ரயிலை விட்டிறங்காத போலிஸ் - ஆதவன் தீட்சண்யா

குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பது இளவரசனின் உடல்தான் என்றாலும் விரைத்துக்கிடப்பதென்னவோ போலிஸ் உள்ளிட்ட தருமபுரி மாவட்ட அரசு நிர்வாகம்தான். இளவரசனின் மரணத்தைச் சுற்றி படர்ந்திருக்கும் மர்மங்களை விலக்குவதில் சிறு முன்னேற்றத்தையும் எட்டாமல் நாலாம் தேதி எந்த இடத்தில் நின்றதோ அங்கேயே அது நின்று கொண்டிருக்கிறது. சடலம் கிடந்த நிலையை வைத்து இப்படி ஒரு தற்கொலை சாத்தியமா என்கிற குறைந்தபட்ச சந்தேகத்தைக்கூட எழுப்பிக் கொள்ளாமல்  இன்றுவரை திரும்பத்திரும்ப அது ‘தற்கொலை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது.

விசாரணை விசயத்தில் விரைத்துக்கிடக்கிற இந்த நிர்வாகம், பிரச்னையையும் வழக்கையும் திசைதிருப்புவதில் அளவுக்கதிமான வேகத்தில் செயல்படுகிறது.  இளவரசன் எழுதிய கடிதம் என்கிற ஒன்று கைக்கு கிடைத்திருக்கிறதென்றால் தடயவியல் சோதனையின் மூலம் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு முடிவுகளை அறிவிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கமுடியும். அவ்வாறின்றி எடுத்தயெடுப்பில் ‘இந்தக் கடிதத்தின் மூலம் தற்கொலை தான் என்பது உறுதியாகிவிட்டது’ என அவசரஅவசரமாக அறிவித்தது. இப்போது அந்தக்கடிதம் உண்மையானது போன்ற தோற்றத்தோடு ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. அக்கடிதத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளிக்கும் பல்வேறு பதவுரைகளையும் பொழிப்புரைகளையும் எழுதி பரப்பும் வேலையை ஊடகங்களின் பொறுப்பில் விட்டுள்ளது நிர்வாகம். இளவரசனின் மரணத்தின் பேரில் மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை நீர்த்துப்போகச் செய்யவும், மனைவியைப் பிரிந்த சோகத்தில் நடந்த வழக்கமானதொரு தற்கொலைதான்’ என்று நிறுவுவதற்கும் அது இப்படியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

அன்றைய தேதியில் யாரும் ரயிலில் மோதி இறக்கவில்லை என்பதை ரயில்வேதுறை பலமுறை சொல்லிவிட்ட பின்னும்கூட இளவரசனின் மரணத்தை ரயிலோடு தொடர்புபடுத்துவதிலேயே நிர்வாகத்தின் எத்தனம் இருக்கிறது. ஒருவேளை ரயிலின் முன்பகுதியிலிருந்த ஓட்டுநர், கடைசியிலிருந்த கார்டு உட்பட எல்லோருடைய கண்ணையும் கட்டிவிட்டு ரயிலின் பக்கவாட்டில் மோதியிருந்தால், அடிபட்டுச் செத்தது இளவரசன்தான் என்று சொல்வதற்கும்கூட வழியற்ற வகையில் உடல் சிதறிப்போயிருக்கும் என்பதையும்கூட ரயில்வே அதிகாரிகள் தெளிவுபட கூறிவிட்டனர். ஆனாலுமென்ன, ரயிலை விட்டு கீழிறங்க மறுக்கிறது போலிஸ். ரயிலும் இல்லை தற்கொலையும் இல்லை என்கிற கருத்து பரலாக உள்ள நிலையில் போலிஸ் மட்டும் அதை ஏற்காமல் இருக்கிறது. தற்கொலை என்று நிறுவுவதில் போலிஸ் கொண்டிருக்கிற இந்த வறட்டுப் பிடிவாதத்தினால் மோப்பநாயை பயன்படுத்துவதுகூட தவிர்க்கப்பட்டுள்ளது.

இளவரசனின் மரணம் ரயிலைத் தவிர்த்த வேறுவகையிலான தற்கொலையாகவே இருந்துவிடும் பட்சத்திலும்கூட அதற்கான உளவியல் முற்றுகையை உருவாக்கிய பாட்டாளி மர்டரர் கட்சியினர் ஒருவர்கூட இதுவிசயமாக இன்னும் விசாரிக்கப்படாதது ஏன்? இளவரசனிடமிருந்து திவ்யாவை பிரித்தெடுப்பதில் மூர்க்கத்தனமான ஈடுபாடு கொண்டிருந்த பாட்டாளி மர்டரர் கட்சியினரை அவரது சாவுக்கு பொறுப்பாக்க வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு ஏன் உதாசீனம் செய்யப்படுகிறது? வன்னியர்கள் மட்டுமே குடியிருக்கும் ஒரு பகுதிக்கு - திவ்யாவின் பெரியம்மா வீட்டுக்கு வெகு அருகாமையில் உள்ள அந்தப்பகுதிக்கு- இளவரசன் ஏன் வந்தார் அல்லது வரவழைக்கப்பட்டார் என்கிற கேள்விகளும் பரவலாக எழுப்பப்படுகின்றன. இவற்றோடு கவனங்கொண்டு விசாரிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம்- இளவரசனின் கடைசிநாட்களில் அவரோடு செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் யார் யார் என்பதுதான்.

செல்போன் சேவை நிறுவனங்கள் சிம்கார்டு வழங்குவதில் கையாள வேண்டிய நெறிமுறைகள் இறுக்கப்பட்டுள்ள நிலையில் சிம்கார்டுக்குரியவர் யார் என்று கண்டுபிடிப்பது எளிதானதே. ஒருவேளை அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவைத்திருந்தால்கூட அப்போதும் அதிலிருந்து வெளியாகும் சமிக்ஞைகள் மூலமாக அவர் இருக்குமிடத்தை கண்டுபிடிக்குமளவுக்கு தொழில்நுட்ப சாத்தியங்கள் உள்ளன. எனவேதான் பொதுவாக இப்போதெல்லாம் செல்போன் தொடர்புகள் பற்றிய விவரங்களை முதலில் திரட்டிக்கொண்டு தான் எந்தவொரு குற்றத்தைப் பற்றிய புலன் விசாரணையையும் போலிஸ் தொடங்குகிறது. சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் தொடர்புகளைத் திரட்டுவதும், தொடர்ந்து கண்காணிப்பதும் குற்றவாளியை அல்லது குற்றம் நிகழ்ந்த பின்னணியை துரிதமாக நெருங்குவதற்கான சாத்தியங்களை அதிகரித்துள்ளன.

தருமபுரி பாரதிபுரத்தில் தனது அத்தை வீட்டிலிருந்த போது வந்த செல்போன் அழைப்பினைத் தொடர்ந்தே இளவரசன் வெளியே சென்றதாகவும், அதற்குப்பிறகே அவர்  பிணமாகியிருக்கிறார் என்றும் அவரது பெற்றோர்களும் உறவினர்களும் கூறிவருகின்றனர். இளவரசனின் தொடர்பெல்லைக்குள் இருந்தவர்களே அவரை பிணமாக்கியுள்ளனர் என்று அவர்கள் எழுப்பும் சந்தேகத்தை காவல்துறை பின்தொடர மறுக்கிறது. ஒருவேளை இளவரசன் பிணமாவதற்கு காரணமாணவர்களின் தொடர்பெல்லைக்குள் இப்போது காவல்துறை சிக்கியிருக்கிறதா..?

3 கருத்துகள்:

 1. முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //செல்போன் சேவை நிறுவனங்கள்...............................பின்னணியை துரிதமாக நெருங்குவதற்கான சாத்தியங்களை அதிகரித்துள்ளன//
   தாழ்த்தபட்டவர்க்ளுக்கு மறுக்கப்படும் அங்கீகாரங்களில் இவையெல்லாம் சேர்ந்துள்ளது.

   நீக்கு
 2. உலகின் இரண்டாவது சிறந்த காவல்துறை தமிழக காவல் துறை அல்லவா. அதனால் தான் இவ்வளவு சிறப்பாக கொலையை மறைக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு