விசை - ஆதவன் தீட்சண்யா

றக்கக் கலக்கத்தில்
அரற்றும் குழந்தையை
அப்புறம் கொஞ்சலாமே

தாலியோடு
தளைகளையும் சேர்த்துத்தானே கட்டியிருக்கிறாய்
பத்திரமாயிப்பாள் மனைவியும்

பெற்றெடுத்த கிழங்களுக்கு
பிள்ளையுன் முகம்
மறந்துவிடுமா என்ன

வா
மேசையைத் துடை
இருக்கையை இழுத்துச் சீராக்கு
சித்ரகுப்த பேரேடுகளைப் புரட்டு
வருகிறவர்களிடம் "வள்ளென' விழு
தருகிறவர்களிடம் இளி
கொஞ்சமாய் நெளி

போ
உறங்கும் உன் குடும்பத்தை
ஓசையிட்டு எழுப்பிவிடாமல்
அதிகாரியின் அறைக்குள்
நுழைவதான எச்சரிக்கையில்
வீட்டுக்குள்

புழக்கடையில் கவிழ்த்த குழம்புச்சட்டியை
முகர்ந்துபார்க்கும் நாயென
எல்லோரது சுவாசத்தையும் உறுதி செய்
கனவுகள் ஏதுமின்றி
கட்டையெனத் தூங்கு

யாரும் எழுமுன்னே
ஓடு

ஓடாதே
நில்

பேனா
டை
ஷு
கோவணம்
நுனிநாவின் ஆங்கிலம்
அனைத்திலும் கவனம் கொள்

உறக்கக் கலக்கத்தில்
அரற்றும் குழந்தையை
திரும்பியும் பார்க்காதே

அப்புறம் கொஞ்சலாமே
சம்பாதித்து முடித்துவிட்டு
சாவகாசமாய்.

1 கருத்து:

  1. கடைசி வரியைப் படித்தபோது ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது. கொஞ்சி விட்டு சாவகாசமாய் சம்பாதிக்கலாமே என்கிற மனநிலையை அடைய வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். ஆனால், முடியுமா தெரியவில்லை. :(

    பதிலளிநீக்கு