என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான்.
ஆனா யார்ட்ட சொல்றது? 'உம்' கொட்ட யாரிருக்கா... அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு.
இதுல அடுத்தாளு கதையைக் கேக்க யாருக்கு ஏலும்...? அதனால தான் யாரும் யார்க்கிட்டயும்
எதையும் சொல்றதில்ல. உப்பரிகை மஞ்சத்துல ஒய்யாரமா படுத்திருந்தது, அண்டரண்ட பட்சிக்கிட்ட
அளவளாவிக் கிடந்தது, அகிலும் சந்தனமும் பூசி அரண்மனைத் தடாகத்துல நீராடினது, தாதியும்
சேடியும் தங்கக் கிண்ணத்துல சோறூட்டினதுன்னு பெருமையா சொல்றதுக்கு நாம என்ன ராசகுமாரியா?
மந்திரிமகளா...? கோடுகொடுமையா கெடக்குற பொழப்புல கும்மாளமேது கொண்டாட்டமேது...? சின்னப்பட்டது
சீரழிஞ்சதுன்னு நல்லத்தங்கா கதையாட்டந்தான் நம்ம கதையும்.
கதை சொல்றதில் எங்க பாட்டிக்கு ஈடா இன்னொருத்தர்
பொறந்து வரணும். அவ்ளோ கதை சொல்வா. தெருப்புள்ளைங்க பூராவுக்கும் எங்க வளவுல தான் ராப்படுக்கை.
மழைக்காலத்துல தான் அமுட்டுப்பேரும் படுக்க திண்டாட்டமாயிரும். அந்தா அங்க இடிஞ்சி
குட்டிச்செவரா கெடக்கே அதுதான் அப்ப ஸ்கோல். ஸ்கோல்னா என்னா, ராமம்போட்ட வாத்தியார்
ஒருத்தர் மாசத்துல ரண்டொருநாள் வந்துபோறதுதான். மத்தநாள்ல பூட்டித்தான் கெடக்கும்.
நான்கூட ஒருவருசம் போனேன்.
எங்கூர்லயே மொதமொத படிக்கப் போனவள்னுதான்
எனக்கு பள்ளிகொடத்தாள்னு பேர் வந்தது. எனக்கப்புறந்தான் அஞ்சாறு பொண்ணுங்க சேந்தாங்க.
நாங்க என்னா பண்ணுவம்னா பாட்டியோட அந்த ஸ்கோல் நடைக்கு போயிருவம். மழைக்கு பயந்து ஒண்டியிருக்குற
ஆடுங்க தள்ளியிருக்கும் புளுக்கைய தொவரம்மார்ல ஒதுக்கித் தள்ளினப்புறம் சபை கூடும்.
செவத்தோரமா ஆரம்பிச்சு வட்டங்கட்டி ஒக்காந்தா நான்தான் உம் கொட்டுவேன்னு அடிபிடி நடக்கும்.
கரோமுரோன்னு கூச்சலாயிரும். பத்தாததுக்கு ஆடுங்களும் பயத்துல மொட்டவாலை ஆட்டிக்கிட்டு
செருமும். அடங்கலைன்னா நான் போயிருவேன்னு பாட்டி ஒரு சத்தம் குடுத்தாள்னா போதும் அத்தினி
கூச்சலும் அமிஞ்சிரும். அதுல அதிசியம் என்னான்னா ஆடுங்கக்கூட கம்முனு அடங்கிக் கேக்கிறதுதான்.
பாதிகதையில அஞ்சாறு பேருக்கு தலைசாய்ஞ்சிடும்.
கடைசிவரைக்கும் கதையைக் கேட்டு முடிச்சிட்டுத்தான் தூங்கினேன்னு சொன்னது ஒருத்தருமில்லை.
ஏன்னா பாட்டி ஒருநாள்லயும் முடியற கதையை சொன்னதேயில்லை. மறாநாள் வந்து நேத்து எங்க
நிறுத்தினேன்னு கேட்பாள் ஒருத்தருக்கும் சொல்ல வராது. எல்லாருமே தூங்கிப் போனப்புறமும்
பாட்டி கதை சொல்லிக்கிட்டேயிருந்திருக்கிறா. ஆரம்பிச்சக் கதைய முடிக்கமாட்டாம நாங்கள்லாம்
தூங்கிட்டோம்னு தெரிஞ்சிக்கிட்டே சொல்லிக்கிட்டிருந்தாளோ என்னமோ ... ஆனா கடைசிவரைக்கும்
ஆடுங்க கேட்டிருக்கும்.
சின்னக்கதையா சொல்லு பாட்டின்னா ஒரு
ஊர்ல ஒரு நரியாம் அதோட கதை சரியாம்னு சிரிப்பா. இல்லாட்டி, ஏக்கழுதைங்களா ஏழுசீமைய
கட்டியாண்ட ராசாக் கதைய, பதினெட்டுநாள் பாரதத்த, அல்லிஅரசாணிய, அரவான் பலிதானத்த, பதனாலுவருச
வனவாசத்த, சீதைய ராவணன் சிறையெடுத்தத, அரிச்சந்தரன் மசானங் காத்ததை, ஒங்களுக்கு ஒருராப்பொழுதுல
சொல்லிறமுடியுமான்னு கோவிச்சுக்குவா. அப்புறம் மலையிலிருக்குற சாமிய மடுவுக்கு எறக்கறாப்லதான்.
காலைகைய அமுக்கி கெஞ்சிக் கூத்தாடினப்பறம் ராசியாவாள். இத்தினிக் கதைய சொன்னவ ஒரு நாளும்
அவ கதைய சொன்னதுமில்ல. சொல்லுன்னு நாங்களும் கேட்டதுமில்ல. கதைன்னாலே அது சாமிங்க,
ராசாராணிங்க இல்லின்னா மந்திரவாதிங்க, மந்திரத்தை தந்திரத்தால ஜெயித்த மதியூகிங்களைப்
பத்திதான் இருக்கும்னு பாட்டியும் நாங்களும் நெனைச்சிருந்திருக்கோம்.
ஒவ்வொருத்தருக்கும் தனியா ஒரு கதை இருக்குன்னு
நீ சொல்றது ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆனா அதையெல்லாம் மறுக்கா நெனைச்சுப் பாக்குற தகிரியமும்
பலமும் வேணுமே...கதைன்னா பொழைச்சது மட்டுமா... ஆசைப்பட்டதையும் அடக்கிவச்சதையுமெல்லாம்
கூட சொல்லிவரணுமே... அதையெல்லாம் சொன்னா தாங்குமா பூலோகம்... ஆம்பளையா பொறந்திருந்தா
ஆகிருதியா பொழச்சிருக்கலாம்னும் பொம்பளயா பொறந்திருந்தா பொத்திபொத்தி வளத்திருப்பாங்கன்னும்
ஆளாளுக்கு மாத்திமாத்தி ஆசைப்பட்டாலும் அததுக்கு அள்ளையில ஒரு சொள்ளையிருக்கு.
கனகம்பீரமான ஆம்பளையாள்கூட கழுவத்தெரியாத
கவண்டப் பிள்ளைங்ககிட்டயும் கணக்கய்யரூட்டு பொம்பளைங்ககிட்டயும் கைகட்டி நிக்கவேண்டியிருக்கு.
ஊரெல்லாம் ஒடுங்கிநடுங்கி வர்ற அப்பேர்ப்பட்ட ஆம்பளைக்கிட்ட கூட ஒருவார்த்தை தகிரியமா
பேசமுடியறதில்ல பொம்பளைக்கு. மேலன்னத்துல நாக்கு ஒட்டிக்குது. அதுவே பரவால்ல. இல்லாட்டி
குடிச்சுட்டு வந்து சரிக்குசரியா ஆம்பளையோட வழக்காடறியாடின்னு நெப்புநிதானமில்லாம அடிக்கிறதை
வாங்கிக்க எவ ஒடம்புல தெம்பிருக்கு...?
ஏய்...ஈனசாதி நாய்களா...உங்க கதைய பேசத்தான்
இங்க வந்தீங்களா.. சாயந்திரம் வரப்புமேல ஏறுறப்ப கூலியில கொஞ்சம் கொறைச்சுட்டா ஒத்துக்குவீங்களா...
வேலை நேரத்துல வேலையப் பாக்காம கதைசொல்ல கிளம்பிட்டீங்க.... டேய், யார்டா நீ... மேயற
மாட்டை நக்கற மாடு கெடுத்தாப்ல...
தப்பா நினைச்சுக்காதப்பா... நீ போய்டு...
பண்ணாடி பாத்துட்டாரு... இதுக்குமேல பேசினா சாணிப்பாலா சவுக்கடியான்னு தெரியாது.. அவசியம்
என்கதைய தெரிஞ்சிக்கணும்னா ராத்திரி சாப்பாட்டுக்கப்பறம் வளவுலத்தான் படுத்திருப்போம்.
அங்க வேணும்னா வாங்க...சொல்றேன்.
வரப்பில் பண்ணாடியும் கொத்துக்காரனும்
வரும்போது எந்த வேலையாளும் பேசக்கூடாதுதானே... பொழுதுவிடிய வந்தால் பொழுதமரும் வரைக்கும்
வேலையாட்கள் நேரம் கூலி தருபவர்க்கு மட்டுமே பாத்தியப்பட்டது. அதனால் பேச்சும் கதையும்
இங்கேயே நிற்கிறது.
வா தம்பி, கொஞ்சம் சாப்பிடறியா... சாம
சோறு, கொள்ளுப்பருப்பு தொவையல்... நல்லாருக்கும். சாப்புட்டே வந்திட்டியா ... சரி மறுக்கா
வர்றப்ப சாப்டாம வா. நீ போனப்புறமும் பண்ணாடி வஞ்சிக்கிட்டுத்தான் இருந்தாரு... நான்
ஒன்னும் பேசல. பேசிறத்தான் முடியுமா... தப்பித்தவறி பேசிப்புட்டா அப்பறம் எங்கப்போய்
அண்டுறது... புலிப்பல் பதக்கம் போட்ட செயினும் சிலுக் ஜிப்பாவும் மாட்டிக்கிட்டு இந்தாளைவிடவும்
அட்டூழியம் பண்ற பண்ணைங்களையெல்லாம் சவுக்கால வெளுத்து எங்களாட்டம் கூலிங்களுக்கு விமோசனம்
தர்ற எம்சியாருக்காவத்தான் சூரியனுக்கு ஓட்டுப் போட்டம்... என்னா ரொணத்தைக் கண்டோம்...
நாயை அடிச்சாக்கூட வாயில்லாத சீவனை ஏண்டா
அடிக்கிறேம்பாங்க நாலுபேர். ஆனா எங்காளுங்க 44 பேரை உசுரோட கொளுத்திப் போட்டாங்களே
இந்த பண்ணையாருங்கெல்லாம் சேந்து... எங்களுக்காவ சாட்டையுந் தூக்கவேணா சவுக்கும் எடுக்கவேணாம்
அனுசரணையா ஒரு வார்த்தை பேச எந்த எம்சியாரும் வரல. அதைவுடு. அந்த சனியத்தப் பேசி இப்ப
என்னா வரப்போவுது...
பொழுதும் குனிஞ்சத்தலை நிமிராம களையலசினதால
ஏகத்துக்கும் இடுப்புவலி. தண்ணியிலயே இருந்ததுல காலெல்லாம் ஜவஜவன்னு குஞ்ஜு இழுக்குது.
அதோடயே வந்து கஞ்சி காய்ச்சறதுக்குள்ள பிள்ளைங்க பசிபசின்னு மொணங்கிக்கிட்டே சொணங்கிப்
படுத்துருச்சிங்க. எழுப்பி ஆளுக்கொரு வாய் ஊட்டி படுக்க வைக்கறதுக்கே இவ்ளோ நேரமாயிருச்சு.
இன்னம் சட்டிமுட்டி ஒதுக்கிவச்சு கட்டைய கிடத்தறதுக்கு வவுநேரமாகும். ச்சோன்னு ஓஞ்சு
படுக்கறப்ப தூங்கிக்கிட்டிருக்கற ஆளுக்கு முழிப்பு தட்டிரும். தூரமாகி ரத்தம்நிக்காத
நாள்லயும் பக்கத்துல படுக்காட்டி கொலையாட்டம் போடும் புத்தி அதுக்கு.
அதை கண்டுக்காம வுட்டுட்டு ஒரு வேத்தாளை
ஒக்கார வச்சு என்கதைய சொல்லவந்தா வூட்டு ஆம்பளை ஒத்துக்குமா... எங்கூடப் படுக்காம எவனையோ
இழுத்தாந்து இவ்ளோ நேரத்துக்கு என்னாடி பேச்சு... யாருடி அவன்... எமுட்டு நாளா நடக்குது
இந்த கேப்மாரி வேலைன்னு பிலுபிலுன்னு சண்டைக்கு பிடிச்சுக்கும்... கள்ளப்புருசன் வச்சிருக்கிறவ
புருசன் கமுக்கமா இருப்பான். எதுமில்லாதவளைப் புடிச்சிக்கிட்டு ஏலம்போடும் இந்த மனுசன்.
அடிஉதைன்னா பிரச்னையில்லை. எப்பவும் வாங்கறதுதான்... ஆனா அவுசாரி பட்டம் கட்டி அடிச்சா
உடம்பு தாங்கினாலும் மனசு தாங்காதய்யா. நீ போயிட்டு இன்னொருக்க வாயேன்... அப்ப என்
கதைய சொல்றேன்...
''பாதுகாக்கப்பட்ட இடம்.
அத்துமீறி பிரவேசிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்'' என்று மானசீக போர்டு தொங்கும்
குடும்பத்திற்குள் வேற்றாள் நுழைய முடியாதாகையால் கதை தொடங்கப்படாமல் முடங்கியேக் கிடக்கிறது
என்பதை அறிவீராக.
*****
ஏயப்பா... இவ்ளோநாள் கழிச்சும் ஞாபகம்
வச்சிருந்து வந்துட்டியே... வயக்காட்டுலதான் ஒழப்பிக்கிட்டிருப்பாள்னு எங்கூருக்குப்
போய் தேடிப் பாத்துட்டு இங்க வந்தியா... நான் ரோட்டுவேலைக்கு வந்துட்டேன்னு உனக்கு
யார் சொன்னாங்க... ஊர்ல ஒரு குஞ்சுகுளுவான் கூட இருந்திருக்காதே... எல்லாருந்தான் ராத்திரியோட
ராத்திரியா ஊரைக் காலிபண்ணிட்டு வந்துட்டமே.. பொறந்த ஊர் புகுந்த ஊருங்கறதுக்காக புள்ளைகுட்டிங்களோட
பட்டினிகெடந்து சாகமுடியுமா.. உட்டுட்டு வரமுடியாதளவுக்கு நமக்குன்னு அங்கென்ன நஞ்சையும்
புஞ்சையுமா கெடக்கு... சொந்த மடமில்லாதவங்களுக்கு, ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தமடம்.
மழையா மாரியா... ஒருபருவம் தப்பினா உருட்டிபொரட்டி
பிழைச்சுக்கலாம். முப்போகம் விளையற பூமியில புல்பூண்டு ஒண்ணுமில்ல.. என்னைத்தேடி போனப்ப
நீயே பாத்திருப்பியே... கஞ்சியில்லாமக் கூட இருந்துடலாம். தண்ணியில்லாம இருக்கமுடியுமா...
அய்யோ சாமி தாகத்துல உசிர்போகுதுன்னு கத்தினாலும் இந்தான்னு ஒருசொட்டு குடுக்க யார்க்கிட்ட
இருக்கு...? கெணறுமுழுக்க வறண்டு தவக்களையும் மீனும் செத்து நாறுது...
தாதுவருசப் பஞ்சத்துலயும் இது கொடுமைன்னு
பொலம்பிக்கிட்டேயிருந்த எம்மாமனார்ல ஆரம்பிச்ச வைசூரி பாதிசனத்தை அள்ளிக்கிட்டுப் போயிருச்சு...
மிச்சமிருந்தவங்களுக்கு ஒரே கிலேசம்... நீஞ்சத்தெரியாத பிள்ளைய தண்ணிக்குள்ள அமுக்கினாப்ல
தத்தளிச்சுப்போயிட்டம். பொணத்தை குளிப்பாட்டக்கூட தண்ணியில்ல. இடுகாட்டுல மேல்மண்ணையே
பொறண்டியெடுக்க முடியல. அப்பறமெங்க குழியெடுத்து பொதைக்கறது... அதுக்காவ நாயோ நரியோ
இழுத்துக்கிட்டுப் போகட்டும்னு விட்டுடமுடியுமா... சாதி வழக்கமில்லேன்னாலும் எரிச்சோம்...
காலக்கொடுமைய என்னன்னு சொல்றது... பசிதாங்காம
பிள்ளைங்க எலி பிடிச்சு சுட்டுத் தின்னதை நெனைச்சா இப்பவும் நெஞ்சு பதறது. வயித்துக்கு
சேரலையோ இல்ல மனசு ஒம்பலயோ என்னான்னு தெரியல, புள்ளைங்க கொமட்டி கொமட்டி வாந்தி எடுக்குதுங்க.
வெளிய சொல்லமுடியுமா... மானம் போயிரும். ஆனது ஆகட்டும்னு இவங்கப்பன் அன்னிக்கு ராத்திரி
கோயில்கலசத்துல பதனம்பண்ணி வச்சிருந்த வெதைதானியத்த களவாண்டு கொண்டாந்துருச்சி. ஆரியமும்
கொள்ளும் தான்.
அஞ்சாறு படி சோளமிருக்கும். நெல்லையெல்லாம்
ஏற்கனவே யாரோ களவாடியிருக்காங்க. ஊர் அடுப்பெல்லாம் அவிஞ்சுக்கெடக்கறப்ப எங்கூட்டு
கூரையில மட்டும் பொகை எழுந்தா சந்தேகம் வந்துடுமேங்கிற பயத்திலயே பாதி உசுரு போயிருச்சு.
அதில்லாம, மொதல்ல புள்ளையார் வாகனத்த பொசுக்கித் தின்னிருக்கு புள்ளைங்க, இப்ப அப்பன்காரன்
பங்குக்கு கோயில்லயே கைவச்சாச்சு... இப்பிடி அடந்தாப்ல பண்ற தெய்வகுத்தம் அடுக்குமா
குடும்பத்துக்குன்னு எம்மாமியா அனத்தல்வேற...
எங்கூட்ல தான் இப்படின்னுயில்ல. ஊரே
ஒருவாக்கா முழிபிதுங்கிக்கெடக்கு. இன்னம் எத்தினி நாளைக்கு இந்த நிம்சைன்னு ஊர்க்கூட்டம்
போட்டு எல்லாரும் பஞ்சம் பொழைக்க எங்காச்சும் போறதுன்னு முடிவுபண்ணி ஊரைவிட்டுக் கிளம்பினம்.
அஞ்சாறு குடும்பம் டும்கூர் போயிருக்கு. கொஞ்சம்பேர் ஆந்திராவுக்கு. பெங்ளுர் போலாமான்னு
எம்மச்சாண்டார் சொன்னதை யாரும் ஏத்துக்கல.
அங்க ஏற்கனவே போன நம்மூர் சனங்க நாயோட
மல்லுகட்டிப்பொழைக்குது. நாமளும் போட்டியா அங்க எதுக்குன்னுதான் திருட்டுரயிலேறி இங்க
வந்தம். அந்தா தெரியுதே அந்த மரத்தடியில தான் இருக்கோம். ஒரு சம்சாரி தலைக்கு மூணுபடி
ஆரியமாவு. சாத்துசெலவுக்கு சந்தைநாள்ல அஞ்சோ பத்தோ தருவாங்க. சம்பளம் கூலின்னு எதும்
கணக்கா பேசல. இப்போதைக்கு கால்வயித்துக்காவது கஞ்சியும் காத்தாட கட்டையக்கெடத்த ஒரு
எடமும் போதும்னு ஆயிருச்சு. அதுக்குமேல என்னா வேணும் ஒரு மனுசனுக்கு....
பழக்கமில்லாத வேலைதான். ஆனா கத்துக்கிட்டம்.
இந்தா இந்த புண்ணெல்லாம் தார் தெறிச்சு பழுத்ததுதான்... எனக்காச்சும் பரவால்ல, எங்கூட்டுக்காரருக்கு
தார் சூடு ஒம்பாம வெளிக்கிருந்தா ரத்தரத்தமா போகுது. எதுக்கும் அசராத மனுசன் இப்ப தவியா
தவிச்சுத் துடிக்கிறத கண்கொண்டு பாக்கமுடியல. பெரிய புள்ள இங்கதான் இருக்கா. களி கிண்ட
தெரியல இன்னம். கட்டியும் புட்டையுமாயிடுது. ஆனா இங்க அக்கம்பக்கம் காட்ல பண்ணைரக்கிரி
பறிச்சாந்து வயனமா அவ காய்ச்சுற சாறுதான் அவங்கப்பனுக்கு புடிக்குது. சின்னவ காளேஸ்பரத்துல
என்தம்பியூட்ல இருக்கா.
மத்தியான சோறு போடறதால ஸ்கோல் போறா.
அவளும் இங்க எங்களோடயே வந்திருக்க வேண்டியவதான். எம்மாமனார் சாவுக்கு வந்திருந்தவன்கூட
கௌம்பிப்போனவ அங்கியே நின்னுட்டா. இந்த வைகாசி வந்தா மூணுவருசமாகப்போவுது. புள்ளை இந்நேரம்
நெடுநெடுன்னு வளந்திருப்பா. கண்ணுலயே இருக்கற மாதிரியிருக்கு... அவளையும் கூட்டியாந்திருக்கணும்
கையோட. அழாதீங்கன்னு சொல்றது உங்களுக்கு ரொம்ப சுளுவு. பெத்தவளால எப்பிடி முடியும்...?
அய்யய்யோ... சளி மேல உழுந்துருச்சா... வெள்ளைசட்டையில அப்பிடியே தெரியுமே... அழுதுக்கிட்டே
எதோ ஞாபகத்துல சிந்தி சொழட்டிட்டேன்... தப்பா நெனைச்சுக்காதப்பா... சரி...சரி...கிளம்பு...
மேஸ்திரி வர்றான்... பேசிக்கிட்டிருக்கறதப் பாத்தான்னா வள்ளும்பான்...
''ஆட்கள் வேலை செய்கிறார்கள்.
வேறுபாதையில் செல்லவும்'' என்று மேஸ்திரி நிறுத்திச் செல்லும் அறிவிப்பு பலகையில் உள்ளதை
கடைபிடிக்காமல் ஒரு சித்தாளிடம் பிறத்தியார் பேசுவதோ சித்தாள் பிறரிடம் பேசுவதோ நெடுஞ்சாலைத்துறையின்
நடைமுறை விதிகளை மட்டுமல்ல, ‘பேச்சை குறைப்பீர் உழைப்பை பெருக்குவீர்’ என்ற இருபதம்சத்
திட்டத்தையும் மீறுகிற குற்றமாகவும் கருத இடமுண்டாகையால் கதை இப்போதும் துவங்கமுடியாமல்
நிற்கப் போகிறது என்பதை மடையர்களும் அறிந்துகொள்ளக்கூடும். கதை இல்லாவிட்டால் என்ன...
கவியரசர் கண்ணதாசன் உங்களுக்காகவே எழுதியிருக்கும் இந்த பாட்டைக் கேளுங்களேன்...
அறுபதுகோடி வயிறு நிறைந்திட
இருபதம்சத் திட்டம் வந்ததம்மா...
இருபதம்சத் திட்டம் வந்து
என்ன கிழித்தது என்று பாட்டைக் கேட்கும்போதே நீங்கள் யோசிப்பது அரசின் உளவுத்துறைக்கு
தெரிந்துவிடும் பட்சத்தில் உங்கள் முதுகுத்தோலும் உதடும் கிழியும் அபாயமிருப்பதை அறியுங்கள்.
உயிர் வாழ்வதற்கான உரிமையே கிழித்தெறியப்படும் எமர்சென்சியில் நீங்கள் யோசிப்பது சட்டப்பூர்வமாக
தடை செய்யப்பட்டுள்ளது. சுதந்திரம், ஜனநாயகமெல்லாம் பறிபோய்விட்டாலென்ன ரயில்கள் தாமதமின்றி
குறித்த நேரத்தில் வருவதற்காகவும் ரேசன்கடையில் எடைக்குறைவின்றி பொருட்கள் கிடைப்பதற்காகவும்
சந்தோசமடையுங்கள்.
பிரயாணம் போகவும் ரேசன் வாங்கவும்
மக்களிடம் காசில்லையே என்று தேசவிரோதமாக யோசிக்காதீர். அப்புறம் புல்டோசரோடும் விருத்தி
நரம்பை வெட்டியெடுக்க கத்திரியோடும் சஞ்சய்காந்தி வரக்கூடும். ஆமாம், தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறடி பாயும். பசுவும் கன்றும் முட்டி பரலோகம் சேர்ந்தவர்களின் லிஸ்டை பார்க்க
விரும்புவோர் அணுகவேண்டிய முகவரி: ஜெயபிரகாஷ் நாராயண், இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு மற்றும்
நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று அடுக்குமொழி பேசுவதற்கு முன்பிருந்த கருணாநிதி.
நாலைந்துநாள் தாடியை மழித்துக்
கொள்ளப்போனவன் பெண்கள் தங்கள் கதையைச் சொல்வதற்கு எத்தனைத் தடைகள் பார்த்தீர்களா என்றான்
பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம். பாத்தா படிச்ச ஆளா தெரியறீங்க... சலூனுக்குள்ளாற அரசியல்
பேசக்கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்கறதை படிக்கமாட்டீங்களா... அடுத்தவன் கொள்கைய மதிக்கற
பண்பை வளத்துக்குங்க சார்... என்ற அறிவுரைக்கு கீழ்படிந்து வெளியே தலைகாட்டாமல் வீட்டிலேயே
முடங்கிக் கிடந்தான் வெகுகாலம். அதனாலும் கதையின் கதி இப்படியானது.
வா கண்ணு.. நல்லாருக்கியா....கண்ணில்லேன்னாலும்
உன்குரல் ஞாபகத்துல இருக்கய்யா. கடைசியா ரோட்டு வேலையில பாத்தது.. அவரு செத்தப்பறம்
தனியா ஆம்பிளைத் துணை இல்லாம வெளிய எங்கயும் போகக் கூடாதுன்னிட்டான் தம்பி. சரின்னு
அவன்வூட்லயே கொஞ்சநாள் இருந்தோம். காதுதான் கூடப்பிறந்துச்சு, தோடுமா கூடப் பிறந்துச்ச...?
அவம்பொண்டாட்டி கண்டதுக்கெல்லாம் நொடுக்குநொடுக்குன்னா. அவங்களையும் பகைச்சுக்கிட்டு
எங்கப்போறது வயசுக்கு வந்தப்புள்ளைங்களோட.... அரளிக்கொட்டையோ ஒடுவன்தழையோ ஆளுக்குக்
கொஞ்சம் தின்னுட்டு மாஞ்சிரலாமான்னு கூட நெனைச்சேன்...
ஊரையே அழிச்சு முழுங்கின அப்பேர்பட்ட
வைசூரி கூட பொழைக்கட்டும்னுதானே நம்மள உயிரோட விட்டுச்சு... அப்பறம் ஏன் நாம சாவணும்னு
யோசிச்சுத்தான் பேசாம இருந்துட்டேன் இத்தினிவருசமா... ஆம்புளப்புள்ள வேணும்னு எந்தம்பியே
பெரியவளை ரண்டாந்தாரமா கட்டிக்கிட்டான்... சக்காளத்தியாளா வருவான்னு தெரியாம கவுடத்து
வூட்ல சேத்தினனேன்னு அவம்பொண்டாட்டி இன்னமும் சாபம்விடுறா... ஆனா எம்மவளுக்கும் பொட்டையாத்தான்
பொறந்தது... அன்னையிலயிருந்து, மாமன் முன்ன மாதிரியில்லம்மா... போக்கே சரியில்ல, நாம
வேற எங்கியாச்சும் போயிறலாம்னு சின்னவ நச்சரிச்சா.
படிச்சப்புள்ளை இல்லியா... கொஞ்சம் தகிரியம்...
அவளாவே அங்க இங்க சுத்தி இந்த வேலையில சேந்துட்டா... தம்பிக்கு இதுல விருப்பமில்ல.
அவனுக்கு வேற கணக்கு இருந்திருக்கும்போல.. டவுன்ல புள்ளை ஒத்தையா இருக்கப்படாதுன்னு
சொல்லிட்டு நானும் வந்துட்டேன் சின்னவக்கிட்டே. பாவம் பெரியவ... இவன் குடிக்கும் கும்மாளத்துக்கும்
அவ எங்கயிருந்து ஈடுகட்டப்போறா...
ஆமா நீ ஏன் இப்பிடி வலுக்கோலா என்கதையக்
கேட்டுத் திரியறே... டவுன்காரங்க கதையெல்லாம் உனக்கு பிடிக்கலயா இல்லே கேட்டுக்கேட்டு
புளிச்சிருச்சா... காலம்போன காலத்துல என்னைக்கேட்டா எந்தக் கதைய சொல்றது... திரும்பிப்
பாக்கற மாதிரியா இருக்கு நான் பொழச்ச பொழப்பு... இல்லே இப்ப இருக்குற இருப்புதான் சொல்லிக்கறாப்ல
இருக்கா... இந்தா ஊரே அடங்கிப்போச்சு, காத்தால போன புள்ளை இன்னம் வூடு திரும்பல. கண்ணவிஞ்ச
இந்தக் குருடிக்கு அவ வந்தாத்தான் ஒருவாய் சோறு... எப்ப வருவாளோ மவ...
இந்த சின்னவ இருக்காளே, இவ இருக்கறதே
பெரிய கதைதான்... இவ பொறந்ததும் எம்மாமியாக்காரி ரண்டாவதும் பொட்டையான்னு கறுவிக்கிட்டே
இருந்தா. அப்பிடி இப்பிடின்னு நல்லதும் பொல்லதும் சொல்லி இவளை கொன்னுப் போடறதுக்கு
வூட்டாளுகளை ஒத்துக்க வச்சுட்டா. எதுத்து என்னால ஒருவார்த்தை பேசமுடியல. மாலைமாலையா
அழுதுகிட்டிருக்கேன். ஆம்பிளையாளுங்க வெளியப் போய்ட்டாங்க. மத்தியானம். தாவரத்துல கிடத்தி
பால் குடுத்துக்கிட்டிருக்கேன். வெடுக்குன்னு சிசுவைப் புடுங்கிக்கிட்டு போனவ வூட்டுள்ளப்போய்
தாள் போட்டுக்கிட்டா. கொழந்தை வர்வர்னு கத்துது.
கத்தறேன் கதறறேன் ஏன்னு கேக்க ஒரு நாய்
வரல... ஆனதுஆகட்டும்னு கூரைத்தடுக்கை பிரிச்சுக்கிட்டு உள்ற எறங்கிப் பாக்கறேன்...
சக்கரைத்தண்ணிய கொழந்தை உடம்பு முழுக்க பூசிவிட்டிருக்கா. அடித்தேவிடியா எறும்புக்கு
படையல் போடறதுக்காடி எம்புள்ளை...ன்னு மயித்த இழுத்துப் போட்டு பொரட்டியெடுத்துட்டேன்
அவளை. நான்மட்டும் அப்ப உள்ளாற போகாட்டி சக்கரைத்தண்ணி வாசத்துக்கும் ருசிக்கும் ஊர்லயிருக்குற
அத்தினி எறும்பும் புள்ளைய கடிச்சிருக்கும். வலிதாங்காம கத்திக் கத்தி தொண்டை காய்ஞ்சு
நாவடங்கி செத்திருக்கும். ம்ஹ¥ம்... என்னிக்கோ செத்திருக்க வேண்டியவ... அந்த புண்ணியவதிதான்
இன்னிவரைக்கும் என்னைத் தாங்கிக்கிட்டிருக்கா.
இன்னங் கொஞ்சநேரத்துல அவ வந்துடுவா.
கல்யாணமாகாத ஒரு பொண்ணு வூட்ல இப்பிடி இருட்டினப்பறம் ஒரு ஆம்பளை இருந்தா நாலுபேர்
நாலுவிதமா சொல்வாங்க... தயவுசெஞ்சு நீ போயிருப்பா... என்கதைய திருத்தமா கோர்த்து சொல்லணும்னா
அதுக்கு எம்மவதான் பொருத்தம். வேணும்னா நாளைக்கு அவளோட ஆபிஸ்ல போய்ப்பாத்து பேசு...பாத்து
பத்திரமா போப்பா... வழியெல்லாம் இருட்டு...
கிழவி சொன்ன இருட்டு வழிமுழுக்க நிரம்பியிருந்ததால்
திசைமாறிப் போய்விடக்கூடிய அபாயம் உண்டென்ற அச்சத்தோடேயே வீடுதிரும்பியதால் கதைகேட்க
போனவனுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டது என்ற டிரமாடிக் அல்லது சினிமாடிக் திருப்பத்தை
நீங்கள் விமர்சனமின்றி ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனவே அவன் பரபரப்பாய் வெளியிட்டு
பெயரெடுக்க விரும்பிய உண்மைக்கதை இன்னும் தொடங்கவேயில்லை. (இன்னொரு) எனவே எவ்வித மனவுறுத்தலுமின்றி
நீங்கள் வழக்கமான அம்புலிமாமா அல்லது அக்ரகாரத்து அம்மாஞ்சிகளின் கதைகளையோ, கிராமியக்கதைகள்
என்ற பெயரில் கம்மாயில் குளிக்கும் பெண்களின் கக்கத்தில் எத்தனை மயிர் என்கிற ஆய்வுகளையோ
படித்து பொழுதை எப்படியாவது போக்குமாறு நேர்ந்துவிடப்படுகிறீர்கள்...
பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கிவந்து
எடைபோட்டு லாரியில் ஏற்றி எங்கேயோ எதற்கோ அனுப்புகிற அந்த அலுவலகத்தை கண்டுபிடிப்பது
அத்தனை கடினமில்லை. செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நம் செல்வம்... என்ற பெரிய
பலகைக்குப் பின்னிருந்து வெளியே வந்தவள் கிழவியா அவளின் மகளா என்று துல்லியமாய் பிரித்தறிய
முடியவில்லை. பின்கொசவம் முன்கொசவம் தாண்டி அம்மாவுக்கும் மகளுக்கும் அடிப்படையில்
வேறெந்த வித்தியாசத்தையும் காணமுடியாமலிருந்தது. கிழவியின் முகத்திலிருந்த துயரத்தின்
அத்தனை ரேகைகளும் இவளுக்குமிருந்தன. சிசுவிலேயே பதிந்துவிட்ட அச்சவுணர்வினாலோ என்னவோ
மேலெங்கும் மொய்த்து ஊர்கிற எறும்புகளிடமிருந்து தப்பிக்கத் துடிப்பவளைப்போன்று பதற்றத்தோடேயே
இருந்தாள். ஓயாமல் இருகைகளாலும் நினைவில் கடிக்கும் எறும்புகளை துரத்தியபடியுமிருந்தாள்.
குப்பைக்காகிதங்களின் வீச்சத்தை மீறி அவள் திரேகத்திலிருந்து சர்க்கரைத் தண்ணியின்
வாசம் இப்போதும் வீசிக்கொண்டுதானிருக்கிறது.
அடுத்தநாளே நீங்க வருவீங்கன்னு எங்கம்மா
சொல்லியிருந்தா. நீங்க ஏன்வரலேன்னு விசாரிச்சப்ப உங்களுக்கு மறை கழண்டுருச்சிங்கிற
தகவல் கிடைச்சது. ஏற்கனவே நீங்க லூசாயிருக்கறதாலத்தான் எங்கம்மா கதையக் கேக்க நீங்க
வந்துபோறீங்கன்ற என்னோட அபிப்ராயத்தில் எந்த மாற்றமுமில்லை. இருந்தாலும் இன்னிக்காவது
வந்தீங்களேன்னு சந்தோசம். ஆனா என்ன பேசுறது...? ஏன் இவ்வளவு காலமா பேசமுடியாம இருக்கோம்கிறதை
வேணும்னா பேசலாம். பேசமுடியாததுக்கு இன்னின்னார்தான் ஜவாப்தாரின்னு குற்றம்சாட்டலாம்.
இல்லேன்னா எங்களுக்கே தைரியமில்லாதப்ப, யாரைச்சொல்லி என்ன புண்ணியம்னு நொந்துக்கலாம்.
ஆனா முடிவு என்னன்னா நாங்க பேசவேப் போறதில்லைங்கறதுதான்.
மத்தவங்க எப்படியோ நானெல்லாம் ரொம்ப
முற்போக்குவாதின்னு சொல்லிக்கிற உங்களாட்டம் ஆட்கள்கூட பெண்ணை என்னன்னு பாக்குறீங்க...
அந்தா பாருங்க, அந்தநாய் கம்பத்துல ஒண்ணுக்கடிக்குது. அதே உபாதை உங்களுக்கு வந்துட்டா
பஸ்ஸ்டேன்டோ பள்ளிக்கூட காம்பவுண்டான்னு பாக்கமாட்டீங்க... ஆயிரம்பேர் ஊர்வலம் போனாலும்
அவுத்துக்கிட்டு நிப்பீங்க. ஆனா அப்படியொரு பொது இடத்துல புடவைய வழிச்சுக்கிட்டு நான்
உட்காந்துரமுடியுமா.... என்ன இருந்தாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு கொழுப்பும் ஆங்காரமும்
இருக்கக்கூடாதுன்னோ தெனவெடுத்து திரியறான்னோ நினைக்கறதைத்தவிர உங்களுக்கு வேறென்ன யோசிக்கத்தெரியும்...?
இந்த ‘என்ன இருந்தாலும்’கிற வார்த்தைக்கு
பின்னால் ஒளிஞ்சிக்கிட்டுத்தான் பெண்ணை வெறும் உடம்பா சதையா பாக்கற உங்க ஊளைப்புத்தியை
களத்தில் இறக்குகிறீர்கள்.... இப்படி பேசறது தவிர்க்கமுடியாம ஆண்களை குற்றம்சாட்டுவதாகத்
தானிருக்கும். தனிப்பட்ட ஆம்பளைகள் இதற்கு பொறுப்பேற்க முடியாதுன்னாலும் அதில் தானுமொரு
அங்கம்னு நினைக்கிறதாலேயே நீங்கக்கூட எனக்கு எதிரா மாறுறதுக்கான வாய்ப்பிருக்கு. வேலைக்குப்போற
பொம்மனாட்டிகள்ல 90 சதம்பேர் ஒழுக்கங்கெட்டவங்கன்னு பெரியவா (பெரியவான்னா காண்டாமிருகத்துக்கோ
யானைக்கோ பொறந்தவர்னு நீங்க நினைச்சுக்க மாட்டீங்கதானே...) சொன்னது சரிதான்னு கொட்டையெழுத்துல
போடுவீங்க... ‘பொம்பளைன்னா அடக்கஒடுக்கமா இல்லாம இப்படியா பேச வர்றது... அப்படியே பேசவந்தாலும்
அடக்கஒடுக்கமா இருக்கறதைப்பத்தி பேசவேண்டியதுதானே... படிச்சிருக்கோம்கிற திமிர்ல என்னென்ன
பேசுறா...’ன்னு எகிறுவீங்க.
எங்கம்மா காலத்திலாவது பகல் மட்டுந்தான்
பண்ணாடிகளுக்கு சொந்தம். இப்பவெல்லாம் ராத்திரிகளும்கூட எங்களுக்கில்லை. நாங்கள் இப்போது
நைட்ஷிப்டுகளுக்கும் வருகிறோம். அதனால் பகலோ இரவோ பூட்டியிருக்கும் நுகத்திலிருந்து
நாங்கள் நிமிர்ந்துவிடமுடியாது. நிமிர்ந்து நிற்கிற இல்லேன்னா நிமிராமலேயே கூட பேசத்துணிகிற
ஒரு காண்டிராக்ட் தொழிலாளியை - அதிலும் ஒரு பெண்ணை - விரும்புகிற முதலாளியோ ஆணோ இதுவரை
பிறக்கவில்லை.
.நீங்க கேக்கறீங்களேன்னு இதையெல்லாம்
நிஜமல்ல கதைன்னோ கதையல்ல நிஜம்னோ நீங்க போடுற மேடையிலயும் நாங்கவந்து பேசமுடியாது.
ஏன்னா பேசிட்டு வந்தப்பறமும் நாங்க பழையமாதிரியேதான் வாழப்போறோம்.. பழசை மாத்தாத எந்தப்பேச்சும்
வெறும்பேச்சு மட்டுமில்ல வெட்டிப்பேச்சும்தான். நேரத்தை போக்க வழியில்லாதவங்க பேசிக்
கலையலாம். இல்லைன்னா யாரையாச்சும் பேசவிட்டு ரசிக்கலாம். அதுக்குன்னு பாப்பையாக்களும்
சுகி சிவம்களும் லியோனிகளும் இருக்காங்க. எங்களை விட்டுடுங்க.
இப்போது கிளம்புங்கள்....
நாலெழுத்து படித்தாலே பொம்பளைகளுக்கு
பொடனி சிலுத்துக்கும் என்று தான் உள்ளுக்குள் ரகசியமாய் வைத்திருக்கும் கருத்தை இந்தப்
பெண்ணும் உறுதிபடுத்திவிட்டதாக கருதி மகிழ்ச்சியடைந்தவன் வழக்கம்போல் கதை எழுதத் தொடங்கிவிட்டான்.
ஏன் தங்கள் கதையை சொல்லமுடியவில்லை என்று ஒவ்வொரு பெண்ணும் சொல்ல விரும்புவதையே அவளின்
கதையாக அவன் எழுதப்போகிறான் இனியும். நீங்களும் படித்துத் தொலைவீராக....‘ஒரே ஒரு ஊர்ல....’
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக