செவ்வாய், ஏப்ரல் 19

சாதி நீதியும் சமூகநீதியும் - பாரிவேந்தருக்கு ஆதவன் தீட்சண்யா

இந்தியாவில் மனிதகுலம் தோன்றிய போதே இடஒதுக்கீடும் வந்துவிட்டது போன்ற தொனியில் கடைசியாய் திருவாய் மலர்ந்திருக்கிறார் பாரிவேந்தர். சாதிச்சங்கத்தை கட்சியாய் வைத்துக் கொண்டிருக்கிற இவர், தனக்கு சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் ‘சாதிவாரியான இடஒதுக்கீட்டின் காரணமாகவே இந்தியாவில் சாதியை ஒழிக்க முடியவில்லை’ என்று   அங்கலாய்த்திருக்கிறார். இவர் என்னமோ சாதியொழிப்புக்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்திவருவது போலவும், இந்த பாழாய்ப்போன இடஒதுக்கீடு குறுக்கே வந்து தடுத்துவிடுவது போலவும் கூறுவதில் ஏதாவது உண்மையிருக்கிறதா?

முதன்முதலாக சாதிரீதியான இட ஒதுக்கீடு சுமார் கி.மு.185ல் தொடங்கியது எனலாம். அப்போது எழுதப்பட்ட மனுஸ்மிருதியில்தான் பூவுலகத்தின் ஆகச்சிறந்த அனைத்தும் பூதேவர்களாகிய பார்ப்பனர்களுக்கே என்று கூறப்பட்டதோடு அது சட்டப்பூர்வமாக உறுதியும் செய்யப்பட்டது. பார்ப்பனர்களுக்கே 100 சதவீதமும் என்று அன்று தொடங்கிய இந்த இடஒதுக்கீட்டில் கி.பி.1874 ஆம் ஆண்டுதான் ஒரு சிறு குறுக்கீடு நிகழ்ந்தது. அந்த ஆண்டில்தான் மைசூர் சமஸ்தான அரசானது, காவல்துறையின் அடிமட்ட மற்றும் இடைநிலைப் பணியிடங்களில் மட்டும் 20 சதவீதம் பார்ப்பனர்களுக்கு என்றும் எஞ்சிய 80 சதவீதம்  இஸ்லாமியர், இந்துக்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவர்களுக்கு என்றும் பகிர்ந்தளித்தது. இந்தியாவில் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின்  தொடக்கம் என்று இதையே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு 1902 ஜூலை 26 ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர் மன்னர் சாகுமகராஜ், அரசாங்கப் பணியிடங்களில் 50 சதவீதத்தை பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவானது சமூகநீதிக்கான பாதையில் ஏற்பட்ட ஆகப்பெரிய முன்னேற்றம். சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை செப்டம்பர் 1921ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அமலுக்கு வந்தது. பிறகு 1931ல் பம்பாய் மாகாணத்திலும் 1935ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இடஒதுக்கீடு அறிமுகமானது. 

இன்றைய தேதியில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம், சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ( பொருளாதார ரீதியில் அல்ல) பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் என்று இட ஒதுக்கீடு உள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை இந்த அளவு மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் இது 69 சதவீதமாக இருக்கிறது ( 18+1+30+20).

மனுஸ்மிருதி பார்ப்பனர்களுக்கு மொத்த இடத்தையும் ஒதுக்கியதற்கு சாதியே அடிப்படை. பார்ப்பனரல்லாதாருக்கு கொடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்கோ சமூக நீதியே அடிப்படை. இந்த வரலாறு பாரிவேந்தருக்கு தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் தெரிந்திருப்பது போல வாயைத் திறக்கும் போதுதான் வேறெதையோ திறந்தது போல நாறுகிறது. பாரிவேந்தர் அவர்களே, திறந்ததை நாட்டுநலன் கருதி மூடுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...