1984 - தொடர்ச்சி - எஸ்.வி. ராஜதுரை

கட்டுரையின் முதல் பகுதி : http://aadhavanvisai.blogspot.in/2014/06/1984.html

4

மோகன் சிங் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த ராஜ்குமார், அவரது  மனைவி நெல்லிக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ஏற்பட்ட கதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான். ஐஐடி வளாகத்திலுள்ள அவர்களது வீடு சூறையாடப் பட்டதும் மோகன் சிங்கின் ஆராய்ச்சி ஆவணங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டதும் அவனுக்குக் தெரிய வருகின்றன. அந்த ஐஐடியின் நிர்வாகத் தலைவரோ, வேறு எவருமோ  இந்த அழிவு வேலைகளைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. அது மட்டுமல்ல, இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கிய மாணவர்களும்கூட கொலைகாரர்களாகப் பார்க்கப்பட்டனர். சில சீக்கியர்கள் தங்கள் அடையாளத்தை மறைப்பதற்காக  நீண்ட முடியையும் தாடியையும் அகற்ற வேண்டியிருந்தது.

தனது தந்தையின் செய்கை மீது ஏற்பட்ட வெறுப்பு, மேற்படிப்பு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்கிறான் ராஜ்குமார்.  அமெரிக்காவிலிருந்த சில அறிவியலாளர்களின் அறிவுத் திறன் மோகன் சிங்கிற்கு இருந்தது என்பதைத் தெரிந்துகொள்கிறான்.  அவனுக்கும் அவன் திருமணம் செய்துகொண்ட அமெரிக்கப் பெண்மணி க்ளாராவுக்கும் இருந்த உறவில் விரிசல் கண்டதால் மணவிலக்குப் பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கு இந்தியப் புராணக் கதைகளைப் பற்றி எழுதித் தருமாறு தனது  (முன்னாள்) மாமனாருக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறாள் க்ளாரா. போலிஸ் உயரதிகாரிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவரது வீட்டுக்கு இன்னும் போலிஸ் காவலும் இதர சலுகைகளும் கிடைத்து வருகின்றன. தன் தந்தை மீதுள்ள வெறுப்பின் காரணமாக, தனது தாயார் இறந்த போதும்கூட ராஜ்குமார் இந்தியாவுக்கு வரவில்லை. ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்குயின் காரணமாகத் தனது தந்தை படுத்தபடுக்கையாக இருக்கிறார் என்பதை அறிந்த பிறகு வேண்டா வெறுப்பாக இந்தியாவிற்கு வருகிறான். ஆனால் அவனுக்கு வேறு முக்கிய நோக்கமும் உள்ளது. நெல்லி எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, தன் தந்தை செய்தவற்றுக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்பதுதான் அந்த நோக்கம்.

பல முயற்சிகள் செய்தபின், சிம்லாவிலுள்ள புகழ்பெற்ற  அரசாங்க ஆவணக் காப்பகத்தில் (Institute of Advanced Studies)  நெல்லி வேலை செய்வதைக் கண்டறியும் அவன் சிம்லாவுக்குச் செல்கிறான். அவனது தந்தை போலிஸ் உயரதிகாரியாகப் பணியாற்றிய நாள்களில் அவரோடு சிம்லாவில் தங்கியிருந்த பீட்டர்ஹோஃப் என்னும் நட்சத்திர ஓட்டலுக்கு வருகிறான்.   ஒரு காலத்தில் அந்த ஓட்டல் கட்டடம் நீதிமன்றக் கட்டடமாக இருந்தது. அந்த நீதிமன்றத்தில்தான் காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்ஸெவும் அவனது கூட்டாளிகளும் விசாரணை செய்யப்பட்டனர். ராஜ்குமார் அந்த ஓட்டலில் இப்போது இந்துந்துவக் கட்சியினரின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுவதைப் பார்க்கிறான். அங்குள்ள எல்லா ஓட்டல்களின் அறைகளும் அந்தக் கட்சியினருக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு இரவை மட்டும் பீட்டர்ஹோஃப் ஓட்டலில் தங்க அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. நெல்லி கவுர் வேலை செய்யும் புகழ்பெற்ற ஆவணக் காப்பகத்துக்குச் செல்கிறான்.

அந்த ஆவணக் காப்பகக் கட்டடம் பிரிட்டிஷ் வைசிராய், அவரது குடும்பத்தினர், பிற ஆங்கிலேயே உயர் அதிகாரிகள் ஆகியோர் கோடைகாலத்தில் தங்குவதற்காகவும், கேளிக்கை விருந்துகளை நடத்துவதற்காகவும் கட்டப்பட்ட மாளிகை. இந்திய ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றித் தருவதற்காக ஆங்கிலேயர் ஏற்பாடு செய்த பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்த இடமும் அதுதான். 1972இல் நடந்த இந்திய-பாகிஸ்தான்  போரில் பங்களாதேஷ் பிரிவினை ஏற்பட்ட பிறகு இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தில், பாகிஸ்தான் பிரதமர் அயூப்கானுடன் இந்திரா காந்தி கையெழுத்திட்ட இடமும் அந்த மாளிகைதான்.  அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாள் காஃப்காவின் பிறந்த நாள்! சிம்லாவில் பல தலைவர்களுக்குச் சிலைகள் எழுப்பப்ப்ட்டுள்ளன. இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் அம்பேத்கரின் சிலையைப் பார்த்ததும், பார்ப்பனியத்துக்கு எதிராக அவர் நடத்திய கருத்துப் போராட்டத்தை மட்டுமல்ல,  தலித்துகளுக்கு (அவர்களை ‘ஊமை மனிதர்கள்'- மூக் நாயக் என்று ஒரு காலத்தில் அவர் சித்திரித்தார்) அவர் அளித்த வாக்குறுதியொன்றையும் ராஜ்குமார் நினைவு கூர்கிறான். அம்பேத்கர் கூறினார்;      “என்னால்  உங்களுக்கு சொர்க்கத்தை அளிக்க முடியாது. ஆனால் குரலைக் கொடுக்க முடியும்”.

இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவிய அல்லென் ஒக்டோவியன் ஹ்யூம், பல ஆண்டுகள் சிம்லாவில்தான் வாழ்ந்திருக்கிறார்.  கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியவரின் பேரனான அவர், முதல் இந்திய விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தை நேரில் பார்த்தவர். இந்தியாவில் வெடிக்கும் விவசாயிகளின் எழுச்சிக்குப் பிரிட்டிஷ் பேரரசால் தாக்குப் பிடித்து நிற்க முடியாது என்று கூறியவர். தென்னாசியா முழுவதிலிமிருந்த பல்வேறு பறவையியலாளர்களின் (ornithologists) தொடர்பமைப்பை உருவாக்கி, பறவைகளைப் பற்றிய ஆய்வுகளுக்கான  முன்னோடியாகவும் இருந்திருக்கிறார். பறவையியலுக்கான ஒரு பத்திரிகையை நடத்தி வந்ததுடன், அது தொடர்பான சில நூல்களையும் எழுதியிருக்கிறார். ஆனால், அவர் சலிம் அலி போன்றோரின் முன்னோடியாக இருந்திருக்க முடியாது. ஏனெனில், காலனிய ஆட்சிக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தித் தென்னாசியா முழுவதிலுமிருந்து திரட்டப்பட்டுப் பாடம் போடப்பட்ட (stuffed)  ஆயிரக்கணக்கான பறவை இனங்களை சிம்லாவில் வைத்திருந்ததார். அவற்றில் 20000 சிம்லாவில் அழிக்கப்பட்டன. 80000க்கும் அதிகமானவை ‘பிரிட்டிஷ் இயறகை வரலாற்று அருங்காட்சியகத்துக்கு' நன்கொடையாக அனுப்பப்பட்டன. அந்த ஹ்யூம் காங்கிரஸைத் தோற்றுவித்து சரியாக 99 ஆண்டுகள் கழித்து, 1984ஆண்டு சீக்கியர்கள் மீதான வன்முறை நடத்தப்பட்டது!

மிகுந்த தயக்கத்துடனேயே ராஜ்குமாரைச் சந்திக்க ஒப்புதல் தருகிறார் நெல்லி. பீட்டர்ஹோஃப் ஓட்டலிலிருந்து அவன் அடுத்த் நாள் வெளியேற வேண்டியிருந்ததாலும், பிற அனைத்து ஓட்டல் அறைகள் அனைத்தையும் இந்துத்துவக் கட்சியினர் தமது சிந்தனைப் பட்டறையை நடத்துவதற்காக வாடகைக்கு எடுத்திருந்ததாலும், ஒரே ஒரு படுக்கை அறை மட்டுமே உள்ள தனது சிறிய வாடகை வீட்டில் தங்குவதற்கு அவனை அனுமதிக்கிறார் நெல்லி. அவர், சிம்லா ஆவணக் காப்பகத்தில் ஆவணங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள முக்கியப் பொறுப்பை ஏற்றிருந்தது மட்டுமல்ல; ‘காலனியாட்சியும் பறவையியலும்' என்னும் தலைப்பில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததும் ராஜ்குமாருக்குத் தெரிய வருகின்றன.  உண்மையில் அவர் செய்துவந்த்து வேறு : அதாவது 1984ஆம் ஆண்டு வன்முறைகள் பற்றிய ஆவணங்களைத் திரட்டி, அவற்றை வேறு பெயரில் வகைப்படுத்திப் பிற்கால வரலாற்றாய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றைப் பாதுகாத்து வைப்பதுதான் என்பதை ராஜ்குமார் நாளாவட்டத்தில் தெரிந்து கொள்கிறான்.  தனது கடந்தகாலத்தைப் பற்றி, கொல்லப்பட்ட கணவரைப் பற்றி, தனது குழந்தைகளுக்கு ஏற்பட்ட கதி பற்றி எதையும் பேசுவதற்கு  நெல்லி மிகவும் தயங்குகிறார். 1984ஆம் ஆண்டு வன்முறை நிகழ்வுகளில் தனது தந்தை வகித்த பாத்திரம் பற்றி நெல்லியிடம் சொல்லி, அதற்காக மன்னிப்புக் கேட்க வந்திருக்கும் ராஜ்குமார் மெல்ல மெல்ல சில விஷயங்களைத் தெரிந்து கொள்கிறான்.

 மோகன் சிங் கொல்லப்பட்ட அன்றே ஐஐடி வளாகத்திலுள்ள சீக்கியர்களும் அவர்களது உடைமைகளும் தாக்கப்பட்டன. தனது குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேறும் நெல்லிக்கு ஒரு குடும்பம் தஞ்சமளிக்கிறது. அந்த சமயத்தில்தான் அந்த இரு குழந்தைகளும் ‘இறந்தவர் தின' நிகழ்ச்சியில் அணிந்துகொள்வதற்கெனத் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்திருக்கின்றனர். அதாவது நெல்லியின் மகன் அர்ஜுன், தனது தங்கையின் ஆடையையும், மகள் தனது அண்ணனின் ஆடையையும் வேடிக்கைக்காக உடுத்தியிருக்கின்றனர். அந்த வீட்டைச் சுற்றிலும் மட்டுமல்ல, அந்த வீடு இருந்த தெரு முழுவதிலுமே வன்முறையாளர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு முன்னேறி வருகின்றனர். சீக்கிய ஆண்கள் இழுத்து வரப்பட்டு உயிரோடு கொளுத்தப்படுவதை, சீக்கியப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணர்ச்சி செய்யப்படுவதை, உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருந்த சீக்கியர்கள் வன்முறையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதை, இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களை, பெண்களை நெல்லி பார்க்கிறார். அந்தக் காட்சிகள் தனது குழந்தைகளின் கண்ணில் படக்கூடாது என்பதற்காக அவர்களை ஜன்னல் பக்கம் நெருங்க அனுமதிக்க மறுக்கிறார். ஆனால், அந்த வன்முறையாளர் கூட்டம் அங்கும் வந்து சேர்கிறது.   தனது தங்கையின் உடையணிந்திருந்த அர்ஜுனனை சிறு பெண் என்று நினைத்து அவனை விட்டுவிடுகிறது. அவனது உடையை அணிந்திருந்த அவனது தங்கையை சீக்கியச் சிறுவன் என்று நினைத்து அவளை இழுத்துக் கொண்டு போய்விடுகிறது. அப்போது இன்னும் இளமையாக, அழகாக இருந்த தனக்கு நேர்ந்தது  பற்றிய முழுவிவரங்களை ராஜ்குமாரிடம் சொல்லத் தயங்குகிறார் நெல்லி. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் - கணவரை இழந்தவர்கள், வண்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்கள், மக்களை இழந்த வயோதிகர்கள் - என்று ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் பல்வேறு அகதி முகாம்களில் வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு நாள், யாரோ ஒருவர்  நெல்லி  இருந்த அகதி முகாமிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து, ‘ அது என் மனைவி; காணாமல் போன அவளைத் தேடிக் கொண்டிருந்தேன். அவள் இங்கே இருப்பது தெரிய வந்தது' என்று கூறி நெல்லியை அழைத்துச் செல்கிறார். அந்த ‘இரட்சகர்' எத்தகையவர் என்பதை நெல்லியோ, நாவலோ நமக்குத் தெளிவாக உடனடியாகச் சொல்வதில்லை. அந்த ‘இரட்சகரின்' நிழல் அவ்வப்போது நெல்லியின் மீது விழுவது மட்டும் ராஜ்குமாருக்குத் தெரியவருகின்றது.  அந்த ‘இரட்ச்கரின்' உதவியோடுதான்  நெல்லி, சிம்லா நிறுவனத்தில் ஆவணக் காப்பாளராகச் சேர்ந்திருக்கிறார்.  நெல்லியின் கழுத்தில் எப்படி ஒரு பெரிய தழும்பு இருக்கிறது என்பதை ராஜ்குமார்  தெரிந்து கொள்ள விரும்புகிறான்.

சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை பற்றிய விசாரணை ஆணையத்தில் சாட்சி சொல்லுமாறு மனித உரிமை அமைப்பொன்றின் வழங்குரைஞர் அவரிடம் நேரில் கேட்டுக் கொள்கிறார் (1984 வன்முறைகள் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகம், டெல்லி போலிஸ் தலைமயகம், தூர்தர்ஷன் ஆகியவற்றிலிருந்து அகற்றப்பட்டிருந்தன,அல்லது அழிக்கப்பட்டிருந்தன. ஓர் அரசு-சாரா நிறுவனம் மட்டுமே பல ஆவணங்களை அரும்பாடுபட்டுப் பாதுகாத்து வைத்திருந்தது). தன் கண் முன்னே சீக்கியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட, பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட டெல்லிக்கு மீண்டும் செல்வதை  நெல்லியின் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. எனினும் மிகுந்த தயக்கத்துடன் டெல்லிக்கு வர சம்மதிக்கிறார். ஆனால், அடுத்த வாரம் அந்த ஆவணக் காப்பகத்திலுள்ள  ஏதோவொரு ஆவணத்தின் புகைப்படப் பிரதியை எடுத்துச் செல்ல வந்ததாகக் கூறிக்கொண்டு உள்ளே வரும் ஒரு மர்ம மனிதன் கைத்துப்பாக்கியைக் காட்டி நெல்லியை மிரட்டி, ‘ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்தால் தொலைத்துவிடுவேன்‘ என்று சொன்னதோடு நிற்காமல் அவரது கன்னத்திலும் வயிற்றிலும் பலத்த அடி கொடுத்துவிட்டுச் செல்கிறான். உயிருக்கு அஞ்சி, டெல்லிக்குப் போகும் முடிவைக் கைவிடுகிறார் நெல்லி. ஆனால், நான்காண்டுகள் கழித்து, ஒரு பெண் வழக்குரைஞரின் வேண்டுகோளின் பேரில் அவர் டெல்லிக்குச் சென்று, விசாரணை ஆணையத்திடம் சாட்சி சொல்ல ஒப்புதல் தருகிறார். அடுத்த நாள் அவர் ஆவணக் காப்பகத்திலிருந்து வெளியே வரும்போது இன்னொரு மர்ம மனிதன் அவர் மீது அமிலத்தை வீசுகிறான். நல்ல வேளையாக அமிலம் அவரது கழுத்தில் மட்டுமே விழுகிறது. அதுதான் அந்தத் தழும்புக்குக் காரணம். அமிலம் வீசியவனைக் கைது செய்கிறார்கள்.  நீதிமன்ற விசாரணையின் போது அவன், நெல்லி தனது காதலி என்றும் காதலர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாகவே அவர் மீது அமிலம் வீசியதாகவும் சொல்கிறான். அமிலத் தாக்குதலால் அவரது உடல் பாதிக்கப்பட, அந்த நீதிமன்றத்தில் அந்தக் காடையன் கூறியவை ஆவணக் காப்பகப் பணியாளர்களிடையே வம்பளப்புப் பேச்சுகளுக்கு வழி கோலுகின்றன. விசாரணை ஆணையங்கள் நடத்திய கண் துடைப்பு நாடகங்களைப் பற்றி ராஜ்குமாரிடம் நெல்லி கூறுகிறார்: மன உரம் கொண்ட சிலர் முன் வந்து எதற்கும் அஞ்சாமல் சாட்சியம் கூறினர்; வன்முறையை நடத்தியவர்கள் கொடுக்க முன்வந்த பல இலட்சம் ரூபாய்களை வாங்க மறுத்தனர்; இருவர் கொல்லப்பட்டனர்; சில சீக்கியத் தலைவர்கள் வன்முறைகளுக்குத் தலைமை தாங்கியவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர்; சாட்சிகளை மிரட்டிப் பணிய வைக்கும் வெட்கக்கேடான சேவையைக்   காங்கிரஸ் கட்சிக்கு செய்த சில சீக்கியர்கள் தீடீர்ப் பணக்காரர்களாகிவிட்டனர்'.


மெக்ஸியப் பெண்மணி மிராபெல், சிம்லாவுக்குப் பலமுறை வந்து நெல்லிக்கு ஆறுதலாகப் பல நாள்கள் அவரோடு தங்கிவிட்டுச் சென்றதையும் ராஜ்குமார் அறிந்து கொள்கிறன். ஆனால்,  தனது மகனுக்கு ஏற்பட்ட கதி என்ன, அவன் உயிரோடு இருக்கிறானா, அப்படியானால் எங்கு இருக்கிறான் என்பதைப் பற்றி நெல்லி வாய் திறப்பதில்லை.


ராஜ்குமார் சிம்லாவில் இருக்கும் நாள்களில் நெல்லியின் பதவிக்காலம் முடிந்துவிடுகிறது. அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் அவருக்குக் கொடுக்கப்படும் விடையனுப்பு விழாவின் போது ஓர் உரையை நிகழ்த்த வேண்டும். அந்த சமயத்தில் நெல்லியின் ‘இரட்சகர்' நெல்லிக்காகத் தானே தயாரித்த உரையொன்றைக் கொண்டு வந்து அதைத்தான் படிக்க வேண்டும் என்றுநிர்பந்தம் கொடுக்கிறார். அது என்ன உரை?  1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை பற்றிய உரை அது. அதை ஏன் நெல்லி படிக்க வேண்டும் என அவர்  நிர்பந்திக்கிறார்? 1984ஆம் ஆண்டு வன்முறையைப் பற்றிப் பேசினால்தான், 2002இல் குஜராத்தில் நடந்த வன்முறை பற்றிப் பேசாமலிருக்கும்படி காங்கிரஸ்காரர்களின் வாயை அடக்க முடியும் என்று அவர் வெளிப்படையாகக் கூறுகிறார்!. இப்படித்தான் பல எழுதப்படாத ஒப்பந்தங்கள் இரு கட்சிகளுக்குமிடையே இருந்திருக்கும் போலும்.  எனினும், அந்த உரையை படிப்பதை நெல்லி தவிர்த்துவிடுகிறார்.

சிம்லாவிலிருந்து டெல்லிக்குத் திரும்பும் ராஜ்குமார்,  தனது தந்தையைக் காரில் ஏற்றிக் கொண்டு திரிலோக்புரிக்குச் செல்கிறான். அங்கு  நடந்த படுகொலகளைத் தந்தைக்கு நினைவூட்டி, அவற்றுக்கு அவர் உடந்தையாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறான். ஊடகவியலாளர்களை அழைத்து அவர்களிடம் அந்த உண்மையை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறான். ஆனால், அவரோ தனக்கு ஏற்கெனவே  ‘ நினைவு மறதி நோய் ‘ (அல்ஸெய்மர்) நோய் வந்துவிட்டதாக மருத்துவச் சான்றிதழ் வாங்கி வைத்திருக்கும் தந்திரசாலியாக  இருக்கிறார்.

மன உளைச்சலோடு ஒரு நாள் காரை ஓட்டி வருகையில் விபத்து ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறான் ராஜ்குமார். அந்த விபத்தைக் கேள்விப்பட்டு, அவனைப் பார்க்க சிம்லாவிலிருந்து வருகிறார் நெல்லி. தனது தந்தை செய்த கொடுஞ்செயல்களைப் பற்றிக் கூறும் அவன், அவரைக் கொலை செய்யப் பல முறை தான் திட்டமிட்டதாகக் கூறுகிறான். நெல்லியோ, மிக அமைதியாக  ‘இது பிராயச்சித்தமாகிவிடுமா' என்று கேட்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் அவனது தந்தை வருகிறார். அவர் மீதான தனது ஆத்திரத்தையும் கோபத்தையும் நெல்லி கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று ராஜ்குமார் விரும்புகிறான். ஆனால், நெல்லியோ, தனது உள்ளக் குமுறலை வெளிக்க்காட்டாமல் இருந்துவிடுகிறார். மோகன் சிங், நெல்லி போன்ற ஆயிரக்கணக்கான சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் பொறுப்பாக இருந்தவர்களிலொருவரான தனது தந்தையின் மீது ராஜ்குமாருக்குக் கடுமையான வெறுப்பு ஏற்படுகிறது. அவருடனான தொடர்பை முற்றிலும் அறுத்துக் கொண்டு அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்கிறான்.

1984ஆம் ஆண்டு வன்முறைகள் பற்றி, அர்ஜுன் என்னும் பத்திரிகையாளருக்கு (நெல்லியின் மகனின் பெயரே அவனுக்கும்)  நெல்லி கொடுத்த பேட்டியொன்றைத் தற்செயலாகப்  படிக்கின்றான் ராஜ்குமார். அந்தப் பேட்டியினூடே அவர் அந்த வன்முறை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தன் மகனுடன் இத்தாலிக்குச் சென்றதையும் ரோம் நகர் ரயில் நிலையத்தில் பாசிஸ்ட் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்ததையும்,  இந்தியாவுக்குத் திரும்பி வந்த அவர்களிருவரும் கையில் பணம் இல்லாததால், ஓர் அகதி முகாமில் சில நாள்கள் தங்கியிருந்ததையும், அங்கிருந்த சில சீக்கிய இளைஞர்கள் தங்கள் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு வஞ்சம் தீர்ப்பதற்கான திட்டம் தீட்டிக் கோண்டிருந்ததையும், சிறு பையனாக இருந்த அர்ஜுனும் கூட அவர்களுடன் சேர்ந்து கொள்வானோ என்று தான் அஞ்சியதையும்,  ஒரு நாள் காலை அவன் மாயமாக மறைந்துவிட்டதையும் குறிப்பிடுவதைப் பார்க்கிறான். அர்ஜுன் என்ன ஆனான் என்பது அவனுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

சிம்லா வேலையிலிருந்து ஓய்வு பெற்ற நெல்லியைத் தனது விருந்தாளியாக அமெரிக்காவுக்கு வரவழைத்து, தன்னுடன் சில வாரங்கள் தங்கியிருக்கச் செய்கிறான் ராஜ்குமார். அப்போதும்கூட அவர் தன் மகனைப் பற்றி ஏதும் பேசுவதில்லை. இந்தியா திரும்பிய  நெல்லி, டெல்லிப் புறநகரொன்றில் 1984ஆம் ஆண்டுப் படுகொலை பற்றிய ‘வாய்மொழி வரலாற்றுத் தகவல்களை' சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவனுடன் அவ்வப்போது மின்னஞ்சல் தொடர்பு கொள்கிறார்.  அவர் மொத்தமாகப் பலருக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், மெக்ஸிகோவுக்குத் திரும்பிச் சென்றுவிட்ட மிராபெல்லின் மின்னஞ்சல் முகவரியும் இருக்கிறது. மிராபெல்லுடன் தொடர்பு கொண்டு, இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறான் ராஜ்குமார்: 1. 1984ஆம் ஆண்டுப் படுகொலையில் தனது தந்தையும் சம்பந்தப்பட்டிருப்பதைத் தான் செல்வதற்கு முன்பே நெல்லி தானாகவே கண்டறிந்தாரா? 2.அவருடைய மகனுக்கு நேர்ந்தது என்ன?

மிராபெல் பதில் அனுப்புவதில்லை. ஒரு கருத்தரங்குக்காக மெக்ஸிகோ செல்லும் வாய்ப்பைப் பெற்ற ராஜ்குமார், தன்னை நேரில் சந்திக்கும்படி மிராபெல்லுக்குக் கடிதம் எழுதுகிறான். மெக்ஸிகோ நகரில் அவன் தங்கியிருக்கையில், மிராபெல்லிடமிருந்து தகவல் வருகின்றது - அவனைச் சந்திக்க ஒப்புக் கொள்வதாக. ஆனால், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொள்கிறார் மிராபெல்.   ஐபேட் வழியாக அவன் கேட்கும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் அவர், தனக்கு மூன்று குழந்தைகள் என்று கூறுகிறார். ‘மூன்றாவது முழந்தை, உங்கள் மகன்தானா' என்று கேட்கிறான் ராஜ்குமார்.  மிராபெல் பதில் சொல்ல மறுத்திவிடுகிறார்.  நெல்லியின் மகன் - காணாமல் போன அர்ஜுன்  - மிராபெல்லால் வளர்க்கப்படுகிறான் என்று நாம் ஊகிக்கும்படி செய்கிறார் நாவலாசிரியர்.

 சில மாதங்கள் கழித்து நெல்லி மரணமடைகிறார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளத் தனித்தனியாக டெல்லிக்கு வரும் ராஜ்குமாரும், மிராபெல்லும் முதல் முறையாக நேரில் சந்திக்கின்றனர். அவனுக்குள்ள ஓர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான் ராஜ்குமார். 1984ஆம் ஆண்டு வன்முறையில் தனது தந்தையின் பாத்திரத்தை நெல்லி அறிந்திருந்தாரா? போலிஸ் துறையின் உயரதிகாரியொருவர் என்பது மட்டுமே அவருக்குத் தெரிதிருந்ததா அல்லது அந்த நபரின் பெயரும் தெரிந்திருந்ததா என்று கேட்கிறான். அந்த மனிதர் ராஜ்குமாரின் தந்தைதான் என்பது நெல்லிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது என்று கூறுகிறார் மிராபெல். நெல்லியை, பிரைமோ லெவியுடன் ஒப்பிடுகிறார் நாவலாசிரியர். நாஜிகளின் வதை முகாமொன்றில் பல்லாண்டுகள் அடைக்கப்பட்டு, அங்கு தனது யூத இனத்தைச் சேர்ந்த எண்ணற்றோர்  சித்திரவதை செய்யப்பட்டதையும்  படுகொலைகளை செய்யப்பட்டதையும் நேரில் பார்த்தவரும், தனது வேதியியல் அறிவை நாஜிகள் பயன்படுத்திக் கொண்டதால் தப்பிப் பிழைத்தவருமான உலகப் புகழ்பெற்ற இத்தாலிய எழுத்தாளர் பிரைமோ லெவியிடம் வன்மமோ, பழிவாங்கும் உணர்வோ இருக்கவிலை. அந்த மகத்தான பண்பு நெல்லியிடம் இருந்ததாகச் சொல்லும் இந்த நாவல், எந்த அரசியல் தலைவரையும் கொலை செய்யக்கூடாது என்றும், அந்தக் கொலைகள் மூலமாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையோ, அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையோ அழித்துவிட முடியாது என்றும் கூறுகிறது. விலங்குகளின் உலகத்தில் ‘இனச்சுத்திகரிப்பு' என்னும் நிகழ்வைக் காண முடியாது, அது மனித உலகில் மட்டுமே கைகூடுகிறது என்றும், இதற்கு முடிவே இல்லையா என்றும் ஆதங்கப்பட்டுக் கொள்கிறது. நாவலாசிரியர் அமெரிக்காவில் அறிவியல் கற்று, முழுநேர எழுத்தாளராக கனடாவில் வசிக்கிறார்.

5

‘1984' - இது 1940களில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல்.   ஒரு ‘டிஸ்டோப்பியா' நாவல். ‘யுட்டோப்பியா' என்பதற்கு நேர் எதிரானது ‘டிஸ்டோப்பியா'. ‘யுட்டோப்பியா' என்றால் ‘கற்பனா உலகம்'  (‘இல்லாத உலகம்') எர்ன்று பொருள். எல்லோரும் இன்புற்றிருப்பதாகச் சொல்லப்படும் ஓர் கற்பனா உலகத்தைக் குறிக்கவே இச் சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.  ‘தீய' என்று பொருள்படும் ‘dys', ‘இடம்' அல்லது ‘ நிலம்' என்னும் பொருள்படும் ‘topos' ஆகிய இரு கிரேக்கச் சொல்களின் கூட்டே ‘Dystopia'. தனது சொந்த மக்களுக்கே தீ¢ங்கு செய்யும் அரசாங்கம் உள்ள நாடுதான் ‘டிஸ்டோப்பியா'.  இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயரான ஜார்ஜ் ஆர்வெல், ‘1984' என்னும் நாவலை எழுதுகையில், இந்தியாவிலும் ஒரு ‘1984' இருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார் என்று  ஜஸ்ப்ரீத் சிங்கின் நாவல் கூறுகிறது. எனினும், ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984', அல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிக்க புதிய உலகம்' (Brave New World),  ஜாமியாட்டினின் ‘நாம்' (We) முதலியன நீண்டகாலம் நீடித்து நிற்கும் ‘டிஸ்டோப்பியா'க்களைத்தான் சித்திரிக்கின்றன. இந்தியா, இதுவரை  கண்ட ‘டிஸ்டோப்பியா'க்கள் (காஷ்மிர், வடகிழக்கு மாநிலங்கள் தவிர)  இடைவெளிவிட்டு,  நாடு முழுவதிலும் குறுகிய காலமே நீடித்த அல்லது இந்தியாவின் ஒரு சில பகுதிகளோடு நின்றுவிட்டவைதான். இனி அப்படிச் சொல்ல முடியுமா?.

 ஏனெனில், இந்தியாவிலுள்ள மொத்த வாக்காளர்களில் 31 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவை  மட்டுமே பெற்றுள்ள பாஜகவின் வெற்றி  இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முன்னுவமை காணாத திருப்பம் என்று மோதியை ஆதரித்து வந்த ஊடகங்கள் (இந்தியாவிலுள்ள ஊடகங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே) கூறுகின்றன. உண்மையில் நாடாளுமன்றத் தேர்தலில், 1967இல் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது; இருபதாண்டுக்காலம்  காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை அசைக்கப்பட்டது; 1977இல்  இந்திரா காந்தியின் காங்கிரஸ் தூக்கியெறியப்பட்டது; 1998இலும் 1999இலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இவையெல்லாம் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட திருப்பங்கள் என்றாலும், இப்போது ஏற்பட்டுள்ள திருப்பம், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒருமித்த ஆதரவு மட்டுமின்றி,  ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இராணுவக் கட்டுப்பாடு மிக்க வலிமை மிக்க பிரசாரம் ஆகிய இரண்டும் கூட்டுச் சேர்ந்ததின் விளைவே ஆகும். விளம்பரமும் பிரசாரமும் செய்ய சர்வதேச அளவில் கைதேர்ந்த நிறுவனங்களின் உதவியுடன் ஏறத்தாழ 5600 கோடி ரூபாய் விளம்பரங்களுக்கு மட்டுமே செலவிட்டு (இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 30 விழுக்காடு அதிகமாக  உள்ள அமெரிக்காவிலும்கூட 2012ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தேர்தலில் பராக் ஒபாமா செலவளித்த தொகை 986 மில்லியன் டாலர்; ஆக, மோதியின் வெற்றிக்காகச் செலவிடப்பட்ட தொகைக்கும் ஒபாமாவின் வெற்றிக்குச் செலவிடப்பட்ட தொகைக்கும் பெரிய வேறுபாடு இல்லை)

 ‘குஜராத் மாடல்', ‘திறமையான நிர்வாகம்', ‘உறுதியான முடிவு எடுப்பதில் மோதிக்குள்ள திறமை', அவரது ‘ஊசலாட்டமற்ற தன்மை' ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பேசிவந்தனேவேயன்றி, கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் ஊடகங்கள், அவரது கடந்தகாலச் செயல்பாடுகள், குஜராத்தில் ஆட்சி அதிகாரம் முழுவதையும் தன் கையிலேயே குவித்து வைத்திருப்பது, எதேச்சதிகார மனப்பான்மை ஆகியன பற்றிக் கடுகளவுகூடப் பேசவில்லை. காங்கிரஸ் அரசாங்கத்தில் ஊழல் மண்டிக் கிடந்ததைப் பற்றி  ஓயாது பேசி வந்த ஊடகங்கள், கர்நாடகம் முழுதையுமே எடியூரப்பா சுரங்கங்களாகக் தோண்டி வைத்த ஊழல் பற்றிப் பேசவில்லை. 

மன்மோகன் சிங் அரசாங்கம், சில குறிப்பிடத்த சமூக நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்தியிருந்தாலும் அந்த அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் கண்டறியப்பட்ட மிகப் பெரும் ஊழல்கள், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியமையால் ஏற்பட்ட விலைவாசி ஏற்றம், வே¨லையில்லாத் திண்டாட்டம், எதிர்பார்த்த அளவுக்கு வெளிநாட்டு முதலீடு வராததால் நவ-தாராளவாதப் பொருளாதார வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடந்தமை முதலியனவற்றால் அந்த சிறிய சாதனைகள் அனைத்தும் மூழ்கடிக்கப்பட்டன.  மோதி, தனது தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிவந்த, ஒருபோதும் நிறைவேற்றப்பட முடியாத, போலி வாக்குறுதிகளும் (இன்னும் சில ஆண்டுகளில் இந்தியக் குடும்மம் ஒவ்வொன்றுக்கும் சொந்த வீடு கட்டித் தருதல், வேலையில்லாத இளைஞர்களுக்குக் கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்குதல் முதலியன), மன்மோகன் சிங் அரசாங்கம் செய்தவற்றை முற்றாக ஒளி மங்கச் செய்துவிட்டன.

'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி' என்பதை மட்டுமே தனது பிரசாரத்தின் முதன்மையான அம்சமாக ஏறத்தாழ இரண்டாண்டுக்காலம் முன்வைத்து வந்த பாஜக, மிகத் தந்திரமாகத் தனது வலதுசாரி இந்துத்துவச் செயல்திட்டங்களை நுழைக்கும் வகையில் முதல் கட்டத் தேர்தல் நடப்பதற்கு முதல் நாள் மாலைதான், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மதச் சிறுபான்மையினர், தேசியச் சிறுபான்மையினர் ஆகியோரை அச்சுறுத்தும் சில அம்சங்களை அறிவித்தது   (காஷ்மிருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ நீக்குதல், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், ராமர் கோவில் கட்டுதல் ஆகியன). தன் மீது சிறுபான்மையினருக்கு (குறிப்பாக முஸ்லிம்களுக்கு) இருந்த அச்சத்தைப் போக்குவதற்காக மோதி எந்த முயற்சியும் செய்யவில்லை.  மாறாக, அவர்களது அச்சத்தை அதிகரிக்கும் வகையில் மோதியின் தேர்தல் பிரசார பேச்சுகளும் அமைந்திருந்தன.  இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்பதும், உத்தரப் பிரதேசத்தில் மொத்த  மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20 விழுக்காடாக இருந்தும்,  ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் அச்சம் தரக்கூடியவைதான். ‘திராவிடக் கட்சி'களுக்கு இன்னும் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்படும் தமிழ்நாட்டிலிருந்தும்கூட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே - அதுவும் அஇஅதிமுக வேட்பாளராக நின்றுதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, மோதியை ஆட்சிக்கு வரவிட மாட்டோம் என்று சூளுரைத்தவர்கள்கூட, அவரது தலைமையின் கீழ் ‘நல்லாட்சி மலர வேண்டும்' என வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மனித உரிமைப் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்து வந்த மதிப்புக்குரிய நீதி நாயகம் வீ.ஆர்.கிருஷ்ண ஐயர், மோதியை ‘மதச்சார்பற்ற, சோசலிச மனப்பான்மையுள்ள, இந்தியாவின் வளர்ச்சிக்குத் துடிப்பு மிக்க பங்களிப்பு செய்யக்கூடிய மனிதர்' என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பாராட்டி வந்ததும், வரலாற்றாய்வாளர் ராமச்சந்திரா குகா, இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மிக வலுவாக இருப்பதால்,  மோதி ஓர் இந்துத்துவ எதேச்சாதிகார ஆட்சிக்கு வழிவகுப்பார் என்று அஞ்சுவதில் அர்த்தமில்லை என்று கூறிவந்ததும், அதிகாரப் பிரிவினை உள்ள இந்திய ஜனநாயக அமைப்பில்    நிர்வாக யந்திரமான அரசாங்கம் (executive)  எதேச்சாதிகாரப் போக்கில் செயல்பட்டால், அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் நீதித்துறைக்கு உண்டு என்னும் வெகுளித்தனமான நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. இத்தகைய கருத்துகள் மிதவாத ஜனநாயக சிந்தனையின்  பலவீனத்தின், ஏன் , அதன் ஓட்டாண்டித்தனத்தைத்தான் (bankruptcy) புலப்படுத்துகின்றன. இந்த ஓட்டாண்டித்தனதின் மிகச் சிறந்த வெளிப்பாடாகத் தன்னைக் காட்டிக் கொண்டவர் ஷிவ். விஸ்வநாதன்.அவ்வபோது தன்னை இடதுசாரியாகக் காட்டிக் கொண்டு வந்த அவர், பாஜக், காங்கிரஸ் ஆகிய இரண்டுக்கும் மாற்றாக இருப்பது ஆம் ஆத்மி கட்சி என்று தேர்தல் பரப்புரைகள் நடந்து வந்த நாள்களில் எழுதிவந்தார். ஆனால், பாஜக மிகப் பெரும் வெற்றி கண்ட அடுத்த நாளே பின்வரும் ‘புதிய கண்டுபிடுப்பு' ஒன்றை முன் வைத்தார் : தாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பெரும்பான்மை மதத்தினரின் (‘இந்துக்கள்' என்று அவர் நேரடியாக எழுதவில்லை) உணர்வுகளை மதிக்காமல் இருந்ததாலும், ‘மதச்சார்பின்மை' என்னும் பெயரில் சிறுபான்மையினரிடையே (‘முஸ்லிம்கள்' என்று அவர் நேரடியாகச் சொல்லவில்லை) உள்ள அடிப்படைவாதத்தை விமர்சனமும் கண்டனமும் செய்யாததாலும் பெரும்பான்மை சமூகத்தினர் பெரும்பாலான வாக்குகளை பாஜகவுக்குச் செலுத்திவிட்டனர்! இந்தக் கண்டுபிடிப்பை ஷிவ். விஸ்வநாதன், ஏன் தேதல் முடிவுகளுக்கு முன் செய்யவில்லை என்னும் கேள்வியை உடனுக்குடன் எழுப்பினார் இந்திரா பார்த்தசாரதி.  ‘தி ஹிந்து‘  ஆங்கில நாளேட்டின் ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்' பகுதியில் இ.பா.வின் கடிதம் இரண்டே வாக்கியங்களாகக் சுருக்கப்பட்டு விட்டது.

இந்திய ஊடகங்கள், வெளிநாட்டு ஊடகங்கள் ஆகியனவற்றில் மிகப் பெரும்பாலனவை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்பதைச் சொல்லத் தேவையில்லை.  இந்த நிலையில், தாங்கள் ஏதோ சுதந்திரமாகவும் நடுநிலையுடனும் நடந்து கொள்வதாக உரிமை பாராட்டிக் கொள்ளும் சில ஊடகங்களின் நடத்தையை விரிவாக விளக்க இங்கு இடமில்லை. முதலாளித்துவ சமுதாயங்களில் ‘பத்திரிகை சுதந்திரம்' என்று கூறப்படுவது, இறுதிப் பரிசீலனையில் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும்  சுரண்டலும் இருக்கும் நிலைமைகளைப் (staus quo) பாதுகாப்பதுதான் என்பதற்குச் சிறந்த முன்னோடியாக இருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் பத்திரிகைகள் நடந்து கொண்ட விதம்.

நெப்போலியன் போனபார்ட், பிரெஞ்சு நாட்டின் மேற்குடி வர்க்கத்தைச் சேர்ந்தவரோ, பூர்ஷ்வா வர்க்கப் பின்னணி கொண்டவரோ அல்லர்;  கோர்ஸிகா தீவில் பிறந்த அவர், சொல்லப்போனால் ‘உண்மையான' பிரெஞ்சுக்காரர்கூட அல்லர். ஏனெனில் கோர்ஸிகர்கள் பேசும் மொழி வேறு. பிரெஞ்சு இராணுவத்தில் அதிகாரியாக இருந்து பின்னர் தனது சூழ்ச்சித் திறன், போர்த் திறன் ஆகியவற்றின் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி இறுதியில் தன்னை முடிமன்னராக்கிக் கொண்டவர். ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளின் மீது பிரெஞ்சுப் படையெடுப்புகளை வழிநடத்திச் சென்றவர். ஆனால், ஆஸ்திரிய, பிரஷ்யா, ரஷியா, இங்கிலாந்து, போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய ஆறு நாட்டுப் படைகள் ஒன்றிணைந்து  லீப்ஸிக் என்னுமிடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்துவிட்டதால், முடி துறந்து, எல்பா என்னும் தீவில் வாழும் நிர்பந்தத்துக்குள்ளானவர்.  பிரெஞ்சுப் படைகள் மற்ற நாடுகளை வெற்றி கொள்ளும் வரை அவரைப் போற்றிப் புகழ்ந்த பிரெஞ்சு ஊடகங்கள், லீப்ஸிக் தோல்விக்குப் பிறகு அவர் மீது ஏவிய வசைமொழிகள் ஏராளம். ஆனால், அவர் எல்பாவிலிருந்து தப்பி, பிரெஞ்சு இராணுவத்திலிருந்த தனது விசுவாசிகளுடன் பாரிஸ் நகரத்திற்குத் திரும்பி வந்து மீண்டும் சிறிதுகாலம் முடி தரித்துக் கொண்டார். எல்பாவிலிருந்து அவர் புறப்பட்ட நாள் 1815 மார்ச் 9; பாரிஸுக்கு அவர் வந்து சேர்ந்த நாள் மார்ச் 22.  இந்த இரு வார காலத்தில் பிரெஞ்சுப் பத்திரிகைகள் நெப்போலினியனைப் பற்றி வெளியிட்டு வந்த செய்தித் தலைப்புகளை லியோ ஹ்யூபெர்மன் எடுத்துக் காட்டியுள்ளார்:
மார்ச் 9:  நரமாமிசம் தின்னி குகையிலிருந்து வெளியே வந்துவிட்டது.
மார்ச் 10: கோர்ஸிக அரக்கன் யுயான் முனையில் கப்பலிலிருந்து இறங்கிவிட்டான்.
மார்ச் 11: வேங்கை கேப் நகருக்கு வந்து சேர்ந்துவிட்டது.
மார்ச் 12: கிரெனோபிளில் அரக்கன் தூங்கினான்.
மார்ச் 13: கொடுங்கோலன் லியோ நகரத்தைக் கடந்து சென்றான்.
மார்ச் 14: முடியாட்சியைக் கைப்பற்றியவன் டியோன் நகரத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறான்.
மார்ச் 18: போனபார்ட், தலைநகரத்திலிருந்து ஆறே ஆறு மைல் தொலைவில்தான் இருக்கிறார்.
மார்ச் 19: போனபார்ட் விரைவாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்; ஆனால் அவர் ஒருபோதும் பாரிஸுக்குள் நுழையமாட்டார்.
மார்ச் 20:  நெப்போலியன், நாளை கோட்டைக் காப்பரண்களுக்குக் கீழே இருப்பார்.
மார்ச் 21: பேரரசர் ஃபோந்தான்ப்ளூவில் இருக்கிறார்.
மார்ச் 22: மாட்சிமை தாங்கிய பேரரசர், விசுவாசமும் அர்ப்பணிப்பும் மிக்க தனது குடிமக்களின் மகிழ்ச்சிகரமான வரவேற்புக்கிடையில் நேற்று மாலை டுயெரியெவுக்கு வந்து சேர்ந்தார்.

ஊடகத் துறை இப்படி என்றால்,   நீதித்துறையின் கீழ்நிலைகளில் மட்டுமின்றி மேல் நிலைகளிலும்கூட ஊழலும் இலஞ்சமும் இருப்பது பல்வேறு சமயங்களில் வெளிப்பட்டுள்ளது மட்டுமின்றி, நிர்வாக யந்திரம் மிக வலுவாக இருக்கும் சமயங்களில், அதன் குறுக்கீடுக்கும் செல்வாக்குக்கும் நீதித் துறை பணிந்தே போக வேண்டியிருந்தது என்பதையும் நாம் பல முறை பார்த்திருக்கிறோம். மன்மோகன் சிங் காலத்தில் 2ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க விவகாரம் , ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருதல் போன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதற்குக் காரணம், மத்திய நிர்வாக யந்திரம் மிகவும் வலுக்குன்றிய நிலையில் இருந்ததுதான். நீதித் துறை, போலிஸ் துறை ஆகியவற்றை வலுக்குன்றச் செய்ததிலோ, ஆளும் கட்சிக்குச் சேவை செய்கின்றவையாக ஆக்குவதிலோ, இந்திரா காந்தியின் நிர்வாக யந்திரம் ஆற்றிய பாத்திரத்தை மறக்க முடியாது.
தனிப்பெரும்பான்மை இல்லாமல், பலவேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் 1998இலும், பின்னர் 1999இலும் பாஜக ஆட்சி செய்தபோது, அதன்  ‘தாய்' ( தந்தை) அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இன் ‘இந்துத்துவச் செயல்திட்டங்களை' முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கு சில தடைகள இருந்தன (அப்போதும்கூட குஜராத் படுகொலைகள் நடக்கதான் செய்தன), அப்போதே, மனிதவள மேம்பாட்டுத் துறை, கல்வித் துறை போன்றவற்றைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த இந்த்துவ வலதுசாரிகள், கல்வி, பண்பாட்டு துறை போன்றவற்றை இந்துத்துவமயமாக்குவதில் கணிசமான வெற்றி பெற்றனர், பாதுகாப்புத்துறையிலும் ஊடுருவியிருந்தனர்.
நிர்வாக இயந்திரத்துக்கு வேண்டிய அதிகாரிகள், அலுவலர்கள் (இதில் போலிஸ் துறையும், சிறைத் துறையும் அடங்கும்),  நீதித் துறையின் கீழ் மட்டங்களிலுள்ள நீதிபதிகள், பல்கலைக் கழக மானிய ஆணையம் என்று எத்தனையோ இருக்கின்றன சங் பரிவார ஆதரவாளர்களை நுழைக்க. நீதித் துறையின் மேல் மட்டங்களிலும்கூட அவர்களைக் கொண்டு வர முடியும்.அரசியல்  சட்டப்படியே     ( விதி 295ஏ) கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முடியும்.ஆக, 2014ஆம் ஆண்டுத் தேர்தல் ஒரு வகையில் நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வலுத்த குரல் உடையவர்களை மேன்மேலும் சகிப்புத்தனமையற்றவர்களாகவும் கருணையற்றவர்களாகவும் ஆக்குகின்ற, குரல் இல்லாதவர்கள் அல்லது குரல் ஒடுக்கப்பட்டவர்களை அவநம்பிக்கை உணர்வும் அச்ச உணர்வும் கொள்கின்றவர்களாக ஆக்குகின்ற ஓர் இந்திய சமுதாயத்தை 2014 ஆம் ஆண்டுத் தேர்தல் உருவாக்கியிருக்கிறது.
இதற்கான ஒத்திகையாகத்தான் புனெவில் இந்த மாதம் (ஜூன், 2014) முதல் வாரத்தில் மோஷின் ஷேக் என்னும் இளைஞர் ‘ஹிந்து ராஷ்ட்ர சேனா' என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். யாரோ ஒருவரது முகநூலில் சிவாஜி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரெ ஆகியோரின் படங்கள் கேலிக்குரிய வகையில் மாற்றப்பட்டு அவர்களை நிந்திக்கும் வாசகங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றது. (பால் தாக்கரெவின் ஏடு, முஸ்லிம்களை மட்டுமல்லாது, அவரது அரசியல் எதிரிகளையும் மிக இழிவாகக் காட்டும் கார்ட்டூன்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறது. அவரை எதிர்த்துப் பேச யாருக்கும் துணிவில்லாததால், அவருடைய ‘கருத்துச் சுதந்திரம்' அப்படியே விட்டுவைக்கப்பட்டது). ஆனால், அந்த முகநூலுக்குரியவரின் முகவரியோ, அடையாளமோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றலும், மேற்சொன்ன இந்துமதவெறி அமைப்புக்கு இந்த உண்மையெல்லாம் தேவைப்படவில்லை. அவர்களுக்கு வேண்டியது ஒரு முஸ்லிம். முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அரசியலில் தங்களால் எந்த அளவுக்கும் செல்ல முடியும் என்பதை இந்தக் கொலையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். புனெ நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் அனில் ஷிரோல், இந்தக் கொலையை நியாயப்படுத்தும் வகையில் சில கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது சிவாஜியும் பால் தாக்கரெவும் அவமதிக்கப்பட்டதால்  பின்விளைவுகள் ஏற்படும் நிலை தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
மத்திய அரசாங்கப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைவர்கள்- குறிப்பாக பிரதமர் மோதி -  தனது அலுவல்களை முறையாகவும் முனைப்பாகவும் கவனிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும், நூறு நாள்களுக்குள் நல்ல  நிர்வாக,  பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்றும், காலில் விழுந்து ஆசி பெறும் வழக்கத்தை மோதி கண்டனம் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. நல்லது. ஆனால், ஓவியக் கண்காட்சிகளைத் தாக்குவது, நூல்களைத் தடை செய்வது, கலாசாரக் காவலர்களாக நடந்து கொள்வது, தபோல்கர், மோஷின் போன்றோரைக் கொல்வது போன்ற காரியங்களை அந்தக் ‘கண்ணியவான்கள்' எப்போதுமே தங்கள் குரங்குப் படைகளுக்கு விட்டுவிடுவதும் அவர்கள் மீது சட்டம் பாயாமல் இருப்பதை உத்தரவாதம் செய்வதும்தான் கடந்தகால வரலாறாக இருந்திருக்கிறது என்பதையும்  நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இவை, ஒருபுறமிருக்க தேர்தலில் தோற்றுப்போன கட்சிகளுக்கு, தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்வதற்கு உதவக்கூடிய விஷயம், அவர்களுக்கு அப்போது மட்டுமே நினைவுக்கு வரும் ‘வெஸ்ட்மின்ஸ்டர்' முறையும், அதன் உள்ளார்ந்த ஜனநாயக விரோதத்தன்மையும். இந்தத் தேர்தல் முறையைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றியவர் ஜவகர்லால் நேரு என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.  இந்த முறைக்கு மாற்றாக ஏதும் அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. இது எவ்வளவு  வக்கிரத்தன்மையுடைய முறை என்பதை 2014ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் மேலும் தெளிவாகக் காட்டுகின்றன.  தேசமு முழுவதிலும் மொத்த வாக்குகளில் 31 விழுக்காட்டைப் பெற்ற பாஜகவுக்கு 283 இடங்கள்; 19.3 விழுக்காட்டைப் பெற்ற காங்கிரஸுக்கு 44 இடங்கள்; 4.1 விழுக்காட்டைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம்கூட இல்லை; 3.4 விழுக்காட்டைப் பெற்றுள்ள சமாஜ்வாதிக் கட்சிக்கு நான்கு இடங்கள்; 3.8 விழுக்காட்டைப் பெற்ற அஇஅதிமுகவுக்கு 37 இடங்கள்; 20.5 விழுக்காட்டைப் பெற்ற திமுகவுக்கு ஒரு இடம்கூட இல்லை; 3.8 விழுக்காட்டைப் பெற்றுள்ள திருனாமூல் காங்கிரஸுக்கு 34 இடங்கள்; 3.3 விழுக்காட்டைப் பெற்றுள்ள சிபிஎம் கட்சிக்கு 9 இடங்கள். 2009ஆம் ஆண்டுத் தேர்தலை எடுத்துக் கொண்டால் 18.9விழுக்காட்டை மற்றுமே பெற்ற பாஜகவால் 116 இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. இந்தத் தேர்தலில்  19.3 விழுக்காட்டைப் பெற்ற காங்கிரஸால் 44 இடங்களை மட்டுமே பெற முடிந்திருக்கின்றது. ஆக, அனைத்திந்திய மக்கள் அனைவரது நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறப்பட்டும் மக்களவை (லோக் சபா)  தேர்தல் உண்மையிலேயே பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றதா?

தற்போது விளம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இடதுசாரிக் கட்சிகளும் தலித் இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் இனியாவது அடிப்படையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நீடித்த போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக