புதன், பிப்ரவரி 15

புது ஆட்டம்

நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை
தீண்டுவது வெறுமனே சரீரம் சம்பந்தப்பட்டதல்ல
உங்களை விலக்கிவைக்கும் இத்தருணம்
மிக முக்கியமானது
எனது குற்றச்சாட்டுகளைப்போலவே

குமிந்து ஊரையே நாறடிக்கும் இந்நரகலெல்லாம்
நேற்றிரவு நீங்கள் தின்றவைதான் தெரியுமா
நீங்கள் எத்தனை அழுக்கானவர்கள் என்பதை
பாழ்பட்டிருக்கும் நீர்நிலைகளைப் பார்த்தறியுங்கள்
சுத்தபத்தமாக இல்லாதாரோடு
சுமூகமாய் பழகமுடியாது என்னால்

புராண இதிகாச காலந்தொட்டு
அரசாங்கத்தின் தத்துப்பிள்ளைகளாகவே வளர்ந்திருக்கிறீர்கள்
அடுத்தோரை அண்டிப்பிழைக்கும் கையாலாகாதவர்களோடு
உழைத்து வாழும் என்னால் ஒத்துப்போக முடியுமா

காலங்காலமாக
நீங்கள் இப்படியே கிடந்து பழகியதற்கு
யாரையும் குற்றம் சுமத்தாதீர்கள்
எல்லாக்காலத்திலும் உங்களைத் தூக்கிச் சுமக்க யாராலாகும்?
இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது

பெண்டுபிள்ளை ஒண்டிப்பிழைக்க
கொட்டாய் போடத் தெரியாது
வக்கணையாய் பொங்கித் திங்க
ஒரு சொப்பு வனையத் தெரியாது
நாலு சுள்ளியொடித்து அடுப்பெரிக்கத் தெரியாது
மமுட்டி பிடித்து ஒருவயலுக்கு
மடை திருப்பத் தெரியாது
லட்சணமாய் தோய்த்து உடுத்தத் தெரியாது
காடாய் வளர்ந்து காட்டுமிராண்டி போலானாலும்
மழித்துக்கொள்ள வராது
வீட்டிலே இழவென்றால் ஒருமுழக் குழி வெட்டி புதைக்கவும் தெரியாது
நாய்கூட தன் உணவைத்தானே தேடித் தின்கையில்
உங்களுக்கு ஒவ்வொன்றையும் நானே
ஊட்டித்தர வேண்டியுள்ளது
வாழத்தேவையான எதையுமே கற்றிராத நீங்கள்
அறிவிலும் அந்தஸ்திலும் தகுதியிலும் திறமையிலும்
பிறப்பிலேயே என்னைவிட ஒசத்தி எந்தவகையிலென்று
இப்போது நிரூபியுங்கள்

-அதுவரை
எனக்கு சமதையற்ற உங்களைத்
தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை

தீண்டுவது வெறுமனே சரீரம் சம்பந்தப்பட்டதல்ல.

1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...