சகிப்பின்மைக்கு இந்திய வரலாற்றில் இருந்த மரபு அல்லது வேர் பற்றி?
தானல்லாத
பிறரை தனக்கு சமமாகக் கருதாமல் ஏதோவொரு வகையில் ஒதுக்குவது அல்லது ஒதுங்குவது என்கிற
நிலை சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே இருந்ததாக ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
திராவிட நாகரீகத்தின் தொட்டில் எனக் கொண்டாடப்படும் அங்கு சமூகத்தில் பாகுபாடு நிலவியது
என்றும் அந்தப்பாகுபாடு வாழ்விடத்திலும் வெளிப்படையாக இருந்தது என்பதை பின்வரும் அவரது
கூற்று உணர்த்துகிறது. ‘சிந்துவெளி நகரமைப்பாளர்கள் தங்களது சமூக அமைப்பில் நிலவிய
ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கள் வடிவமைத்த நகரங்களின் திட்டமிடலிலும் கட்டமைப்புகளிலும்
வெளிப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளனர். மொகஞ்சதாரோவில் உயர்நிலப் பகுதிகளை
நகரின் மற்ற பகுதிகளிலிருந்து வேறெனப் பிரித்துக்காட்டும் வகையில் இடையில் வெற்றிடங்கள்
விடப்பட்டுள்ளன... ஹரப்பாவில் வெற்றிடங்கள் மூலமும் தடுப்புச்சுவர்கள் மூலமும் இந்த
வேறுபாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பொதுக் கட்டிடங்களுக்குச் செல்லும் நுழைவுரிமை கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டிருந்தது...’. பின்னாளில் இந்தியப் பரப்புக்குள் ஆரிய வந்தேற்றம் நிகழ்ந்தபோது
ஆரியர்கள் இங்கிருந்த பூர்வகுடிகளை தமக்கிணையானவர்களாக கருதாததுடன் அவர்களை நிறம்,
உருவ அமைப்பு, வழிபாடு, பழக்கவழக்கங்கள் சார்ந்து ஏளனப்படுத்தி பலவாறாக பாகுபடுத்தத்
தொடங்கி வர்ணம் சாதி என்கிற வரையில் நீட்டித்து வளர்த்து நிலைநிறுத்தினார்கள்.
சகிப்பின்மையின்
உச்சம் என்று எதைக் கண்டு துடித்தீர்கள்?
ஆரியர்களின்
வேதவழிப்பட்ட இந்து மதத்தின் வரலாற்றை அறிய விரும்பும் எவரொவரும் அதன் ஒரு வரியைக்கூட
துணுக்குறாமல் படித்துவிட முடியாது. தானல்லாத பிறரது இருப்பை வெறுக்கவும் அழிக்கவுமான
கருத்தியல் நியாயத்தை இறை நம்பிக்கை, மத ஆச்சாரங்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள் ஆகியவற்றின்
வழியே நிறுவுவதற்காக அவர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், குரூரமான தண்டனைகள், ஒடுக்குமுறைகள்
சொல்லித் தீராதவை. ஆரிய, வேத மேன்மையை நிலைநிறுத்தும் புரோகிதப் பிரிவினர் தமது நலன்களுக்காக
நாட்டின் அறிவு ஆற்றல் அனைத்தையும் கீழ்ப்படியச் செய்து ஏற்படுத்திய அழிமானத்தால்தான்
உலக அரங்கில் இந்தியா இன்றும் பல தளங்களில் பின்தங்கியிருக்கிறது. தங்குதடையற்ற அவர்களது
வல்லாதிக்கத்தை தடுத்தாக வேண்டும் என்கிற வரலாற்றுப் பெருவிழைவிலிருந்து பௌத்தம் உருவானது.
ஆனால் அதுவும் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டது. பௌத்தத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும்
இடையேயான போராட்டத்தின் வரலாறே இந்தியாவின் வரலாறு என்கிற அண்ணல் அம்பேத்கரின் கூற்று
இந்த நிலையை விளக்கப் போதுமானது. வரலாறு நெடுக வழிந்தோடிய இந்த ரத்தத்தின் பிசுபிசுப்பும்
மரண ஓலமும் அழுகிய பிணங்களின் வாடையும் அவமானத்தின் குமுறலும் இந்தியப் பரப்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்றளவும்
தொடர்கிறது. அதற்கான பொறுப்பை ராஷ்ட்ரீய சர்வநாச சங்கம் எனச் சுட்டப்படும் ஆர்.எஸ்.எஸ்
தான் ஏற்றாக வேண்டும். அது எத்தகைய மனிதத்தன்மையற்ற, பிற மத விஷங்கக்கிகளை, வெறுப்பாளர்களை
உருவாக்கிவிட்டுள்ளது என்பதற்கு சுவாமி அசீமானந்தா என்பவர் ஓர் உதாரணம்.
ஐந்து
தாக்குதல்களில் 119 பேரைக் கொன்றது மற்றும் பல்வேறு நாசவேலைகளுக்காக கைதாகி சிறையிலிருந்த
இந்த அசீமானந்தாவிடம் கேரவன் இதழுக்காக லீனா கீதா ரகுநாத் ஒரு நேர்காணலை எடுத்திருந்தார்.
இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் அந்தமான் பகுதியில் நிவாரண முகாம்
எவ்வாறு செயல்பட்டதென பாருங்கள்.
‘‘அந்தமானைவிட்டு வந்தபிறகும் அசீமானந்தா
அடிக்கடி அங்கு வந்தார். இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்துப்பொருட்களை ஒப்படைக்கவும்
வந்தார். ஆனால் அவரது நிவாரண உதவிகளை ‘யார் யாரெல்லாம் தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக்
கொண்டார்களோ அவர்களுக்குமட்டுமே தரவேண்டும்’ என்று மிக்ககடுமையாக
வரையறுத்தார். 2004ல் சுனாமி வந்தபிறகு நிகழ்ந்த ஒருகதையை என்னிடம் சொன்னார். “ஒரு
கிறிஸ்தவப் பெண் தனது குழந்தைக்குப்பால் வேண்டும் என்று வந்தாள். எனது ஆட்கள் இல்லை
என்று கூறிவிட்டார்கள். அந்தக் குழந்தைக்கு மூன்று நாட்களாக எந்த உணவும் கிடைக்கவில்லை
கொஞ்சம் பாலாவது தராவிட்டால் அந்தக்குழந்தை இறந்துவிடும் என்று அந்தப்பெண் கெஞ்சினாள்.
அதன்பின் எங்கள் ஆட்கள் ‘சுவாமிஜியிடம் சென்று கேள்’ என்றனர்.
நான் அந்தப் பெண்ணிடம் ‘அவர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் சரி. உனக்கு இங்கே பால்
கிடைக்காது’ என்று கூறினேன்”. இந்தக்கதையைத் திரும்பத் திரும்பக் கூறுவதை அசீமானந்தா
பெரிதும் விரும்பினார்.’’
இதற்கு
மேல் வாசிக்க முடியாமல் நான் விக்கித்துக் கிடந்தேன் வெகுநேரம். மூன்றுநாட்களாக உணவின்றிச்
சொடுங்கும் பச்சிளம் குழந்தைக்கு ஒரு சங்கடை பால் தர மறுக்கும் அசீமானந்தா போன்றவர்கள்தான்
இந்த நாட்டின் பெரும்பான்மை மதமான இந்துமதத்திற்கு தலைமை தாங்குகிறார்கள் என்றால் இந்தச்
சமூகம் எத்தகைய பேரழிவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்கிற நடுக்கம் எனக்குள் பரவியது.
இந்தளவிற்கு பிற மதவெறுப்பு தனக்குள் உருவாகவும் மூர்க்கம் பெறவும் காரணமாக அமைந்தது
‘‘இந்து மதத்தைவிட்டு ஒவ்வொரு மனிதனும் விலகிச் செல்லும்போது, ஒரு மனிதன் குறைகிறான்
என்பதல்ல பொருள். ஒரு எதிரி அதிகமாகிறான் என்பதே” என்கிற விவேகானந்தரின்
கூற்றே என்கிறார் அசீமானந்தா. அசலான இந்த விவேகானந்தரை அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக
ராமகிருஷ்ணா மிஷன் மதச்சார்பற்றவராக திரித்துக் காட்டிவிட்டது என்கிறார் அசீமானந்தா.
இந்த விவேகானந்தரைத்தான் துறவி, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக பாவித்தவர் என்று
கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
சகிப்பின்மை
என்கிற அரசியல் கோட்பாடு, வெகு மக்களின் மனங்களை எவ்வாறு ஆட்கொள்கிறது?
இந்தியச்
சமூகம் 47 லட்சம் பெயர்களிலான சாதி மற்றும் உட்சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. இத்தனைச்
சாதிகளில் ஒன்றுகூட இன்னொன்றை சமமாகக் கருதுவதில்லை, கருதமுடியாது. இது தான் சாதியின்
அடிப்படையான பண்பு. தாங்கள் ஒரு தனிக்கூறான பண்பாட்டின் வழிவந்தவர்கள் என்கிற நம்பிக்கை
ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது. அதனாலேயே பிறரைப் பற்றிய இழிவான / உயர்வான மதிப்பீடுகளை
உருவாக்கிக்கொண்டு அதனூடாக பிறருடன் கலந்துண்பதை, மணம் புரிவதை, சேர்ந்திருப்பதை, சமயச்சடங்குகள்
செய்வதை தீர்மானிக்கிறார்கள். வேறு பண்பாட்டுப் பின்புலம் உள்ளவர்களை அவர்களது தனித்துவப்
பண்புகளோடு எந்தளவுக்கு சகித்துக்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக
உலகளாவிய அளவில் நடத்தப்படும் பல சர்வேக்களில் சகிப்புத்தன்மை மிகக்குறைவாக உள்ள நாடுகளில்
ஒன்றாக இந்தியா தொடர்கிறது. வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ளவர்கள் தமது அண்டை வீட்டாராக
வசிப்பதை ஏற்க முடியாது என்று அந்த சர்வேயில் பெரும்பாலான இந்தியர்கள் ஒவ்வாமையை வெளிப்படுத்துகிறார்கள்
என்றால் அதற்கு காரணம் இங்கு நீண்டகாலமாக வாழ்விடம் முதல் இடுகாடு வரை பிரிந்து கிடப்பது
தான். இந்தப் பிரிவினையை இயல்பானதாக உள்வாங்கி தகவமைந்துள்ள மனோபாவம் நம் ஒவ்வொருவரது
செயலிலும் பிரதிபலிக்காத ஒரு செயலும் இங்கு இல்லை. பிரக்ஞைபூர்வமாக இருக்கும் சில நேரங்களில்
சாதியும் அதன் தொகுப்பான இந்துமதமும் பயிற்றுவித்தவற்றை தவிர்க்கிறாமேயன்றி தன்னுணர்வான
அனிச்சைநிலையில் நம்மில் பலரும் சாதியாக/ மதமாக - பிறருடன் ஒட்டுறவில்லாதவர்களாகவே
இருக்கிறோம். அதனாலேயே தலித்துகள், பழங்குடிகள், பெண்கள், பிற மதத்தவர், இனத்தவர் மீதான
வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களாகவும், அவற்றை ஆதரிப்பவர்களாகவும் இயல்பாகவே இருக்கிறோம்.
சகோதரத்துவம்?
தோழமைத்தன்மையை
விளக்கும் உணர்வே சகோதரத்துவம். இது மற்றவருக்கு நல்லவற்றைச் செய்யத் தூண்டுவதாகும்
என்று கூறும் அம்பேத்கர் பிறிதொரு இடத்தில் சகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும்
சிந்தனை நீரூற்றும் தேவை என்கிறார். மகிழ்ச்சி, அவலம், பிறப்பு, இறப்பு, உணவு என வாழ்வின்
உயிர்த்துடிப்பான இயக்கம் அனைத்தையும் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் ஒத்துணர்வுதான்
அனைவரையும் சகோதரர்களாக உணர வைக்கும். ஆனால் அப்படியான பகிர்தலை இந்துமத/ சாதிய துர்போதனைகளால்
கட்டமைக்கப்பட்ட மனம் ஒப்புவதில்லை என்கிற அம்பேத்கரின் துயரம் இந்த நாட்டின் மீது
இருளெனக் கவிந்திருக்கிறது.
கௌரி லங்கேஷ், கல்புர்கி, கோவிந்த பன்சாரே இவர்களின் தியாகம் எப்போது அர்த்தப்படும்?
சங்
பரிவாரத்தினர் வீழ்த்தப்படுவதற்கும் இவர்களைக் கொன்றவர்கள் சட்டத்தின் முன்னே
நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கும் இவர்களைப் போன்ற சுதந்திரச் சிந்தனையாளர்கள்
இனியும் கொல்லப்படாமல் தடுப்பதற்கும் தேர்தலும் ஆட்சி மாற்றமும் மட்டுமே வழி என்பதில்
எனக்கு உடன்பாடில்லை. அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள உரிமை என்பதற்கும் மேலாக மனிதகுலத்தின்
இயல்புரிமை என்கிற அர்த்தத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மதிக்கும், மற்றமையை உற்றமையாய் கருதும், தனிமனிதர்களுக்கிடையே
மத நல்லிணக்கமும் அரசின் செயல்பாடுகளில் மதச்சார்பின்மையும் பேணும் பண்பேறிய ஒரு குடிமைச்சமூகத்தை
உருவாக்குவதுதான் அதனிலும் சிறந்த வழியென நம்புகிறேன். அதற்காக நடக்கும் எந்தவொரு போராட்டத்திலும்
இவர்களது தியாகம் கண்ணொளியாகச் சுடர்ந்து நம்மை முன்னடத்தும்.
-அணையா வெண்மணி, ஏப் 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக