வாக்காளர்களுக்கே பிரித்துக் கொடுத்துவிட வேண்டும்.

(ஆ) கடந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவரே மீண்டும் போட்டியிடுகிறாரெனில் இந்த ஐந்தாண்டுகளில் சுருட்டிய அசையும்- அசையா சொத்துகளின் விபரம் மற்றும் வங்கி இருப்பு, கையிலுள்ள ரொக்கம் உள்ளிட்ட வரவு செலவு அறிக்கையை து.வா.வ.பே அங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அபகரிப்பில் புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களின் அளவு தனித்தனியே வகைப்படுத்தி காட்டப்படவேண்டும். மணல்குவாரி/ கிரானைட் குவாரி  உரிமம் இருப்பின் அவற்றின் நகல்கள் இணைக்கப்படுதல் அவசியம். இனிவரும் ஐந்தாண்டுகளுக்கான உத்தேச சுருட்டலின் முன்வரைவுத் திட்ட அறிக்கையும் (Project report) இணைக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்கப்படும். இரண்டு தொகைகளின் கூட்டு சராசரி அல்லது மொத்தத்தொகையில் எண்பது சதம்- இவற்றில் எது அதிகமோ அதை அடிப்படையாகக் கொண்டு வாக்குகளுக்கான குறைந்தபட்ச முகமதிப்பு விலை நிர்ணயிக்கப்படும்.

 (இ) பொறியியல் / மருத்துவம்/ கல்வியியல் கல்லூரிகள், சர்வதேச உண்டுஉறைவிடப் பள்ளிகள் ஏதும் தொடங்கி திடீர் கல்வித்தந்தையாகியிருப்பின் அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெயர்வாரியாக அவர்களிடம் வசூலித்த தொகையும் எவ்வளவு எனக்காட்டும் வருடாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

(ஈ) வேட்பாளர் குற்றப்பின்னணி உள்ளவரா? ஆம் எனில், ஆள்கடத்தல், அடிதடி, குத்துவெட்டு, பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, வழிப்பறி, நிலமோசடி, ஆள்மாறாட்டம் ஆகிய தனித்தனி தலைப்புகளின் கீழ் பதிவாகியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட வேண்டும். சிறைப்பட்டிருப்பின் அது பற்றிய விவரமும் தேவை. (ஆபிஸ்நேர போராட்டங்களில்   பங்கேற்று காலை 11 மணிக்கு கைதாகி பிற்பகல் 5 மணிவரை உள்ளே இருந்த கேவலத்தையெல்லாம் இங்கு குறிப்பிட வேண்டியதில்லை.) 

 (உ) வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்றவற்றின் ரெய்டுகளில் சிக்கியிருந்தால் அதுபற்றிய விவரம். விசாரணைக் கமிஷன் ஏதும் உங்கள் மீது அமைக்கப்பட்டிருப்பின் அதை தனித்தாளில் கொட்டையெழுத்துகளில் குறிப்பிடவும். ஊழலில் நீங்கள் எந்தளவுக்கு பிரசித்தம் என்ற மதிப்பீட்டுக்கு இவ்விவரம் அவசியம். 

மேற்கண்ட விதிமுறைகளுக்கு கட்டுப்படுகிற கட்சிகள்/ வேட்பாளர்கள் எமது ஏலத்தில் கலந்துகொள்ள தகுதி படைத்தோராவர். 

ஏலமுறையின் வரலாறு 

போர்க்களத்தில் தோற்றுப்போகும் நாடுகளின் குடிமக்களை வெற்றியடைந்தவர்கள் அடிமைகளாகப் பிடித்துவந்து சந்தைகளில் ஒரு சரக்கைப் போல  குவித்துவைத்து ஏலம்கூறி விற்பனை செய்ததை வரலாற்றில் நாம் கண்டிருக்கிறோம். ஊர்களை மானியமாக கொடுக்கும்போது அவற்றிலிருந்த மக்களையும் சேர்த்தே கொடுத்தமைக்கு கல்வெட்டுச் சான்றுகளுண்டு. தனவந்தர்கள் தமது மகள்களுக்கு கல்யாணச் சீதனமாக பொன்பொருள் அகில் துகிலோடு அடிமைகளையும் கொடுத்தார்கள் என்பதை பழமரபுக்கதைகள் தெரிவிக்கின்றன. போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் கிழக்கிந்திய கம்பனியாரும் அரசர்களிடமிருந்து பெரும் நிலப்பரப்புகளையும் மக்களையும் விலைக்கு வாங்கியது பற்றிய ஆவணங்கள் இப்போதும் காணக்கிடைக்கின்றன. வறுமையின் காரணமாக ‘கொள்வாருளரோ.. கொள்வாருளரோ..’ எனக்கூவி தம்மைத்தாமே ஏலம்கூறி விற்றுக் கொள்வதும் அதற்கும் ஏலாதவர்கள் தம் குடும்பத்தாரையே விற்பதும் நடப்பிலுள்ள விசயம் தான். கேம்பஸ் இன்டர்வியூ என்ற பெயரில்  மூளையடிமைகள் முன்கூட்டியே தங்களை விற்றுக்கொள்வதை இச்சமூகம் ஊக்குவித்தே வந்திருக்கிறது. மனிதர்களை ஏலம்கூறி விற்கும் இத்தகைய நமது பாரம்பரிய வழக்கத்தை தற்கால நேர்தலுக்குப் பயன்படும் வகையில் தேவைக்கேற்ற மாறுதல்களுடன்  பின்தொடர விரும்புகிறது து.வா.வ.பே. 

கோயில் கட்டிக்கொள்வது போன்ற தேவைகளுக்காக அதிக தொகையைத் தருகிறவருக்கு ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களது வாக்குகளை கொத்தாக விற்கும் வழக்கம் ஏற்கனவே கிராமப்புறங்களில் நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக ஊரையே ஏலம்விட்டு சம்பாதிக்கிற இந்த முறையைவிட ஐபிஎல் முறையே மேலானது என்பது து.வா.வ.பேயின் கருத்து. இந்தப் போட்டியில் களமிறக்கப்படும் அணிகளின் முதலாளிகள் திறமையான ஆட்டக்காரர்களைத் தேடி சந்தைக்கு வருகிறார்கள். தமது திறமையை ஒரு சரக்காக பாவித்து அதை நல்லவிலைக்கு விற்றுக்கொள்ள ஆட்டக்காரர்களும் சந்தைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் அவரவர் தனித்துவமான திறமைக்கேற்ற விலை. நல்ல ரகமான ஒசத்தி சரக்குகளுக்கு கிராக்கி இருக்கும் என்பதை இந்த ஆட்டக்காரர்களிடமிருந்து தான் வாக்காளர்களாகிய நாங்கள் கற்றுக்கொண்டோம். சந்தைக்கலாச்சாரம் திறந்து விட்டிருக்கிற இந்த வாய்ப்பை எங்களைப் போலவே தங்களது கட்சியும் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே கவர்ச்சிகரமான பல திட்டங்களுடன் எங்களது ஏலமுறையை வகுத்துள்ளோம்.

திட்டம் - 1 

நெல்வரி தொழுவர் என்கிற அறுவடையடிமைகள், கிளாடியேட்டர்ஸ் என்னும் போர்க்கலை அடிமைகள், வயித்துச்சோத்து ஆள்காரர் என்ற பண்ணையடிமைகள் ஆகிய முன்மாதிரிகளை சற்றே மாற்றி உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் கூடுதல் செலவு பிடிக்கக்கூடியது. ஆனாலும் நீண்டகால நோக்கில் பெரிதும் பலன் தரக்கூடியது. இதன்படி  ஒரு தொகுதியிலுள்ள குடும்பங்கள் அனைத்தையும் மொத்தக் கிரயமாக விலைபேசி வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு வாங்கப்பட்டவர்களை நன்றாக பராமரித்து, வரக்கூடிய எல்லாத் நேர்தல்களிலும் வாக்காளர்களாக பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிக ஒளியுமிழும் விளக்கை எரியவிட்டவுடன் முட்டையிட்டுவிடும் கோழிகளைப் போன்ற இவர்களை வாங்குவது குடும்ப/வாரீசு அரசியல் நடத்த விரும்புகிறவர்களுக்கு உகந்த திட்டமாக இருக்கும்.

அழுகும் பொருள், மக்கும் குப்பை என்பதுபோல வாக்காளர்களைக் கருத வேண்டியதில்லை என்றாலும் கொஞ்சம் சேதாரம் இருக்கும் என்பதுதான் இத்திட்டத்திலுள்ள ஒரேயொரு பாதகமான அம்சம்- Risk factor வாக்கு தவறுவது வேட்பாளர்களின் புத்தியே தவிர வாக்காளர்களுடையதல்ல. என்றாலும் கட்சிமாறிகள் என நீங்கள் சந்தேகிக்கும் எந்தவொரு அயிட்டத்தின் காலிலும் கண்காணிப்புக்கருவிகளை பொருத்திவிடுவதற்கு எமது அமைப்பு விதி 16 ன் 7வது ஷரத்து அனுமதிக்கிறது. ஆனால் மனித உரிமை மீறல் என்று கிளம்பும் கூச்சல்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு உங்களுடையது.
  
திட்டம்-2 

தொகுதி வாக்காளர்கள் அனைவரையும் வாங்க முடியாதவர்களுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை பால்மாடுகள், பொலிகாளைகள் அல்லது நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அனுபவம் உள்ளவர்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். இதன்படி நீங்கள் யாரை ஏலமெடுத்தாலும் அவர்கள் வாக்களிக்கத்தக்க பருவமான 18 வயதிலிருந்தே உங்கள் பெயரால் உங்களது மேற்பார்வையில் வளர்க்கப்படுவார்கள். பிற கட்சியினர் அணுக முடியாவண்ணம் பலஅடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வளர்க்கப்படும் இவர்களது விசுவாசம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. கட்சித்தாவல் மனப்பான்மையை 100 சதம் நீக்கி பதப்படுத்தப்படுகிற இவர்கள் ஒருவேளை அவசரநிலைப் பிரகடனம் அமலாகி வாக்குரிமையே பறிக்கப்பட்டாலும்கூட மானசீகமாக உங்களது வாக்காளர்களாகவே நீடிப்பார்கள். ஜனநாயகம் மீட்கப்பட்டு மீண்டும் நேர்தல் வரும்போது மற்றவர்களைப் போல திடுமென வாக்காளர்களைத் தேடியலையும் இக்கட்டான சூழல் இத்திட்டத்தில் சேர்கிற வேட்பாளர்களுக்கு ஏற்படாது என உறுதியளிக்கிறோம்.  ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்து பழங்காலத்து பண்ணையடிமைகளுக்கு இட்டது போல இவர்களது மார்பிலோ நெற்றியிலோ சூட்டுக்குறியாக தங்களது சின்னத்தைப் பொறிக்க முயற்சிக்கும் கட்சிகள்/ வேட்பாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கிறோம். கடற்கரைப் பட்டினங்களை ஆக்கிரமித்திருந்த போர்த்துக்கீசியர்கள் இளம்பெண்களை விலைக்கு வாங்கி அனுபவித்துவிட்டு விற்றுவிட்டுப் போனதைப் போல, ஏலத்தில் எடுத்துவிட்டோம் என்ற எகத்தாளத்தில் எமது பெண் வாக்காளர்களிடம் யாரேனும் எடாகூடமாக நடக்க முயற்சித்தால் அவர்களது உரிமமும் ரத்துசெய்யப்படும். அத்துடன் அவர்கள் முக்கியமான நரம்பினையும் இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் வைக்கவும்.

திட்டம் 3

அரசியலில் நிச்சயமற்றத்தன்மை நிலவுவதாலும், தொகுதி ஒதுக்குவதில் கட்சித் தலைமைகள் பல குளறுபடிகளை கையாள்வதாலும் சரக்குகளை மொத்தமாக வாங்கிவைத்தால் வீணாகிப் போய்விடுமோ என்று தயங்குகிறவர்கள் துணிந்து இத்திட்டத்தில் சேரலாம். அதாவது அந்தந்த நேர்தலுக்கு தேவையான அளவுக்கு மட்டும் ஏலமெடுத்துக் கொள்வது என்ற இத்திட்டம்தான் இப்போது சந்தையில் பரபரப்பாக பேசப்படுகிறது. ‘இது கூட்டணியல்ல வெறும் தொகுதிப் பங்கீடுதான்’ என்று நீங்கள் அடிக்கடி சொல்வது போன்றதொரு திட்டம். முதலிரண்டு திட்டங்களைப்போல இதில் வாக்காளர்களோடு பிணைப்போ பொறுப்போ பராமரிப்புச் செலவுகளோ கிடையாது. நேர்தல் முடிந்தால் நீ யாரோ நான் யாரோ என்று போய்க் கொண்டேயிருக்கலாம். Disposable Cup/ Use and throw முறைகளின் உந்துதலால் உருப்பெற்றுள்ள இத்திட்டம் நூற்றுக்கு நூறு சதம் வியாபார நெறிகளையும் விதிகளையும் அடிப்படையாகக் கொண்டது. 

என்னதான் ஏலத்தில் எடுத்தாலும் வாக்காளர்களின்  பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி வாக்கு கேட்பதுதான் சரியான முறை என்கிற ஒரு மனப்பதிவு வேட்பாளர்களிடம் பொதுவாக காணப்படுகிறது. இப்படியான வேட்பாளர்களுக்கென்றே செய்யப்பட்டுள்ள பிரத்யேக ஏற்பாடுதான் கால்பிடிக் கால்வாய். பொக்லைன் வைத்து டெலிபோன் கேபிள் அல்லது பாதாள சாக்கடைக்கு தோண்டுவதுபோல ஆறடி ஆழத்திற்கு துட்டுஸ்தான் முழுக்க ஒரு கால்வாயை எமது அமைப்பு வெட்டியுள்ளது. கால்வாயின் இருகரைகளிலும் வாக்காளர்கள் அணிவகுத்து வரிசையாக நிற்பார்கள். கால்வாய்க்குள் வேட்பாளர் இறங்கி நின்றால் அவரது தலைமட்டத்திற்கு இணையாக மேலே கரையில் நிற்கிற வாக்காளர்களின் பொற்பாதங்கள் தெரியும். அப்படியே விறுவிறுவென்று ஒவ்வொருத்தர் காலையும் தொட்டுத்தொட்டு கண்ணில் ஒற்றி கும்பிட்டுவிட்டு போய்க்கொண்டேயிருக்க வேண்டியதுதான். தனித்தனியாக ஒவ்வொருவர் காலுக்கும் குனிந்து குனிந்து நிமிர்வதால் ஏற்படும் உடல் அசதியை தவிர்க்கலாம். நேரத்தையும் மிச்சம் பிடிக்கலாம். 

கால்பிடிக் கால்வாய்க்கான தேதியும் நேரமும் முதலில் வருவோர்க்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும். முதலில் வருவோர்க்கே முன்னுரிமை என்ற தந்திரத்தைக் கையாண்டு கடந்தகாலத்தில் நடந்த முறைகேடுகளை எண்ணி கவலைகொள்ளத் தேவையில்லை. மிகவும் வெளிப்படையாகவே ஒதுக்கீடு நடைபெறும். இடைத்தரகர் மூலமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. 

குறிப்பு: ஒரு திட்டத்தில் வாங்கப்பட்ட வாக்காளர்களை வேறோரு திட்டத்திற்கு மைக்ரேட் செய்துகொள்ளலாம். அதுபோலவே ஏலம் தீர்ந்த சரக்குகளை இன்னொரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ கைமாற்றிக் கொடுப்பதற்கும் ‘போர்டபிலிட்டி’ வசதி உள்ளது. இதற்கென நீங்கள் கூடுதலாக சேவைக்கட்டணமோ, மண்டிக்கான கமிஷனோ செலுத்த வேண்டியதில்லை. (இச்சலுகை சரக்கு இருப்புள்ளவரை மட்டுமே).

நல்லது தலைவர்களே, இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அருகாமையிலுள்ள எமது துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப் பேரவையின் கிளை மண்டி ஒன்றுக்கு வருகை தருவது மட்டும்தான். வயதையும் திறமையையும் குறிக்கும் பட்டயங்களை கழுத்தில் மாட்டி சந்தையில் நிறுத்தப்பட்ட அடிமைகளை கிள்ளியும் அடித்துப் பார்த்தும் வாங்கியது போன்ற புராதனச் சிரமங்கள் ஏதும் இப்போது இல்லை. திரண்டிருக்கின்ற வாக்காளர்களிலிருந்து உங்களுக்கு பிடித்தமானவர்களை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஓட்டுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல ஒரு விலையை குடும்பத்தலைவர் தீர்மானித்து வைத்திருப்பார். சந்தையில் ஆடு மாடு வாங்கிய அனுபவமிருந்தால் நீங்களே நேரடியாக அவரிடம் துண்டுபோட்டு பேரம் நடத்தி தரகருக்கான கமிஷனை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். அனுபவமில்லாதவர்கள் நம்பகமான இடைத்தரகர் ஒருவரை அழைத்துவந்தும் பேரம் பேசலாம். ஆனால் இடைத்தரகர்கள் பேசும் பேரங்கள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு பிற்காலத்தில் வெளியானால் அதற்கு து.வா.வ.பே நிர்வாகம் எந்தவகையிலும் பொறுப்பல்ல.

பேரம் படிந்த வாக்காளர்கள் அந்த குறிப்பிட்ட ஒரு நேர்தலில் மட்டும் உங்களுக்கு வாக்களிக்க கடமைப்பட்டவர்கள். மறுபடியும் விழிப்போம் என்ற நம்பிக்கை இருந்தால்தான் தூங்குவதற்கு கண்மூட முடியும். எனவே வாக்காளர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். வெத்திலை/ பாற்சொம்பு மீது சத்தியம் வாங்கும் காலாவதியாகிப்போன உத்திகளை கையாண்டு அவர்களை அவமதித்துவிடாதீர்கள். ஏனென்றால் அடுத்தடுத்த தேர்தல்களிலும் அவர்களை நம்பியே நீங்கள் களமிறங்கப் போகிறீர்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு அதிக தலைகளை வாங்குகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் வெற்றியின் அருகே செல்கிறீர்கள் என்று அர்த்தம். வாருங்கள். வாரத்தில் ஏழுநாட்களும் 24 மணிநேரமும் எமது மண்டிகள் உங்களுக்காக திறந்தே இருக்கின்றன...

ஏலத்தில் பங்கெடுக்க வருகிற கட்சிகள் /வேட்பாளர்கள் மட்டும் வாசிக்க 

1. கொள்கை, கோட்பாடு என்று கவைக்குதவாத விசயங்களைப் பேசிக்கொண்டு  கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் என்று அல்லாடுகிறவர்களை வேட்பாளர்களாக ஏலத்துக்கு அழைத்து வருவதை தவிர்ப்பது நல்லது. மனசாட்சியைத் தூண்டிவிட்டு நமக்கெதிராக நாமே நிற்கும்படியான ஆபத்தை விளைவிக்கும் இவர்களை கடந்தகாலத்தைப் போலவே என்றென்றைக்கும் விலக்கிவைப்பதென்ற து.வா.வ.பே.யின் தீர்மானம் குறித்த உமது நிலைபாட்டை அறிய விரும்புகிறோம்.

2. வாகனச்சோதனை என்ற பெயரில் டவுன்பஸ்சிலும் ஷேர் ஆட்டோவிலும் ஏறி பயணிகள் வைத்திருக்கும் சில்லரைக் காசுக்கெல்லாம் முறையான ஆவணங்களைக் கேட்பது, ஆட்டுப்பட்டிகளுக்குப் போய் கூடுதலாக கிடா வாங்கியவர்களின் விவரங்களைக் கேட்பது, பிரியாணி அண்டாவை ஒளித்து வைக்குமாறு ஓட்டல்களை மிரட்டுவது போன்ற நேர்தல் கமிஷனின் ஜனநாயகவிரோதச் செயல்பாடுகள் வாக்காளர்களையும் வேட்பாளர்களையும் தேவையற்ற பீதியில் ஆழ்த்துவதாக உள்ளது. இதனால் நேர்தலுக்கு ஆறுமாதங்களுக்கு முன்பே கப்பலில் வந்த பணம் முழுவதும் ஆங்காங்கே கன்டெய்னர்களில் முடங்கி கரையான் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணத்தை இறக்க முடியாமல் நீங்கள் படுகிற அவஸ்தைகளை நாங்களறிவோம். நியாயமான முறையில்தான் துட்டுஸ்தானில் நேர்தல் நடக்கிறது என்று வெளியுலகத்தை நம்பவைக்க ரெய்டு அதுஇது என்று கொஞ்சம் ஃபிலிம் காட்டுவதை நாங்கள் தவறென்று சொல்லவில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நேர்தல் கமிஷன் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தருகிறதோ என்ற ஐயப்பாடு உருவாகியுள்ளது. நேர்தல் கமிஷனின் தேவையற்ற இத்தகைய கெடுபிடிகளால் பணப்புழக்கம் தடைபட்டு  பங்குச்சந்தையே சரிவு கண்டு நாட்டின் பொருளாதாரமே ஆட்டங் கண்டுள்ளது.

சரி, இந்த நேர்தல் கமிஷன் இதுவரைக்கும் என்னதான் செய்திருக்கிறது? நேர்தலை நடத்தி யார் கெலித்தார்கள் என்று அறிவிக்கிறது. யார் கெலிப்பார்கள்? எங்களிடம் யார் அதிக வாக்காளர்களை பேசி முடிக்கிறார்களோ அவர்கள்தான். ஆக, நேர்தல் என்பது முழுக்க முழுக்க வாக்காளர்களாகிய நாங்களும் வேட்பாளர்களாகிய நீங்களும் சம்பந்தப்பட்டதாய் இருக்கும்போது இதில் நேர்தல் கமிஷனுக்கு என்ன வேலை? நமக்கிடையேயான பேரத்தை மிகவும் வெளிப்படையாக நடத்தி வெற்றி  தோல்வியை அறிவிக்க எங்கள் அமைப்பு உருவாகிவிட்ட நிலையில் நேர்தல் கமிஷன்  என்ற அமைப்பையே கலைத்துவிடலாம் என்ற எங்களது கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அவ்வாறு கலைக்கப்பட்டுவிட்டால் ஆட்களுக்கான சம்பளம்,  சுழல்விளக்கு பொருத்தின கார், மேலிடப் பார்வையாளர்களுக்கான பயணப்படி, கண்காணிப்பு காமிரா ஆகிய தேர்தல் செலவினங்களைத் தவிர்த்துவிட முடியும். பெருந்தொகை மிச்சமாகும். வேட்புமனு தாக்கல்- பரிசீலனை- இறுதிப்பட்டியல் வெளியீடு- பிரச்சாரம்- வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு- முடிவு அறிவிக்க ஒருமாதம் காத்திருக்க வைத்து மண்டைகாய விடுதல் என்ற ஜவ்விழுப்பான நடைமுறைகளால் இனி நமது நேரமும் வீணாகாது என்ற அம்சங்களையும் கணக்கில் கொள்ளவும்.

இடம் மாறுகிறது.

துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப் பேரவையின் கிளை மண்டிகள்.

கப்பல் போன்ற கார்களில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வந்திறங்குகின்றனர். கூட்டணியமைத்துக் கொண்டவர்கள் ஒரேகாரில் முன்சீட்டிலும் பின்சீட்டிலும் அள்ளையில் தொற்றிக்கொண்டும் வருகின்றனர். சொந்தமாக கார் இல்லாத கட்சிகளின் தலைவர்கள் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வந்துள்ளனர். இரண்டுக்கும் ஏலாதவர்கள் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களிலும்  நடந்துமாக அவ்விடம் வந்து சேர்கின்றனர். (இப்படி காருக்கு கதியற்ற அன்னக்காவடிகளெல்லாம் உலாவித் திரிய அரசியல் என்பது சத்திரமா சாவடியா? )

இதோ திரை உயர்கிறது. இன்னும் கொஞ்நேரத்தில் ஏலம் தொடங்க இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...