தேசாபிமானி மலையாள வார இதழில் (2019 ஜூன் 30) வெளியான எனது கட்டுரையின் தமிழ் வடிவம். இதிலுள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும்.
1. தமிழகத்தின் சாதியப் படிநிலை குறித்து..
வரிசையாக எழுதிவைத்து நாளொன்றுக்கு 12 மணிநேரம் என்று 355 நாட்கள் வாசித்தால்
தான் இந்தியாவிலுள்ள சாதிப்பெயர்களையும் உட்சாதிப்
பெயர்களையும் வாசித்து முடிக்க முடியும் என்றொரு புள்ளிவிவரத்தை தருகிறார் நிதி ஆயோக்
துணைத்தலைவர் அர்விந்த பனகாரியா. அந்தளவுக்கு 46,73,034 சாதிகளாகவும் உட்சாதிகளாகவும்
பிரிந்திருக்கிறது இந்தியச் சமூகம். இதற்கு இசைவான விகிதத்தில்தான் தமிழகமும் பிரிந்துள்ளது.
இங்கு பட்டியல் சாதிகள்- 76, பட்டியல் பழங்குடியினர்-36, பிற்படுத்தப்பட்ட சாதிகள்-136,
(இஸ்லாமியரில்) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள்- 7, மிகவும் பிற்பட்ட சாதிகள் 41, சீர்மரபினர்-68,
முற்பட்ட சாதிகள்- 79 என 443 சாதிகள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் பல உட்சாதிகளாக மேலும் பிரிந்துள்ளன. இவற்றில் எந்தவொரு சாதியோ உட்சாதியோ
இன்னொன்றை தனக்குச் சமதையாகக் கருதுவதில்லை. இவை தத்தமது சாதிக்கென தனித்துவமும் பெருமையும்
இருப்பதாக நம்புகின்றன. அதற்கேற்ற தோற்ற வரலாற்றுக்கதைகளையும் தொன்மங்களையும் புனைந்து
கொண்டுள்ளன.
சாதியத்தின் பொதுவான கூறுகளாகிய மேல்Xகீழ்,
தீட்டுXபுனிதம், ஒதுக்குவதுXஒதுங்குவது, எந்தவொரு சூழலிலும் மாற்றிக்கொள்ள முடியாதபடி
மூடுண்ட இறுக்கம் உள்ளிட்டவை தமிழகத்திலும் கடுமையாக நிலவுகிறது. சாதியமைப்பின் உச்சத்தில்
இருத்திக் கொண்டுள்ள - அதனாலேயே சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டுத்தளங்களில் நீடிக்கும்
பார்ப்பனர்களின் மேலாதிக்கம் இன்னமும் இங்கு பெருமளவில் மாற்றமின்றி நீடிக்கிறது. சமூக
நீதிக்கான போராட்டங்களின் தாக்கத்தினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பார்ப்பனர்களின்
ஏகபோகம் தடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தான் உயர்வானவர்கள் என்கிற சமூக உளவியலை மாற்றியமைக்க
முடியாத பலவீனம் நீடிக்கிறது.
சாதிப்படிநிலையை ஏற்றுக்கொண்டு அதில்
பார்ப்பனர்களுக்கு அடுத்துள்ள நிலைக்கு உரிமை கோருவதிலும் அதை நோக்கி நகர்வதிலும் இங்கு
ஒவ்வொரு சாதியுமே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அதன்பொருட்டு படிநிலையில்
தனக்கு மேலுள்ள சாதியிடம் விசுவாசத்தையும் கீழே அடுத்துள்ள சாதியிடம் வெறுப்பையும்
விலகுதலையும் எல்லாச் சாதிகளும் கடைபிடிக்கின்றன. இடையறாத இப்போக்கு சமீபகாலத்தில்
அதிகரித்துவருகிறது.
வேறு பண்பாட்டுப் பின்புலம் உள்ளவர்கள்
தமது அண்டையில் குடியிருப்பதை விரும்பாதவர்களுக்கான சர்வதேச கணக்கெடுப்பில் ஜோர்டானியர்களுக்கு
அடுத்தபடியாக இந்தியர்கள் முன்னிலை வகிப்பதற்கு ஒரு காரணம் இங்கு வாழ்விடம் திட்டவட்டமான சாதியப் பிரிவினையைக் கொண்டிருப்பதுதான்.
மன்னராட்சிக் காலங்களில் உருவாகி காலனியாட்சிக் காலத்திலும் சுதந்திரத்திற்குப் பின்னும்கூட
அக்ரஹாரம், பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் என்கிற தனித்த வாழ்விடங்களைக் கொண்டிருந்த
பார்ப்பனர்கள் காலப்போக்கில் அதிகார மையங்களாகிய பெருநகரங்களுக்கும் அயல்நாடுகளுக்கும்
பெருமளவில் நகர்ந்துவிட்டனர். அவர்கள் தங்களது புதிய வாழ்விடங்களுக்குள் பார்ப்பனரல்லாதார்
குடியமர்வதை நுட்பமான பல வழிகளில் தடுத்து
விடுகின்றனர்.
வரலாற்றுக் காரணங்களால் தாங்கள் இழந்துவந்த
தனித்த அடையாளங்களை மீட்டுக் கொள்ள உகந்த காலமாக பார்ப்பனர்களில் பலரும் பா.ஜ.க. ஆட்சியைக்
கருதுகிறார்கள். அதாவது பௌத்த எழுச்சியால் பார்ப்பனர்கள் இழந்தவற்றை மீட்ட புஷ்யமித்திர
சுங்கனின் ஆட்சிக்காலம் மீண்டுவந்தது போன்ற பெருமிதம் அவர்களுக்கிருக்கிறது. எனவே அவர்கள்
அப்பளம், ஊறுகாய் தொடங்கி அக்ரஹாரம், பல்கலைக்கழகம் வரையாக எல்லாவற்றிலும் தமக்கென
தனியானவற்றை இப்போது மீட்டுருவாக்கும் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். கல்வி
வளர்ந்தால் சாதி ஒழிந்துவிடும் என்கிற வாதத்தைப் பொய்யாக்கும் விதமாக, தலைமுறை தலைமுறையாக
கல்வியறிவு பெற்று வருகிற - அதிலும் உயர்கல்வி பெற்றுவருகிற பார்ப்பனர்களில் பலரும்
சாதிய உணர்வு மற்றும் பாகுபாட்டின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறார்கள்.
பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள
சாதியினர் பார்ப்பனர்களைப் பார்த்தொழுகுகிறவர்களாக - போலச்செய்பவர்களாக வாழ்கிறார்கள்.
இவர்கள் சேர்ந்து வாழும் இடம் ஊர் எனச் சுட்டப்படுகிறது. இந்த ஊர் சாதியடிப்படையிலான
தெருக்களாக பிரிந்திருக்கிறது. ஒரு சாதி வசிக்கும் தெருவில் இன்னொரு சாதி வசிப்பது
விதிவிலக்காக இருக்குமேயன்றி இயல்பாக நடக்கக்கூடியதல்ல. பெருங்கோயில்கள், கல்விக்கூடங்கள், மத்திய மாநில
அரசுகளின் அலுவலகங்கள், பேருந்து / ரயில் நிறுத்தங்கள், வாக்குச்சாவடிகள், வணிக நிறுவனங்கள்,
தொழிற்சாலைகள், நீர்த்தேக்கத் தொட்டிகள், நீர்நிலைகள்
ஆகியவை இந்த ஊர்ப்பகுதியில்தான் இருக்கின்றன.
இந்த இருவகை வாழ்விடங்களுக்கு வெளியே
ஒதுக்கப்பட்டிருப்பவை சேரிகள் / காலனிகள் என்கிற பெயரிலான பட்டியல் சாதியினரின் குடியிருப்புகள்.
இயல்பாக குடிமக்களுக்கு அரசிடமிருந்து வந்து சேரவேண்டிய தேவைகள் இங்கு வசிப்பவர்களுக்கு
இரண்டாம் பட்சமாகவே வழங்கப்படும். அரசின் வளர்ச்சிப்பணிகளையோ
முதலீடுகளையோ இப்பகுதியில் காண்பதரிது. சாதியச்சமூகத்தின் பொதுஉளவியல்தான் அரசின்
உளவியலாகவும் இயங்குகிறது. ஆகவே அது பட்டியல் சாதி அல்லாதாரின் அரசாக தன்னைத்தானே குணாம்சரீதியாக
குறுக்கிக்கொள்கிறது.
பட்டியல் சாதிகளில் 76 பிரிவுகள் இருந்தாலும்
ஏனைய பிரிவினரைக் காட்டிலும் பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய மூன்று பிரிவினரே பெரும்பான்மையினர்.
சாதிஇந்துக்களைப் பொறுத்தமட்டில் இவர்கள் அனைவருமே தீட்டுக்குரியவர்கள், ஒதுக்கிவைக்கப்பட
வேண்டியவர்கள். ஆயினும், சாதியத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட இந்தச் சேரிவாழ் மக்கள் தமக்குள் இணைந்து வாழாமல் தனித்தனியே
வாழ்கின்றனர்.
சேரிவாழ் மக்களுக்கும் ஊர்வாழ் மக்களுக்கும்
இடையே எவ்வித மனிதாய உறவுகளும் கிடையாது. வழிபாட்டுத்தலங்கள், தெய்வங்கள், பூசகர்கள்,
பண்டிகைகள், கொண்டாட்டங்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள், பாதை, இடுகாடு, நீர்நிலைகள்
என எதுவும் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளத்தக்க பொதுத்தன்மையுடன் இல்லை. விதிவிலக்காக
பொதுவில் இருக்குமிடங்களில் பொது உரிமை கோரலும் மறுப்பும் மோதலுக்கும் வன்முறைக்கும்
வழிவகுப்பதாக ஆக்கப்படுகின்றன.
'மனித வாழ்விற்கு மிக அடிப்படை ஆதாரமான
நிலம் இங்கு நீதியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்தியாவின் மக்கள்தொகையில் 56.4 சதம்
குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு நிலம்கூட இல்லை. இவர்கள், சொத்து வைத்துக்கொள்ள
உரிமையற்றவர்கள் என்று சாதியத்தால் மறுக்கப்பட்ட சாதியினர். மறுபுறத்திலோ மொத்த விளைநிலத்தில்
32% வெறும் 5% பேரிடம் இருப்பதாக அரசின் புள்ளிவிவரமே தெரிவிக்கிறது. இந்த 5% பேரும்
சாதியடுக்கின் மேலே இருத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு மன்னராட்சிக் காலங்களில் பல்வேறு
பெயர்களில் வழங்கப்பட்ட இனாம்கள் மூலமாக இந்நிலக்குவிப்பு நடந்துள்ளது. செட்டில்மென்ட்
ஆப் இனாம்ஸ் என்னும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகால ஆவணம் அக்ரஹாரம், பிரம்மதேயம்,
சதுர்வேதிமங்கலம், திரிஷ்வாகம், தர்மாசனம், பட்டம், பொறுப்பு, அத்யாயனம், புராணம்,
பஞ்சாங்கம், தோப்பு, தொரப்பாடி, கர்ணம், மணியகாரர் போன்ற பெயர்களில் வளமான பெரும் நிலப்பரப்புகள்
மேலடுக்குச் சாதிகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. இவ்வாறு இனாம் கொடுப்பதற்காக
வேளாண் சாதிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டதோடு, அந்த நிலங்களில் அவர்கள் கூலிகளாக
உழைத்துக் கொடுக்கும்படியும் தாழ்த்தப்பட்டனர். இவ்வாறு பிறருக்கு மானியமாகவோ இனாமாகவோ
கொடுப்பதற்காக அரசால் நிலம் பறிக்கப்பட்டவர்கள் குடிநீக்கிகள் என்று தமிழகக் கல்வெட்டுகளில்
பொறிக்கப்பட்டுள்ளனர்...' (இது தொடர்பான எனது விரிவான கட்டுரையை பி.பி.சி.வலைதளத்தில்
வாசிக்கலாம்.)
பட்டியல் சாதியினரைப் பொறுத்தமட்டில்,
அவர்களுக்கு நிலப்பங்கீடு செய்து தரப்படவில்லை என்பதோடு அவர்களிடமிருந்த பஞ்சமி நிலமும்
பறிபோய்விட்டது. அம்பேத்கர் பிறந்த அதே 1891ஆம் ஆண்டில், அயோத்திதாசர் முன்னெடுப்பில்
நடந்த திராவிட மகாஜன சபை மாநாடு தரிசுநிலங்களை தீண்டப்படாதாருக்கு வழங்கவேண்டும் என்று
கோரியது. அதன் தொடர்ச்சியில், 1892ல் DC லேண்ட் என்கிற வகைப்பாட்டின் கீழ் அன்றைய சென்னை
மாகாணத்தின் தீண்டப்படாத சாதியினருக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியது. ஆனால்
இன்றைக்கு அந்த நிலத்தில் சில ஆயிரம் ஏக்கரே அவர்களது அனுபோகத்தில் உள்ளது. எஞ்சிய
நிலம் அவ்வளவும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையோடு சாதி இந்துக்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.
நகரமயமாக்கம் விரைந்து பரவும் மாநிலமான தமிழகத்தில் 12லட்சம் ஏக்கர் நிலம் என்பதன்
சொத்துமதிப்பு அதற்குரியவர்களிடம் இல்லை.
ஏற்கனவே சாதி என்கிற சமூக மூலதனத்தைக்
கொண்டிருக்கிற உயர்த்திக் கொண்ட சாதியினர் வேளாண்மை, தொழில், வணிகம் ஆகியவற்றை தம்
கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். உலகமயமாக்கல் காலத்தில் அவர்கள் நிலம், மண், மணல்,
பாறை, கனிமங்கள், தண்ணீர், மரம் என இயற்கை வளங்களை பண்டமாக்கி விற்று பணமாக்கி வருகின்றனர்.
இவர்களுக்கு இடைநிலைச் சாதிகளில் ஒருபகுதியினர் பங்குதாரிகளாக உருவாகியுள்ளனர். இவ்விரு
பகுதியினரது கட்டுப்பாட்டில்தான் இன்றைய தமிழக அரசு இயந்திரமும் அரசியல் களமும் சிக்கிக்
கொண்டிருக்கின்றன.
2. சமகாலத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமை
தமிழக மக்கள் தொகையில் 20.01 சதவீதத்தினர்
தலித்துகள். 1.10 சதவீதமான பழங்குடிகளைத் தவிர்த்துவிட்டால் (சில இடங்களில் பழங்குடிகளும்
கூட) எஞ்சியவர்கள் உயர்த்திக்கொண்ட சாதியினரும்
இடைநிலைச் சாதிகளுமாவர். இவர்கள் இயல்பாக சுயசாதிப் பெருமிதம் கொண்டவர்கள். தங்கள்
சாதி தனித்துவமானது, பிறசாதியின் கலப்பில்லாத தூய ரத்தம் கொண்டது என்கிற போலி கற்பிதத்தை
நம்புகிறவர்கள். இந்தப் பெருமிதம், தனித்துவம், சாதித்தூய்மை ஆகியவற்றுக்கு தலித்துகளால்
ஆபத்து என்கிற அவதூறையும் பீதியையும் கிளப்பி - ஆகவே தலித்துகள் அடக்கப்பட / அழிக்கப்பட
வேண்டியவர்கள் என்கிற நஞ்சைப் பரப்புகிறார்கள். சாதியுணர்வை சாதி வெறியாக மாற்றுவதால்
தத்தமது சாதியில் ஏற்படும் அணிதிரட்சியை தனிப்பட்ட ஆதாயங்களுக்கான மூலதனமாக அரசியல்
களத்தில் பயன்படுத்துகிற மலிவான உத்தியை அந்தந்த வட்டார அளவிலான ஆதிக்கச்சாதியினர்
சிலர் தொடர்ந்து முயற்சித்துவருகிறார்கள்.
இந்தச் சாதிகள் தமக்கு இணையாக சமத்துவமாக
இன்னொரு சாதியை கருதாத போதும் தலித் வெறுப்பு-
தீண்டாமை- வன்கொடுமை என்கிற புள்ளிகளில் ஒன்றிணைகிறார்கள். அவ்வகையில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும்
ஒரு சாதிய வன்கொடுமை என்கிற அகில இந்திய சராசரியுடன் பொருந்தும் விதமாகவே தமிழகத்திலும்
சாதிய வன்கொடுமைகளை நிகழ்த்துகிறார்கள். இன்னமும் தேநீர்க்கடைகளில் இரட்டைக்குவளை,
சலவைக்கடைகளிலும் சவரக்கடைகளிலும் அனுமதி மறுப்பு, இடுகாடு/ இடுகாட்டுக்கான பாதை மறுப்பு,
வழிபாட்டுரிமை மறுப்பு, கல்வி வளாகங்களில் பாரபட்சம், பொது இடங்களில் புழங்கத்தடை,
பள்ளிகளில் தலித் பெண் ஊழியர்கள் மதிய உணவு சமைப்பதற்கு எதிர்ப்பு, வாயிலே சிறுநீர்
கழிப்பது/ மலத்தைத் திணிப்பது, தலித் குடியிருப்புகளை கொள்ளையடிப்பது / அழித்தொழிப்பது,
தலித் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்துவது என மனிதத்தன்மையற்ற வடிவங்களில்
வன்கொடுமை தமிழகத்தில் நிலவுகிறது. இத்தகைய வன்கொடுமைகளை நிகழ்த்துவதற்கு தங்குதடையற்ற
சுதந்திரம் தேவை என்பதற்காக- வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக
பழிபோட்டு அச்சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோருகிறார்கள்.
வன்னிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான
போராட்டத்தில் நம்பிக்கை தரும் தலைமையாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகளையும் தேவையையும்
தனது குடும்பத்தின் சுயநலத்திற்காக பலிகொடுத்து அன்னியப்பட்டுப் போனவர் ராமதாஸ். கடைசியில்
அவர் தலித் வெறுப்பை முன்வைத்து வன்னியர் ஆதரவை மீட்டுக்கொள்ளும் இழிநிலைக்குத் தாழ்ந்தார்.
வெவ்வேறு அமைப்புகளின் பெயர்களில் தலித்தல்லாதாரை அணிதிரட்டி தனது அரசியல் வீழ்ச்சியை
தடுத்துக்கொள்ள வெறிகொண்டு அலைந்தார். அதன் விளைவாகவே அவரது கட்சியினர் பொன்பரப்பியில்
வன்கொடுமை செய்தார்கள். இளவரசனது பிணத்தின் மீது நின்று நாடாளுமன்ற உறுப்பினரான அவரது
மகனை இந்தத் தேர்தலில் தருமபுரி மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். என்றாலும், ஆக்கப்பூர்வமான
பணிகளில் ஈடுபடவேண்டிய வன்னிய இளைஞர்கள் பலர் அவரது பிடியில் சிக்கி சாதிவெறியேறி வன்கொடுமை
குற்றவாளிகளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவலையளிக்கும் உண்மை. இதே நிலைதான் மேற்கேயும்
தெற்கேயும் உள்ள ஆதிக்கசாதியினர் நிலையும். தலித்துகளும் சாதியமறுப்பாளர்களும் இவர்களது
வன்கொடுமைகளை எதிர்த்துக்கொண்டே இவர்களை சாதிய மனநோயிலிருந்து விடுவிக்கும் பொறுப்பையும்
ஏற்கவேண்டியுள்ளது.
3. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயற்பாடுகள்
சாதிய வன்கொடுமைகளை தூண்டிவிடுகிறவர்களில்- நிகழ்த்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள்
அரசியல் செல்வாக்குள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது தனது சாதியை குறிப்பிடத்தக்க
வாக்குவங்கியாக திரட்டி வைத்துக்கொண்டு தேர்தல் அரசியலில் முனைப்புடன் உள்ள கட்சிகளின்
பொறுப்புகளில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில்
பங்கெடுக்காதது மட்டுமல்ல, தமது கட்சியின் தலைமையைக்கூட இவ்விசயத்தில் கண்டுங்காணாமல்
இருக்கும்படியாக விலக்கிவைக்கின்றனர். தலித்துகளுக்கு ஆதரவாக குரலெழுப்புவதன் மூலம்
ஆதிக்கச் சாதியினரின் வெறுப்பைச் சம்பாதித்து அவர்களது வாக்குகளை இழக்க நேரிடுமோ என்கிற
அச்சத்தில் கட்சித்தலைமைகளும்கூட விலகியிருக்கவே விரும்புகின்றன. எல்லாருக்கும் பொதுவான
கட்சி என்று பசப்பலாக சொல்லிக்கொண்டு ஆதிக்கச்சாதியினரின் அட்டூழியங்களை சகித்துக்கொள்கிற
அல்லது நியாயப்படுத்துகிற தலித்விரோத நிலைப்பாடு தான் பெரும்பாலான கட்சிகளுடையது. புற
அழுத்தம் காரணமாக அதிகபட்ச நடவடிக்கையாக ஒரு கண்டன அறிக்கை வெளியானால் அதுவே பெரிய
விசயம்தான். அதையும்கூட ஆளும் அதிமுகவிடமோ
பா.ஜ.க.விடமோ எதிர்பார்க்க முடியாது.
சாதியத்தை ஓர் ஒடுக்குமுறை வடிவமென உணர்ந்து
அதற்கெதிரான போராட்டங்களை தமது அன்றாட நிகழ்ச்சிநிரல்களின் பிரிக்கவியலாத பகுதியாக
கொண்டிருக்கும் ஒரு கட்சியையும் இனங்காண முடியவில்லை. அதேவைளையில் வன்கொடுமை ஏதும்
நிகழ்ந்துவிட்டால் இங்குள்ள அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சீய கட்சிகள்/ இயக்கங்கள்தான்
எல்லாருக்கும் பொது என்று நழுவாமல் சார்புநிலை எடுத்து ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கின்றன.
இதனால் ஆதிக்கச்சாதியினரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தேதான் இந்த நிலைப்பாட்டை
மேற்கொள்கின்றன. பிற கட்சிகள், அமைப்புகளுக்கு கிடைப்பதுபோல செயல் மூலதனமோ நிதியுதவியோ
அரசு இயந்திரத்தின் அனுசரணையோ கிட்டாத/ வேண்டாத போதும் தமது சொந்த சக்திக்குட்பட்டு
இந்த அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகள்தான் பெயரளவுக்கேனும் சாதியம் பற்றி பிற அமைப்புகள்
பேசியாக வேண்டிய அழுத்தத்தை உருவாக்குகின்றன. ஆனால் இந்த இயக்கங்களின் உள்ளடக்கமும்
செயல் எல்லையும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை.
அரசியல் தெளிவுள்ள தலித்தல்லாத சிலர்
விடுதலைச்சிறுத்தை கட்சியில் இருக்கிறார்கள் என்பதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெரும்பாலான
அம்பேத்கரிய இயக்கங்களுக்குள் திரண்டிருப்பவர்கள் தலித்துகள் மட்டுமே. இன்னும் நுணுகிச்
சொல்வதெனில் இந்த அமைப்புகள் தலித்துகளில் ஏதேனுமொரு உட்சாதிப் பிரிவுக்கானதாக சிதறுண்டு
உட்பிரிவுகளைக் கடந்த ஒரு தலித் இயக்கமாகக்கூட உருவெடுக்க முடியாத நிலையில் கிடக்கின்றன.
பரந்த தலித் ஒற்றுமையை ஒரே கட்சியின் கீழ் திரட்ட முடியாத நிலையில் ( இது அம்பேத்கர்
காலத்திலேயே சாத்தியப்படவில்லை), கட்சிகளுக்குள்ளாவது ஒரு குறைந்தபட்ச செயல் ஒற்றுமையை உருவாக்க முடிந்திருக்கிறதா
என்றால் அதுவும் இல்லை. அமைப்புரீதியான இந்தப் பிரச்னையைக் கடந்து, சாதிகளுக்குள் சமத்துவம்
சாத்தியமில்லை, சாதிகடந்தே சமத்துவம் சாத்தியம் என்கிற தங்களது அரசியல் நியாயத்தை இந்த
அமைப்புகளால் தலித்தல்லாத பகுதியினரிடம் பேசமுடியாத நிலை நீடிக்கிறது. அனைத்து மக்களுக்குமான
பிரச்னைகளுக்காக இவ்வியக்கங்கள் போராடினாலும் கூட இவற்றை தலித் அடையாளத்திற்குள்ளேயே
குறுக்கி முடக்கிவிடுவதற்கு சாதி இந்துக்கள் செய்யும் கபடத்தை எதிர்த்தும் போராடியாக
வேண்டியுள்ளது.
அடையாளப்பூர்வமாக சில பிரச்சார நடவடிக்கைகளை
எப்போதாவது நடத்திவிட்டு சுருக்கம் கொள்பவை, சாதி ஒடுக்குமுறை- பண்பாட்டு ஆதிக்கம்-
மூட நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிராகவும் பகுத்தறிவையும் சமத்துவத்தையும் சமூக நீதியையும்
பரப்பவும் கருத்தியல் தளத்திலும் களத்திலும் தீவிரமாக செயல்படுபவை என பெரியாரிய அமைப்புகளை
பகுத்தறியலாம்.
மார்க்சீய அமைப்புகளைப் பொருத்தவரை சாதியின்
தோற்றம் இருப்பு அழிப்பு பற்றி ஒருமித்தக் கருத்து இல்லையாயினும் அது ஓர் ஒடுக்குமுறை
வடிவம் என்கிற புரிதல் உள்ளது. ஆகவே ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கவேண்டும் என்கிற
நியாய உணர்விலிருந்து தலித்துகளுக்கு ஆதரவான நிலையை எடுக்கிறார்கள். அப்படியான பணிகளை
மேற்கொள்வதற்கென்றே சிபிஐஎம் உருவாக்கிய அமைப்புதான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இதேபோன்ற
அமைப்புகளை சிபிஐ, மா.லெ.கட்சிகளும் கூட தொடங்கியுள்ளன. தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான வேலைகளை இம்மாதிரியான
அமைப்புகளுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு கட்சிகளும் அவற்றின் வர்க்க அமைப்புகளும்
“மாரிக்கால அரண்மனையைக் கைப்பற்றும் போராட்டத்தை” மட்டுமே நடத்தப் போகின்றனவா என்கிற
விமர்சனம் ஒருபுறமிருக்க இந்த அமைப்புகளின்
தேவை களத்திலே உணரப்படுகிறது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடங்கப்பட்டதிலிருந்து
சாதிய வன்கொடுமைகள், சாதி ஆணவப் படுகொலைகள், அரசியந்திரத்தின் அத்துமீறல்கள், சமூகநீதி
மறுப்பு ஆகியவற்றை எதிர்த்த களப்போராட்டங்களில் சமரசமற்று ஈடுபட்டுவருகிறது. சமூகரீதியாகவும்
சட்டரீதியாகவும் தலித்துகளுக்கு பாதுகாப்பு, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
மையத்தின் மூலமான பயிற்சி வகுப்புகள், பஞ்சமிநில மீட்பு நடவடிக்கைகள் என அதன் செயற்களம்
விரிவடைகிறது. அது வரும் ஆகஸ்டில் மாநில மாநாட்டை நோக்கி செல்லவிருக்கும் நிலையில்
சாதியம் பற்றிய ஓர் உரையாடலை தமிழ்ச்சமூகத்திற்குள் நிகழ்த்திப் பார்க்கும் முயற்சியை
மேற்கொண்டுள்ளது. மேடை நிகழ்ச்சிகளாக அல்லாமல் நேருக்கு நேர் ஒருவரோடு ஒருவர் அருகிருந்து
உரையாடுவதன் மூலம் தனிநபர்களின் சாதியக் கண்ணோட்டத்தில் குறுக்கீடு செய்யும் முயற்சி
இது.
4. தோழர் அசோக் கொல்லப்படுவதற்கு இட்டுசென்ற
சூழல் குறித்து
சாதிய வன்கொடுமை என்கிற விசயத்தில் தமிழ்நாட்டின்
எந்தவொரு பகுதியை விடவும் தென் தமிழ்நாடு சளைத்தல்ல. தென்மாவட்டக்கலவரங்கள் என்று தனியாக
குறிக்கப்படுமளவுக்கு கொடூரமான கொலைகளும் தாக்குதல்களும் நடந்துவந்த பகுதிதான் அது.
முதல் தாக்குதல் தொடுத்துவந்த முக்குலத்தோர் மீது தலித்துகள் தொடுத்த பதில் தாக்குதல்
வன்முறையை ஒரு சமநிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியது. மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் மீதான
துப்பாக்கிச் சூடு, இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு வந்த தலித்துகள் மீது பரமக்குடியில்
துப்பாக்கிச்சூடு என அரசும் தன் பங்கிற்கு தன் சாதிய சார்புநிலையை வெளிப்படுத்தியுள்ளது.
முன்பளவுக்கு இல்லை என்பதுபோல தோற்றம்
காட்டிக்கொண்டே சாதியவாதிகள் தங்களது வெறியாட்டங்களை தொடரவே செய்கின்றனர் என்பதற்கு
கச்சநத்தம் படுகொலைகள் பதற வைக்கும் சாட்சியமாகும். இதே காலத்தில் சாதி ஆணவப்படுகொலைகள்
பல இப்பகுதியில் நடந்துவந்துள்ளன. தற்கொலை அல்லது தனிப்பட்ட காரணங்கள் என்று காவல்துறையின்
துணையுடன் மூடிமறைக்கப்பட்ட அக்கொலைகளை வெளிக்கொண்டு வருவதிலும் நீதிக்காகவும் தீண்டாமை
ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் முன்னணியில் நின்றன.
அன்றாடம் தீண்டாமைக்கும் வன்கொடுமைகளுக்கு
ஆளாகிவரும் பள்ளர் சமூக மக்கள் அவற்றுக்கெதிரான போராட்டக்குணத்தை காத்திரமாக வெளிப்படுத்தக்
கூடியவர்கள். இவர்களை மழுங்கடிக்கும் விதமான நாசகார வேலை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று
வந்திருக்கிறது. ‘வேளாண்குடிகளாகிய நாம் தலித்துகளே அல்ல. நம்மை பட்டியல் சாதியென வகைப்படுத்தியிருப்பதால் தான் தீண்டாமைக் கொடுமைகளுக்கு
ஆளாகிவருகிறோம். ஆகவே தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயர் மாற்றமும் பட்டியல் வெளியேற்றமும்
தான் தீர்வு. அதற்காக இட ஒதுக்கீடே இல்லை என்றாலும் பரவாயில்லை’ என்கிற
மோசடியான பிரச்சாரத்தை மருத்துவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிலர் செய்து வந்தனர். இந்தப்
பிரச்சாரத்திற்குப் பின்னால் சங் பரிவாரம் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும்
விதமாக இவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் தேர்தல் கூட்டும் அமைந்தன.
பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையின் பேரில்
பள்ளர் சமூகத்தில் கவலை தரத்தக்க பெரும் குழப்பமும் பிளவும் ஏற்பட்டுள்ளன. புதிய தமிழகம்
கட்சியைத் தவிர வேறெந்த அமைப்பில் இருப்பவர்களும், பட்டியல் சாதியாக தொடரவேண்டும்
என்கிற நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளவர்களும் கடுமையான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களும்
ஆளாகும் நிலையை கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்களும் அவர்களது புதிய கூட்டாளிகளும் உருவாக்கியுள்ளனர்.
இத்தகைய சூழலாலும்கூட ஊக்கம் பெற்றுதான் ஆதிக்கச்சாதியினர் தோழர் அசோக்கை கொன்றிருக்கிறார்கள்
என்றால் அது மிகையல்ல. அசோக் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின்
ஊழியராக இருந்ததனால் அவர் கொலையுண்டது இந்தளவிற்கு வெளியே வந்து குற்றவாளிகள் கைதுசெய்யப்படும்
நிலை உருவானது. இல்லையானால் அது தனிப்பட்ட மோதலாக வழக்கம்போல் முடித்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும்
மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியராக இருந்ததற்காக அசோக் கொல்லப்பட வேண்டியவர்தான் என்றும்
பள்ளர்கள் பட்டியல் சாதியாகவே நீடிக்க வேண்டும் என்று கோரும் இவர்களெல்லாமும் கூட கொல்லப்பட
வேண்டியவர்களே என்று சமூகச் செயற்பாட்டாளர்களின் பெயர்ப்பட்டியலை பரப்பும் அளவுக்கும்
‘பட்டியல் வெளியேற்றத்தினர்’ காட்டிக் கொடுக்கும் துரோகிகளாகியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் 17பேர் கொல்லப்பட்ட அன்று மாலையும் கூட எதுவும் நடவாவதுபோல இயல்பாக
அல்வா தின்று கொண்டிருந்த திருநெல்வேலிக்காரர்களின் மனசாட்சியை அசோக்கின் கொலை உலுக்கிவிடப்
போவதில்லை. ஆனால் அதை என்றாவதொரு நாள் உலுக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கையுடன் பொறுமையாகவும்
போர்க்குணத்துடனும் பணியாற்றும் எந்தவொரு அசோக்கையும் இழந்துவிடாமல் காக்கும் பொறுப்பு
இடதுசாரி இயக்கங்களுக்குண்டு.
தோழர் தென்மாவட்ட சாதிய படுகொலைகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் சில குறிப்பிடும்படியான செயல்பாட்டாளர்களும் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் இதன் பின்னால் இருக்கும் அரசியலை பார்க்கும் பொழுது 20 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த திருப்பி தாக்குதலுக்கு வஞ்சம் தீர்ப்பது போன்றதாகவும் அதேவேளையில் மாற்று அரசியலை பேசக்கூடியவர்களை குறிவைத்து கொலை செய்வதும் நிகழ்கிறது இது பட்டியல் வெளியேற்ற அரசியலைப் பேச உதவும் சங்க்பரிவார்கள் மற்றும் தமிழக அரசும் பின்புலத்திலிருந்து இந்த சாதிய படுகொலைகளையும் நிகழ்த்துவதாக தெரிகிறது.
பதிலளிநீக்கு