ஒரு ஆசுவாசத்திற்காக
முகப்புத்தகத்தில் இணைய விரும்பிய கடவுள்
பாதுகாப்பு காரணங்களை
முன்னிட்டு
ஃபேக் ஐ.டி. ஒன்றினால் கணக்கைத்
தொடங்கி
உள்நுழைந்த கணத்திலேயே
கடவுள் என்ற பெயரில் அங்கே
அனேகர் உலவக்கண்டார்
வம்புதும்பு எதிலும்
சிக்க விரும்பாத கடவுள்
முதலில் தயாரிக்க விரும்பியதென்னவோ
நண்பர்களாக இருக்கக்கூடாதவர்
பட்டியலைத்தான்
வாழ்நாளெல்லாம் தன்னை இம்சிக்கும் பக்தர்கள்
தானும் கடவுளே எனும்
மாயைக்குள் மிதக்கும்
படைப்பாளிகள்
தன்னைவிட்டால் யார் என்கிற அகங்காரிகள்
வருஷம்பூராவும் வாதித்துக்கொண்டே
இருப்பவர்கள்
வருஷத்துக்கொரு முறைகூட
வாயே திறக்காதவர்கள்
செல்போனை நோண்டிக்கொண்டேயிருப்பவர்கள்
24 X 7 லைக் போடுகிறவர்கள்
அமைச்சர்களின்
அதிகாரப்பூர்வ மற்றும்
கணக்கில் வராத மகன்கள்
ஆள்வோரின் கால்சுற்றும்
செல்லப்பிராணிகள்
ஆண்டெனா போல் ஆண்குறி சூடியவர்கள்
ஓயாத உபதேசிகள்
ஒண்ணுக்கிருப்பதையும் நிலைத்தகவலாக்கும் ஓட்டைவாயர்கள்
கருத்துக்கண்ணற்றோர்- என்று
கழித்து கழித்து கடைசியாய் மிஞ்சிய
சாத்தானும் அவரும்
இப்போது நண்பர்கள்.
நன்றி: ஆனந்தவிகடன், 23.1.13
ஃபேக் ஐடியில் உள்ளே நுழைந்த கடவுளின் கணக்கு ஹேக் செய்யப்படுமா?. அப்புறம் அரசுக்கு எதிராக கமெண்ட் போட்டாலோ அல்லது அப்படி போடப்பட்ட கமெண்டுகளை லைக் செய்தாலோ அவரை(கடவுள் எனப்படுபவர்) கைது செய்ய முடியுமா?
பதிலளிநீக்குசூப்பர்.
பதிலளிநீக்கு