திங்கள், டிசம்பர் 9

தீண்டாமைச்சுவரின் கொலைகள் ... - ஆதவன் தீட்சண்யா



சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என் பெயர் மனிதன்
அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா?
விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி
நானொருவன் எத்தனைக் காலம்தான் காத்திருப்பது?
உங்களில் ஒருவருக்கேனும் எனது குரல் காதில் விழுகிறதா?
என்னோடு உரையாடுவதை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு
உங்களது குரல்வளையை
நீங்கள் இன்னும் அறுத்துக் கொள்ளாதிருக்கும் பட்சத்தில்
மறுமொழி சொல்லுங்கள் யாரேனும்
குலுக்குவதற்கு நீட்டப்பட்டிருக்கும் எனது கரங்கள் மரத்துப்போய்
தானே தொய்ந்துவிழ வேண்டுமென்று
காலந்தாழ்த்தும் தந்திரத்தை கைக்கொண்டிருக்கிறீர்களா
அல்லது,
இதோ நானிருக்கிறேன் என்று பதில்கூற
யாருமேயில்லாத பாழ்வெளியாய் கிடக்கிறதா அந்தப்பக்கம்?

சுவர் உங்களைக் காப்பதாய் சொல்லிக்கொண்டு
சுவற்றை நீங்கள் காக்கும் இழிகாலத்தில்
எந்தப்பக்கம் இருப்பவர் யார் என்ற வழக்கில்
இப்போது எழுதப்பட வேண்டியது தீர்ப்பு மட்டுமேயாதலால்
சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன்
அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா?
உஸ்பார் கொய் ஹை க்யா?
ஆக்கடே யாரு இதாரே?
திக்கடே பாஜூ கோன் ஆஹே...?
அக்கட எவுரு உண்ணாரு?
அப்பக்கம் ஆரெங்கிலும் இண்டோ?
எனிபடி ஈஸ் தேர்?

- உத்தபுரம் தீண்டாமைச்சுவர் பற்றி பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இக்கவிதை இன்றைக்கு 17 பேரின் சடலங்களுக்கு முன்னே அவமானத்தில் குன்றிக்கிடக்கிறது. 

இந்திய அரசின் செயல்பாடுகள் பற்றி வெளிப்படையாக விமர்சிப்பதற்கு கடந்த காலங்களில் இருந்துவந்த சுதந்திரம் இப்போது இல்லை என்று தொழிலதிபர் ராகுல் பஜாஜ் சிலதினங்களுக்கு முன்பு பொறுக்கமாட்டாமல் கருத்து தெரிவித்திருந்தார். கார்ப்பரேட்டுகளும் இன்றைய ஆட்சியாளர்களும் கங்காருவும் அதன் குட்டியும் போல இருந்துவந்தாலும் அவர்களாலும்கூட தாங்கிக்கொள்ள முடியாததாக நாட்டின் பொருளாதாரமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் கீழ்முகமாய் பாய்கிறபோது அவர் இவ்வாறு பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இவரைத் தொடர்ந்து மற்றொரு தொழிலதிபரான கிரன் மஜூம்தார் ஷா "Hope the govt reaches out to India inc for working out solutions to revive consumption n growth. So far we are all pariahs n govt does not want to hear any criticism of our economy" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆட்சியாளர்களை விமர்சிக்கும் இப்பதிவின் உள்ளார்ந்த நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால் ‘இப்போதுவரை நாம் அனைவருமே பறையர்கள்தான்-பொருளாதாரம் குறித்த நமது விமர்சனம் எதற்கும் அரசாங்கம் செவிமடுக்காதபடியால்’ என்கிற வரியை கவனியுங்கள். அதனுள்ளிருக்கும் ஆட்சேபத்திற்குரிய பொருள் விளங்கும். பறையர்களின் கருத்து பொருட்படுத்தத்தக்கதல்ல- அது அவர்களைப் போலவே தீட்டுக்குரியது என்கிற மனுவாதத்திற்கு ஏற்பளிக்கும் படியானதாக அவரது கருத்துலகம் இருக்கிறது என்பதையோ, அதனாலேயே  இப்படியான ஒப்பீட்டை இயல்பாக எடுத்தாள அவருக்கு நேர்ந்திருக்கிறது என்பதையோ சுட்டிக்காட்டாமலே இப்பதிவு பலராலும் கொண்டாட்டத்துடன் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

தற்செயலாக இதை கவனித்து நான் சுட்டிக்காட்டியதுமே அவரது நண்பர்கள் பலரும் ‘‘எந்த நேரத்தில் எதை பேசுகிறாய்? அவர் அரசாங்கத்தை விமர்சிக்கும்போது இதுவா முக்கியம்? பறையர் என்று ஒப்பிட்டுவிட்டதால் என்ன குடிமுழுகிப் போனது? அவரது ஒப்பீட்டில் என்ன தவறு கண்டாய்? நீ ஒரு சங்கி, விசயத்தை திசைமாற்றுகிறாய், எப்ப பாரு இதே வேலையா? மூடிக்கிட்டு வேறு வேலையைப் பார், வார்த்தையைப் பிடித்துக்கொண்டு தொங்காதே’’ என்றெல்லாம் கத்த ஆரம்பித்தார்கள். இது வார்த்தையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிற அழுகுணித்தனமல்ல, அந்த வார்த்தையை தெரிவுசெய்வதற்கு பின்னேயுள்ள மனக்கட்டமைப்பின் மூலகம் தொடர்பான விமர்சனம் என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்திருந்தால்  தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்திருப்பார்கள். ஆனால் அவர்களோ தமது வாதாட்டங்களின் வழியே ‘பறையர்கள் சொல்வதை பொருட்படுத்த வேண்டியதில்லை அல்லது பொருட்படுத்த வேண்டாதவற்றை பேசுகிறவர்கள் பறையர்கள்’ என்கிற மனுவாதத்தை மறுவுறுதி செய்தார்கள். புனிதம் தீட்டு என்கிற சாதியக்கூறை ஏற்றுக்கொள்கிற ஓர் இந்துவின் இந்த பொதுமனநிலையைத்தான் இங்குள்ள ஒவ்வொருமே பகிர்ந்துகொள்கின்றனர். தீண்டாமைச்சுவரை கட்டாதே என்கிற மேட்டுப்பாளையம் நடூர் காலனி அருந்தியர்களின் எதிர்ப்புக்குரலை உதாசீனம் செய்து சிவசுப்பிரமணியம் சுவரைக் கட்டியதற்கும், அவர்களது முறைப்பாடுகளை உள்ளூர் நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இன்று 17 பேரை கொன்றதற்கும், இந்த அநீதியை தட்டிக்கேட்ட இயக்கங்களின் தலைவர்களைப் பார்த்து ‘சக்கிலிய நாய்களுக்கிட்ட கெஞ்சிக்கிட்டே இருக்கணுமா?’ என்கிற கொக்கரிப்புடன் காவலதிகாரி மணி உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தியதற்கும் பின்னே இந்த மனநிலைதான் இயங்குகிறது.

***
வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ளவர்கள் தமது அண்டையில் வசிப்பதை சகித்துக் கொள்ளாதவர்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறதென்கிறது ஒரு கணக்கெடுப்பு. பிற நாடுகளில் இந்த சகிப்பின்மை/ வெறுப்புணர்வுக்கு வேறு காரணங்கள் என்றால் இங்கோ உயிரைப்போல அரூபமாகவும் உடலைப்போல திட்டவட்டமாகவும் இந்தியர்களுக்குள் இடையறாது இயங்கிக்கொண்டிருக்கும் சாதியம் காரணமாயுள்ளது. இங்கு பண்பாடு எனப் பயின்றொழுகுவதெல்லாம் அந்தந்த சாதிக்கென சாதியம் வகுத்துள்ள ஒழுங்காணைகள்தான். எனில் இந்தியாவில் 47இலட்சம் பெயர்களிலான சாதிகளும் உட்சாதிகளும் குறைந்தபட்சம் அதே எண்ணிக்கையளவுக்கு பிளவுண்ட சமூகத்தையே உருவாக்கியுள்ளன. இச்சாதிகள் ஒவ்வொன்றுமே ஒதுங்குவதிலும் ஒதுக்குவதலுமே தத்தமது தனித்துவமும் மேன்மையும் இருப்பதாக நம்புகின்றன.

சாதியம்-  Archaeology of Untouchability கட்டுரையில் கோபால்குரு குறிப்பிடுவதுபோல-  ஏற்றத்தாழ்வான பாகுபாட்டின் அடிப்படையில் சமூகத்தையும் பஞ்சபூதங்களையும் பிரித்திருக்கிறது. ஆறாம் பூதமான மெய்நிகர்வெளியும் தப்பவில்லை. திசையும்கூட பொதுவில்லை. தலித்துகள் சுவாசித்த அல்லது அவர்கள்மீது பட்ட காற்று தங்கள் பக்கம் வீசாத திசைக்கு அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்கிற சாதித்தூய்மைவாதம் ஊர்- சேரி என்கிற குரூரமான வடிவில் ஒவ்வொருவருக்குமான புழங்கெல்லையையும் அவற்றின் அமைவிடங்களையும் தீர்மானிக்கிறது. தலித்தல்லாதார் நினைவில் ஊர் என்பது சேரியைத் தவிர்த்த நிலப்பரப்பாகவும், தலித்துகளின் நினைவிலோ ஊர் என்பது சேரியை மட்டுமே குறிக்கும் நிலப்பரப்பாகவும் தேர்ந்து பதிந்துள்ளது. வாழ்விடம், நீர்நிலைகள், வழித்தடங்கள், வழிபாட்டிடம், இடுகாடு/ சுடுகாடு என எல்லாவற்றையும் பாகுபடுத்தி வைத்திருப்பதே சாதியம் என்பதிலிருந்து அணுகினால்தான் மேட்டுப்பாளையம் நடூர் சுவர் தீண்டாமையினால் கட்டப்பட்டுள்ளதை உணர முடியும்.

சிற்றூர்களில் எளிதாக அமலாகிவரும் இந்தப் பிரிவினை நகரங்களில் சற்றே சிக்கலாக வெளிப்படுகிறது. தொடக்கத்தில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருக்கும் சேரி, ஊர் பெருத்து நகரமாக வளரும்போது நகரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாக மாறிவிடுகிறது. இவ்வளவு காலமும் தீட்டுக்குரியதாக ஒதுக்கப்பட்டிருந்த சேரி அதன் அமைவிடம் மற்றும் சந்தை மதிப்பு சார்ந்து ஒருகட்டத்தில் ஊர்க்காரர்களுக்கு தேவைப்படும் இடமாக வகைமாறுகிறது. எனவே அந்த மண்ணின் மக்களை உள்ளூர் நிர்வாகத்தின் துணையோடு வெளியேற்றி அந்தச் சேரியை அபகரித்து ஊரின் பகுதியாக மாற்றும் மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

சேரிக்கு அருகாமையில் இருந்தால் தங்களது இடத்தின் சந்தை மதிப்பும் குறையும் என்கிற பதைப்பும், இவ்வளவு மதிப்புகூடிய இடம் இவர்களுக்கு எதற்கு என்கிற சாதியக்குரோதமும் நமக்கு அருகில் இவர்கள் வசிப்பதா என்கிற அசூயையும் இப்படி வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளியேற்ற முடியாத இடங்களில் அதன்பொருட்டான இயலாமையினால் உண்டாகும் எரிச்சலை ஒவ்வாமையாக வெளிப்படுத்துவார்கள். எல்லா நகரங்களிலும் குறிப்பிட்ட சில இடங்கள் பற்றி உலாவும் இழிவான மதிப்பீடுகளுக்குப் பின்னே இந்த ஒவ்வாமைதான் இயங்குகிறது. வேறுவழியின்றி அருகருகாக வசிக்க நேரிட்டால் சிவசுப்பிரமணியம் போல சிறைமதிலை விடவும் உயரமான தடுப்புச்சுவர் எழுப்பி தங்களது சாதித்தூய்மையை பீற்றுவார்கள். தலித்துகளின் மூச்சுக்காற்று பட்டாலோ முகத்தில் விழித்தாலோ தீட்டாகிவிடுவோம் என்கிற அச்சத்தில் இவ்வாறான சுவர்களை எழுப்புவோரும் உண்டு. அவ்வளவு பலவீனர்கள் தம்மை உயர்/புனித/வீர/ ஆண்ட பரம்பரை என்றும் வெட்கமின்றி சொல்லிக்கொள்வார்கள்.  

இச்சுவர் எழுப்பும் பணி தொடங்கப்பட்டதிலிருந்தே அதன் கெடுநோக்கத்தையும் ஆபத்தையும் சரியாக கணித்து அங்குள்ள அருந்ததியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இவர்கள் சொல்லி நாம் கேட்பதா என்கிற அதிகார மமதையும் சாதிச்செருக்கும் தான் அந்தச் சுவற்றை இவ்வளவுகாலமும் தாங்கி நின்றிருந்து 17 பேரை கொன்ற பிறகு வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. உத்தபுரம் தீண்டாமைச் சுவருக்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்ட பிறகு பல்வேறு ஊர்களிலும் பற்பல அளவுகளில் மறிக்கும் இத்தகைய சுவர்களை அரசு இடித்திருக்குமானால் இன்று 17 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் இந்த சுவர்க் கொலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலிசை ஏவி கொடூரமாக தாக்கியதுடன் அவர்களில் அருந்ததியர்களை (ஓரிருவர் தவிர) மட்டும் தனித்தொதுக்கி பொய் வழக்கின் பேரில் சிறையில் அடைத்திருப்பதன் மூலம், இனியும்கூட அப்படியான தீண்டாமைச் சுவர்களை கட்ட விரும்புவோருக்கு தனது ஆதரவை சூசுகமாக வழங்கியுள்ளது அரசு.
...சவங்களின் எண்ணிக்கை
அதிகரித்துக்கொண்டே போகிறது அய்யா
புரட்சியானாலும் போரானாலும்
தீ வைப்பானாலும் நிலச்சரிவானாலும்
சாவதென்னவோ நாங்கள், ஏழைகள்தான்
மரணம் என்றால் மரணம் தானே அய்யா
இறகுபோல் எடை குறைந்திருந்தாலும்
மலை போல் கனம் குவிந்திருந்தாலும்
இந்த பூமிகூட சூரியனும் சந்திரனும் மாறிமாறிக் காவல்புரியும்
ஒரு பிண அறைதான் அய்யா...
- சச்சிதானந்தன், ஆலிலையும் நெற்கதிரும்
மேட்டுப்பாளையத்தில் காவல்துறை நடத்திய இந்தத் தாக்குதலுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. கொடிய குற்றவாளிகளைக்கூட எவ்வாறு நடத்தவேண்டும் என்கிற நெறிமுறைகள் இருக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து போராடுகிற மதிப்பிற்குரிய ஆளுமைகளை மனிதத்தன்மையற்ற வகையில் தாக்கியுள்ளனர். அவர்களது தாக்குதல் முறையில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் கடமையுணர்ச்சியின் உந்துதலைக் காண முடியவில்லை. மாறாக, இந்தப் பிரச்னையின் எதிர்தரப்பாரைப் போன்ற வன்மத்துடனும் தலித்விரோத மனப்பான்மையுடனும் உடல் மற்றும் மொழிரீதியான வன்கொடுமைகளை இழைத்துள்ளனர். கௌரவமான விதத்தில் அஞ்சலி செலுத்தவும்கூட அவகாசம் தராமல் 17பிணங்களையும் அவர்கள் எரித்து முடிப்பதில் காட்டிய அவசரத்திற்கு நன்னோக்கம் ஏதுமில்லை. தம்மில் நீத்தாரை புதைக்கின்ற அருந்ததியர்களின் வழக்கத்திற்கு  விரோதமாக இவ்வாறு எரித்ததன் மூலம் அவர்களின் பண்பாட்டுரிமையையும் மத நம்பிக்கைகளையும் காவல்துறையினர் அவமதித்துள்ளதுடன், திட்டமிட்டு சாட்சியங்களை அழிக்கும் குற்றச்செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.  தாமிரபரணியிலும், பரமக்குடியிலும் தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தைப் போலல்லாமல் இப்போது தகவல் தொடர்பு வளர்ச்சியின் காரணமாக, தாக்குதல் நடக்கும்போதே அது நேரலையாக ஒளிபரப்பாகிறது என்று தெரிந்தேதான் இவ்வாறு தாக்கியுள்ளனர். ஆட்சியாளர்களோ நீதித்துறையோ ஊடகங்களோ தம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற ஆணவத்துடன் தாக்கிய இவர்கள் அடையாளம் காணப்பட்டு வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பொருத்தமான பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட வேண்டும். 

உலகின் அறிவுச்சமூகத்தினரால் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் சிலை ஒன்றைக்கூட இதுவரையிலும் வைக்கவிடாத நகரம் கோவை (ஈரோடும்) என்பதை கணக்கில் கொண்டால் அந்தப்பகுதியும் அரசு நிர்வாகமும் எந்தளவுக்கு தலித் விரோத நோய்க்கூறில் வீழ்ந்திருக்கிறது என்பதை அறியமுடியும். தீண்டாமைக் கொலைச்சுவரைக் கட்டி 17உயிர்களைப் பறித்த சிவசுப்பிரமணியம் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அல்லாமல் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதை இதன் தொடர்ச்சியில் வைத்தே பார்க்கவேண்டியுள்ளது.

பலநேரங்களில் தானாக முன்வந்து விசாரிக்கும் நீதித்துறை, இந்தப் படுகொலை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதலை, தான் தலையிடுமளவுக்கு சாரமுள்ள விசயமாக கருதவில்லை போலும். தொட்டதற்கெல்லாம் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யும் வழக்குரைஞர்கள், தங்களது சக வழக்குரைஞர்கள் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு பொய்வழக்கின் பேரில் சிறைப்படுத்தப்பட்டிருப்பது பற்றி  என்ன கருதுகிறார்கள் என்பதையும் அறியமுடியவில்லை. தமது உற்றார் உறவினரான 17 உயிர்களையும் உடைமைகளையும் இழந்து பாதிப்புக்குள்ளாகி இருக்கும் எளிய மக்களையே குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் அரசின் போக்கிற்கு  தமிழ்ச்சமூகம் எவ்வாறு எதிர்வினையாற்றப் போகிறது என்றும் தெரியவில்லை. தம் சொந்தங்கள் இப்படி அநியாயமாய் மாண்டுகிடக்கையில், பட்டியல்சாதி இட ஒதுக்கீட்டில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரானவர்கள் பிணம்போல் விறைத்துக்கிடப்பதை விமர்சிப்பதும் வீண்தானோ? ஒவ்வொரு நாளும் நிகழும் 111 சாதிக்குற்றங்களை கண்டும் கேட்டும் மரத்துப்போன மனம், இதற்கு மேலும் எழுதி யார் மனதை உலுக்கி நியாயம் பெறப்போகிறோம் என்று இவ்விடத்திலேயே எழுதுவதை நிறுத்திக்கொள்கிறது.
ஓ, பிரகாசமான சூரியனே,
தொழிலாளர்களின் குடிசைகளின் மீது தொடர்ந்து பளிச்சிட்டுக் கொண்டேயிரு
வறட்சியால் தீய்ந்துபோய்த் தவித்து மாய்கிறவர்கள் அவர்கள்தாம்
வெள்ளப்பெருக்குகளில் மூழ்கி மடிந்துபோகிறவர்கள் அவர்கள் தாம்
எல்லாத்துயரங்களுக்கும் உறைவிடமாயிருப்பவர்களும் அவர்களே

- பஞ்சாபின் புரட்சிகர தலித் கவி சாந்த்ராம் உதாசி 



( இக்கட்டுரையின் சுருக்கம் கவிதா முரளிதரன் மொழிபெயர்ப்பில்  Why our acceptance of words like ‘Paraiah’ is problematic  என்ற தலைப்பில் நியூஸ்மினிட் இணைய இதழில் 7.12.2019 அன்று வெளியாகியுள்ளது.)













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...