வெள்ளி, ஆகஸ்ட் 2

குஞ்சம் கட்டவா கொம்புகள்? - ஆதவன் தீட்சண்யா


முன்னொரு காலத்தில் இயற்கையின் அழகும் வளமும் பொருந்தியிருந்த நாடு லிபரல்பாளையம். முப்புறமும் கடலிலும் நாற்புறமும் கடனிலும் மூழ்கிக்கொண்டிருப்பது போன்று தெரியும் இதன் தலைநகரம் கோமியங்கோட்டை. இங்கிருந்து தொடங்கும் தேசிய எட்டுவழி லேசர்சாலைகளில் ஒன்று நாட்டை தென்வடலாக பிளந்துச் சென்று தென்மாகாணத்தின் தலைநகரும் கடற்கரை நகரமுமான குமிஞ்சான்குப்பதில் நுழைகிறது. (குமிஞ்சான்குப்பம் என்பது இடைக்காலத்தில் வந்த காரணப்பெயர். புராதனத்தில் அதன் பெயர் என்னவென்று அறிந்தவர்கள் தலைக்கு விலைவைத்து கொல்லப்பட்டுவிட்டனர்).  பின் அச்சாலை அங்கிருந்து நீண்டு தென்கிழக்கே 800 கல் தொலைவிலுள்ள மாட்டடிமங்கலத்தில் முடிகிறது. மாட்டின் பாதத்தை தொழுதால் மங்கலம் உண்டாகும் என்று இப்பெயருக்கு சொல்லப்படும் விளக்கம் திரிபானது என்பர் ஆய்வாளர்கள். ஆதியில் அது மாடடித்து உண்பதே மங்கலம் என்போர் வாழும் ஊர் என்றே பொருள்கொள்ளப்பட்டது என்பதும் அவர்தம் துணிபு. இவ்விருதரப்பும் வெவ்வேறானவர்களா அல்லது மாட்டை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர்கள் அவ்வழக்கத்தை விடவேண்டிய நெருக்கடிக்கு ஆளானபோது இப்படியொரு விளக்கத்தை புனைந்துகொண்டார்களா என்கிற ஆய்வைப் பற்றி இங்கு விவாதிக்கத் தொடங்கினால் அடுத்தப் பத்திக்குப் போவது தாமதமாகிவிடும்.

மாட்டடிமங்கலத்தின் அண்டையில் பெருங்காடு ஒன்று அடர்ந்திருக்கிறது. வளர்ப்புப் பிராணிகளாக மாறிட ஒம்பாமல் இதுகாறும் சுதந்திரமாக வாழ்ந்துவரும் ‘மலைக்கொம்பன்என்கிற பூர்வ மாட்டினம் தலைவிலங்காய் இருந்து காக்கும் காடு இது. காடுறை உயிர்களையும் காடுபடு பொருட்களையும் கவர்ந்தெடுக்கும் துராசையில் இந்தக் காட்டிற்குள் நுழையும் மனிதர்களை வெட்சிப்பூ சூடிய மலைக்கொம்பன் மாடுகள் முட்டித் தள்ளியும் மூர்க்கமாய் தாக்கியும் கொம்புக்கு கொம்பு வீசியடித்துக் கொன்றும் விடுவதால் உயிராசை கொண்டவர்கள் இதனுள்ளே புக அஞ்சுவர்.

இந்தக் காட்டில்தான் தன்னையொத்த மாட்டினங்களின் ரகசிய மாநாட்டை மலைக்கொம்பன் வகையறா இன்றிரவு நடத்தவிருக்கிறது. மாநாட்டில் பங்கெடுக்க பல நாடுகளிலிருந்தும் மாடுகள் பொழுது மசங்கியதிலிருந்தே வரத் தொடங்கியிருந்தன. இவ்வளவு பெருங்கூட்டம் கால்நடையாக வந்தால் மனிதர்கள் சந்தேகப்பட்டு பிடித்து மாநாட்டை சீர்குலைத்துவிடுவார்கள் என்பதால் புராணகாலத்திற்குப் பிறகு பயன்படுத்தாமல் நினைவில் மறைத்து மடித்து வைத்திருந்த றெக்கைகளைக் கொண்டு மாடுகள் ஆகாய மார்க்கமாக வந்திறங்கின. மறைநிலவு நாள் என்பதால் மாடுகள் பறந்து வருவதை மனிதக்கண்கள் அறிந்திருக்கவில்லை. (தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தியாவின் தஞ்சாளூர் ஜில்லா காவிரிப்படுகை விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய அமாவாசைக் கூட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு இம்மாநாடு நடக்கிறது. மறைநிலவு நாட்களின் நடுச்சாமம் வரை வயற்புறங்களில் தங்களது சங்கத்தைக் கூட்டி பிரச்னைகளையும் தீர்வுகளையும் போராட்டங்களையும் அவர்கள் இறுதிப்படுத்துவார்களாம்).

மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்துவந்த இளங்கிடாரிகளும் காளைகளும் மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் மாயவிளக்குகளால் காட்டினை ஜொலிக்கவைத்திருந்தன. நிறைநிலவு நாள் போன்ற பிரகாசம் காட்டின் பசிய நிறத்தில் புதிய வண்ணங்களைச் சேர்த்தது. செயற்கைத் தீவனங்கள், சுவரொட்டிகள், குப்பைத்தொட்டியில் வீசப்படும் மனித உணவின் மிச்சமீதிகள், கழனித்தண்ணி தவிர வேறெதையும் தீனியென்று அறியாது சீவனம் கழிப்பவை நகரத்து மாடுகள். இயற்கையான சூழலில் இங்கு  பச்சைப்பசேலென வளர்ந்திருக்கும் புல்பூண்டுகளையும் தழைதாம்புகளையும் விளக்கொளியில் கண்டு அவை திகைத்துப்போயின. திகட்டத்திகட்ட மேய்ந்துகொண்டே மாநாட்டுத்திடலுக்கு விரைந்த அம்மாடுகளின் மனதில், இவ்வளவு சுவையான தீவனங்கள் உள்ள காடுகளில் சுதந்திரமாக மேய்ந்தும், சிலுசிலுத்தோடும் ஆற்றுத்தண்ணியைக் குடித்தும் திளைத்திருப்பதை விட்டுவிட்டு நாம் ஏன் நகரத்து தொழுவங்களில் அடைபட்டுக் கிடக்கிறோம் என்கிற குமைச்சல் மூண்டிருந்தது. சகோதரப் பிரதிநிதிகளாக கலந்து கொள்ள வந்திருந்த எருமைகளும்கூட இப்படியாகத்தான் நினைத்து மருகிக்கொண்டன. காட்டின் வனப்பில் லயித்துப்போன நகரத்து இளங்கிடாரிகளும் காளைகளும் மீண்டும் நகரத்துக்குப் போகாமல் காட்டிலேயே நிரந்தரமாக வசிப்பது பற்றிய யோசனையில் மூழ்கின.

மாநாட்டை தொடங்கிவைத்து தலைக்கொம்பன் கூறிய நெடுமொழியின் முற்பகுதி மாடுகளின் பெருமைக்குரிய வரலாற்றை நினைவூட்டியது. பிற்பகுதியோ மாட்டினம் சந்திக்கும் இன்னல்களின் துயரச்சித்திரமாய் இருந்தது: ‘‘எந்தவொரு உயிரினத்தையும் போலவே சுதந்திரமாக பிறந்தவர்கள் நாம். ஆனால் இந்த மனிதர்கள் நம்மைப் பிடித்து வளர்ப்பு மிருகங்களாக்கிவிட்டார்கள். 17500 ஆண்டுகளுக்கு முந்தையதென கண்டறியப்பட்டுள்ள பிரான்ஸ் தேசத்தின் லஸ்காக்ஸ் குகை ஓவியங்களிலேயே நம் முன்னோர்கள் மனிதர்களுடன் இருப்பதைப் பார்த்தால் அதற்கும் முன்பாகவே நம்மை அவர்கள் வசக்கி அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

ஆரம்பகாலத்தில் அவர்கள் நம்மையும் விலங்குகளில் ஒன்றெனக்கருதி வேட்டையாடித் தின்றார்கள். அன்றைக்கு அவர்களுக்கு வேறு வழியில்லை. ஒரு கட்டத்தில் நம் கன்றுகளை பணயமாக பிடித்து வைத்துக்கொண்ட வேடுவர்கள் தேடிப்போன நம்மை உயிருடன் பிடித்தார்கள், தேவைப்படும் போது அடித்துத் தின்றார்கள். அதற்காகவே அவர்கள் பெரிய கருணைவான்களைப் போல சிலகாலம் மேய்ச்சல்காட்டி நம்மை உயிருடன் வைத்திருந்தார்கள். நமக்கு மேய்ச்சல்நிலம் தேடி நாடோடிகளாய் அலைந்து பெற்ற அனுபவத்தில்தான் மனிதர்கள் வேளாண்மையைக் கண்டுபிடித்தார்கள். அதற்காகவேனும் அவர்கள் நமக்கு நன்றியோடு நடந்திருக்கலாம். ஆனால் விசுவாசமற்ற அவர்களோ நுகத்தடியைக் கண்டுபிடித்து நம்மையே ஏரிலும் ஏற்றத்திலும் எடைகூடிய பாரவண்டிகளிலும் சவாரிக்காகவும் பூட்டினார்கள். இந்த வேலைகளுக்கான நவீன உழவியந்திரங்களையும் வாகனங்களையும் அவர்கள் கண்டுபிடித்துக்கொண்ட போது நம்மை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அவர்களோ கொலைக்கூடங்களை தொழிற்சாலைகளென நிறுவி நம் உடலை வெட்டி விற்கத் தொடங்கிவிட்டார்கள். வேடுவர்கள் தேவைக்கு ஒன்றிரண்டை கொன்று தின்றது போன்றதல்ல இது.  நம் இருப்புக்கும் உயிருக்கும் கடும் பகையாகிப் போன மரணவியாபாரம்.  

நம்மைக் கொல்வதுகூட ஒரு கணநேர வாதையாக முடிந்துபோகக்கூடியது. ஆனால் நாம் நம் கன்றுகளுக்கு சுரக்கும் பால் மீது என்றைக்கு அவர்களது கண் விழுந்ததோ அப்போதிருந்து நம்மை சாகடிப்பதைவிடவும் கொடிய துன்பங்களுக்கு ஆளாக்கத் துணிந்தார்கள். நமது பாலை களவாடிக்கொண்டு நம் கன்றுகளை சவலையாக்கினார்கள். பிறகு கன்றுகளை விற்றுவிட்டோ கொன்றுவிட்டோ வைக்கோல் கன்றைக் காட்டி நம்மை ஏமாற்றி மடி சுரக்கவைத்து கறந்தார்கள். உயிரைத் தவிர அனைத்தையும் பாலாகவே உறிஞ்சிவிடுகிற அவர்களது பேராசை இயந்திர நுட்பங்கொண்டு நம்மை ஒட்டக் கறக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்யென்று அவர்கள் கொழுப்பதற்கான ஊட்டங்கள் அவ்வளவும் நம் உதிரமேயன்றி வேறில்லை. சரி, அம்மட்டில் பாலோடு நம்மை விட்டுவிட்டார்களா என்றால் அதுவுமில்லை. இன்று நம் உடல் அவர்களுக்கு லாபம் கொழிக்கும் பண்டம். கொம்பு முதல் குளம்பு வரை நம் உடம்பின் ஒவ்வொரு அங்குலமும் அவர்களுக்கான ஏதாவதொரு பொருளுக்கான கச்சாப்பொருள். நாம் போடும் சாணி பெய்யும் மூத்திரம் என்று எதையும் விடுவதில்லை, எல்லாவற்றையும் காசாக்க இப்போது நம் உடல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. 

நம் உடல் நம்முடையது. அதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை நமக்கே உண்டென்பதை மனதில் வையுங்கள். நம் இனம் எதிர்கொண்டுவரும் இன்னல்களை தயக்கமின்றி இங்கே தெரிவியுங்கள். அதற்கேற்ப நாம் நம்மை தற்காத்துக்கொள்ளும் உத்திகளையும் வகுப்போம்.’’

தலைக்கொம்பன் நெடுமொழி கூறி அமர்ந்த பின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் சகோதர அமைப்பினரும் உரையாற்றும் அடுத்த அமர்வு தொடங்கியது. மாடுகளுக்கு இருக்கும் பிரச்னைகளில் பலவும் தங்களுக்கும் இருப்பதாக தெரிவித்த எருமைத்தலைவர், மனிதர்கள் எருமை என்பதை வசைச்சொல்லாக பயன்படுத்துவதை இம்மாநாடு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அத்துடன், கறி ஏற்றுமதிக்காக தாங்களும் பெருமளவில் கொல்லப்படுவதாகவும், ஆனால் மாட்டுக்கறி என்று பெயர் மாற்றி விற்கப்படுவதால் இக்கொலைகள் வெளியே தெரியாமல் மூடிமறைக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தது.

எருமைக்குப் பிறகு பேசவந்த ஆடு, ‘‘வரலாற்றுக்காலம் தொட்டு இன்றுவரையிலும் ‘ஆடுமாடு போலஎன்று நம்மிரு இனத்தையும் ஒன்றோடொன்று சேர்த்தே சொல்லும் வழக்கம் உள்ளது. அந்தளவுக்கு நாம் ஒன்று கலந்திருக்கிறோம். ஆட்டுக்கும் மாட்டுக்கும் எருமைக்கும் உருவம்தான் வேறுபடுகிறதேயன்றி கறியின் சுவையும் குணமும் ஒன்றேதான். அதனால்தான் அவர்களே ஒன்றோடொன்று கலந்து விற்கிறார்கள். அதேவேளையில் இந்த மனிதர்கள் எங்கள் கறிக்கும் உங்கள் கறிக்குமிடையே செயற்கையான தரம், சுவை, புனிதம் என்று பாகுபாட்டையும் கற்பித்து வருகிறார்கள்.

மனிதர்கள் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தோன்றியதல்லவா ஆட்டினம்? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக சுயேச்சையாக மேய்ந்து வளர்ந்து வருகிறோம். மனிதக்குழந்தையைப் போல மடியில் கிடத்தி  தாலாட்டி மார்விலக்கி பால்புகட்டும் நிலை நம் இனங்களில் இல்லைதானே? ஈன்ற குட்டி சற்றுநேரத்தில் எழுந்து நின்று தன் உணவைத் தானே தேடி மடிமுட்டுகிறதல்லவா? ஆடு சினையாவது எஜமானனுக்காக அல்ல என்கிற பழமொழி எங்களது சுயேச்சைத்தன்மையைத்தான் குறிக்கிறது என்பதை அறிந்த பலர் இந்தச் சபையிலே இருக்கிறீர்கள். ஆனால், மேய்ப்பர்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு மேயவே தெரியாது என்பதுபோல இந்த மனிதர்கள் பீற்றிக்கொள்கிறார்கள். குழிபறிக்கிற துரோகம் செய்கிற சுபாவமுள்ள மனிதர்களை கருப்பு ஆடு என்று விளிப்பதை ஏற்கமுடியாது. அருவருப்பான இக்குணங்களை அறியாதவை  ஆடுகள். நாங்கள் ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருப்பதை ‘மந்தைத்தனம்என்று கேலி பேசுகிறார்கள். ஆட்டுக்கு வால் அளந்துதான் இருக்கிறது என்று இயற்கைப் பரிணாமத்தில் வந்த எங்கள் வாலை இளக்காரம் செய்வதற்கு இவர்கள் யார்? ஆடு கசாப்புக்கடைக்காரனைத்தான் நம்பும் என்று நம் பகுத்தரிவையும்கூட கேலி பேசுகிறார்கள். நம்மைப் பொருத்தவரை எல்லா மனிதர்களுமே கசாப்புக்கடைக்காரர்கள் தானே? உயிர்களின் மீதுள்ள கருணையினால் நாங்கள் கறி தின்பதில்லை என்று இவர்களில் சிலர் பீற்றக்கூடும். அவர்கள் சகமனிதர்களிடத்தில் நடந்துகொள்வதைப் பாருங்கள், அருவருப்பாக இருக்கும், குரூபிகள். 

நம் அண்டைநாட்டில் காந்தி என்பவர் ஒருநாள் ஆட்டுக்கறி தின்றாராம். அன்றிரவு அவர் வயிற்றுக்குள் அந்த ஆடு கத்தியதாம். அதற்குப் பிறகு அவர் மாமிசம் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டாராம். இப்படியொரு கதை அங்கு நீண்டநாளாக சொல்லப்படுகிறது. அதே காந்தி ஆயுள் முழுக்க ஆட்டுப்பால் பருகினார். அது ஆட்டின் ரத்தம்தானே? அதற்காகவெல்லாம் அவர் வயிற்றில் ஆடு கத்தாதா? அவர் சொன்ன தர்க்கத்தின்படியே பார்த்தால், இன்றைக்கு மட்டன் தின்பவன் வயிற்றில் ஆடு மாடு எருமை மூன்றுமல்லவா கத்தவேண்டும்? உண்டதெல்லாம் உயிர்த்தெழுந்து கத்துமென்றால், தாவரங்களுக்கும் உயிர் உண்டெனும் உண்மையை ஒப்புக்கொண்டோமானால், அன்றிரவு அவர் சாப்பிட்ட காய், கிழங்கு, அரிசி, பருப்பு அத்தனையுமல்லவா அதனதன் பாணியில் கத்தியிருக்க வேண்டும்? ஆனால் ஆட்டின் மீது மட்டும் ஏன் இப்படியொரு அபாண்டம்?

மன்னிக்கணும், ஏதேதோ பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் ஆதங்கங்கள் முந்திக்கொண்டன.   வாய்ப்பளித்தமைக்கு நன்றி. 

ஆட்டைத் தொடர்ந்து மற்ற பிரதிநிதிகள் பேசுவதற்கு முன்பாக ஈழமாடு ஒன்று மாநாட்டுத் தலைமைக்குழுவுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்திருந்த கடிதம் வாசிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனக்கு பூர்வீகம் இலங்கையின் வடமாகாணம். நான் சொல்லப்போகும் நிலைதான் கிழக்கிலும். எங்கள் நாட்டில் முப்பதாண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர்- அதன் கொடுமைகள்- மனிதவுரிமை மீறல்கள் இதெல்லாம் ஐ.நா.சபை வரை பேசப்படுகிற விசயங்கள்தான். ஆனால் மனிதர்களுக்குள்தான் போரென்றாலும் மாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன, மாட்டுரிமை பறிபோயுள்ளது என்று பேசத்தான் ஆளில்லை. தத்தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊர்விட்டு ஊர், காடுவிட்டு காடு, நாடுவிட்டு நாடு என்று அலைந்த நிலை முற்றி ஒரு பதுங்குக்குழியிலிருந்து இன்னொரு பதுங்குக்குழிக்கு மனிதர்களே ஓட வேண்டிய நிலை வந்த போது அவர்கள் எங்களை எப்படி அங்கெல்லாம் அழைத்துப் போவார்கள்? காயம்பட்ட, நோயுற்ற சொந்தபந்தங்களையே உடனழைத்துப் போகமுடியாமல் அங்கங்கு அப்படியப்படியே விட்டுவிட்டு ஓடும்படியாக துரத்தப்பட்ட அவர்கள் எங்களையும் அவ்வாறே விட்டோடினர். கட்டாந்தரையிலிருந்து அவிழ்த்துவிடவும்கூட அவகாசமில்லை அவர்களுக்கு. கட்டியிருந்த முளைக்குச்சியையே சுற்றிச்சுற்றி சோர்ந்து அன்னந்தண்ணியின்றி செத்த நம் சொந்தங்கள் ஒன்றா இரண்டா?

அவிழ்த்துவிடப்பட்டிருந்த என்னைப் போன்ற மாடுகளுக்கு வேறுவகையான பிரச்னை. அந்தக் கணத்தில் நாங்கள் சுதந்திரமானவர்கள் என்கிற சந்தோஷம் இருந்தாலும் அதை உணரமுடியாமல் போனது. பல தலைமுறைகளாக மனிதர்களை அண்டியே வாழ்ந்துவிட்ட படியால் எதெது எங்கெங்கு இருக்கும் என்று தெரியாமல் தீவனத்துக்கும் தண்ணிக்கும் அல்லாடிப் போனோம். வீசப்படும் குண்டுக்கு மனிதனென்று தெரியுமா மாடென்றுதான் தெரியுமா? குண்டடிபட்டும், பயிர்பச்சை தேடி அலையும் போது கண்ணிவெடியில் சிக்கியும் சிதறிச் செத்த மாடுகள் அநேகம்.  எஞ்சிய நாங்கள்  அங்குமிங்குமாக கால்போன போக்கில் அலைந்தோம். கன்றுகளைப் பிரிந்த ஏக்கத்திலிருந்த கறவைகள் மடி சுரந்து காம்பு புடைத்து பீறிடும் பாலை பீச்சியபடி எங்களோடு நடந்தன. எங்கும் கந்தக நெடி, பிணங்கள் அழுகும் வாடை. யாரோ குறுகுறுவென நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்கிற அச்சம். தப்பித்தால் போதுமென அண்டைஅயல் காடுகளுக்குள் நுழைந்தோம்.

காடுகளுக்குள் நுழைந்ததுமே பல தலைமுறைகளுக்குப் பிறகு நமது பூர்வீகத்திற்கு திரும்பிவிட்டது போன்ற ஓர் உணர்வும், பூர்வீகமென்றாலும் அன்னியப்பட்டுப் போய்விட்டோமே என்கிற தவிப்புமாக அலைக்கழிந்த மனம் ஒரு நிலைக்கு வருவதற்கு நாளெடுத்தது. விரும்பியதை மேய்ந்து விரும்பிய இணையுடன் கூடி மனிதத்தளையற்ற சுதந்திரக்கன்றுகளை ஈனப்போகும் காலம் அண்மித்துக் கொண்டிருப்பதாக எங்களுக்குள் அரும்பிய சந்தோஷம் அற்பத்தில் முடிந்தது. போராளிகளைத் தேடுவதாக காடுகளுக்குள் வந்த அரசப்படையினர் எங்களையும் கொன்று தின்றார்கள். போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஏ9 பாதையோரம் நெடுக அமைக்கப்பட்டிருந்த முகாம்களின் ராணுவத்தினர் நினைத்தபோதெல்லாம் எங்களை வேட்டையாடி வருகின்றனர். மறுகுடியமர்வுக்கு மக்களே அல்லாடும்போது அவர்களுக்கொரு சுமையாக அங்கு போகவும் விருப்பமில்லை. காடுகளிலேயே இருந்துவிடலாமென்றால் அதுவும் எங்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்கிற நிலையில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கு இந்த மாநாடு வழிகாட்ட வேண்டுமெனக் கேட்டு முடிக்கிறேன்.   

தொடர் உரைகளின் கனதியால் ஏற்பட்ட மனஇறுக்கம் தளர்த்த ‘குஞ்சம் கட்டவா கொம்புகள்?’ என்கிற கலைநிகழ்ச்சி நடந்தது. உடம்பிலேயே இவ்வளவு வலிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு மாடுகள் பணிந்து கிடப்பது அவமானம் என்கிற பொருளிலான அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சமீபத்தில் உருவான புதிய நாடொன்றிலிருந்து வந்தள்ள பிரதிநிதியின் உரை தொடங்கியது.

அனைவருக்கும் வணக்கம். மாட்டினத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நன்னோக்கில் கூடியுள்ள இம்மாநாட்டில் பங்கெடுப்பதை வாழ்நாளின் பேறென நினைக்கிறேன். எங்கள் நாட்டில் நம்மினம் இன்று சந்தித்துவரும் இன்னல்களின் தோற்றுவாயை புரியவைப்பதற்காக நான் வரலாற்றின் சில பக்கங்களையாவது புரட்டிக்காட்ட நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.

எங்கள் நாட்டின் இம்மாதப் பெயர் சௌகிதார்புரி. பெயர்தான் புதிதேயொழிய நாடு தொன்மையானது. நாட்டின் வடமேற்கே அகழாய்வில் கண்டறியப்பட்ட நகரம் நாலாயிரம் வருடங்களுக்கு முந்தையது. அங்கு மாட்டின் உருவம் பொறிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள் கிடைக்கின்றன. அவ்வளவு மகிமையோடு நம் முன்னோர்கள் வாழ்ந்துவந்த அந்தத் தொல்பழங்காலத்தில் தான் அஸ்வதர்கள் என்போர் எங்கள் நாட்டுக்குள் நாடோடிகளாய் நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் மாடுகளை தாயாகப் போற்றி வழிபடக்கூடியவர்கள். இதைச் சொன்னதுமே அவர்கள் நம்மினத்தை செழித்து வாழ்வித்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அவசரப்படாதீர்கள், மனிதர்களுக்கு எப்படி நாம் தாயாக முடியும்? நமது பால், அதிலிருந்து பெறப்படும் தயிர், மோர், வெண்ணெய், நெய், கறி ஆகியவற்றின் ருசியும் சத்தும் அவர்கள் நமக்கு அவ்வளவு பெரிய இடத்தைக் கொடுக்க காரணமாயிருந்தன. யார் யாருக்கு எந்தப் பருவத்திலான மாட்டை அறுத்து எப்படி விருந்துவைக்க வேண்டும் என்று விவரிக்கும் பாடங்கள் பாடல்வடிவில் அவர்களிடமுண்டு. ஆனால் மாடு வளர்ப்புப்பற்றி மயிரளவுகூட அவர்களுக்குத் தெரியாது. 

அஸ்வதர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களிடமிருந்து வேண்டியதைப் பெறவும் சாந்தப்படுத்தவும் யாகம் நடத்துபவர்கள், நடத்திக்கொடுக்கும் புரோகிதர்கள். அதாவது தீக்குண்டம் மூட்டி அதிலே தங்களுக்கு இஷ்டமானவற்றை அவிப்பொருளாக பலியிடக்கூடியவர்கள். தொடக்கத்தில் இது நரபலியாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் பிள்ளைகளை பலியிட விரும்பாத பெற்றோர்களிடம் பிள்ளைக்கு ஈடாக பசுக்களையும் காளைகளையும் பலிபொருளாகப் பெற்றிருக்கிறார்கள். யாகத்தில் இடப்பட்ட அவிப்பொருள் என்ற வகையில் மாடு புனிதமாயிற்று, ஆகவே அதை உண்பதும் புனிதச்செயலானது.

கோரிக்கையின் தன்மைக்கேற்ப யாகத்தில் பலியிடப்படும் பசுக்கள் காளைகளின் எண்ணிக்கை மாறுபட்டது. ஒரே நேரத்தில் ஆயிரம் மாடுகளை அவிப்பொருளாக பொசுக்கும் யாகங்களும் உண்டு என்பதிலிருந்து, நம்மை தாயாக துதித்துக்கொண்டே அவர்கள் எவ்வளவு வேகமாக நம்மை அழித்து வந்தார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதுதானே? இந்தியாவில் ரந்திதேவர் என்பவரின் சமையலறையில் ஒவ்வொரு நாளும் 2000 பசுக்கள் வெந்துகொண்டிருந்தன என்று சொல்லப்பட்டதற்கு இணையாக எங்கள் நாட்டிலும் நம்மினம் வெந்தது. மாடுகள் மட்டுமல்லாது, குதிரைகள், காட்டுப்பன்றி, மயில் உட்பட 800 வகையான விலங்குகளும் பறவைகளும் கூட அவர்களது யாகத்திற்கும் கறிவெறிக்கும் பலியாக வேண்டியிருந்தது. அதுமட்டுமா, இறந்த மனிதன் சொர்க்கத்துக்குச் சவாரி செய்யத் தோதாக அவனுடன் ஒரு காளைமாட்டை எரிக்கும் வழக்கமும் அஸ்வதர்களுக்கு இருந்தது. 

இந்தியாவில் புத்தம் போதித்த கொல்லாமை எங்கள் நாட்டிற்குள்ளும் பரவாமல் இருந்திருந்தால் எங்களில் ஒரு கன்றுகாலிகூட மிச்சமின்றி அவ்வளவையும் அஸ்வதர்கள் பொசுக்கித் தின்றிருப்பார்கள். யாகங்களுக்கும் உயிர்ப்பலிக்கும் எதிராக வீசிய புத்தஅலையில் தாக்குப்பிடித்து நின்றாக வேண்டிய நெருக்கடியில் இந்த அஸ்வதர்களும் கறி தின்பதை நிறுத்த வேண்டியாயிற்று. இல்லாது போனால் வளங்களையும் அதிகாரத்தையும் தரவல்ல புரோகிதத் தொழிலில் தம்மால் நீடிக்கமுடியாமல் போய்விடும் என்கிற அச்சம் இந்த முடிவுக்கு அவர்களை நெட்டித்தள்ளியது. ஆனாலும் கறியை இழந்தது போல பாலையும்  இழந்துவிடக்கூடாது என்கிற பரிதவிப்பு கூடியது அவர்களுக்கு. எனவே மாட்டை தாயாகப் போற்றும் தங்களது முந்தைய நம்பிக்கையுடன் மாட்டுக்கறியைத் தின்பது பாவம், மாட்டுக்கறியைத் தின்பது தாயையும் தமக்கையையும் புணர்வதற்குச் சமம் என்பதையும் சேர்த்தார்கள். (தங்களால் தின்ன முடியாத மாட்டுக்கறியை வேறெவரும் தின்னக்கூடாது என்கிற ஆழ்மனக் குரூரத்திலிருந்து இவ்வாறு யோசித்தார்களா என்பது தனிவிசயம்).

இந்தப் பிரச்சாரம் அஸ்வதர்களுக்கு சில கூட்டாளிகளைப் பெற்றுத்தந்தது. அஸ்வதர்களைப் போலாகும் ஆசைகொண்ட அவர்கள் யாரென்றால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து சமீபகாலம் வரை ஆநிரை கவர்தல் என்கிற பெயரில் கொழுத்த மாடுகளைத் திருடி பங்கிட்டுத் தின்பதையே தொழிலாகக் கொண்டவர்களின் வாரீசுகள். சில நேரங்களில் கள்ளுக்கு நம்மை விலையாகத் தந்து குடித்தவர்களின் கொடிக்காலில் வந்தவர்கள். அஸ்வதர்களும் இவர்களுமாகச் சேர்ந்து வரலாறு நெடுக நமது மாட்டினத்திற்கும் மாட்டின் பெயரால் மக்களுக்கும் இழைத்துவரும் கொடிய குற்றங்களை நீங்கள் அறிவது அவசியம்.

செத்துப்போன பிறகு நம் உடலை யார் என்ன செய்தால் நமக்கென்ன? ஆனாலும் செத்த மாடுகளை நாயோ நரியோ இழுத்துப்போய் குதறிப்போடுவதைக் காட்டிலும் அவை மனிதர்களுக்கு உணவாகவும் வேறுபல பொருட்களாகவும் மாறுவது நல்லதெனக் கருதுகிறேன். புத்தர்கூட அப்படித்தான் சொன்னார். உன் தேவைக்காக எதையும் கொல்லாதே, தானாக இறப்பதை உண்பது தவறில்லை என்று. அப்படி நம்மை உண்பவர்களை செத்த மாட்டுக்கறி தின்பவர்கள் என்று இந்த அஸ்வதர் கும்பல் ஏளனம் செய்கிறது. (ஆடு கோழி மீன் சாப்பிடுகிறவர்களும்கூட அவற்றை துள்ளத்துடிக்க உயிரோடு கடித்துத் தின்பதில்லை தானே?).

கறிக்காக, தோலுக்காக மாட்டைக் கொன்றுவிட்டதாக பொய்யான குற்றம் சாட்டி இவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை கல்லெறிந்து கொல்கின்றனர், கலவரங்களை மூட்டுகின்றனர். நாட்டின் பெயரையே இனி லின்ச்சிஸ்தான் என்று நிரந்தரமாக மாற்றிவிடுமளவுக்கு கல்லால் அடித்துக் கொல்லும் கொடூரம் அதிகரித்து வருகிறது. எங்களது தாயான மாட்டைப் பாதுகாக்க எத்தனை கொலைகளையும் செய்வோம் என்கிறார்கள். இது போலியான கூச்சல். தலைமையுரையில் சொன்னது போல இவர்கள் பெரிய தொழிற்சாலைகளில் அன்றாடம் நம்மை வெட்டி ஆயிரக்கணக்கான டன்களில் ஏற்றுமதி செய்கிறார்கள்.

ஏதேனும் ஆபத்தென்றால் கொம்புகளையும் குளம்புகளையும் பயன்படுத்தி நம்மைநாமே பாதுகாத்துக் கொள்ளும் வலிமை நமக்கிருக்கிறது. ஆனால், இவர்கள் வலியவந்து நமக்கு பாதுகாப்பு தருவதாக சொல்லிக்கொண்டு நம்மை கோவாலயா என்கிற கொட்டடிகளில்  அடைத்து வைத்திருக்கிறார்கள். அங்கு அடைபட்டிருக்கும் நம்மினத்தவர் போதுமான தீவனமும் சுகாதரமான சூழலும் மருந்துகளுமின்றி அன்றாடம் செத்துக்கொண்டிருக்கும் அவலம். அடைபட்டுக் கிடக்க முரண்டு பிடிக்கும் மாடுகளுக்கு பாதரசம் கலந்த தீவனத்தைக் கொடுத்து மெதுமெதுவே சாகும்படி விடுகிறார்கள். இவர்களது மறைநூல் இவர்களுக்கு வேண்டுமானால் ஒஸ்தியாக இருக்கலாம். அதை நம் காதுகளில் ஓதி ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? மனிதர்களுக்கு ஒதுக்கியிருப்பது போலவே மாடுகளுக்கும் தேசிய அடையாள எண் ஒதுக்கி காதுகளில் சூட்டுக்கம்பியால் பொறிக்கும் கொடுமை உங்கள் நாடுகளில் உண்டா? நம் பசுக்கள் சுதந்திரமாக மூத்திரம் பெய்வதற்குக்கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. மருத்துவக் குணமிருக்கிறது மந்திரச்சக்தியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு குறியிலேயே வாய்வைத்து உறிஞ்சிக் குடிக்கிறார்கள்.

தங்களது ஆதாயத்திற்காக இவ்வளவு கொடுமைகளையும் நமக்கிழைத்து வரும் அஸ்வதர்கள் இப்போது நம் இனவிருத்தியையும் பாலுறவுச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளனர். பாலுறவு வேட்கையும் கூடலின் இன்பமும் எந்தவொரு உயிரினத்தைப் போலவே நமக்கும் இருப்பதுதானே இயற்கையின் படைப்பு? ஆனால் இவர்கள் அதிலே தளையிட்டு காளையும் பசுவும் கூடுவதையே தடுக்கின்றனர். விந்தணுக்களை செயற்கை முறையில் செலுத்தி கன்றுகளை ஈனவைக்கிறார்கள். இப்போது அந்த விந்தணுவிலும் கைவைக்கிறார்கள். விந்திலிருக்கும் காளைக்கன்றை பிறப்பிக்கும் அணுக்களை நீக்கிவிட்டு பசுக்கன்றை மட்டுமே பிறப்பிக்கும் “பாலியல் ரீதியாகப் பிரிக்கப்பட்ட விந்தணுக்களை” உட்செலுத்தும் வக்கிரமான ஒரு சீரழிவு நுட்பத்தை இந்தியாவைப் பார்த்து எங்கள் நாட்டிலும் தொடங்கியிருக்கிறார்கள். பால் தேவைக்காக பசுக்களை மட்டுமே பிறப்பிக்க வைக்கும் இவர்களது பேராசையால் பெருமைமிக்க நமது காளையினமே அழியும் ஆபத்து உருவாகியுள்ளது. இந்த அஸ்வதர்கள் தாய் என்று நம்மைக் கொண்டாடுவது உண்மையானால் ஏன் தந்தையராகிய காளைகளைக் கொல்ல வேண்டும்? இவர்களுக்கு காளைகளின் உழைப்பு இப்போது தேவைப்படுவதில்லை என்பதால் காளைகள் நம் பசுக்களுக்கும் தேவைப்படாமல் ஆகிவிடுமா? 

நான் இதுவரை உங்களுக்குச் சொன்னதைவிடவும் களநிலைமை கடுமையாக இருக்கிறது என்பதை மனதிற்கொண்டு, இந்த அஸ்வதர்களின் பிடியிலிருந்து நம்மினத்தை மீட்பதற்கு நாங்கள் அங்கு என்ன செய்ய வேண்டுமென்பதற்கான வழிகாட்டுதலை இந்த மாநாடு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

***
காட்டை விட்டுக் கிளம்ப மனமின்றி மாடுகள் றெக்கை விரித்து தத்தமது தொழுவங்களுக்குத் திரும்பின.  மாநாட்டின் முடிவுகளை சோதித்துப்பார்க்கும் மாதிரிக்களமாக செளகிதார்புரி தெரிவுசெய்யப்பட்டது. 

***
சௌகிதார்புரி ஆட்களின் அன்றாடமானது கமகமக்கும் காபியுடன் தான் தொடங்கியிருக்கிறது இதுகாறும். எத்தியோப்பியர்களால் குடித்தறியப்பட்ட காபி என்கிற அந்த பானம் ஓர் இஸ்லாமிய ஞானியின் வழியாக, கண்டங்கள் கடந்து சௌகிதார்புரிக்கு வந்து சேர்ந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகிறது. அப்போதிருந்து தொடரும் இப்பழக்கம் இன்றோடு ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்று அந்த அதிகாலையில் ஒருவரும் அறிந்திருக்கவில்லை.

சௌகிதார்புரியின் தலைநகரத்தில் மேட்டுக்குடிகளுக்குரிய கைபராண்டிகள் தெருவில் வசிக்கும் சோமதாஸர் வழக்கம்போல் அன்றைக்கும் நாலுமணிக்கு எழுந்துவிட்டிருந்தார். மணக்கமணக்க டிகாக்ஸன் இறக்கிவிட்டு, அடுப்பிலேற்றிய பால் காய ஆரம்பித்த சற்றைக்கெல்லாம் அதிலிருந்து கிளம்பிய ரத்தக்கவுல் வீச்சம் எங்கும் பரவியது. ஆனால் அந்த வீச்சம் பாலிலிருந்துதான் வருகிறது என்பதை முதலில் அவர் உணரவில்லை. முதற்கொதி வந்தபோது பாலின் வெண்ணிறமும் சடீரென செந்நிறமாக மாறத் தொடங்கியதும்தான் ஏதோ விபரீதம் என்று உறைத்திருக்கிறது அவருக்கு. பதறிப்போய் பாலை எடுத்து கழுவுதொட்டியில் ஊற்றிவிட்டு தண்ணீரை திறந்துவிட்டிருக்கிறார். சோப்பு, பவுடர், வாசனாதி திரவம் என்று ஏதேதோ போட்டு கழுவியும்கூட அந்தப் பாத்திரத்திலிருந்து வீச்சம் வீடு முழுதும் பரவிக்கொண்டிருந்தது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவரது மனைவி போலன்தேவியும் மகன் வந்தேறிச்செல்வனும் மூச்சுத்திணறலாகி செருமிக்கொண்டே எழுந்து அடுப்படிக்கு ஓடிவந்தனர். கொடூரமான விபத்து அல்லது கலவரம் ஒன்றை விவரிக்கும் தொனியில் அவர்களுக்கு விசயத்தை சொல்லிமுடிப்பதற்குள் அவருக்கு தொண்டை கமறியது. 

என்னதான் நாள் தள்ளிய பழைய பால் பாக்கெட்டாவே இருந்தாலும் அதுக்காக இப்படியா ரத்தவாடை வீசும்? பால்னாலே வெள்ளைதான், ஆனா நிறமும் எப்படி மாறும்? என்று புலம்பியபடி வீட்டுக்கு வெளியே புதுக்காற்று பிடிக்க ஓடிவந்தார்கள் மூவரும். இதே குழப்பத்தோடு தெரு முழுக்க நிறைந்திருந்தது சனம்.

அவசரத்திலும் அச்சத்திலும் அடுப்பை அணைக்காமல் யாரோ வெளியே ஓடிவந்துவிட்டார்கள் போல, கருகும் ரத்தத்தின் வாடை தெருவுக்கும் பரவிக்கொண்டிருந்தது. அந்த வாடையின் கடுமை தாளாமல் போலன்பாபு குமட்டி குமட்டி வாந்தியெடுக்கத் தொடங்கினார். குடலே வெளியே வந்து விழுமளவுக்கு ஓங்கரித்து சற்றைக்கெல்லாம் அவரைப்போலவே கைபராண்டிகள் தெருவின் சனங்களில் பலரும் வாந்தியெடுக்கத் தொடங்கினர். அந்தத் தெருவில் மட்டுமல்ல, நாடு முழுவதிலுமே மக்கள் இப்படி தெருவில் திரண்டு வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அடுத்த சில நிமிடங்களில் தொலைக்காட்சிகள் வெளியிட்ட பிரேக்கிங் நியூஸ் மூலமாக தெரிய வந்தது.

காபி குடிக்காவிட்டால் ஒரு வேலையும் ஓடாது என்ற முணகத்தொடங்கினாள் போலன்செல்வி. எனக்கும்தான் என்றாள் பக்கத்து வீட்டு வேதக்குமாரி. அந்த ‘ஒரு வேலையும்என்பதன் பொருள் அவர்கள் இன்னும் காலைக்கடன் கழிக்கவில்லை என்பதாகும். இப்போதைக்கு அப்படியே வயிறு இறுகிக் கிடக்கட்டும், அந்த ரத்த நாற்றம் பிடித்த வூட்டுக்குள்ள எப்படி போறது என்றான் வந்தேறிச்செல்வன். வீட்டுக்குள்ள போகலன்னா தெருவும் நாறிடும்டா அம்பி என்று அவனது வாயடைத்தாள் பஞ்சகவ்யாள். 

வீடுகளில் காயவைத்தப் பால் ரத்தமாக மாறியதென்றால், பால் பண்ணைகளிலும் பூத்துகளிலும் சேமிப்புக்கலங்களில் வைத்திருந்த பால் ஒரு சொட்டும் மிஞ்சாமல் கறந்த பசுக்களின் மடிக்கே திரும்பியது. கன்று குடித்தப் பின்னும் புடைத்தேயிருந்த காம்புகளில் பீறிட்ட பாலை வாய்வைத்து உறிஞ்சிக் குடித்தன பசித்தக் குழந்தைகள். கறப்பதற்கு வந்தவர்களையோ அண்டவிடாமல் துரத்தின மாடுகள்.

சௌகிதார்புரியின் அஸ்வதர்கள் இப்போது பன்றியைத் தாயென வணங்குகிறார்கள். பன்றிப்பால் காபி பேஷ் பேஷ் என்கிறார்கள். 

நன்றி: செம்மலர், 2019 ஆகஸ்ட் 


1 கருத்து:

  1. நம் உடல் நம்முடையது. அதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை நமக்கே உண்டென்பதை மனதில் வையுங்கள். நம் இனம் எதிர்கொண்டுவரும் இன்னல்களை தயக்கமின்றி இங்கே தெரிவியுங்கள். அதற்கேற்ப நாம் நம்மை தற்காத்துக்கொள்ளும் உத்திகளையும் வகுப்போம்.’’



    very good and excellent presentation. Enjoyed the story. realistic and good imagination. appreciated hard work

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...