திங்கள், நவம்பர் 12

ஒசூரெனப்படுவது யாதெனின்...8 -ஆதவன் தீட்சண்யா

''ஒசூர் முழுக்க ஏரிகள், ஏரிகள் எங்கும் பிணங்கள் என்று சொன்னால் அது ஓர் இட்டுக்கட்டிய கதை என்றே தோன்றும். ஆனால் 1990-கள்வரை இதுதான் நிலைமை. இந்தப் பகுதியிலுள்ள ஏதாவதொரு ஏரியில் வாரத்துக்கு ஒரு பிணமாவது மிதக்கும். ஊறி உப்பி நொதித்து மேலெழுந்துவந்த அந்தப் பிணங்கள் அடையாளம் தெரியாதவை என்றே அறியப்பட்டன. ஏரிகள் வற்றிய காலங்களில் இங்குள்ள காடுகளில் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. கர்நாடகா அல்லது ஆந்திராவில் கொலைசெய்து அருகாமையில் உள்ள ஒசூருக்கு எல்லைதாண்டிவந்து பிணங்களை வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள் என்பதான திகில் கதைகளுக்கும் அப்போது பஞ்சமில்லை. பிணங்களில் பெரும்பாலானவை பெண்களாகவும் இருந்ததால் கதைகளை அவரவர் பங்குக்குப் புனைந்து வளர்த்தெடுத்தார்கள். இதனால், பெண்கள் பாதுகாப்பற்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இது அல்லாமல், வழிப்பறி, களவு, வீடுபுகுந்து கொள்ளை, பாலியல் வன்முறைகள் போன்ற குற்றங்களும் பெருகி ஒசூர்வாசிகளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. குற்றங்களின் நகரத்துக்குள் சிக்கிக் கொண்டோமோ என்கிற அளவுக்கு இந்தப் பயம் எல்லோரையும் பீடித்திருந்தது. மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் வழக்கம்போல எல்லாக் குற்றங்களுக்கும் மேற்சொன்ன 'எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை’ கைகாட்டிக்கொண்டிருந்தனர்.

1995 நவம்பர் 22, ஒசூர்வாசிகள் மீது அதுவரை நிகழ்த்தப்பட்டுவந்த குற்றங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு மூர்க்கமும் கொடூரமும் வக்கிரங்களும் நிறைந்த குற்றமொன்றைக் கொண்டுவந்து சேர்த்த நாள் அது. அதிகாலை 2 மணி அளவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த எட்டுப்பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்த ஆம்பளையின் கை, கால்களைக் கட்டி மின்விசிறியின் கொக்கியில் தொங்கவிட்டுவிட்டு அவருடைய மனைவியையும் (42) மூத்த மகளையும் (17) சூறையாடிவிட்டுப் போயிருந்தார்கள். தன் தம்பியோடு மூட்டைச்சந்தில் ஒளிந்துகொள்ளாமல் போயிருந்தால் தன் தாய்க்கும் அக்காவுக்கும் நேர்ந்த கொடூரத்துக்கு அவருடைய இளைய மகளும்கூட தப்பியிருக்க முடியாது. தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி சொல்லி அழவும்கூட அருகாமையில் யாருமற்ற ஒண்டிவீடு அது.

ஒசூர் ஐ.டி.ஐ-க்கு பின்புறம், மிடிகிரிப்பள்ளி கிராமத்துக்கான பாதையோரத்தில் இருந்த அந்த ஒண்டிவீட்டில் நிகழ்ந்தேறிய கொடுமையை ஒசூர்வாசிகள் ஒவ்வொருவரும் தமக்கே இழைக்கப்பட்டதாக உணர்ந்து ஒரு போராட்டத்தைத் தொடங்கியதில் ஜூனியர் விகடன் வகித்த பங்கு மதிக்கத்தக்கது.

தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் குறித்து முறையிட வந்த அந்தக் குடும்பத்தை காவல்துறை எதிர்கொண்ட விதம், குற்றங்களைவிடவும் கொடிய வாதையைத் தருவதாக அமைந்தது. தங்களுடைய காவல் எல்லையில், இப்படியொரு குற்றம் நிகழ்ந்துவிட்டதே என்கிற அவமான உணர்வோ பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையாக இருக்கவேண்டும் என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானமோ இன்றி காவல்துறை அவர்களை நடத்தியது. 'சீப்பா இருக்குனு ஆளில்லாத அத்துவானத்துல போயி வீட்டைக் கட்டிக்கிட்டா இப்படியெல்லாம்தான் நடக்கும்’, 'இத்தனை ஆயிரம் வீடுங்க இருக்கும்போது  உங்க வீட்டுக்கு மட்டும் வந்திருக்கானுங்கனா உங்க நடத்தையிலதான் ஏதோ கோளாறு இருக்கு’ என்றெல்லாம் வசை பொழிந்து அந்தக் குடும்பத்தை மேலும் உளைச்சலுக்கு ஆளாக்கி புகாரைப் பதியாமல் இருப்பதிலேயே காவல் துறை அதிகாரிகள் முனைப்பு காட்டினர். பிரச்னையைத் திசைதிருப்பி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்குவதில் காவல் துறையினர் எந்த அளவுக்குக் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இது மேலும் ஓர் உதாரணம்.  

வெளியூரிலிருந்து திரும்பி வந்திருந்த நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்த கணத்தின் துயரம் இன்னும் என் மனதில் கெட்டித்துக் கிடக்கிறது. குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்பதற்கும் முன்பாக காவல் துறையின் அவதூறிலிருந்து தப்புவதுதான் அவர்களுடைய முதன்மையான வேண்டுகோளாய் இருந்தது. தங்களோடு ஒரே தொழிற்சாலையில் பணியாற்றுகிற சக தொழிலாளியின் குடும்பத்துக்கு நேர்ந்துவிட்ட இந்தக் கொடுமைகளைப்பற்றி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி தோழர்.சி.முருகேசன், அந்த ஆலையின் தொழிற்சங்க செயலாளர் ரகுராமன் ஆகியோர் தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் தெரிவித்திருந்த தகவல்கள் நிலைமையின் தீவிரத்தை உணரச்செய்தன.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பெண்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவும் உண்மைநிலையை அறிவதற்காகவும் எனது துணைவி மீனாவையும், ஜனநாயக மாதர் சங்கத்தின் செயலாளர் தோழர்.ஜெயந்தியையும் அழைத்துக்கொண்டு சி.ஐ.டி.யு. தோழர் வாசுதேவன் சென்றிருந்தார். பாதிக்கப்பட்டவர்கள் விவரித்திருந்த கொடுமைகளைக் கேட்டு மிகவும் மனமுடைந்து, இயல்பு குலைந்து திரும்பிவந்த இவர்களைத் தேற்றுவதே பெரும்பாடாக இருந்ததென்றால்... பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசிப்பதே துயரமாக இருந்தது.

நடந்த கொடுமைகள் முழுவதையும் விவரித்து உள்ளூர் காவல் துறையின் கேவலமான அணுகுமுறையையும் குறிப்பிட்டு முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு ஒரு மனுவையும், தாங்கள் நீதி பெறுவதற்கு மாதர் சங்கம் துணை நிற்க வேண்டும் என்கிற ஒரு கடிதத்தையும் அந்தக் குடும்பத்தாரிடமிருந்து பெற்று வந்திருந்தார்கள். மனு சி.எம்.செல்லுக்கு அனுப்பப்பட்டது தெரிந்ததும் காவல் துறையின் வசவுகளும் கெடுபிடிகளும் கூடியது. பிராத்தல் கேஸ் என்று கட்டம் கட்டிவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும் என்பது வெறும் மிரட்டலல்ல. சுயமரியாதையோடும் அச்சமற்றும் வாழவிரும்பும் எவரொருவரையும் வீழ்த்துவதற்கு இத்தகைய இழிசெயல்களில் காவல் துறை ஈடுபடுமானால் அதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தவேண்டும் என்கிற நிலையில்தான் ஜூனியர் விகடனைத் தொடர்புகொண்டோம்.

விகடனோடு தொடர்பில் இருந்த நண்பர் யுவராஜ் உடனே அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அவர் எழுதி ஜூ.வியில் வெளியான கட்டுரை, இழைக்கப்பட்ட கொடுமையினை முழுமையாக வெளிக்கொணர்ந்தது. அதற்குப்பிறகு, ஒசூர் ஒசூராக இல்லை... ஆமாம், அடுத்துவந்த நாட்கள் ஒசூரைக் கொதிநிலையின் உச்சத்திற்குக் கொண்டுசென்றன.

தங்கள் ஊருக்கருகே ஒரு குடும்பத்துக்கு இப்படியான கொடுமை நிகழ்ந்து விட்டதைக் கண்டித்து மிடிகிரிப்பள்ளி கிராமத்து மக்களை அணிதிரட்டிய முனிராஜ், சின்னப்பா போன்ற வாலிபர் சங்கத்தினரும் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதால் அவர்கள் ஊரிலிருந்து வரிசையாக ஒருவர்பின் ஒருவராக ஒசூருக்கு வரத்தொடங்கினர். 'அனுமதி இல்லை’ என்று மறித்த போலிசிடம் 'நான் ஒசூருக்கு நடந்தேபோகிறேன்’ என்று தந்திரமாகச் சொல்லிவிட்டுவந்து திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தார்கள். இதேநேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக அவர் பணியாற்றிய ஆலையின் தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து சார் ஆட்சியரிடம் மனு கொடுப்பதென முடிவாகியது. இதற்காக அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் ஒசூர் தொழிற்பேட்டை முழுக்க விநியோகிக்கப்பட்டது. எல்லாத் தொழிலாளர்களும் அந்த ஆலை முன்பு திரண்டு அங்கிருந்து ஊர்வலமாகச் செல்வது என்பதுதான் திட்டம்.  

ஆனால், அத்திப்பள்ளி பார்டரிலேயே ஊர்வலம் தொடங்கிவிட்டது. அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் அங்கேயிருந்து கிளம்ப, வழிநெடுக ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் வெளியேறிய தொழிலாளர்கள் ஊர்வலத்தில் இணைந்து கொண்டே இருக்கிறார்கள். பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனிதக்கூட்டம்...  ஒசூருக்குள் நுழைகிறது ஊர்வலம். மொத்த ஊரையும் ஒரேநேரத்தில் சுற்றி வளைத்துவிட்டதைப் போல எங்கு பார்த்தாலும் ஊர்வலக்காரர்கள். கடைகளை அடைத்துவிட்டு வியாபாரிகளும், அலுவலகங்களை விட்டுவிட்டு அரசாங்க ஊழியர்களும், வீடுகளில் இருந்தவர்களும்கூட வந்து இணைந்துவிட்டார்கள். ஊர்வலத்தின் முகப்பு, சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் நிற்கும்போது கடைசிப் பகுதியினர் இன்னும் நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குள் நுழைந்திருக்கவே இல்லை என்கிற அளவுக்குக் கூட்டம்.

மக்களின் அணிதிரட்சியை எப்போதும் குறைத்தே காட்டும் காவல் துறையினரின் கணக்குப்படியே பெண்கள் 6,000 பேர், ஆண்கள் 15,000 பேர். எங்களிடம் எந்தக் கணக்குமில்லை. கணக்கு வைப்பதற்காக நாங்கள் போராட்டத்தை நடத்தவும் இல்லை. பாதிக்கப்பட்டவருடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் மட்டுமாவது போலீஸின் கெடுபிடிகளை மீறி வந்துவிட்டால் பரவாயில்லையே என்று ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பிருந்த பதைப்பு இப்போது இவ்வளவு பேரையும் எப்படிக் கட்டுக்கோப்பாக  அழைத்துச் செல்லப்போகிறோம் என்பதாக மாறியது. தொடரும் குற்றங்கள், பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி ஒவ்வொரு ஒசூர்வாசியின் மனதிலும் கனன்று கொண்டிருந்த கோபத்தின் சங்கமமாக அந்த ஊர்வலம் மாறி விட்டிருந்தது. யாரும் தகிப்பேற்றாமலே தங்களுடைய சொந்த ஆவேசத்தில் கனன்றுகொண்டிருந்தவர்கள், ஒரு புள்ளியில் இணைவதற்கு மிகச் சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட அறைகூவல்போல அந்த ஊர்வலம் பரிமாணம் பெற்றது.

ஊர்வலத்தின் முடிவில் சார் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, காவல்துறையின் அணுகுமுறையிலும் மாற்றமில்லை. இதனிடையே இந்தக் குற்றத்தில் எவ்வகையிலும் சம்பந்தப்படாத நகரத்தின் வசதி படைத்த சில குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு 'உங்க மகன் பெயர்கூட இந்தக் கேஸில் அடிபடுகிறது. சிக்க வைக்காமல் இருக்க எவ்வளவு தருவீர்கள்?’ என்கிற ரீதியில் பேரத்தையும் வசூல் வேட்டையையும் சில போலீஸ்காரர்கள் தொடங்கிவிட்டிருந்தார்கள். யார் வீட்டு இழவிலும் வாக்கரிசி பொறுக்கும் இந்த ஈனப்புத்தியை நாம் என்னென்று சொல்ல? உள்ளூர் போலீஸ்மீது துளியும் நம்பிக்கையற்றுப் போனநிலையில் அத்தனை தொழிற்சாலைகளிலும் இருந்த சங்கங்கள், வங்கி, இன்சூரன்ஸ், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அமைப்புகள், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய போராட்டக்குழு அமைக்கப்பட்டது. எதிரும் புதிருமான இதற்குமுன் எதற்காகவும் இணைந்திராத அமைப்புகள்கூட இணைந்து நின்றன. அப்பாவிக் குடும்பங்களை மிரட்டி நடத்தப்படுகின்ற வசூல் வேட்டையை போலிஸ் உடனே நிறுத்த வேண்டும் என்பதும் போராட்டக் குழுவின் கோரிக்கையாக இருந்தது.

'உள்ளூர் போலீஸ்மீது நம்பிக்கை இல்லை, வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றுங்கள்’ என்று முதலமைச்சருக்குத் தந்தி கொடுக்குமாறு போராட்டக் குழு விடுத்த அறைகூவலை ஒசூர்வாசிகள் ஏற்றுக்கொண்டவிதம் ஆவேசமூட்டக்கூடியதாய் இருந்தது. அவரவர் கைக்காசை செலவழித்து, தந்தி கொடுக்கவந்து, குவிந்தவர்களைச் சமாளிக்க முடியாமல் ஒசூர் தந்தி அலுவலகம் திண்டாடியது. அந்த அலுவலக ஊழியர்களும் போராட்டக் குழுவில் அங்கம் வகித்ததால் தங்களால் முடிந்தமட்டிலும் தந்திகளை வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் முடியாத நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய ஊர்களின் தந்தி அலுவலகங்களுக்கெல்லாம் கட்டுக்கட்டாக தந்திகள் கொடுத்தனுப்பினோம். ஒசூரில் அமைதியின்மை காணப்படுவதாகவும், தொழில் அமைதி கெடும் சூழல் உருவாகி இருப்பதாகவும் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காணுமாறும் கம்பெனி நிர்வாகங்கள் தமிழக முதல்வரை ஃபேக்ஸ் மூலம் வலியுறுத்தின.  

அடுத்தகட்டமாகப் போராட்டக்குழு உண்ணாவிரதத்துக்கு அறைகூவல் விடுத்தது. காவல்துறை அதற்கும் அனுமதியை மறுக்கவே, தடையை மீறி ஒசூர் பேருந்து நிலையத்தின் முன்பு உண்ணாவிரதம் தொடங்கியது. தங்களுடைய சம்பளம் போனஸ் போன்ற பொருளாதாய கோரிக்கைகளுக்காகக்கூட அதுவரையிலும் போராடியிருக்காத தொழிலாளர்கள், முதல்முறையாக கம்பெனிகளை இழுத்து மூடிவிட்டு வந்திருந்தார்கள். பந்தல் பஸ் நிலையத்தின் பாதி அளவையும் தாண்டி விரிந்துகொண்டேயிருந்தது. முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், வணிகர் அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள் என்று அலையலையாக மக்கள் பந்தலுக்கு வந்துகொண்டே இருந்தார்கள். கைது செய்யப்போவதாய் முதலில் உறுமிக்கொண்டிருந்த போலிஸ், பிறகு பொறுமிக் கொண்டிருந்தது. குற்றவாளிகளிடம் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு மக்களை திசை திருப்புவதற்காக இத்தகைய போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதாகப் போராட்டக் குழுவினர்மீது போலிஸ் கிளப்பிவிட்ட வதந்திகளை ஒசூர்வாசிகள் தூசியளவுக்குக்கூட மதிக்காமல் நிராகரிக்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தார்கள்.  

தம்மை வருத்தி உண்ணா நோன்பிருக்கிறவர்களைப் பார்த்து மனம் வருந்துமளவுக்கு நல்லிதயம் படைத்தவர்களை நாம் எப்போதாவது ஆட்சியாளர்களாகப் பெற்றிருக்கிறோமா? ஒசூர்வாசிகளின் உண்ணாவிரதமும் உதாசீனப்படுத்தப்பட்டது. வேறுவழியின்றி  போராட்டக் குழுவால் ஒசூர் பந்த் அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளில் ஒசூர் வான்பரப்பில் மேகம்கூட நகராது என்கிற அளவுக்கு மக்கள் தாமாக முன்வந்து பந்த்தில் பங்கேற்பதாக அறிவிக்கத் தொடங்கினார்கள். கடைகள், திரையரங்குகள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன. சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை, நாங்களே கில்லாடிகள்தான் என்று காட்டுவதற்காகக் குபுக்கென்று தப்பியோடிய குற்றவாளியை லபக்கென்று பாய்ந்து பிடித்துவிட்டதாகக் காவல் துறை நடத்திய திடீர் நாடகம் கேலிக்கூத்தாகிப்போனது. அந்த இன்ஸ்பெக்டரை அன்றிலிருந்து 'பாயும் புலி பழனி’ என்று ஒசூர் மக்கள் கிண்டலாக அழைக்கத்தொடங்கினர்.

பந்த் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்த மாதர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சுதா சுந்தரராமனும் நானும் சார் ஆட்சியர் மணிவாசகத்தைச் சந்தித்துவிட்டு கூட்டத்திடலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். நாங்கள் வெளியேறியதும் பத்திரிகையாளர்களை அழைத்த சார் ஆட்சியர், 'வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது’ என்று தமிழக அரசு சற்றுமுன் அனுப்பியிருந்த ஃபேக்ஸ் செய்தியைக் காட்டியிருக்கிறார். இப்படியரு அறிவிப்பு வெளிவந்துவிட்ட செய்தியை, அதற்காகப் போராடிய போராட்டக்குழுவினரிடம் தெரிவிக்காமல், எங்களை அனுப்பிவிட்டு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து சார் ஆட்சியரின் அதிகார மமதையை எண்ணிப்பார்த்தால் அற்பமெனப்படுகிறது. எங்களது கோரிக்கையை ஒதுக்கித்தள்ள முடியாமல் போய்விட்டதே என்கிற ஆத்திரத்தை எங்களை உதாசீனம் செய்து தீர்த்துக்கொண்டார்போலும்.  

நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ள நிலையில், பந்த்தை ஒத்திவைப்போம் என்று  ஒசூர்வாசிகளை ஒப்புக்கொள்ள வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது போராட்டக்குழுவுக்கு. பந்த்தை தவிர்ப்பதற்காக இப்படியொரு பொய்யைப் பரப்புகிறார்களோ என்கிற சந்தேகம்தான் அவர்களிடம் வலுவாக இருந்தது. கடைசியில் பந்த் விளக்கப் பொதுக்கூட்டம் பந்த் விலக்கப் பொதுக்கூட்டமானது. சுதாவை பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பும்போது நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அந்நேரத்துக்கு எனது வீட்டுத் தொலைபேசிக்கு ஒரு ஹோட்டல்காரரின் அழைப்பு... 'கேள்விப்பட்டது உண்மையா சார்? அதை நம்பி பந்த்தை ஒத்தி வெச்சாச்சா? அதுசரி, ஒத்திதானே வெச்சிருக்கிறோம். கைவிடலியே... இப்போ அரிசி ஊறப் போடலாம்தானே? தப்பொண்ணும் இல்லையே?’  இந்த உணர்வுதான் இவ்வளவு அறம் நிறைந்த ஒரு போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது என்கிற தெளிவு அப்போதுதான் கிடைத்தது.

போராட்டக் காலத்தின் ஒவ்வொரு நாள் மாலையும் தோழர் ஒருவரின் ஓவியக்கூடம் தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று நள்ளிரவுவரை விவாதம் தொடரும். அவ்வப்போது யாராவது ஒருத்தர் எல்லோரது தேநீருக்கும் சிகரெட்டுக்கும் இரவு உணவுக்கும் செலவழிப்பார்கள். கணக்கு வழக்கில்லாமல் சொந்தப்பணத்தை செலவழித்துக் கொண்டிருந்தார்கள். நடுங்கும் குளிரில் நள்ளிரவுக்குப்பின் வீடு திரும்பி அதிகாலையில் எழுந்து ஷிஃப்டுக்குப் போய்விட்டு மீண்டும் மாலையில் கூடினார்கள். முழுநேர போராட்டக்காரர்களின் முகாம்போல அந்த இடம் மாறிவிட்டிருந்தது. ஊரின் எந்தவொரு மூலையிலும் இதுவே பேச்சாக மாறியதற்கும், போராட்டத்தில் பங்கெடுக்காவிட்டால் குற்றவாளிகள் பக்கம் என்றாகிவிடுமோ என்கிற பதைப்பினை ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கியதற்கும் மூலவிசையாக இருந்து செயல்பட்டவர்கள் இவர்கள் தான். ஜெயந்தி, முருகேசன், விநாயகம், அனந்தராஜ், உத்திரசாமி, வாசுதேவன், பெத்து முருகேசன், சக்திவேல்,  குப்புசாமி போன்ற தலைவர்கள் மட்டுமல்ல, அதுவரை சந்தித்தேயிராத முகமும் பெயருமறியாத நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக போராட்டக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்சென்றார்கள். போராட்டத்தை யாரோ நடத்தவில்லை, ஒவ்வொருவரும் நடத்தினார்கள். ஆமாம்... மக்கள் போராடினார்கள். ஒருங்கிணைக்கிற பணியை மட்டுமே போராட்டக் குழு செய்தது.  

சகமனிதர் மீதான ஒவ்வொருவரது உள்மனசிலும் இருந்த கரிசனங்களை மேலெடுத்து வந்த அந்தப் போராட்டம் இன்றளவும் ஒசூர் மக்களால் நினைவுகூரப்படுகிறது. சம்பந்தா சம்பந்தமில்லாத யாராவது ஒருத்தர், 'இதையெல்லாம் இப்படியே விடக்கூடாது சார்... அந்த மிடிகிரிப்பள்ளிக்கு நடத்தின மாதிரி போராட்டம் நடத்தினால்தான் சரிப்படும்...’ என்று அங்கலாய்ப்பதை இப்போதும்கூட சில நேரங்களில் கேட்கமுடிகிறது.

***
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அவகாசம் கொடுத்துப் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. போலிசை எதிர்த்தால் என்ன நடக்கும் என்று போராட்டக்காரர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்த உள்ளூர் போலிஸ், தெலுங்குப்பட கதாநாயகன் அல்லது வில்லன் ரேஞ்சுக்கு நான் காவல் நிலையத்துக்குள் சென்று பணியிலிருந்த இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாகவும், 'நான் ஆதவன், சுட்டெரிக்கும் சூரியன், உன் யூனிபார்மை கழட்டாமல் விடமாட்டேன்’ (அந்தக் கருமத்தைக் கழட்டி நானென்ன செய்யப்போகிறேன்) என்றெல்லாம் டயலாக் பேசியதாகவும் இரண்டு வருடங்களுக்கு முந்தைய தேதியில் ஒரு பொய்வழக்கைப் பதிந்து பிடிவாரன்ட்டும் பிறப்பிக்க வைத்தார்கள். என்னை முதல் குற்றவாளியாகக் காட்டிய அந்தப் பொய்வழக்கில் சௌந்திரராஜன், சந்திரசேகர், சங்கரன், ஜி.சேகர் ஆகியோரும் இணைக்கப்பட்டிருந்தார்கள். மூன்றாண்டு காலம் எங்களை அலையவிட்ட திருப்திதான் போலிசுக்கு மிஞ்சியது. நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

சி.பி.சி.ஐ.டி-யின் நடவடிக்கையில் முன்னேற்றமில்லாத நிலையில் போராட்டக் குழுவினர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்து அழுத்தங்களை உருவாக்கியதன் பின்னணியில் ஒருவழியாக சி.பி.சி.ஐ.டி., குற்றவாளிகள் ஆறுபேரைக் கண்டறிந்து கைது செய்தது. எஞ்சிய இருவர் இந்த இடைப்பட்டக் காலத்தில் இறந்துவிட்டிருந்தார்கள். குற்றவாளிகள் அனைவருமே ஒசூரின் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்தவர்கள். கும்பலாகச் சென்று இதுபோன்ற குற்றங்களை இழைப்பவர்கள். விசாரணை நீதிமன்றம் அவர்களுக்குத் தண்டனையும் அபராதமும் விதித்து 20.07.2004-ல் தீர்ப்பளித்தது. ஆனால், இறந்துவிட்டவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை, தண்டனை. அபராதம் என்று போலிஸ், அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஒசூர் விசாரணை நீதிமன்றம் ஆகியவை செய்த தவறுகளையும் குளறுபடிகளையும் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 2010-ல் குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள்.

நீதிக்கான போராட்டம் நீதிமன்றத்தோடு முடிவடைவதில்லை. ஆனாலும் அதுவே நடைமுறையாக இருக்கிறது. சட்டரீதியான காரணங்களின் பேரில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும்கூட உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் உடையது. போலிஸ், அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஒசூர் விசாரணை நீதிமன்றம் ஆகியவை இவ்வழக்கை நடத்திய விதம் குறித்துப் பல்வேறு ஐயங்களையும் கண்டனங்களையும் கேள்விகளையும் வெளிப்படுத்தியது அந்தத் தீர்ப்பு. பெஸ்ட் பேக்கரி வழக்கை மேற்கோள் காட்டி, ஒரு மறு விசாரணைக்கு முழுப் பொருத்தமுடையதாக இவ்வழக்கு இருப்பினும், மிக நீண்டகாலம் கழிந்துவிட்ட நிலையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து சிறையிலேயே இருந்துவிட்டபடியாலும், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் திருமணமாகி இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள இன்றைய நிலையில் இப்பிரச்னையில் அவர்கள் ஆர்வம் காட்டாதிருப்பதையும் கணக்கில்கொண்டு ஒரு மறு விசாரணக்கு உத்திரவிடுவதைத் தவிர்ப்பதாகத் தீர்ப்பு தெரிவிக்கிறது  (http://www.indiankanoon.org/doc/1799351/?type=print)

இந்தத் தீர்ப்பின்மீது மறுமுறையீடு செய்து தீர்ப்பை மாற்றிப் பெறுவதற்கான வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டது மட்டுமல்ல... பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்கவேண்டும் என்று அதே தீர்ப்பில் உயர்நீதிமன்றம் சொல்லி இருப்பதையும் நிறைவேற்றாமல் இருக்கிறது. இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ஏதாவது முயற்சி எடுத்து, அதன்வழியாக ஊடகங்களில் மீண்டும் கவனம் பெற நேரிட்டுவிடுமோ என்கிற தயக்கத்தினாலும்கூட தரும்போது தரட்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பம் மௌனமாக இருக்கலாம். ஆனால், தேடிப்போய் இழப்பீட்டைக் கொடுப்பதுதானே ஒரு அரசுக்குரிய லட்சணம்? தனது முந்தைய ஆட்சியில் நிகழ்ந்த குற்றங்களுக்கான பரிகாரத்தை இப்போதைய ஆட்சியிலாவது  தமிழக முதல்வர் காலந்தாழ்த்தாது செய்வாரா?''



(சொல்வேன்...)

நன்றி: en.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...