திங்கள், நவம்பர் 28

வி.பி.சிங் நினைவாக - எஸ்.வி.ராஜதுரை

சுதந்திர இந்தியாவில் ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான போரைத் தொடங்கியவன் நானே என்று நரேந்திர மோடி மார் தட்டிக் கொள்கிறார். கடந்த 70 ஆண்டுக் கால இந்திய நிர்வாகம் செயல்பட்டு வந்ததைப் பற்றியப் புலனாய்வைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அரசியலிலும் அரசாங்கத்திலுல் ஊழல்களும் இலஞ்ச விவகாரங்களும் இருந்தன என்பது உண்மைதான். ஆனால்  நேருவோ அவரது நெருக்கமான சகாக்களோ இலஞ்சம் –ஊழல் கறை படிந்தவர்களாகச் சொல்ல முடியாது. எனினும், அரசியலில் குடும்ப வாரிசு முறையை உருவாக்குவதும்கூட ஊழல்தான் என்றால்  நேருவும் மறைமுகக் குற்றவாளிதான். தமக்குப் பின் தமது மகள் இந்திரா காந்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எதனையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை என்றாலும்,   அவர் யாரைத் தமது அரசியல் வாரிசாகக் கருதுகிறார் என்று பலமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தட்டிக் கழித்ததும், அவர் உயிரோடு இருக்கும்போதே இந்திரா காந்தியை அனைத்திந்தியக் காங்கிரஸின் தலைவராக்க இசைவு தந்ததும், இந்திரா காந்தி தேர்தல் ஜனநாயகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையைக் கலைப்பதற்காக மதவாத, சாதியப் பிற்போக்குச் சக்திகளுடன் கைகோர்த்ததை எதிர்க்காமலிருந்ததும், இந்திய   ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் மாபெரும் ஊழல் என்று கூறலாம். ஊழலும் இலஞ்சமும் காசு வாங்குவதில் மட்டும் இல்லை.

 நேருவுக்கு அடுத்தபடியாகப் பிரதமர் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி தனிப்பட்ட முறையில் அப்பழுக்கற்றவர்; அதேபோலத்தான் காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை வகித்த  மொரார்ஜி தேசாயும்.
வாக்கு வங்கியைப் பெருக்குவதற்காக மதவாதத்தைப் பயன்படுத்துவதும் ஊழல்தான் என்றால்,  அந்தக் குற்றச்சாட்டு இந்திரா காந்திக்குப் பொருந்தும். ஏராளமான முறை அவர் முஸ்லிம் விரோதப் பேச்சுகளைப் பேசியிருப்பதை, அவரது மகன் ராஜிவ் காந்தி முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதை வரலாற்று அறிஞரும் சட்ட வல்லுநருமான ஏ.ஜி.. நூரானி ஆவணப்படுத்தியுள்ளார்.

அரசியலிலும் அரசாங்கத்திலுமுள்ள ஊழல்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்ற போர் முழக்கத்தை எழுப்பி வந்த ராம் மனோகர் லோகியாவும் ஜெயப்பிரகாஷ் நாராயணும்,  இந்திய பாசிச சக்திகளான ஜன் சங், ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு ‘அரசியல் கெளரவம்’ கிடைக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றினர்.

காங்கிரஸ் அல்லாத மத்திய அரசாங்கத்தில் சிறிது காலமே பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் கறை படியாத மனிதராக இருந்தார் என்றால் கறைபடியாதவராக இருந்ததோடு மட்டுமின்றி கறைபடிந்த கரங்கள் அனைத்தையும் அரசியலிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான துணிச்சலான முயற்சியை மேற்கொண்டவர் வி.பி.சிங் ஒருவர் மட்டுமே.

ராஜிவ் காந்தியின் முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுபேற்றுக் கொண்டவுடன், இந்தியாவில் ஊழலையும் இலஞ்சத்தையும் மேல்மட்டத்திலிருந்துதான் ஒழிக்கத் தொடங்க வேண்டும் என்னும் கூருணர்வுடன் செயல்பட்டார் வி.பி.சிங். அவரது ஆணையின் பேரில் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது  திடீர் சோதனைகளை மேற்கொண்டு ஆண்டுக் கணக்கில் செய்யப்பட்டு வந்த வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்தனர். அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் பெருந்தொழிலதிபர்கள் சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். எனவேதான் கார்ப்பரேட் பெருச்சாளிகள் அவரை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதற்கு திருபாய் அம்பானியின் (ரிலையன்ஸ்) தலைமையில் அணி திரண்டனர். இந்த உண்மை நரேந்திர மோடியின் புலனாய்வு ராடாரின் கீழ் வருமா? வராது. ஏனென்றால் அந்த ராடாரை இயக்குவதே அம்பானிகளும் அதானிகளும்தான்.

அந்தப் பெருச்சாளிகளின் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் ராஜிவ் காந்தி, விபி.சிங்கை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து,  பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார். வி.பி. சிங்கின் திறமை பாதுகாப்புத்துறைக்குத் தேவை என்று பசப்பினார் ராஜிவ். ஆனால், வி.பி.சிங், பாதுகாப்புத்துறையில் மலிந்திருந்த ஊழல்கள் மீது கவனம் குவிக்கத் தொடங்கினார். ஜெர்மனியிலிருந்து HSW  நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதில் பேரம் பேசப்பட்டதையும் ‘கமிஷன்’ வழங்கப்பட்டதையும் கண்டறிந்து முழு உண்மையையும் வெளிக்கொணர்வதற்கான விசாரணை ஆணையம் அமைக்க ஆணை பிறப்பித்தார். அதனால்தான் ராஜிவ் காந்தியும் காங்கிரஸ் தலைமையும் வி.பி.சிங்கை ஓரங்கட்டின. நீர்மூழ்கிக் கப்பல் ஊழலும் போஃபர்ஸ் ஊழலைப் போலவே சட்டத்திடமிருந்து தப்பித்துக் கொண்டது.

1989இல் நடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்  பெரும்பான்மை கிடைக்காதிருந்த சூழலில் பாஜக ஒருபுறமும் இடதுசாரிகள் மறுபுறமும் ‘வெளியே இருந்து’ தந்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வி.பி.சிங், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த படிநிலை சாதிய அமைப்பின் காரணமாக ‘உயர் சாதியினர்’ மட்டுமே அரசாங்கப் பதவிகளை வகித்து வந்த ஊழல் முறையின் மீது கை வைக்கும் மண்டல் குழு பரிந்துரைகள் பலவற்றை நடைமுறைப்படுத்தினார். இந்த சாதியப்படிநிலை ஊழல் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று விரும்பிய பாஜக, வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்த போது, அந்த கவிழ்ப்பு முயற்சிக்கு ராஜிவ் காந்தியின் காங்கிரஸும் துணை நின்றது – பின்னாளில் அயோத்தி ராமர் கோவில் ஷிலான்யாவுக்கு ராஜிவ் காந்தியும் பாபர் மசூதி இடிப்புக்கு நரசிம்ம ராவும் ஒத்துழைத்தது போல.

வி.பி.சிங் ஆட்சியிலிருந்த போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றின் தேர்தல் செலவுகளுக்கும் அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கொள்கையை இடைவிடாது வலியுறுத்தி வந்தார். இப்படிச் செய்வதன் மூலம் கார்ப்பரேட் சக்திகள் அரசியல் கட்சிகள் மேல் செல்வாக்கு செலுத்துவதைப் பெருமளவில் தடுக்க முடியும் என்று கருதினார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய அரசியலிலும் மத்திய, மாநில அரசாங்கங்களிலும் உள்ள இலஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பது மேலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை. ஆனால், சாதிய ஊழலை நிலைநிறுத்துவதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ள சங்பரிவார பாசிச சக்திகளோ, இலஞ்சமும் ஊழலும் ஏழைகளிடம்தான்,  நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான்  ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றன.

இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்திய அதிகாரி வர்க்கம், பங்குச்சந்தையின் தலைமைப்பீடமான மும்பையின் தலால் ஸ்ட்ரீட், இந்தியக் கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ,  பாலிவுட், இந்திய இயற்கை வளங்களை, சுற்றுச்சூழலைச் சூறையாடும் அதானிகள், அம்பானிகள் முதலானோர் மீது நரேந்திர மோடியாலும் சங் பரிவாரத்தாலும் கைவைக்க முடியாது. ஏனெனில் சாதிரீதியான, வர்க்கரீதியான ஒடுக்குமுறை, சுரண்டல், ஊழல், இலஞ்சம் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றவர்கள் இவர்கள்தாம்.

இவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஒரே இந்தியப் பிரதமர் வி.பி.சிங் மட்டுமே. அவரது இறப்புச் செய்தி, மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களின் போது எவ்வாறு முக்கியத்துவம் அற்றதாகப் போனதோ, அதைவிட மோசமானதாக, ஊழல், இலஞ்ச ஒழிப்பு பற்றிய நரேந்திர மோடியின் சொல்லாடல்கள், அவற்றுக்கு எதிரான எதிர்-சொல்லாடல்கள் நடக்கும் காலத்தில் முற்றாக மறக்கப்பட்டுவிட்டது. இந்த வரலாற்று மறதிக்கு இந்தியாவிலுள்ள மதச்சார்பற்ற சக்திகளும் (அப்படி ஏதேனும் இருக்குமானால்) இடதுசாரி சக்திகளும்தான் பொறுப்பு.


1 கருத்து:

  1. வி பி சிங் ஒரு மாபெரும் தலைவர். அவரைப் போன்றவர்கள் இங்கே வெகு அரிது. நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...