ஞாயிறு, மே 25

நம்பிக்கையூட்டும் விதமாக எழுதப்பட்ட இரங்கற்பா - ஆதவன் தீட்சண்யா

நாம் கொலைகாரர்களின் காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம்
நாமாக நம்மை ஒப்புக்கொடுத்தும்
அவர்களாக நம்மை கைப்பற்றியும்
நாம் வந்து சேர்ந்திருக்கும் இந்த கொலைகாரர்களின் காலம்
திடுமெனத் தொடங்கிவிடவில்லை
எத்தனையோ நூற்றாண்டுகளில் இயல்பாக சாகவேண்டியவர்களை
ஏற்கனவே கொன்றுவிட்டுத்தான்
இன்றைய தேதிக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள்

கொலைகாரர்களின் காலம் தொடங்கிவிட்டபடியால்
எப்போதும் கொன்றுகொண்டேயிருப்பார்களென
அஞ்சியஞ்சி சாகவேண்டியதில்லை
அவர்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும் காலத்தில்
நாம் உயிரோடிருந்துவிட்டுப்போவதை ஆட்சேபிக்குமளவுக்கு
அப்படியொன்றும் அவர்கள் கொடூரர்களல்ல

கொலைகாரர்கள் என்பதற்காக
அவர்கள் எல்லோரையும் கொன்றுவிடுவதில்லை
தற்காத்துக்கொள்ளும் சுதாரிப்பின்றி
ரேஷன் கார்டுக்கும் தேசிய அடையாள அட்டைக்கும் விண்ணப்பித்து
நாமாக நமது பெயரை பகிரங்கப்படுத்திக்கொள்ளாதவரை
அவர்களாகவே நம்பெயரை
கொல்லப்படுகிறவர்களின் பட்டியலில் சேர்த்துவிடப்போவதில்லை
உயிர்வாழ்வதை
ஓர் உரிமையாகக் கோராத வரைக்கும்
எவரையும் கொல்லாத அவர்களது ஆளுகையில்
நிம்மதியாகத்தான் இருக்கப்போகின்றன பிணங்கள்

தைரியமாக இருங்கள்
கொல்லப்படுவோம் என்கிற அச்சத்தில் உறைந்துவிட்ட நம்மை
அவர்கள் இன்னொருமுறை கொல்லப்போவதேயில்லை
நம்மையும் கொன்றுவிட்டு
அவர்கள் யாரைத்தான் ஆளப்போகிறார்கள்? 
நம்பிக்கை இழக்காதீர்கள்
அவர்களது குடுமி நம் கையில் வசமாக சிக்கியிருக்கிறது
ஆமாம், ஆளப்படுவதற்காகவேனும்
அவர்களுக்குத் தேவைப்படுகிறோம் நாம்.


25.05.2014

4 கருத்துகள்:

  1. நல்ல ஒரு மனநல மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டுகிறேன் அன்பரே

    பதிலளிநீக்கு
  2. //நல்ல ஒரு மனநல மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டுகிறேன் அன்பரே//
    அனுபவம் பெற்றவர் அந்த நல்ல மனநல மருத்துவரையும் பரிந்துரைத்தால் உதவியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பர் சூனிய விகடன் அவர்களுக்கு
      உள்ளதை உள்ளபடி சொல்லி எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த சமூகத்தின் மீது சிந்தனையை தூண்டுபவர்களை பைத்தியகாரர்கள் என்று பட்டம் சூட்டியதால்தால் இந்த தேசத்தில் ஒன்னுக்கு இருக்கக் கூட 2 ரூபாய் கொடுக்கவேண்டிய கழிப்பறை வியாபார தேசமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வது ஆரோக்கியமான சிந்தனைக்கு வழிவகுக்கும்.

      நீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...