வறீதயா கான்ஸ்தந்தின் எழுதி எதிர் வெளியீடாக வரவிருக்கும் கடற்கோள் காலம் என்கிற கட்டுரைத்தொகுப்புக்கான முன்னுரை
கரைக்கு வந்த சிற்றலையில் கால் நனைத்துவிட்டு கடலைப் பார்த்துவிட்டதாக கற்பிதம் செய்து கொண்டிருப்பவர்களின் பட்டியலில்தான் என்பெயர் நீண்டநாட்களாக இடம்பெற்றுள்ளது. நான் விரும்பி உண்ணக்கூடியதாக மீன் எப்போதும் இருந்துவந்தபோதிலும் அதை என் சாப்பாட்டுத் தட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தவர் யார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறேனா என்றால் அதுவும் இல்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் உணவகங்களில் சொல்லக் கேட்டு பரிச்சயமான நாலைந்து வகை மீன்களின் பெயர்கள்தான். ஆனால் கடலோரப் பகுதிகளிலிருந்து வந்து ஒசூரில் குடியேறியவர்கள் மீன் கடைகளில் வகைவகையாய் கொட்டிக்கிடக்கும் மீன்களிலிருந்து என்னென்னவோ பேர் சொல்லி தங்களுக்கான மீன் வகைகளை தாங்களே தெரிந்தெடுத்து வாங்கிப்போவது கண்டு ஆச்சர்யப்படுவேன். என்றாலும் தின்பவர்களுக்கே இத்தனை தெரிகிறதென்றால் பிடிப்பவர்கள் அறிந்திருப்பது எவ்வளவு இருக்கும் என்று யோசித்ததில்லை.
காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல், கடல் சீற்றம், கடல் உள்வாங்கியது, படகு கவிழ்ந்து மீனவர்கள் சாவு, கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்களிடம் இலங்கை கடற்படை அட்டூழியம், கடலோரக் காவற்படை அத்துமீறல் என்றெல்லாம் ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கிற நேரங்களில் அந்த கணத்திற்கான ஒரு சஞ்சலம் மனதுக்குள் ஏற்படும். ஆனால் அச்செய்திகளை தொடர் யோசிப்புக்கு நான் உள்ளாக்கியதில்லை. கடல் சார்ந்த பேரிடர்க் காலங்களில்கூட அதிகப்படியான சேதாரங்கள் குறித்த செய்தி திரும்பத்திரும்ப வருவதால் சற்றே உற்று கவனித்திருப்பேனாக்கும். மற்றபடி கடலையும் மீனவர்களையும் நான் எந்தளவுக்கு கவனத்தில் வைத்திருக்கிறேன்? நெய்தல் மாந்தர் என்கிற திணைத்துவமும் அதற்குரிய தனித்துவமும் கொண்ட கடல்சார் தொல்குடிகள் பற்றிய எனது அறிதலின் நிலை என்ன? தோழர் வறீதையா கான்ஸ்தந்தின் தனது கட்டுரைத் தொகுப்புக்கு முன்னுரை கேட்ட மாத்திரத்தில் நான் இவ்வாறாகத்தான் யோசித்தேன். உண்மையில் என் போன்றவர்களுக்குள் இவ்வாறான கேள்விகளையும் சுயபரிசீலனையையும் எழுப்புவதுதான் அவரது எழுத்தின் நோக்கம் என்றால் அந்த நோக்கம் என்னளவில் நிறைவேறியிருக்கிறது என்பேன்.
***
நிலத்துக்கு முதுகையும் கடலுக்கு முகத்தையும் காட்டிக்கொண்டு வாழ நேர்ந்துள்ள துறைவன்களின் வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதையும் அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சமூகத்தின் விவாதப்பொருளாக்கும் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் தோழர் வறீதையா கான்ஸ்தந்தின். அவர்களது வரலாற்றையும் சமகால வாழ்வையும் முதலாவதாக அவர்களுக்கும் தொடர்ந்து சமவெளியினருக்கும் உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் இப்பணியைச் செய்துவருகிறார். இவ்வகையில் அவர் ஏற்கெனவே எழுதிவந்துள்ள பல கட்டுரைகளின் தொடர்ச்சியில் வைத்து காணத்தக்க விதமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.
தமிழகத்தின் 13 மாவட்டங்களினினூடாக நீள்கிற 1076 கிலோமீட்டர் கடற்கரையில் 600 கடலோர கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் வாழும் 9 லட்சம் மீனவர்கள் குறித்து எழுதப்பட்டிருப்பது போன்று ஒரு தோற்றத்தில் தெரியும் இக்கட்டுரைகள் அதற்கும் அப்பால் விரிந்து நாட்டின் கடல்வளம், புரதஉணவு, பாதுகாப்பு, இறையாண்மை, நீடித்த வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, கொள்கை வடிவமைப்பில் உள்ள மேட்டிமைத்தனம் போன்றவற்றைப் பற்றி ஒரு கடற்குடியின் கண்ணோட்டத்தில் அறிவுச்சினத்துடன் விளக்கிப் பேசுகின்றன.
கடல் என்பது வெறுமனே கடலை மட்டுமே குறிப்பதில்லை. அது கரையில் காலங்காலமாக வாழ்ந்துவரும் மக்களையும் சேர்த்தே சுட்டுகிற பொதுப்பெயர். அம்மக்களை கரையில் வாழும் மீன்கள் எனலாம். அவர்கள் அங்கிருக்கும் வரையில்தான் வாழ்க்கை. அவர்களைப் பொறுத்தமட்டில் சாவதென்றாலும் கூட அது கடலிலோ கரையிலோ நிகழ்ந்துவிட வேண்டும். வறீதையா பிறிதோர் இடத்தில் மேற்கோள் காட்டுவதைப்போல கடலைப் புரிந்து கொள்வதென்பது கடலை பார்த்துக் கொண்டிருப்பதுதான். இவர்கள் கடலை, கடலுக்குள் இடையறாது நிகழ்ந்துவரும் மாற்றங்களை கரையிலிருந்தும் கடலின் நடுவிருந்தும் வெவ்வேறு ஆழங்கள் தூரங்கள் நேரங்களிலிருந்தும் ஒருவர் கண்மாற்றி இன்னொருவர் கண் வழியே ஓயாது பார்த்துக்கொண்டே இருப்பவர்கள். ஆகவே கடல் குறித்த மனிதஅறிவு என்பது மீனவர்களின் அறிவுச்சேகரத்தில் தங்கியுள்ளது. கரையோரம் ஆழ்கடல் என அறுவடைக்களம் சார்ந்தும், படகு விசைப்படகு கப்பல் என கலம் சார்ந்தும், வலைகள் உத்திகள் நுணுக்கங்கள் சார்ந்தும் இவர்களுக்குள் தொழில்சார் வேறுபாடுகள் இருந்தாலும் கடலின் மக்கள் என்ற பொதுமை அடையாளத்தின் கீழ் தலைமுறைதலைமுறையாக திரண்டுள்ள இவர்களது பாரம்பரிய அறிவின் துணைகொண்டே கடல் தொடர்பான எந்தவொரு முடிவும் எடுக்கப்பட வேண்டும்.
கடலுக்குள் நிகழும் மாற்றங்களும் அவற்றின் விளைவுகளான பேரிடர்களும் உண்டாக்கும் இழப்புகளை கடல் தானாகவே சரிசெய்து இயல்பை மீட்டுக் கொடுத்துவிடும் என்பது அரசுகள் உருவாகாத காலத்தில் உருவான நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் காலவளர்ச்சில் குடிமக்களை காப்பதாக உறுதியேற்றுக்கொண்ட ஓர் அரசு உருவாகிவிட்ட நிலையில் பேரிடர் காலங்களில் இந்தக் கடல்சார் தொல்குடிகளை காக்கவேண்டியது அரசின் தவிர்க்கமுடியாத பொறுப்பாகிறது. மக்களின் புரதஉணவுத் தேவைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அன்னிய செலாவணிக்குமாக உயிரைப் பணயம் வைத்து கடல்வளத்தை கரைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் மீனவர்களின் உழைப்பானது நாட்டு நலனுக்கான தீரமிக்க பங்களிப்பாக கருதப்பட்டு அந்தவகையில் அவர்களைக் காக்கும் பொறுப்பு அரசுடையதாகிறது. மீனவர்களின் கடல்சார் மரபறிவையும் சர்வதேச நவீன அறிவியல் தொழில்நுட்பங்களையும் தகவல் தொடர்புச் சாதனங்களையும் இணைத்து பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பது, முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தவிர்க்க முடியாமல் சிக்கிக் கொள்வோரை துரிதமாக மீட்பது, மீண்டும் தொழிலுக்குத் திரும்பும்வரை அவர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான நிவாரணத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது என இதுதொடர்பில் அரசு ஆற்றுவதற்கு அநேகக் காரியங்களுண்டு.
முற்காப்பு நடவடிக்கைகளால் சேதாரத்தின் அளவை குறைக்கமுடியுமேயன்றி எந்தவொரு பேரிடைரையும் தடுத்துவிடமுடியாது. ஒரு பேரிடர் நிகழ்ந்துவிட்டதற்கும் அங்கு மீட்புப்பணி தொடங்குவதற்கும் இடையேயான கால இடைவெளி எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு உயிரிழப்புகளும் பொருட்சேதமும் குறையும். ஆனால் கடல்மேல் நடக்கும் இந்த உயிர்ப்போராட்டத்தை அதற்கேயுரிய பதைப்போடும் தீவிரத்தோடும் உணர்ந்துகொண்டு பொறுப்புணர்வுடன் செயலாற்றக்கூடியதாக அரசு இயந்திரம் இல்லை என்பதை அடுத்தடுத்த பேரிடர்களின் போது கிடைக்கப்பெற்ற கசப்பான அனுபவங்களின் வழியே நிரூபிக்கிறார் வறீதையா.
கண்ணுக்கெட்டிய வரை பரந்து விரிந்த கடலுக்குள் புகும் துணிச்சல், தன்னம்பிக்கை, சமயோசிதமான முடிவு, அலையின் வீச்சையும் காற்றின் போக்கையும் கணித்து எதிர்கொள்ளும் உடல்வலு ஆகியவற்றினால் கடலுக்குள் செல்லும் ஒவ்வொரு மீனவரும் வாழ்வின் மீதான தீராக்காதலால் கரைக்குத் திரும்ப விரும்புகிறார்கள். கடல் சென்று திரும்பும் ஒவ்வொரு மீனவரும் சராசரியாக 16 பேருக்கு வேலைவாய்ப்பளிப்பவராக இருக்கிறார் என்கிற போது அவர் உயிருடன் திரும்புவது அவரது குடும்பத்தாரையும் தாண்டி வேறு பலருக்கும் பிரார்த்தனையாக இருக்கிறது. பெரும்பாலான தருணங்களில் அந்த வேண்டுதலுக்கு மனமிரங்கும் கடல் சிலவேளைகளில் மூர்க்கமாக நிராகரிக்கிறது. தனக்குள் வருபவர்களை அதேரீதியில் பத்திரமாக திருப்பி அனுப்பும் பொறுப்பை அது நிறைவேற்றாத போதெல்லாம் மீனவக்குடிகள் உயிர் மற்றும் பொருட்சேதத்திற்கு ஆளாகிறார்கள். இப்படியான தருணங்களில் அரசு அதிகாரிகளும் கடலோர காவற்படையினரும் துரிதமாக கடமையாற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெரும்பாலும் பொய்த்துப்போகிறது என்பதை ஒக்கிப் புயல் மீட்பின் தோல்வி உணர்த்துகிறது. நுண்ணுணர் திறன் வாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ள அரசு ஒக்கிப் புயலின் போக்கையும் வேகத்தையும் கணிக்கமுடியவில்லை என்று உதட்டைப் பிதுக்குகிற போது, ‘கடல் நம்மை கைவிடாது’ என்கிற வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டிருந்த மீனவர்களால் எப்படி உயிர் தப்பமுடியும்?
ஒக்கிப் புயலால் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களை உயிருடனோ பிணமாகவோ மீட்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவது என்கிற கடமைகளை நிறைவேற்றத் தவறிய மத்திய மாநில அரசுகள், பாதிப்புகளின் முழுப் பரிமாணத்தை வெளியுலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் முயற்சிகளையும் தடுத்தது. இதுதொடர்பில் அருள் எழிலன், திவ்யபாரதி போன்றோர் எடுத்திருந்த ஆவணப்படங்களை சுதந்திரமாக திரையிடுவதற்கும் கூட ஆனமட்டிலும் இடைஞ்சல் ஏற்படுத்தியது. திவ்யபாரதியை கைதுசெய்து அவரது ஒருத்தரும் வரேல படத்தை கைப்பற்றி அழிப்பதற்கு காவல்துறை ஏவப்பட்டது. செய்தியாளர் சந்திப்பொன்றில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்திய அலட்சியமும் ஆணவமும் இந்த ஆட்சியாளர்களிடம் மீனவர்களுக்கு என்ன பெறுமதி என்பதைக் காட்டியது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் பரிவுணர்ச்சியும் அரசியல் சாசன பொறுப்புணர்வும் அற்றவர்களாக இருந்தனர். 7000க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தைக்கூட பொருட்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை.
சுனாமி தொடங்கி அடுத்தடுத்து வந்த பல பேரிடர்களைக் காட்டி கடல்சார் தொல்குடிகளை அவர்களது பூர்விக பிறப்பிடம்-வாழ்விடம்- பணியிடமாகிய கடலோரத்திலிருந்து அப்புறப்படுத்தும் விதமான திட்டங்களை திணித்துவருகிறது அரசு. இத்திட்டங்களும் இவற்றை அமலாக்க நிறைவேற்றப்படும் ஒழுங்காற்றுச் சட்டங்களும், இவர்களை அப்புறப்படுத்திவிட்டு கடலோரத்தை சுற்றுலா, கேளிக்கை மற்றும் பெருந்தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதை நோக்கமாக கொண்டவை. கனிமக் கொள்ளையர்களுக்காக காட்டின் மக்களாகிய பழங்குடிகளை காடுகளிலிருந்து வெளியேற்றுவது, தொழிற்பேட்டை அல்லது எண்ணெய் / எரிவாயு கிணறுகளுக்காக வேளாண் நிலங்களை பறித்துக்கொண்டு விவசாயிகளை நிர்க்கதியாக்குவது உள்ளிட்ட அரசின் கார்ப்ரேட் ஆதரவுக்கொள்கை கடற்பரப்பில் இவ்வாறாக நீள்கிறது. அரசின் இத்தகைய தவறான அரசியல் சமூக பொருளாதாரக் கொள்கைகளால் பழங்குடிகள், கடற்குடிகள், சமவெளியினர் என்று அனைவருமே பாதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்கள் என்கிற ஓரடையாளத்தின் கீழ் இவர்கள் ஒன்று திரள்வதற்கும் போராடுவதற்குமான தேவை இருப்பதை இத்தொகுப்பின் கட்டுரைகள் உணர்த்துகின்றன.
***
சமவெளியிலிருந்து விலகியிருக்கும் கடற்குடிகளையும் சாதியம் விட்டுவைக்கவில்லை. அவர்கள் 21 சாதிகளாக பிரிந்திருக்கிறார்கள். ஆனால் கடற்கரைப் பொருளாதாரத்தை பெரிதும் கட்டுப்படுத்துகிறவர்களாக தொழிலோடு தொடர்பற்ற சமவெளிச்சாதியினர் இருந்து வருகின்றனர். மத நிறுவனங்கள் மீனவக்குடும்பங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. உழைப்பின் வழி ஈட்டலும் அதை கைகுளிர செலவழிப்பதும் அவர்களது இயல்பு. தொழிலுக்கு செல்லாத காலத்திலும் செலவுக்கு தடங்கல் இல்லை, வட்டிக்கு கடன் வாங்குவதற்கு தயங்குவதேயில்லை. தங்களது வாழ்வாதாரமான கடற்தொழில் என்றென்றைக்குமாக இருக்கப்போகிறது என்பதால் வேறு தொழில்களுக்கு மாறுவது குறித்து பெரும்பாலோர் யோசிப்பதில்லை. அதுகூட அவசியமில்லை என்பதால்தான். கல்வியில் நாட்டமில்லை என்கிற குற்றச்சாட்டு இவர்களைப் பொறுத்தமட்டில் அர்த்தமில்லாதது. ஏனெனில் தங்களது வாழ்வாதாரத்திற்கான அனுபவக்கல்வியை பட்டறிவை அவர்கள் எப்போதுமே கற்றும் பெற்றும் வருகிறார்கள். கடற்தொழிலின் ஆதாரமாக ஆண் விளங்குகிறான். மீன்பிடிக்காக பெண்கள் ஏன் கடல்புகுவதில்லை என்றொரு கேள்வியை இச்சமூகம் தனக்குள்ளேயே எழுப்பிக் கொள்ளாமல் இருந்திருக்காது. ஆயினும் தமக்குள்ளேயான வேலைப்பிரிவினையாக, கரையில் பெண்களுக்கென்று நிமிரமுடியாத அளவுக்கு வேலைகள் இருக்கின்றன.
மீனவச்சமூகத்தின் ஆதாரம் ஆண் என்றால் மீனவக்குடும்பத்தின் ஆதாரம் பெண். மீனவக்குடும்பத்தின் பொருளாதாரத்தை பெண்ணே நிர்வகிக்கிறாள் என்கிறார் வறீதையா. குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு, உறவு பேணல், பண்பாட்டுச் செயல்பாடுகள் என அத்தனையும் பெண்ணின் பொறுப்பாக கரையில் விடப்பட்டுள்ளன. எனில் கடலில் ஒரு பாதிப்பு என்றால் அது கடலோடு ஆணோடு முடிவதில்லை. இந்த பாதிப்பு கடலிலிருந்து கரைக்குத் தாவி அங்குள்ள அவர்களது குடும்பங்களையும் நிலைகுலையச் செய்கிறது. கடற்தொழிலுக்குச் செல்லும் குடும்பத்தின் ஆணை இழப்பதனால் ஏற்படும் சிரமங்களையும் துயரங்களையும் தாங்கிச் சுமக்கும் பெரும் பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்கிறது. கடல்சார் கைம்பெண்களின் கையறு நிலை குறித்து வறீதையா விரிவாக பேசி நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்வுகளையும் பரிந்துரைக்கிறார்.
***
ஒக்கிப் புயல் ஏற்படுத்திய பேரிழப்புகள் கடலுக்குச் சென்று திரும்பும் மீனவர்களின் இயல்பை குலைத்திருக்கிறது. அடுத்தத் தலைமுறையினரை கடலுக்குப் பழக்குவதில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அவர்களிடையே தயக்கம் உருவாகியுள்ளது. ஆனால் கண்ணியமாக வாழ்வதற்கான மாற்றுத்தொழில் என்ன என்கிற கேள்வி அவர்களை மருட்டுகிறது. போதிய கல்வியின்மை, சமவெளிச் சமூகத்துடனான உறவிலுள்ள இடைவெளி, அரசின் பாராமுகம் என்றுள்ள நிலையில் கடலை விட்டு எங்கே போவது என்கிற அரற்றலுக்கும் ஏன் போகவேண்டும் என்கிற துணிச்சலுக்கும் இடையே ஊசலாடும் அவர்களது மனம் ஒருநிலைக்குத் திரும்ப இன்னும் சற்று அவகாசம் தேவைப்படலாம். ஒருநிலை என்பது, கடற்குடிகள் - துறைவன்கள் என்கிற தங்களது வரலாற்று அடையாளத்தையும் வாழ்வாதார உரிமையையும் தக்கவைத்துக் கொள்வதற்காக போராடுவது என்பதுதான். அந்தத் திசையில் செல்வதற்கான முயற்சிகளுக்கு வலுவூட்ட வேண்டுமானால் மீனவர்கள் ஓர் அரசியல் சக்தியாக தம்மை திரட்டிக்கொள்வதும், மீனவர் நலன் சார்ந்து சிந்திக்கிற- செயலக்கறையுள்ளவர்கள் கொள்கை முடிவெடுக்கும் அதிகார மையங்களுக்குள் நுழைவதும் அவசியம் என்கிறார் வறீதையா.
பாரம்பரியமான மீன்பிடித்தொழிலை தக்கவைத்துக்கொண்டே சமகால சிந்தனையோட்டங்களையும் வாழ்வியல் நாட்டங்களையும் கைக்கொள்ளும் ஆற்றல்மிக்கதாக மீனவக்குடி தன்னை தற்காலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற அவரது சுயவிமர்சனம் மதிக்கத்தக்கது. அதேவேளையில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களை திரட்டியதை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு மீனவர்கள் தம்மை அணிதிரட்டிக்கொள்ள வேண்டும் என்கிற பரிந்துரை ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், சாதியின் காரணமாக சமூக அந்தஸ்திலும் கல்வியிலும் பின்தங்கிய- பெரும்பாலும் அடிநிலை பாட்டாளிகளாக உள்ள வன்னியர்களை அவர்களது ஜனநாயக உரிமைகளை முன்வைத்து அக்கட்சி அணிதிரட்டவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற வகைமைக்கான போராட்டத்தை அது நடத்திய போதிலும் வன்னிய அணிதிரட்சியின் மையமாக தலித் எதிர்ப்பே உள்ளது. இதன் பொருள், சாதிய ஒடுக்குமுறைக்கான- வன்கொடுமைகளை நிகழ்த்துவதற்கான உரிமையை தக்கவைத்துக் கொள்வதற்கான வெறிநிலை அவர்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாக இருந்தது, இருக்கிறது. ஆகவே அந்த அணிதிரட்சி பின்பற்றத்தக்க ஒரு முன்னுதாரணமல்ல. எண்ணிக்கையில் எவ்வளவு சிறுபான்மையினராக இருந்த போதிலும் மீனவர்கள் எம்மக்கள், உழைப்பாளிகள் என்ற வகையில் எமது வர்க்கம் என்கிற உணர்வை சமவெளியினரிடம் உருவாக்குவதும் அவர்களுக்கான கோரிக்கைகளையும் இவர்கள் தம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கும்படியான நிலை நோக்கி நகர்த்துவதுமே சரியான வழியாக இருக்கக்கூடும்.
17.05.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக