சனி, ஜனவரி 4

படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேள்விகள் - பெர்டோல்ட் ப்ரெஹ்ட்

ஏழு வாயில்களைக் கொண்ட தீப்ஸ் நகரைக் கட்டியது யார்?
புத்தகங்களில் நீங்கள் அரசர்களின் பெயர்களைப் படிப்பீர்கள்.
கட்டுவதற்குப் பாறாங்கற்களைச் சுமந்து வந்தார்களா அரசர்கள் ?

பாபிலோன் பலமுறை நிர்மூலமாக்கப்பட்டது, 
அதை மீண்டும் மீண்டும் நிர்மாணித்தவர்கள் யார்?

பொன்கதிர் வீசும் லிமா நகரத்தில் 
எவ்வித வீடுகளில் கட்டடத் தொழிலாளிகள் வாழ்ந்தனர்?
சீனப் பெருஞ்சுவர் 
கட்டி முடிக்கப்பட்ட மாலையில்
கொத்தனார்கள் சென்றது எங்கே?

மாபெரும் ரோம் நகரில் எங்கெங்கும் வெற்றி வளைவுகள்
அவற்றை எழுப்பியவர்கள் யார்?

எவரை வென்றனர் சீசர்கள்?

புகழ்ந்து பாடப்படும்  பைஸாண்டியத்தில் 
குடிமக்கள் மாடமாளிகைகளிலா வசித்தனர்?

இதிகாசப் புகழ்பெற்ற அட்லாண்டிஸிலும்கூட 
அதைக் கடல்கொண்ட இரவில் 
நீரில் மூழ்கியோர் கூக்குரல் இடவில்லையா 
தங்கள் அடிமைகளின் உதவியை நாடி?

இளம் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றான்
அவன் தனியாகவா இருந்தான்?

சீசர் பிரெஞ்சுக்கர்களைத் தோற்கடித்தான்
அவனுடன் ஒரு சமையல்காரன் கூடவா இருக்கவில்லை?

ஸ்பெயின் மன்னன் பிலிப்
தனது  போர்க்கப்பல்கள் மூழ்கும்போது அழுதான்
அழுதது அவன் மட்டுந்தானா?

இரண்டாம் பிரெடெரிக் ஏழாண்டுப் போரில் வென்றான்.
அவனைத் தவிர வேறு யார் வென்றார்கள்?

ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வெற்றி
வெற்றிவிழா உணவைச் சமைத்தது யார்?

ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 
ஒரு மாமனிதன்
அவனது செலவை ஏற்றவர் யார்?

எத்தனையோ தகவல்கள்
எத்தனையோ கேள்விகள்.

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

1 கருத்து:

  1. வெற்றியாளன் ஒருவன், அதற்கு காரணமானவர்கள் ஆயிரம், லட்சம் பேர். அவர்களை பதிவது எப்படி?

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...