வெள்ளி, மார்ச் 13

வருது வருது விருது வருது... - ஆதவன் தீட்சண்யா




வ்வாண்டுக்கான செருப்பு விருது தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் தொன்மப்புதைகுழியாருக்கு மகிழ்ச்சியைவிட வியப்பே அதிகமிருந்தது. குழப்பம் கலந்த அந்த வியப்புக்கு போதுமான காரணமிருந்தது. மேமேய்ச்சலான இன்றைய வாசிப்புக்கொறிப்புக்காக தான் எழுதவில்லை என்றும் கடவுள் பிறந்து பக்தரின் அவதாரத்துக்காக காத்திருக்கும் தலைகீழ் அதிசயம் போன்று ஏழெட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கருவாகி வரப்போகிற அதிவாசகர்களுக்காகவே எழுதிக்கொண்டிருப்பதாகவும் இதுகாறும் அவர் நம்பிக் கொண்டிருந்தார். எனவே இப்போதே, இந்த நூற்றாண்டிலேயே, தான் வாழும் இக்காலத்திலேயே தனது எழுத்துகள் இப்படி விருது கொடுத்து கொண்டாடப் படுவதை எப்படி விளங்கிக்கொள்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார்.

இப்போதைக்கு யாரும் தன்னை வாசிக்கவில்லை என்பதையே அவர் தனக்குரிய தனித்த கௌரவமாகவும் தகுதியாகவும் கருதி வந்திருந்த நிலையில், விருதுக்கான நடுவர் குழு என்கிற ஒன்று தனது எழுத்துகளை வாசித்திருக்கிறது என்பதை முதலில் அவர் தனக்கிழைக்கப்பட்ட மிகக்கொடிய அவமானமாகவே எண்ணி குமையத் தொடங்கினார். அப்படி வாசித்துவிடும் அளவுக்கு தனது எழுத்து எளிமையாகவும் மலினமாகவும் ஆகிவிட்டதற்கான அறிவிப்புதான் இந்த விருதோ என்று நினைத்தபோது அவரது திரேகம் நடுங்கியது. ‘மிஞ்சிப்போனால் அவர்களால் வெறும் லிபியைத்தான் வாசித்திருக்க முடியும், உனது எழுத்தின் உட்பொருளை விளங்கிக்கொள்ள எந்தக் கொம்பனும் இன்னும் பிறக்கவில்லை...’ என்று அவருக்குள் இருந்த கதாமண்டல கவிச்சாகரனாகிய நாடோடிக்கூத்துக்கும்மியான் சொன்ன சமாதானம்கூட அவரை ஆற்றுப்படுத்திவிடவில்லை.

இதுபோன்ற விருதுகள் எழுத்தாளரின் ஆன்மாவைக் கொல்லும் பாஷாணத்தில் தயாரிக்கப்பட்டவை என்று இதுவரை பேசிவந்திருக்கிற அவர், விருதுக்கு தனது பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து கலவையான உணர்வுகளின் அலைக்கழிப்பில் சிக்கிக்கிடந்தார். எழுத்தைக் கொன்றதற்கு அடையாளமாய் எழுத்தாளனின் நெற்றியில் ஒட்டப்படும் காசு என்று விருதுகளையும் பரிசுகளையும் இதுவரை ஏளனம் செய்ததெல்லாம் தனக்கு கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில்தானா என்றும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார்.  எனவே இந்த விருதை ஏற்பதா வேண்டாமா  என்பதே இப்போதைக்கு அவரது முதல் குழப்பம். ஏற்றுக்கொண்டால் யார்யார் என்னென்ன ஏசுவார்கள், ஏற்காவிட்டால் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்கிற லாபநஷ்டக் கணக்கை எப்படி கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்துப் பார்த்தாலும் விடை என்னவோ பிடிபடாமலே அலைக்கழித்தது. இத்தனை வருட இலக்கிய வாழ்வில் தன்னைத் தேடி வந்திருக்கும் இந்த விருதை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாகவே அவரது மனத்தராசு சாய்ந்தது. ஆனால் விருதுகளுக்கு அப்பாற்பட்ட துறவி என்கிற மகிமையை தக்கவைத்துக்கொண்டே விருதை ஏற்றுக்கொள்ளும் வழியைக் கண்டடைவதற்கும், தனது உட்கிடக்கைக்குப் பொருத்தமான தர்க்கங்களை வருவிப்பதற்கும் அவர் பெரிதும் மெனக்கெட வேண்டியிருந்தது. இருப்பினும் இதுவிசயத்தில் ஜனநாயகப் பூர்வமாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தனது அபிமானிகளிடமே விட்டுவிடுவதெனத் தீர்மானித்தார்.

கவனிக்கவும், இந்த அபிமானிகள் வாசகர்களல்ல, அவரை வாசிப்பவர்களைப் போன்ற சாயல் கொண்டவர்கள். அவர் வெள்ளைத்தாளைக் கொடுத்தாலும்கூட வியந்தும் புகழ்ந்தும் பாராட்டும் விநோதர்கள். அவரது எழுத்தைப் படித்து புரியவில்லை என்று புலம்புவதைவிட புரிந்துகொண்டதாக நம்பும் மனநிலையால் சுகம் காண்பவர்கள். (அவரது பெயரைக் கேட்டதுமே ஸ்கலிதப் பீய்ச்சல் காண்பவர்களும் இதில் அடக்கம்). கடவுள் எப்போதும் பேசமாட்டார் என்கிற உண்மை ஒருபுறமிருக்க, கடவுளின் மொழி தங்களுக்கே புரியும் என்று வாதிடுகிற புரோகிதர்களைப் போன்றவர்கள். கடவுளைவிட புரோகிதருக்கே ஆதாயம் மிகுதி என்பதை ஆண்டாண்டுகாலமாய் அனுபவத்தில் கண்ட இந்த நாட்டில் அவர்கள் புரோகிதர்களாக இருந்துகொள்ள விரும்பியதில் வியப்பேதுமில்லை. அவரது உண்மையான வாசகர்கள் வந்து சேர்வதற்கு இன்னும் ஏழெட்டு நூற்றாண்டுகள் இருப்பதால், அதுவரைக்குமான ஒரு காபந்து சர்க்காரைப்போல இடைக்கால ஏற்பாடாக இவர்கள் மானசீகமாக தங்களைத் தாங்களே வாசகர்களாக நியமித்துக்கொண்டவர்கள். இப்போதைக்கு இவர்களை விட்டால் தனக்கும் நாதியில்லை என்பதால் அவரும் இவர்களை இடைக்கால வாசகர்களாக ஒப்புதல் கொடுத்து வைத்திருந்தார். இவர்களை குஷாலாக்கவே சமீபத்திய பேட்டியொன்றில் ‘வாசகனை நோக்கி நகராத சமூகம் வம்ச விருத்தியற்று அழிந்துப்போகும்’ என்று ‘பஞ்ச் டயலாக்’ ஒன்றையும் உதிர்த்து வைத்திருந்தார்.

அவரது ஆலோசனைப்படி அவரது தலைமையிலேயே கூடிய அபிமானிகள் சபை, இந்தச் செருப்பு விருது விவகாரத்தை குப்புறக் கவிழ்த்தும் குனியவைத்தும் மல்லாக்க கிடத்தியும் மடக்கி நீட்டியும் பலவாறாக விவாதித்தது. அவர்கள் விசயத்தை முதலில் அ) செருப்பு ஆ) விருது இ) கொடுப்பது ஈ) ஏற்பது என்று நான்காக நிரல்படுத்தினார்கள். ஏற்பது என்கிற உபதலைப்புக்கு முன்னால் ஈ என்று இயல்பாகவே வந்துவிட்டதால் அதை மொழியின் ஆசிர்வாதமாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று அவர் சொன்ன விளக்கம் அபிமானிகள் சபைக்கு ஏற்புடையதாக இருந்தது. ஈ என்றால் தருவது, ஈந்தால் ஏற்றுக்கொள்வதுதானே பண்பு என்று அவர் எழுப்பிய தர்க்கத்தின் சூட்சுமத்தை உணர்ந்தவர்கள் சிலிர்த்தடங்கினர். ஈ என்கிற ஓரெழுத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு சிக்கலான புதிர்த்தன்மை கொண்ட பிரச்னைக்கு எளிதாக தீர்வு கண்டுவிட்ட அவரது ரஸவாதத்தின் மாயத்தை மீண்டும் ஒருமுறை போற்றிப் புகழ்ந்து புளகாங்கிதமடைந்த அபிமானிகள் கல்பதுக்கைகளைப்போல சமைந்தனர்.  

செருப்பு விருதினை ஏற்பதென்றாகிவிட்டப் பிறகு அவருக்கு ஏற்பட்ட அடுத்தக் குழப்பம், இந்த விருது பொற்குவையா, பணமுடிப்பா, சான்றிதழா, பாராட்டுப் பத்திரமா என்பதுதான். புதிதாக உருவாக்கப்பட்ட விருது என்பதால் இதில் என்ன கொடுப்பார்கள் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்னதான் கொடுப்பீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களையே தொடர்புகொண்டு கேட்டு அம்பலப்பட்டுப்போகவும் கூச்சமாக இருந்தது. ஒருவேளை செருப்பு விருது என்பதால் செருப்பையே கொடுத்துவிடுவார்களோ என்கிற தனது அச்சத்தை அவர் மெதுவே கசியவிட்டார். அப்படியெல்லாம் இருக்காது. விளக்கு விருதுக்காரர்கள் விளக்கை கொடுப்பதில்லை. இலக்கியத்தோட்டம் விருதுக்காரர்கள் தோட்டம்தொரவை கொடுப்பதில்லை. ஆகவே செருப்பு விருதுக்காரர்களும் செருப்பைக் கொடுக்கப் போவதில்லை. அப்படி செருப்பையே கொடுத்தாலும், இலக்கியத்திற்காக அவர் செருப்பாய் உழைப்பதைக் கொண்டாடும் முகத்தான் அவருக்கு செருப்பு வழங்கப்படுகிறது என்று கூறி ஜமாய்த்துவிடலாம் என்று  அபிமானிகள் வைத்த வாதங்கள் அவரை ஆசுவாசப்படுத்தின.  ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அதன் மணம் ஒன்றுதான் என்பதுபோல, வெவ்வேறு தலைப்புகளில் தான் எழுதினாலும் அவை ஒன்றே போலிருப்பதைப் போல எந்தப் பெயரில் எதை விருதாக கொடுத்தாலும் அதை பணமாகவும் புகழாகவும் பரிவர்த்தனை மதிப்புடையதாக மாற்றிக்கொள்ளும் விதத்தில் நாம்தான் கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். அதே உற்சாகத்தில் அவர்கள், செருப்புக்கே பெருமை சேர்க்கும் செருப்பு, பொற்பாதம் சேரும் கற்பாதுகை, பாதுகைக்குப் பாதுகை என்பது மாதிரியான ஃபிளக்ஸ் பேனர் வாசகங்களைத் தயாரித்தார்கள். செருப்பின் பெயரால் வழங்கப்படும் விருதைப் பெருமைக்குரியதாக்கிவிடும் முழக்கங்களை உருவாக்க கிளம்பிய அவர்கள் கடைசியில், செருப்பு காலுக்கு அழகையும் பாதுகாப்பையும் தரவல்லது, அது பயணங்களை லகுவாக்குவது, தூராதூரங்களுக்கு மனிதர்களை கொண்டு சேர்ப்பது என்று செருப்பின் புகழ்பாடிகளாக திசைமாறிப் போனார்கள். அள்ளைப்பக்கமிருந்தும், அண்ணாந்த படியும், குனிந்தும், நிமிர்ந்தும், விவேகானந்தர் போல மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டும், ரஜினீஷ் போல கைகளை பரக்க விரித்தபடியும் பலவிதமான ஸ்திதிகளில் அவரை புகைப்படமும் எடுத்துத் தீர்த்தார்கள்.

விருதுக்காரர்கள் வெளிநாட்டில் இருந்ததால் விழாவும் அங்கே நடப்பதாகத்தான் முதற்திட்டம். அவ்வாறு நடக்குமானால், இவராக தேடிப்போய் விருதைப் பெற்றதான அபகீர்த்தி பிற்கால வரலாற்றில் பதிவாகிவிடும் என்று அஞ்சினார். மாறாக, விருதுக்காரர்கள் அவரது இடத்துக்கே வந்து கொடுத்துப்போனால், விருது அவரை தேடி வந்ததாக சுபகீர்த்தி பதிவாகும் அனுகூலமிருப்பதைக் கணக்கிட்டு விழாவை அவரது சொந்த ஊரிலேயே நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். முன்னப்பின்ன தெரியாத நாட்டுக்கு ஒத்தையாளாய் கிளம்பிப்போய் மூனாம்பேருக்குத் தெரியாமல் விருதை வாங்கிக்கொண்டு வருவதைவிடவும், இப்படி அபிமானிகள் சூழ்ந்திருக்க சொந்த ஊரில் விருதை வரவழைத்தப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒளிவட்டத்தின் பிரகாசம் மேலும் ஒருசில வாட்ஸ்கள் கூடும் என்பதும் அவரது கணிப்பு. ஆனால், இப்படி சொந்த ஊர் என்று ஒன்றைச் சுட்டுவதால் தானொரு நாடோடி என்று தன்னைப் பற்றி இதுகாறும் உலவவிட்டிருந்த புனைவு கலைந்துவிடுமோ என்று எழும்பிய கவலையை விருது பெறும் ஆசை வென்றது.

மங்கலப்படுத்துவதற்காக முகூர்த்தப்பத்திரிகையின் மூலையில் மஞ்சள் தடவுவதைப்போல கலகம் செய்வதாக நினைத்துக்கொண்டு கருஞ்சேவல் ரத்தம் தெளிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் தயாராகின. மரச்சிற்பமாய் உறைந்திருந்த அணடரண்டப்பட்சிகளையும் புராதனப் புறாக்களையும் தனது வசியத்தால் உயிர்ப்பித்த அவர் அவற்றின் அலகில் கொறிப்பதற்கு குதிரைவாலிக் கதிர்களையும் கால்களில் அழைப்பிதழ்களையும் கட்டி திசைகளுக்கு அப்பாலும் பறக்கவிட்டார். அடையாளமற்ற ஆவிகளையும், ஆவியற்ற சடலங்களையும் வரவழைக்கும் மந்திரமொழியில் எழுதப்பட்ட அந்த அழைப்பிதழின் வாசகங்கள் எதுவும் அவரது  எழுத்தைப் போலவே புரியவில்லை என்றபோதிலும் தேதியும் கிழமையும் இடமுமாவது தெரிந்ததே பெரும்பேறுதான்.

தொன்மப்புதைகுழியாருக்கு செருப்பு விருது கிடைத்ததைக் கொண்டாடவும் உண்டாடவும் நாடே தயாராகிக் கொண்டிருப்பது போன்ற செய்தியை பரப்புவதில் அபிமானிகள் சபை வெறிகொண்டு இயங்கியது. அவர்களது பிரச்சாரத்தைக் கண்டு அரண்டுபோன உள்ளூர் நிர்வாகம் திடுமென வந்திறங்கும் கூட்டத்தைச் சமாளிப்பதற்கென்று சிறப்புப் பேருந்துகளையும் தற்காலிக தங்குமிட முகாம்களையும் தண்ணீர்ப்பந்தல்களையும் (பச்சைத்தண்ணீர்) ஏற்பாடு செய்யத் தொடங்கியது. விழாவை நேரலையாக ஒலிஒளிக்க வந்திறங்கிய ஊடகவியலாளர்கள் கண்ணில்பட்டவர்களிடமெல்லாம் இதுகுறித்து கருத்து கேட்டு மைக்கை நீட்டினார்கள். இலக்கிய முனிக்கு இந்த விருது தாமதமாக வந்த படையல் என்பதே அபிமானிகள் சபையினரின் அங்கலாய்ப்பாக இருந்தது. ஆனாலும் கறிவிருந்தில் கலந்துக்காமப் போனால் சாமி கண்ணைக் குத்திரும் என்கிற ரீதியில்தான் பலரது பதிலும் இருந்தது. கலகக்காரரின் கறிவிருந்தில் மாட்டுக்கறி கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று ஒருவரும், கவனமாக இருந்தல்ல- அவர் தன்னளவில் இயல்பாக இருந்தாலே மாட்டுக்கறி தவிர்க்கப்பட்டுவிடும் என்று இன்னொருவரும் கருத்து தெரிவித்தார்கள். இன்னும் சிலரோ அப்படி என்னதான் விருதாகக் கொடுக்கறாங்கன்னு பார்க்கவந்தோம் என்று வெளிப்படையாகச் சொன்னார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தையும் பெயரையும் மறைத்துக்கொண்ட சிலர், சுண்டக்கா கால் பணம் சுமைக்கூலி முக்காப்பணம் என்பது போல தம்மாத்தூண்டு விருதுக்கு இம்மாம் பெரிய ஆட்டம் போட்டு செலவழிக்கிற ஒரு ஊதாரிய இதுக்கு முன்பு கண்டதுமில்ல கேட்டதுமில்ல என்றார்கள்.

விடிந்தால் விழா, இருப்பு கொள்ளாத தனது மனநிலையை அபிமானிகள் கண்டுபிடித்துவிட முடியாதபடி மறைத்துக்கொண்டிருக்கும் அவஸ்தையால் அன்றிரவு தொன்மப் புதைகுழியாருக்கு கண்ணைக்குத்தினாலும் பொட்டுத் தூக்கமில்லை. விருதாக என்ன கொடுப்பார்கள், அதை பெறும்போது தனது முகபாவமும் தோற்றமும் எப்படி இருக்க வேண்டும், அந்தத் தருணத்தில் பரவசத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது துறவொளியை எப்படி படரவிடுவது என்று பலவாறாக யோசித்தபடி அவரது மனம் அலைபாய்ந்துக் கிடந்தது. பாரம்பரிய உடையுடன்தான் விழாமேடைக்குச் செல்லவேண்டும் என்கிற வைராக்கியத்தால் கோவணத்துடன் செல்வதா அல்லது அதற்கும் முந்தைய காலத்திற்குப் போய் மரவுரி தரித்துக்கொள்வதா என்கிற குழப்பமும் சேர்ந்து அவரை பாடாய்படுத்தியது. ஆதிப்பூர்வ அநாதிக்காலத்து மாந்தன் போல அம்மணமாகவே போனால் என்ன என்று ஏற்கனவே அபிமானி ஒருவர் சொல்லியிருந்த யோசனையை அந்தக்கணமே தலையை உதறி நிராகரித்துவிட்டிருந்தாலும் இப்போது அதுவும் நினைவுக்கு வந்து தொலைத்தது. அவ்வாறு அம்மணமாகவே வரும் பட்சத்தில், அவரது எழுத்தைப் போலவே அவர் உடுத்தியிருக்கும் வஸ்திரமும் அறிவாளிகள் கண்ணுக்கே தெரியும் என்று சொல்லிவிட்டோமானால் ஒரு பயலும் தன்னை முட்டாளென்று காட்டிக்கொள்ள துணிய மாட்டான் என்று இன்னொரு அபிமானியின் உசுப்பேற்றலுக்கு மசியாமல் சுதாரிப்பதற்குள் அவருக்குப் போதும்போதுமென்றாகிவிட்டது. எல்லாக் குழப்பமும் தீர்ந்து கடைசியில் உடைக்குழப்பம் ஊழிக்குழப்பமாக வதைத்தது. ஆடைக்குள் நிலவும் நிர்வாணத்தை எதுகொண்டு மறைக்க என்று  அப்போது தோன்றிய வரியைக் கொண்டு அடுத்த நாவலை எழுதத் தொடங்கும்போது கிணற்றடி உருளையில் உறைந்திருந்த இரும்புக்கோழி கெக்கக்கே எனக்கூவி பொழுது விடிந்துவிட்டதாக அறிவித்தது.  ஒருவேளை அந்த இரும்புக்கோழி தன்னை கேலிசெய்துதான் அவ்வாறு கூவியதோ என்கிற சந்தேகமும் அவருக்கு எழாமலில்லை.

அதிகாலை விமானத்தில் வந்திறங்கிய விருதுக்குழுவினர் ஆட்டம்பாட்டத்துடன் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டனர். அபிமானிகள் ஜோடித்து தோளேற்றி வந்த புஷ்ப பல்லக்கில் அமர்ந்து எல்லோரையும் பார்த்து மந்தகாசமாய் புன்னகைத்து கையசைத்தபடி விழாமேடைக்கு வந்துகொண்டிருந்த விழா நாயகன் தொன்மப்புதைகுழியாருக்கு திடுமென ஏனோ அது தனது இறுதி ஊர்வலம் போலத் தோன்றியது. இதுவரை தன்னால் ஏளனம் செய்யப்பட்டவர்களின் சாபத்தாலோ பில்லிசூனியத்தினாலோதான் இவ்வாறான நினைப்பு தோன்றி தன்னை வதைக்கிறதோ என்று அஞ்சினார். நெற்றியைத் தடவிப்பார்த்து காசு ஏதும் ஒட்டப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டாலும் அவரது பதற்றம் தணியவில்லை. கூலிங்கிளாஸூம் கையிலே கத்தியும் கத்திமுனையில் எலுமிச்சம் பழமும்தான் இல்லையே தவிர பிணத்துக்கும் தனக்கும் யாதொரு வித்தியாசமும் இருக்கிறதா என்று எழுந்தக் கேள்வி அவரை தடுமாற வைத்தது. இலக்கிய முனி தொன்மப்புதைகுழியாரின் மரணத்தைத்தான் இவ்வாறு கோலாகலமாக கொண்டாடுகிறார்களோ என்கிற ஐயமும் அவருக்கு வலுத்தது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுகிய முகத்தோடு பல்லக்கிலிருந்து இறங்கி மேடையில் அமர்ந்தார். விருதுகளுக்கு அப்பாற்பட்ட மோனக்களையேறியதால் அவரது முகம் இப்படியாக காட்சியளிக்கிறது என்று விளக்கமளித்து சூழலை லகுவாக்க முனைந்தார் சரீர சாஸ்திரத்தில் விற்பன்னரான அபிமானியொருவர்.

தொன்மப்புதைகுழியாரது உரையாசிரியர்களாகவும், அருஞ்சொற்பொருள் விளக்குநர்களாகவும் பதவுரை மற்றும் பொழிப்புரையாளர்களாகவும் தம்மைக் கருதிக்கொண்டுள்ள சிலரின் பாராட்டுரைகளிலும் புகழ்மொழியிலும் அரங்கம் நெளிந்துக் கிடந்தது. இதேபோன்ற விருதுகள் பலவற்றை "வாங்கி" முன்னனுபவம் கொண்ட எழுத்தாளர்கள் சிலர் வாழ்த்துரை என்கிற பெயரில் காழ்ப்புரை நிகழ்த்தினர். முத்தாய்ப்பாக, விருதுக்குழுவினர் மூவரும் தாங்கள் கொண்டுவந்த பெரிய பெட்டிகளுடன் மேடையேறிய போது எழுந்த கரவொலியால் நகரமே அதிர்ந்தது. அரங்கத்தில் நிறைந்திருந்த அவ்வளவு கண்களும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் அவர்களோ யாருமே எதிர்பாராத தருணத்தில் திடுமென தமது பெட்டிகளைத் திறந்து அவற்றை தலைகுப்புறக் கவிழ்த்தார்கள். அவ்வளவும் அரதப்பழைய செருப்புகள். என்ன செய்யப்போகிறார்கள் என்று எவரொருவரும் யூகிப்பதற்கு முன்பாக அவர்கள் அந்தச் செருப்புகளால் தங்களது தலையில் மாறிமாறி அடித்துக்கொள்ளத் தொடங்கினார்கள். ‘இவருடைய எழுத்துகளை படிக்க நேர்ந்தமைக்காக இது எங்களுக்கு நாங்களே கொடுத்துக்கொள்ளும் விருது. உங்களில் யாருக்கேனும் தேவைப்படும் என்பதால் நாங்கள் இந்தச் செருப்புகளை இங்கேயே விட்டுவிட்டுப் போகிறோம்...’ என்று சொல்லிய மாயத்தில் அவர்கள் மேடையிலிருந்து மறைந்துபோனார்கள்.

விழா இன்னமும் முடியவில்லை.

2 கருத்துகள்:

  1. நல்ல விறுவிறுப்பாக இருக்கிறது...உங்களின் எழுத்து நடை...பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

    மலர்
    https://play.google.com/store/apps/details?id=com.aotsinc.app.android.wayofcross

    பதிலளிநீக்கு
  2. யாரையோ சொல்கிறீர்களே கோணாங்கித்தனமாக இருக்கிறதே புரியவில்லையே அதுதான் பெருமையோ

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...