புதன், பிப்ரவரி 15

குலைவதற்கு முன்னான பொறுமையின் தன்னறிக்கை -ஆதவன் தீட்சண்யா

த்தனைக்குப் பிறகும் பொறுமையாகவே இருக்கிறேன்
வெட்டுறுகையிலும் நிழலீந்தும் மரமாக
விற்கப்பட்ட பின்னும் குளிர்ந்தோடுமொரு நதியாக

அதிகாரத்தின் மாடத்திலிருந்து நீங்கள் ரசிக்க
அடிமைகள் எமக்குள் செத்துமோதிய துர்ப்பொழுதுகளில்
அல்லது
பூர்வ குடியழித்து புதுசாம்ராஜ்யங்களை நிறுவுகையில்
ஏன்
பாமியான் சிலைகளை தகர்த்தபோதோ
பாபர்மசூதி நினைவையும்
பாதாளம் தோண்டி புதைக்கும்போதோ
அலைக்கழிப்பின் உக்கிரம் இறுகி
நான் பொறுமையாகியிருக்கக் கூடுமாதலால்
அது தற்செயலானதல்ல:
கால இட உருவெளி கடந்து பரந்தது

அடிஉதைக்குப் பழகிய என் அம்மா போல
அவமானங்களால் கறுத்த ஆப்பிரிக்கன் போல
அணுகுண்டால் பிளந்தாலும் அருள் மறுக்காத பொக்ரான் பூமியாக
நானும் அமைதியாயிருப்பதாலேயே
வாலிகுஜராத்தி தர்காவை நிரவித்தள்ளியவாறே
முன்பு உடைக்கமுடிந்தது உங்களால்
லெனின் சிலையை

அபயமற்று ஓடிய என் நிர்வாணத்தை
திரையிட்டு மகிழ்ந்தீர் மீரட் வீதிகளில்
மாய்த்தீர் எனதுயிரை உடன்கட்டையேற்றி
பகலில் வெளிவராமல் பதுங்கிவாழப் பணித்ததோடு
சாதி மேன்மையைக் கொண்டாட
மலத்தை வாயில் திணித்தப் பின்னும்
திறந்தேயிருக்கும் கைபர் போலன் கணவாயில் திரும்பியோடுமாறு
உங்களை துரத்தியடிக்காமலிருப்பதும்
என் பொறுமையின் கொடையால்தான்

எல்லாவகையிலும்
ஒரு மனிதப்பிறவியாய் வாழத் துடிக்குமென் பெருங்கனவை
சிறைபிடித்தீர் பயங்கரவாத தடுப்புச்சட்டங்களால்
பேனட்டால் கிழித்தீர் என் பிறப்புறுப்பை
அவலத்தின் பேருருவான நானோ
பொறுமையாகவே இருக்கிறேன்
தாமிரபரணி மணலுக்குள் சொருகியிருக்கும்
தேயிலைக்காட்டு தொழிலாளியின் ஆவிபோல
முத்தங்காவின் நிசப்தத்தில் உறைந்திருக்கும்
ஆதிவாசியின் ஓலமாக

ஆனால்
ஈராக்கின் இடிபாடுகளிலிருந்தோ
எரிக்கப்பட்ட யாழ்நூலகத்திலிருந்தோ
அல்லது
அணைக்கட்டுகளுக்குள் மூழ்கிப்போன
ஆதிநிலத்திலிருந்தோ
என் பொறுமை குலைந்து வெளிப்படுமானால்
மூடிய ஆலையின் வெளித்தொங்கும் பூட்டாக துருப்பிடித்தோ
ஹிட்லரின் சிரிப்பாகி மின்னும்
திரிசூல பளபளப்பாகவோ இருக்காது

சௌதார் குளத்தில் நீரருந்திய தாகமாக
சீன நெடும்பயணத்தில் நடந்த பாதங்களின் வலுவாக
சியாட்டில் வீதியில் கொப்பளித்த சினமாக
வியட்நாமின் வயல்வெளியிலிருந்து
விண்ணுக்கு குறிபாய்ச்சிய விழியாக
பாலஸ்தீன பதுங்குக்குழியிலிருந்து
தாயகத்துக்கு பொங்கும் கனவாக
என்னாலும் அனுமானிக்கமுடியாத ஆகப்புது வடிவாக
வெடித்துக்கிளம்பும் என் பொறுமையோடு
நேருக்குநேர் மோதும் காலத்திற்காக
காத்திருங்கள்
என் எதிரிகளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...