வியாழன், செப்டம்பர் 20

ஒசூரெனப்படுவது யாதெனின்... 1 - ஆதவன் தீட்சண்யா


'ழை சன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு, எங்களுக்கு எங்களது பிழைப்பு மேலேயே...’ என்ற என்னுடைய கவிதைக்குப் பின்புலம் எங்களுடைய கூரைவீடுதான். அதை வீடு என்று நாங்கள் யாரும் அப்போது சொல்லிக்கொண்டதாக நினைவில் இல்லை. கொட்டாய் என்றுதான் சொல்வோம். கரும்புச்சோகை, தென்னங்கீத்து என்று எதுகொண்டு வேய்ந்தாலும் எளிதில் மக்கி கூளமாகிப் பொடியாக உதிரும் அந்தக் கூரையின் கீழ்தான் என் பால்யம் கழிந்தது. மழை பெய்யத் தொடங்கிவிட்டால் நனைவதற்கு நாங்கள் வெளியே செல்ல வேண்டியதில்லை. எங்களை எல்லாம் தனக்குள்ளே அனுமதித்துக் கொண்டதைப் போலவே மழையையும் அனுமதிக்கும் பெருந்தன்மை கொண்டதாக இருந்தது அந்தக்கூரை. மழைக் காலம் முழுவதும் சேக்கம் கண்டு ஓதமேறி ஈரத்தின் சில்லிப்பு விறுவிறுவென பரவிக் கிடக்கும் அந்தக் கொட்டாய்க்குள் அடுப்புத்திட்டு மட்டும்தான் சிலவேளைகளில் சூடாக இருக்கும். கணப்புக்காக நெருப்பு மூட்டச் சொன்னால் 'கஞ்சி காய்ச்சவே விறகில்லை, இதுல குளிர் காயணும்னு ஆசையப் பாரு’ என்று அம்மா முறைக்கும். 'கஞ்சி காய்ச்சத்தான் ஒண்ணுமில்லையே, அடுப்பைப் பத்தவெச்சா குளிராவது காயலாமில்ல’ என்பது பிள்ளைகளான எங்களுடைய முணுமுணுப்பாக இருக்கும்.

மழைமோடம் கழியும்வரை ஒவ்வொரு இரவும் கொடும் தண்டனைதான். மேலிருந்து சொட்டும் மழைக்கும் கீழே பரவிக்கிடக்கும் ஈரத்துக்கும் நடுவிலே படுத்திருப்பது ஒரு கொடிய வாதையே. வெடவெடக்கும் குளிரைத் தாங்கமுடியாமல் திடீர்திடீரென உடம்பு  சிலிர்த்து அடங்கும். ஈரம் சேராமல் கடுத்துக்கடுத்து ஊறிவிடும் சிறுநீரைக் கழிக்க சவ்வுக் காகிதத்தைக் கொங்காடையாக மாட்டிக்கொண்டு வெளியே வந்து போனாலும் அரைவாசியாவது நனைந்துதான் கொட்டாய்க்குள் திரும்புவோம். விரைத்தும் மரத்தும் களைத்தும் போய் அனத்திக்கொண்டே ஒருவித மயக்கம் போலத்தான் தூங்கிப்போவோம். காத்துக்கும் மழைக்கும் தாங்குகிற தெக்கத்திக் கவுண்டர்களின் கொட்டாய்களைப்போல நெல்லந்தாள் படர்த்தி அடர்த்தியான கூரை வேய வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தின் மிகப்பெரும் கூட்டுக் கனவாக இருந்தது. ஆனால், திடுமென்று ஒருநாள் எங்கப்பா, புது வீடு கட்டப்போவதாக அதுவும் பில்லவீடு (ஓட்டுவீடு) கட்டப்போவதாகக் கூறியபோது நாங்கள் அப்போதே அந்த கட்டப்படாத புதுவீட்டுக்குள் குடிபோய்விட்டதாக மகிழ்ச்சிகொண்டோம். எங்களைப் பொறுத்தவரை, கொட்டாய்க்கும் வீட்டுக்குமான வித்தியாசம் கூரைக்கும் ஓட்டுக்குமானதாக மட்டுமல்ல... ஓதமேறாத, ஈரமண்டாத காரை மெழுகிய தரையாகவும் இருந்தது.   

வீடுகட்டப் போவதாகச் சொல்லிவிட்டாரே தவிர அதற்கான பணமொன்றும் எங்கப்பாவிடம் இல்லை. அவர் வீட்டுவசதிக்கடன் வழங்கும் சொசைட்டி ஒன்றில் கடன் கேட்டு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார். அந்தக் கடன்தொகை கைக்கு வரும் நாளில் அந்தத் தொகையில் இருந்து எனக்கு ஒரு பேன்ட், சர்ட் எடுத்துத் தருவதாக அவர் சொன்னதிலிருந்து என்னுடைய கனவில் பில்லவீட்டுக்குப் பதிலாக புதிய பேன்ட்டும் சட்டையும் வரத்தொடங்கின. காக்கி, வெள்ளை பள்ளிச்சீருடை தவிர்த்து கலரில் ஒரே ஒரு மாற்றுடுப்பு வைத்து இருந்த ப்ளஸ் டூ மாணவன் ஒருவனது வாழ்வில் புதுத்துணி வரப்போவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? ஒரே பாட்டுக்கு 14முறை உடுப்பு மாற்றிக்கொண்டு ஆடும் சினிமாக் கதாநாயகர்கள் கூட, 'உன் புது உடுப்பைக் கொடேன், ஒருவாட்டி போட்டுப் பார்த்துட்டு தந்துடுறேன்' என்று என்னிடம் கெஞ்சுவதுபோல் எனக்கு கனவு வந்தது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் கனவெல்லாம் நனவாகும் ஒருநாளும் வரத்தான் செய்தது. கடன் தொகையின் முதல் தவணையை வாங்குவதற்குச் சென்ற எங்கப்பா என்னையும் உடன்வருமாறு அழைத்தபோது நான் திக்குமுக்காடிப் போனேன். தூக்கமும் முழிப்புமாக விடிய விடிய உருண்டு கிடந்துவிட்டு அதிகாலையில் கிளம்பினோம். இன்றைக்கெல்லாம் பிசாத்துக் காசு என்று சொல்லத்தக்க  சொற்பத்தொகையை வாங்குவதற்கு நாங்கள் அலமேலுபுரத்தில் இருந்து ஐந்துமணி நேரப் பயணம் செய்து மாவட்டத்தின் கடைக்கோடியில் இருந்த ஒசூருக்குப் போகவேண்டி இருந்தது. ஆமாம், அங்குதான் அந்த சொசைட்டி இருந்தது. ஆனால், புதுத்துணியின் மீதான கிளர்ச்சியில் இதுவெல்லாம் ஒரு தூரமா என்பதைப் போல் இருந்தது என்னுடைய மனநிலை.

வழிநெடுக ஓசூருக்கும் தனக்கும் இருந்த தொடர்புகளைப் பற்றி துண்டுத் துண்டாக எங்கப்பா என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தார். தளி, கெலமங்கலம், பேரண்டப்பள்ளி காடு, அத்திப்பள்ளி பார்டர் என்று பல இடங்களிலும் ரோடுபோடும் வேலைக்காகத் தன் தாயாரோடு வந்திருந்தது, குந்துமாரனப்பள்ளி என்கிற கிராமத்திலும் மத்திகிரி கால்நடைப் பண்ணையிலும் கால்நடைத்துறை பணியாளராக இருந்தது, பண்ணைக்குச் சொந்தமான தோண்டியைக் கிணற்றில் போட்டுவிட்டதற்காகத் திட்டிய மேற்பார்வையாளரை அடித்துவிட்டு 'எங்கம்மாகிட்ட 100பேர் வேலை செய்யறாங்க... நான் உன்கிட்ட கைகட்டி நிக்கணுமா?’ என்று பீற்றிவிட்டு வேலையை விட்டு வெளியேறியது... என்று நினைவைத் திரட்டித் திரட்டிச் சொல்லிக்கொண்டு வந்தார். ' நீ பதினோரு மாசக் கொழந்தையா இருக்கிறப்ப உன்னையும் அம்மாவையும் இங்கு கூட்டிவந்து அக்கொண்டப்பள்ளியில் வீடெடுத்து கொஞ்சகாலம் தங்கி இருந்தோம். அன்னிக்குக் கொஞ்சம் சுதாரிச்சு இருந்திருந்தா, இன்னிக்கெல்லாம் ஒரு எல்.ஐ (லைவ்ஸ்டாக் இன்ஸ்பெக்டர்) ஆகி இருப்பேன். நம்ம குடும்பம் இவ்வளவு கஷ்டத்துக்கு ஆளாகி இருக்காது’ என்று காலங்கடந்து பொங்கிய ஞானத்தின் அலைக்கழிப்பு தாளாது கண்களை மூடிக்கொண்டார். நானோ கண்களை அகலவிரித்து சாலையின் இருமருங்கும் அடர்ந்திருந்த காடுகளையும் அடுக்கடுக்கான மலைகளையும் ஒருவிதப் பரவசத்தோடு பார்த்துக்கொண்டு வந்தேன். சமதளத்தில் இருந்த எங்களுடைய பயணம் ஒரு மலைப் பயணமாக மாறிவிட்டிருந்தது. இளப்பு நோவெடுத்த ஒரு முதியவரைப்போல திணறித்திணறி மேடும் பள்ளமுமான சாலையில் பஸ் உருளத் தொடங்கியது. சாலையோரத்து  வயல்களில் விளைந்திருந்த முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிச் செடிகளை அவற்றின் பெயர் தெரியாமலே அப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். ஹள்ளி, பள்ளி என்று முடியும் சிறுசிறு ஊர்களின்  ஊடாக நாங்கள் ஓசூரை நெருங்கும்போது மழை பிடித்துக் கொண்டது.  'இந்த ஓசூர் பக்கமெல்லாம் இப்படித்தான், மழ பேஞ்சிக்கிட்டே இருக்கும்... எப்பவும் ஊதக்காத்து விசுவிசுனு அடிக்கும்’ என்றவாறே தன்னுடைய மேல்துண்டை விரித்து எனக்குப் போர்த்திவிட்டார் அப்பா. வெடவெடக்க வைத்துக் கொண்டு இருந்த அந்தக் குளிருக்கு இந்தத் துண்டு எம்மாத்திரம்?  இரவை நோக்கி விரையும் ஒரு பகலைப்போல இருண்டுகொண்டிருந்த சாலையில் மின்னாம்பூச்சியைப் போல மங்கலாக ஒளிர்ந்தபடி ஊர்ந்து சென்ற பஸ் ஓசூரில் எங்களை இறக்கிவிட்டபோது காலை 11 மணி.

எனக்குப் புதிய உலகத்துக்கு வந்துவிட்டதுபோல் இருந்தது. பட்டப்பகலில் இருள் அண்டியிருந்த ஒரு ஊரை இப்போதுதான் நான் பார்க்கிறேன். எதிர்ப்படும் மனிதர்களில் அனேகரும் ஸ்வெட்டரும் குல்லாவும் போட்டுக் கொண்டோ எதையாவது போர்த்திக்கொண்டோ இருப்பதைப் பார்க்கவே எனக்கு விநோதமாக இருந்தது. மழை தணிந்து நசநசக்கும் தூறலின் ஊடாகக் கிளம்பினோம். மேட்டிலிருந்து மழைநீர் ஆற்றைப்போல ஓடிவந்துகொண்டு இருந்த அந்தச் சாலையின் முடிவில் தாலுகா ஆபீஸ் இருந்தது.  அந்த வளாகத்திலேயே இருந்த காவல் நிலையத்தில் காவலராக இருந்த தன்னுடைய  தாய்மாமன் மகன் கிருஷ்ணனைப் பார்த்து அவரையும் அழைத்துக்கொண்டு சொசைட்டிக்குப் போவதுதான் எங்கப்பாவின் திட்டமாக இருந்தது. திடீர் விருந்தாளிகளான எங்களை வரவேற்ற கிருஷ்ணன் மாமா,  அவசர அவசரமாக எங்களை வளாகத்துக்கு வெளியே இருந்த புளியமரத்தடி கொட்டகை ஒன்றுக்கு அழைத்துப்போனார். அங்கே இருந்த நடுத்தர வயசாளி ஒருவரிடம் 'திடீர்னு ஒறம்பரைங்க வந்துட்டாங்க. எப்படியாச்சும் அட்ஜஸ்ட் பண்ணி இவங்களுக்கும் ரெண்டு சாப்பாடு தரணும்’ என்று மிகவும் நயமாக வேண்டிக்கொண்டார். 'இப்படி திடீர்னு சொன்னா நான் எப்படி அட்ஜஸ்ட் பண்றது?’ என்று சலித்துக்கொண்ட கடைக்காரர், 'கேரன்ட்டியா சொல்ல முடியாது... எதுக்கும் ஒருமணிக்கு வந்து பாருங்க’ என்றார். லோன் வாங்குவதை விடவும் துணி வாங்குவதைவிடவும் மத்தியானம் சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்பதாக என்னுடைய கவலை அப்போது மாறிவிட்டிருந்தது. காலை ஆகாரத்தை வரும் வழியில் தருமபுரியில் முடித்துக் கொண்டுதான் வந்திருந்தோம் என்றாலும் எனக்கு அப்போதே பசிப்பதுபோல் இருந்தது.  

முன்கூட்டியே சொன்னால்கூடக் கூடுதலாக இரண்டுபேருக்குச் சாப்பாடு கொடுக்க உத்திரவாதம் சொல்லமுடியாத ஒரு கீத்துக்கொட்டாய் சோத்துக்கடை இருந்த அந்த தாலுகா ஆபீஸ் வளாகத்தைச் சுற்றி மட்டுமே இன்றைக்கு சின்னதும் பெரியதுமாக 20-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை பரபரவென இயங்குகின்றன. ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உண்ணும் அளவுக்கான கௌரிசங்கர், மீனாட்சிபவன், ஜனனி, அறுசுவை போன்ற பெரிய ஹோட்டல்களை இன்றைக்கு நகரத்தின் பல பகுதிகளிலும் காணமுடிகிறது. மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றும்கூட வந்துவிட்டது. பிக் சிக்கன், மெக்டோனால்ட் மாதிரியான பன்னாட்டு ஓட்டல்களின் கிளைகளும்கூட இப்பகுதிக்கு வந்துவிட்டன. ஆனால், மழைமோடத்து இருளுக்குள் மங்கித்தெரிந்த ஊரில், அந்த இருளின் ஒருபகுதிபோல என் மனதில் பதிந்துவிட்ட அந்த கீத்துக்கொட்டகை சோத்துக்கடையின் சித்திரம் மட்டும் 32 வருடங்களுக்குப் பிறகும் இன்னும் அன்று பார்த்தக் கண்ணுக்கு அழிவில்லாமல் அப்படியே உருக்குலையாமல் இருக்கிறது. கூரையில் இருந்து ஒழுகி இலையில் விழுந்த மழைநீரையும் சேர்த்துப் பிசைந்து உண்ட அந்தக் கணத்தில், ஒருவேளை அந்த சோத்துக்கடையை நான் எங்களது கொட்டாயாகவே உள்வாங்கி இருக்கக்கூடும். 
                                                                                                                                                                                                                                           பகிர்வேன்...                                                                                                                                           நன்றி: http://en.vikatan.com

2 கருத்துகள்:

  1. சோர்வில்லாத அழகிய நடை.. அற்புதமான சிறுகதையைப் படிப்பதைப்போன்ற உணர்வைக்கொடுக்கிறது உங்களின் இந்த அனுபவம். சங்கடமாகவும் அதேவேளையில் நகைச்சுவையாகவும் நகர்கிறது.. சில இடங்களில் வாய்விட்டே சிரித்துவிட்டேன். சோகத்தைக்கூட சுவார்ஸ்யமாகச் சொல்லக்கூடியவர் நீங்கள். தொடருங்கள் சார்.. ஆர்வமுடன் விஜி.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமாக இருக்கிறது... தொடர்கிறேன்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_26.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...