திங்கள், நவம்பர் 19

தருமபுரியில் தலித்துகள் மீதான வன்னியர் - பா.ம.க.வின் அழித்தொழிப்பு வன்கொடுமைகள் பற்றிய அறிக்கை

தருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து - கிருஷ்ணாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்கள் நவம்பர் 7ஆம் தேதி மாலை தொடங்கி முன்னிரவு வரையிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அப்பகுதி வன்னிய கிராமத்தினரால் கொள்ளையிடப்பட்டு கொளுத்தப்பட்டன. இத்தாக்குதல் தொடர்பாக உண்மை அறியும் களஆய்வு மேற்கொள்ள நவம்பர் 10-ஆம் தேதி கல்வியாளர்கள் - எழுத்தாளர்கள் - பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு நேரில் சென்றது. மூன்று கிராமங்களில் தாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் கண்ணுற்றதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்களையும், அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளையும், சில அரசு ஆவணங்களையும் கண்டு இக்குழு தயாரித்த அறிக்கை இது.

களஆய்வில் பங்கேற்றோர் :-
1.    முனைவர் சி. இலட்சுமணன் (Co-ordinator, Dalit Intellectual Collective)
2.    எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் (Intellectual Circle for Dalit Actions )
3.    எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர், புதுவிசை)
4.    பேரா. கி. பார்த்திபராஜா
5.    கவிஞர் சுகிர்தராணி
6. எழுத்தாளர் யுவபாரதி மணிகண்டன் (தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு)
7.    பத்திரிகையாளர் ஜெய்கணேஷ்
8.    மருத்துவர் திராவிடன் அம்பேத்கர்
மற்றும் பெங்களுரு சுதந்திர மென்பொருள் இயக்கம் சார்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள்
9.    செந்தில்
10.  ரகுராம்
11.  சரத்
12.  ரமீஷ்

காரணமும் தாக்குதலும் :

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் (23) என்ற தலித் இளைஞனும் செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா (21) என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக உருவான பிரச்சினை, மூன்று தலித் கிராமங்களுக்கு எதிரான பெருந்தாக்குதலாக வடிவெடுத்திருக்கிறது. ‘தங்கள் சாதிப் பெண்ணைப் பறையன் காதலிக்கக் கூடாது’ என்று கடந்த ஜனவரி மாதத்திலேயே இளவரசன் வீட்டின் மீது வன்னியர்கள் தாக்குதல் தொடுத்தனர். தொடர் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் மீறி 14-10-2012ஆம் தேதி இளவரசனும் திவ்யாவும் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பிறகு தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி சேலம் கோட்ட டி.ஐ.ஜி.யிடமும் தருமபுரி மாவட்ட காவல் துறையிலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திவ்யா குடும்பத்தினர் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலிருந்தனர். ஆனால் இப்பிரச்சினையில் திவ்யாவின் உறவினர்களும் அவர்களைச் சேர்ந்த வன்னியர்களும் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்திவந்தனர். அக்டோபர் 25-ஆம் தேதி முதலே இப்பகுதியில் இது தொடர்பாக பதற்றம் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக 04-11-2012-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன் தலைமையில் வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிற பா.ம.க. நிர்வாகிகளும், மாவட்ட வன்னியர் சங்கத்தினரும் நாயக்கன் கொட்டாயைச் சுற்றியிருந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் ‘சாதி மீறித் திருமணம் செய்யும் போக்கை வளரவிடக்கூடாது, இதற்குத் தக்க பாடம் கற்பிக்கவேண்டும்’ என்று உணர்ச்சிவசமான பேச்சுகள் பேசப்பட்டன. பஞ்சாயத்து முடிவின் படி, ‘7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லையெனில் காலனியில் ஒரு வீடு கூட இருக்காது’ என்று நத்தம் காலனியைச் சேர்ந்த சேட்டு என்பவரிடம் கூறி அனுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 7-ஆம் தேதி திவ்யாவின் குடும்பம் சார்பாக ஐந்து பேர் சென்று திவ்யாவைத் தங்களோடு வரும்படி கேட்டபோது, அவர் “நான் என் கணவரை விட்டு வரமாட்டேன். வந்தால் என்னைக் கொன்றுவிடுவீர்கள்” என்று கூறி வர மறுத்துவிட்டார். இதற்குப் பிறகே, முழுபோதையிலிருக்க வைக்கப்பட்டிருந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் அன்று மாலை இறந்துள்ளார்.

 மாலை 4 மணியளவில் நாகராஜின் பிணத்தைச் செல்லங்கொட்டாயிலிருந்து தருமபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்குக் கொணர்ந்த வன்னியர்கள், தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி ராஜா, கொட்டாவூர் மாது ஆகியோர் தலைமையில், அப்பிணத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு பிரதான சாலையின் வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று அறுத்து சாலையின் குறுக்கே போடப்பட்டது. அதே போல பிரதான சாலையின் தெற்கே எஸ்.கொட்டாவூரிலும் மரம் வெட்டி சாலை மறிக்கப்பட்டது. சாலைக்கு அருகே செங்கல் சூளைக்காக வெட்டிப் போடப்பட்டிருந்த பனைமரங்களையும் சாலையின் குறுக்கே போட்டு சாலையை முழுமையாக மறித்தனர். போலீசார் அம்மரங்களைத் தாண்டி வராமல் அங்கேயே நின்று கொண்டனர்.

இந்நிலையில்தான், திட்டமிட்டபடி ஆங்காங்கிருந்து வரத்தொடங்கியிருந்த வன்னியர்களும், மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்களும் சேர்ந்து நத்தம் காலனியில் புகுந்து எல்லா வீடுகளையும் தாக்கத் தொடங்கினர். காலனியின் பெரும்பாலான ஆண்கள் வேலை காரணமாக வெளியூர்களில் இருந்தனர். ஊரிலிருந்த பெண்கள் உள்ளுரில் வேலைக்குச் சென்றிருந்தனர். குழந்தைகள் பள்ளிகளை விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம். நத்தம் காலனியைத் தாக்கி முடித்த பின்பு, அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணா நகர், அங்கிருந்து உள்ளடங்கியுள்ள கிராமமான கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்களுக்கும் வாகனங்களில் தேடிச் சென்று தாக்குதல் நடத்தினர். மாலை 4.30 மணிக்கு மேல் தொடங்கிய தாக்குதல் ஒவ்வொரு ஊராக, இரவு 9.30 மணி வரை நீடித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் எல்லா வீடுகளும் தவறாமல் தாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டையும் மறுபடி செப்பனிட முடியாத அளவிற்குத் தீயிட்டு அழித்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகைகள் மற்றும் சில உணவுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பிறகு பீரோ முழுமையாக உடைக்கப்பட்டிருக்கிறது அல்லது எரிக்கப்பட்டிருக்கிறது. கணிசமான வீடுகளிலிருந்த மோட்டார் சைக்கிள்கள், வாஷிங் மெஷின்கள் போன்றவையும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளிலுமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர், ஆடுகள் போன்றவற்றை வன்னியர்கள் தாம் கொண்டுவந்திருந்த வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். 4 கார்கள் மற்றும் 72 பைக்குகள் எரிக்கப்பட்டுள்ளன. கடப்பாரை, தடி, வெயிட் லிஃப்டிங் இரும்புத் தண்டு, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், திறந்து விடப்பட்ட சில சிலிண்டர்கள் போன்றவை மூலம் தாக்குதலும் தீவைப்பும் நடந்துள்ளன. வன்னியர்கள் இத்தகைய தாக்குதலைச் சிறு எதிர்ப்பின்றி நடத்தியள்ளனர்.


தலித்துகளின் சமூக-பொருளாதார நிலையும் அதன் மீதான தாக்குதலும் :

தாக்குதல் நடந்த மூன்று ஊர்களிலுமுள்ள 98 சதவீதம் தலித்துகளுக்கு நிலம் இல்லை. இரண்டொருவர் தவிர வேறு எவருக்கும் அரசு வேலையோ நிரந்தர உத்தியோகமோ கிடையாது. கூலிகளாகவும் முறைசாரா தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆண்கள் பெரும்பான்மையும் பெங்களுரில் கட்டிட வேலையிலும், சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும் கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற நகரங்களில் பிறவேலைகளும் செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த பணத்தில்தான் வீடு, ஓரளவு வீட்டுபயோகச் சாமான்களை ஈட்டியுள்ளனர். சாதி இந்துக்களின் சார்பின்றி தன்னிறைவுடன் சுயமாகப் பொருளாதார ரீதியாகச் சிறிதளவு முன்னேறியுள்ளனர். இந்நிலையில்தான் இக்கிராமங்களில் முழுக்க முழுக்க இந்த வீடுகளும் வீட்டுச் சாமான்களும் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. ஊரில் வெகு சில குடிசைகளைத் தவிர மற்றவை காங்கிரீட், மாடி மற்றும் ஓட்டு வீடுகள். இவற்றில் பெரும்பாலானவை அரசு உதவியோடு தம் பணத்தையும் கொண்டு கட்டிய வீடுகள். இத்தாக்குதலில் வன்னியர் தரப்பில் 2000 பேர் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர். ஏராளமான பைக்குகளும் வேன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய இத்தாக்குதலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட வன்னியர் கிராமங்களின் பெயர்கள் நம் குழுவினரிடம் தரப்பட்டன.

அவை:
1.செல்லங்கொட்டாய் 2.வாணியன்கொட்டாய் 3.கதிர்நாயக்கனஹள்ளி 4.புளியம்பட்டி
5.மொளகானூர் 6.நாயக்கன்கொட்டாய் 7.வெள்ளாளப்பட்டி 8.கொண்டம்பட்டி 9.சீராம்பட்டி
10.கிருஷ்ணாபுரம் 11.வன்னியக்குளம் 12.திம்பம்பட்டி 13.கம்பைநல்லூர் 14.சவுக்குத்தோப்பு
15.கொல்லம்பட்டி 16.குப்பூர் 17.செங்கல்மேடு 18.மாரவாடி பழையூர் 19.செம்மாந்தகுப்பம்
20.குறும்பட்டி 21.கொட்டாவூர்  22.செட்டியூர் 23.சோலைக்கொட்டாய்

மொத்தத்தில் 7-ஆம் தேதி இத்தாக்குதலை முதலில் தொடங்கிவைத்தவர்களில் ஒருவரான முருகன் என்பவர் ஏற்கனவே தலித் பெண் ஒருவரைப் பாலியல் வன்முறை செய்து கொன்ற வழக்கில் தொடர்புடையவர். மற்றொருவர் வாணியன்கொட்டாயைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சீனிவாசன் ஆவார்.

ஏற்கனவே, தலித் மக்களோடு பழகுவதோடு, அவர்தம் வீடுகளுக்கு வந்து செல்லும் வன்னியர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று தலித் மக்கள் கூறும்போது சாதியின் ஆகிருதி எந்த பூச்சுகளாலும் மறைந்துவிடுவதில்லை என்பதையே அறியமுடிந்தது. ‘ஒண்ணா மண்ணா பழகினால் சாதி ஒன்றாகிவிடுமா?’ என்று கேட்டு தாக்கியதாக அழுதார் ஒரு பெண். ‘சேர்த்து வைச்சிருந்ததெல்லாம் வெந்துபோச்சு. இனி எங்களைத்தான் வேகவைக்கணும்’ என்று அழுதார் இன்னொரு பெண். மகளிர் சுயஉதவிக்குழு மூலம் திருமணம் மற்றும தீபாவளிப் பண்டிகைக்காக முன்பணமாக எடுக்கப்பட்ட 20,000 ரூபாயும், சிறு வியாபாரமாக இயங்கிவந்த கடை, மருந்து விற்பனைப் பிரதிநிதி ஒருவரின் ஒரு வார வசூல்நிதி போன்றவையும் கொள்ளையில் பறிபோனதை அறியமுடிந்தது. மொத்தத்தில் தலித்துகளின் பொருளாதார மேம்பாடு இத்தாக்குதலில் குறிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதே போன்று 31-08-1995இல் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் 300 தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும், அம்மக்களின் பொருளாதாரத் தற்சார்பே குறிவைத்துத் தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலிலும் அதுவே நடந்துள்ளது. ஏறக்குறைய பத்து கொடியங்குளத்திற்கு இணையாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

கண்டறிந்தவை :

1.    இப்பகுதியில் தலித்-வன்னியர் சாதிக் கலப்பு மணங்கள் மட்டுமின்றி, பிற சாதிக் கலப்பு மணங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அவற்றிற்கு ஆதிக்கச் சாதித் தரப்பின் ஏற்பின்மையோ, அவ்வப்போதான எதிர்ப்போ மட்டுமே இருந்து வந்துள்ளன. மாறாக, இதுபோன்ற பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. ஆனால், இந்த முறை இத்தகைய வன்முறை நடத்தப்பட்டதற்குப் பின்னணியாய் அரசியல் காரணம் இருந்திருக்கிறது. அதாவது, 2012 சித்திரா பௌர்ணமியன்று வன்னியர்களின் சாதி உணர்ச்சியை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு “வன்னியர் பெண்களைக் காதலித்து மணக்கும் பிற சாதியினரை (தலித்துகளை) அடக்கவேண்டும். அவ்வாறு அடக்குபவர்களுக்குக் கட்சி துணை நிற்கும்” என்று பேசினார். இதுவரையிலும் சாதிக்கலப்பு மணத்திற்கு எதிராகப் புழுங்கிக் கொண்டிருந்த வன்னியர்களுக்கு குருவின் இப்பேச்சு, உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது. தருமபுரி தாக்குதலுக்கும் இப்பேச்சே முக்கியக் காரணமாய் இருந்திருக்கிறது.

2.    மேலும் நவம்பர் 4-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் திவ்யா-இளவரசன் திருமணத்திற்கு எதிராகக் கூடிய வன்னியர்களின் கூட்டத்திலும், 7-ஆம் தேதி 3 தலித் கிராமங்கள் மீதான தாக்குதலிலும் தாக்குதலுக்குப் பிறகு வன்னியர்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றவும், பா.ம.க. முன்னாள் எம்.பி., கட்சியின் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பதிலிருந்து இந்தப் பின்னணியை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். வன்னியர்களின் இந்த வெறிச் செயல்களுக்கு குருவின் இப்பேச்சு நேரடியாகவும் மறைமுகமாகவும் உளவியல் பலத்தைத் தந்திருக்கிறது. இளவரசன்-திவ்யா திருமணத்திற்கு மட்டுமல்ல, நாயக்கன்கொட்டாய் பகுதியில் கடந்த காலங்களில் இதுபோன்ற சாதிக் கலப்பு மணங்கள் மீதான கோபத்தைத் தீர்த்துக் கொள்ளவும் இந்தத் தருணத்தையே வன்னியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

 3.    நத்தம் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு வெகு தொலைவிலிருந்த கொண்டம்பட்டியைத் தேடிச் சென்று தாக்கிய காரணம் எதுவென்றும் அறியமுடிந்தது. அதாவது, கடந்த ஆண்டு கொண்டம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி என்ற தலித் இளைஞர், வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடியமர்ந்துவிட்டார். அப்போது நேதாஜி வீட்டை மட்டும் தாக்கிவிட்டுச் சென்ற வன்னியர் கூட்டம், இப்பொழுது இதுபோன்று திருமணம் நடந்த ஊர்களையெல்லாம் நினைவுபடுத்திச் சென்று தாக்கியிருக்கிறது. அந்த வகையில்தான் கொண்டம்பட்டி முழுஊரையும் துவம்சம் செய்திருக்கிறது. குறிப்பிட்ட ஒருவர் மீதான கோபத்திற்காக கூட்டு வன்முறையைத் தலித் சமூகம் எதிர்கொண்டிருக்கிறது. வயல்களில் தானியக் கதிர்களை எந்தப் பறவைகளும்; நெருங்கிவிடக்கூடாது என்று அச்சுறுத்துவதற்காக, ஒரு காகத்தைக் கொன்று வயலின் நடுவே கட்டித் தொங்கவிடுவார்கள் விவசாயிகள். அதுபோன்று தனித்தனியே அச்சுறுத்தி இதுபோன்ற காதல் மணங்களைத் தடுப்பதைவிட, ஒரு ஊரையே அழிப்பதன் மூலம், அதுபோன்ற எண்ணமே இனி தலித்துகளுக்கு எழக்கூடாது என்ற நோக்கத்தோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

4.    இத்தாக்குதல் திவ்யாவின் தந்தை நாகராஜ் இறந்ததை ஒட்டி நடந்த உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வு போன்று காட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறாக, நாகராஜின் சாவை ஒரு சாக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப நாகராஜ் மரணத்திற்குத் தூண்டப்பட்டிருக்கலாம் என்று எங்கள் குழு கருதுகிறது. நாகராஜின் பிணத்தோடு மறியல் செய்யப்பட்டது என்பதுதான் உண்மையே தவிர, அவரது மரணம் தற்கொலைதானா என்று ஆராய வேண்டியுள்ளது. எனவே, நாகராஜின் பிரேதப் பரிசோதனை, அவர் இறப்பதற்கு முன்பு அவருக்குச் சொந்த சாதியினரால் தரப்பட்ட நெருக்கடிகள், அவமானங்கள் பற்றியெல்லாம் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, நவம்பர் 7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டுமென்று, தலித்துகளை நோக்கிக் கெடு விதிக்கப்பட்டது. நவம்பர் 7ஆம் தேதி திவ்யா வரமறுத்த நிலையிலும், நாகராஜின் மரணத்தினாலும் இத்தாக்குதல் திட்டமிடப்பட்டது. முதலில் நாகராஜின் மரணமே தற்கொலைதானா? என்று ஆராயவேண்டியிருக்கிறது. நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் நடந்ததிலிருந்தே அவருக்கு மனரீதியான நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டன. அந்த நிலையில்தான் 7-ஆம் தேதி தன் மகள் திரும்பி வரமறுத்த நிலையில் அவர் இறந்திருக்கிறார். இந்த மரணம் ஊர்க்காரர்களின் நெருக்கடிகளுக்குப் பயந்து கூட நடந்திருக்கலாம். மேலும் அவர் கடைசி 4 நாட்களாகத் தொடர்ந்து குடிபோதையில் வைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை, அவர் இறந்திருக்காவிட்டாலும் கூட அன்று மாலை தாக்குதலுக்கு வாய்ப்பிருந்தது என்றே அந்த ஊர்க்காரர்களில் சிலர் நம்மிடம் தெரிவித்தனர். ஆனால், நாகராஜின் சாவு அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாகிப் போனது. அதனால்தான் கடப்பரை உள்ளிட்ட ஆயுதங்கள், மூன்று கிராமங்களை எரிக்கக் கூடிய அளவிற்குப் பல லிட்டர் பெட்ரோல், தின்னர் முதலியவை சேகரிக்கப்பட்டு, அதற்கான ஜனத்திரட்சியும் அங்கே மையம் கொண்டது. நத்தம் காலனியில் மட்டும் 150 பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தாலொழிய இவ்வளவு பெட்ரோல், பாட்டில்கள், திரிகள், ஆயுதங்கள் கொண்டு இத்தகைய பெருந்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கமுடியாது. இரண்டொருவர் தாக்கப்பட்டதைத் தவிர்த்து, யாதொரு உயிர்ச்சேதமும் ஏற்படாவண்ணம் தலித்துகளின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

 5.    இத்தாக்குதலைத் தடுப்பதில் காவல்துறையும் அதன் உளவுப்பிரிவும் மாவட்ட நிர்வாகமும் பெரிய அளவில் தோல்வி அடைந்திருக்கின்றன. நாகராஜின் பிணத்தை வைத்துக்கொண்டு வன்னியர்கள் மறியல் செய்யும் போது, சாலையில் வெட்டிப்போட்ட மரத்தைத் தாண்டி போலீஸ் வராமல் நின்றுகொண்டது. சாலையில் மரங்களைப் போட்டிருந்தபோதே அங்கே 300 போலீஸ் வந்துவிட்ட போதிலும், அவற்றைத் தாண்டிவந்து, சில மணிநேரங்கள் நீடித்த தாக்குதலைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

6.    தருமபுரி மாவட்டத்தில் 1987-இல் பிசிஆர் சட்டத்தின் கீழ் ஒரு புகார் மற்றும் 1989 முதல் 2012 வரையில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 291 புகார்கள்; என பதிவானவை மொத்தம் 292 புகார்கள்.  இவற்றில் காவல்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டவை 166 மற்றும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டவை 81 என்ற நிலையில் வெறும் 10 புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். பதிவான புகார்களில் 3.3 சதவீதப் புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர் என்ற புள்ளிவிவரம் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மீதான காவல்துறையின் அக்கறையின்மைக்குச் சான்றாக அமைகிறது.

7.    இப்பகுதி முன்பு நக்சல்பாரிகள் இயக்கம் செயற்பட்ட பகுதி என்ற முறையில், கியூ பிரிவு போலீசாரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்ற முறையில் கடந்த ஒரு மாதமாகப் புகைந்து வந்துள்ள இப்பிரச்சியை அது அறியத் தவறியிருக்கிறது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து 7 பேர் கொண்ட போலீஸ் காவல் இருந்துவந்தும் முன்கூட்டியே அறிந்து அத்தாக்குதலைத் தடுக்கத்தவறியிருக்கிறது காவல்துறை. ஏறக்குறைய 3 டிஎஸ்பி-க்களுடைய கவனத்தின்கீழ் இப்பகுதி இருந்தபோதிலும் இத்தாக்குதல் தடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8.    இரவு 9.30 மணிவரையிலும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இரவு 11 மணியளவில் லாரி ஒன்றை எடுத்துவந்து அண்ணா நகர் தலித் குடியிருப்புகளிலிருந்த ஆடுகளை வன்னியர்கள் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, தாக்குதல் நடந்துமுடிந்த நெடுநேரம் வரையிலும் கூட காவல்துறை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதையே அறியமுடிகிறது. மறுநாள் கைது செய்யப்பட்ட 92 பேரையும் கூட, வெளியூர் பணியிலிருந்து திரும்பிய மாவட்ட எஸ்.பி. அஸ்ராகர்க் வந்துதான் கைது செய்திருக்கிறார். அஸ்ரா கர்க்கின் பணியைப் பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியோடு நினைவு கூர்ந்ததைப் பார்க்கமுடிந்தது.

பரிந்துரைகள் :

1.    கற்பனைக்கெட்டாத தாக்குதல் என்ற வகையில் இக்கிராமங்களின் சேதங்களைப் பார்வையிடத் தமிழக முதலமைச்சர் அங்கு நேரடியாகச் செல்லவேண்டும். அவரது வருகையினால் அரசு எந்திரம் துரிதமாகச் செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனரீதியான ஆறுதலும் கிடைக்கும்.

 2.    தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (1989) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு முழுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுவதோடு, தாக்குதல் நடத்தியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

3.    அரசு உடனடியாக அதிவிரைவு தனிநீதிமன்றத்தை இம்மூன்று கிராமங்களில் ஏதேனுமொன்றில் அமைத்து, நீதிவிசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். (உ-ம்) ஆந்திர மாநிலம் சுண்டூர்ப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிநீதிமன்றம்.

4.    2012 சித்திரா பௌர்ணமியன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு கலப்புமணத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்திலான பேச்சே, இத்தகைய தாக்குதலுக்கு ஊக்கமளிக்கிறது. எனவே, காடுவெட்டி குரு மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

5.    கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும் அண்மைக் காலமாக இதே போன்று கலப்புமணத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. சடடத்திற்குப் புறம்பான இது போன்ற பேச்சுகளையும், அமைப்புகளையும் தடை செய்யவேண்டுமென்று கோருகிறோம்.

6.    கடும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள இம்மூன்று கிராமங்களையும் பேரிடர் அழிவாக அறிவித்து, புதிய வீடுகளை முழுமையான அளவில் கட்டித்தரவேண்டும். மறுகுடியமர்வு நடத்தப்படும்வரை அம்மக்களுக்கான மாற்று வாழிடத்தை அரசே உறுதி செய்து தரவேண்டும். சேதங்களை உரிய முறையில் மதிப்பிடும் வகையில், தகுதிவாய்ந்த இழப்பு மதிப்பீட்டுக் குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

7.    தாக்குதலாலும் தீயினாலும் மாணவர்களின் சான்றிதழ்களும் மக்களின் குடும்ப அட்டை, சொத்துப்பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைத் தரும் வகையில் தனி அதிகாரிகளை அந்தந்த ஊர்களிலேயே அமர்த்தி வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

8.    பொருளாதார ரீதியான தாக்குதல் என்ற முறையில் சேத மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்குமென்று இக்குழு கருதுகிறது. அதனால் அரசு வழங்கியுள்ள ரூ.50,000/- போதுமானதல்ல. எனவே, வீட்டிற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும், நிலமும் வழங்கவேண்டும்.

 9.    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை இனங்கண்டு அவற்றைத் தலித் மக்களுக்கு வழங்கவேண்டும்.

10.   இத்தாக்குதலைத் தடுக்க மாவட்ட காவல்துறையும் நிர்வாகமும் தவறின என்ற முறையில் அவர்கள் மீது தனிவிசாரணை மேற்கொள்ளவேண்டும். மேலும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அடிப்படையில் கடமை செய்யத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

11. பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இப்பாதிப்புகளிலிருந்து உளவியல் ரீதியாக அவர்களை மீட்டெடுக்கும் வகையில், உரிய ஆற்றுப்படுத்தலுடன் கூடிய ஆலோசனைகளை வழங்கத் (Guidance and Counselling) தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

******
தொடர்புக்கு : 

1.   Dr.C.Lakshmanan, Co-ordinator, Dalit Intellectual Collective, Chennai /      lchinnaiyan@gmail.com / 9884527359

2.   Stalin Rajangam, Writer, Intellectual Circle for Dalit Actions, Madurai / stalinrajangam@gmail.com / 9994335339                                                                                               (புகைப்படங்கள்: சரத்)

9 கருத்துகள்:

  1. 1. திருமணம் செய்துகொண்ட இளவரசனின் வயது 23 என்பது தவறான தகவல். 19 தான் 23 அல்ல.

    2. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் வன்னியரல்லாத சாதியினர் பலர் உள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தத் தகவல் இந்த அறிக்கையில் ஏன் இல்லை?

    3. தாக்குதலில் ஈடுபட்டதாக பாமக தவிர மற்ற கட்சிகளின் விவரம் ஏன் இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருள், 1.இளவரசனின் வயது பற்றிய பிரச்சனைதான் இவ்வளவு கொடிய அழித்தொழிப்புக்கு காரணம் என்று சொல்ல வருகிறீர்களா...? 21 வயது நிரம்பிய தலித்துகளுக்கு அவர்கள் விரும்புகிற பெண் எந்த சாதியிலிருந்தாலும் நீங்களே முன்னின்று திருமணம் செய்துவைத்துவிடுவீர்களா? 2.வன்னியரல்லாத சாதியினர் ஒருசிலரும் உங்களது இழிவான நோக்கங்களுக்காக உங்களால்தான் அணிதிரட்டப்பட்டவர்கள். சரி, அந்த ஒருசிலர்தான் வன்னியர்களை அழைத்துக்கொண்டு போய் இப்படி அட்டூழியம் செய்துவிட்டார்கள் என்று சொல்லும் திட்டம் ஏதாவது மருத்துவர் மாலடிமைக்கு இருக்கிறதா? 3.மற்ற கட்சிகளில் இருந்தாலும் அவர்கள் வன்னியர் சங்கம்/ சாதி அடிப்படையில் பா.ம.க.வுடன் இணைந்தவர்களே.

      நீக்கு
    2. உண்மை அறியும் குழு என்று சொல்லிவிட்டு, சில உண்மைகள் விடுபட்டுள்ளதையே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

      நீக்கு
    3. அப்படி என்னதான் உண்மையை நீங்கள் கண்டு சொல்லிவிட்டிர்கள்? /பாமகவினர் மட்டுமே கலவரத்தில் ஈடுபட்டனர் என்பது அயோக்கியத் தனமான் குற்றச்சாட்டு. தற்கொலைச் செய்துகொண்ட நாகராஜன், நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியைச் சேர்ந்தவர். இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களில் அதிமுகவின் பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எனப் பல கட்சியினரும் உள்ளனர்.
      கைதானவர்களில் அதிக அளவில் 17 பேர் அதிமுகவினர். கைதானவர்களில் அதிமுக மட்டுமில்லாமல் தி.மு.க (16 பேர்), ம.தி.மு.க (5 பேர்), தமிழக விவசாயிகள் சங்கம் (12 பேர்), பா.ம.க (10 பேர்), தே.மு.தி.க (7 பேர்), கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியினரும் உள்ளனர். எனவே இதனை பா.ம.க நடத்திய தாக்குதல் எனக் கூறுவது சிலருடைய குறுகிய அரசியல் நோக்கமே./ - என்ற உங்களின் வாதத்தை மறுபக்கம் தள்ளினால், அழித்தொழிப்புக்கு ஆளானவர்களில் பலரும்கூட அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருக்கும்போது ஏன் தாக்கப்பட்டார்கள்? உட்கட்சிப்பூசல் என்றுகூட சொல்லிவிட துணிவீரோ?

      நீக்கு
    4. இளவரசனின் வயது 19. ஆனால், மேலே உள்ள அறிக்கையில் 23 என சட்டபூர்வ திருமண வயதாக காட்டப்பட்டுள்ளது. உண்மை அறியும் குழுவால் உண்மையைக் கண்டறிய முடியாமல் போனது ஏனோ?

      பாமகவினர் இருந்தனர், வன்னியர்கள் இருந்தனர் என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால், பிற கட்சிகளும் இருந்தனர், பிற சாதியினரும் இருந்தனர் என்கிற உண்மை விடுபட்டிருப்பது ஏன்?

      "உண்மை இதுதான்" என்று சென்னையிலேயே முடிவு செய்துவிட்டு "உண்மையை அறிய" சென்றால் இப்படிதான் இருக்கும்!

      நீக்கு
    5. 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்' என்று கேட்டுக்கொண்டே இருநத வீராச்சாமி செத்துட்டார்னு நினைச்சிக்கிட்டிருந்தா அருள் வடிவில் இன்னும் இருக்கிறார்போல. நாம் கண்டடைய வேண்டிய உண்மை இதுவல்ல அருள். பத்தொன்பதா இருபத்தி மூன்றா என்பதுதான் உங்களுக்கு பிரச்னை என்றால் அதுபற்றி சொல்ல எனக்கொன்றும் இல்லை. 21 வயது பூர்த்தியான தலித்துகள் எல்லோருக்கும்கூட வேண்டாம், ஒரே ஒருத்தருக்கு உங்கள் சாதியில் கல்யாணம் செய்துவிடுவீர்களா? முடிந்தால் பதில் சொல்லுங்கள்.

      நீக்கு
  2. //உங்களிடம் ஒரே ஒரு கேள்வி... ஒரு வன்னியர் சாதி 19 வயது ஆண் ஒரு 20 வயது வன்னியர் சாதி பெண் காதல் திருமண செய்துக்கொண்டால் உங்களது எதிர்வினை இப்படிதான் இருக்குமா? அல்லது வன்னியர் சக வன்னியர் வீடுகளை சூறையாடுவார்களா... பிறகு 19வயது பையன் தான் என்று சான்றிதழ்களுடன் பதிவு எழுதுவீர்களா?

    தங்களின் மேலான பதிவுகள் எனது மெயிலுக்கு தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது தயவுசெய்து unsubscribe செய்யவும், நன்றி :) //

    மேற்கூறியவை நான் அருள்க்கு இட்ட கமெண்ட் அதை அவர் ப்ளாகில் delete செய்து இருக்கிறார்... ஆனால் தொடர்ந்து அவர் பதிவுகள் எனக்கு வந்துக் கொண்டிக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. தோழர் அருள்.

    அவர்கள் திருமண வயதை அடைவதற்குள் திருமணம் செய்துவிட்டார்கள் என்று விவாதம் செய்யும் நீங்கள். நாங்கள் தான் தலைமையேற்று தருமபுரி கலவரத்தை நடத்தினொம் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?.

    வன்னியர் அல்லாத மற்ற சாதியினர் பலர் உள்ளனர் என்றால். தாழ்தப்பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து சாதியினரை நீங்கள் ஒருங்கிணைக்கிறீர்களா?

    அரசுச் சட்டத்தின்படி திருமண வயதை கடந்தவர்கள் மாற்று சாதியில் காதல் திருமணம் செய்தால் நீங்கள் தலைமை ஏற்பீர்களா?

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...