வெள்ளி, ஜனவரி 3

கேள்வித்தாள் - வெண்டெல் பெர்ரி


1. தடையற்ற சந்தை,  உலக வாணிபம் 
ஆகியவற்றின் வெற்றிக்கு
எவ்வளவு நஞ்சை
உண்ண விரும்புகிறீர்கள்?
தயைகூர்ந்து உங்களுக்கு விருப்பமான
நஞ்சுகளின் பெயர்களைச் சொல்லுங்கள்.

2. நன்மையின் பொருட்டு எவ்வளவு தீமைகளைச்
செய்ய விரும்புகிறீர்கள்?
உங்களுக்கு  விருப்பமான தீமைகள், வெறுப்புச் செயல்கள்
ஆகியவற்றின் பெயர்களைப்
பின்வரும் காலி இடங்களில் நிரப்புங்கள்.

3. பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும்
என்ன தியாகங்களைச் செய்ய
நீங்கள் தயாராக உள்ளீர்கள்?
நீங்கள் மிகுந்த விருப்பதோடு அழிக்கக்கூடிய
நினைவுச்சின்னங்கள், வழிபாட்டிடங்கள்,
கலைப்படைப்புகள்
ஆகியவற்றைப் பட்டியலிடுங்கள்.

4. நாட்டுப்பற்று, கொடி ஆகியவற்றின் பெயரால்
நமது நேசத்துக்குரிய நாட்டில்
நீங்கள் அசுத்தப்படுத்த விரும்பும் பகுதிகள் எவ்வளவு?
விரைவாக இல்லாமல் செய்ய நீங்கள் விரும்பும்
மலைகள், ஆறுகள், நகரங்கள், பண்ணைகள்
ஆகியவற்றின் பட்டியலைக்
கீழே உள்ள இடத்தில் குறிப்பிடுங்கள்.

5. ஒரு குழந்தையைக் கொல்வதற்காக
நீங்கள் வைத்திருக்கும் கருத்துகள், இலட்சியங்கள்
அல்லது நம்பிக்கைகள், எரிபொருள் மூலவளங்கள்,
பாதுகாப்பு வகைகள் ஆகியவற்றைச்
சுருக்கமாகச் சொல்லுங்கள்.
நீங்கள் கொல்ல விரும்பும் குழந்தைகளின் பெயர்களைத்
தயைகூர்ந்து சொல்லுங்கள்.


· வெண்டெல் பெர்ரி ( Wendell Berry) தற்கால அமெரிக்கக் கவிஞர்களிலொருவர். போர் எதிர்ப்பாளர். வியதநாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து அமைதிவழியில் போராடியவர்களிலொருவர். 2001 செப்டம்ப11 இல் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ‘உலக பயங்கரவாதத்தை ஒடுக்குதல்’ என்ற பெயரால் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டனம் செய்தவர். மனித உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வரும் அவருக்கு இலக்கியத்துக்கான ஏராளமான விருதுகள் தரப்பட்டுள்ளன.

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...