சனி, ஜூன் 8

கீழடி மேலடி உள்ளடி - ஆதவன் தீட்சண்யா

ஏர்க்காலில் சிக்கும் ஓட்டுச் சில்லு
கடைக்கால் தோண்டுகையில் தட்டுப்படும் தாழி
அல்லது
சுட்ட செங்கல் வரிசைச் சிதைந்த உறைகிணறு
உனக்குள்ளிருக்கும்
ஒரு தொன்மநேயனை உசுப்பிவிடுகிறது.

புராதனத்தின் நிறவரிகளோடிய
மேற்படிவு தொல்லெச்சங்களால் பரவசமாகிடும் 
உன் மனமே ஒரு பொக்லைனாகி
புதைபடிவுகளுக்காக அவ்விடத்தை
அகழ்ந்தெடுக்கத் தொடங்குகிறது

இன்னும் இன்னுமென போகும் ஆழத்தில்
ஓர் அருங்காட்சியகத்தின் காணறை போன்று
திறந்துகொள்ளும்  அத்தொல்களத்தில்
உனது பாரம்பரியத்தின் தொடக்கத்தை
பன்னூறாண்டுகள் பின்தள்ளிப் பொருத்தும்
மாயமுத்திரையைத் தேடித் திளைக்கிறாய்  

புதைத்து நாட்பட்ட பழச்சாறைப் பருகிய பாவனையில்  
மதமதக்கும் கிறக்கத்தின் கால்திருகும் நடையில்
நீ வந்து சேர்ந்திருக்கும் புதிய தளத்தில்
கண்ணுக்கெட்டிய மட்டிலும் 
கூரை சரிக்கப்பட்ட கோம்பைச்சுவர்கள்
உடைந்த ஓடுகள்
வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டச் சிதிலங்கள்
ஒளிவீசும் அரியவகை கல்மணி
வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையற்துண்டு
தந்தத்தினாலான பகடைக்காய்  
குலச்சின்னம் பொறித்த ரோமானியக்காசுகள்
கருகிய ஓலைச்சுவடிகள்
அருகிலேயே தோலிசைக் கருவிகள்
செப்பினாலான சொப்புக்கலயங்கள்
சுடுமண் சிற்பங்கள்
மசகெண்ணை கலந்த தானியங்கள்

வளமையின் எச்சங்கள் மிகுந்திருக்கும் இத்தொல்நகரம்
மூவாயிரம் ஆண்டுகளுக்கேனும் முந்தைய
தொன்மையூறியதாய் இருக்குமென எக்காளமிடுகிறாய்
நொடிக்கும் குறைவான பொழுதிற்கு முன்புவரை
நாங்கள் வாழ்ந்திருந்த இடமிது என்கிறேன்
ஒளித்துவைத்திருந்த உருட்டுக்கட்டையால்
உன் பங்கிற்கு
எஞ்சிய ஓடுகளையும் பானைகளையும் உடைத்தபடி
ஓடத்தொடங்குகிறாய் நீயும்.

19.04.19

விகடன் தடம், ஜூன் 2019












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...