திங்கள், ஜனவரி 12

பம்மாத்துகளின் மீது காறியுமிழும் கவிதைகள் – ஆதவன் தீட்சண்யா


திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின்
"ஒழுகிய வானத்தை நேற்றுதான் சரிசெய்தோம்"
தொகுப்புக்கு எழுதிய முன்னுரை

ஒழுகிய வானத்தை நேற்றுதான் சரிசெய்தோம் என்று இத்தொகுப்பிலுள்ள ஒரு வரி எனக்குள் விதவிதமான சித்திரங்களை விரித்துக்கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையை புகார்களால் நிறைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக அதை வாழத்தக்கதாக மாற்றிக்கொள்வதே சரி என்கிற மிகப்பெரும் போதம் இந்த ஒரு வரிக்குள் இறங்கி வழிநடத்துவதாகத் தோன்றுகிறது. இன்னும் இதுபோன்று மனதைக் கிளர்ச்சி கொள்ளவைக்கிற, உலகை புதுரீதியில் பார்த்திட அழைத்துப்போகும் கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்திருப்பது தற்செயலானதல்ல. 

தான் வாழும் காலத்தின் சாட்சியமாக அல்லது பிரதிபலிப்பாக ஒருவரது இலக்கிய ஆக்கங்கள் வெளிப்படும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரது ஆக்கங்களோ அதையும் மீறி காலத்தை இடைமறிப்பதை தன்னியல்பாகக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நடப்புகளை அதன் போக்கில் அனுமதித்து அதுகுறித்து என்னத்தையாவது நாலுவரி எழுதித் தொலைக்க சூழல் அவர்களை அனுமதிப்பதில்லை. நித்தமும் நெருப்பாற்றை நீந்திக் கடக்க வேண்டியதுபோன்ற நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் அவர்கள் அதையல்லாமல் வேறெதை எழுத வாய்க்கும்? ஒடுக்குதலுக்கு எதிராக அவர்கள் எழுதுவது கைத்தட்டலை எதிர்பார்த்தல்ல, அது அவர்களது வாழ்க்கை. ஆமாம், அவர்களது இருப்பே ஒடுக்குமுறையை இடையறாது எதிர்ப்பதில் தான்  வேர் கொண்டுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதை ஒடுக்குமுறையாளர்கள் தமக்கெதிரான குற்றப்பத்திரிகையாக பொருள்மாற்றி வாசிக்கும்படியாக நேர்வது தவிர்க்கமுடியாதது. 

இவர்களால் என்ன எழுதிவிட முடியும் என்கிற இளக்காரமும் குறுகுறுப்பும் கலந்த முன்முடிவுகளுடன் தலித்துகளின் எழுத்துகளை அணுகும் ஒரு சாதிய மனம் தன்னிடமுள்ள மனிதத்தன்மையற்றக் கூறுகளை வாசிப்பினூடாக இனங்கண்டு ரகசியமாகவேனும் துணுக்குற்றுப் போவதைக் கண்டு ரசிப்பதல்ல தலித் எழுத்துகளின் நோக்கம், அந்தச் சிறுபொழுதில் சாதியமனம் வெளிப்படுத்திய மனிதத்தன்மையை வாழ்நாள் முழுமைக்குமானதாக வளர்த்தெடுப்பதன் மூலம் தான், அதாவது அண்டை அயலாரையும் மனிதர்களாக்குவதன் மூலமாகத்தான் தம்மை மனிதர்களாக தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்கிற தெளிவு பெற்றுள்ள ஒடுக்கப்பட்டவர்கள் அதன்பொருட்டே எழுதுகின்றனர். அதற்காக அவர்கள், மலக்கிடங்கில் முழுகி அடைப்பை நீக்கி மேலெழுந்தக் கையோடு எழுதப்படுகிற இக்கவிதைகளை மூக்கைப் பொத்திக்கொண்டுகூட படிக்க முடியவில்லை என்று அரற்றுகிற நாசூக்குப் பேர்வழிகளிடம் நயந்து பேசிகொண்டிருப்பதில்லை. இந்தக் கவிதைகளின் வழியே பரவும் நாற்றம் எழுதியவருடையதல்ல என்பதை உணர வைக்கிறார்கள்.  

இந்தியாவை இந்தக்கணம் வரையிலும் அசுத்தப்படுத்தி வருகிற நரேந்திர மோடி தொடங்கி கமல்ஹாசன் வரையானவர்கள் திடுமென வெள்ளி ஸ்பூன் போல விளக்குமாறைப் பிடித்துக் கொண்டு தூய்மைப்போராளிகளாகிவிட்டனர். இவர்களில் ஒருவரேனும் ஒரு பொதுக் கழிப்பறையையோ திறந்தவெளி மலக்கிடங்காய் நாறும் ரயில்பாதையையோ சுத்தப்படுத்துவார்களா என்றால் அதுதான் இல்லை. ஏற்கனவே சுத்தப்படுத்தப்பட்ட தெருக்களை செயற்கையாக அசுத்தப்படுத்தி அதற்கப்புறம் கூட்டிக்கிழிக்கும் இந்த பம்மாத்துகளின் மீது காறி உமிழ்கிறது இக்கவிதைகள். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் அடுத்தக் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்பிக்கொண்டே மலக்குழிக்குள்ளும் சாக்கடைக்குள்ளும் இறக்கிவிடப் படுகிறவர்கள் இந்த நாட்டின் பாரபட்சமான தொழில்நுட்ப அறிவின் மீது காறி உமிழாமல் வேறென்ன செய்வார்கள்? 

மனிதகுலம் அறிவியல் முன்னேற்றத்தால் அன்றாடம் விளைவித்துத்தரும் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் வாங்கித்துய்ப்பதன் மூலம் தன்னையொரு நவீனச்சமூகமாக காட்டிக்கொள்கிறது இந்திய/ தமிழ்ச்சமூகம். ஆனால் அது கருத்தியல்ரீதியாக மிகவும் பின்னோக்கிய காலத்திற்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரட்டை மனநிலையை அம்பலப்படுத்துவதோடு நில்லாமல் கருத்தியல்ரீதியாகவும் அதை மேலிழுத்துக் காப்பாற்றும் அக்கறைகொண்ட கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகிறது. நுகர்வியம், பணமீட்டும் வெறி, பெண்ணுடல் மீதான அதிகாரம், அரச பயங்கரவாதம், சூழலிய அழிவு என்று மிக நேரடியான அரசியல் பிரச்னைகள் கவிஞரின் பாடுபொருள்களாகியிருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் எப்படி கவிதையில் சொல்ல முடியும், இதையெல்லாம் சொல்வதா கவிதை என்கிற கேள்விகள் எழாதபடிக்கு எழுதிப்போகும் சவாலை கவிஞர் நேர்மையாக எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒருத்தி அறுத்தாஉள்ளிட்ட அநேகக் கவிதைகளை உதாரணம் காட்டமுடியும்.

எனினும், தன்னுணர்வாக உள்வாங்கப்படாத எதுவும் கவிதையாக மாறாது என்பதற்கு இதிலுள்ள கவியரங்கக் கவிதைகள் சிலவற்றை சுட்டமுடியும். தலைப்புக்கேற்ப கவிதை செய்கிற நிர்ப்பந்தங்களிலிருந்து  விடுவித்துக்கொள்வதன் மூலம் இந்த பலவீனத்தைக் கடந்து விட முடியும். ஒரு கவிஞர், தான் ஆதரிக்கும் அரசியல் பிரச்னைகள் மீதெல்லாம் கவிதை எழுதியேதான் தனது நிலைப்பாட்டை தெரிவித்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் மக்களின் பாடுகளிலும் போராட்டங்களிலும் விடுதலையிலும் கொண்டாட்டங்களிலும் தன்னைக் கரைத்துக்கொள்ளும் ஒருவருக்கு அவையெல்லாவற்றையும் கவிதையாகவே எழுதிவிடுவதும்கூட சாத்தியமாகக்கூடும். என் தோழன் அந்த உயரங்களைத் தொடுவானாக. 

- ஆதவன் தீட்சண்யா
குழந்தைகளை கொண்டாடத் தெரியாத நாள் - 14.11.14, ஒசூர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...