வெள்ளி, ஏப்ரல் 10

ஒரு துளி ரத்தம் - வ. கீதா

Long lines of migrants hoped to board buses for home on the outskirts of New Delhi on Saturday. Most were turned away.
கிரிஸ்டோபர் மார்லோ ஒரு நாடக ஆசிரியர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். டாக்டர் ஃபவுஸ்டஸ் என்ற நாடகம் ஒன்றை எழுதினார். அவர் காலத்தில் ஃபவுஸ்டஸ் என்ற மந்திரவாதியை பற்றி கதைகள் நிறைய வழங்கி வந்தன. அக்கதைகளை ஆதாரமாகக் கொண்டே தனது நாடகத்தை வடித்திருந்தார்.

மெத்த படித்தவன் ஃபவுஸ்டஸ். மந்திரதந்திரங்கள்  எல்லாம் தெரிந்தவன். இயற்கை ஆற்றல்களை கட்டுக்குள் வைக்கக் கற்றுக் கொண்டவன். சாத்தான் அவனுக்கு மேலும் பல விஷயங்களை வழங்குவதாகக் கூறி ஆசைக் காட்டுகிறான். நினைத்ததை சாதிக்கவல்ல பேராற்றலைத் தருவதாக சொல்கிறான். ஆனால் பதிலுக்கு ஃபவுஸ்டஸ் அவனது ஆன்மாவை தனக்கு தந்துவிட வேண்டும் என்கிறான்.

தனத மேதாவித்தனத்தில் திளைத்திருந்த ஃபவுஸ்டஸூக்கு இது சரியான பேரம்தான் என்று தோன்றுகிறது. சாத்தானுக்கு மகிழ்ச்சி. தனக்கு தேவைப்படும் போது ஆன்மாவை வாங்கிச் செல்வதாக கூறுகிறான்.

காலம் செல்கிறது. ஃபவுஸ்டஸ் சகல இன்பங்களையும் அனுபவிக்கிறான். அவனைப் போல அறிவாளி ஐரோப்பா எங்கிலும் இல்லை என்ற அளவிற்கு அவனுக்கு பேரும் புகழும் கிடைக்கின்றன. திடீரென்று ஒரு நாள் சாத்தான் அவன் முன் தோன்றி "ஆன்மா எங்கே?" என்று கேட்கிறான். ஃபவுஸ்டஸூக்கு தான் செய்து கொடுத்த சத்தியம் அப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அவன் அலட்சியமாக "எடுத்துச் செல்" என்கிறான்.

சாத்தான் அவனை இழுத்துச் செல்ல குட்டிச் சாத்தான்களை அழைக்கிறான். அவை ஃபவுஸ்டஸை சூழ்ந்து கொண்டு கொஞ்ம் கொஞ்சமாக அவனது சுயத்தை ஆட்கொள்கின்றன. ஃபவுஸ்டஸ் தன்னை தற்காத்துக் கொள்ள என்னென்னவோ செய்யப் பார்க்கிறான். ஆனால் அவனது ஆற்றல்களை அவனால் தருவிக்கவும் முடியவில்லை, தனது சுயத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இயலவில்லை.

சாத்தானோ அவனை கட்டியிழுத்து வானில் பறக்கத் தயாராகிவிட்டான். ஃபவுஸ்டஸ் செய்வதறியாது இருக்க அவனது ஆளுமை, உடல் அவனுக்கானவையாக இல்லாமல் போய் விடுகின்றன. சாத்தான் தனது கையாட்களின் உதவியுடன் அவனை தூக்கிக் கொண்டு பறக்கிறான்.

தான் சின்ன வயதில் கற்றுக் கொண்ட விவிலிய வாசகங்களை ஃபவுஸ்டஸ் நினைவுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான். முடியாமல் போக அரற்றுகிறான். தேம்பித் தேம்பி அழுகிறான். கடைசியில் எஞ்சியிருந்த விள்ளல் அளவான மனதை நினைவுக் துகள் ஒன்று ஆட்கொள்கிறது.

"ஒரு துளி ரத்தம், அரைத்துளியாவது இருந்தால் கூட போதும். அது என்னை காப்பாற்றிவிடும். எனது கிறிஸ்துவே" என்று முணுமுணுக்கிறான். 

அவனுக்கான நேரம் முடிந்துவிட்டது. இனி அவனது ஆன்மா அவனிடத்தில் இல்லை. சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள்.

புனித வெள்ளியன்று இக்கதையை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றிற்று.

தமது உழைப்பு ஆற்றல்கள் ஆகியவற்றை செலுத்தி இவ்வுலகை வாழத்தக்க உலகாக மாற்றத் தொழில் புரிந்துவரும் உழைக்கும் மக்கள், குறிப்பாக ஆதிகுடிகள், தலித்துகள், இவர்களின் இரத்தமும் உடல்களும்தான் நம்மை இரட்சித்து வருபவவை. நமது கணக்குவழக்கற்ற தேவைகளை நிறைவேற்ற தம்மை வருத்தி நம்மை அவர்கள் வாழ வைக்கின்றனர்.

ஆனால் அவர்களின் பாடு குறித்து நம்மில் பலர் யோசிப்பதில்லை. வளர்ச்சி, நுகர்வு என்ற பெயரில் நாம் நமது ஆன்மாவை அநீதிக்கும் சமத்துவமின்மைக்கும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம். காலம் நம்மை அலைக்கழிக்கும் இந்நேரத்தில் அவர்களின் ரத்தத்தைதான் மீண்டும் கோருகிறோம். ஆனால் ஆன்மாவை இழந்த நிலையிலும் பவுஸ்டஸூக்கு இருந்த மனத்தாங்கல் நம்மில் பலருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

"என்னை ஏன் கைவிட்டீர்கள்" என்று அவர்கள் கேட்டால் பதில் சொல்ல இங்கு யாரும் இல்லை. 

pc: nytimes.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...