குறுக்குசால் - ஆதவன் தீட்சண்யா


நீங்களாகவே உங்கள் கோவணத்தை
உருவியெறிந்ததன் மூலம்
கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததோடு
கஜானாவிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தியதற்காக
உங்கள்மீது கடுங்கோபத்திலிருக்கிறது அரசாங்கம்

உல்லாசம் பீறிடும் கேளிக்கைக்கான ஆவலில்
தன் பரிவாரத்தோடு
உப்பரிகை மாடத்திலிருந்து
மைதானத்தைப் பார்வையிடும் மன்னர்பிரானுக்கு
துயரங்களும் குமுறல்களுமான மன்றாடுதலை
உயிருருகச் சொல்வதற்கு ஒத்திகைப் பார்ப்பதன் மூலம்
மற்றுமொரு குற்றத்தையும் இழைத்தவராகிவிடாதீர்கள் 

தின்பதற்கு எலியும் குடிப்பதற்கு மூத்திரமும்
தட்டுப்பாடின்றி கிடைக்கும் இத்தேசத்திற்கு
விசுவாசம் காட்டும் வாய்ப்புகளை
வேண்டுமென்றே தவறவிடுகிற நீங்கள்
விளைநிலம் வெள்ளாமை என்று உச்சரித்து
தேசவிரோதத்தின் அடர்த்தியை ஏன் கூட்டுகிறீர்கள்

பிடில் வாசித்துக்கொண்டிருப்பதில்
மன்னரோடு
மக்களும் போட்டியிட்டுவரும் நாட்டில்
சூழும் இக்கொடுநெருப்பை  அணைக்க
யாரும் வரப்போவதில்லை
பொசுக்கும் சூட்டுக்குள் சிக்கித் தவிப்போரே
சொந்தக்காலில் தப்பி வாருங்கள்

கிளம்பிப்போன தடம் மறந்துப்போவதற்குள்
சொந்த ஊர் திரும்புங்கள்
பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் இந்தப் பாழ்நிலத்தில்
பட்டொளி வீசி பறக்கும்படியாய் நட்டுவையுங்கள்
நம் தேசியக்கொடியை
ஜப்தி செய்ய வருவோரின் கழுத்தை இறுக்குவதற்காவது
அது தேவைப்படும்.

நன்றி: ஆனந்த விகடன் 3.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக