திங்கள், மார்ச் 6

செத்தது நீயில்லையா...!? ஆதவன் தீட்சண்யா


ன்றிரவு ஏனோ சற்று முன்கூட்டியே வீடு திரும்பியிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்த தீட்சண்யாவோடு கொஞ்சநேரம் இருந்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். எட்டரை மணி இருக்கும், யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தால், தோழர்.சுப்பிரமணியம் நின்றிருந்தார். எதிர்வீட்டில் வசித்துவரும் அவர் வீட்டிற்குள் வந்தது அதுதான் முதல் தடவை. சாப்பிட விடுத்த அழைப்பை மறுத்துவிட்ட அவர், ‘பேச்சு சத்தம் கேட்டது, இந்நேரத்துக்கே வந்துட்டீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்
என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நான் இரவில் வீடு திரும்பும் நேரம் குறித்து அக்கம்பக்கத்தில் இப்படியான நல்லபிப்ராயம். ஆனாலும் இதைச் சொல்லவா அவர் வந்தார் என்று நானும் மீனாவும் பேசியபடியே சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் மீண்டும் அவரே கதவைத் தட்டினார். என்ன விசயம் என்று நான் கேட்பதற்கு முன்பு அவராகவே சொன்னார். ‘லேலண்ட்டுக்கு எதிர்ல ஒரு ஆக்சிடென்ட்... ஸ்பாட் அவுட்டாம்... டெலிபோன் எக்சேஞ் ரவின்னு சொன்னாங்க... அதான் பதட்டத்துல வந்து பார்த்தேன். நீங்க இருக்கிறத பார்த்தப்புறம்தான் நிம்மதியாச்சு...’

எங்கள் அலுவலகத்தில் என்னோடு சேர்த்து மூன்று ரவிகள் இருந்தோம். ‘நான் இங்கிருக்கேன், மற்ற ரெண்டுபேர்ல எந்த ரவின்னு போய் பார்ப்போம் வாங்கஎன்று அவரையும் அழைத்துக்கொண்டு அலுவலக வாயிலுக்கு விரைந்தேன். அதற்குள் எந்த ரவி என்கிற உறுதிபடுத்தப்பட்ட தகவல் செக்யூரிட்டிக்கு வந்துவிட்டிருந்தது. எங்களில் மிகவும் இளையவரான ரவி. கொடூரமான விபத்து. நடுரோட்டில் அவர் கிடந்த நிலை 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் கண்ணுக்குள்ளிருக்கிறது. 

வீட்டில் அவருக்காக காத்திருந்த அவரது துணைவியாரிடம் போய் தகவல் சொல்வதற்கு எங்களில் ஒருவருக்கும் தைரியமில்லை. நீங்களே வந்து பக்குவமாக சொல்லுங்கள் என்று பெங்களூரிலிருந்த அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். போலிசையும் ஆம்புலன்சையும் வரவழைத்து சடலத்தை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்குள் தகவல் பரவி அலுவலக ஊழியர்கள் பலரும் அங்கு குழுமிவிட்டிருந்தனர்.  பிணக்கிடங்கின் வாயிலிலேயே விடியவிடிய எல்லோரும் காத்திருந்தோம். இரவு இரண்டு மணிவாக்கில் ரோந்துவந்த போலிசாரில் ஒருவர், ‘ரவின்னதும் நீங்கதான்னு நெனைச்சேன்...’ என்றார். ‘ஆசையாக்கும்...?’ என்றேன். சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

***

விடிந்தும் நாங்கள் மருத்துவமனையிலேயே இருந்தோம். எட்டுமணி இருக்கும். ஆஸ்பத்ரி நுழைவாயிலில் வந்து நின்ற ஆட்டோ ஒன்றிலிருந்து பதறியடித்துக் கொண்டு இறங்கிய ஓர் ஆணும் பெண்ணும் உள்ளுக்குள் விரைந்தோடி வந்தார்கள். ரவியின் உறவினர்களாக இருக்குமென பார்த்தால் அவர்கள், ஓவியர் தேவாவும்  அவரது துணைவியார் பியூலாவும். இவர்கள் எதற்கு இப்போது இங்கே வருகிறார்கள் என்ற யோசித்தபடியே அவர்களுக்கு எதிரில் போய் நின்ற என்னைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். இருவரது கண்களிலும் முட்டிக்கொண்டிருக்கிறது கண்ணீர். தேவா என்னை கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழத் தொடங்கிவிட்டார். எதற்கென்று எனக்கு விளங்கவில்லை. இறந்துபோனவர் ஒருவேளை இவர்களுக்கு சொந்தமாய் இருக்குமோ? அப்படி இருந்திருந்தால் சொல்லியிருப்பாரே என்று பலவாறாய் யோசித்தபடி அவரை தேற்றினேன். ‘சேது சொன்னதாகத்தான் தகவல் வந்தது...’ கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் அழுதுகொண்டே இருந்தார்கள்.

தோழர்.சேதுமாதவன் அப்போது சிபிஎம் நகரச் செயலாளர். நான் மாணவர் சங்கத்தில் வேலை செய்த காலந்தொட்டே என்மீது பிரியம் கொண்டு பழகி வருபவர். அவரது தொலைபேசி பற்றின புகாருக்காக எங்களது அலுவலக ஊழியர் ஒருவரின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். போனை எடுத்த அந்த ஊழியரின் மனைவி ‘ரவின்னு நம்ம ஸ்டாப் ஒருத்தர் ராத்திரி ஆக்சிடென்ட்ல இறந்துட்டார். அதனால எல்லாரும் ஜி.ஹெச்.ல இருக்காங்கஎன்று  பதில் சொல்லியிருக்கிறார். எந்த ரவி என்று சேதுவும் கேட்கவில்லை, அந்தம்மாவும் தெளிவாய் சொல்லவில்லை. டெலிபோன் எக்சேஞ் ரவி என்றதும் அது நான்தான் என்று நினைத்துக்கொண்ட சேது, எங்களிருவரின் தொடர்பு வட்டத்திலுள்ள பலருக்கும் பொறுப்பாக தகவல் சொல்லத் தொடங்கியிருக்கிறார். அப்படி யார் மூலமோ கேள்விப்பட்டு கிளம்பி வந்தவர்கள்தான் தேவா தம்பதியர். அவர்களை ஆசுவாசப்படுத்தி அழுகையை நிறுத்துவதற்குள் பி.சி.நஞ்சப்பா, லகுமய்யா உள்ளிட்ட ஏராளமான தோழர்களோடு சேதுவே அங்கு வந்துவிட்டார். உயிரோடு நின்றிருக்கும் என்னைப் பார்த்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாக ‘இப்படி பதறியடிக்க வச்சுட்டியேப்பாஎன்றார் தோழமை கசியும் குரலில்.  ‘பதற வச்சது நானா நீங்களா?’ என்று அவரை கேலி செய்துகொண்டிருக்கும் போதே மேலும் பல தோழர்கள் வந்துவிட்டார்கள். நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தேன்கனிக்கோட்டைக்கும் தகவல் போய் அங்கிருந்தும் நண்பர்களும் தோழர்களும் வந்தவண்ணமிருந்தார்கள். செத்தது நானில்லை என்ற சொல்வதற்காகவே நான் ஆஸ்பத்திரி வாயிலில் நின்றாக வேண்டிய நிலையாகிவிட்டது.  அந்த ரவியின் சாவுக்கும் இந்த ரவியின் சாவுக்குமாக வந்த கூட்டத்தால் ஆஸ்பத்திரி வளாகம் நிறைந்திருந்தது.

***

காலை 11 மணியளவில் சடலக்கூராய்வு முடிந்தது. நானும் நண்பர்களும் ரவியின் உடலை அவரது மாமனார் வீட்டில் வைக்க பெங்களூருக்கு கிளம்பிவிட்டோம். நாங்கள் ஒசூர் திரும்பி வருவதற்குள் அனேக களேபரங்கள் நடந்துவிட்டிருந்தன.

* நான் செத்துவிட்டதை கேள்விப்பட்ட அரூர் தொலைபேசி நிலையத் தோழர்கள், என் சாவுக்கு ஒசூர் வர கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் கிளம்புவதற்கு முன்பு எனது வீட்டிற்கும் எனது மாமனார் வீட்டிற்கும் சென்று பக்குவமாக தகவல் தரவேண்டுமென்கிற பொறுப்புணர்ச்சி அவர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. தேவைப்பட்டால், இவ்விரு வீட்டாரையும் அழைத்துப்போக வாகன ஏற்பாடு செய்வது என்றும் திட்டம். இதற்கிடையில் ஒருவர், எனது நெருங்கியத் தோழர்களில் ஒருவரான சுதாகரனை போனில் அழைத்து ரவியின் அடக்கம் எங்கே என்று வினவியிருக்கிறார். சுதாகரன் பெங்களூர் என்றதும், அந்த ஊழியர், இதென்ன ஒசூரிலும் இல்லாம அரூரிலும் இல்லாம பெங்களூர்ல...? ஒருவேளை இங்க கொண்டுவர முடியாதபடி பாடி ரொம்பவும் சேதாரமா என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் சுதாகரனுக்கும் உறைத்து நீங்க எந்த ரவின்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்க? இறந்தவர் எஸ்.எம்.ஆர். இல்ல... ஒசூர் எஸ்.டி.ஓ.டி ஆபிஸ் ரவி என்று  தெளிவுபடுத்தியிருக்கிறார். இப்படியாக எங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் என் சாவுக்கு வருவதை அந்த ஊழியரும் சுதாகரனும் கடைசிநேரத்தில் சுதாரித்து தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

* எஸ்.குமார் எங்கள் நட்புவட்டத்தின் ஆதர்ச தையல்காரர் என்பதற்கும் அப்பால், குடும்ப நண்பர். அவரது கடையின் வாராந்திர விடுமுறை நாளான செவ்வாய்கிழமைகளில் அவர் வீட்டில்தான் எங்கள் குடும்பத்திற்கு மதியச் சாப்பாடு. சில செவ்வாய்களில் அவர் துணைவி ரமாவுடன்  எங்கள் வீட்டுகுக வருவார்கள். அவரது கடையில் மணி என்றொரு தையல்காரர் அப்போதிருந்தார். என்மீது பிரியமுள்ளவர். அன்றைக்கு மூன்று மணியளவில் டீ கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது வட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர், ‘சென்ட்ரல் பே கேட்டு ஸ்ட்ரைக் நடந்தப்ப எங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தவர்... பாவம்...’ என்று  என் சாவுச்செய்தியை கடையிலிருந்தவர்களிடம் சொல்லி துக்கப்பட்டிருக்கிறார். மணி அவரிடம் ‘யார் பாய்?’ என்று கேட்டிருக்கிறார். ‘அவருதான், உங்க ஓனரோட கூட்டாளி...  டெலிபோன் ஆபிஸ் தாடிக்காரர்... உங்களுக்கெல்லாம் முன்னாடியே தகவல் வந்திருக்குமே...’ என்று சொல்லியிருக்கிறார். அடுத்த நொடியே மணி அங்கிருந்து ஓடிப்போய் குமாரிடம் சொல்லியிருக்கிறார். தன் வீட்டுக்கு ஆளனுப்பி துணைவி ரமாவை கடைக்கு வரவழைத்த குமார் என் சாவுச்செய்தியை சொல்லியிருக்கிறார். எங்கே வரணும்னு கேட்டுக்கிட்டு போவோம் என்று என் வீட்டுக்கு போன் செய்திருக்கிறார் குமார். போனை எடுத்த மீனா எப்போதும் போல் சகஜமாக பேசியதால் குழம்பிப்போன குமார் "ரவி எங்கே?" என்று கேட்க, பெங்களூர் போயிருக்கிறார் என்று மீனா பதில் சொல்லியிருக்கிறார். ஓ, ஆக்சிடென்ட் ஆன விசயமே இன்னமும் மீனாவுக்கு தெரியாது போல... ரவி பெங்களூர் போயிருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்கு... என்று மிகுந்த துயரத்திற்காளான குமார் தம்பதியினர்  என் வீட்டுக்கு வருவதற்கு ஆட்டோ கூட்டிவர ஆளனுப்பிவிட்டு காத்திருந்தார்கள்.

* பெங்களூரிலிருந்து திரும்பிய நானும் தோழர் ஜார்ஜூம் ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்திவிட்டுப் போயிருந்த எனது பைக்கை எடுத்துக்கொண்டு, நல்ல டீ தருவிச்சு சாப்பிடுவோம் என்று குமார் கடைக்குப் போகவும், குமார் தம்பதியினர் ஆட்டோவில் ஏறவும் சரியாக இருந்தது. ஓரிரு நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் அவர்கள் எங்கள் வீட்டுக்குப் போய் இழவு கண்டிருப்பார்கள். 


***

தற்செயலான இந்நிகழ்வுகள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டதொரு நாடகத்தின் அடுத்தடுத்த காட்சி போலாகி என் சாவை எனக்கு காட்டிவிட்டன. என் சாவுச்செய்தியை கேள்விப்பட்டிருந்த பலரும் என்னை நேருக்கு நேர் பார்க்கையில் ஒரு கணம் தடுமாறி பிறகு சகஜமாகிப் போகும் அபத்தம் பல நாட்களுக்கு நீடித்தது. செத்தது நீயில்லையா, ஏன் சாகல, எப்ப சாவாய், நீயெல்லாம் அதுக்குள்ள செத்துடுவியா என்பது போன்ற அங்கலாய்ப்பு அவர்களில் சிலருக்கு இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களும்கூட வாய்விட்டு கேட்கவில்லை. என் சாவுக்கு வந்த-  என்னிடமே இழவு கேட்ட ஏராளமான அன்பர்களை நானே இருந்து ஆற்றுப்படுத்திய நெகிழ்வான செய்தியை பின்பொரு நாள் அம்மா அப்பாவிடம் சொன்னேன். புதுப்பொறப்பு எடுத்ததா நினைச்சுக்கோ என்று அம்மாவும், சாவுக்கு பத்துப்பேர் வரலன்னா வாழ்ந்ததுக்கு என்ன அர்த்தமிருக்கு என்று அப்பாவும் சொன்னார்கள். ஏழு பிள்ளைகளில் தலைப்பிள்ளையாய் என்னை இதே நாளில் பெற்றெடுத்த அவர்களது இந்த வார்த்தைகள் போதும் என் ஆயுளுக்கு.

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் என்பார்கள். 2001 செப்டம்பர் 7ல் செத்த எனக்கு ஊற்றியிருக்க வேண்டிய பாலினை டீயாய் காபியாய் இன்றளவும் ஊற்றிக்கொண்டிருக்கிற, ஊற்றவிருக்கிற அனைவருக்கும் எனது அன்பு.  

06.03.2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...