பாரத்மாதா கீ ஜே... மற்றும் ஜெ... ஆதவன் தீட்சண்யா

வியாழனில் நேர்ப்பட்ட விண்வெளி வீரனொருவன்
எந்த கிரகமென்றான் ஆங்கிலத்தில்
பூமியென்றதும் பொங்கவிட்டான் அன்பை

நாட்டின் பெயரைச் சொன்னதும்
நாமிருவரும் ஒரேதாயின் புதல்வர்கள் என்றான் இந்தியில்
பாராயணம்போல்
தனக்குள்ளே முணங்கிக்கொண்டான்
ஸம்ஸ்கிருதத்திலும்

மாநிலத்தை அறிந்ததும்
ஹோ... நானும் பச்சைத்தமிழன்தான்
ஊரெதுவென்று நெருங்கினான் வாஞ்சையோடு

ஒரே ஊர்க்காரர்களாயிருந்தும்
இத்தனைக்காலமும் சந்திக்காததற்கு   அங்கலாய்த்தபடியே
கீழ்ஸ்தாயில்
வீடு ஊரிலா சேரியிலா என்று
அவனிழுத்த முரட்டுக்கோட்டுக்கு அப்புறத்தே
அம்பேத்கர் நகரென்ற பதிலோடு நானிருக்க
உரையாடும் பொதுவிசயம் ஒன்றுமில்லாமற் போனது அவனுக்கு
ஊரென்ற ஒன்று
எனக்கும் சொந்தமாய் இல்லாதிருப்பதைப்போலவே.

4 கருத்துகள்:

 1. பால்வெளி அண்டம் முழுவதும் தீண்டாமையின் முடை நாற்றம்,
  அண்டங்களுக்கு அப்பாலும், கோர முகத்தை காட்டியபடி.

  பதிலளிநீக்கு
 2. எலலா ஊர்களிலும் இரண்டு ஊர்கள் உள்ளன - ஊர் என்றும் காலனி என்றும் அவை பெயரிடப்பட்டு உள்ளன.

  பதிலளிநீக்கு
 3. எங்கு சென்றாலும் சாதியை சுமக்கும் மனிதர்கள் கழிவுகளை சுமந்து கொண்டு திரியும் சாக்கடை போலானவர்கள்...

  பதிலளிநீக்கு
 4. உண்மை. ஊர் மீதான பற்று கூட ஒடுக்கப் பட்ட மக்களுக்குப் பெரிதும் இருக்க வேண்டியதில்லை. வனம், புலிகளுக்குப் பிடிக்கும் அளவுக்கு மான்களுக்குப் பிடிக்க வேண்டியதில்லை. எங்கே தனக்குரிய அடிப்படை மரியாதையும் பாதுகாப்பும் கிடைக்கிறதோ அங்குதான் அவர்கள் பெருமையோடு - பற்றோடு வாழ முடியும்.

  நகரமயமாக்கல் இதனை ஓரளவோ பேரளவோ சரி செய்ய வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு