ஆவணப்படத்தின் நாயகனாக இருக்கும் தகுதி எனக்கு உள்ளதா? எஸ்.வி.ராஜதுரைதமிழ் அறிவுலகின் தனித்துவமிக்க ஆளுமைகளில் ஒருவர் எஸ்.வி.ராஜதுரை. 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். ஆய்வுகள்,மனித உரிமைப் போராட்டங்கள் என பல தளங்களில் செயல்பட்ட பன்முக ஆளுமை. தந்தை பெரியாரின் எழுத்துக்களை ஆய்வு நோக்கில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியதில் வ.கீதாவும் இவரும் முக்கியமானவர்கள். பெரியாரை தமிழக எல்லை தாண்டி, இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆங்கில வழியில் கொண்டு சேர்த்ததில் ராஜதுரையின் பங்கு அளப்பரியது.

ராஜதுரையின் வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் பணியில் அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. 'இடது' காலாண்டு இதழ் சார்பாக, தோழர். கண.குறிஞ்சி படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த ஜூன் 4ம் தேதி அன்று நடைபெறவிருந்த இந்த ஆவணப்படத்தின் திரையிடலை தமிழக அரசு கடைசி நேரத்தில் தடை செய்தது. படத்தின் திரையிடும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த தினத்தன்று, ராஜதுரை தோழர்களுக்கு ஒரு உரையைக் கடிதமாக எழுதியிருந்தார். தமிழ் சமுதாயத்திற்கு ராஜதுரை விடுத்திருந்த செய்தி அந்தக் கடிதம். தமிழ் வாசகர்களுக்காக மின்னம்பலம் அந்தக் கடிதத்தை இங்கு பதிவு செய்திருக்கிறது.

அன்புள்ள தோழர்களே,
எட்டாண்டுகாலமாக எனது இரண்டு கண்களிலும் அரைகுறை பார்வைதான். அதைக்கொண்டே தொடர்ந்து எழுதவும் படிக்கவும், ஓரிரு சந்தர்ப்பங்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் தோழர்களின் ஊக்குவிப்புடன் நவீன தொழில்நுட்ப சாதனங்களும் உதவின. சென்ற ஆண்டு எனது உடல்நிலையில் பெரும் சரிவு ஏற்பட்டு, சில மாதங்கள் படுத்த படுக்கையாகவே இருந்ததோடு, எனது இடதுகண் பார்வையையும் முற்றிலுமாக இழந்தேன். இந்தச் சூழலில்தான் எனது வாழ்நாளில் எனக்கு அறிவொளியூட்டிய–அது கடுகளவானதாகவோ, மலையளவானதாகவோ இருக்கலாம். கிட்டத்தட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து எனது கட்டுரைகளிலும் நூல்களிலும் அவர்களது பெயர்களைப் பதிவுசெய்யத் தொடங்கினேன். விட்டுப்போன பெயர்கள் விரைவில் வெளிவரும் மூன்று நூல்களில் இடம்பெறும்.

என்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் காட்டுகிற, எனது நீண்டகால நண்பர்களும் தோழர்களும் என்னைப்பற்றிய ஓர் ஆவணப் படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியபோது, எனக்கு அது மகிழ்ச்சியை அல்ல, வெட்க உணர்வையே தந்தது. இந்த ஆவணப் படத்தின் இறுதி செய்யப்படாத வடிவம் எனக்குப் பல மாதங்களுக்குமுன்பே அனுப்பப்பட்டிருந்தது என்றாலும் அதை நான் இதுவரை பார்க்கவில்லை; என் குடும்பத்தினருக்கும்கூட அதைக் காட்டவில்லை. எனது சொந்த வாழ்க்கைக் குறிப்புகளை அனுப்புமாறு எனது அருமைத்தோழர் குறிஞ்சி எண்ணற்றமுறை என்னிடம் தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் விடுத்துவந்த வேண்டுகோளுக்கு ஏதேதோ சாக்குப்போக்குகள் கூறி, உடனடியாக செவிமடுக்காவண்ணம் எனது வெட்க உணர்வு தடுத்து வந்தது. ஓர் ஆவணப்படத்தின் நாயகனாக இருக்கும் தகுதி எனக்கு உள்ளதா?

எனது அரசியல் வாழ்க்கை 13ம் வயதிலேயே தொடங்கியது. திமுக ஆதரவாளனாக, உறுப்பினனாக. 21ம் வயதில்தான் மார்க்ஸியம் என்னை ஈர்க்கத் தொடங்கியது. பொதுவுடைமை இயக்க அரசியல் வாழ்க்கையைத் தொடங்க மேலும் நான்காண்டுகள் தேவைப்பட்டன. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் அந்த இயக்கத்தில் கட்சி உறுப்பினனாகவோ, சக பயணியாகவோ, ஆதரவாளனாகவோ, ஏன், அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஓரிரு குழுவினரின் கருத்துப்படி ‘கம்யூனிஸ்ட் விரோதி’யாகவும், ’ஏகாதிபத்திய அடிவருடியாகவும்’கூட இருந்திருக்கிறேன். என்னைப்பற்றிய இத்தகைய சித்திரிப்புகளை வலதுசாரி இந்துத்துவச் சக்திகளும் பரப்பி வருவதைப் பார்த்திருக்கிறேன். சிலவேளை, என் மனம் புண்படுவதுண்டு. ஆனால், துவண்டுபோய் முற்றிலும் செயலற்றவனாக ஆகிவிடாமல் தடுத்தவை, மானுட குலத்தின் விடுதலைக்கான தத்துவங்களையும் செயல்பாட்டு முறைகளையும் நமக்கு வழங்கிச் சென்றுள்ள மாபெரும் புரட்சியாளர்களின் வாழ்க்கையும் அவர்களது பணிகளும்தான்.

எனது எழுத்து வாழ்க்கைக்கும் இப்போது வயது 50. எனது ஆக்கங்கள் நமது சமுதாயத்தின்மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின? எனது வாசகர்கள் யார்? நமது இலட்சியங்கள் அடுத்தடுத்து தோல்விகளை மட்டுமே தழுவிக் கொண்டிருக்கையில், தொடர்ந்து எழுதுவதில் என்ன பயன்? என்ற கேள்விகள் என மனதைக் குடைந்து கொண்டிருக்கின்றன.

சோசலிச சமுதாயத்தை உருவாக்கப் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்துக்கும் ஏற்பட்டுள்ள தோல்விகள், பொதுவுடைமை இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுகள், இந்தியப் பொதுவுடைமை இயக்க வாழ்வில் எனக்கேற்பட்ட கசப்பான அனுபவங்கள், மனித உரிமை இயக்கத்தில் இயன்றளவு செயலாற்றுவதற்கான வாய்ப்புகள், அம்பேத்கரும் பெரியாரும் கற்றுக்கொடுத்த பாடங்கள் ஆகியன என்னிடம் சகிப்புணர்வை வளர்த்தன. தனிப்பட்ட முறையிலோ, அரசியல்வகையிலோ வன்மமும் வெறுப்புணர்வும் என் உள்ளத்தில் வளர்வதைத் தடுத்தன. ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தின், குறிக்கோளின் அடிப்படையில் பல்வேறு கருத்துநிலைகளைக் கொண்டிருப்பவர்களுடன் இணைந்து செயலாற்றுவதால் சமுதாயத்துக்கு ஏற்படும் நற்பயன்களை என்னால் உணர முடிந்திருக்கிறது. இந்த அணுகுமுறைக்கு அற்புதமான எடுத்துக்காட்டாக இருந்தவர் பெருஞ்சித்திரனார். இது எனக்கு நிறமாலை போன்ற நட்பு வட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

மிகுந்த மனசோர்வு ஏற்படும்போது இலக்கியத்திலும் இசையிலும் புகலிடம் தேடுவேன். நல்ல படைப்பிலக்கியவாதியாகவோ, இலக்கியத் திறனாய்வாளனாகவோ வளர வேண்டும் என்பதே எனது இளமைக்கால கனவாக இருந்தது. ஆனால், எனது இரத்தத்திலேயே கலந்திருந்த அரசியல் என்னை வேறு பாதையில் செலுத்தியது. முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என என்னால் விரும்பப்பட்ட பல செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஆனால், இதில் எனக்குக் கடுகளவேனும் வருத்தம் இல்லை. இதுதான் வாழ்க்கை.

எனினும், தற்போதைய இந்திய, தமிழகச் சூழல் என் உள்ளத்தில் பெரும் பீதியை ஏற்படுத்துகிறது. முதலாளிய சமுதாயத்தில் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் உரிமைக் குரலை மிகவும் வரம்புக்குட்பட்டவகையில் மட்டுமே எதிரொலிப்பதற்கான அரங்குகளில், அரசியல் களங்களில் ஒன்று என்பதற்குமேல் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் நான் எவ்வித முக்கியத்துவமும் தருவதில்லை. எனினும், அண்மைய தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிராக தமிழகத்தின் மிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்னும் உணர்வை எனக்கு ஏற்படுத்துகின்றன. தமிழக மக்களின் உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் சாதிய உணர்வை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது? இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ், தமிழக அளவில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தால்போதும் என்று கார்ப்பரேட், வணிக, ரியல் எஸ்டேட், சாராயச் சக்திகள் விரும்புகின்றன.

இந்தியாவில் அரசியல் மேலாண்மையைப் பெற்றுள்ள பாசிச சக்திகளைப் பற்றி பேசுகிறோம். பண்பாட்டுத் தளத்தில் அவை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே நாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது. இந்திய பாசிசம், அமெரிக்காவின் தலைமையிலுள்ள உலக ஏகாதிபத்தியத்தின் கைகளை வலுப்படுத்துவதில், மன்மோகன் வகுத்த பாதைக்குக் கான்கிரீட் போட்டுவருகிறது. மன்மோகன் சிங் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட அணு உலை ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதில் தொடங்கி, உலக அளவிலான ஏகாதிபத்திய இராணுவ தொலைநோக்குத் திட்டத்தில் இந்தியா முக்கியப் பாத்திரம் வகிக்கும்வகையில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இரு தரப்பு, முத்தரப்பு இராணுவ ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதிலும், அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுடன் மிக நவீன, வலுவான ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதிலும் இன்றைய பாசிச அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. சீனாவைத் தனிமைப்படுத்தி, அதன் கடல் மார்க்கங்களை அடைத்து, கடல், வான், தரை வழியாக அதன் மீதான ஆக்கிரமிப்பை நடத்துவதற்கும், தேவைப்பட்டால் அதன்மீது அணு ஆயுதங்களை ஏவவும் அமெரிக்கா உருவாக்கியுள்ள திட்டத்தில் இந்திய பாசிச அரசாங்கம் மிகுந்த விருப்பத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு வருகிறது.

சீனாமீதான போர் வெடிக்குமானால், அந்த நாட்டில் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் ஏற்படும் கொடூரமான பின்விளைவுகளை அதிலும் குறிப்பாக, உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் பாரதூரமான பாதிப்புகளை எண்ணிப் பாருங்கள்.

எனவேதான், தமிழகத்திலும் இந்திய அளவிலும் பரந்துபட்ட பாசிச - ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியைக் கட்டவேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. இந்த இரண்டு சக்திகளையும் எதிர்ப்பவர்கள் யாரோ அவர்களுடன் மட்டுமே நாம் அரசியல், சமூக, பண்பாட்டுக் கூட்டணிகள் அமைக்க வேண்டும். இது தேர்தல் கூட்டணி அல்ல; அரசியல் கூட்டணி.

தோழர்களே, இடதுசாரி கண்ணோட்டமும் பாசிச எதிர்ப்புணர்வும் கொண்டிருந்த காலஞ்சென்ற பிரெஞ்ச் திரையுலக மேதை ழான் ரெனுவா (Jean Renor), மிகுந்த தயக்கத்துடனேயே தன்–வரலாற்றை எழுதினார். அதில் அவர் ’நான் யார்?’ என்ற கேள்விக்குப் பதில் தருகிறார்: "நாம் மிகவும் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்த தனிநபருக்குள் இருப்பவர்கள் மழலையர் பள்ளியில் படிக்கும்போது அவனுக்குக் கிடைத்த நண்பர்கள்; அவன் வாசித்த முதல் கதையின் நாயகன் ஏன், அவனது ஒன்றுவிட்ட சகோதரன் யூஜினின் நாயும்தான். நாம், நம் ஊடாக மட்டுமே வாழ்வதில்லை; நமது சூழல் நம்மை வடிவமைக்கிறது. நான் இப்போது யாராக இருக்கிறேனோ, அவனை உருவாக்குவதில் ஒரு பாத்திரம்வகித்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவுகூர முயன்றுள்ளேன்”.

நினைவுகூரும் செயலை எனக்குப் பதிலாக, இந்த ஆவணப்படம் மேற்கொண்டுள்ளதாகக் கருதி, உங்கள் அனைவரையும் தலைசாய்த்து வணங்குகிறேன்.

கோத்தகிரி எஸ்.வி.ராஜதுரை
01.06.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக