மருத்துவர் நா.ஜெயராமனின்"மகனுக்கு மடல் " என்கிற நூலுக்காக எழுதியது.
நிலம், கல்வி, இடஒதுக்கீடு, அரசியல்
அதிகாரம் இவற்றில் எது தலித்துகளை ஆற்றல்படுத்த
வல்லது என்கிற தலைப்பில் உரையாற்றுவதற்கான
அழைப்பொன்று சமீபத்தில் வந்தது.
மிகச் சரியானதுபோல தெரியும்
இக்கேள்வியைப் பின்தொடரும்போதுதான், இது பிரச்னையை பாதியிலிருந்து
பேசப் பணிக்கிறது என்பது புரிந்தது. அக்கறையுடன் கொடுக்கப்பட்டுள்ள
இத்தலைப்பில் உள்நோக்கம் ஏதுமில்லை,
எதார்த்தத்தில் தலித்துகளின் பிரச்னை
இவ்வாறாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இவற்றிலொன்றையோ அல்லது இவை எல்லாவற்றையுமோ கொடுத்துவிட்டால்
தங்களது பிரச்னைகளையெல்லாம் தீர்த்துக் கொள்ளும் ஆற்றலை தலித்துகள் பெற்றுவிடுவார்கள்
என்று மெய்யாகவே நம்பும்
ஒருவகை புரிதலிலிருந்து இத்தலைப்பு
தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்சொன்னவற்றில் நிலம் என்பது தலித்துகளில் குறிப்பிட்ட
பகுதியினரிடமாவது நீண்டகாலமாக இருக்கத்தான்
செய்கிறது. இல்லையில்லை என்று சொன்னாலும் குறைந்தபட்சம் பிரிட்டிஷ்
ஆட்சிக் காலத்தில் பஞ்சமி நிலம் என்கிற பெயரில் 12 லட்சம் ஏக்கர் கொடுக்கப்பட்டிருப்பதற்கு சான்றுகள் உள்ளன. நிலத்தைப் போலவே கல்வியும் தலித்துகளுக்கு புதிதல்ல.
கையொப்பமிடத் தெரியாமல் தற்குறி
இடுகிறவர்களாக பார்ப்பனர்களும், கையொப்பமிடுகிறவர்களாக தலித்துகளும் இருந்தைக்
காட்டும் கல்வெட்டுகள் குறித்து
பேரா.ஆ.சிவசுப்பிரமணியம் போன்றோர் எழுதியுள்ளனர். பல்வேறு
அரசியல் காரணங்களினால் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இவர்கள் நடத்திய இடையறாதப் போராட்டம்
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது, கல்வி உரிமையை மீட்டெடுத்துக்கொண்டனர். கல்வி, அரசாங்க வேலை, அதிகார மையங்களில் இடஒதுக்கீடு
ஆகியவையும் வெவ்வேறு வடிவங்களில் கிட்டத்தட்ட
ஒரு நூற்றாண்டு காலமாக நடப்பில் இருக்கத்தான் செய்கின்றன.
எனில் இப்போது எழுப்பப்பட வேண்டிய
கேள்வி இதுதான்- நிலம், கல்வி, இடஒதுக்கீடு, அரசியல்
அதிகாரம் ஆகியவை இவ்வளவுகாலத்தில் தலித்துகளை ஆற்றல்படுத்தியுள்ளனவா? இவற்றில் பெரும்பகுதியை ஏற்கனவே
கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் தலித்தல்லாதவர்கள்
வைத்திருக்கும் நிலையில், இவை எவ்வாறு தலித்துகளை ஆற்றல்படுத்த
முடியும்?
நிலம், கல்வி, இடஒதுக்கீடு ஆகியவை சாராம்சத்தில் தனிநபர்களை அல்லது குடும்பங்களை வளப்படுத்தக்கூடியவை. அரசியல் அதிகாரம் என்பதும்கூட அதேமட்டத்திற்கு
கீழிறக்கப்பட்டது தான். சொத்துடையவர்களாக அல்லது சொத்து சம்பாதிக்கும் வாய்ப்புள்ளவர்களாக
இதுவரை காலம் தடுக்கப்பட்டிருந்த தலித்துகளிலும் ஒருபகுதியினர் மாறுவதை
ஆற்றல்படுத்துவதாக கருதிக் கொள்வது சரியா? கல்வியாளர்களாகவும், ஆய்வறிஞர்களாகவும் அரசாங்க ஊழியர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும், ஆட்சியாளர்களாகவும், வணிகர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும், பலதுறை நிபுணர்களாகவும் தலித்துகளில்
ஒரு பகுதியினர் உருவாகி
வந்திருக்கிறார்கள். இந்திய முதலாளிகளின் ஃபிக்கி
சங்கத்திற்கு மாற்றாக டிக்கி என்றொரு சங்கத்தை தொடங்குமளவுக்கு தலித்துகள்
முன்னேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. டிக்கி எப்போதும் பின்னால்தான் இருக்கும்
என்று மற்றவர்கள் இளக்காரம்
பேசுவதை இவ்விடத்தில் மறந்துவிட்டு
‘‘முதலாளிகளை எதிர்ப்பதற்கு பதிலாக அவர்களில் ஒருவராக மாறுங்கள்’’ என்று தொழில் முதலாளிகளாக வளர்ந்திருக்கும்
தலித்துகளின் அறைகூவலுக்கும் பஞ்சமில்லை.
இளையராஜாவும் அவரது சகோதரர்களும் வம்சாவளியினரும்
உலகத்தை தமது இசையால் மதிமயங்கச் செய்துள்ளனர்.
இப்படி இந்த தனிநபர்கள் தத்தமது
துறையில் புரிந்துவரும் சாதனைகளால்
அல்லது மற்றவர்களுக்கு பெரும் சவால்களை உருவாக்குமளவுக்கான மேம்பாடுகளால் ஒட்டுமொத்த தலித்துகளுக்கும்
விளையும் பயன்தான் என்ன? என்பதான கேள்விகளும் இதையொட்டி
எழுந்தன.
ஆண்டைமார்களின் நிலத்தோடு
‘வவுத்துச்சோத்து ஆள்காரர்’களாக பிணைக்கப்பட்ட தலித்துகள்
இன்று இஷ்டப்பட்டவர்களிடம் உழைப்பை விற்கும் சுதந்திரமுள்ள கூலிகளாக
மாறியிருக்கிறார்கள். சாதியத்தின் தொட்டிலாகவும்
கொட்டிலாகவும் இருக்கிற கிராமங்களின் தொடர்பை
அறுத்தெறிந்து விட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து நவீனகால
தொழிலாளிகளாகியிருக்கிறார்கள். குடிமைச்சேவகங்களையும் இழிதொழில்களையுமே
செய்ய வேண்டி பணிக்கப்பட்டிருந்த அவர்களில் பலர் இன்று பச்சை மையில் கையெழுத்துப் போடும் அதிகாரிகளாகியிருக்கிறார்கள். கோவிலுக்குள் நுழைய முயன்றதற்காக எரிக்கப்பட்ட நந்தனின்
வாரீசுகள் இன்றைக்கு வாழும்/
பேளும் கலைகளை பழுதற பயிற்றுவிக்கும் குருஜீக்களின்
மடத்திற்குள் அணுக்கச்சீடர்களாக போய்வர முடிகிறது. கல்விக்கூடங்களில்
நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்த அவர்களில் சிலர் இப்போது ‘கல்வித் தந்தை’களாகவும்கூட மாறியிருக்கிறார்கள். குட்டிச்சுவற்றுக்கிடையே அல்லது கூரைக் கொட்டாயில் தான் ஒண்டிக்கொள்ள வேண்டும்
என்று விதிக்கப்பட்டிருந்தவர்கள் இன்று ‘அட்டாச்டு பாத்ரூம்
வித் வெஸ்டர்ன் டாய்லெட்’டுடன் வீடு கட்டிக்கொள்கிறார்கள். அம்பேத்கர் நகரைத் தவிர வேறெங்கும் நடமாடக்கூட
முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தவர்கள் இன்று அது தவிர்த்த வேறு எல்லா நகர்களிலும் (வெளிநாடுகளிலும்கூட)
குடியேறுகிறார்கள். ஊராட்சித்தலைவர் முதல் குடியரசுத்தலைவர் வரையாக எந்தவொரு பதவியையும் இன்று தலித்துகளால் வகிக்க முடியும்.
தலித்துகள் படிக்கவும்
வேலைக்குப் போகவும் தொழில் செய்யவும் சம்பாதிக்கவும்
கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளவும்
உகந்த வகையில் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்
தளங்களில் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்களெல்லாம் சம்பந்தப்பட்ட நபர்களின்
தனிமனித முயற்சிகளாலோ அரசாங்கத்தின்
கருணையினாலோ சாதியவாதிகளின் மனமாற்றத்தினாலோ
ஏற்பட்டவையல்ல. ஒடுக்கப்பட்ட சமூகம் என்கிற கூட்டுணர்விலிருந்து பிறந்த விடுதலையுணர்வினாலும் கோரிக்கைகளினாலும் போராட்டங்களினாலுமே சாத்தியப் பட்டிருப்பவை. தாங்கொணா
சித்ரவதைகளும் சிறைவாசமும் உயிர்ப்பலிகளும்
வாழ்வாதார அழிவுகளும் கொண்ட இந்தப் போராட்டக் களத்தின் குருதியூறிய மண்ணையும் சாம்பலையும்
தின்று வயிறு வளர்க்கும் கேவலப் பிறவிகளின்
தொகுப்பாக உருவாகியிருக்கிறது இன்றைய தலித் நடுத்தர வர்க்கம். ஊர்நடுவே
இழுத்துப்போட்டு வல்லாங்கு செய்யப்படும்
தமது தாய்மார்களும் சகோதரிகளும்
பெண்டுபிள்ளைகளும் கதறியெழுப்பும் ஓலம் இவர்களது காதில் விழுவதேயில்லை. தலையறுக்கப்பட்டும்
தண்டவாளத்தில் மோதி சிதறடிக்கப்பட்டும் கொல்லப்படுகிற தமது சகோதரர்களின் பிணத்தைப்
பார்க்கப்போய் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொள்ளக் கூடாதென
அதையும் தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.
தலித்துகள்மீது நொடிதோறும் பெருகிவரும்
வன்கொடுமைகளை வெறும் தகவலாகக்கூட அறிந்துகொள்ளும்
முனைப்பற்றவர்கள். சேரிகள்தோறும் பெருகியோடும்
சொந்த மக்களின் ரத்தவெள்ளத்தில் நீந்தி மறுகரைக்குத் தாவியோடி ஊர்க்காரர்களை நத்திப்பிழைக்க
விரும்பும் இவர்கள் தலித்துகளின் காலில் பிணைக்கப்பட்ட சங்கலியாகவும் தலையில்
ஏற்றப்பட்ட சுமையாகவும் இருக்கிறார்கள். தமது சம்பாத்தியத்திற்கு ஒத்தாசையாயிருக்கிற அல்லது ஊறுவிளைவிக்காத வகையிலான
கோரிக்கைகளையே ஒட்டுமொத்த தலித்துகளின்
பிரச்னைகளாக முன்னிறுத்தி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு இயல்பாக
இருக்கவேண்டிய போர்க்குணத்தை மழுங்கடிப்பதில்
வெற்றி பெற்று விட்டார்கள் என்பதை மிகுந்த அவமானத்தோடு இவ்விடத்தில்
ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால், இவர்கள் இவ்வாறு சுயநலப்பிண்டங்களாக உருவாகிவிட்டதற்கு இவர்களை மட்டுமே குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளையும்
அவற்றுக்கு எதிராக இழப்புகளையும் தாங்கிக்கொண்டு
நடைபெற்ற போராட்டங்களையும் பற்றிய வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு
எடுத்தியம்பி, மனிதத்தன்மையோடு வாழ்வதற்காக
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் போராடக்கூடிய நெஞ்சுரத்தை ஊட்டுவதற்கான
முயற்சிகளில் ஏற்பட்ட தொய்வின் விளைவாகவே இவர்கள்
இவ்வாறு உருவாகியிருக்கிறார்கள்.
ஆனால் விதிவிலக்காக சிறுபகுதியினர்,
நிலம் கல்வி வேலை அதிகாரம் ஆகிய எதுவொன்றை விடவும்
தானொரு தலித் என்கிற தன்னுணர்வுதான் ஒருவர் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான ஆதாரத்தை
வழங்கவல்லது என்கிற அரசியல்பார்வை கொண்டவர்களாயுள்ளனர்.
ஆற்றல்படுத்திக்கொள்வது என்பது, சொத்து சேர்ப்பதோ வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வதோ அல்ல - கண்ணியமாய் வாழ்வதற்கான
உரிமையை தற்காத்துக்கொள்வதும் அதற்கெதிரான அச்சுறுத்தல் ஏற்படும்போது
எதிர்த்துப் போராடுவதும்தான் என்கிற புரிதலும் இவர்களுக்கிருக்கிறது. தாங்கள் யார், எதனால் யாரால் எவ்வாறு ஒடுக்கப்பட்டோம், தங்களின் இன்றைய வளர்நிலைக்கு அடிக்கல்லாக
இருப்பது எவரின் தியாகம், வாழ்வின் நோக்கம்தான் என்ன என்பதையெல்லாம் நினைப்பிலும் நடப்பிலும்
பதித்தபடி இயங்கிவருகின்றனர். அவ்வாறு தங்களது உழைப்பும் ஆற்றலும்
அறிவும் கல்வியும் பிறரைச்
சாராமல் சொந்த வாழ்க்கையை நடத்துவதற்கு
மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட
மக்களின் விடுதலைக்கும் பயன்படவேண்டும்
என்கிற உறுதிப்பாட்டுடன் இயங்குகிறவர்களில் தோழர். ஜெயராமனும் ஒருவர்.
தன்னோடு ஒத்தக் கருத்துள்ளவர்களை திரட்டிக்கொண்டு மாற்றுக்கருத்துள்ளவர்களோடு ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்திவருகிற அவர், இந்தக் கடிதத்தின் வாயிலாக
தனது மகன் ஜெயகுமாருடன் தொடங்கியிருக்கிற
அதேவகையான உரையாடல் காலத்தின் தேவை கருதியது.
பல்மருத்துவம் சார்ந்த
கல்வியிலும் ஆய்விலும் உலகளாவிய
அளவில் அறியப்படும்படியான சாதனைகளை நிகழ்த்திவருகிறார் ஜெயகுமார். சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றுக்கு
மரியாதை கூட்டுவதாயிருக்கின்றன அவரது ஆய்வறிக்கைகள். பல்வேறு
நாடுகள் அவரை கௌரவ தூதராக நியமித்து கௌவரமடைகின்றன.
ஆனாலுமென்ன, அவரது மேதமையை கண்டுங்காணாதது போல் இருக்க முயற்சிக்கிறது இந்திய ஆளும் வர்க்கம். ‘இவனுங்களுக்கெல்லாம்
சுட்டுப்போட்டாலும் படிப்பு வராது’ என்று தலித்துகளுக்கு கல்வியுரிமையினை
மறுத்துவந்த இந்த சாதியச்சமூகம் தன்னைப்போன்ற
ஆளுமைகளை எதிர்கொள்ளும் திராணியை
வளர்த்துக்கொள்ள இன்னும் காலம் செல்லும் என்பதை உணர்ந்தவராயிருக்கிறார் என்பதை அவரது கடிதம் வெளிப்படுத்துகிறது. தமது சுயத்தை, உள்ளாற்றலை, கற்கும்
ஆர்வத்தை, தலைமைப்பண்பை வெளிப்படுத்தும்
தலித்துகளை தமக்கு அச்சுறுத்தலாக கருதி சாதியவாதிகள் புறக்கணிப்பது இங்கொன்றும்
புதிதல்லவே.
மதிப்பெண் தொழிற்சாலையாய்
இயங்குகிற பள்ளிக்கூடங்களில் பிள்ளையைச் சேர்த்து, ஒன்பதாம்
வகுப்பிலிருந்தே பத்தாம் வகுப்பு பாடத்தையும் 11ம் வகுப்பிலிருந்தே 12ம் வகுப்பு பாடத்தையும் ராத்திரி
பகலாக அட்டை டூ அட்டை மனப்பாடம் செய்ய வைத்து, போதாக்குறைக்கு தேர்வுமைய
மேற்பார்வையாளரையே ‘கரெக்ட்’ செய்து மைக்ரோ பிட்டும் கொடுத்து, 100 / 100 மதிப்பெண் பெறும் மோசடியை சாதனை என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்தச் சமூகம் ஜெயகுமார் போன்ற அசலான சாதனையாளர்களை கொண்டாட
மறுப்பதில் வியப்பேதுமில்லை.
போலியாக செறிவேற்றிக்கொண்டு மதிப்பெண்களைப் பிதுக்கி பொறியியல் / மருத்துவம்
படித்து ‘அப்ராடில் செட்டிலாகிவிடுகிற’
மகன்/ மகள் வீட்டில் அவ்வப்போது ஆயா வேலை பார்க்க போய்வருவதுதான் இன்றைய பெற்றோர்களின் வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது.
ஆனால் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட
நாடுகளுக்குப் பறந்துகொண்டிருக்கும் ஜெய குமாரை சொந்தநாட்டில் சமூகப்பணி செய்ய வந்து விடச் சொல்கிறவர்களாயிருக்கிறார்கள்
அவரது பெற்றோர்களான டீச்சர்
மணிமேகலையும் டாக்டர் ஜெயராமனும்.
கல்வி மற்றும் ஆய்வுப்புலம் சார்ந்த
தனது மகனின்
சாதனைகளால் பொங்கும் பெருமிதத்தை அடங்கிய
தொனியில் வெளிப்படுத்தும் மருத்துவர்
ஜெயராமன், தன் மகன் தனது தொழில் வாரீசாக அல்லாமல்
கருத்தியல் வாரீசாக வளர்ந்து செயல்பட வேண்டும் என்கிற விருப்பத்தைத்தான் இந்த நீண்ட கடிதத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறார். மனிதத் தன்மையற்றவர்களான சாதியவாதிகள் நாடு முழுவதும் தலித்துகளுக்கு
எதிராக நிகழ்த்தி வரும் வன்கொடுமைகளையும்
ஒடுக்குமுறைகளையும் கவனப்படுத்தி இவற்றுக்கெதிராக
நடைபெறும் போராட்டங்களில் இயன்றவரை
பங்கேற்க வருமாறு தனது மகனுக்கு விடுத்துள்ள அழைப்பு
இது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கத்
தூண்டும் சுயநல உபதேசங்களை மறுதலித்து
உனது அறிவையும் ஆற்றலையும்
நம் சமூகத்தின் விடுதலைக்குப்
பயன்படுத்து என்கிற தோழர்.ஜெயராமனின் அழைப்பு
அவரது மகனை நோக்கியது மட்டுமல்ல. எந்தச் சமூகத்தின் உழைப்பினாலும்
தியாகத்தினாலும் இவ்வளவு உயரத்துக்கு நீ சென்றிருக்கிறாயோ அந்தச் சமூகத்திற்கு நீ திருப்பிச் செய்யவேண்டியதை செய்வதற்கான
தருணம் வந்துவிட்டது, வா என்று நினைவூட்டுகிற இந்த அறைகூவல் ஜெயராமன் ஜெய குமார் என்னும்
குறியீடுகளைத்தாண்டி ஒட்டுமொத்த தலித்துகளுக்குமானதாக
பொதுத் தன்மை கொள்கிறது. தந்தைக்கும்
மகனுக்குமான அல்லது தலைமுறைகளுக்கிடையிலான இந்தக் கடிதப்பரிமாற்றம் புத்தகமாக
உருவெடுப்பதற்கான நியாயத்தையும் அதுவே வழங்குகிறது.
அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா,
மர்மமாய் மரணமடைந்த நத்தம் இளவரசனின் முதலாம்
நினைவுநாள், ஒசூர்.
சாகப்பயப்படாதவர்கள் இன்று வாழப் பயந்ததினால் இந்நிலை.சுகத்திற்கு அடிமையாகி விட்டதனால் மற்ற அடிமைத்தனம் மண்டையில் ஏற மறுக்கிறது.
பதிலளிநீக்குஆகவே ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு இயல்பாக இருக்கவேண்டிய போர்க்குணத்தை மழுங்கடிப்பதில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதை மிகுந்த அவமானத்தோடு இவ்விடத்தில் ஒத்துக்கொள்ளவே வேண்டியிருக்கிறது.