உலகப் புகழ்பெற்ற ஆப்பிரிக்க மார்க்ஸிய அறிஞர், அண்மையில் காலஞ்சென்ற சமிர் அமின் [Samir Amin] பிரெஞ்சு மொழியில் எழுதிய இக்கட்டுரை ஜேம்ஸ் மெம்ப்ரெஸால் [James
Membrez] ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டு ‘மன்த்லி ரெவ்யூ' ஏட்டின் செப்டம்பர் 2014இல் ‘The Return of Fascism in Contemporary Capitalism’ என்னும் தலைப்பில் வெளி வந்துள்ளது.
ஆங்கிலம் வழித் தமிழாக்கமும் குறிப்புகளும்: எஸ்.வி. ராஜதுரை.
**
இந்தக் கட்டுரையின் தலைப்பே, அரசியல்
அரங்கிற்குள் பாசிசம் திரும்பி வந்துள்ளதை சமகால முதலாளியத்தில் ஏற்படுள்ள நெருக்கடியுடன்
இணைத்துப் பார்ப்பதாக அமைவது தற்செயலானது அல்ல. பாசிசம் என்பதும், நாடாளுமன்ற ஜனநாயகத்திலுள்ள நிச்சயமற்றத்தன்மைகளை நிராகரிக்கின்ற
எதேச்சாதிகார போலிஸ் ஆட்சியும் ஒன்றல்ல. முதலாளிய சமுதாயத்தை நிர்வகிப்பதில் சில
திட்டவட்டமான சூழ்நிலைமைகளில் எதிர்கொள்ளப்படுகின்ற சில சவால்களுக்கான
குறிப்பிட்டதொரு அரசியல் எதிர்வினைதான் பாசிசமாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை
பல ஐரோப்பிய
நாடுகளில், குறிப்பாக 1930களிலிருந்து
1945வரை, முன்னணியில் இருந்து
அதிகாரத்தைச் செலுத்திவந்த அரசியல் இயக்கங்களை பாசிசம் என்று சரியாகக் கூற முடியும்.
இத்தாலியின் பெனிட்டோ முஸ்ஸோலினி (Benito Mussolini), ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler), ஸ்பெயினின்
ஃப்ரான்ஸிஸ்கோ ஃப்ராங்கோ (Francisco Franco), போர்ச்சுகலின்
அந்தோனியோ டெ ஒலிவெய்ரா ஸலாஸர் (António de Oliveira Salazar), ஃபிரான்ஸின் ஃபிலிப் பெதெய்ன் (Philippe Pétain), ஹங்கேரியின்
மிக்லோஸ் ஹோர்த்தி (Miklós Horthy), ரொமேனியாவின் அயோன்
அந்தோனெஸ்க்யூ (Ion Antonescu), குரோஷியாவின் அன்ட்டே
பவெலிச் (Ante Pavelic) ஆகியோரின் ஆட்சிகள் இதில் அடங்கும்.
பாசிசத்திற்கு பலியான சமுதாயங்களின் பன்முகத்தன்மையானது - வளர்ச்சியடைந்த பெரிய
முதலாளிய சமுதாயங்கள், ஆதிக்கத்துக்குட்பட்ட சிறிய முதலாளிய
சமுதாயங்கள், வெற்றிகரமான யுத்தத்துடன் சம்பந்தப்பட்டிருந்த
சமுதாயங்கள், யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியின் விளைபொருள்களாக
இருந்த சமுதாயங்கள் ஆகிய இரண்டு வகை சமுதாயங்களும் இவற்றில் அடங்கும்- இந்த
சமுதாயங்கள் அனைத்தையும் நாம் ஒன்றாகச் சேர்ப்பதைத் தடுக்கின்றது. எனவே, பல்வகைக் கட்டமைப்புகளும் பல்வகைச் சூழல் இணைவுகளும் இந்த சமுதாயங்களில்
ஏற்படுத்திய வேவ்வேறு வகை பாதிப்புகளை நாம் திட்டவட்டமான முறையில் எடுத்துக் கூறியாக வேண்டும்.
ஆயினும், இந்தப் பல்வகைத்தன்மையைத் தாண்டி, பாசிச
சமுதாயங்கள் அனைத்துக்கும் பின்வரும் இரு பொதுப் பண்புகள் இருந்தன:
(1) சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில், அந்த
பாசிசங்கள் அனைத்துமே முதலாளியத்தின் அடிப்படை நெறிகளை - குறிப்பாக நவீன ஏகபோக
முதலாளியம் உள்ளிட்ட முதலாளியத் தனிச்சொத்தை- கேள்விக்குட்படுத்தாத வகையில்
அரசாங்கத்தை நிர்வகிக்க விரும்பின. அதனால்தான், பாசிசச்
சொல்லாடல்களில் ‘முதலாளியம்', ‘செல்வந்தர்களின்
ஆட்சி' ஆகியன நீண்ட வசைமாரிகளுக்கு
உட்படுத்தப்பட்டிருந்தபோதிலும், இந்த பாசிசங்கள்
முதலாளியத்தை நிர்வகிப்பதற்கான வேவ்வேறு வடிவங்களாக இருந்தனவேயன்றி, முதலாளியம் நிலவுவதற்கான நியாயத்தைக் கேள்விக்குட்படுத்துகின்ற அரசியல்
வடிவங்களாக இருக்கவில்லை. இந்தப் பல்வேறு வகை பாசிசங்களால் முன்வைக்கப்பட்ட ‘மாற்றுத் திட்டங்களை'ப் பரிசீலனை செய்கையில்,
பாசிசச்சொல்லாடல்களின் ’உண்மைத் தன்மையில்’
ஒளிந்துகொண்டிருக்கும் பொய் புலப்பட்டு விடுகின்றது. இந்தச்
சொல்லாடல்கள் முதலாளியத் தனிச்சொத்து என்னும் முக்கியப் பிரச்சினையைப் பொறுத்தவரை
எப்போதுமே மௌனம் சாதித்து வந்தன. பாசிசம் மட்டுமே, முதலாளிய
சமுதாயத்தின் அரசியல் நிர்வாகம் எதிர்கொண்ட சவால்களுக்கான ஒரே ஓர் எதிர்வினையாக
இருக்க வேண்டியதில்லை என்றாலும், கொந்தளிப்பான, ஆழமான நெருக்கடிகள் தோன்றும் சூழல் இணைவுகளில்தான் ஆதிக்க மூலதனத்துக்கு
பாசிசம் மட்டுமே ஆகச்சிறந்த தீர்வாக, ஏன் சிலவேளை
சாத்தியமான ஒரே தீர்வாக உருவாகின்றது. ஆக, நமது பகுப்பாய்வு இந்த
நெருக்கடிகள் மீது கவனம் குவிக்க வேண்டும்.
(2) நெருக்கடியில் உள்ள முதலாளியச் சமுதாயத்தை நிர்வகிப்பதற்குப் பாசிசத்தைத்
தேர்வு செய்தல் என்பது எப்போதுமே - இதை ஒரு வரையறையாகக்கூடக் கொள்ளலாம்- ‘ஜனநாயகத்தை'த் திட்டவட்டமாக நிராகரிப்பதை
அடிப்படையாகக் கொள்கிறது. நவீன ஜனநாயகத்திற்கு அடிப்படையாக உள்ள கோட்பாடுகளையும்
நடைமுறைகளையும் (பல்வகைக் கருத்துகளை அங்கீகரித்தல், பெரும்பான்மையைத்
தீர்மானிக்கத் தேர்தல் வழிமுறைகளை நாடுதல், சிறுபான்மையினரின்
உரிமைகளுக்கு உத்தரவாதம் செய்தல் முதலியன) அகற்றிவிட்டு, அவற்றுக்கு
மாற்றீடாக ஒட்டுமொத்தமான கட்டுப்பாடு, ‘மாபெரும் தலைவ'ரினதும் அவரது முகவர்களினதும் அதிகாரத்துக்கு அடிபணிதல் என்னும்
மதிப்பீடுகளை உருவாக்குகின்றது. மதிப்பீடுகள் இவ்வாறு தலைகீழாக மாற்றப்படுவதுடன்
கூடவே, அடிபணிதலை நியாயப்படுத்துவதைச்
சாத்தியமாக்குவதற்காகப் பின்னோக்கிய கருத்துகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதும்
நடக்கிறது. கடந்தகாலம் என்று சொல்லப்படுவதற்கு (மத்தியகாலத்துக்குத்) திரும்பிச்
செல்வது அவசியம் என்று பிரகடனப்படுத்துதல், அரசு மதம் (State
Religion) அல்லது ‘இனம்' அல்லது ‘இனத்துவம்' (‘தேசம்')
என்பதன் பண்புகள் என்று சொல்லப்படுவனவற்றுக்கு அடிபணிதல் ஆகியன
பாசிச சக்திகளால் பயன்படுத்தப்படும் கருத்துநிலைச் சொல்லாடல்
கருவிகளாக அமைகின்றன.
இந்த இரு
பண்புகளும் நவீன ஐரோப்பிய வரலாற்றில் காணப்பட்ட பலவேறு பாசிச வடிவங்களுக்குப்
பொதுவானவை. அந்த பாசிச வடிவங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்:
1. உலகம் முழுவதிலுமான அல்லது குறைந்தபட்சம் பிரதேச அளவிலான,
முதலாளிய அமைப்பில் மேலாதிக்கம் செலுத்தும் சக்திகளாக
வளர்ச்சியடையும் வேட்கை கொண்டிருந்த முக்கிய, ‘வளர்ச்சியடைந்த'
முதலாளிய அரசுகளின் பாசிசம்.
இந்த வகையான
பாசிசத்திற்கு முன்மாதிரியாக இருப்பது ஜெர்மானிய நாஜிசம். ஜெர்மனி, 1870களிலிருந்து பெரிய
தொழில்வளர்ச்சி அரசாகவும், அந்த சகாப்தத்தில் இருந்த மேலாதிக்க அரசுகளுடனும் (அப்போது முதல் நிலையில் மகா பிரிட்டனும்,
இரண்டாம் நிலையில் பிரான்சும் இருந்தன) மேலாதிக்க சக்தியாக வளர
ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நாட்டுடனும் (அமெரிக்கா) போட்டிபோடக் கூடியதாகவும்
வளர்ந்திருந்தது. 1918ஆம் ஆண்டில் அதற்கு ஏற்பட்ட
தோல்விக்குப் பிறகு, தனது மேலாதிக்க ஆசையின் தோல்வியால்
ஏற்பட்ட பின்விளைவுகளை அது சமாளிக்க வேண்டியிருந்தது.
ஹிட்லர் தெளிவாகத் தமது திட்டத்தை வகுத்தார்: ரஷியாவும்
அதற்கு அப்பாலுள்ள பகுதிகளும் உள்ளிட்ட ஐரோப்பியப் பிரதேசத்தில் ‘ஜெர்மனி'யின் மேலாதிக்கத்தை, அதாவது,
நாஜிசத்தின் எழுச்சிக்கு உதவி செய்த ஏகபோக நிறுவனங்களின் முதலாளிய
மேலாதிக்கத்தை நிறுவுதல் என்பதுதான் அந்தத் திட்டம். இதன் பொருட்டு அவர், தமது முக்கிய எதிராளிகளுடன் சமரசம் செய்து கொள்வதற்கும்கூடத் தயாராக
இருந்தார்: அதாவது ஐரோப்பாவையும் ரஷியாவையும் தாம் எடுத்துக்கொண்டு, சீனாவை ஜப்பானுக்கும், ஆசியாவின் பிற பகுதிகளையும்
ஆப்பிரிக்காவையும் மகா பிரிட்டனுக்கும், இலத்தின் அமெரிக்க
நாடுகளை அமெரிக்காவுக்கும் கொடுத்துவிடுவது என்னும்
சமரசத்துக்குத் தயாராக இருந்தார். அத்தகைய சமரசம் சாத்தியமானது என்று
நினைத்ததுதான் அவரது தவறு: மகா பிரிட்டனும் அமெரிக்காவும் அதற்கு உடன்படவில்லை;
அந்த நாடுகளுக்கு மாறாக, ஜப்பானோ அந்த சமரசத்
திட்டத்தை ஆதரித்தது.
ஜப்பானிய
பாசிசமும் இதே வகையைச் சேர்ந்ததுதான். 1895ஆம் ஆண்டிலிருந்தே ஜப்பான் கிழக்கு ஆசியா முழுவதிலும் தனது
மேலாதிக்கத்தைத் திணிக்க விரும்பியது. ஜப்பானில் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த
முதலாளியம், தொடக்கத்தில் ‘பேரரசாட்சி'
வடிவத்தில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த வடிவம், மேல் தோற்றத்துக்கு ‘தாராளவாத' நிறுவனங்களை
(தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் போன்றவற்றை) அடிப்படையாகக் கொண்டிருந்தாலும்,
உண்மையில் ஜப்பானின் பேரரசர், நவீனமயமாக்கலால்
மாற்றம் பெற்றிருந்த மேற்குடியினர் (aristocracy) ஆகியோரின்
முழுமையான கட்டுப்பாட்டின் கீழேதான் இருந்தது. பின்னர் அந்த வடிவம், இராணுவ உயர் தலைமையால் நேரடியாக நிர்வகிக்கப்பட்ட மூர்க்கத் தனமான வடிவமாக
மாறியது. பேரரச/பாசிச ஜப்பானுடன் நாஜி ஜெர்மனி கூட்டணி அமைக்க, மகா பிரிட்டனும் (பேர்ல் ஹார்பர் துறைமுகத்தின் மீது 1941இல் ஜப்பானியப் போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்திய பிறகு)
அமெரிக்காவும் ஜப்பானுடன் மோதின. ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து சீனாவிலும் போர்
நடந்தது. அந்த எதிர்ப்புப் போரில் ஈடுபட்டிருந்த கோமின்டாங்கில் இருந்த குறைபாடுகள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்டுகள்
வழங்கிய ஆதரவால் நிவர்த்தி செய்யப்பட்டன.
2. இரண்டாம் நிலை முதலாளிய அரசுகளின் பாசிசம்
இதற்கு
முதன்மையான எடுத்துக்காட்டாக இருப்பவர் இத்தாலியின் முஸ்ஸோலினி. பாசிசம் என்பதை
(அதன் பெயரையும்) உருவாக்கியவர் அவர்தான். 1920களில் ஏற்பட்ட முதலாளிய நெருக்கடி, வளர்ச்சியடைந்து
வந்த கம்யூனிஸ்ட் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இத்தாலிய வலதுசாரிச்
சக்திகளிடமிருந்து (பழைய மேற்குடி வர்க்கம், முதலாளி
வர்க்கம், நடுத்தர வர்க்கங்கள்) வந்த எதிர்வினைதான்
முஸ்ஸோலினியிசமாகும். உலகம் முழுவதையும் மேலாதிக்கம் செய்வது ஒருபுறமிருக்கட்டும்,
ஐரோப்பா முழுவதிலும்கூட மேலாதிக்கம் செய்யும் விருப்பம் இத்தாலிய
முதலாளி யத்துக்கோ, அதன் அரசியல் கருவியான முஸ்ஸோலினியின்
பாசிசத்துக்கோ இருக்கவில்லை. ரோமப்பேரரசை
மறுநிர்மாணம் செய்யப் போவதாக முஸ்ஸோலினி என்னதான் தம்பட்டமடித்துக் கொண்டாலும்,
(மத்தியதரைக் கடல் பகுதியின் எஜமானனாக இருந்த) மகா பிரிட்டனுடனோ,
நாஜி ஜெர்மனியுடனோ கூட்டணி வைப்பதன் மூலமே தம்மை நிலைநிறுத்திக்
கொள்ள முடியும் என்பதை அவர் புரிந்துகொண்டிருந்தார். சாத்தியமான இரு கூட்டணிகளில்
எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இரண்டாம் உலகப் போர் தொடங்கும் வரை முஸ்ஸோலினிக்கு
ஊசலாட்டம் இருந்து வந்தது.
ஸலாஸர், ஃப்ராங்கோ ஆகியோரின் பாசிசமும் இதே வகையைச் சேர்ந்தவை தான்.
குடியரசுக் கொள்கையை ஆதரித்த தாராளவாதிகளிடமிருந்தோ, சோசலிசக்
குடியரசுவாதிகளிடமிருந்தோ வந்த அச்சுறுத்தலுக்கான எதிர்வினையாக ஸ்பெயினின்
வலதுசாரிச் சக்திகளாலும் கத்தோலிக்கத் திருச்சபையாலும் ஆட்சியில்
அமர்த்தப்பட்டவர்கள்தாம் அந்த இரு சர்வாதிகாரிகளும். இந்தக்
காரணத்தால்தான், (கம்யூனிச-எதிர்ப்பு) என்னும் போர்வையின்
கீழ் ஜனநாயக-விரோத வன்முறையை மேற்கொண்ட அவர்கள் ஒருபோதும் முக்கிய ஏகாதிபத்திய
அரசுகளால் ஒதுக்கிவைக்கப்படவில்லை. 1945ஆம் ஆண்டுக்குப்
பிறகு அமெரிக்கா அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தது ('நேட்டோ’வின் நிறுவன உறுப்பினர்களிலொருவர் ஸலாஸர்;
தனது நாட்டில் அமெரிக்காவின் இராணுவத் தளங்களை நிறுவ ஸ்பெயின் இசைவு
தந்தது). அமெரிக்காவைப் பின்பற்றி, இயல்பாகவே பிற்போக்கு
முதலாளிய ஒழுங்கமைப்பை உத்தரவாதம் செய்கின்ற ஐரோப்பிய சமுதாயமும் (European
Community; இது இப்போது ஐரோப்பிய ஒன்றியம் [European Union] என்று அழைக்கப் படுகிறது) அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது. போர்ச்சுகலில்
1974இல் நடந்த ‘கார்னேஷன் புரட்சி'க்கும் 1980இல் ஃப்ராங்கோவின் மறைவுக்கும்
பிறகு, இந்த இரு சமுதாய அமைப்புகளும் (ஸ்பானிய, போர்ச்சுகல் பாசிச சமுதாய அமைப்புகள் -
எஸ்.வி.ஆர்.) நமது சகாப்தத்திலுள்ள ‘குறைந்தபட்ச ஜனநாயக அரசாங்கங்க'ளின் முகாமில்
சேர்ந்து கொண்டன.
3. தோற்கடிக்கப்பட்ட அரசுகளின் பாசிசம்
இவற்றில்
பிரான்ஸின் விஷி அரசாங்கம், பெல்ஜியத்தில்
லியோ டெக்ரேய் (Leon Degrelle) தலைமையில்
இருந்த அரசாங்கம், நாஜிகளால் ஆதரிக்கப்பட்ட ‘ஃப்ளெமிஷ்' போலி அரசாங்கம் ஆகியன அடங்கும். பிரான்ஸில் மேல்தட்டு வர்க்கங்கள், மக்கள்
முன்னணிக்குப் பதிலாக ஹிட்லரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன (இந்த விஷயம் பற்றி அன்
லெக்ரோ-ரிட்ஸ் [Anne-Lecroix-Ritz] எழுதியுள்ள நூலைப்
பார்க்கவும்). தோல்வியுடனும் ‘ஜெர்மானிய ஐரோப்பா'க்கு அடிபணிதலுடனும் தொடர்புடையனவாக இருந்த இந்த பாசிசங்கள், நாஜிகளின் தோல்விக்குப் பிறகு பின்வாங்கிப் பின்னணிக்குச் சென்றுவிட்டன.
பிரான்சில் இந்த பாசிசம், நாஜி-எதிர்ப்புப்
போராட்டக்காரர்களின் கவுன்சில்களுக்கு ( பிரான்ஸில் நாஜிகளுக்கு எதிராக
நடத்தப்பட்ட பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து வழிநடத்திய அமைப்புகள் -
எஸ்.வி.ஆர்.) வழிவிட்டுச் சென்றுவிட்டது. இந்தக் கவுன்சில்கள் குறிப்பிட்ட
காலத்திற்கு கம்யூனிஸ்டுகளை இதர நாஜி-எதிர்ப்புப் போராளிகளுடன் (குறிப்பாக,
தளபதி டி காலுடன்) ஒன்றிணைத்தன. ஆனால், இந்தக்
கவுன்சில்களின் பரிணாம வளர்ச்சி வேறு திசையில் சென்றது. அதாவது, (நாஜிச-பாசிசத் தாக்குதல்களால் பாதிப்படைந்த) ஐரோப்பிய நாடுகளின்
மறுநிர்மாணம் தொடங்கப்பட்டு, பிரான்ஸ் மார்ஷல் திட்டத்திலும்
நேட்டோவிலும் சேர்ந்து, அமெரிக்க
மேலாதிக்கத்திற்கு விருப்பத்துடன் அடிபணிந்தது. பாசிச-எதிர்ப்புப் போராட்டத்தில்-
இதில் முதலாளிய எதிர்ப்புப் போராட்டமும் உள்ளுறைந்திருந்தது - உருவான தீவிர
இடதுசாரி சக்திகளிடமிருந்து பழைமைவாத இடதுசாரி சக்திகளும், கம்யூனிச-எதிர்ப்பு
வலதுசாரி சோசலிச-ஜனநாயகவாதிகளும் நிரந்தரமான முறிவை ஏற்படுத்திக் கொண்டன.
4. கிழக்கு ஐரோப்பிய சார்பு (dependent) முதலாளியச்
சமுதாயங்களின் பாசிசம்
கிழக்கு
ஐரோப்பாவிலிருந்த முதலாளிய சமுதாயங்கள், மேற்சொன்ன சமுதாயங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. போலந்து, பால்டிக் அரசுகள், ரொமேனியா, ஹங்கேரி,
யூகோஸ்லேவியா, கிரீஸ், போலந்தின்
ஆட்சியின் கீழ் இருந்த மேற்கு உக்ரெய்ன் ஆகியவற்றின் சமுதாயங்களே அவை. அங்கு
இருந்தது பிற்போக்கான, எனவே சார்பு முதலாளியம் ஆகும்.
முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில்,
இந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்து வந்தன.
இருப்பினும், ஹிட்லரின் திட்டத்துடன் அவற்றுக்கிருந்த
அரசியல் தொடர்புகளை ஒவ்வொன்றாகப் பரிசீலிப்பது அவசியம்.
போலந்தில்
ரஷிய ஆதிக்கத்தின் (ஜார் ரஷிய ஆதிக்கத்தின்- எஸ்.வி.ஆர்.) மீதிருந்த பழைய பகைமை, சோவியத் யூனியனுக்கு எதிரான பகைமையாக மாறியது. இதை
ஊக்குவித்தவர்கள், போலிஷ் மக்களிடையே செல்வாக்குப்
பெற்றிருந்த கத்தோலிக்கப் போப்பும் அவரது சீடர்களுமாவர். பிரான்ஸில் இருந்த விஷி
அரசாங்கத்தைப் போலவே போலந்தும் இயல்பாகவே ஜெர்மனியைச் சார்ந்து பிழைக்கும் நாடாக
மாறியிருக்கும். ஆனால், ஹிட்லரால் அதைப் புரிந்துகொள்ள
முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை ரஷியர்கள், உக்ரெய்னியர்கள்,
ஸெர்பியர்கள் ஆகியோரும்கூட யூதர்கள், ரோமாக்கள்
(ஜிப்ஸிகள் - எஸ்.வி.ஆர்.), இன்னும் பல இனத்தவரைப் போலவே முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களாக
இருந்தனர். ஆகவே, நாஜி ஜெர்மனியுடன் அணி சேர்ந்த போலிஷ்
பாசிசம் என்பதற்கு இடம் இருக்கவில்லை.
இதற்கு மாறாக, ஹோர்த்தியின் ஆட்சியின்கீழ் இருந்த ஹங்கேரி, அன்டோனெஸ்குவின் தலைமையில் இருந்த ரொமானியா ஆகியன, நாஜி
ஜெர்மனிக்கு அடிமைப்பட்ட கூட்டாளிகளாக நடத்தப்பட்டன.
இந்த இரு நாடுகளிலும் இருந்த பாசிசங்கள், அந்தந்த நாட்டுக்கே
உரிய சமுதாய நெருக்கடிகளின் விளைவாகத் தோன்றியவைதான்: ஹங்கேரியில் சிறிது காலமே
நீடித்ததும் பேலா குன்னின் (Bela Kun) தலைமையில் இருந்ததுமான
கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு, ‘கம்யூனிசம்' பற்றி உருவாக்கப்பட்டிருந்த பீதி, ரொமானியாவில்
ஹங்கேரியர்களுக்கும் ரூத்தேனியர்களுக்கும் எதிராகத் திரட்டப்பட்ட தேசியவெறி ஆகியன
இந்த நாடுகளில் பாசிசத்தை உருவாக்கின.
யூகேஸ்லாவியாவில்
ஹிட்லரின் ஜெர்மனியும் அதனையடுத்து முஸ்ஸோலினியின் இத்தாலியும் ‘சுதந்திர' குரோஷியாவை ஆதரித்தன. இந்த ‘சுதந்திர' குரோஷியாவின் நிர்வாகம், கத்தோலிக்கத் திருச்சபையின் தீர்மானகரமான ஆதரவு பெற்றிருந்த ஸெர்பிய-விரோத
உஸ்டாஷி (Ustashi) என்னும் பாசிச அமைப்பிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தது; அதேவேளை, ஒழித்துக்கட்டப்பட
வேண்டிய மக்கள் பிரிவினரில் ஸெர்பியர்களையும் சேர்த்திருந்தனர் நாஜிகள்.
தொழிலாளர்
வர்க்கப் போராட்டங்கள், அவற்றுக்கு சொத்துடைமை வர்க்கங்கள் காட்டிய
எதிர்வினை ஆகிய இரண்டிற்குமான எதிர்கால வாய்ப்புக்கான சூழ்நிலைமையை ரஷியப் புரட்சியானது,
1939ஆம் ஆண்டுக்கு முந்தைய சோவியத் யூனியனில் மட்டுமல்லாது, ரஷியா இழந்திருந்த பிரதேசங்களான பால்டிக் நாடுகள், போலந்து
ஆகியவற்றிலும் மாற்றியிருந்தது. 1921ஆம் ஆண்டு ரீகா
ஒப்பந்தத்தை அடுத்து, பேலாரஸ்
நாட்டின் மேற்குப் பகுதிகளையும் (வோல்னியா), உக்ரெய்னையும்
(முன்பு ஆஸ்திரியப் பேரரசிடமிருந்த தென் கால்ஸியா, ஜார்
பேரரசில் ஒரு மாகாணமாக இருந்த வட கால்ஸியா) போலந்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இந்தப்
பிரதேசம் முழுவதிலும், 1917ஆம் ஆண்டு தொட்டு (ஏன், முதல் ரஷியப் புரட்சி நடந்த 1905ஆம் ஆண்டிலிருந்தே)
இரண்டு முகாம்கள் வடிவம் கொண்டன: ஒன்று, தங்களது நன்மைக்காக
தீவிரமான நிலச் சீர்திருத்தத்தை விரும்பிய விவசாய வர்க்கத்தின் பெரும்
பகுதியினரிடமும் அறிவாளிகளின் வட்டாரங்களிலும் (குறிப்பாக யூதர்களிடம்) பெரும்
ஆதரவைப் பெற்றிருந்த சோசலிச ஆதரவு முகாம் (இது பின்னர் போல்ஷ்விக் ஆதரவு முகாமாக
மாறியது); மற்றொன்று, அனைத்து நில
உடைமை வர்க்கங்களிடையே இருந்த சோசலிச-எதிர்ப்பு முகாம் (சோசலிச எதிர்ப்பின்
காரணமாக இந்த முகாம், பாசிச செல்வாக்கின் கீழ் இருந்த ஜனநாயக
விரோத அரசாங்கங்களுக்கு பரிவு காட்டியது). இந்த இரு முகாம்களுக்கிருந்த
வேறுபாடானது பால்டிக் நாடுகள், பேலாரஸ், மேற்கு உக்ரெய்ன் ஆகியன சோவியத் யூனியனில் மீண்டும் ஐக்கியப்பட்டபோது,
மேலதிக அழுத்தம் பெற்றது.
ஒருபுறம், போலிஷ் தேசியவெறிக்கும் (போலிஷ் குடியேற்றங்களை உருவாக்குவதன்
மூலம், போலந்துடன் இணைக்கப்பட்டிருந்த பேலாரஸ், உக்ரெய்னியப் பகுதிகளை ‘போலிஷ்மயமாக்குவதில்'
விடாப்பிடியாக இருந்த தேசியவெறி) அந்தத் தேசியவெறியால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இருந்த முரண்பாட்டின் காரணமாகவும்; மறுபுறம், போலிஷ்-எதிர்ப்பு, (கம்யூனிச-எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்ட) ரஷிய-எதிர்ப்பு ஆகிய இரண்டையும்
கொண்டிருந்த உக்ரெய்னிய ‘தேசியவாதிகளுக்கும்' ஹிட்லரின் திட்டத்துக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாகவும் (நாஜி
ஜெர்மனிக்கு அடிமைப் பட்டிருந்த உக்ரெய்னில் தனியொரு அரசை உருவாக்குவது ஹிட்லரின்
திட்டத்தில் இருக்கவில்லை; ஏனெனில் நாஜிகளால்
ஒழித்துக்கட்டப்பட வேண்டிய மக்களாக உக்ரெய்னியர்கள் குறித்து
வைக்கப்பட்டிருந்தனர்) ஐரோப்பாவின் இந்தப் பகுதியில் ‘பாசிச
ஆதரவாளர்களு'க்கும், ‘பாசிச-எதிர்ப்பாளர்களு'க்குமிருந்த முரண்பாட்டின் அரசியல் வரைபடம் மங்கலானதாக்கப்பட்டிருந்தது.
இங்கு நான்
ஓல்ஹா ஓஸ்ட்ரிட்சௌக் (Olha Ostritchouk) எழுதியுள்ள Les Ukrainens
face d' leur passe என்னும் புத்தகத்தை வாசகர்களுக்குக் குறிப்பிட
விரும்புகிறேன். ஐரோப்பாவின் இந்தப் பிரதேசத்தின் (சோவியத் உக்ரெய்னாக மாறிய
ஆஸ்த்ரிய கால்ஸியா, போலிஷ் உக்ரெய்ன், சின்ன
ரஷியா ஆகியன) சமகால வரலாற்றைப் பற்றிய ஒஸ்ட்ரிட்சௌக்கின் கூர்மையான பகுப்பாய்வு,
இன்னும் தொடர்ந்து நீடிக்கும் முரண்பாடுகள், மோதல்கள்
ஆகியவற்றிலுள்ள பிரச்சினைகளையும் உள்நாட்டு பாசிசம் ஆக்கிரமித்துள்ள இடத்தையும்
வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்.
கடந்தகால
மற்றும் நிகழ்கால பாசிசத்தின் மீது மேற்கு நாட்டு வலதுசாரி சக்திகள் காட்டும்
பரிவு
இரண்டு உலகப்
போர்களுக்கிடையில் நிலவிய ஐரோப்பிய நாடாளு மன்றங்களிலிருந்த வலதுசாரி
உறுப்பினர்கள் எப்போதுமே பாசிசத்தின் மீதும், அதைவிட வெறுக்கத்தக்கதாக இருந்த நாஜிசத்தின் மீதும் பரிவு காட்டி வந்தனர்.
மிகையான ‘பிரிட்டிஷ் தன்மை' கொண்டிருந்த
சர்ச்சிலும்கூட முஸ்ஸோலினி மீதான தமது அனுதாபத்தை ஒருபோதும் மூடிமறைத்ததில்லை.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களும் ஜனநாயக, குடியரசுக்
கட்சிகளும் ஹிட்லரின் ஜெர்மனி தோற்றுவித்த அபாயத்தையும், எல்லாவற்றுக்கும்
மேலாக பேரரச/பாசிச ஜப்பான் தோற்றுவித்த அபாயத்தையும்
மிகத் தாமதமாகவே கண்டறிந்தனர். பிறர் சத்தமின்றிச் சிந்தித்து வந்ததை அமெரிக்க
ஆளும் வர்க்கத்துக்கே உரிய மனித வெறுப்பு மனப்பான்மையுடன் பகிரங்கமாகக் கூறினார்
ட்ரூமன்: போரில் ஈடுபட்டுள்ள ஜெர்மனி, சோவியத் ரஷியா,
தோற்கடிக்கப்பட்ட ஐரோப்பியர்கள் ஆகிய அனைவரும் போரால்
சோர்வடையட்டும்; பிறகு எவ்வளவு தாமதமாக முடியுமோ அவ்வளவு
தாமதமாக அமெரிக்கா தலையிட்டு எல்லா பலன்களையும் அறுவடை செய்து கொள்ளட்டும்.
இது
கொள்கைரீதியான பாசிச-எதிர்ப்பின் வெளிப்பாடு அல்ல. 1945இல் ஸலாஸரையும் ஃப்ராங்கோவையும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த எவ்விதத்
தயக்கமும் காட்டப்படவில்லை. மேலும், ஐரோப்பிய பாசிசத்தின்
கையாளாகச் செயல்படுவது கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கையிலுள்ள நிலையான அம்சமாக
இருந்து வந்துள்ளது. ஆகவே, போப் பன்னிரண்டாம் பயஸை முஸ்ஸோலினி,
ஹிட்லர் ஆகியோரின் கூட்டாளி எனக் கூறுவது மிகையாகாது.
ஹிட்லரின்
யூத-எதிர்ப்புக் கொள்கையும்கூட, மிக
தாமதமாகவே, அது தனது கொலைவெறியின் இறுதிக் கட்டத்தை அடைந்த
பிறகே இழிவுபடுத்தப்பட்டது. ஹிட்லரின் பேச்சுகளால் தூண்டிவிடப்பட்ட வெறுப்புக்கு,
‘யூத-போல்ஷ்விச'த்தின் ((இது நாஜிகள்
பயன்படுத்திய சொற்றொடர் - எஸ்.வி.ஆர்.) மீதான வெறுப்புக்கு அழுத்தம் தருவது பல
அரசியல்வாதிகளிடம் பொதுவாக இருந்த விஷயம்தான். நாஜிசத்தின் தோல்விக்குப் பிறகுதான்,
கோட்பாட்டளவில் யூத - எதிர்ப்புக் கொள்கையைக் கண்டனம் செய்வது
அவசியமானதாகியது. யூத-எதிர்ப்புக் கொள்கையைக் கண்டனம் செய்வதை மேலும் எளிதாக்கிய
காரணம், ‘பேரழிவுக்கு பலியானவர்கள்' என்னும்
சிறப்புப் பட்டத்துக்கான வாரிசுகள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை
கொண்டாடியவர்கள் இஸ்ரேலின் ஜியோனிஸ்டுகளாக, பாலஸ்தீனர்கள்,
அராபிய மக்கள் ஆகியோருக்கு (இவர்கள் ஐரோப்பிய யூத-எதிர்ப்புக்
கொள்கையின் பயங்கரச் செயல்களோடு எவ்விதத்திலும் சம்பந்தப் படாதவர்கள்) எதிரான
மேற்கு நாட்டு ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக மாறியதுதான்.
நாஜிகளின்
மற்றும் முஸ்ஸோலினியின் இத்தாலியின் தகர்வின் காரணமாக, மேற்கு ஐரோப்பிய (‘இரும்புத் திரை'க்கு மேற்கே இருந்த நாடுகளின்) வலதுசாரி
அரசியல் சக்திகள் தங்களை, பாசிசத்தின் உடந்தையாளர்களாகவும்
கூட்டாளிகளாகவும் இருந்தவர்களிடமிருந்து (இவர்களும் அந்த வலதுசாரி அரசியல்
சக்திகளில் உள்ளடங்கியிருந்தவர்கள்தாம்) வேறுபடுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இது
வெளிப்படையான விஷயம். ஆயினும், பாசிச இயக்கங்கள்
பின்னணிக்குச் செல்லும் படியும் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும்படியும்
நிர்பந்திக்கப்பட்டனவேயன்றி அவை உண்மையில் காணாமல் போகவில்லை.
மேற்கு
ஜெர்மனியில், ‘சமரசம்' என்னும்
பெயரால், அந்த நாட்டு அரசாங்கமும் அதன் புரவலர்களும்
(அமெரிக்காவும், அதற்கு அடுத்தபடியாக மகா பிரிட்டனும்
பிரான்சும்) போர்க் குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும்
இழைத்தவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் அப்படியே விட்டுவிட்டன. பிரான்சில்,
நாஜிகளுடன் ஒத்துழைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்குதல் என்னும்
பெயரால் மிகைச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்னும் காரணம் காட்டி, நாஜி எதிர்ப்புப் போராளிகள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
அதேவேளை, அந்துவான் பினாயின் (Antoine Pinay) தலைமையில் விஷி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் அரசியல் அரங்கிற்கு மீண்டும்
வந்தனர். இத்தாலியில் பாசிசம் மௌனமாக்கப்பட்டது என்றாலும், அது
கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி அணிகளிலும் கத்தோலிக்கத் திருச்சபை அணிகளிலும் தொடர்ந்து
நிலவி வந்தது. ஐரோப்பிய சமுதாயத்தால் (பின்னர் இது ‘ஐரோப்பிய
ஒன்றிய'மாக மாறியது) 1980இல்
ஸ்பெயினில் திணிக்கப்பட்ட சமரசத் திட்டம், ஃப்ராங்கோ ஆட்சிக்
காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை நினைவூட்டுவதைத் தடை செய்துவிட்டது.
பழைமைபேண்
வலதுசாரி சக்திகள் மேற்கொண்ட கம்யூனிஸ்ட்-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மேற்கு
ஐரோப்பிய, மத்திய ஐரோப்பிய சோசலிச, சோசலிச-ஜனநாயகக் கட்சிகள் தந்த ஆதரவுதான்
பாசிசச் சக்திகள் திரும்பி வந்ததற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ‘தாராளவாத' இடதுசாரிக் கட்சிகள் ஒருகாலத்தில்
உண்மையான, உறுதியான பாசிச-எதிர்ப்புக் கட்சிகளாகத்தான்
இருந்தன. ஆனால் அதை அவை மறந்துவிட்டன. இந்தக் கட்சிகள் சோசலிச - தாராளவாதக்
கட்சிகளாக (social-liberal parties) மாற்றப் பட்டமையும்,
பிற்போக்கு முதலாளிய அமைப்புக்கான உத்தரவாதமாகத் திட்டமிட்டு
மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய மறுநிர்மாணத்துக்கு அவை தந்த நிபந்தனையற்ற ஆதரவும்,
’நேட்டோ’ மூலமும் இதர வழிகளிலும் அமெரிக்க
மேலாதிக்கத்துக்கு அவை நிபந்தனையற்ற முறையில் அடிபணிந்ததும், மரபான வலதுசாரி சக்திகளும் சோசலிச தாராளவாதிகளும் இணைந்த பிற்போக்கு
அணியொன்று வலுப்படுத்தப்படுவதைச் சாத்தியமாக்கியுள்ளன; இந்த
அணி, தேவைப்படும்போது, புதிய அதிதீவிர
வலதுசாரிகளுக்கும் தனக்குள் இடம் கொடுக்கக்கூடியதாக உள்ளது.
பின்னர், கிழக்கு ஐரோப்பிய பாசிசத்துக்கு மறுவாழ்வு கொடுக்கும்
நடவடிக்கைகள் 1990இல் இருந்து விரைவாகத் தொடங்கின. அந்தந்த
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த பாசிச இயக்கங்கள் எல்லாமே பல்வேறு அளவுகளில்
ஹிட்லரிசத்தின் விசுவாசமான கூட்டாளிகளாகவோ, அதனுடன்
ஒத்துழைத்தவையாகவோ இருந்தவைதாம். நாஜிகளின் தோல்வி
நெருங்கி வருகையில் அந்த பாசிச இயக்கங்களிலிருந்த செயலூக்கமுள்ள தலைவர்களில்
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அமெரிக்க ஆயுதப்படைகளிடம் ‘சரணடையுமாறு' செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்கூட, அவர்கள்
இழைத்த குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட சோவியத், யூகோஸ்லேவியா
அல்லது புதிய மக்கள் குடியரசு அரசாங்கங்களிடம் (கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட்
அரசாங்கங்கள்-எஸ்.வி.ஆர்.) ஒப்படைக்கப்படவில்லை (இது நேச நாடுகள் தமக்கிடையே
செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும்.) அவர்கள் எல்லோரும் அமெரிக்காவிலும்
கனடாவிலும் புகலிடம் தேடிக் கொண்டனர். அவர்களுடைய மூர்க்கத்தனமான
கம்யூனிச-எதிர்ப்புக்காக, மேற்சொன்ன நாடுகளின் அரசாங்கங்கள்
அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கின.
மேலே
குறிப்பிடப்பட்ட நூலில் ஓஸ்ட்ரோசௌக், அமெரிக்க அரசாங்கக் கொள்கையின் குறிக்கோள்களுக்கும் (அமெரிக்காவுக்குப்
பின்னால் உள்ள ஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கைகளின் குறிக்கோள்களுக்கும்) கிழக்கு
ஐரோப்பிய நாடுகளில் (குறிப்பாக, உக்ரெய்னின்) உள்ள
பாசிசவாதிகளுக்கும் இடையே உள்ள கூட்டை, மறுக்கமுடியாதபடி
மெய்ப்பிப்பதற்கான அனைத்துத் தகவல்களையும் தந்துள்ளார். எடுத்துக்காட்டாக,
‘பேராசிரியர்' டிமிட்ரோ டோம்ஸ்டோவ் (‘Professor'
Dmytro Domstov) என்பவர் 1975இல் மரணமடையும்
வரை தமது படைப்புகள் அனைத்தையும் கனடாவில்தான் வெளியிட்டு வந்தார். ‘யூத-போல்ஷ்விசம்' என்னும் சொற்றொடரை வழக்கமாகப்
பயன்படுத்தி வந்த அவரது எழுத்துகள் மூர்க்கத்தனமான கம்யூனிச-எதிர்ப்பு எழுத்துகள்
மட்டுமல்ல, அடிப்படையில் ஜனநாயக-விரோத எழுத்துகளுமாகும்.
மேற்குலகிலுள்ள ஜனநாயக அரசுகள் என்று சொல்லப்படுபவை உக்ரெய்னில்
‘ஆரஞ்சுப் புரட்சி'க்கு (அதாவது பாசிச
எதிர்ப்புரட்சிக்கு) ஆதரவு தந்ததுடன், அதற்கு நிதியுதவி வழங்கி அதனை ஒழுங்கமைக்கவும் செய்தன.
பாசிசவாதிகளை ‘மிதவாத' ஊடகங்கள் ஆதரிக்கின்றன. ஆனால்
அதை அவற்றால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாது. எனவே அந்த ஆதரவை மூடிமறைக்க அவை
பயன்படுத்தும் ‘சாமர்த்தியமான' வழிமுறை
மிக சுலபமானது: அதாவது ‘பாசிஸ்ட்' என்னும்
சொல்லுக்குப் பதிலாக ‘தேசியவாதிகள்'
(Nationalists) என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றன. ‘பேராசிரியர்' டோம்ஸ்டோவ் இனி ‘பாசிஸ்ட்'
அல்லர்; அவர் ‘தேசியவாதி'!
அதேபோல, மரி லெ பென் (Marine Le
Penn; பிரான்சில் இப்போதுள்ள ஒரு அதிதீவிர வலதுசாரிக்
கட்சியின் தலைவர் -எஸ்.வி.ஆர்.), ‘பாசிஸ்ட்' அல்லர், மாறாக (‘லெ மோந்த்'
நாளேடு எழுதுவதைப் போல) ‘தேசியவாதி'!!
இந்த அசல்
பாசிஸ்டுகள், அவர்களே சொல்லிக்கொள்வதுபோல ‘தேசியவாதிகளா'? இது கேள்விக்குரியது. சமகால
உலகிலுள்ள உண்மையான ஆதிக்கச் சக்திகளின், அதாவது அமெரிக்கா,
ஐரோப்பா ஆகியவற்றின் ஏகபோக முதலாளியச் சக்திகளின் அதிகாரத்தைக்
கேள்விக்குட்படுத்துபவர்கள்தாம் இன்று ‘தேசியவாதிகள்'
என்னும் பெயருக்குத் தகுதியுடையவர்கள். ‘தேசியவாதிகள்'
என்று சொல்லப்படுபவர்கள், வாஷிங்டன், ப்ருஸ்ஸெல்ஸ், நேட்டோ ஆகியவற்றின் நண்பர்கள்.
அவர்களது ‘தேசியம்' என்பது, அவர்களது அவப்பேறுகளுக்கு ஒருபோதும் காரணமாக இல்லாத அண்டைப்புற அப்பாவி
மக்களின் மீது தேசியவெறி கொண்ட வெறுப்பைக் காட்டுவதுதான்: உக்ரெய்னிய
பாசிஸ்டுகளுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் ரஷியர்கள் (ஜார் அல்ல); குரோஷிய பாசிஸ்டுகளுக்கு எதிரியாக இருந்தவர்கள் ஸெர்பியர்கள்; பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்விட்ஸர்லாந்து,
கிரீஸ், இன்னும் வேறு இடங்களில் தோன்றியுள்ள
புதிய அதிதீவிர இடதுசாரிகளைப் பொறுத்தவரை, அந்த
நாடுகளுக்குப் ‘புலம்பெயர்ந்தவர்கள்தாம்' எதிரிகள்.
ஒருபுறம்
அமெரிக்காவிலுள்ள முக்கிய அரசியல் சக்திகள் (குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும்), ஐரோப்பாவிலுள்ள முக்கிய அரசியல் சக்திகள் (நாடாளுமன்ற
வலதுசாரிகள், சோசலிச தாராளவாதிகள்) ஆகியோருக்கும், மறுபுறம் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள பாசிஸ்டுகளுக்கும் உள்ள கள்ளக்கூட்டால்
ஏற்படும் அபாயத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தக் கள்ளக்கூட்டின் பேச்சாளராகத்
தம்மைத் தாமே நிறுவிக்கொண்டுள்ள ஹில்லாரி கிளின்டன், போர்வெறிக்
கூச்சலை அதன் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளார். ஜார்ஜ் டபிள்யூ.புஷ்ஷையும் விஞ்சும்
வகையில் அவர், ரஷியாவுக்கு எதிரான கெடுபிடிப் போரை (cold
war) மீண்டும் தொடங்குவதுடன் மட்டுமல்லாது, பழிவாங்கும் வெறியோடு அந்த நாட்டின் மீது முன்கூட்டியே இராணுவத் தாக்குதலை
நடத்த வேண்டும் என்றும் உக்ரெய்ன், ஜார்ஜியா, மோல்டோவா மற்றும் சீனா மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தின் அமெரிக்க நாட்டு மக்கள்
கிளர்ச்சி செய்துவரும் இடங்கள் ஆகியவற்றில் மேலும் வெளிப்படையான இராணுவத் தலையீட்டைச் செய்ய வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.
அவப்பேறாக, அமெரிக்கா, தனக்கு
ஏற்பட்டுள்ள சரிவுக்கான எதிர்வினையாக சிறிதுகூடத் தயக்கமில்லாமல் மேற்கொள்ளும்
நடவடிக்கைகள், ‘அமெரிக்காவின் முதல் பெண்
குடியரசுத் தலைவராக' ஹில்லாரி கிளின்டனைத்
தேர்ந்தெடுப்பதற்கான போதுமான ஆதரவைத் திரட்டக்கூடும்.
இந்த போலி பெண்ணிலைவாதிக்குப் பின்னால் இருப்பவை என்ன என்பதை
நாம் மறந்துவிடக்கூடாது.
அமெரிக்காவிலும், ‘பழைய இரும்புத் திரை'க்கு மேற்கே உள்ள
ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ‘ஜனநாயக‘ அமைப்புக்கு
பாசிச அபாயம் இன்னும்கூட அச்சுறுத்தலாக இருப்பதில்லை என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில், மரபான நாடாளுமன்ற வலதுசாரிகளுக்கும்
சோசலிச தாராளவாதிகளுக்கும் ஏற்பட்டுள்ள கூட்டின் காரணமாக, வரலாற்றுரீதியான
பாசிச இயக்கங்களைப் பின்பற்றி உருவாகின்ற அதிதீவிர வலதுசாரி சக்திகளின் சேவைகளை
நாட வேண்டிய தேவை ஆதிக்க மூலதனத்திற்கு இல்லாமல் போய்விட்டது. அப்படியானால்,
கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் அதிதீவிர வலதுசாரி
சக்திகள் தேர்தல் வெற்றிகளைப் பெற்றதற்குக் காரணம் என்ன? மேல்நிலையாக்கப்பட்டுள்ள
ஏகபோக முதலாளித்துவம் (generalized monopoly capitalism) எல்லா இடங்களிலும் பரவிவருவதால் ஐரோப்பியர்களும்கூடப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், (மரபான) வலதுசாரிச் சக்திகளுக்கும் சோசலிச இடதுசாரிகள் என்று
சொல்லப்படுபவர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள கூட்டுக்கு எதிர்வினையாக, அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதையோ, அதிதீவிர வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதையோ விரும்புகின்றனர். ஆக, இந்தச் சூழலில் புரட்சிகரமான இடதுசாரி சக்திகளாக வளரக்கூடிய
சக்திகளுக்குப் பெரும் பொறுப்பு இருக்கின்றது. நடப்பிலுள்ள முதலாளியத்தைக் கடந்து
செல்கின்ற உண்மையான முன்னேற்றத்துக்கான திட்டங்களை அவை
துணிச்சலோடு முன்மொழியுமானால், இப்போது அவற்றுக்கு இல்லாத
நம்பகத் தன்மையை உருவாக்கிக்கொள்ள முடியும். தற்போது குறிப்பிட்ட தனித்தனிப்
பிரச்சினைகளின் பொருட்டுத் துண்டுதுண்டாக நடத்தப்பட்டு வரும் எதிர்ப்பு இயக்கங்களை
ஒருங்கிணைக்கவும் தற்காப்புப் போராட்டங்களை அவற்றுக்கு
வழங்கவும் புரட்சிகர இடதுசாரிகளால் முடியும். இத்தகைய இடதுசாரி ‘இயக்கத்'தால், உழைக்கும்
வர்க்கங்களுக்குச் சார்பாக சமுதாயத்தில் பல்வேறு வர்க்கங்களுக்குள்ள பலாபலத்தை
மாற்றியமைத்து முன்னேற்றகரமான வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும். இதற்கான நிரூபணமாக இருப்பவை, தென் அமெரிக்க
நாடுகளில் மக்கள் இயக்கங்கள் அடைந்துள்ள வெற்றிகளாகும்.
இப்போதுள்ள
நிலைமைகளில், அதிதீவிர வலதுசாரிகள் பெற்றுள்ள தேர்தல்
வெற்றிகளும்கூட சமகால முதலாளியத்திலிருந்தே தோன்றியவைதான். இந்தத் தேர்தல்
வெற்றிகள், ‘மக்களைக் கவர்ந்திழுப்பதற்காக உருவாக்கப் பட்டவை'
என்ற அதிதீவிர வலதுசாரிகளின் சொல்லாடல்கள், அதிதீவிர
இடதுசாரிகளின் சொல்லாடல்கள் ஆகிய இரண்டையும் ஒரே
குரலில் இகழ்ந்து அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்ப்பதற்கு ஊடகங்களை அனுமதிக்கின்றன.
இப்படிச் செய்வதன் மூலம், இந்த ஊடகங்கள்,
அதிதீவிர வலதுசாரிகள் (‘வலதுசாரி' என்னும் சொல்லே சுட்டிக்காட்டுவது போல) முதலாளிய ஆதரவு சக்திகள், மூலதனத்தின் கூட்டாளிகளாக ஆகக்கூடியவர்கள் என்பதையும், அதிதீவிர இடதுசாரிகளோ முதலாளிய அதிகார அமைப்புக்கு அபாயகரமான எதிர்ப்புச்
சக்திகளாக வளரும் ஆற்றல் கொண்டவர்கள் என்னும் உண்மையையும் மூடிமறைக்கின்றன.
மேற்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சூழல்இணைவு சிற்சில
மாற்றங்களுடன் அமெரிக்காவிலும் இருப்பதை நம்மால்
அவதானிக்க முடிகின்றது. ஆனால், அமெரிக்காவிலுள்ள அதிதீவிர
வலதுசாரிகள் ஒருபோதும் பாசிஸ்டுகள் என்று அழைக்கப்பட்டதில்லை. கடந்தகால ‘மெக்கார்த்தியச'த்தைப் போலவே,
இன்றைய தேநீர் விருந்து வெறியர்களும் (ஹில்லாரி
கிளிண்டன் போன்ற) போர் வெறியர்களும் ‘தன்னுரிமைகள்'
(’liberties’) என்பதற்குப் பகிரங்கமான ஆதரவு தெரிவிக்கின்றனர்.
முதலாளிய அமைப்பால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவதாக அவர்களால் ‘சந்தேகிக்கப்படும்' அரசாங்கத்திற்கு எதிராக ஏகபோக
மூலதனத்தின் உடைமையாளர்கள், அவற்றை நிர்வகிப்பவர்கள்
ஆகியோரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும்
பொருளில்தான் அவர்கள் ‘தன்னுரிமைகள்'
(‘liberties) என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
பாசிஸ்ட்
இயக்கங்களைப் பற்றிய கடைசி அவதானிப்பு இதுதான்:
கோரிக்கைகளை எழுப்புவதை எப்போது, எவ்வாறு நிறுத்திக்கொள்வது
என்பதை அவை அறிந்துகொள்ளாமல் இருப்பதாகத் தோன்றுகிறது. தலைவர் வழிபாடு, கண்மூடித்தனமான அடிபணிதல், வெறியுணர்வைப் பரப்பும்
போலி-இனத்துவ, போலி-மதக் கட்டுக்கதைகளை விமர்சன
நோக்கில்லாமலும் வானளாவிய வகையிலும் போற்றிப் புகழ்தல், வன்முறைச்
செய்லகளுக்காக ஆயுதமேந்திய குடிப்படைகளுக்கு ஆள்சேர்த்தல்
ஆகியன பாசிசத்தைக் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக ஆக்குகின்றன. பாசிசம் எந்த
சமூகப் பிரிவினரின் நலன்களுக்கு சேவை புரிவதற்காக அறிவற்ற பிறழ்வுகளைச்
செய்கின்றதோ, அந்தப் பிறழ்வுகளின் கண்ணோட்டத்திற்கும்கூட ‘தவறுகளாக'த் தென்படுவனவற்றை அது செய்வது
தவிர்க்கமுடியாததாக அமைந்துவிடுகிறது. ஹிட்லர் உண்மையிலே மன நோயாளி; இருப்பினும் அவரால் தம்மை ஆட்சியில் அமர்த்திய பெரும் முதலாளிகளைத் தமது
பைத்தியக்காரத்தனத்தின் இறுதிவரை பின்பற்றி வருமாறு நிர்பந்திக்க முடிந்தது;
அது மட்டுமின்றி, மக்கள் தொகையில் மிகப்
பெரும் பகுதியின் ஆதரவையும் திரட்டிக்கொள்ள முடிந்தது. ஹிட்லரிசம் என்பது ஓர்
அதீதமான விஷயம் என்றாலும், மன நோயாளிகளாக இல்லாத முஸ்ஸோலினி,
ஃப்ராங்கோ, ஸலாஸர் ஆகியோரின் கூட்டாளிகளும்
கையாட்களும்கூட கொடுங்குற்றச் செயல்களை இழைக்கத் தயங்கியதில்லை.
சமகாலத் தெற்கு நாடுகளில்
பாசிசம்
இலத்தின்
அமெரிக்காவிலுள்ள விவசாயிகள், அடிமைநிலைக்குத்
தாழ்த்தப்பட்டு, நிலவுடைமையாளர்களின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு
உட்படுத்தப்பட்டுச் சுரண்டப்பட்டனர். இந்தச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டே
இலத்தின் அமெரிக்கா, பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகளாவிய
மூலதனத்துடன் இணைக்கப்பட்டது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது
மெக்ஸிகோவில் இருந்த போர்ஃபிரோ டயஸின் (Porfiro Diaz) ஆட்சி
அமைப்பு. இருபதாம் நூற்றாண்டில் உலக முதலாளியத்துடன் இலத்தின் அமெரிக்கா மேலும்
நெருக்கமாக இணைக்கப்பட்டதன் காரணமாக ‘வறுமை
நவீனமயமாக்கப்பட்டது'. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும்
நிகழ்ந்ததைவிட மிக அதிக அளவிலும், மிக விரைவாகவும்
கிராமப்புறத்திலிருந்து மக்கள் வெளியேறினர். இதன் காரணமாக, பழைய
கிராமப்புற வறுமை வடிவங்களிலிருந்து வேறுபட்ட புதிய வறுமை வடிவங்கள் இலத்தின்
அமெரிக்க நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் (slums) தோன்றின.
அதேவேளை, சர்வாதிகார ஆட்சிகளை நிறுவியும், தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டியும், கட்சிகளையும்
தொழிற்சங்கங்களையும் தடை செய்தும், உளவுபார்க்கும் தொழில்நுட்பங்களின் மூலம் யாரை வேண்டுமானாலும் கைது
செய்யவும் சித்திரவதை செய்யவுமான உரிமைகள் அனைத்தையும் நவீன உளவு துறையினருக்கு வழங்கியும் வெகுமக்கள் மீதான அரசியல் கட்டுப்பாடு
'நவீனமயமாக்கப்பட்டது'. முதலாளியத்துக்கான
இத்தகைய அரசியல் நிர்வாக வடிவங்கள், ஐரோப்பிய சார்பு
முதலாளிய நாடுகளில் காணப்பட்ட பாசிசங்களுடன் மிகவும் ஒத்திருந்தன என்பதில்
சந்தேகமில்லை. இருபதாம் நூற்றாண்டு இலத்தின் அமெரிக்காவிலிருந்த சர்வாதிகார
ஆட்சிகள் அந்தந்த நாட்டுப் பிற்போக்கு அணிக்கு (பெரும் நிலவுடைமையாளர்கள், தரகு முதலாளி வர்க்கங்கள், இலத்தின் அமெரிக்காவில்
ஏற்பட்ட இந்த உதிரி வளர்ச்சி வடிவத்திலிருந்து சிலவேளை
பயனடைந்த மத்தியதர வர்க்கங்கள் ஆகியோர் அடங்கியதுதான் இந்த அணி) மட்டுமல்ல;
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆதிக்க வெளிநாட்டு
மூலதனத்துக்கு, குறிப்பாக அமெரிக்க மூலதனத்துக்கு சேவை
செய்தன. அதனால்தான், அமெரிக்கா இந்த சர்வாதிகார ஆட்சிகளை -
இலத்தின் அமெரிக்காவில் அண்மையில் மக்கள் இயக்கங்கள் வெடித்துக் கிளம்பி
நிலைமையை மாற்றிய வரை - ஆதரித்து வந்தது.
இந்த மக்கள் இயக்கங்களுக்குள்ள ஆற்றலும், அவை கொண்டு வந்த
சமூக, ஜனநாயக முன்னேற்றங்களும் - குறைந்த காலத்துக்கேனும்-
பாசிச சர்வாதிகார ஆட்சிகள் திரும்பிவருவதைத் தடுத்துள்ளன. ஆனால் எதிர்காலம்
நிச்சயமற்றதாக உள்ளது. ஒருபுறம் உழைக்கும்
வர்க்கங்களுக்கும், மறுபுறம் உள்நாட்டு முதலாளியம், உலக முதலாளியம் ஆகியவற்றுக்குமிடையே இப்போதுதான் மோதல் தொடங்கியுள்ளது.
எல்லாவகையான பாசிசங்களயும் போலவே, இலத்தின் அமெரிக்க
சர்வாதிகார ஆட்சிகளாலும் ‘தவறுகளை'ச்
செய்வதைத் தவிர்க்க முடியவில்லை, சில தவறுகள் அந்த
சர்வாதிகார ஆட்சிகளின் அழிவுக்கும் வழிகோலின. இதற்கு
எடுத்துக்காட்டு யோர்ஹெ ரஃபெய்ல் விடெலாவின் (Jorge Rafael Videla) சர்வாதிகார ஆட்சி. அர்ஜெண்டின மக்களிடையே தோன்றியிருந்த தேசிய உணர்வைத்
தமது சொந்த ஆதாயத்துக்குப் பயன்படுத்த முனைந்த அவர் மால்வினாஸ் தீவுகளைக்
கைப்பற்றப் போர் தொடுத்தார்.
1980களில் தொடங்கி, மேல்நிலையாக்கப்பட்ட
ஏகபோக முதலாளியப் பரவலின் காரணமாக உருவான உதிரி வளர்ச்சி, பாண்டுங்
சகாப்தத்தில் (1955-1980) ஆசியாவிலும்
ஆப்பிரிக்காவிலும் தோன்றிய ஆட்சி முறைகளை அகற்றி விட்டது. இந்த உதிரி வளர்ச்சி, இலத்தின் அமெரிக்காவில்
ஏற்பட்டதைப் போலவே, வறுமையை நவீனமயமாக்கி ஒடுக்குமுறை
வன்முறையையும் நவீனமயமாக்கியுள்ளது. இதற்குச் சிறந்த
எடுத்துக்காட்டுகளாக இருப்பவை அரபு உலகில் நாஸரின்
ஆட்சிக்குப் பிறகும் இராக்கில் பாத் கட்சியின் ஆட்சிக்குப் பிறகும் தோன்றியுள்ள
அரசாங்க அமைப்புகளாகும். பாண்டுங் சகாப்தத்தைச் சேர்ந்த தேசிய, மக்களாதாரவு பெற்ற ஆட்சிகளையும் உலகமயமாக்கப்பட்ட
நவ-தாராளவாத வாகனத்தில் ஏறிக்கொண்ட அவற்றின் வாரிசுகளையும் - அவை அனைத்துமே ‘ஜனநாயகத்தன்மையற்றவை' என்னும் காரணம் காட்டி -
ஒன்றாகச் சேர்க்கக் கூடாது. பாண்டுங் சகாப்த ஆட்சிகள், எதேச்சாதிகார அரசியல் நடைமுறைகளைக் கொண்டிருந்த போதிலும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருந்தன. அதற்குக் காரணம் ஒன்று,
அந்த ஆட்சிகளின் உண்மையான சாதனைகள்தாம்; அந்த
சாதனைகளிலிருந்து உழைக்கும் வர்க்கங்களில் பெரும்பான்மையினர் பலனடைந்தனர்; இரண்டு, அந்த ஆட்சிகளின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு
நிலைப்பாடு. அந்த ஆட்சிகளுக்குப் பிறகு வந்த சர்வாதிகார ஆட்சிகள், எப்போது உலகமயமாக்கப்பட்ட நவதாராளவாத்த்தையும் அதனோடு சேர்ந்துவரும்
உதிரி வளர்ச்சியையும் ஏற்றுக்கொண்டனவோ அப்போதே அவை தாம்
இருப்பதற்கான நியாயத்தை இழந்துவிட்டன. (பாண்டுங் சகாப்த) ஆட்சி, ஜனநாயக ஆட்சியாக இல்லாமலிருந்தாலும், அது
மக்களாதரவு பெற்ற, தேசியத்தன்மை வாய்ந்த
ஆட்சியாக இருந்தது. அது நவதாராளவாதப் பொருளாதார,
மக்கள் விரோத, தேச விரோதத் திட்டத்திற்கு சேவை
செய்யும் போலிஸ் வன்முறை ஆட்சிக்கு வழிவிட்டு மறைய வேண்டியதாயிற்று.
2011இல் தொடங்கிய அண்மைக்காலக் கிளர்ச்சிகள், சர்வாதிகார
ஆட்சிகளைக் கேள்விக்குட்படுத்தியுள்ளன. ஆனால், சர்வாதிகார
ஆட்சிகள் கேள்விக்குட்படுத் தப்பட்டுள்ளதோடு சரி. இந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கான
மாற்றுகள் நிலை பெற வேண்டுமானால், இந்தக் கிளர்ச்சிகள் எந்த மூன்று குறிக்கோள்களுக்காக எழுந்துள்ளனவோ,
அந்த மூன்று குறிக்கோள்களையும் ஒன்றிணைப்பதில் அவை வெற்றியடைய
வேண்டும். பின்வருவனதான் அந்த மூன்று குறிக்கோள்கள்: சமுதாயம், அரசியல் ஆகியவற்றை ஜனநாயகப்படுத்துதலைத் தொடர்ந்து செய்தல்; முற்போக்கான சமூக வளர்ச்சிகளை ஏற்படுத்துதல்; தேசிய
இறையாண்மையை உறுதி செய்தல்.
இந்த வெற்றியைச் சாதிப்பதிலிருந்து நாம் வெகுதூரம் பின்
தங்கியிருக்கிறோம். அதனால்தான் கண்னுக்குத் தெரிகின்ற குறுகிய காலத்துக்குப்
பல்வேறு மாற்றுகள் சாத்தியமானவையாகத் தோன்றுகின்றன. பாண்டுங் சகாப்தத்தைச் சேர்ந்த
தேசிய, மக்களாதரவு ஆட்சிமுறைக்கு (சிறிது ஜனநாயகத்தனமையைச்
சேர்த்துக்கொண்டு) திரும்பிச் செல்வது சாத்தியமா?
அல்லது உறுதிபெற்ற ஜனநாயக, மக்கள்சார்பான, தேசிய முன்னணி
ஏற்படுமா? அல்லது கடந்த காலத்தை நோக்கிய பிரமைக்குள் - அது இன்றைய சூழலில், அரசியலையும் சமுதாயத்தையும் ‘இஸ்லாமியமயமாக்கும்'
வடிவத்தை மேற்கொள்கின்றது - மூழ்குவதா?
முதலாளியத்தின்
சவாலுக்கான இந்த மூன்று மாற்றுகளில் எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதில்
மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், மேற்கு நாட்டு அரசுகள் (அமெரிக்காவும் அதற்குக் கீழ்ப்படிந்துள்ள ஐரோப்பியக்
கூட்டாளிகளும்) ஒன்றைத் தேர்வு செய்து கொண்டுள்ளன: அவை அரசியல் இஸ்லாத்தின் வடிவங்களான முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்புக்கும்
மற்றும்/அல்லது இதர ‘ஸலாஃபிஸ்ட்' அமைப்புகளுக்கும் முன்னுரிமையுடன் கூடிய ஆதரவை வழங்கியுள்ளன. இதற்கான
காரணம் எளிதானதும் தெளிவானதுமாகும்: இந்த அரசியல்
சக்திகள் உலகமயமாக்கப்பட்ட நவதாராளவாதத்துக்குள்ளேயே தமது அதிகாரத்தைச்
செலுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளன; இப்படிச் செய்வதன் மூலம்,
சமூக நீதி, தேசிய சுதந்திரம் ஆகியவற்றுக்கான
வருங்கால வாய்ப்புகளைக் கைவிட்டுவிடுகின்றன. ஏகாதிபத்திய சக்திகளின் குறிக்கோளும்
இதுதான்.
இவ்வகையில், அரசியல் இஸ்லாத்தின் செயல்திட்டம் சார்பு முதலாளித்துவ
சமுதாயங்களில் காணப்படும் பாசிச வகையோடு சேர்ந்திருக்கிறது. உண்மையில் இது,
எல்லா வகையான பாசிசங்களுடனும் இரு அடிப்படையான பண்புகளைப்
பகிர்ந்துகொள்கிறது: 1.முதலாளிய அமைப்பின் இன்றியமையா
அம்சங்களுக்கான சவால்கள் அரசியல் இஸ்லாத்தில் இல்லை (அதாவது இன்றைய சூழலில்,
உலகமயமாக்கப்பட்ட நவதாராளவாத முதலாளியத்தின் பரவலுடன் தொடர்புடைய
உதிரி வளர்ச்சி முறையை அது கேள்விக்குட்படுத்து வதில்லை); 2.அரசியல்
நிர்வாகத்திற்கு ஜனநாயக விரோத, போலிஸ்-அரசு
வடிவங்களைத் (கட்சிகளையும் அமைப்புகளையும் தடை செய்தல், இஸ்லாமிய
ஒழுக்க நெறிகளைத் திணித்தல் போன்றவை) தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல்.
இவ்வாறு
ஏகாதிபத்திய அரசுகள், பிற நாடுகளில் ஜனநாயக-விரோத ஆட்சி முறைகள்
ஏற்படுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதால் (இது, வெள்ளம் போல்
நம்மைச் சூழ்ந்துகொள்ளும் பிரசாரங்களிலுள்ள ஜனநாயக-ஆதரவு சொற்ஜாலத்திலுள்ள பொய்யை
நிரூபிக்கின்றது), சம்பந்தப்பட்ட இஸ்லாமிய ஆட்சிகளின் ‘மிகைச் செயல்களை' இந்த ஏகாதிபத்திய அரசுகள்
ஏற்றுக்கொள்ள வேண்டியதாகின்றது. பாசிசத்தின் இதர வடிவங்களைப் போலவே, அவை இருப்பதற்கான அதே காரணங்களின் பொருட்டே, இந்த
மிகைச்செயல்கள் ‘இஸ்லாமியவாத'ச்'
சிந்தனை முறையின் ‘மரபணுக்களி'லேயே பதிந்து வைக்கப்பட்டுள்ளன: கேள்வி கேட்காமல் தலைவர்களுக்கு அடிபணிதல்,
மதத்தை அரசு யந்திரம் பற்றியொழுகுவதை வெறித்தனமாகப் போற்றிப்
புகழ்தல், நிர்பந்தத்தின் மூலம் அடிபணிதலைச் சாதிக்க
அதிர்ச்சிப் படைகளைப் பயன்படுத்துதல். உண்மையில், உள்நாட்டுப்
போர் நடக்கும் சூழலில்தான் (எடுத்துக்காட்டாக, ஸன்னிகளுக்கும்
ஷியாக்களுக்குமிடையிலான உள்நாட்டுப் போர்) ‘இஸ்லாமிய'
செயல் திட்டம் வளர்ச்சி காண்கிறது (இதை நம்மால் ஏற்கெனவே பார்க்க முடிகின்றது.) இந்த ‘இஸ்லாமிய'
செயல்திட்டம் ஏற்படுத்துகின்ற விளைவு, நிரந்தரமான
குழப்பம் மட்டுமே. ஆக, சம்பந்தப்பட்ட சமுதாயங்கள் உலக
அரங்கில் தம்மை அறுதியிட்டுக் கொள்வதைச்
சாத்தியமற்றதாக்குவதற்கான உத்தரவாதமே இவ்வகையான இஸ்லாமிய அரசு (அதிகாரம்) ஆகும். ‘இஸ்லாமிய' அரசாங்கத்தைவிடச் சிறந்ததொன்றை - ஸ்திரமான,
அமெரிக்காவுக்கு அடிபணிந்துள்ள உள்நாட்டு அரசாங்கத்தை - உருவாக்கும்
எண்ணத்தை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கைவிட்டுவிட்டது;
அப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு அடுத்தபடியாகச் சிறந்தது என்று அது கருதும்
‘இஸ்லாமிய' அரசாங்கத்தை ஏற்றுக்
கொண்டுள்ளது.
இதே போன்ற
வளர்ச்சிகளையும் தேர்வுகளையும் ஹிந்து இந்தியா போன்ற, அராபிய-முஸ்லிம் உலகத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலும்
காணலாம். அண்மையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, உலகமயமாக்கப் பட்ட நவதாராளவாதத்திற்குள் தனது அரசாங்கம்
சேர்த்துக்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்கின்ற பிற்போக்குத்தனமான ஹிந்து மதக்
கட்சியாகும். எழுச்சி பெற்று வரும் வல்லரசாக வளரும் திட்டத்திலிருந்து இந்தியா,
தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் பின்வாங்குவதை உத்தரவாதம் செய்யும்
கட்சியாகும். அதை பாசிஸ்ட் கட்சி என்று கூறுவது மிகையாகாது.
முடிவாகச்
சொலவதென்றால், பாசிசம் மேற்கு, கிழக்கு,
தெற்கு நாடுகளுக்குத் திரும்பி வந்திருக்கின்றது; அது திரும்பி வந்துள்ள நிமழ்வு, இயல்பாகவே, மேல்நிலையாக்கப் பட்ட, நிதிமூலதனமயமாக்கப்பட்ட,
உலகமயமாக்கப்பட்ட ஏகபோக முதலாளித்துவத்தின் கட்டமைப்பு சார்ந்த
நெருக்கடியுடன் தொடர்புடையதுதான் இப்போது திரும்பி வந்துள்ள பாசிசம்.
நெருக்கடிக்குள்ளான முதலாளிய அமைப்பின் ஆதிக்க மையங்கள், பாசிச
இயக்கங்களின் சேவைகளை உண்மையிலேயே நாடக்கூடிய அபாயம் அல்லது அதற்கான சாத்தியப்பாடு
என்னும் அபாயம் நம்மிடம் மிகப் பெரும் விழிப்புணர்வைக்
கோருகின்றது. இப்போதுள்ள நெருக்கடி இன்னும் மோசமானதாகத்தான் ஆகப் போகின்றது. இதன்
விளைவாக, பாசிஸ்ட் தீர்வுகளை நாடக்கூடிய அச்சுறுத்தல்,
உண்மையான அபாயமாக மாறும். வாஷிங்டனின்
போர்வெறிக்கு ஹில்லாரி கிளிண்டன் தந்து வரும் ஆதரவு, உடனடியான
எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
***
அடிக்குறிப்புகள்:
1 கோமின்டாங் (Kuomintang) : சீனாவில் 1911இல் தேசிய விடுதலைப் போராளி சன் யாட் சென்னால் (Sun yat-Sen)
தொடங்கப்பட்ட கட்சி. பின்னர் அந்தக் கட்சியின் தலைமை
பிற்போக்குவாதிகளான யுவான் ஷி காய் (Yuan shi-Kai) என்பவருக்கும்
பிறகு சியாங் காய் ஷேக்குக்கும் (Chiag kai-Shek) போய்ர்ச்
சேர்ந்தது. சீனாவின் தரகு-அதிகாரிவர்க்க முதலாளிகள்,
நிலப்பிரபுக்கள் ஆகியோரின் நலன்களை ஆதரித்த, மேற்குலக
ஏகாதிபத்திய நாடுகளுக்கு சார்பாக இருந்த சியாங் கே ஷேக்கின் கோமின்டாங், சீனாவை ஜப்பாn ஆக்கிரமித்த போது மா சேதுங் தலைமையில்
இருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அதனுடையை செஞ்சேனையுடனும் இணைந்து ஜப்பானிய
ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதில் பங்கேற்றது. ஆனால், இரண்டாம்
உலகப் போர் முடிந்ததும், அமெரிக்காவின் ஆதரவுடன் சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக்கட்டி சீனா முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர முயன்று தோல்வியடைந்ததது. தோற்கடிக்கப்பட்ட கோமின்டாங்கும் அதன் படைகளும் சீனாவின் ஒரு பகுதியான
ஃபார்மோஸாவில் (Formosa) தங்கள் சொந்த அரசை ஏற்படுத்திக்
கொண்டன. ஃபார்மோஸா பின்னர் தைவான் (Taiwan) எனப் பெயர்
மாற்றம் பெற்றது.
2 நேட்டோ (NATO: The North Atlantic Treaty Organization): அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை
உள்ளடக்கிய, மொத்தம் 28 உறுப்பிய
நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு அமைப்பு. வெளிநாடுகளிலிருந்து வரும் இராணுவத்
தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவென்று 1949இல்
உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், உலகில்
சோவியத் யூனியன் மற்றும் இதர கம்யூனிஸ்ட் நாடுகளின் செல்வாக்குப் பரவாமல்
தடுப்பதுதான். 1991ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின்
ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ‘ நேட்டோ' உறுதுணையாக
இருந்திருக்கிறது. இந்த அமைப்பின் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரான
ப்ருஸ்ஸெல்ஸில் இயங்குகிறது.
3 கார்னேஷன் புரட்சி: போர்ச்சுகலில் இருந்த ஸலாஸரின் பாசிச ஆட்சியைத் 1974
ஏப்ரலில் தூக்கியெறிந்த புரட்சி; கம்யூனிஸ்டுகள்,
ஜனநாயகவாதிகள், இராணுவத்திலிருந்த
முற்போக்குச் சக்திகள் ஆகியோர் இணைந்து நடத்திய
புரட்சி. அந்தப் புரட்சியில் பங்கேற்றவர்களுக்கு, மக்கள்
கார்னேஷன் பூக்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்ததால் அந்தப் புரட்சி ‘கார்னேஷன் புரட்சி' என்று அழைக்கப்பட்டது.
4 விஷி அரசாங்கம் (Vichy Government): பிரான்ஸ்
நாஜிகளிடம் சரணடைந்த பிறகு அவர்களிடம் அடிபணிந்த மார்ஷல் பெதெய்ன் (Marshal
Petain) என்ற பிரெஞ்சு இராணுவத் தளபதியின்
தலைமையில் பிரான்ஸிலுள்ள விஷி
என்னுமிடத்தில் அமைக்கப்பட்ட அரசாங்கம்.
5.லியோன் டெக்ரெ : பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளான வல்லூன் (Walloon),
ப்ருஸ்ஸெல்ஸ் ஆகியவற்றில் கத்தோலிக்க எதெச்சாதிகாரக் கட்சியான
ரெக்ஸிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவர். அவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட
வல்லூன் இராணுவப் படைகள் நாஜிகளோடு இணைந்து ஆக்கிரமிப்புப் போர்களின் ஈடுபட்டன.
நாஜிகள்முறியடிக்கப்பட்ட பின் லியோன் டெக்ரே , பாசிஸ்ட்
ஃபிராங்கோவின் ஸ்பெயினுக்குச் சென்று பாசிச நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
6. ப்ளெமிஷ் போலி அராசங்கம்: இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், பெல்ஜியத்தில் ஃப்ளெமிஷ் மொழி பேசும் ஃப்ளேன்டர்ஸ் (Flanders)
பகுதியில் இருந்த நாஜி ஆதரவு இயக்கமும்
இராணுவமும்..
7 மார்ஷல் திட்டம்: (Marshall Plan): இரண்டாம் உலகப்
போரின் காரணமாகப் பெரும் பொருளாதார அழிவுகளைச் சந்த்திருந்த ஐரோப்பிய நாடுகளின்
பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் (European
Recovery Program-ERP). அத்திட்டத்தை உருவாக்க முன்முயற்சி
எடுத்துக்கொண்டவர் அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல். எனவே அத்
திட்டம் ‘மார்ஷல் திட்டம்' என்று
அழைக்கப்பட்டது. உலகப் போரில் அனைத்து மேற்கு ஐரோப்பிய நாட்டுப் பொருளாதாரங்களும்
நசிந்திருக்க, அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமே
விரைவான வளர்ச்சி அடைந்திருந்தது. அதற்குக் காரணம் அமெரிக்காவின்
ஒரு பகுதியான ஹவாய் தீவுகளிலுள்ள பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானியர்கள் நடத்திய
திடீர்த் தாக்குதலைத் தவிர வேறு எந்த இராணுவத் தாக்குதலும் எதரி நாடுகளால்
அமெரிக்கா மீது நடத்தப்படவில்லை. ஐரோப்பாவை மறு நிர்மாணம் செய்வதற்கான ‘மார்ஷல் திட்ட'த்தை உருவாக்குவதற்கு 1947 முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்கு
வருமாறு சோவியத் யூனியனுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்ட போதிலும், அத் திட்டம் சோசலிச நாடுகளுக்கு
அமெரிக்காவிலிருந்து வரும் அச்சுறுத்தலாகும் என்று ஸ்டாலின் கருதியதால் அந்த
நாடுகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. 1947 ஜூலை
முதல் நான்கு நிதியாண்டுகளுக்கு நடைமுறைபடுத்தப்பட்ட அத்திட்டம் ஐரோப்பிய
நாடுகளுக்கு 13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள
பொருளாதார, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. அத் திட்டக்காலம்
முடிவடைகையில் மேற்கு ஜெர்மனியைத் தவிர மற்ற எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே
உலகப் போருக்கு முந்தைய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைந்திருந்தன. அதேவேளை,
இந்த நாடுகள் அமெரிக்காவின் உற்பத்திப் பொருள்களுக்கான பரந்த
சந்தையாகவும் மாறின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல மேற்கு
ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கணிசமான செல்வாக்குடன் இயங்கி வந்தன.
பிரான்சிலும் இத்தாலியிலும் நாஜிசத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில்
கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னணிப் பாத்திரம் வகித்தன. எனவே இந்த நாடுகளில்
கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்னும் அச்சமும் அமெரிக்காவிடம்
இருந்தது. இந்த அச்சத்தைப் போக்குவதற்கும் சோவியத் யூனியனின் செல்வாக்குப் பரவாமல்
தடுப்பதற்கும் ‘மார்ஷல் திட்டம்' பயன்பட்டது.
8 ரீகா ஒப்பந்தம்: போலந்து, சோவியத் ரஷியா, சோவிய உக்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கிடையே 1921இல்
ஏற்பட்ட ஒப்பந்தம். இதன்படி, சோவியத் ரஷியா தன் வசமிருந்த
சில பிரதேசங்களை போலந்துக்கு விட்டுக் கொடுத்தது.
9. ட்ரூமன் (Harry S. Truman): அமெரிக்காவின்
33ஆவது குடியரசுத் தலைவராக 1945 முதல் 1953
வரை பதவி வகித்தவர்.
10. இரும்புத் திரை (Iron Curtain): பிரிட்டிஷ்
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவரும் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ்
பிரதமராக இருந்தவருமான வின்ஸ்டன் சர்ச்சிலால் உருவாக்கப்பட்ட சொற்றொடர். மேற்கு
நாடுகளுடன், சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச
நாடுகளும் வெளிப்படையான தொடர்புகளை ஏற்படுத்திக்
கொள்வதைத் தடுப்பதற்காக உருவாக்கபட்ட இச்சொற்றொடர்,
சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய சோசலிச
நாடுகள் கொண்டிருந்த கருத்துநிலையை (ideology)மட்டுமின்றி,
அந்த நாடுகளின் அரசியல், பிரதேச எல்லைகளையும்
குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.
11 ஆரஞ்சுப் புரட்சி (Orange Revolution) : உக்ரெய்னின்
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்டத் தேர்தலில் ஊழலும்
முறைகேடுகளும் நடந்ததாகக் கூறி, 2004 நவம்பர் முதல் 2005
ஜனவரி வரை நடந்த போராட்டங்களும் அரசியல்
செயல்பாடுகளும் ‘ஆரஞ்சுப் புரட்சி' என
அழைக்கப் படுகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு
அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறையும் அமெரிக்காவிலுள்ள பல்வேறு நிறுவனங்களும்
நிதி உதவி செய்ததை இலண்டனிலிருந்து வெளிவரும் தி
கார்டியன்' நாளேடு அம்பலப் படுத்தியது. மேற்கு நாட்டுப் ‘பார்வையாளர்க'ளின் கண்காணிப்பின் கீழ் 2005 ஜனவரியில் நடந்த தேர்தல் நியாயமானது, நேர்மையானது
என்று மேற்கு நாடுகள் பாராட்டின. மேற்கு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட விக்டர் யுஸ்ஷெங்கோ 52% வாக்குகளைப் பெற்று வெற்றி
பெற்றார்.
12. சமிர் அமின் இக்கட்டுரையை எழுதிய போது
ஹில்லாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக
இருந்தா. 2016இல் நடந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கான முயற்சிகள்
அப்போதிருந்தே நடந்து வந்தன.
13. மேல்நிலையாக்கப்பட்ட ஏகபோக முதலாளித்துவம் (generalized
monopolies/ monopoly capitalism): இந்தக் கருத்தாக்கத்துக்கு
சமிர் அமின் கூறும் விளக்கம் பின்வருமாறு: ”ஒப்பீட்டளவில்
சுயேச்சையாக உள்ள நிறுவனங்கள் என்னும் கடலிலுள்ள தீவுகளாக (முக்கியமான தீவுகளாக
இருந்த போதிலும்) இருப்பவை அல்ல இன்றுள்ள ஏகபோக நிறுவனங்கள். அவை ஒன்றிணைந்த
அமைப்பாக இருக்கின்றன. எனவே, உற்பத்தி அமைப்புகள்
அனைத்தையும் இந்த ஏகபோக நிறுவனங்கள் தமது இறுக்கமான கட்டுப்பாட்டில்
வைத்திருக்கின்றன. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமல்லாது
ஏகபோக நிறுவனங்கள் என்று கறாராக வரையறுக்க முடியாத பெரிய
கார்ப்பரேஷன்களும்கூட இன்றைய ஏகபோக நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கட்டுப்பாட்டு
வலைக்குள்தான் இருக்கின்றன. அவற்றுக்கிருந்த சுயேச்சைத்தன்மை மிகவும் சுருங்கி , அவை மேற்சொன்ன ஏகபோக
நிறுவனங்களின் துணை ஒப்பந்தக்காரர்களாகிவிட்டன. இந்த மேல்நிலை ஏகபோக முதலாளியம்
என்பது அமெரிக்க,மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றில் மூலதனம் மையப்படுத்தப்படுவதில் ( ஒரு சில
நிறுவனங்களின் கைகளில் குவிவதில்) உள்ள புதிய
கட்டமாகும். 1980களிலும் 1990களிலும்
இந்தக் கட்டத்தை ஏகபோக மூலதனம் அடைந்தது. இந்த மேல்நிலையாக்கப்பட்ட ஏகபோக
நிறுவனங்களதாம் இன்று உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன”.(
Samir Amin, The Implosion of the Contemporary Global Capitalist System, Monthly
Review Press, New York, 2013, p.17.)
14 மெக்கார்தியிசம் (McCarthyism): அமெரிக்க
அரசாங்கத்தை உளவு பார்ப்பதற்காகவும் அமெரிக்க சமுதாயத்தைச் சீர்குலைப்பதற்காகவும்
அரசாங்கப் பொறுப்புகளிலும் சமுதாய, அரசியல், பண்பாட்டுத் துறைகளிலும் ஊடுருவியுள்ள கம்யூனிஸ்டுகள், அவர்களது ஆதரவாளர்கள், சோவியத் உளவாளிகள் ஆகியோரைக் ‘களையெடுத்தல்' என்னும் பெயரால் 1950களில் நடத்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளே மெக்கார்தியிசம் ஆகும்.
அமெரிக்காவின் விஸ்கோன்ஸின் மாகாணத்திலிருந்து குடியரசுக் கட்சியின்
சார்பில் தேர்ந்தெடுக்ப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான (செனெட்டர்) ஜோசெஃப்
மெக்கார்த்தி இந்த நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியதால் இவற்றுக்கு
மெக்கார்த்தியிசம் எனப் பெயர் ஏற்பட்டது. தேச விரோதக் கம்யூனிஸ்டுகளையும் அவர்களது
ஆதரவாளர்களையும் களையெடுப்பது என்னும் பெயரால் நடத்தப்பட்ட
ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களில் சார்லி சாப்ளின், நாடகாசிரியர்கள்
லிலியன் ஹெல்மன், ஆர்தர் மில்லர், பிரபல
பாடகர் போல் ரோப்ஸன் போன்றோரும் அடங்குவர்.
15 தேநீர் விருந்து (இயக்கம்): 2007இல் அமெரிக்காவில்
தொடங்கப்பட்ட அரசியல் இயக்கம். அரசாங்கச் செலவுகளையும் வரிகளையும் குறைப்பதன்
மூலம் அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலுள்ள
பற்றாக்குறையைப் போக்க முடியும் என்பது இந்த இயக்கத்தின் கருத்துகளிலொன்று.
சாதாரண அமெரிக்கக் குடிமக்களைக் கவர்வதற்காக சில ஜனரஞ்சக முழக்கங்களை இந்த இயக்கம்
எழுப்பி வருகின்றது என்றாலும், அடிப்படையில் இது
தனிச்சொத்தைப் பாதுகாப்பதையும் அமெரிக்காவின் நலன்களை முன்னிட்டு பிற நாடுகளில்
இராணுவத் தலையீடு செய்வதையும் பரிந்துரைக்கின்றது.
16 குடிப்படை (militia): ஆயுதப் பயிற்சி பெற்ற
குடிமக்களைக் கொண்டு உருவாக்கப்படும் படை. இது, அரசாங்கத்தின்
அதிகாரபூர்வமான இராணுவத்தின் அங்கம் அல்ல. ஆனால், பாசிஸ்டுகள்
இதுபோன்ற குடிப்படைகளை உருவாக்கி, தங்கள் எதிரிகளைத்
தாக்குவதற்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கு பாசிச அரசாங்கம் முழு ஒப்புதல்
தருகின்றது. பாசிச - எதிர்ப்பு இடதுசாரிகள், ஏகாதிபத்திய - எதிர்ப்பு சக்திகள் ஆகியனவும்கூட தங்களுக்கான குடிப்படைகளை
உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் இந்தக் குடிப்படைகளின் நோக்கமும் செயல்பாடும்
பாசிஸ்ட் குடிப்படைகளின் நோக்கத்திலிருந்தும் செயல்பாட்டிலிருந்தும் முற்றிலும்
வேறுபட்டவை.
17. தெற்கு நாடுகள்: முன்பு ‘மூன்றாம் உலக நடுகள்’
என அழைப்பட்டு வந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள்,
வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஆசிய நாடுகள் ஆகியவற்றையும்,
வளர்ச்சியடைந்து வரும் பிற நாடுகள், குறை
வளர்ச்சி கண்டுள்ள நாடுகள், குறை வளர்ச்சி பெற்றுள்ள
பிரதேசங்கள் ஆகியவற்றை மட்டுமல்லாது வளமான (’வடக்கு’)
நாடுகளிலுள்ள வறிய பிரதேசங்களையும்
குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் , காலனிய
ஆதிக்கம், நவ காலனியம், நவ
ஏகாதிபத்தியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவையும், வாழ்க்கைத்
தரம், ஆயுள் காலம், மூலவளங்களைப்
பெறுவதில் சரிசமமற்ற வாய்ப்பு ஆகியன போன்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்
சமூக-பொருளாதார அமைப்புகளைக் கொண்டவையுமான நாடுகளைக்
குறிக்கவே இந்தச் சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
18. உதிரி வளர்ச்சி (Lumpen Development): ‘உதிரி
வளர்ச்சி' என்னும் சொற்றொடரைக் கீழ்க்காணும் பொருளில் சமிர்
அமின் பயன்படுத்துகிறார்: ஏகாதிபத்திய மைய (Core) நாடுகளால்,
உலகின் ஓர நாடுகள் (periphery) மீது
திணிக்கப்படும் வளர்ச்சி முன்மாதிரியின் காரணமாக விரைவாக, ஓர
நாடுகளின் சமுதாயங்கள் விரைவாக சிதைந்து கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்கள்,
வெறும் உயிர்பிழைப்புக்கான ஊதியம் மட்டுமே தரப்படும் முறைசாராத்
துறைகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களது வக்கற்ற நிலை அதிகரித்து
வருகின்றது. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான ஆகிய ‘மைய' நாடுகளைச்
சேர்ந்த ஒரு சில ஏகபோக நிறுவனங்களின்
கட்டுப்பாட்டிலேயே உலக மூலதனம் இயங்குகின்றது. அவற்றின் மீது ஓர நாடுகளின் அரசுகளுக்குக் கட்டுப்பாடு இருப்பதில்லை; மாறாக, ‘மைய' நாடுகளின்
மூலதனத்துக்குப் பாதுகாப்பை உத்த்ரவாதம் செய்கின்றன (Samir Amin, op.cited,
pp 10,31, 33, 46-48.)
19. யோர்ஹெ ரஃபெய்ல் விடெலா (Jorge Rafael Videla) : 1976இல் இராணுவப் புரட்சி மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அர்jஜெண்டினாவின் குடியரசுத் தலைவராக 1981 வரை பதவி
வகித்தவர். அவரது ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான அர்ஜெண்டினக் குடிமக்கள் ‘காணாமல் போகச்' செய்யப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுச் சித்தரவதை செய்யப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
கர்ப்பிணிகளாக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு,
இராணுவத்தைச் சேர்ந்த குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அந்த நாட்டில் இராணுவ ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் விடேலா இழைத்த குற்றங்கள்
நிரூபிக்கப்பட்டன. அதன் விளைவாக 50 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்ட அவர், குளியல் அறையில் வழுக்கி விழுந்ததன்
காரணமாக, சிறையிலேயே இறந்தார். அர்ஜெண்டினாவுக்கு அருகில்
உள்ளவையும் பிரிட்டிஷ் இராணுவ முகாம்கள் உள்ளதுமான மால்வினாஸ் தீவுகளைக் கைப்பற்ற
அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் பிரிட்டிஷ்
இராணுவத்தால் முறியடிக்கப்பட்டன.
20. பாண்டுங் சகாப்தம் (Bandug Era) : அன்று
உலகில் இருந்த இரு முகாம்கள் (அமெரிக்க முகாம், சோவியத்
முகாம்) ஆகியவற்றில் எதிலும் சேராமல், சுயேச்சையாகத் தமது
அரசியல், பொருளாதார வளர்ச்சியைக் காண விரும்பிய ஆசிய,
ஆப்பிரிக்க நாடுகள் இந்தோனீஷியாவின் பாண்டுங் நகரத்தில் 1955
ஏப்ரலில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டன. 1961இல் யூகாஸ்லேவியாவின் தலைநகர் பெல்கிரேடில் நடபெற்ற மாநாட்டில்தான் ‘அணிசேரா இயக்கம்' (Non-Alignmnet Movement) முறைப்படி
உருக்கொண்டது. பாண்டூங் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த நாடுகள் இந்தோனீசியா,
பர்மா, பாகிஸ்தான், இலங்கை,
இந்தியா ஆகியனவாகும். பாகிஸ்தான் பின்னர், அமெரிக்க
முகாமுக்குச் சென்றுவிட்டது. பாண்duங் சகாப்தம் என்று சமிர்
அமின் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுவது, அணிசேரா (
நாடுகளின்) இயக்கம் இருந்த காலகட்டத்தைத்தான். அந்த இயக்கத்தில் முன்னணிப்
பாத்திரம் வகித்தவர்கள் ஜவகர்லால் நேரு, சுகார்னோ, கெமல் அப்துல் நாஸர், மார்ஷல் டிட்டோ , சௌ என்லாய் ஆகியோராவர்.
இந்த நாடுகள்
எல்லாவற்றிலுமே நாடாளுமன்ற ஜனநாயக முறை இருக்கவில்லை; சிலல் நாடுகளில் அந்த ஜனநாயக முறை
மீது கடுமையான வரம்புகள் விதிக்கப்பட்டிருந்தன. இன்னும் சில நாடுகளில், ஏகாதிபத்திய- எதிர்ப்பும் தேசப்பற்றும் கொண்டிருந்த இராணுவத்தின் ஆட்சி
நிலவியது. எனினும் அந்த நாடுகளில் இருந்த ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்த,
தேச நலன் சார்ந்த பொருளாதார செயல்திட்டங்களையும்
ஏகாதிபத்தி-எதிர்ப்பு வெளிநாட்டுக் கொளகையையும் கொண்டிருந்ததால அவற்றுக்குப்
பரந்துபட்ட மக்கள் ஆதரவு இருந்து வந்தது.
இந்த
நாடுகளின் ஆட்சி முறைகள் 1980களிலிருந்து மாற்றமடைந்து நவதாராளவாத
ஆட்சி முறைக்கு வழிவிட்டதாகக் சமிர் அமின் கூறுகிறார்
என்றாலும் , இந்த நாடுகள் பலவற்றில், பல்வேறு
காரணங்களால் ஆட்சி முறைகள் 1980க்கு முன்னரே
மாற்றப்பட்டுவிட்டன. எடுத்துக்காட்டாக, 1965இல் சிஐஏவின்
பின்பலத்துடன் நடந்த இராணுவ எதிர்ப்புரட்சி, சுகார்னோவை
ஆட்சியிலிருந்து அகற்றி அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை
அமைத்தது.
21. ஸலாஃபிஸம்: இஸ்லாத்திற்குள்ளேயே இருக்கும் ஓர் இயக்கம். தொடக்ககால
முஸ்லிம்களின் (முன்னோர்களின் - ஸலாஃப்) வழிமுறைகளையும் நெறிகளையும் பின்பற்ற
வேண்டும் என வலியுறுத்துபவர்களே ஸலஃபிஸ்டுகள்.
**
‘புதுவிசை’ ஏட்டில் முதலில் வெளிவந்த இத்தமிழாக்கம்
சிறு மாற்றங்களுடனும் கூடுதலான அடிக்குறிப்புகளுடனும் உயிர் எழுத்தில் மறுவெளியீடு
செய்யப்பட்டது.