சனி, ஏப்ரல் 25

தாய்நாடு அல்லது நாட்டின் தாய் - ஆதவன் தீட்சண்யா


சொல்வதற்கு எதுவுமற்று கடந்தேகும் என்னை
ஏனிப்படி வலுவந்தமாய் மறித்து நிற்கிறீர்கள்?
வழியை விடுங்கள்,
அதோ தலைச்சுமையோடு போய்க்கொண்டிருக்கும்
என் மூத்தமகளை
நான் எட்டிப் பிடித்தாக வேண்டும்

வறண்ட என் நாவில் எச்சில்கூட இல்லை
நீங்களோ
வெயில் முற்றி கொப்பளிக்கும் இந்தத் தார்ச்சூட்டில் நிறுத்தி
பேட்டி கேட்கிறீர்கள்

ஆமாம், வரும் வழியில்
- கிளம்பின ஆறாம் நாள் இரவு
பசியால் தின்னப்பட்ட என் துணையன் இறந்துவிட்டான்தான்.
உயிர்த்தெழும் மகிமையற்ற அவன்
நாங்கள் கைவிட்டு வந்த நிலையிலேயே எப்படி இருப்பான்?
வனாந்திரத்து விலங்குகள் 
நெடுஞ்சாலையேறி  களித்தாடும் இக்காலத்தில் 
தாமதமாக வந்திருக்கும் உங்களுக்கென
எதுவும் மிஞ்சியிருக்கப் போவதில்லை அவனது பிணத்தில்

வேண்டுமானால் என்னை பின்தொடருங்கள்
இதோ இன்னும் சற்றுநேரத்தில் 
அப்பன் போன இடத்துக்கே 
இந்தக் கைக்குழந்தையும் போகவிருப்பதை 
நேரலையாய் காட்டி பெருமிதம் கொள்ளுங்கள்  
‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக..’

25.04.20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஓடிப் போனவன் - பிரெஞ்சுக் கவிஞர் போரிஸ் வியான், தமிழில்: வெ.ஸ்ரீராம்

  குடியரசுத் தலைவர் அவர்களே இதோ உங்களுக்கு ஒரு கடிதம் நீங்கள் ஒருவேளை அதைப் படிக்கலாம் உங்களுக்கு நேரம் இருந்தால். இப்போதுதான் கிடைத்தன எனக்...