குறுக்குசால்: பலகாரக்கடை விளம்பரமும் ‘ஆகச்சிறந்த இந்தியர்’ அம்பேத்கரும் - ஆதவன் தீட்சண்யாசிஎன்என்-ஐபிஎன் மற்றும் ஹிஸ்டரி தொலைக்காட்சிகள் அவுட்லுக் இதழுடன் இணைந்து நடத்திய வாக்கெடுப்பில் ‘‘ஆகச் சிறந்த இந்தியராக’’  அண்ணல் அம்பேத்கர் தேர்வாகியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் வந்த வண்ணமுள்ளன. அம்பேத்கர் மிகச்சிறந்த இந்தியர் என்பதில் எனக்கு எப்போதும் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால் அம்பேத்கரை இத்துனூண்டு சிலையாகக்கூட சகித்துக் கொள்ளாதவர்கள் மலிந்து கிடக்கும்  இந்த நாட்டில் லட்சக்கணக்கானவர்கள் வாக்களித்து அவரை ஆகச்சிறந்த இந்தியரென தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்கிற செய்தியைத்தான் என்னால் நம்பவே முடியவில்லை. அந்தளவிற்கு பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் சாதி கடந்தவர்களாகவும் இந்தியர்கள் மாறிவிடுவதற்கு ஒரு முகாந்திரமும் இல்லாதபோது இதெல்லாம் எப்படி சாத்தியம்? ஒருவேளை, அப்படியான மாற்றம் இந்தியர்களுக்குள் நிகழ்ந்திருந்து அதைக்கண்ணுற்று வரவேற்கும் பக்குவம் எனக்குத்தான் இல்லாமல் போய்விட்டதோ?‘தற்போது இந்தியாவில் இந்து மக்களால் பெரிதும் வெறுக்கப்படும் நபர் நான்தான். நான் துரோகியென்றும், இந்துக்களின் பகைவன் என்றும் பழிக்கப்படுகிறேன். மேலும் இந்து சமயத்தை அழிக்க வந்தவனென்றும் இந்திய நாட்டின் மாபெரும் பகைவனென்றும் தூற்றப்படுகிறேன்...’’ (அ.நூ.தொ.37, பக்-105) என்கிற அம்பேத்கரின் கூற்றை இந்தியர்கள் பொய்ப்பித்துவிட்டார்களா? என்னதான் நடந்துகொண்டிருக்கிறது இந்த நாட்டில்?

இதுவரைக்கும் பிறந்த / இறந்த இந்தியர்கள் எல்லோரிலுமிருந்து யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சிறந்த இந்தியர் என்று இந்த வாக்கெடுப்பில் முன்மொழிந்துவிட முடியாது. தலைமைத்துவம், மதிநுட்பம், கருணை ஆகிய நற்பண்புகளினால் சிறப்பெய்தி அறுபத்தைந்தாண்டுகால சுதந்திர இந்தியாவின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களிலிருந்து 100 பேரை சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட குழு முதற்கட்டமாக தெரிவுசெய்தது. இந்த 100 பேரையும் முன்மொழிவதற்கு கைக்கொண்ட அளவுகோல்தான் என்ன? அப்படியொரு புண்ணாக்கோ புளியோதரையோ இதில் இருந்த மாதிரி தெரியவில்லை.ஒருவேளை இந்தக்குழுவினர் ஏதேனுமொரு அளவுகோலை கைக்கொண்டிருப்பதாக சொல்வதாயிருந்தால், அது தப்பித்தவறி இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த எவரொருவரது பெயரும் பட்டியலில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டதைத் தான் சுட்டிக்காட்டமுடியும். போகட்டும், அந்த 100 பேரிலிருந்து 50 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை இறுதிப்படுத்தியது 28 பேரடங்கிய நடுவர்குழு.  இந்த 50 பேரிலிருந்து ஒருவரைத்தான்  ‘‘மிகச்சிறந்த இந்தியராக’’ தேர்ந்தெடுக்குமாறு நாமெல்லோரும் கேட்டுக்கொள்ளப்பட்டோம் என்பதை நினைவில் வையுங்கள்.

முன்மொழியப்பட்ட 50 பேர் கொண்ட பட்டியல் அடுத்தடுத்த சுற்றுகளில் 10 பேர் என்று இறுதிப்படுத்தப்பட்டு அந்த 10 பேரில் ஒவ்வொரு பெயருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு ஒரு ‘மிஸ்டுகால்’ கொடுத்தால் அது அந்தந்த பெயருக்கான வாக்காக கணக்கிலேறும். எனவே அம்பேத்கருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 08082891017 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து அவரை முதன்மைப்படுத்துங்கள், குறிப்பிட்ட இணைய தளத்திற்கு நேரடியாக சென்று அம்பேத்கருக்கு வாக்களியுங்கள் என்கிற குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் போட்டி அறிவிக்கப் பட்டிருந்த நாளிலிருந்தே வரத்தொடங்கின. அம்பேத்கருக்கு வாக்கு கோரிய இந்த வேண்டுகோள்களையும் நினைவூட்டல் களையும் அனுப்பியவர்களில் மிகப்பெரும்பான்மையோர் தலித்துகள்தான் என்று விளங்கிக் கொள்வதற்கு தனியான ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. (எஞ்சியவர்கள் பெரியாரிய, இடதுசாரிய இயக்கத்தவர்கள். தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவின் பிறமாநிலங்களில் இதுவும் சாத்தியமில்லை)

செல்போன், இணையப்பரிச்சயம் கொண்டிருக்கின்ற தலித் மத்தியதர வர்க்கத்தவர் இந்த வாக்கெடுப்பு முறைகளையெல்லாம் சரிவரப் பயின்று இந்த எண்ணிக்கை விளையாட்டை ஆடிப்பார்த்துவிடுவது என்று களமிறங்கினார்கள். யாரோ எதற்கோ தொடங்கிய ஆட்டத்திற்குள் நுழைந்த இவர்கள் அம்பேத்கரை ஒரு வெற்றியாளராக கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் ஒரு இயக்கம்போலவே தொடக்கம் முதலே செயல் பட்டார்கள், அவ்வாறே வெற்றி பெறவும் வைத்துவிட்டார்கள். இவர்களது முன்முயற்சியினால்தான் 19 லட்சத்து 91 ஆயிரத்து 734 வாக்குகளை அம்பேத்கர் பெற்று முதல்நிலையடைந்தார். தலித்துகளிடையே தேவையான முனைப்பும் சரியான ஒருங்கிணைப்பும் அணிதிரட்டலும் இருந்தால் எத்தகைய மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதற்கான சமகால உதாரணம் தான் இந்த வாக்கெடுப்பில் அம்பேத்கர் பெற்ற வெற்றி. அதே வேளையில் அம்பேத்கருக்கு வாக்கு கேட்பதில்லை என்பதில் மிகத்தெளிவாயிருந்த தலித்தல்லாதவர்கள், யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழம்பிப்போய் சிதறடித்துக்கொண்டதும்கூட இந்த வெற்றியை எளிதாக்கியது எனலாம். வாக்களிக்கப்பட்ட விதத்தை மேலோட்டமாகப் பார்த்தாலேகூட இந்த உண்மை எளிதில் விளங்கிவிடும். நேரடி வாக்களிப்பில் அணிதிரட்டப்பட்ட தலித் வாக்காளர்கள் மிஸ்டுகால் மற்றும் இணையதளம் மூலம் அம்பேத்கரை முன்னணிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் போட்டி ஏற்பாட்டாளர்களின் சார்பில் ஏ.சி.நீல்சன் என்ற அமைப்பு 15 நகரங்களில் நடத்திய மாதிரி கருத்துக்கணிப்பில் அம்பேத்கர் ஆறாவது இடத்திற்குத்தான் வந்திருக்கிறார். நடுவர்குழுவும்கூட அவருக்கு இரண்டாம் இடத்தைத்தான் வழங்கியிருந்தது. இதுதான் உண்மையான களநிலவரம் அல்லது இந்திய சாதிய மனதின் லட்சணம்.

எப்படியுமிருக்கட்டும், ஆகச்சிறந்த இந்தியராக அம்பேத்கர் வெற்றி பெற்றது மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்குமுரியதுதானே என்று கேட்கப்படுகிறது. போட்டியே தப்பானதாய் இருக்கும்போது அதில் பங்கெடுத்ததோ வெற்றி பெற்றதோ எப்படி சரியாய் இருக்கமுடியும்? என்று கேட்டால் எல்லாத்தையும் குதர்க்கமாகப் பார்த்து குறுக்குசால் ஓட்டுறவங்க இதுல மட்டும் ஏதாச்சும் குத்தம் குறை காணாம இருப்பீங்களா என்று எதிர்க்கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில் குற்றங்குறை  இந்தப்போட்டியின் தலைப்பில்தான் இருக்கிறது. ‘‘சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட பலகாரம்’’ என்பதை கொட்டை எழுத்திலும் ‘‘அல்ல’’ என்பதை பொடியாகவும் எழுதிவைத்து ஏமாற்றுகிற வியாபார உத்திதான் இந்த வாக்கெடுப்பிலும் கையாளப்பட்டிருக்கிறது. ‘‘மகாத்மா காந்திக்குப் பிறகு ஆகச்சிறந்த இந்தியர் யார்?’’ என்பதுதான் இந்தப் போட்டியின் முழுத்தலைப்பு. இப்படியொரு கேள்வியை எழுப்பி அந்தப் பட்டியலில் அம்பேத்கர் பெயரையும் இடம்பெற வைத்ததையே அவரை அவமதிக்கும் செயல் என்று  கண்டனம் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் ‘‘ஆகச்சிறந்த இந்தியர் யார்?’’ என்கிற போட்டிக்கான கேள்வியின் பிற்பகுதியையும், முன்மொழிவுப் பட்டியலில் அம்பேத்கர் பெயரையும் கண்ட மாத்திரத்தில் அவருக்கு வாக்கு சேகரிக்க களமிறங்கிவிட்ட நமது அம்பேத்கர் அன்பர்கள் கேள்வியின் முற்பகுதியையோ அதிலுள்ள அரசியலையோ கவனிக்கத் தவறிவிட்டனர்.

முதலில், இப்படியொரு வாக்கெடுப்பை இப்போது நடத்தவேண்டியதன் தேவை என்ன? பார்வையாளர்கள் மற்றும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஊடகங்கள் அவ்வப்போது கிளப்பிவிடும் பரபரப்புகளில் ஒன்றுதான் என்றுமட்டுமே இந்த வாக்கெடுப்பை சொல்லிவிடமுடியுமா? ஊடகக் குழுமங்களைப் பீடித்திருக்கும் சாதியாதிக்க, வலதுசாரிய கருத்தோட்டங்களையும் நலன்களையும் மீறி இந்த வாக்கெடுப்பு நடந்துவிடுமா? இந்த நடுவர் குழு எந்தளவிற்கு நடுநிலையானது? கடந்த பத்தாயிரம் வருடங்களில் இந்த உலகத்தின் மீது செல்வாக்கு செலுத்திய ( தி மேக்கர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்) 100 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்ததாகவும் அதில் புத்தர் முதலிடத்தையும் அம்பேத்கர் நான்காவது இடத்தையும் பெற்றிருப்பதாகவும் ஒரு செய்தி இணையதளங்களில் உலவுகிறதே, அந்தச் செய்தி இங்கு என்ன விளைவுகளை உருவாக்கிவிட்டது? அம்பேத்கரைப் பற்றிய சாதியவாதிகளின் மனநிலையில் ஏதேனும் சிறுமாற்றத்தையாவது அது ஏற்படுத்தியதா? அப்படி எதுவும் நடக்கவில்லையென்றால் இந்த வாக்கெடுப்பு மட்டும் எதை சாதித்துவிடப் போகிறது? - இப்படியான கேள்விகள் எழுப்பப்படவேயில்லை.

பந்தயத்தில் பங்கெடுக்காத ஒருவரை முதற்பரிசக்குரியவராக அறிவித்துவிட்டு அடுத்தடுத்த இடங்களுக்குரியவரைத் தேர்ந்தெடுக்க போட்டி நடத்தும் வினோதத்தை என்னவென்று சொல்வது? போட்டியிலிருந்து காந்தியை விலக்கிவைத்து எல்லோருக்கும் மேலானவராக அவரை நிறுத்துவதன் பின்னுள்ள அரசியலை எதிர்க்காமல் இந்த வாக்கெடுப்பில் ஆர்வமுடன் பங்கெடுத்ததன் மூலம் அம்பேத்கரை காந்திக்கு கீழ்ப்படுத்திப் பார்க்கும் வக்கிரத்திற்கு அம்பேத்கரின் ஆதரவாளர்களே துணை போனது வருத்தத்தையே தருகிறது. ஆகச்சிறந்த இந்தியர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதாக கூறிக்கொண்டு, காந்திக்கு வழங்கப்பட்டுள்ள இடம் கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதை  நிறுவுவதற்குத்தான் இந்த வாக்கெடுப்பு உண்மையில் பயன்பட்டிருக்கிறது. 

காந்தியையும் ஏன் ஒரு போட்டியாளராக சேர்க்கவில்லை என்கிற கேள்விக்கு, ஆகச்சிறந்த கிறிஸ்தவர் யார் என்கிற போட்டியில் ஏசுவையும் சேர்ப்பது எந்தளவுக்கு அபத்தமோ அந்தளவிற்கு அபத்தமானது ஆகச்சிறந்த இந்தியர் யார் என்கிற போட்டியில் காந்தியின் பெயரையும் சேர்ப்பது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள பதில் எவ்வளவு ஆணவமானது? ஏசுவிலிருந்த கிறிஸ்தவம் உருவானதைப்போல காந்தியிலிருந்துதான் இந்தியா உருவானது என்பது எவ்வளவு மோசடியான கூற்று? ஒருவேளை காந்தியிலிருந்துதான் இந்தியா உருவானதென்றால் அது அம்பேத்கர் சொன்னதைப்போல தீண்டத்தக்கவர்களின் இந்தியாவாக வேண்டுமானால் இருக்கலாமேயன்றி தீண்டத் தகாதவர்களின் இந்தியாவாக இருக்கமுடியாது. தீண்டத் தகாதவர்களின் இந்தியா என்பதை ஒரு இணைத்தேசியமாக கொண்டால் அதன் ஒப்பில்லாத்தலைவர் அம்பேத்கர்தான். அவரை காந்திக்கு கீழ்ப்படுத்துவதை எப்படி ஏற்கமுடியும்? அம்பேத்கர் அடைந்திருக்கும் உயரம், காந்தியின் தோள்மீது ஏறிப்பெற்ற இரவல் அல்ல. மாறாக காந்தியைப்போன்ற பழமைவாதிகளை எதிர்த்து அங்குலம் அங்குலமாக போராடி அடைந்தது. சுயஉழைப்பிலும் சுயஅறிவிலும் சுயவலுவிலும் உருவான அம்பேத்கர் என்ற ஆளுமையை கொண்டாடுவதைப்போல சிறுமைப்படுத்தும் இழிமுயற்சிதான் இந்த வாக்கெடுப்பு என்பதை சற்றே நுண்ணுணர்வும் கூருணர்ச்சியும் கொண்டிருந்தால்கூட புரிந்துகொள்ளமுடியும்தானே?

அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை காந்தியின் மீது ஒரு சமகாலத்தலைவர் என்கிற முறையில் மரியாதை வைத்திருந்தாரேயன்றி அவருக்கு கீழாக தன்னை ஒருபோதும் தாழ்த்திக்கொண்டவரில்லை. ‘‘நாட்டின் நலனே எப்போதும் என் இதயத்தில் குடிகொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் நலன்களைப் பொறுத்த வரையில் நான் மகத்தான காந்திக்கு 200 மைல் முன்னதாக இருக்கிறேன்...’’ என்பார் அம்பேத்கர் ( டைம்ஸ் ஆஃப் இந்தியா, 2.6.1952, அ.தொ.நூ-37 பக்- 588). உண்மையும் அதுதான்.

காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான வேறுபாடு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்ததல்ல. அரசியலில் தனக்கு கிடைத்திருக்கும் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டு இந்தியச் சமூகத்தை பழமைக்குள் வீழ்த்திவிட முடியுமா என்று காந்தி எடுத்த பெரும் முயற்சிகளை நேருக்குநேர் எதிர்கொண்டு முறியடிக்கும் வரலாற்றுக்கடமை தன் தோளுக்கே வந்ததுபோல் அதை மிகுந்த நெஞ்சுரத்தோடு ஏற்றுக்கொண்டு போராடியவர் அம்பேத்கர். வேறெவரை விடவும் தீண்டப்படாதவர்கள்தான் காந்தியத்தால் கடுமையாக பாதிக்கப்படப் போகிறவர்கள்  என்பதை மிகச்சரியாக கணித்தே அவர் காந்தியத்தின்மீது தனது வலுவான தாக்குதலைத் தொடுத்தார். தீண்டப்படாதவர்களின் தலைக்கு மேலே தொங்கும் வாள் என்று அவர் காந்தியத்தை வர்ணித்ததும் இந்த உள்ளுணர்விலிருந்துதான். 

தனிமனித மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் அளப்பரிய ஆற்றல்களை சாதியத்திற்குள்ளும் வர்ணாசிரமத்திற்குள்ளும் புதைத்துவிடுவதற்கான குப்பைகள் காந்தியம் என்ற முத்திரையோடு களமிறக்கப்பட்டபோது அதனை அம்பலப்படுத்தி அம்பேத்கர் எழுப்பிய மேதமைமிக்க கேள்விகள் இன்னும் எதிர்கொள்ளப்படாமல்தான் இருக்கின்றன. செல்வாக்கானவர்களை விமர்சிப்பதனால் ஏற்படும் சங்கடங்களையும் இழப்புகளையும் தவிர்ப்பதற்காக பலரும் மௌனம் சாதிப்பதே இன்றளவும் உள்ள நடைமுறை. ஆனால் நவஜீவன், யங் இந்தியா இதழ்களிலும் வர்ண வியவஸ்தை என்கிற நூலிலும் காந்தி முன்வைத்த சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு சார்ந்த கருத்துகளை தீர ஆய்ந்த அம்பேத்கர், ‘காந்தியம் எவ்வகையிலும் ஒரு புரட்சிகரமான சித்தாந்தமல்ல. அது உள்ளடக்கத்தில் பழமை பேணும் சித்தாந்தம். இந்தியாவைப் பொறுத்தவரையில், தொல்பழமைக்குத் திரும்புவோம் என்ற கோஷத்தை தனது பதாகையில் பொறித்துக்கொண்டுள்ள ஒரு பிற்போக்கு சித்தாந்தமேயாகும். இந்தியாவின் செத்துப்போன கடந்தகாலத்தை உயிர்ப்பிப்பதே, அதற்குப் புத்துயிரூட்டுவதே காந்தியத்தின் குறிக்கோள்...’ (அ.தொ.நூ.16, பக்-467) என்று அறிவித்தார். ஒடுக்குமுறை அடிமைத்தனம் சுரண்டல் ஆகிய இழிநிலைகளை வேறுவடிவில் சுமத்த முயலும் காந்தியத்திலிருந்து விடுவித்து ‘சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்’ என்கிற இலக்கை நோக்கி இந்தியச் சமுதாயத்தை உந்தித்தள்ளி அதை ஒரு சமகாலத் தன்மையுடையதாக நவீனப்படுத்திவிட வேண்டும் என்கிற  முனைப்பில் தனது அறிவு ஆற்றல் உழைப்பு அனைத்தையும் அர்ப்பணித்தவர் என்ற வகையில்தான் அம்பேத்கர் காந்தியிடமிருந்து வேறுபடுகிறார். வேறுபடுவதற்கான இந்த அடிப்படைதான் வட்டமேசை மாநாடு தொடங்கி தேசப்பிரிவினை வரை இருவரையும் எதிரெதிர் நிலைகளுக்கு கொண்டு சென்றது. இந்த வேறுபடும் அம்சங்களின் சாராம்சம்தான் காந்தியின் ராமராஜ்ஜியத்திற்கும் அம்பேத்கரின் பீமராஜ்ஜியத்திற்கும் இடையிலான வேறுபாடாக போராட்டமாக இன்றளவும் தொடர்கிறது. பழமைவாதச் சிந்தைனைகளில் ஊறி நொதித்த காந்தி என்கிற தனிநபரின் விருப்பு வெறுப்புகளும் அம்பேத்கர் என்கிற உருவகத்தின் வழியே இயங்கிவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டு மனநிலையும் ஒன்றுக்கொன்று இணக்கம் காணமுடியாத முரண்களைக் கொண்டவை.

சரி, (காந்திக்குப் பிறகான என்பதில் சமரசம் செய்துகொண்டு) அம்பேத்கரை ஆகச்சிறந்த இந்தியராக தேர்ந்தெடுத்துவிட்ட இந்த ஊடகக்காரர்கள் அடுத்து என்ன செய்துவிடப்போகிறார்கள்? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அம்பேத்கர்மீது சமகாலத்தின் கவனத்தை குவித்து சாதியொழிந்த சமூகம் ஒன்றிற்காக அறைகூவல் விடுக்கப்போகிறார்களா? அம்பேத்கர் சிந்தனைகளை தினமும் அருளுரை போல முழங்கப் போகிறார்களா? அல்லது அவர் காட்டிய வழியில் சமூகத்தை மறுகட்டுமானம் செய்யுமாறு ஆளும் வர்க்கத்தை நெட்டித் தள்ளப் போகிறார்களா? இந்தப்போட்டியின் மூலம் புதிய பகுதியிலிருந்து கிடைத்திருக்கும் பார்வையாளர்களையும் வாசகர்களையும் தமது கருத்தியல் செல்வாக்கு மண்டலத்திற்குள் இழுத்துப்போட்டு மொக்கைகளாக்கும் வேலை தான் கனஜோராக நடக்கப்போகிறது. அம்பேத்கரியத்திற்கு எதிராக ஒவ்வொரு நொடியிலும் தமது ஊடகங்களை நடத்தும் இவர்கள் அம்பேத்கரை மட்டும் கொண்டாடுவதன் பின்னேயுள்ள அரசியலை அம்பலப்படுத்துவதும் நமது பணிகளில் ஒன்றாக முன்வந்துள்ளது. சுதந்திரம் சமத்துவம் ஜனநாயகம் என்பவை வறட்டு முழக்கமாக அல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியல்பாக கரைந்திழையும் வரையிலான போராட்டத்தை சமரசமின்றி முன்னெடுப்பதன் மூலம்தான் அம்பேத்கர் மேலும் மேலும் பொருத்தப்பாடுடையவராக திகழ்கிறார் என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்தமுடியும். அதுவன்றி இப்படி யாரோ எதற்கோ நடத்துகிற வாக்கெடுப்புகளில் குறுக்கிட்டு அம்பேத்கரை முதல்நிலைக்கு கொண்டு வந்துவிட்டு,  ஏதோ நாடே அவர் பின்னால் அணிதிரண்டுவிட்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.

எதிரி நம்மை கொண்டாடும்போது எச்சரிக்கையடைய வேண்டியிருக்கிறது. எந்த இடத்திலாவது சமரசம் செய்து கொண்டோமா, சறுக்கிவிட்டோமா என்று சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பாக அதைக் கருத வேண்டியுள்ளது. படிநிலை ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட- அதை நிலைநிறுத்தத் துடிக்கிற இந்தச் சமூகத்தில் சொற்களை, நிகழ்வுகளை, ஆளுமைகளை விமர்சனக்கண் கொண்டு பார்ப்பதும் அதன் வழிகாட்டுதலில் இயங்குவதையும் தவிர நமது இருப்பை  உணர்த்த வேறென்னதான் வழியிருக்கிறது?

நன்றி: அணையா வெண்மணி, செப்டம்பர்'2012


2 கருத்துகள்:

  1. 1)ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்று கார்ல் மார்க்ஸை தேர்ந்தெடுத்தது டைம்ஸ் பத்திரிக்கை. அதாவது தனியார்மயம் தாராளமயம் ஆகியவற்றை உலகமயம் ஆக்கிய பின்னர் ஒரு பத்து வருடங்கள் கழிந்த பின்னர் மார்க்ஸை அவ்வாறு கொண்டாடினார்களாம்! இது கண்டு இடதுசாரிகளும் கூட ‘பார்த்தீங்களா!’ என கொண்டாடினார்கள். முதலாளித்துவ தத்துவ அரசியலின் ஊதுகுழலாளியான ரூபர்ட் மூர்டோக் நடத்தும் பத்திரிக்கையான டைம்ஸ், மார்க்ஸை தேர்ந்தெடுத்ததன் மூலம் அதன் பத்திரிக்கை கொள்கையில் என்ன மாற்றம் வந்து விட்டது? அல்லது இந்த உலக அரசியல் தலைவர்கள் வெள்ளைமாளிகை முன் ஒன்று கூடி ’முதலாளித்துவத்தை முற்றோடு ஒழிப்போம்’ என்று சபதம்தான் செய்துவிட்டார்களா? மாறாக முன்னிலும் அதிகமாக முதலாளித்துவ அரசியலின் லாபவெறியும் நாடுபிடிக்கும் வெறியும் மூன்றாம் உலக நாடுகளை அடக்கி ஒடுக்கும் உலகமயக்கொள்கையின் வீச்சும் பல மடங்கு வேகம் அதிகரித்ததை மட்டுமே கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
    2) அம்பேத்கர் அவர்களை ஒடுக்கப்பட்ட கீழ்சாதி இந்திய மக்களின் தலைவராக ஒடுக்கப்பட்ட கீழ்சாதி இந்தியர்களும், அவரது கொள்கைகளை விமர்சனத்துடன் பார்க்கும் இடதுசாரிகளும் மட்டுமேதான் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையும், இந்தியாவுக்குள்ளேயே அவர் இப்போதும் ஒரு தேசியத்தலைவராக அதே இந்து மதத்தில் இருக்கின்ற பார்ப்பனர் அல்லாத-தலித் அல்லாத பிற சாதி இந்துக்களும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது. இந்து மதத்திலேயே இருக்கின்ற கீழ்சாதி மக்களைத் தவிர்த்த பிற சாதியினரும் மேல்சாதி பார்ப்பனரும் அவரை தம் தலைவராகவோ தத்துவவதியாகவோ ஏற்றுக்கொள்ளாதபோது சிஎன்என்-ஐபிஎன் மற்றும் ஹிஸ்டரி தொலைக்காட்சிகள் அவுட்லுக் இதழுடன் இணைந்து நடத்திய வாக்கெடுப்பில் காந்தியத்தவிர ஆகச்சிறந்த மனிதராக அம்பேத்கரை தேர்ந்தெடுத்தால்தான் என்ன தேர்ந்தெடுக்காமல் போனால்தான் என்ன? பெரிதாக இந்திய சமூக அரசியலின் ஒரே நாள் ராத்திரியில் என்ன மாற்றம் வந்துவிடப்போகின்றது? முன்பு காந்தியையும் பின்னர் நேரு குடும்பத்தையும் இப்போது உலகமய அரசியலையும் வைத்து பிழைப்பு நடத்தும் முதலாளித்துவ மற்றும் மென்மையான மேல்சாதி இந்துத்துவா அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சிக்குள்ளோ, அப்பட்டமாக மேல்சாதி வருணாசிரம, பிற மத வெறுப்பு அரசியலை மேல்பூச்சாக வைத்துக்கொண்டு உலகமய தனியார்மய கொள்ளை கொலை அரசியல் நடத்தும் ஆர் எஸ் எஸ்+பிஜேபி பரிவாரத்துக்குள்ளேயோ, தாழ்த்தப்பட்ட கீழ்சாதி மக்களுக்காக அரசியல் பண்ணுகின்றோம் என்ற பேரில் அடையாள அரசியல் நடத்தும் (ஆட்சியிலும் இருந்த) பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்குள்ளோ, அல்லது ஆட்சியை பிடிக்கும் நோக்கத்துடன் அல்லது ஆட்சியைப்பிடிக்கும் சாத்தியமுள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளும் ஒற்றை நோக்கத்துடன் ’தலித் மக்களுக்காக’ ’நடத்தப்படும்’ அரசியல் கட்சிகளுக்குள்ளோ இந்த அம்பேத்கர் தேர்ந்தெடுப்பு என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது? எனக்குத்தெரிந்து நான் குறிப்பிடும் இந்த வரிசையில் உள்ள ‘தலித் இயக்கங்கள்’ வீதிகளில் இதுபற்றி ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைத்ததை தவிர வேறு பெரிதாக பொதுவில் இது பற்றி யார் பேசினார்கள்? அல்லது இந்த ஃப்ளெக்ஸ் போர்டுகளை கண்ணுற்ற தலித் அல்லாத பிராமணர் அல்லாத பிறசாதி இந்துக்கள் கூட (பிராமணர்களைப் போலவே எரிச்சல் அடைந்ததைத்தவிர) என்ன மாதிரியான மனமாற்றத்துக்கு உள்ளானார்கள் என்ற கேள்விகளெல்லாம் பதில் எதிர்பார்த்து நிற்கின்றன.
    3)தலித் மக்களுக்கான இயக்கங்களும் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கான இடதுசாரி இயக்கங்களும் அம்பேத்கரையும் அவரது பணிகளையும் எந்த அளவுக்கு உள்வாங்கி உள்ளன என்ற கேள்வியும், வலதுசாரி இந்துத்துவா அடிப்படை தீவிரவாதம் வளர்ந்து வரும் சூழலில் அவரது எழுத்துக்களின் அவசியத்தை எந்த அளவுக்கு நாம் உணர்ந்துள்ளோம் என்ற கேள்வியும் உள்ளது...இக்பால்

    பதிலளிநீக்கு
  2. வேறு கோணத்தில் என் கண்ணை திருப்பியமைக்கு நன்றி.இந்த பதிவின் இணைப்பை மட்டும் என் பதிவாக் வெளியிட்டிருக்கிறேன்.இல்லாதவன் எடுத்துக்கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.

    பதிலளிநீக்கு